‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 38

37. குருதிகொளல்

flower“சபரர்களின் போர்த்தெய்வமான அசனிதேவனின் ஆலயம் கிரிப்பிரஸ்த மலைக்கு வடக்காக இருந்த தீர்க்கப்பிரஸ்தம் என்னும் குன்றின்மேல் இருந்தது. இடியையும் மின்னலையும் படைக்கலமாகக் கொண்ட தொல்தெய்வம் அது. வலக்கையில் இடியை உடுக்கின் வடிவிலும் இடக்கையில் மின்னலை துள்ளும் மானின் வடிவிலும் ஏந்தியிருக்கும். திரையம்பகன் என்று அதை சொல்வார்கள். அதன் நெற்றிக்கண் எப்போதும் அரக்கு கலந்த மண்பூச்சால் மூடப்பட்டு அதன்மேல் மலர் அணிவிக்கப்பட்டிருக்கும். நிஷதகுடிகள் போருக்கு எழும்போது மட்டும் அசனிதேவனுக்கு மோட்டெருமையை பலி கொடுத்து அக்குருதியைக்கொண்டு முழுக்காட்டு நிகழ்த்துவார்கள்” என்று சுதேஷ்ணை சொன்னாள்.

நூற்றெட்டு பந்தங்கள் எரியும் நள்ளிரவில் பூசகர் அந்த மலர்ச்சாத்தை அகற்றி அரக்குப் பூச்சை விலக்கி அசனிதேவனின் விழிகளை திறப்பார். ஆலயத்தை சூழ்ந்திருக்கும் ஏழு முரசுமேடைகளில் இருக்கும் பெருமுரசுகளை பாரதவர்ஷத்திலேயே மிகப் பெரியவை என்பார்கள். அவற்றை அசைக்கமுடியாது. பிற நாட்களில் வறண்ட குளம் போன்றிருக்கும் அவற்றுக்குள் சருகுகள் குவிந்து கிடக்கும். யானைத்தோலை இழுத்துக்கட்டி முழைத்தடியால் அவற்றை முழக்கி இடியோசையை எழுப்புவர். தீப்பந்தங்களை நீள்சரடில் சுற்றிக்கட்டி விரைந்து சுழற்றி மின்னல்களை உருவாக்குவார்கள். அவ்வாறு அனல்சுழற்றுவதற்கான பயிற்சி சபரர் குலத்தின் பூசகர்கள் குலமுறையாக கற்று அடைவது.

போர் குறித்தபின் படைகிளம்பும் நாள்வரை மன்னரின் உடைவாளும் மகாகீசகரின் உடைவாளும் அசனிதேவனின் முன் செம்பட்டு சுற்றப்பட்டு செம்மலர் மாலை அணிவிக்கப்பட்டு வழிபாட்டில் அமைந்திருக்கும். கிளம்புவதற்கு முந்தையநாள் இரவு குடித்தலைவர்களும் அரசரும் படைத்தலைவர்களும் மட்டும் சென்று அசனிதேவனை வணங்கி அந்த வாள்களை எடுத்துக்கொள்வார்கள். வாள்களை பூசகர் எருமைக்குருதியில் நீராட்டி எடுத்து அளிப்பார்கள். அதை மும்முறை அசனிதேவன் முன் தாழ்த்தி வஞ்சினம் உரைத்தபின் தன் கையை அறுத்து மூன்று துளிக் குருதியை அப்பலிபீடத்தில் சொட்டி வணங்குவர்.

அக்குருதியை சோற்றில் கலந்து ஏழு கைப்பிடிகளாக உருட்டி முதல் உருளையை துந்துபகுடிகளின் தெய்வமாகிய தாபையை மணந்த சபரகுடியின் தெய்வமான மாகனுக்கு படைத்தனர். காளகக்குடிகளின் தெய்வமான கரிவீரனுக்கு அடுத்த உருளை. சிபிரகுடிகளின் யானைத் தெய்வமான காளகேதுவின்மேல் ஏறிய அஸ்வககுடிகளின் மூதாதையான தாமஸனுக்கு அடுத்த உருளை. எஞ்சிய குருதியன்னத்தை அன்னக்குவையுடன் கலந்து அத்தனை குடிதெய்வங்களுக்கும் படைத்தனர். போருக்கு எழும் அனைவரும் அதில் ஒரு வாய் உண்ணவேண்டுமென்பது நெறி. ஆகவே அன்னம் மேலும் பெரிய குவையுடன் கலந்து விரிவாக்கப்பட்டது. அதை அன்னம்பெருக்குதல் என இங்கு கூறுகிறார்கள்.

படை எழுந்தது. அதன் முன் மகாகீசகரின் உடைவாளுடன் கீசகன் யானைமேல் அமர்ந்து கிளம்பினான். குருதிசூடிய உடைவாளை ஏந்தி விராடர் கோட்டைமுகப்புவரை சென்று அவர்களை வாழ்த்தி குருதிப்பொட்டு இட்டு வழியனுப்பி வைத்தார். அவருடைய உடைவாள் படைகள் திரும்பும்வரை அரண்மனையின் படைக்கலநிலையில் செம்பட்டு சுற்றப்பட்டு பூசெய்கைக்கு வைக்கப்பட்டது.

அப்பொழுது கீசகனின் நல்லூழ் திரண்டிருந்த காலம். அன்றுதான் அஸ்தினபுரியின் பீமன் மகதநாட்டுக்குள் புகுந்து ஜராசந்தனை கொன்றான். யமுனைக்கரையில் பாண்டவர்கள் அமைத்த இந்திரப்பிரஸ்தம் பெருவல்லமையுடன் எழத்தொடங்கியிருந்தது. வடமேற்கே யாதவர்களின் துவாரகாபுரியும் செல்வமும் படையும் கொண்டு வளர்ந்தது. அப்படைக்கூட்டை அன்று அத்தனை தொல்குடி ஷத்ரியர்களும் அஞ்சினர். வடக்கே ஒவ்வொருவரும் பிறிதொருவருக்கு எதிராக கச்சை முறுக்கி நின்றிருந்தார்கள். கீசகன் தெற்கே நோக்கிக்கொண்டிருந்த மற்ற நிஷாதர்களைப்போலன்றி கங்கைக்கரை அரசியலை எப்போதும் கூர்ந்து நோக்கிவந்தவன். அச்சூழலை நன்குணர்ந்த அவன் வடக்கிலிருந்த மொத்தப் படைகளையும் எவருமறியாமல் விராடபுரிக்கு கொண்டுவந்தான்.

அந்தப் படைசூழ்கையில் இருந்த துணிச்சலும் திட்டமிடலும் கீசகனை முதன்மையானவனாக ஆக்கின. தன் படைகளை அவன் நேராக விராடபுரிக்கு கொண்டுவரவில்லை. அவர்களை காடுகளினூடாக கரவுப்பாதையில் வரச்செய்து செல்லும் வழியெங்கும் தன்னுடன் இணையச்செய்தான். வழக்கமாக படகுப்பாலம் அமைத்து கோதாவரியைக் கடந்து விரிந்த சதுப்பு நிலத்தினூடாக தெற்கே படைகொண்டு போவது நமது வழக்கம். கோதாவரியில் படகுப்பாலம் அமைக்கையிலேயே செய்தி தென்னிலத்து அரசர்களுக்கு சென்றுவிடும். அவர்கள் விரும்பிய இடத்தில் நமது படைகள் சதுப்பில் சகடங்களும் கால்களும் புதைந்திருக்க அவர்களை எதிர்கொள்ளும். நமது புரவித்திறனாலும் நமது படைகளின் விற்திறனாலும் பெரும்பாலும் வென்றோம். ஆனால் அனைத்து போர்களிலும் பேரிழப்புகள் நமக்கே ஏற்பட்டன.

மச்சர்கள் மென்மரம் குடைந்தமைத்த எடையற்ற விரைவுப் படகுகளைக் கொண்டு மீன்கொள்ளும் வழக்கம் கொண்டவர்கள். அதில் பாய்மரம் நட்டு கொள்ளைக்கும் போருக்குமென பறக்கச்செய்ய முடியும் என கீசகன் அவர்களுக்கு கற்பித்திருந்தான். மரமுதலைகள் என அழைக்கப்பட்ட அப்படகுகளை வண்டிகளிலேற்றி காடுகளினூடாகவும், சிறு ஆறுகளினூடாகவும் கொண்டுவந்து கோதாவரியில் இறக்கினான். கோதாவரியின் பரப்பே முதலைகளால் நிறைந்தது. கலிங்கத்திலிருந்து வாங்கிக்கொண்டுவந்த பெரும்படகுகளில் யானைகளையும் தேர்களையும் ஏற்றிக்கொண்டனர். மொத்தப் படையையும் படகுகளில் ஏற்றிக்கொண்டு இரண்டே நாளில் கலிங்கத்தின் தண்டபுரத்தை அடைந்தார்கள்.

கீசகன் படை வரவை அறியாமல் விழவுகொண்டாடிக்கொண்டிருந்த கலிங்கனை ஓரிரவில் வென்றான். கலிங்கத்தின் கலங்களையும் தண்டபுரத்திலிருந்த அத்தனை வணிகப்படகுகளையும் கைப்பற்றிக்கொண்டான். நிஷதப்படைகள் அனைத்தையும் படகுகளில் ஏற்றிக்கொண்டு கடல் வழியாகச் சென்று வாகடர்களின் ராஜமகேந்திரபுரியை தாக்கி வென்றான். அங்கிருந்து கிருஷ்ணைக்குள் நுழைந்து தென்னிலம் மீது பரவினான். அங்கிருந்து அனைத்து நகர்களுக்கும் செல்வதற்கு சிறந்த வண்டிப்பாதைகளை அவர்களே அமைத்திருந்தனர். பல்லவர்கள் தோற்றுவிழ பன்னிரண்டு நாட்களாயின.

இரு வெற்றிகளால் அஞ்சி குழம்பியிருந்தபோது மிக எளிதாக வாகடர்களை வென்றான். சதகர்ணிகளை சிதறடித்து மீண்டும் ரேணுநாட்டுக்கு துரத்தினான். பல்லவனையும் வாகடனையும் பிடித்து அவர்களின் தலைகளை வெட்டி காவடியாகக் கட்டி தானே தோளில் ஏற்றிக்கொண்டு வந்து விராடபுரிக்குள் நுழைந்தான். அன்று நிஷதகுடிகள் அனைவரும் நகர்த்தெருக்களில் திரண்டு அவனுக்கு வாழ்த்து கூறினர். அவன் பெயரின் முழுப்பொருளும் அப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது. ஒவ்வொரு நாவிலும் அப்பெயர் ஒலித்தது. ஒவ்வொரு பாடலிலும் அது மட்டும் பொன்னொளிகொண்டு தெரிந்தது.

விராடர் அரண்மனை முற்றத்தில் உடைவாளை ஏந்தியபடி அவனை எதிர்கொண்டார். அவன் அந்தத் தலைகளை அவர் காலடியில் வைத்து வாள்தாழ்த்தி வணங்க சூழ்ந்திருந்த விராடப்படைகள் வெடிப்பொலி எழுப்பி வாழ்த்தின. குலமூத்தார் ஒவ்வொருவராக அவனை அணுகி தோள்தழுவினர். அதன்பின் பிறிதொருவர் இந்நாட்டுப் படைகளுக்கு தலைமை தாங்கவேண்டுமென்ற எண்ணமே எழுந்ததில்லை. விராடபுரி தென்னகத்தின் வெல்லமுடியாத பேரரசென்று நிறுவப்பட்டது. அதன்பின் எப்படி என்று அறியாமலேயே இப்பேரரசின் முதன்மைச் சொல் கீசகனுடையதாக மாறியது.

flowerஅதன் பின்னரே நான் கீசகனின் அன்னையைப்பற்றி அறிந்துவர ஒற்றர்களை அனுப்பினேன். அவன் அன்னை எதன் பொருட்டு அப்பெயரை அவனுக்கிட்டாள் என்பதை அறியவிரும்பினேன். அவள் உள்ளத்தில் ஒரு கனவு இருந்திருக்கிறது. பெரும்பாலும் அன்னையின் அத்தகைய நுண்கனவுகளே கீசகனைப்போல பேருருக்கொண்டு எழுந்து நிற்கின்றன. அவன் அன்னையின் பெயர் சுகதை. அவள் மச்சர்குலத்து சிற்றரசர் தப்தனின் முதல் மகள். அவர்கள் மூன்று தலைமுறைக்கு முன்புவரை சர்மாவதியில் மீன் வேட்டையாடிய சிறுகுடியே. சர்மாவதியின் தோல்படகுகளில் சுங்கம் கொள்ளத் தொடங்கியபின்னர்தான் புற்குடிலை இல்லமாக ஆக்கிக்கொண்டவர்கள்.

அவன் அன்னையின் குடியை மேலும் முற்சென்று ஆராய்ந்தேன். அவள் யமுனைக்கரையின் தொன்மையான மச்சர்குடியான களிந்தகுடியில் பிறந்தவள். அதில்தான் முன்பு சிற்றரசர் சத்யவானுக்கு மகளாக அஸ்தினபுரியின் பேரரசி சத்யவதி பிறந்தார். அக்குடியின் கிளைகளில் ஒன்றில்தான் சூரியனுக்கும் சரண்யுவுக்கும் மகளாக இளைய யாதவனின் அரசியான காளிந்தி தோன்றினாள். கனகை என்ற பெயர்கொண்ட அவள் இன்று துவாரகையில் என் மருமகளுக்கு நிகராக அவையமர்ந்திருக்கிறாள். கீசகனின் அன்னையின் கனவு என்ன என்று தெரிந்ததும் நான் சென்று சிக்கியிருக்கும் வலை என்ன என்று தெளிவுகொண்டேன்.

அதுவரை கீசகனின் வெற்றியை முதலில் நான் என் வெற்றியாகவே நினைத்தேன். எனது சொல் இந்நகர்மேல் நிற்பதற்கு படைக்கலமாக அவன் அமைவான் என்று கருதினேன். அந்நம்பிக்கையில்தான் உத்தரன் பிறந்த அன்று நான் உவகையில் சில பிழைகளை ஆற்றினேன். பேற்றறையின் குருதி மணத்தில் மடியில் குழந்தையை படுக்க வைத்து அமர்ந்திருக்கையில் உள்ளே வந்த கீசகனை நோக்கி “இதோ, உனது மருமகன். நீ அரியணை தாங்க அமரவிருக்கும் பேரரசன். தென்னகத்தை ஆளும் மணிமுடிக்குரியவன்” என்றேன்.

ஒரு கணம் கீசகனின் முகம் சுருங்கி கண்களில் நானறியாத ஒளியொன்று தோன்றி மறைந்தது. புன்னகையுடன் “ஆம், விராடபுரி என்றும் காத்திருந்த இளவரசன் இவன்” என்றான். குழந்தையை கையில் வாங்கி அதன் கால்களில் மும்முறை முத்தமிட்டு என்னிடம் திருப்பி அளித்தான். அன்று முறைமைப்படி அக்கால்களை அவன் சென்னியில் சூடவில்லை என்பதை நான் உணர்ந்ததே ஐந்தாண்டுகளுக்கு பின்னர்தான். மச்சநாட்டிலிருந்து அவன் கொண்டுவந்திருந்த அருமணிகள் பதித்த இரு கால்தண்டைகளை மைந்தனுக்கு அணிவித்தான். “என் வாளும் சொல்லும் என்றும் இவனுக்கு துணைநிற்கும், மூத்தவளே” என்றான். நான் விழிநீர் பரவி தோற்றம் மறைய “நீ இருப்பதுவரை நான் வெல்லப்படமுடியாதவள்” என்றேன்.

ஆனால் அவன் கண்களில் வந்து சென்ற அந்த ஒளியை என் உள்ளே வாழும் ஏதோ ஒன்று பதிவு செய்துகொண்டது. இருப்பினும் நான் அப்போது அதை உணரவில்லை. மாமன் பெருங்கைகளில் மருமகன் அவனுக்கிணையான வீரனாக வளர்வான் என்று எண்ணினேன். விராடர் அரண்மனைக்குள்ளேயே வாழ்ந்து பழகியவர். பகல் ஒளி எழுகையிலேயே குடிக்கத் தொடங்கிவிடுவார். எப்பொழுதும் அவருடைய அவைக்கூடத்தில் விறலியரும் சூதாடிகளும் நிறைந்திருப்பார்கள். பேரரசி என நிஷாதர்களின் அத்தனை குலதெய்வங்களையும் நாள்தோறும் நான் வணங்கியாகவேண்டும். என் ஒரு நாளின் பெரும்பகுதிப்பொழுது இத்தெய்வங்களை வணங்கும் சடங்குகளுக்காகவே சென்றுவிடும். ஆகவே குழந்தையை முற்றிலும் செவிலியர்களிடம் ஒப்படைத்தேன். அவன் கால்திருந்தி எழுந்து குதலைகொள்ளத் தொடங்கியபோது கீசகன் அவனை தன் கையிலெடுத்துக்கொண்டான்.

ஆலமரத்தடியில் சிறுசெடி என என் மைந்தன் வளர்ந்தான். இன்று என் மைந்தன் இப்படி இருப்பதற்கு பொறுப்பு என் இளையவனே என்று சொன்னால் சிலர் சிரிக்கக்கூடும். ஆனால் நீ அறிவாய் நிகழ்ந்தது என்ன என்று. ஒழுக்கை எதிர்த்து நீந்துவதற்கு குஞ்சுகளுக்கு கற்றுக்கொடுக்கிறது அன்னைமீன். குருதிமணம் கொள்ள குருளையை பயிற்றுவிக்கிறது வேங்கை. மத்தகத்தால் வேங்கைமரத்தை உலுக்க வேழம் தன் மைந்தனுக்கு கற்றுக்கொடுக்கிறது. கீசகன் என் மைந்தனுக்கு அவன் விரும்பியதை மட்டுமே அளித்தான். மைந்தர் இயல்பாக விரும்புவது பெண்களைத்தான். அன்னையை முழுதும் அடையாத என் மகன் பெண்களின் கைகளில் திளைத்தான். செவிலியரும் சேடியருமே அவன் உலகென்றாயினர்.

அதை கீசகன் திட்டமிட்டு உருவாக்கினான் என இன்று அறிகிறேன். சுற்றியிருந்து விறலியர் அவனை புகழ்ந்துகொண்டே இருந்தனர். படைக்கலப் பயிற்சியோ புரவிப்பயிற்சியோ அளிக்கையில் முதல் சில நாட்களிலேயே பெரும்புண்கள் அவனுக்கு நிகழும்படி செய்தான். அவ்வச்சத்தை அவன் உள்ளத்தில் பெருக்கினான். என் மைந்தன் இயல்பில் கோழை அல்ல. அச்சமற்ற நிஷதகுடியினன். தொல்குடியாகிய கேகயத்தினன். இன்று நிஷதபுரியே அவனை எண்ணி ஏளனம் கொள்கிறது. என் சொல் அவ்வேளனத்தை மேலும் பெருக்கும். ஆனால் அன்னையென்றல்ல, வெறும் பெண்ணென்று நின்று அவனை எண்ணுகையில் என் உள்ளம் அவன் வெறுங்கோழை அல்ல என்றே உணர்கிறது. அவனுள் வாழ்கிறது அனல். தன்னை உணரவோ தன் தோள்களில் சித்தத்தை நிலைக்கச் செய்யவோ அவனுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அவன் சிறுமை செய்யப்பட்டான். சிறுமைசெய்யப்படுபவர்கள் அதை எதிர்கொள்ள முடியாமலிருக்கையில் சிறுத்துக் குறுகி அமைவதை கண்டிருப்பாய்.

இன்று இந்த நகரம் கீசகனின் கையில் உள்ளது. என்னையும் அரசனையும் சுட்டுவிரல் அசைவால் சிறையிலிட்டு மணிமுடியை கைப்பற்ற அவனால் இயலும். அவ்வாறு அவன் கைப்பற்றுவானென்றால் இந்நகரின் குடிகளில் எவர் எதிர்ப்பாரென்று அவனால் இன்று சொல்லமுடியவில்லை. எவரும் எதிர்க்கமாட்டார்கள் என்பதே மெய். நான் அறிந்த இந்த உண்மை இன்னமும் அவனுக்கு உறுதியாகத் தெரியாது. அந்த அச்சம்தான் முடிசூடிக்கொள்ள முடியாமல் அவனை தடுக்கிறது. அத்தயக்கம் இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் அந்தி இறங்குகையில் நன்று இன்றொரு நாள் நீட்டிக்கப்பட்டதென்றே என்னுள்ளம் ஆறுதல் அடைகிறது. ஒவ்வொரு நாள் காலையில் இன்றென்ன நிகழும் என்ற பதற்றம் ஓங்குகிறது.

“ஒருபுறம் மதுக்களியாட்டன்றி பிறிதொன்றறியாத அரசர்… இன்னொரு பக்கம் பொய்யுணர்வுகளில் தடுமாறி வீணனென்றே வாழும் மைந்தன். கன்னியுள்ளத்தின் கனவுகளில் திளைத்து இங்கிலாதிருக்கும் மகள். நான் ஒருத்தி இவ்வனைத்தையும் தொட்டுத் தொட்டுத் தவித்தபடி இவ்வரண்மனையில் அமர்ந்திருக்கிறேன்” என்றாள் சுதேஷ்ணை. “நேற்றுமுன்தினம் நீ என் அரண்மனைக்கு வந்த அன்று பின்னுச்சிப்பொழுதில் எனக்கொரு செய்தி வந்தது. நிஷதப்படைகளின் தலைமையில் கீசகனுக்கு மாற்றென்றும் நிகரென்றும் சிலரால் கருதப்பட்ட எஞ்சியிருந்த மூவரையும் கீசகன் படைத்தலைமையிலிருந்து அகற்றிவிட்டான் என்று.”

“அவ்வாறு கருதப்பட்ட ஒவ்வொருவரும் போர்க்களங்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அறியா நோயுற்று இறந்திருக்கிறார்கள். எஞ்சிய இம்மூவருமே எனது நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தார்கள். கீசகன் மலைஉச்சியில் உருண்டு இந்நகர்மேல் உருளக் காத்திருக்கும் பெரும்பாறையென்றால் மூன்று தடைக்கற்கள் அவர்கள். அவர்களை அகற்றிவிட்டான். இனி அவனுக்குத் தடையொன்றுமில்லை. இன்னும் எத்தனை நாள் என்று எண்ணியிருக்கையிலேயே உன்னை பார்த்தேன். ஒரு கணத்தில் நீ எனக்குக் காப்பு என்று தோன்றியது. ஏன் என்று தெரியவில்லை. கேகயத்தில் பதினாறு கைகளிலும் படைக்கலங்களுடன் கோயில்கொண்டிருக்கும் அன்னை கொற்றவையே யானைமேல் எழுந்ததுபோல் தோன்றினாய்.”

“நான் என் உயிரை அஞ்சுகிறேனா என்றால் ஆமென்றே சொல்ல முடியும். என்ன நிகழ்கிறதென்பதை உணர்ந்தவள் நான் மட்டுமே. என் மைந்தனிடமும் கணவரிடமும் இதைச் சொல்லி மன்றாடும் வாய்ப்புள்ளவள். கீசகன் முடிசூட்டிக்கொண்டான் என்றால் அவையில் எழுந்து மாற்றுக் குரலெழுப்பும் இறுதி நா என்னுடைது. இங்கு என்ன வேண்டுமானாலும் நிகழலாம். என்னை சூழ்ந்திருக்கும் இந்தக் காவற்பெண்டுகளில் ஒருத்தி கூட என்மேல் அன்புள்ளவள் என்றோ எனக்கெதிராக வாளோ நஞ்சோ எடுக்காதவளென்றோ என்னால் சொல்ல முடியவில்லை. தேவி, உன்னைச் சூழ்ந்திருக்கும் அந்த ஐந்து கந்தர்வர் அன்றி இனி எனக்கு நம்பிக்கைக்குரிய எவரும் இல்லை” என்று சுதேஷ்ணை அவள் கைகளை பற்றிக்கொண்டாள். அவள் கண்களில் நீர் வழிந்து அடிவிழியின் சுருக்கங்களில் பரவியது.

திரௌபதி அவள் கைகளை தானும் பற்றியபடி “இரு சொல்லுறுதிகளை நான் அளிக்கிறேன், பேரரசி. என் கந்தர்வர்களால் இந்நகர் முற்றிலும் காக்கப்பட்டுள்ளது. நீங்களும். காவல்கொண்டுள்ளீர்கள். இந்நிலத்தை உங்கள் மைந்தன் உத்தரன் மட்டுமே ஆள்வான். அவனது கொடிவழியினர் இங்கு கோல்கொண்டு திகழ்வர்” என்றாள். அக்கைகளைப் பற்றி தன் இரு கண்களில் ஒற்றியபடி “நீ யார் என்று அறியேன். ஷத்ரியப்பெண் என்கிறாய். சேடி என்று வந்திருக்கிறாய். பேரரசிகளுக்குரிய சொற்களை சொல்கிறாய். என்னை அரசியென்று எண்ணவேண்டாம். உன் அன்னை என்று கருதுக! உன் கால்களை சென்னி சூடும் எளிய அடியவள் என்றே எண்ணுக! உன் அருளால் நான் இங்கு வாழவேண்டும். என் குடி விளங்கவேண்டும்” என்றாள் சுதேஷ்ணை. “நன்று நிகழும்” என்றாள் திரௌபதி.

முகம் மலர்ந்து அரசி “சின்னாட்களுக்கு முன் அவையில் அருகநெறிக் கணியன் ஒருவன் வந்தான். என் மகள் குருதியில் பேரரசர்கள் பிறப்பார்கள். பாரதவர்ஷத்தை ஒரு முடியும் கோலும் கொண்டு ஆள்வார்கள் என்றான். அன்று அவை கொண்ட திகைப்பை நான் இன்று நினைவுகூர்கிறேன். சில சொற்கள் காலமே முகம்கொண்டு வந்தவைபோல ஒலிக்குமல்லவா? அப்படி எழுந்தது அவன் கூற்று. அதை மறுத்து ஓர் எண்ணம் கொள்ள எளிய மனிதர்கள் எவராலும் இயலாது. அன்று கீசகன் அங்கில்லை. அச்செய்தியை அறிந்து இரவெல்லாம் நிலைகுலைந்து தன் அறைக்குள் உலவிக்கொண்டிருந்தான் என்றார்கள். அவனுக்கு விலங்குகளுக்குரிய உள்ளுணர்வு உண்டு. இன்று அவையில் உன்னைப் பார்க்கையில் அவன் அனைத்தையும் தெரிந்துகொள்வான். உன் நிமிர்ந்த தலையும் தோள்களும் போதும், ஒரு சொல் எழவேண்டியதில்லை” என்றாள்.

flowerசுதேஷ்ணையும் திரௌபதியும் தலைமைச் சேடியால் வழிநடத்தப்பட்டு இடைநாழிக்குள் நுழைந்தனர். இடைநாழியின் எல்லையில் அவர்களின் வருகையை நோக்கி நின்றிருந்த இசைச்சூதர் கையை அசைக்க கேகயத்தின் கொடியை ஏந்திய படைவீரன் முன்னால் சென்றான். மங்கல இசை முழக்கியபடி சூதர் குழு முன்னால் சென்றது. எண்மங்கலம் கொண்ட தாலங்களுடன் அணிப்பரத்தையரின் நிரை தொடர்ந்தது.

சுதேஷ்ணை பெருமூச்சுடன் “உண்மையில் இதை நான் எவரிடமும் பகிர்ந்துகொண்டதில்லை. இங்கு எவர் ஒற்றர் என்று கண்டுபிடிப்பது எளிதல்ல” என்றாள். திரௌபதி “இவற்றை நீங்கள் முற்றிலும் மறந்துவிட்டு அவை நுழையலாம்” என்றாள். “நாம் பேசுவது எவர் காதிலும் விழாது” என்றாள் அரசி. “இல்லை. பேசும் சொற்களின் உணர்ச்சிகள் உங்கள் முகத்தில் இருக்கும். தொலைவில் இருந்தே நீங்கள் எதைப்பற்றி என்னிடம் சொல்கிறீர்கள் என்பதை உங்களை அறிந்தவர்கள் உணர்ந்துகொள்ளமுடியும்” என்று திரௌபதி சொன்னாள். “மெய்யாகவா?” என்று கேட்டு சுற்றிலும் பார்த்தபின் “தெரியவில்லை. ஆனால் நீ சொன்னால் நான் பேசவில்லை” என்றாள் சுதேஷ்ணை.

அரசவைக்குச் செல்லும்பொருட்டு மகளிர்மாளிகையின் முதன்மைக்கூடத்தில் கூடி நின்றவர்களுடன் அவர்கள் சென்று சேர்ந்தபோது அங்கு வாழ்த்தொலிகள் எழுந்தன. சேடியர் நடுவே உத்தரன் இருப்பதை திரௌபதி பார்த்தாள். முதற்கணத்தில் பெண்களின் நடுவே அவன் இருப்பதை விழி தனித்தறியாததை எண்ணி இதழ்களுக்குள் அவள் புன்னகைத்துக்கொண்டாள். கண்களால் தேடி தன் சேடியருடன் முழுதணிக்கோலத்தில் நின்றிருந்த உத்தரையை கண்டாள். உத்தரன் அன்னையைப் பார்த்ததும் இரு கைகளையும் விரித்து “பாரதவர்ஷத்தை ஆளும் பேரரசி எவ்வண்ணம் இருக்கவேண்டுமோ அப்படி இருக்கிறீர்கள், அன்னையே” என்றான்.

சுதேஷ்ணை ஆர்வமில்லாமல் உத்தரையைப் பார்த்து “இன்று காலைகூட நடனப்பயிற்சிக்கு சென்றாய் என்றார்கள்” என்றாள். “ஆம், ஒவ்வொரு நாளும் செல்ல வேண்டுமென்று ஆசிரியரின் ஆணை” என்றாள். உத்தரன் சினத்துடன் திரும்பி “ஆணையா? நிஷத அரசகுமாரிக்கு ஆணையிடுவதற்கு அந்த ஆணிலிக்கு என்ன உரிமை? அவள் பணிந்து உன்னிடம் பேசவேண்டும். மாறாக ஒரு சொல் எடுத்தாளென்றால் என்னிடம் சொல். அவளுக்கு முறைமை என்ன, நெறி என்ன என்று நான் கற்பிக்கிறேன்” என்றான்.

உத்தரை அவனை திரும்பிக்கூட பார்க்காமல் அன்னையிடம் “இப்போதுதான் எனக்கு ஆடலில் மெய்யான ஆர்வம் வந்திருக்கிறது. ஒருநாள் செல்லாமலிருப்பது எனக்கும் கடினமானது” என்றாள். “அவையில் நீ ஏழெட்டு நாழிகை அமர்ந்திருக்கவேண்டும். அங்கு சென்று இரு நாழிகைப்பொழுது துள்ளிவிட்டு வந்தால் அவையில் அமர்ந்து அரைத்துயில் கொள்வாய். முன்னரே இங்கு எவரும் அவை நிகழ்வுகளை நோக்குவதில்லை என்பது நகருக்குள் இளிவரலாக சுற்றிவருகிறது” என்றாள் சுதேஷ்ணை. உத்தரை “அவைநிகழ்வுகளை நோக்கி என்ன பயன்? யாரோ எதையோ செய்கிறார்கள். நாம் கொலுப்பாவைகள்போல் அமர்ந்திருக்கிறோம். இதற்கு நாம் செல்ல வேண்டிய தேவையே இல்லை. நம் வடிவில் ஓவியத்திரைச்சீலைகளை வரைந்துகொண்டு சென்று தொங்கவிட்டாலே போதும்” என்றாள்.

“என்ன சொல்கிறாய்? நீ நிஷத அரசகுமாரி” என்று உத்தரன் சொன்னான். “உனது சொற்கள் பாரதவர்ஷத்தின் ஐந்திலொரு பங்கு பகுதியை ஆள்கின்றன என்பதை மறக்காதே.” அரசி “நீ முதலில் உன்னை இளவரசி என நினை. நாம் எவரென்று உணராதிருக்கையில்தான் இத்தகைய சொற்கள் எழுகின்றன” என்றாள். திரௌபதி தாழ்ந்த குரலில் “இவை சேடியர் முன்வைத்து பேச வேண்டியவை அல்ல, அரசி” என்றாள். “ஆம். ஆனால் இவர்களை தனியாக நான் சந்திப்பதே இல்லை. தனியாக சந்திப்பதற்கு அழைத்தால் இருவருமே வருவதில்லை” என்றாள் அரசி. உத்தரை “வந்தாலென்ன? மீண்டும் மீண்டும் ஒன்றையேதான் சொல்வீர்கள். அதனால் எந்தப் பயனும் இல்லை என சொல்லும் நீங்களும் கேட்கும் நானும் அறிந்திருப்போம்” என்றாள்.

உத்தரன் உத்தரையிடம் “அன்னையிடம் முறைமை மீறி பேசவேண்டியதில்லை. உனக்கு உளக்குறை ஏதிருந்தாலும் என்னிடம் சொல்லலாம்” என்றான். உத்தரை “என்ன செய்வீர்கள்?” என்றாள் புருவத்தை தூக்கி. “கீசகரை அழைத்து ஆவன செய்யும்படி ஆணையிடுவேன். இங்கு நமது ஆணைகளை நிறைவேற்றுவதற்காகவே அவர் பொறுப்பேற்றிருக்கிறார்” என்றான். “சென்று ஆணையிடுங்கள்” என்றாள் உத்தரை. “என்ன ஆணை?” என்று அவன் கேட்டான். அவள் வெறுப்பு தெரியும் முகத்துடன் “அவையிலிருக்கும் எவரேனும் ஒருவரை தலைகொய்ய ஆணையிடுங்கள் பார்ப்போம்” என்றாள்.

அவன் திடுக்கிட்டு “எவரேனும் ஒருவரையா? அது அறமல்ல” என்றான். அவள் “நன்று. எவரேனும் ஒருவர் அவையின் பின்நிரையிலிருந்து முன்நிரையில் வந்து அமரட்டும். அதற்கு ஆணையிடுங்கள்” என்றாள். “முறைமீறுவது அவையின் ஒழுங்கை கலைப்பது” என்று உத்தரன் சொன்னான். அவள் “சரி, அவையிலிருக்கும் அணிபடாம்களில் எதையேனும் ஒன்றைக் கழற்றி அப்பால் மாற்றுவதற்கு ஆணையிடுங்கள்” என்றாள். உத்தரன் “அணிபடாமை கழற்றுவதென்றால்…” என்றபின் “அதன் அரசியல் உட்பொருட்கள் என்ன என்பதை அமைச்சரிடம் உசாவிய பின்னர் அந்த ஆணையை இடுவேன். இன்றல்ல நாளை” என்றான். உத்தரை உதடுகள் கோண திரும்பிக்கொண்டாள்.

கோல்காரன் அறைவிளிம்பில் வந்து நின்று “அவைகூடிவிட்டது, பேரரசி. பேரரசர் அவை நுழையப்போகிறார். தங்களை அழைத்துவரும்படி படைத்தலைவரின் ஆணை” என்றான். உத்தரை “அதற்கும் படைத்தலைவர் ஆணை வேண்டுமா என்ன?” என்றாள். உத்தரன் குரல் தாழ்த்தி “நேரடியாக அவரைப்பற்றி எதுவும் இங்கு பேசவேண்டியதில்லை” என்றபின் சேடியரைப் பார்த்து “இவர்களில் எவர் ஒற்றரென்று நமக்குத் தெரியாது” என்றான். “அதையும் அவர்களை வைத்துக்கொண்டே சொல்லுங்கள். நன்று” என்று தலையை சிலுப்பியபடி உத்தரை தன் அணுக்கச்சேடியை நோக்கி மேலாடைக்காக கைநீட்டினாள்.

பொன்னூல் பணி நிறைந்த பீதர்நாட்டு இளஞ்செந்நிறப் பட்டாடையை சேடி அவள் கைகளிலும் தோள்களிலுமாக சுற்றி அணிவித்தாள். இன்னொரு அணிச்சேடி அவள் கழுத்திலிட்டிருந்த மணிமாலைகளை சீரமைத்தாள். அதை பார்த்தபின் உத்தரன் தன்னருகே நின்ற இன்னொரு சேடியிடம் மெல்ல “நான் உனக்களித்த கல்மணி மாலை எங்கே?” என்று கேட்டான். “பேழையிலிருக்கிறது” என்று அவள் மெதுவாக சொன்னாள். “அணிந்திருக்கலாமே?” என்றான் உத்தரன். சுதேஷ்ணையின் காதில் அவ்வுரையாடல் விழுந்தாலும்கூட அவள் அதை கேளாதவள்போல கோல்காரன் அருகே சென்று “செல்வோம்” என்றாள்.

வெள்ளிக்கோலை தூக்கியபடி கோல்காரன் “கேகயத்து அரசி, விராடப் பேரரசி, வருகை” என கூவியபடி முன்னால் செல்ல கேகயத்தின் கொடியுடன் கவசவீரன் தொடர்ந்தான். இசைச்சூதரும் அணிச்சேடியரும் அவர்களுக்குப் பின்னால் செல்ல, வலப்பக்கம் அரசியின் நீளாடையின் முனையை கையிலேந்தியபடி திரௌபதி தொடர, சுதேஷ்ணை அவை நோக்கி சென்றாள்.

முந்தைய கட்டுரைபிராமணர்களின் சாதிவெறி
அடுத்த கட்டுரைஆஸ்திரேலியா ஒரு கடிதம்