‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 39

38. முகில்பகடை

flowerஅரசவைக்கு அருகே இருந்த சிற்றறையில் விராடரும் அவருடைய அகம்படியினரும் அரசிக்காக காத்துநின்றிருந்தனர். பேரரசி வருவதைப் பார்த்து விராடரின் கோல்காரன் கையசைத்தான். அப்பால் பேரவையில் மங்கலஇசையும் வாழ்த்தொலிகளும் முழங்கின. அங்கிருந்த அமைச்சர் அழைக்க கோல்காரன் சீரடி வைத்து முன்னே சென்று அவைக்குள் புகுந்து அறிவிப்புமேடைமேல் வெள்ளிக்கோலைச் சுழற்றி “நிஷாதகுடிகளின் விராடக்கூட்டமைப்பின் தலைவர், நிஷதப் பேரரசர் மாமன்னர் மகாகீசகரின் வழித்தோன்றல், தீர்க்கபாகு அவை புகுகிறார்” என்று அறிவித்தான். வாழ்த்தொலிகளின் நடுவே இரு கைகளைக் கூப்பியபடி விராடர் நடந்து சென்று அரியணை அருகே நின்று இருபுறமும் நோக்கி வணங்கினார். இரு குடித்தலைவர்கள்  வந்து அவரை வழிநடத்தி அரியணை அமரவைத்தனர்.

சுதேஷ்ணையின் கோல்காரன் அவை புகுந்து அவள் வரவை அறிவித்தான். “கேகயத்து அரசி, விராடபுரியின் பேரரசி, சுதேஷ்ணை அவைபுகுகிறார்” என்று அவன் கூவ அவை வாழ்த்தொலிகளை சீரான அலைகளாக எழுப்பியது. சுதேஷ்ணை அவைபுகுந்து வணங்கி அவை மேடையில் ஏற இரு மூத்தகுடி பெண்டிர் அவளை கைபற்றி அழைத்துச் சென்று அரியணையில் அமரவைத்தனர். அவளுடன் சீர்நடையிட்டுச் சென்ற திரௌபதி அரியணையின் பின்பக்கம் நின்றாள்.

ஏவலர் பொற்தாலத்தில் கொண்டு வந்த மணிமுடியை குடிமூத்தார் இருவர் விராடருக்கு அணிவித்தனர். மங்கல மூதன்னையர் இருவர் அரசியருக்குரிய மணிமுடியை சுதேஷ்ணைக்கு அணிவித்தனர். கருவூலத்திலிருந்து வந்த செங்கோலை மூத்த குடிமக்கள் இருவர் எடுத்தளிக்க விராடர் வாங்கி வலக்கையில் பற்றி ஊன்றிக்கொண்டார். அந்தணர் எழுவர் வந்து கங்கைநீர் தெளித்து விராடரையும் அரசியையும் வாழ்த்தி வேதம் ஓதினர். அவர் கைகூப்பி அவ்வாழ்த்தை ஏற்று அமர்ந்திருந்தார்.

வாழ்த்தொலிகள் பெண்டிரின் குரவையொலிகளுடன் கலந்தொலித்துக்கொண்டிருக்க கோல்காரன் வந்து உத்தரனின் அவை நுழைவை அறிவித்தான். உத்தரன் சற்று அப்பால் அவையினர் அனைவரும் நோக்கும்படியாக நின்று தன் ஆடை மடிப்புகளை சீரமைத்துக்கொண்டிருந்தான். கழுத்தில் அணிந்திருந்த சரப்பொளி அவன் திரும்பித் திரும்பி சேடியரிடம் பேசுகையில் அடுக்கு குலைந்திருந்தது. அவன் பெயர் அறிவிக்கப்பட்டபோது ஒரு சேடி அதை சுட்டிக்காட்ட அவன் பதற்றத்துடன் அதை சீர் செய்யத்தொடங்கினான். அவன் பெயர் அறிவிக்கப்பட்டு முடிந்த பின்னரும் அவன் அதை அறியவில்லை.

இரு சேடியர் அவனைத் தொட்டு “இளவரசே, தங்கள் பெயர்” என்றனர். “என்ன?” என்று அவன் கேட்டான். ஒருத்தி உரக்க “அவை புகுங்கள்” என்றதும் துரத்தப்பட்டவன்போல பாய்ந்து அவைக்குள் புகுந்து விரைந்து வந்துவிட்டோமோ என்ற தன்னுணர்வை அடைந்து நின்று மிக மெல்ல நடந்து அரச மேடைக்கருகே வந்து கைகூப்பி வணங்கினான். அது நன்கு பயிலாத நடனம்போல் தோன்றியது. அவையின் பின்பகுதிகளில் சிரிப்பொலி எழுந்தது. அது தனக்குரிய பாராட்டென்று எடுத்துக்கொண்டு மீண்டும் ஒருமுறை வணங்கி அவன் நடந்து அன்னையருகே சென்று நின்றான்.

அங்கு நின்றிருந்த மூதன்னையர் கைகாட்டி “மறுபுறம்” என்றனர். “என்ன?” என்று அவன் கேட்டான். “தங்கள் இடம் மறுபுறம், இளவரசே” என்றாள் மூதன்னை. அவையே அக்குழப்பத்தை நோக்கி சிரித்துக்கொண்டிருந்தது. உத்தரன் அரியணையை பின்பக்கமாக சுற்றி வந்து தந்தை அருகே நின்றான். தன் கழுத்திலணிந்திருந்த அணிகளை சீரமைத்து ஆடைமடிப்புகளை நீவிக்கொண்டான்.

உத்தரையின் கோல்காரன் அவை புகுந்து அவள் வரவை அறிவித்தான். “விராடபுரியின் இளவரசி உத்தரை அவை புகுகிறார்.” உத்தரன் அவையினர் பேரொலி எழுப்பி அவளை வரவேற்பதை பார்த்தான். பின்பு திரும்பி அவள் அவை புகுவதை நோக்கினான். அவளை அவர்கள் மதிப்பது அவ்வொலியில் அவனுக்குத் தெரிந்தது. அது அவனுக்கு உவகையை அளித்தது. உத்தரையின் மேலாடை சற்றே சரிந்து பின்னால் இழுபட்டது. தொடர்ந்து வந்த சேடியிடம் உத்தரன் கையால் சுட்டி “மேலாடை, மேலாடை!” என்று காட்டினான். அவள் புருவம் தூக்கி “என்ன?” என்றாள். “மேலாடை” என்றான் அவன்.

அவனருகே நின்றிருந்த காவலன் “இளவரசே, அசையாமல் நில்லுங்கள்” என்றான். “ஏன்?” என்று அவனிடம் கேட்டான். காவலன் பல்லை கடிக்க அவன் திரும்பி சேடியிடம் “மேலாடையை பற்று, கால் தடுக்கப்போகிறது” என்று மீண்டும் சொன்னான். சேடி குனிந்து மேலாடையைப்பற்றி எடுக்க புன்னகையுடன் “ஆம்” என்று தலையசைத்தான். பின்னர் காவலனிடம் “என்ன சொன்னாய்?” என்றான். காவலன் பெருமூச்சுடன் தலைவணங்கினான்.

உத்தரை அவைபுகுந்து அனைவரையும் வணங்கி அரசமேடையில் ஏறி தன் அன்னையை நோக்கி செல்ல அவள் பின்னால் சென்ற அச்சேடியிடம் அவளுடைய ஆடை நீட்சியை மேலும் சற்று தூக்கிக்கொள்ளும்படி உத்தரன் கைகாட்டினான். அவள் இதழ்கோட புன்னகைத்து அப்பால் சென்றாள். உத்தரை சென்று நின்று மீண்டும் ஒருமுறை வணங்கியதும் வாழ்த்தொலிகள் உச்சமடைந்து மறைந்தன. உத்தரன் தன் உடைவாள்மேல் கைவைத்து அதை மெல்ல அசைத்தான். அது எழுப்பிய ஓசை கேட்டு விராடர் திரும்பிப்பார்த்தார். காவலன் “வாள்மேல் கைவைக்க வேண்டாம், இளவரசே” என்றான். “ஏன்?” என்று அவன் கேட்டான். “அது முறைமை அல்ல” என்று அவன் சொன்னான். “நன்று” என்று அவன் கையை எடுத்தான். அந்தக் கையை எங்கு வைப்பது என்று தெரியவில்லை. ஆகவே மார்பில் கட்டிக்கொண்டான்.

அவை அமைதியடைந்திருந்தது. அது சோர்வின் அமைதி என அவர்கள் அமர்ந்திருந்தமை காட்டியது. எவரும் எதையும் செவிகொடுக்கவில்லை. நிமித்திகன் மேடையேறி விராட அரசகுடியின் கொடிவழியினர் பெயர்களை ஒவ்வொன்றாக அறிவித்துக்கொண்டிருந்தான். மகாகீசகரிலிருந்து தொடங்கிய இருபத்திஎட்டு அரசர்களின் பெயர்கள் சொல்லி முடிக்கப்படுகையில் வெளியே வாழ்த்தொலியும் சங்கொலியும் எழுந்தன. அனைவரும் உயிரசைவுகொண்டு திரும்பி நோக்கினர். நிமித்திகன் ஒருவன் உள்ளே வந்து அரசரை வணங்கி “மச்சர்குலத்து இளவரசர், பெரும்படைத்தலைவர் கீசகன் வருகிறார்” என அறிவித்தான்.

அவ்வாறு அவையறிவிப்பு அரசகுடியினருக்கு மட்டுமே அமைந்தது. ஆகவே அரசரிடம் கூறும் தன்மையில் திரும்பி ஆனால் அறிவிப்பின் குரலில் அதை அவன் சொன்னான். விராடர் கைகாட்டினார். அவர் ஏற்கெனவே அரைத்துயிலில் ஆழ்ந்திருந்தார். மங்கிய கண்களுக்கு கீழே தசைவளையங்கள் தளர்ந்து தொங்கின. வாய் சற்றே திறந்திருக்க அவ்வப்போது குறட்டைபோல் ஓர் ஓசை எழுந்தது. அரசி வாயிலை சுருங்கிய விழிகளுடன் உற்று நோக்கிக்கொண்டிருந்தாள். உத்தரன் தன் ஆடையை சீரமைத்தபோது காவலன்மேல் கைபட அவனை நோக்கி புன்னகை செய்தான்.

தோளில் வெண்பட்டுச் சால்வை நழுவி தரையிழைய கங்கணம் அணிந்த பெரிய கைகளைக் கூப்பியபடி கீசகன் அவைக்குள் நுழைந்தான். உத்தரன் கீசகன் நுழைவதை பார்க்கவில்லை. சலிப்புடன் அவை முறைமையை கேட்டுக்கொண்டு எழுந்த கோட்டுவாயை அடக்கிக்கொண்டிருந்தவன் அவை பெருமுழக்கமிடுவதைக் கண்டு திடுக்கிட்டு வாயிலைப் பார்த்து கீசகன் நுழைந்ததைக் கண்டான். முழுதணிக்கோலத்தில் மெல்ல நடந்து அவைக்குள் வந்த கீசகன் விராடர் முன்வந்து முறைப்படி தலைவணங்கி முகமனுரைத்தான். “நிஷதப்பேரரசின் அரசருக்கு தலைவணங்குகிறேன். வெற்றியும் சிறப்பும் சூழ்க! திருமகள் மடியமர்க! படைநிரைகளை பார்வையிடச் சென்றிருந்தேன், வருவதற்கு சற்று பிந்திவிட்டது. பொறுத்தருளவேண்டும்.”

சலிப்புடன் “நன்று” என்று விராடர் சொன்னார். கீசகன் சீர்நடையிட்டுச் சென்று அவனுக்குரிய பீடத்தில் அமர்ந்தான். அவன் அன்னச்சிறகு வடிவில் தோள்வளைகள் அணிந்திருந்தான். மார்பில் இடைவரை வந்த பெரிய சரப்பொளி நலுங்கியது. காதுகளில் மச்சக்குழைகளில் அருமணிகள் ஒளிசிதறின. இடையில் பொற்கச்சையை இறுக்கி அதில் செவ்வைரங்கள் அனலென சுடர்ந்த பொற்செதுக்குப்பிடி கொண்ட குத்துவாளை அணிந்திருந்தான். அவன் அமர்ந்தபோது அணிகள் பலநூறு இமைப்புகள் கொண்டன.

கீசகனுக்குரிய பீடம் பிற பீடங்களிலிருந்து தனித்து சற்று உயரத்தில் போடப்பட்டிருந்தது. மற்ற பீடங்களைவிட மும்மடங்கு பெரிதாக, அவனுடலுக்கு உரியதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அது பிறிதொரு அரியணை என்பதை அவையோர் அறிந்திருந்தனர். அவன் அப்பீடத்தில் சரிந்தமர்வதுவரை அவை வெடிப்பொலியுடன் வாழ்த்துரைத்தபடியே இருந்தது. அவன் அமர்ந்து அவையை நோக்கி தலையசைத்து வணங்கியதும் வாழ்த்தொலிகள் மெல்ல அமைந்து அவையினர் தங்கள் பீடங்களில் மீண்டும் அமர்ந்தனர். அவன் உடலை எளிதாக்கி கால்களை நீட்டிக்கொண்டு கைகளை மார்பில் கட்டிக் கொண்டான்.

உத்தரன் அவனுடைய பேருடலையே பார்த்துக்கொண்டிருந்தான். இரு கைகளும் இரு தனிமனிதர்களைப்போல் பீடத்தின் கைப்பிடியில் அமைந்திருந்தன. இரு தோள்களும் இருபக்கமும் விரிந்து எழுந்திருக்க அவன் தலை படகில் அமர்ந்திருக்கும் மனிதனைப்போல அவனுக்குத் தோன்றியது. அதை எவரிடமாவது சொல்ல விரும்பி திரும்பி காவலனைப் பார்த்துவிட்டு அவன் கண்களால் உளம் அடங்கப்பெற்றான். அவன் தொடைகளும் இரு மல்லர்களின் பெருவயிறுபோலத் தோன்றின. ஆனால் கணுக்கால்களும் பாதங்களும் மிகச் சிறியவை. அவன் அதை எவரிடமாவது சொல்ல விரும்பினான். ஆனால் காவலனுக்கு அப்பால் மறுபக்கம்தான் சேடியர் நின்றிருந்தனர்.

மீண்டும் நோக்கை விலக்கி கீசகனின் தோளிலிருந்து இறங்கி புயத்தின் தசையில் பாறைமேல் விழுதென வளைந்து படிந்து முழங்கையில் கிளைபிரிந்திருந்த நரம்பை உத்தரன் பார்த்தான். இளவயதில் அவன் மடியில் அமர்ந்து அந்நரம்புகளை அழுத்தி விளையாடும் வழக்கம் அவனுக்கு இருந்தது. “அது என்ன?” என்று அவன் கீசகனிடம் ஒவ்வொரு முறையும் கேட்பான். “குருதிக்குழாய்” என்று அவன் சொல்வான். “அதற்குள் என்ன ஓடுகிறது?” என்று அவன் கேட்பான். “யவனமது, சற்று குருதி” என்று கீசகன் மீசையை சுட்டுவிரலால் சுழற்றியபடி சொல்ல அவன் தன் கையை நீட்டி அதில் மெல்லிய நீல நரம்பைக் காட்டி “இதில் என்ன ஓடுகிறது?” என்பான். “அதில் ஓடுவது அச்சம்” என்று சொல்லி தன்னைச் சூழ்ந்திருந்த அணுக்கர்களைப் பார்த்து நகைப்பான். அவன் வேடிக்கை சொல்லும்போது உடன் நகைப்பதையே தொழிலெனக்கொண்ட அவர்கள் நகைத்து கூச்சலிட்டு அறையை நிறைப்பார். உத்தரன் அவர்களை மாறிமாறி நோக்கியபின் தானும் நகைப்பான்.

கீசகனின் நோக்கு இயல்பாக அவையைத் துழாவி திரௌபதியைத் தொட்டு திகைத்து விலகி மீண்டும் அவளை வந்தடைந்து நிலைகொண்டது. அவள் அவன் விழிகளை நேருக்கு நேராக நோக்கியபின் இயல்பாக திரும்பிக்கொண்டாள். அந்நோக்கிலிருந்த இயல்புத்தன்மையால் சீண்டப்பட்டவன்போல அவன் மெல்ல அசைந்தான். மின்மினிகள் பரவிய மரத்தடிபோல அவன் உடலில் நகைமணிகள் ஒளியசைவுகொண்டன. வளைந்த மீசையை சுட்டுவிரலால் சுழற்றியபடி அவளையே நோக்கிக்கொண்டிருந்தான்.

உத்தரன் கீசகன் திரௌபதியை நோக்குவதை அப்போதுதான் பார்த்தான். திரும்பி திரௌபதியைப் பார்த்து அவள் தோள்களும் எத்தனை பெரியவை என்ற எண்ணத்தை அடைந்தான். பெண்களுக்கு அத்தனை பெரிய தோள்கள் அமைந்திருப்பதை அவன் முன்னர் கண்டதில்லை. முற்றிலும் நிகர்நிலைகொண்ட தோள்கள். எடைதூக்கும் துலா நடுவே நின்றிருக்கும் அச்சு என தலை. நன்கு தீட்டி மெல்லிய எண்ணெய்ப் பூச்சு அளிக்கப்பட்ட கற்சிலை போன்று மின்னும் உடல். சுவரில் வரையப்பட்ட கொற்றவைப் பாவைகளில் விரிந்து எழுந்தவை போன்ற நீள்விழிகள். அலையலையென இறங்கி தொடை வரை வந்த நெளிகூந்தல். விரிந்த தோள்களுக்கும் திரண்ட பின்பகுதிக்கும் நடுவே இறுகிய இடை.

பெண்டிர் நிற்கையில் ஒரு காலை சற்று முன்நகர்த்தி இடையொசித்து தோள்சரித்து நிற்பதைத்தான் அவன் அதற்குமுன் பார்த்திருந்தான். பேராலயத்தில் எட்டு கைகளிலும் படைக்கலமேந்தி நின்றிருக்கும் கொற்றவையின் நிகர்நிலையில் அவள் நின்றமை அவனுக்கு அச்சத்தை அளித்தது. விழிகளை விலக்கிக்கொண்டான். அவளை எதிர்கொள்ள தன்னால் முடியாது எனத் தோன்றியது. மீண்டும் ஓரக்கண்ணால் அவளை பார்த்தான். மூக்கு வளைவு, சிறிய உதடுகள் அனைத்தும் சிற்பச்செதுக்கென கூர்மைகொண்டிருந்தன. அவன் பெருமூச்சுவிட்டான்.

அவன் அவையைப் பார்த்தபோது அங்கிருந்த அனைவரும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று உணர்ந்தான். அவைநிகழ்வுகள் வழக்கம்போல சென்றுகொண்டிருந்தன. பொதிவண்டியின் காளைகளின் கழுத்து மணியோசைபோல அவ்வுரையாடல் என்று அவனுக்குத் தோன்றியது. கூர்ந்து கேட்டால் வெவ்வேறு வகையான ஓசைகளும் தாளமும் தெரியும். பொதுவாகக் கேட்டால் ஒரே ஓசை மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டிருப்பதுபோல் தோன்றும். நிமித்திகர் அறிவிப்புகளை முடித்து இறங்கிச் சென்றதும் அமைச்சர் அவை மேடையில் ஏறி அன்று நிகழவேண்டிய அலுவல்களைப்பற்றி கூறினார். ஏடு ஒன்றிலிருந்து ஆணைகளை அவர் படிக்க அருகே நின்றிருந்த சிற்றமைச்சர்கள் உரக்க “மறுப்புகள் உண்டா?” என்றனர். அவை சோர்ந்த கலைந்த குரலில் “இல்லை” என்றது. முரசில் ஒருமுறை முட்டி “ஆணை எழுந்தது!” என நிமித்திகன் அறிவித்தான்.

குடிமூத்தார் ஒருவர் எழுந்து சூலகக்குடியின் மேய்ச்சல்புறங்களில் சற்று வறட்சி இருப்பதையும் ஆநிரைகள் போதிய உணவில்லாமல் மெலிவதையும் கூறினார். அப்பகுதிக்கு மேலதிக உலர்புல் வந்து சேரும்படி வணிகர்களுக்கும் ஆணையிட வேண்டும் என்றார். விராடர் அவ்வண்ணமே என்று தலையசைக்க கீசகன் எழுந்து “எந்தக் குடிக்கும் அவர்களின் அன்றாடச் செயல்களை நிகழ்த்துவதற்கு அரசர் உதவலாகாதென்பது அரசநூல் வகுக்கும் நெறிகளில் ஒன்று. அவ்வாறு அரசு உதவத் தொடங்கினால் அது முடிவின்றி நீளும். இப்பகுதி ஆண்டில் ஒருமுறை மழையைப் பெறுவது என்பது உங்களுக்குத் தெரியும் ஆநிரைகளை அதையொட்டி பெருக்குவது உங்கள் பொறுப்பு. ஆநிரைகள் உண்பதற்கான உலர்புல்லை முன்னரே சேர்த்து வைக்காதது உங்கள் பிழை. உங்கள் பிழைகள் எதற்கும் அரசு நிகர் செய்யாது” என்றான்.

“ஆனால்…” என்று அவர் சொல்லத் தொடங்க “இது அரசநெறி. அதை மீற வேண்டுமென்று அரசர் ஆணையிட்டால் அவ்வண்ணமே” என்றான் கீசகன். விராடர் குறுஏப்பம் விட்டு “ஆம், அவர் சொல்வது சரியானதே. நாளை இதே கோரிக்கையுடன் பிறிதொருவர் வந்தால் நாம் என்ன செய்வோம்?” என்றார். அவர் உரக்க “சென்ற பதினாறு வருடங்களில் இம்முறைபோல ஒருமுறையும் மழை பொய்த்ததில்லை. அதிலும் விராட நாடெங்கும் மழை பொழிந்தபோது எங்கள் மலைப்பகுதியில் மட்டும் மழை பொய்த்துள்ளது. இதை நிமித்திகர் உரைக்கவில்லை. கணியரும் கூறவில்லை. நாங்கள் எப்படி இதை முன் உணர்ந்திருக்க முடியும்?” என்றார்.

அவையை நோக்கித் திரும்பி “கேளுங்கள், எங்கள் மலைப்பகுதிக்கு முறையான வண்டிப்பாதை இல்லை. எனவே உலர்புல் வர இயலாதென்று வணிகர்கள் சொல்கிறார்கள். கழுதைகளிலும் அத்திரிகளிலும் புல்லை ஏற்றிக்கொண்டு வரலாம். அச்செலவை எங்களால் ஏற்க இயலாது. அதைத்தான் இந்த அவையில் நான் சொன்னேன்” என்றார். “நாங்கள் மரப்பட்டைகளையும் கற்றாழைகளையும் வெட்டி மாடுகளுக்கு உணவளிக்கிறோம். கோல்கொண்டமர்ந்த அரசனின் கீழ் கன்றுகள் உணவில்லாமல் இறந்தால் அந்தப் பழி எங்களுக்கில்லை…”

கீசகன் தாழ்ந்த குரலில் “நீங்கள் அரசுக்கு ஆணையிடுகிறீர்கள்” என்றான். அவர் அவனுடைய சிறிய கண்களைப் பார்த்து குரல் தணித்து நோக்கு விலக்கி “இல்லை, மன்றாடுகிறோம்” என்றார். “ஒன்றுமட்டும்தான் தடை இதில். இத்தருணம் மீண்டும் எக்குடிக்கும் நிகழலாம். ஒவ்வொரு முறையும் அரசு தன் கருவூலத்திலிருந்து கொடையளிக்க இயலாது. இத்தருணத்தை நீங்களே எதிர்கொள்ளவேண்டும். அதை பிற குடியினர் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும். பிறிதொரு வழியில்லை” என்றான் கீசகன்.

உத்தரன் சலிப்புடன் திரும்பி பெருமூச்சுவிட்டான். விராடர் திரும்பி நோக்க சேடி ஒருத்தி வெற்றிலைத் தாலத்தை நீட்டினாள். அதில் ஒரு சுருளை எடுத்து வாயிலிட்டார் அரசர். அவள் மெல்ல பின்னகர உத்தரன் அவளிடம் “நான் எப்போது அமரமுடியும்?” என்று கேட்டான். “சற்று நேரத்தில்” என்று அவள் உதடசைவால் சொன்னாள். “கால் கடுக்கிறது” என்று அவன் சொன்னான். தன் விழிகளால் சுட்டிக்காட்டி ‘தரையில் அமருங்கள்’ என்றாள் அவள். உதடசைவிலிருந்து அவள் என்ன சொல்கிறாளென்பதை புரிந்துகொண்டு ‘உன்னை நான் பிறகு சந்திக்கிறேன்’ என்று அவன் விழிகாட்டினான். அவர்கள் விழிகளால் பேசிக்கொள்வதைக் கண்ட முதுமகளொருத்தி இளஞ்சேடியிடம் விழிகளால் ‘பின்னால் போ’ என்றாள். அவள் தலைதாழ்த்தி பின்னால் சென்றாள்.

உத்தரன் விழிகளை விலக்கிக்கொண்டு அவையை பார்த்தான். அனைவரும் சோர்ந்ததுபோல் இருந்தனர். சொல்லைப்போல் சோர்வுறச் செய்வது பிறிதில்லை என்று அவன் எண்ணினான். பிறிதொரு குடித்தலைவர் எழுந்து ஏதோ ஒரு கோரிக்கையை சொல்ல அனைவரும் கீசகனை பார்த்தனர். கீசகன் “அரசாணை குடிமுறைப்படி நிகழட்டும்” என்றான். “ஆம் அமைச்சரே, அரசாணை எழுக!” என்றார் விராடர். அமைச்சர் “இது சார்ந்து முன்னரே படைத்தலைவரின் செயலாணை ஒன்றுள்ளது. அதையே மீண்டும் பிறப்பிக்கலாம்” என்றார். “அவ்வண்ணமே” என்றார் விராடர். முரசு முழங்க ஆணை அறிவிக்கப்பட்டது.

flowerவெளியே இருந்து காவலன் ஒருவன் எட்டிப்பார்த்துவிட்டு வெளியே செல்லப்போக விராடர் அவனை நோக்கி “வருக” என்றார். அவன் வந்து வணங்கி முகமன் உரைத்து “அரசரை சந்திக்க காந்தார நாட்டிலிருந்து நூல்கற்ற பேரறிஞர் ஒருவர் வந்துள்ளார். அவைபுக ஒப்புதல் உண்டா என்று வினவுகிறார்” என்றான். விராடர் அவைநிகழ்வுகளால் சலிப்புற்றவர் போன்றிருந்தார். ஆர்வத்துடன் “காந்தார நாட்டிலிருந்தா? இத்தனை தொலைவுக்கு ஏன் வந்தார்?” என்றார். கீசகன் “அவர் ஷத்ரியர் அல்ல என்றால் அவைபுகலாம்” என்றான். “ஆம், ஷத்ரியர் அல்ல என்றால் அவரை சந்திக்க விரும்புகிறேன்” என்றார் விராடர். காவலன் வணங்கி வெளியே சென்றான்.

விராடர் கீசகனிடம் “நமது அவையில் நூல் கற்றோர் சிலரே. மேலும் சிலர் இருப்பது இந்நகரை ஆள்வதற்கு உதவும்” என்றார். கீசகன் இகழ்ச்சியுடன் “பதினாறு ஆண்டுகளாக இங்கு நகராள்கிறேன். இன்றுவரை நாம் செவிகொள்ளும் ஒரு சிறந்த கருத்தை எந்த நூலறிஞரும் சொன்னதில்லை. நாம் ஆணையிடுவதை இயற்றுவதற்கேகூட நாமே கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. இங்குள்ள அமைச்சர்கள் கண்டறிவதெல்லாம் அவற்றை இயற்றாமல் இருக்கும் குறுக்கு வழிகளை மட்டுமே” என்றான். விராடர் நகைத்து “ஆம், மெய்தான்” என்றார்.

சுதேஷ்ணை எரிச்சலை மறைக்கும்பொருட்டு சிரித்துக்கொண்டு “ஆனால் அறிஞர்கள் மிகுந்தோறும் அவைத்திறன் மேம்படுகிறது அல்லவா? நமது அரசு இப்போது வணிகத்திலும் அயலுறவிலும் விரிந்து வருகிறது. அவை பெருகுவது தேவைதான்” என்றாள். “அவை என்பது படை போன்றது. படைத்தலைவனின் எண்ணமே படையென பரு வடிவாகிறது. ஆள்பவனின் அறிவே அவையென அவன் முன் திரள்கிறது” என்று கீசகன் சொன்னான். “நாம் பார்ப்போம். காந்தாரத்திலிருந்து ஒருவர் வரும்போது புதிய சிலவற்றை நம்மால் எதிர்பார்க்க முடியுமல்லவா?” என்றாள் சுதேஷ்ணை. “ஐயமே தேவையில்லை. எந்த வினாவுக்கும் ஏதேனும் ஒரு நூல் வரியை மேற்கோள் காட்டும் பிறிதொரு கற்ற மூடராகவே அவர் இருப்பார். ஊன்றிக் கேட்டால் முதல் மேற்கோளுக்கு முற்றிலும் மாறான பிறிதொன்றை சொல்வார்” என்று கீசகன் சொன்னான். அவன் அணுக்கர்கள் நகைத்தனர்.

காவலன் அவைக்குள் நுழைந்தபோது அத்தனை விழிகளும் அத்திசை நோக்கி திரும்பின. இரு புரியாக தாடியை முறுக்கி முடிச்சிட்டு, தலையில் கரிய துணியொன்றை பாகையாகக் கட்டி, மரவுரி அணிந்து, தோல்கச்சை சுற்றி கையில் சுவடிக்கூடையுடன் தருமன் அவை நுழைந்தார். அவையை வணங்கிவிட்டு மன்னரை நோக்கி இடைவரை குனிந்து வணங்கினார். “என் பெயர் குங்கன். காந்தார நாட்டவன். உவச்சர் குலத்தில் பிறந்து நிமித்தநூல் கற்றேன். கணிகனாகத் தேர்ந்தேன். எட்டு குருநிலைகளில் அரசுசூழ்தலையும் நெறிநூல்களையும் பயின்றேன். இன்று விராடப் பேரரசரின் அவை புகும் பேறு பெற்றேன். பேரரசியின் கருணையை அடைவேன் என்றால் நிறைவுறுவேன்” என்றபின் திரும்பி “ஆனால் இந்த அவையில் நான் மட்டுமே சொல்லும் சொல் என ஏதும் எழ வாய்ப்பில்லை. உள்ளே நுழைந்ததுமே அவ்வெளிமையுணர்வை அடைந்தேன். கருணையினால் என்னை அவையமர்த்துக! தகுதியினால் அல்ல” என்றார்.

விராடர் நகைத்து “ஏன்?” என்றார். “உள்நுழையும்போதே பெரும்படைத்தலைவரை பார்த்தேன். நான் முகக்குறிநூல் கற்றவன். எட்டுமுறை சொல்சூழ்ந்து உட்பொருள் அறியும் நுண்திறன் கொண்டவர் என்பதை காட்டுகிறது அவர் விழி. அவர் விழைந்தால் அவர் விழையும் சொல்லை கோத்து அளிப்பவனாக இருப்பேன்” என்றார். கீசகன் முகம் மலர்ந்ததை உத்தரன் பார்த்தான். சிறிய கண்களில் மெல்லிய நகைப்புடன் “எவரிடம் முகப்புகழ் உரைக்க வேண்டுமென்று அறிந்திருக்கிறீர்கள்” என்றான். “ஆம், தங்களிடம் புகழ்மொழிகள் கரும்பாறையில் ஏவப்பட்ட அம்புகளென முட்டி பயனற்று உதிருமென்றும் உணர்ந்திருக்கிறேன்” என்றார் தருமன்.

உரக்க நகைத்தபடி கீசகன் “நன்று. சொல்தேர்ந்தவர் நீர்” என்றான். “அப்பால் நிமித்த குறியும் தேர்ந்தவன். அது என்னவென இந்த அவையில் என்னால் கூற முடியாது. ஆனால் மச்சஇளவரசருக்கு அது தெரியும் என அறிவேன்” என்றார் தருமன். கீசகன் கண்கள் ஒரு கணம் மாறின. அவன் விழிகளைத் தவிர்த்து மீண்டும் விராடரை வணங்கிய தருமன் “விராடபுரி பெருவெற்றியை அடையப்போகிறது. தென்னகம் முழுக்க இக்கொடி பறக்க இருக்கிறது. பாரதவர்ஷத்தின் அரசியல் நெறிகளை அமர்ந்து ஆய்ந்து அதை அறிந்த பின்னரே இங்கு வரத் தலைப்பட்டேன். இங்கு அவையமர்ந்திருக்கையில் இமயமலைமுடியில் அமர்ந்து சூழ்ந்த நிலவிரிவை பார்க்கும் முழுமை நோக்கை நான் அடைய முடியும். ஆகவேதான் நெடுந்தொலைவு நடந்து ஓராண்டு கடந்து இங்கு வந்து சேர்ந்தேன்” என்றார்.

மீசையைச் சுழற்றியபடி “என்னை நீர் முன்னறிந்திருக்கிறீரா?” என்று கீசகன் கேட்டான். “நேர்ச்சொல்லெடுத்து உரைக்கவேண்டும் என்றால் இளவரசே, நான் தங்களை மட்டுமே அறிந்தேன். இந்நகருக்குள் புகுந்த பின்னரே தாங்கள் அரசரல்ல படைத்தலைவரென்று அறிந்தேன்” என்றார் தருமன். “நன்று குங்கரே, நீர் இந்த அவையில் அமரலாம். விழைந்த இடத்தை விளையும் செயல் மூலம் அடையலாம்” என்று கீசகன் சொன்னான். சுதேஷ்ணை  “குங்கரே, தாங்கள் இங்கு அவை நுழைகையில் இங்கொரு சொல்லாடல் முடிந்திருந்தது. அதை அமைச்சர் உரைப்பார். உம் கருத்து என்ன என்று சொல்லும்” என்றாள். தருமன் “ஆணை, அரசி” என தலைவணங்கினார்.

அமைச்சர் சொல்லி முடித்ததும் தருமன் கீசகரை நோக்கி “தாங்கள் உரைத்தவற்றிலிருந்து மாறுபட்டு நான் உரைக்கிறேன் என்றால் பொறுத்தருள்க, இளவரசே. என் சொல் மாறுபடுமென்றால் என் அறிதல் பிழையானதென்பதை முன்னரே ஒப்புக்கொள்கிறேன்” என்றபின் “ஒரு குடி அடையும் இழப்புகளுக்கு ஒருபோதும் அரசு நிகர் செய்யலாகாது. அது வரும் நாளில் வரவிருக்கும் அனைத்து இழப்புகளுக்கும் அத்தனை குடிகளும் அரசிடம் இழப்புக்கொடை கேட்க வாய்ப்பளிக்கும். அரசின் செயல் ஒரு தனிநிகழ்வு அல்ல, முடிவிலாது நீண்டு எழப்போகும் அனைத்து செயல்களுக்கும் முற்கோளும் கூட. எந்த முடிவும் இது இனி வரும் காலங்களில் எப்படி தொடரும் என்று எண்ணாமல் எடுக்கப்படலாகாது” என்றார்.

“அத்தருணத்தில் உரிய முடிவை எடுப்பவர்கள் எண்ணிச் சூழ்பவர்கள். வரும் தருணத்தையும் எண்ணி அம்முடிவை எடுப்பவர்களே பேரரசுகளை உருவாக்குபவர்கள். அவர்களால்தான் பெருநிலங்களை ஆளமுடியும்” என்றார் தருமன். “ஓர் அவையில் அத்தகைய ஒருவர் மிக அரிதாகவே அமையமுடியும், மலைகள் நடுவே உச்சிமுடிபோல. அத்தகையோரை புரிந்துகொள்ள முயலக்கூடாது. அடிபணிந்தாகவேண்டும்.”

மீசையை சுட்டுவிரலால் நீவியபடி புன்னகையுடன் தருமனையே பார்த்துக்கொண்டிருந்தான் கீசகன். தருமன் தலைவணங்கி “நான் தங்கள் சொல்லுக்கு மாற்றென எதுவும் சொல்லவில்லை என்று எண்ணுகின்றேன்” என்றார். இல்லை என்பதுபோல் கீசகன் கைகாட்டினான். “அப்படியானால் எந்தக் கொடையும் அளிக்கவேண்டியதில்லை அல்லவா?” என்று விராடர் கேட்டார். “இல்லை அரசே, ஒரு குடியை கைவிடுவதும் முற்கோளென்றாகுமே? வருங்காலத்தில் இடருறும் குடிகளை அரசு காக்காதென்பது ஒரு சொல்லென்று நிலைபெறுமே? ஆகவே அதை தவிர்த்தே ஆகவேண்டும்” என்று தருமன் சொன்னார்.

கீசகன் விழிகள் சற்று சுருங்க கூர்ந்து பார்த்தான். “இந்நாட்டில் எங்கு வழக்கத்திற்கு மிகுதியாக மழை பெய்துள்ளதென்று பார்ப்போம். பொய்த்த மழையின் முகில்கள் அங்கு சென்று பெய்திருக்கின்றன என்றே அதற்குப் பொருள். அந்த மழையைப் பெற்றவர்கள் இம்முறை சென்ற முறையைவிட மிகுதியாக அளிக்கவிருக்கும் வரியை மழைபொய்த்த குடியினருக்கு அளிக்கட்டும். பின்னாளில் இவர்கள் மண்ணில் மழை பொழியும்போது அதை கருவூலத்திற்கு அளிக்கட்டும். எவரும் கைவிடப்படவும் இல்லை. எவருக்கும் அரசுக் கருவூலம் கொடையளிக்கவும் இல்லை என்றாகும்” என்றார் தருமன்.

சில கணங்கள் அவை அமைதியாக இருந்தது. அது கீசகனின் சொல்லுக்காக காத்திருந்தது. கீசகன் எழுந்து “உரிய சொல், உரிய முறையில் உரைக்கப்பட்டது. நன்று” என்றான். “ஆம், அறிஞனின் சொல்! நெறியையும் நெறிக்கு அப்பால் செல்லும் உள்ளுணர்வையும் வெளிப்படுத்துவது. நாம் நமது அவையில் முதன்மை அறிஞர் ஒருவரை பெற்றிருக்கிறோம்” என்று விராடர் சொன்னார். அவை வாழ்த்துக்குரலெழுப்பியது. தருமன் அவைநோக்கி தலைவணங்கினார். “இந்த அவையில் முதன்மை அறிஞராக தாங்கள் வீற்றிருக்கவேண்டும், குங்கரே” என்று விராடர் சொன்னார்.

“பெரும்படைத்தலைவர் அவ்வாறே ஆணையிடுவாரென்றால் அது என் நல்லூழ்” என்றார் தருமன். “நாம் உம்மை அவ்வாறு பணிக்கிறோம்” என்று கீசகன் சொன்னான். கீசகனை நோக்கி மீண்டும் ஒருமுறை தலைவணங்கினார் தருமன்.  உத்தரன் நீள்மூச்சுவிட்டு அசைந்து நின்றான். அவனிடம் காவலன் “இனி தாங்கள் அமரலாம், இளவரசே” என்றான். “இனி நூலாய்வுதான்.” உத்தரன் “அவை முடியப்போகிறது. இனி அமர்ந்தால் என்ன, இல்லையேல் என்ன?” என்று முணுமுணுத்தபடி தனக்கு அளிக்கப்பட்ட பீடத்தில் அமர்ந்தான்.

முந்தைய கட்டுரைசெவிக்குரிய குரல்கள் எவை?
அடுத்த கட்டுரைஇசையும் மொழி