40 குருதிமை
மூன்றாம்நாள் மழைவிட்டு துளிச்சொட்டலும் நீர்ப்பிசிறுக் காற்றுமாக நகரம் விம்மிக்கொண்டிருக்கையில் அரண்மனை முரசுகள் முழங்கின. அவ்வோசையை அவர்கள் இடியொலியாகவே கேட்டனர். நீர்த்திரை அதை ஈரத்துணிபோல மூடியிருந்தமையால் மிக மெல்ல அப்பாலெங்கோ என ஒலித்தது. பின்னர்தான் அது முரசெனத் தெளிந்தனர். ‘நோக்குக! நோக்குக! நோக்குக!’ என முழங்கியது முரசு. நிமித்திகன் உரத்த குரலில் அன்று அந்தியில் கலிதேவனுக்கான பூசனை நிகழப்போவதை அறிவித்தான். “நம் மூத்தவர் விண்புகுந்தார். மழைவிழுந்து நகர் தூய்மைகொண்டது. நாம் அளித்த பலிகளில் முதன்மையானதை நம் குடிகளுக்கிறைவன் ஏற்றுக்கொண்டார். வருக, இறையடி பணிக! அருள்பெறுக!”
நீர்க்காற்று நகரைச் சூழ்ந்து வீசிக்கொண்டிருக்க மரங்களின் இலைகளும் கூரைகளும் பளிங்குக் கற்களென சொட்டிக்கொண்டிருந்தன. பகல் முழுக்க நகரம் ஓசையடங்கி நனைந்த துணிபோல அசைவிலா அலைகளாக கிடந்தது. உச்சிப்பொழுதுக்குப் பின்னர் மெல்ல விழித்தெழுந்தபோதுகூட தோல்நனைந்த முரசின் ஓசையென்றே முழங்கியது. மூன்றுநாள் மழை அனைவருக்கும் உடலோய்ந்த உள்வாழ்க்கை ஒன்றை அளித்திருந்தது. விழிகள் ஒளிக்கு கூசின. புறவுலகை மறுத்தது உள்ளம். அவர்கள் நினைவுகளில் கனவுகளில் தனிமையில் திளைக்க விரும்பினர். தனிமை துயர் கொண்டது. அதன் இனிமை எஞ்சியிருந்த அவர்களின் உள்ளம் களியாட்டை வெறுத்தது. அவர்கள் அகத்தில் இனிய சிறு மின்னல்கள் எழுந்தமைந்துகொண்டிருக்க அவ்வப்போது மெய்ப்புகொண்டனர். விழியமைந்து மென்துயிலில் மூழ்கியபோது கரிய அலைகளின்மேல் நின்று ததும்பிய செந்தாமரையைக் கண்டனர். வெண்ணிற முகில் கரைந்தும் திரண்டும் யானை வடிவுகொண்டு வானில் மிதந்தது. அதை ஊடுருவிய ஒளி பாலென பளிங்கென கண்களை நிறைத்தது.
அன்று கதிர்முகம் தெளியவேயில்லை என்பதனால் பொழுதடைவதை உணரமுடியவில்லை. அரண்மனையில் அந்திமுரசு முழங்கியதும் பிற முரசுகளும் ஒலிக்கத் தொடங்கின. புற்றுவாய் திறந்து ஈசல்கள் எழுவதுபோல மக்கள் தங்கள் இல்ல வாயில்களில் இருந்தும் தெருமுனைத் திறப்புகளில் இருந்தும் எழுந்து சாலைகளை அடைந்தனர். துளிசேர்ந்து பெருக்காகி கரைதொட்டு நிரப்பியபடி நகர்மையத்தில் அமைந்த கலிதேவனின் ஆலயத்தை நோக்கி சென்றார்கள். அவர்கள் அணிந்திருந்த வண்ண ஆடைகளும் தலைப்பாகைகளும் கலந்த கொப்பளிப்பின்மேல் தெருமுனை மீன்நெய்ப் பந்தங்களின் தழலொளி அலையடித்தது.
சூழ்ந்திருந்த கூட்டம் அவர்களை தனிமையின் இனிய துயரிலிருந்து விடுவித்தது. பேச்சொலிகளும் முழவொலிகளும் கலந்த முழக்கம் அவர்களின் உள்ளே ஓடிக்கொண்டிருந்த மெல்லிய தன்மொழியை அணையச்செய்து அகத்தை கூச்சலாக ஆக்கியது. ஓசைமிகுதல் என்பது வெறி, களிப்பு, கொண்டாட்டம். தளர்வுடன் இருந்த அவர்களின் தோள்கள் நிமிர்ந்தன. தாழ்ந்து நிலம்நோக்கிய தலைகள் விரைத்தெழுந்தன. அடிநோக்கி அமைந்த சீர்நடை துள்ளலென்றாகியது. அப்பெருங்கூட்டத்தை அவர்கள் அறியாது அகநடனமிடச் செய்தது முரசின் தாளம். மேலிருந்து நோக்கிய காவலர்கள் அத்திரளில் நடனம் சிறிய அலைகளாக எழுந்து கொண்டிருப்பதை கண்டார்கள்.
நகரின் தென்மேற்கு மூலையில் இருந்த கலியின் சிற்றாலயத்தில் இருந்து பிடிமண் எடுத்துவந்து நகர்நடுவே அமைக்கப்பட்ட ஏழடுக்கு ஆலயம் அது. சுற்றிலும் மிக விரிவான செண்டுவெளி இருந்தது. அதிலிருந்து பதினெட்டு பெரிய படிகள் ஏறிச்சென்று கலியின் ஆலயச் சுற்றுக்கட்டை அடைந்தன. நூற்றெட்டு தூண்களால் தாங்கப்பட்ட கோபுரத்திற்குக் கீழே கருவறைக்குள் கலி கருநாகங்களும் காகங்களும் பொறிக்கப்பட்ட பீடத்தின்மேல் அமர்ந்திருந்தான். கோபுரத்தின்மேல் காகக்கொடி காற்றில் பறந்தது. அத்தனை தூண்களிலும் காகமுகம் கொண்ட விளக்குமகளிர் சிலைகளின் கைகளில் நெய்யகல்கள் பீதர்நாட்டுக் கண்ணாடியாலும் தீட்டப்பட்டச் சிப்பியாலுமான காற்றுமறைப்புக்குள் சுடர்கொண்டிருந்தன.
நான்கு எல்லையும் திறந்துகிடந்த செண்டுவெளிக்குள் பதினெட்டு சாலைகளிலிருந்து மக்கள் வந்து பெருகி நிறைந்தார்கள். அதன் நான்கு திசைகளிலும் அமைந்திருந்த முரசுமேடைகளில் பெருமுரசுகள் துள்ளுநடையில் துடித்துத்துடித்தொலிக்க கொம்புகளும் முழவுகளும் இணைந்துகொண்டன. உடுக்கோசையில் எழுந்துவரும் காட்டுத்தெய்வங்கள்போல விழிகளில் மதமும் வெறியும் தெரிய மக்கள் தோன்றினர். கைகளை விரித்து தொண்டை நரம்புகள் புடைக்க கூச்சலிட்டனர். அவிழ்குழல்கற்றைகளைக் சுழற்றியபடி வெறிகொண்டு ஆடினர் முதுபெண்டிர். சிலம்புகளும் கழல்களும் ஒலிக்க கால்கள் மண்ணை மிதித்து மிதித்து நடனமிட்டன.
நிஷதகுடிகளின் தலைவர்கள் அனைவரும் தங்கள் தொல்முறைப்படி இடைவளைத்து தோள்சுற்றிச் சென்ற ஒற்றைமான்தோலாடையும், தழல்வரிப்புலித்தோலாடையும், இருளலையும் கரடித்தோலாடையும் அணிந்து கழுகிறகும் காக்கையிறகும் காட்டுச்சேவல்இறகும் கொண்ட மரக்கொந்தைகளை தலையில் சூடி கைகளில் குடிக்கோல்களுடன் வந்து கலிதேவனின் ஆலயத்தின் முகமண்டபத்தில் நிரைகொண்டு நின்றிருந்தார்கள். உள்ளே பூசகர்கள் கலிவழிபாட்டுக்கென நீலமலர்களையும் காட்டுச்சுனையில் ஊறிய நூற்றெட்டு குடம் நீரையும் கொண்டுவைத்தனர். அடுமனைப்பூசகர் நுரைக்கும் கள்ளையும் இலையப்பங்களையும் பனையோலைச் சுருளப்பங்களையும் சுட்ட அப்பங்களையும் கொண்டு வைத்தனர்.
காளகக்குடிகளின் ஏழு மூத்தவர்களால் வழிநடத்தப்பட்டு புஷ்கரன் முழுதணிக்கோலத்தில் ஆலயமுகப்பிற்கு தேரில் வந்து இறங்கியபோது பெருமுரசுகளும் கொம்புகளும் முழங்கின. செண்டுவெளியை நிறைத்திருந்த குடிகள் வாழ்த்தொலி எழுப்பினர். இசைச்சூதர் மங்கல இசைமுழக்கி சூழ்ந்திருந்த காற்றை அக்காட்சிகள் அனைத்தும் வரையப்பட்ட ஓவியத்திரைச்சீலை என்றாக்கினர். புஷ்கரனுடன் உடனுறைத் துணைவனாக ரிஷபன் அணிச்செதுக்குப் பிடிகொண்ட உடைவாள் ஏந்தி வலப்பக்கம் நடந்து வந்தான். வாழ்த்தொலிகளும் குரவையோசையும் சூழ அவர்கள் வந்து கலிதேவனின் கருவறைக்கு முன்னால் பலிபீடத்திற்கு வலப்பக்கமாக நின்றனர்.
செந்திரைகள் அலைய அரசபல்லக்கு வந்து நிலம் அமைந்தது. அதனருகே மரப்பீடம் கொண்டுபோடப்பட்டது. திரைவிலக்கி கைகூப்பியபடி இறங்கிய மாலினிதேவி இடையிலும் தோளிலும் காளகக்குடிப் பெண்களுக்குரிய முழங்கால்வரை வரும் ஒற்றை மான்தோலாடை சுற்றியிருந்தாள் கல்மாலைகளும் கல்குழைகளும் அணிந்து புலித்தோல் கச்சை கட்டி தலையில் காகஇறகுகள் கொண்ட முடிவளை சூடியிருந்தாள். காளகக்குடியினரான ஏழு சேடியரால் சூழ்ந்து வழிநடத்தி அழைத்துவரப்பட்டு ஆலய முகப்பை அவள் அடைவதுவரை குடிகளின் வாழ்த்துக்களே அவளை ஏந்தி வந்தன.
காளகக்குடியின் மூத்த பெண்டிர் பன்னிருவர் நிறைநீர்க்குடங்களும் அகல்சுடர்களும் ஏந்தி உடன்வர புஷ்கரனின் அன்னை சம்புகை கலிங்க இளவரசியை எதிர்கொண்டு கல், மண், நீர், மலர், கனி என்னும் ஐந்து கான்மங்கலங்கள் கொண்ட தாலத்தை அளித்து நெற்றியில் பலிவிலங்கின் குருதி உலர்ந்த கருஞ்சாந்தால் பொட்டிட்டு வாழ்த்தினாள். அவள் குனிந்து அன்னையின் கால்தொட்டு சென்னி சூடினாள். அன்னையர் அவளை அழைத்துவந்து கலிதேவன் முன்னால் நிறுத்தினார்கள். பூசகக்குலத்து மூதன்னையர் எழுவர் செங்குருதி நிறைந்த குவளைகொண்ட கரித்தாலத்தை உழிந்து காட்டி கண்ணேறு கழித்தனர். கலியின் காலடியில் எழுபத்திரண்டு நாள் வைத்து வழிபட்டு எடுத்த கருந்தாலியை பூசகி எடுத்து நீட்ட புஷ்கரனின் அன்னை அதை மாலினியின் இடக்கையில் காப்பெனக் கட்டினாள். பிறிதொரு மூதன்னை அளித்த நெய்விளக்குடன் அவள் சென்று கலிதேவனின் கருவறை முகப்பில் பலிபீடத்தின் இடப்பக்கம் நின்றாள்.
சுநீதர் கைகாட்ட கலிதேவனின் தலைப்பூசகர் வழிபடுமுறைமைகளை தொடங்கினார். நூற்றெட்டு கலம் நீரால் கரியதேவன் முழுக்காட்டப்பட்டான். அதன்பின் பலிஎருமையின் செங்குருதி முழுக்கு. பின்னர் பால்முழுக்கு. தேன்முழுக்கு, நீறுமுழுக்கு. ஐம்முழுக்குகளுக்குப்பின் மீண்டும் பதினெட்டு கலம் நீரால் முழுக்காட்டு. கரிய ஆடையும், காகச்சிறகு மணிமுடியும், நீலமணிக் கழல்களும் கச்சையும் ஆரங்களும் வளையல்களும் பூட்டப்பட்டபின் நீலமலர்க்காப்பு அணிவிக்கப்பட்டது. பெண்டிரின் குரவை எழுந்து சூழ்ந்தது. கலிதேவனுக்குரிய குறுமுழவான உறுமி தோற்பரப்பில் பிரம்புக்கோல் வருட சினந்த புலி என ஓசையிட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் அனைவருக்குள்ளும் வாழ்ந்த தொல்குடி நினைவு ஒன்று பதறி கிளைநுனியில் தவித்து நின்றிருந்தது.
சிவந்த வெறிவிழிகளும் தோள்களில் படர்ந்த சடைவிழுதுகளும் ஏழு திரிகளாக நெஞ்சில் விழுந்த சடைத்தாடியும் கலிதெய்வத்தின் காகச்சிறகு சூட்டுத்தழும்பாக வரையப்பட்ட விரிந்த மார்பும் கொண்டிருந்த முதன்மைப்பூசகர் கையில் பொசுங்கி வெடித்து நீலச்சுடரசைய எரியும் நெய்ப்பந்தத்துடன் வீரிட்டலறி விதிர்த்த உடலுடன் கருவறையிலிருந்து வெளியே பாய்ந்து வந்தார். தன் கையிலிருந்த சாம்பலை மாலினிதேவியின் முகத்தின்மேல் ஊதியபின் அறியா விலங்கொன்றின் அமறல்போல் ஒலித்த குரலில் “பெண்ணே, இது கலிதேவனின் வினா. நீ நிஷதகுடிகளில் முதன்மையானதான காளகக்குடியின் வருமகள் என கற்குழையும் கருகமணியும் அணிந்து அமர ஒப்புகிறாயா?” என்றார்.
அவள் திகைக்க அருகே நின்ற முதுமகள் “ஆம் என்று சொல்க!” என்றாள். அவள் உதடுகள் மெல்ல அசைந்தன. இடத்தோள் விதிர்த்தது. “சொல், சொல்” என்றாள். அவள் மூக்குத் துளைகள் விரிந்து சுருங்கின. முலைகள் எழுந்தமைந்தன. “சொல், ஒப்புகிறாயா?” என்றார் பூசகர். “சொல்” என்றாள் மூதன்னை. அவள் தொண்டையை செருமினாள். “மூன்றாம்முறை இது… சொல்க!” என்றார் பூசகர். அவள் “ஆம், ஒப்புகிறேன்” என்றாள். “ஒப்புகிறாயா?” என அவர் மீண்டும் இருமுறை கேட்க “ஆம், ஒப்புகிறேன்” என அவள் தாழ்ந்த குரலில் விழிதாழ்த்தி மறுமொழி உரைத்தாள். அவள் இடத்தொடை ஆடியபடியே இருந்தது.
அதே வெறியுடன் புஷ்கரனை நோக்கித் திரும்பி அலறலுடன் அவன் முகத்தில் நீறை ஊதிய பூசகர் “கேள், மகனே. கலியின் சொல் இது. கேள்… இதோ நின்றிருக்கும் இச்சிறுமகளை மணம்கொண்டு மைந்தரை ஈன்று குடிசிறக்க ஒப்புகிறாயா?” என்றார். அவன் சுநீதரை நோக்கிவிட்டு “ஆம், ஒப்புகிறேன்” என்றான். அவர் மீண்டும் கேட்க அவன் மும்முறை அதை சொன்னான். பூசகர் இரு கைகளையும் விரித்து முழவுக்குரலில் “சொல், இவளுடன் அரியணை அமர்ந்து நிஷதகுடிகளை முழுதாள ஒப்புகிறாயா? என் தேவனென எழுந்தருளிய கலிதெய்வத்தை முழுமுதலோன் என்று இக்குடிகளுக்குமேல் நிறுத்த ஒப்புகிறாயா?” என்று கேட்டார். புஷ்கரன் கூப்பிய கைகள் நடுங்க உதடுகள் இறுகி அசைய தள்ளாடுபவன்போல நின்றான். “சொல்! ஒப்புகிறாயா?” என்றார் பூசகர். “ஆம், ஒப்புகிறேன்” என்று புஷ்கரன் முணுமுணுத்தான்.
“அருளினோம்! அருளினோம்! அருளினோம்!” என்று கூவியபடி பூசகர் கருவறைக்குள் ஓடினார். அவர் உடல் விதிர்த்து துள்ளியது. கருவறையில் கருங்கல்லில் செதுக்கப்பட்டு நெடுங்காலம் எண்ணை பூசப்பட்டமையால் முடியின் கருமையொளி கொண்டிருந்த கலிதேவனின் சிலையின் இரு பக்கமும் நின்றிருந்த காவல்தேவர்களின் வளைகோட்டுவாய் திறந்த முகங்களில் வெள்ளிவிழிகள் பதிக்கப்பட்டிருந்தன. தழல் நெளிந்த பந்தங்களின் வெளிச்சத்தில் அவை சினந்த நோக்குகொண்டு அசைந்துகொண்டிருந்தன. கலியின் கண்கள் நீலப்பட்டால் மூடிக் கட்டப்பட்டிருக்க திறந்த செந்நிற வாயில் வெண்பற்கள் தெரிந்தன. தொங்கிக் கிடந்த நீள்நாக்கில் தொட்டு வைக்கப்பட்ட குருதி வழிந்து துளித்து நின்றது.
சிலையின் காலடியில் இரு உயிருள்ள முதிய காகங்கள் சிறகு கோட்டி தோளுக்குள் தலைபுதைத்து அமர்ந்திருந்தன. அவற்றின் விழிகள் சோர்ந்து தழைந்து மீண்டும் விழித்தன. அவை எப்போதும் அங்கே இருந்துகொண்டிருப்பவை. இறகுகள் பாதி உதிர்ந்த காகம் பல ஆண்டுகளாக அங்கிருக்கிறது என குடியினர் அறிந்திருந்தனர். பூசகர் “எந்தையே, இறையே, சொல்க! உலகாளும் கருமையே சொல்க! வருநெறி சொல்க! எழுமுலகு என்னவென்று நற்சொல் தருக!” என்று கூவினார். காகங்களில் ஒன்று நீர் விழுந்ததுபோல சிலிர்த்து விழிப்புகொண்டு தலையைத் தூக்கி விழிகளை உருட்டி சுடர்களை நோக்கியபின் “காவ்!” என்றது. அடிவயிற்றில் வேல்குத்து பட்டதுபோல துடித்த பூசகர் “ஆ!” என அலறி இரு கைகளையும் விரித்தார். பிடரி சிலிர்த்து சடைவிரிந்து பறக்க சுழன்று ஆடினார்.
ஆட்டவிசையில் கலியின் காலடியிலிருந்த பள்ளிவாளை எடுத்து சுழற்றி மும்முறை துள்ளி நடனமிட்டுச் சுழன்று தன் நெற்றியில் ஓங்கி ஓங்கி வெட்டினார் பூசகர். உடற்தசைகள் இழுபட்டு அதிர விலங்குபோல ஊளையிட்டபடி சுழன்றார். பசுங்குருதியின் மணம் எழுந்தது. அவர் முகமும் நெஞ்சும் தோள்களும் குருதியால் செந்நிறம் கொண்டன. “அருளினேன்! குருதியருளினேன்! செங்குருதி! கொழுங்குருதி! வஞ்சக்கனல் எரியும் குருதி!” என்று கூவியபடி வெளியே வந்து கையை அவர்கள்மேல் உதறினார். குருதித்துளிகள் அவர்கள் இருவர் தலையிலும் முகத்திலும் தெறித்து துளிவழிவாகி இறங்கின. புருவங்களில் குருதி தொங்கி நோக்கு மறைக்க புஷ்கரன் கருவறையில் அமர்ந்திருந்த கரிய உருவத்தின் கண்களையும் திறந்த சிவந்த வாயையும் நோக்கினான்.
“நிகழ்க! கலிதேவனின் ஆணை இது! நிகழ்க!” என்று பூசகர் கூவினார். காளகக்குடி மூத்தார் திரும்பி “தாலி! தாலி எங்கே?” என்றனர். அன்று உச்சிப்பொழுதில் அவர்களின் குடியவை கூடி அமர்ந்து பனையோலையில் புஷ்கரனின் குடிநிரையும் பெயரும் குறியும் பொறித்து இறுகச்சுருட்டி எண்ணைக்கரி பூசி கருஞ்சரடில் கட்டி கொண்டுவந்திருந்த தாலி ஒரு கரிய கொப்பரையில் கட்டப்பட்டிருந்தது. அதை தாலத்தில் செம்மலர்களும் வெண்ணீறும் இட்டு வைத்திருந்தனர். தலைகளுக்கு மேலாக அது பறப்பதுபோல வந்தது. அதை சுநீதர் வாங்கி தாலத்துடன் துணைப்பூசகர் கையில் அளித்தார். கலியின் காலடியில் அதை வைத்து ஒரு துளிக் குருதியும் ஒரு மலரிதழும் வைத்து வணங்கி திருப்பியளித்தார் பூசகர்.
அதை வாங்கி சுநீதர் புஷ்கரனிடம் நீட்டி “அவள் கழுத்தில் இதை கட்டு. அவள் நம் குலக்கொடியென்றமைக!” என்றார். அவன் அதை எடுத்து முன்னகர மூதன்னையர் மாலினிதேவியை முன்னால் செலுத்தினர். அவள் கழுத்தும் தோள்களும் மெய்ப்புகொண்டு மயிர்நிரைகளாக தெரிந்தன. அவளை மூதன்னையர் விழாமல் தாங்கிப்பிடித்திருந்தார்கள். புஷ்கரன் கருந்தாலியுடன் அவளை நோக்கியபடி நின்றான். பெண்டிரின் குரவையோசையும் உறுமியின் அமறலும் இணைந்து சூழ்ந்தன. “கட்டுக!” என்றார் சுநீதர். அவன் கைநீட்ட அவள் விழிதூக்கி அவனை நோக்கினாள். திடுக்கிட்டு அவன் கைகளை பின்னிழுத்துக்கொண்டான். “கட்டுக, இளவரசே!” என்றார் சுநீதர். அவன் நெஞ்சு துடித்தது. ஒருகணம் அவன் தன் வலப்பக்கம் ரிஷபனின் உடல் வெம்மையை உணர்ந்தான். “கட்டுங்கள்” என்றான் ரிஷபன்.
புஷ்கரன் அந்தத் தாலியை அவள் கழுத்திலிட்டு முதல் முடிச்சை கட்டினான். இரண்டாவது முடிச்சை அவன் அன்னை கட்டினாள். மூன்றாம் முடிச்சை குலமூதாட்டி ஒருத்தி கட்டினாள். நான்காம் முடிச்சை ஆலயத்தின் பூசகி கட்ட ஐந்தாம் முடிச்சை அவர்களின் அணுக்ககுலத்தைச் சேர்ந்த மூதன்னை ஒருத்தி கட்டினாள். ஆறாவது முடிச்சை மலைத்தெய்வங்களின் பொருட்டு சிறுமி ஒருத்தி கட்ட ஏழாவது முடிச்சை மாலினியே கட்டிக்கொண்டாள். சுநீதர் “இளவரசே, உங்கள் உடைவாளை உருவி கலிதேவனின் காலடியில் தாழ்த்திவிட்டு வான்நோக்கித் தூக்கி மும்முறை ஆட்டுங்கள்” என்றார். ஒரு முதியவர் “அந்த மரபு இல்லையே?” என்றார். “அம்மரபு உருவாகட்டும்” என்றார் சுநீதர். “ஆனால்…” என அவர் முனக “இனி நமக்கு புஷ்கரரே அரசர்! புஷ்கரர் மட்டுமே அரசர்!” என்றார் சுநீதர்.
“ஆம்!” என்று ஒரு குலமூத்தார் கூவினார். “நம் அரசர் இவர் மட்டுமே. நாம் வெல்வோம். நம் குடிகள் நம் நிலத்தை முழுதாளும்.” குடிமூத்தார் அனைவரும் கோல்களைத் தூக்கி “ஆம் ஆம் ஆம்” என கூவினர். புஷ்கரன் திகைத்தவன்போல நின்றான். “வாளை உருவுக, இளவரசே” என்றார் சுநீதர். புஷ்கரன் தன் இடைவாளை உருவி கலியின் காலடிநோக்கி நீட்டினான். அது பாம்புநாக்கென நடுங்கியது. அதன்மேல் தன் கையில் வழிந்த குருதித்துளிகளைச் சொட்டி மலர் ஒன்றை இட்டு “பழிகொள்க! வெற்றிசூடுக!” என்று பூசகர் வாழ்த்தினார். அவன் வாளைச் சுழற்றித் தூக்கி தலைமேல் எழுப்பினான். “அமைதி… அமைதி” என்றார் சுநீதர். புஷ்கரன் கைகள் நடுங்க உடல் மெய்ப்புகொண்டது. “வஞ்சினம் உரையுங்கள், இளவரசே” என்றார் சுநீதர். “அது நம் தெய்வத்தின் ஆணை” என்றார் இன்னொருவர்.
அவன் மூச்சுவாங்கினான். வாள் கையில் காற்றுபட்ட கொடி என படபடப்பதாகத் தோன்றியது. “உம்” என்றார் சுநீதர். அவன் வாளை ஆட்டினான். வெளியே முரசுகள் முழங்க பல்லாயிரம் குரல்கள் வெடித்தெழுந்து “காளகக்குடி வெல்க! கலிமைந்தர் வெல்க! புஷ்கரர் வெல்க!” என ஓசையிட்டன. அவன் கண்கள் கசியும்படி மெய்விதிர்ப்புகொண்டான். “குருதியால் கழுவுவேன்! குருதி ஒன்றை மட்டுமே நிகர்வைப்பேன்! ஆணை! ஆணை! ஆணை!” என்றான். “ஆம், ஆணை! ஆணை! ஆணை!” என்றனர் சூழ்ந்திருந்த குடித்தலைவர்கள். வாளைத் தாழ்த்தியபின் உடலில் நுரைத்த ஆற்றல் அனைத்தும் ஒழுகி மறைய தலைசுற்றுவதுபோல உணர்ந்தான். பெருமூச்சுவிட்டபடி தோள்தளர்ந்தான்.
“மங்கலம் கொள்க!” என்றார் பூசகர். கலிக்குப் படைத்த அப்பம், மலர், சிறு பனைகொட்டையில் கள் மூன்றையும் ஒரு தாலத்தில் வைத்து அவனுக்கு அளித்தார். “இருவரும் ஓருடல் கைகளென கொள்க அதை” என்றார் சுநீதர். புஷ்கரனும் மாலினியும் கைநீட்டி அத்தாலத்தை வாங்கிக்கொண்டனர். பூசகர் பலிக்குருதி மையைத் தொட்டு இருவருக்கும் பொட்டு அணிவித்தார். “தெய்வம் துணைகொள்ளும். எதற்கும் அஞ்சேல். எங்கும் தளரேல். எந்நிலையிலும் பின்நோக்கேல். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார் பூசகர். அவர்கள் இருவரும் அவரை வணங்கி விலகினர்.
சுநீதர் பெருமூச்சுடன் உடல் இயல்பாகி முகம் மலர்ந்து “மணவினை முடிந்தது. கலிங்க இளவரசி நம் குடிக்கு தலைவியென்றானாள். நிஷதகுலம் என்றும் இந்நாளை கொண்டாடட்டும். இத்தருணம் நம் கொடிவழிகளின் நினைவில் வாழட்டும்” என்றார். அனைவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு சிரித்து முகமன் பரிமாறிக்கொண்டார்கள். “செல்வோம்” என்று சுநீதர் புஷ்கரனை தொட்டார். எரிச்சல் கொண்டவன்போல, எதையோ எண்ணி தடுமாறுபவன்போல கைவிரல்களால் காற்றில் எதையோ சுழற்றியபடி புஷ்கரன் அவருடன் நடந்தான். ரிஷபன் வாளேந்தி உடன் வந்தான். சுநீதர் “நாம் அரண்மனைக்கு செல்கிறோம். ஊருண்டாட்டு ஒருங்கமைந்துள்ளது. அடுமனைப் புகையின் மணம் எழுகிறது” என்றார். ரிஷபன் “நம் தேர் மறுபக்கம் சென்று நின்றுள்ளது, அரசே” என்றான். புஷ்கரன் சினத்துடன் அவனை நோக்கி “தெரியும்” என்றான்.
“இருவரும் இணைந்து மக்கள் நடுவே செல்லவேண்டும். அவர்களின் நல்வாழ்த்துக்கள் பொழியட்டும்” என்றார் சுநீதர். புஷ்கரனின் இடப்பக்கம் மாலினிதேவி வந்து நின்றாள். அவர்களின் ஆடைமுனைகளை மூதன்னையர் சேர்த்துக்கட்டினர். வாழ்த்தொலி எழுப்பியபடி மக்கள் அரிசியையும் மலரையும் அவர்கள்மேல் தூவினர். மாலினியின் சுட்டுவிரலை தன் சுட்டுவிரலால் பற்றியபடி புஷ்கரன் மக்கள் நடுவே உருவான ஆழ்நெடும்பாதையில் நடந்தான். வாளுடன் ரிஷபன் உடன் வந்தான். மலர்களும் அரிசியும் உடல்மேல் விழுவது அவனுக்கு உளப்புரட்டலை அளித்தது. தலையில் தொங்கிநின்ற மலர்களை தட்டிவிட விரும்பினான். சூழ தெரிந்த பல்விரிந்த முகங்கள் கெடுகனவிலென இளித்தன. கண்கள் ஒவ்வொன்றிலும் வெறிப்பு. கொன்று உண்ணும் கான்விலங்கின் அறியாமை கலந்த உவகை.
தேர் வந்து நின்றது. சுநீதர் “அரண்மனைக்குச் செல்லுங்கள், இளவரசே. அரசஆடையில் உண்டாட்டுக்கு எழுந்தருளுங்கள். அரசியும் ஆடைமாற்றி வந்து சேரட்டும். அதற்குள் இங்குள்ள மக்கள் வழிபாடு முடிந்து ஊண்கூடங்களுக்கு வந்துவிடுவார்கள்…” என்றார். அவன் “நன்று” என்றபின் படிகளில் கால்வைத்து மேலேறினான். ரிஷபன் வாள் தாழ்த்தி வணங்கி மூன்று எட்டுவைத்து பின்னடைந்தான். மாலினிதேவி அவனுக்குப் பின்னால் படியிலேறி அவனருகே அமர்ந்தாள். தேர் மெல்லிய உலுக்கலுடன் உயிர்கொண்டது. புரவி ஒன்று சீறி மூச்சுவிட்டது. வெளியே அரசர் கிளம்புவதை அறிவிக்கும் முரசொலியும் கொம்பொலியும் எழுந்தன. தேர் நகர்ந்து உலுக்கி மெல்ல சாலையை அடைந்து விரைவுகொண்டது. குளிர்ந்த காற்று திரைச்சீலைகளை அசைத்தபடி உள்ளே பெருகிவந்தது.
அவன் மீண்டும் புரவியின் சீறலோசையை கேட்டான். ஆனால் அது அருகிலென சித்தம் உணர்ந்ததும் திரும்பிப் பார்த்தான். மேலாடையால் முகத்தை மூடியபடி மாலினிதேவி அழுதுகொண்டிருந்தாள். சில கணங்கள் அவன் அவளையே நோக்கினான். இருமுறை வாயும் கையும் அசைந்தன. சொல்லெடுக்காமல் திரும்பி கண்களை மூடிக்கொண்டான். சகடஒலியின் நேர்த்தியான தாளம் அவனை ஆறுதல்படுத்துவதாகத் தோன்றியது.