ஜோ டி குரூஸ் – காத்திருக்கும் பணிகள்

Joe D Cruz

ஜோ.டி.குரூஸ் தமிழ் ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியை வாசித்தேன். பேட்டியைப்பற்றி நான்கு கடிதங்கள். நான்குமே கொந்தளிப்பானவை. ஒன்று, ஜோ ‘துரோகம்’ செய்துவிட்டார் என்று. இன்னொன்று அவர் ‘எதிர்பார்த்ததை’ அளிக்கவில்லை என்பதனால் விலகிச்செல்கிறார் என்று இன்னொன்று அவர் ‘தகுதிக்குமேல் எதிர்பார்த்தார்’ என்று. ஒரு கடிதமாவது  ‘அவர் அப்பவே அப்படித்தான்’ என்று இருந்தாகவேண்டுமே என்று பார்த்தேன். இருந்தது.

பொதுவாக தன்முனைப்பு கொண்டு தன்னை முன்வைத்தே அனைத்தையும் அணுகுபவர்களுக்கு எவரிடமும் உண்மையான மதிப்பு இருப்பதில்லை. தன் திறனை, ஆளுமையை முன்னிறுத்துபவர்களைச் சொல்லவில்லை. அவர்களின் தன்முனைப்பு ஓர் அழகு.

அவர்களுக்கு பிற சாதனையாளர்களை அடையாளம் காணத்தெரியும். பணியவேண்டிய இடத்தில் பணியவும் முடியும்.

எதையும் செய்யாதவர்கள், எவரும் அல்லாதவர்களுக்குள் நுரைக்கும் தன்முனைப்பை நாம் பலசமயம் அறிவதில்லை. அது கழிவிரக்கமாக; தனித்தவன், அயலவன், கலகக்காரன், தியாகி என பலவகையான போலிப்பாவனைகளாக வெளிப்படுகிறது.

அவர்கள் தேடியிருப்பது ஒரு தருணத்தை. எதையாவது செய்தவர்கள், எவராவது ஆனவர்கள் மேல் கசப்பையும் வெறுப்பையும் உமிழும் ஒரு வாய்ப்பை. அது அமைந்ததும் உரிய அரசியல், ஒழுக்கவியல்   நிலைபாடு எடுத்துக்கொண்டு ரத்தமும் புகையும் கக்குகிறார்கள். ஜோ சாதித்துக்காட்டியவர். ஆகவே அவர் அதைச் சந்தித்தே ஆகவேண்டும்.

இரண்டாவதாக, ஏதேனும் அமைப்பு அல்லது கருத்தியல் சார்ந்த நிலைபாடு கொண்டவர்கள். அவர்களுடையது ஒரு கூட்டுத் தன்முனைப்பு. அவர்களுக்கும் எவர் மேலும் மதிப்பில்லை. தாங்கள் தலைமேல் கொண்டாடும் தலைவர்கள்மேல்கூட. நிலைபாடுகள் வழியாக அவர்கள் தங்கள் தன்முனைப்பை முன்வைக்கிறார்கள். ஆகவே தங்கள் நிலைபாட்டுக்கு எதிரானவர் என்றால் எவர் மேலும் எந்த கீழ்மையையும் சுமத்தத் தயங்கமாட்டார்கள்.

இரண்டையும் ஒருவகை  ‘பரிதாப உளவியல்’ என்றே நான் சொல்லத்துணிவேன். அவற்றுக்கு கருத்துமதிப்பு ஏதுமில்லை. அவற்றை எதிர்நிலை வைத்துப் பேசுவது வீண்முயற்சி. ஆகவேதான் ஒருபோதும் அவர்களை நான் பொருட்படுத்தி சுட்டுவதில்லை. இக்கடிதங்களையும் அப்படித்தான் பார்க்கிறேன்.

ஜோ டி குரூஸ் 2015 டிசம்பரில் விஷ்ணுபுரம் விருதுவிழாவில் வாசகர்களை நேரில் சந்தித்து விரிவாக உரையாடினார். அதன்பின் பலமுறை சந்தித்திருக்கிறேன். சிலமாதம் முன்பு என் வீட்டுக்கும் வந்தார். ஜோ டி குரூஸிடம் நான் காண்பது அவருடைய மக்கள் மீதான பெரும் பற்றை.சமரசமே அற்ற நேர்மையை. கனவுகளுடன் எப்போதுமிருக்கும் எளிமையை.

ஜோ டி குரூஸ்- ஐ இலக்கியவாதியாக அறிமுகமான காலம் முதலே நான் அறிந்திருந்தேன். இலக்கியவாதியாக அவர் பெற்ற அங்கீகாரம் அவர் எதிர்பாராதது. தன் மக்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்ய அவர் விரும்பினார். அது அவருடைய நேர்மை, வேகம், அவதானிப்புத்திறன் காரணமாகவே இலக்கியம் ஆனது. அந்த அங்கீகாரமே அவருக்குச் சில அரசியல் எண்ணங்களை உருவாக்கியது. அந்நாவலால் பெற்ற அடையாளத்துடன் அவர் கடற்கரைகளில் பயணம் செய்தார். அதிலிருந்து சில கருத்துக்களைச் சென்றடைந்தார்.

அதில் முக்கியமானது மீனவர்கள் அரசியல்படுத்தப்படவேண்டும் என்பது. மீனவர்கள் அரசியல்படுத்தப்படுவதற்குத் தடையாக இருப்பது மதம். குறிப்பாக மிகமிக வலுவான அமைப்பாக அவர்களை ஆளும் கத்தோலிக்கத் திருச்சபை. இரண்டு வகைகளில் அது மீனவர்கள் அரசியல் சக்தியாகத் திரள்வதற்கு எதிராக இருக்கிறது.

தமிழகத்திலுள்ள மீனவர்களில் நேர்பாதியினர்தான் கிறித்தவர்கள். பிறர் இந்துக்கள். திருச்சபையே மீனவர்களின் முகமாக அடையாளப்படுத்தப்படும்போது மீனவச்சமூகம் இரண்டாகப் பிரிந்துவிடுகிறது. திருச்சபையின் அமைப்புபலமும் நிதியாற்றலும் பிறரிடம் அவநம்பிக்கையை உருவாக்குகின்றன.

இரண்டாவதாக, திருச்சபை கிறித்தவ மக்களை எப்போதும் தன் சிறகுக்குள்ளேயே வைத்துள்ளது. அதன் எளிய கோரிக்கைகளைக்கூட திருச்சபை மூலமே முன்வைக்கவேண்டியிருக்கிறது. திருச்சபையே போராட்டங்களை அமைக்கிறது. அதுவே சமரசமும் பேசுகிறது. அது என்ன செய்தாலும் இயல்பாக மதமுத்திரை வந்துவிடுவதனால் மீனவப்பிரச்சினைகள் எப்போதும் மதப்பிரச்சினையாகவே பார்க்கப்படுகின்றன.

திருச்சபையின் சர்வதேச நிர்ப்பந்தங்கள், பொருளியல் கட்டாயங்கள் மீனவப்பிரச்சினைகளை பாதிக்கின்றன. ஆக, திருச்சபையே மீனவசமூகத்தின் பாதுகாப்பு. கூடவே அது அதன் ஆதிக்கத்தால் மீனவச்சமூகம் அரசியல்மயமாகாதபடி பார்த்துக்கொள்கிறது.

இக்காரணத்தால்தான் ஜோ.டி.குரூஸ் திருச்சபையை மீறி மீனவர்கள் அரசியல்ரீதியாக திரளவேண்டும், மதம் அவர்களின் தனிப்பட்ட நம்பிக்கையாக மட்டும்தான் இருக்கவேண்டும் என்று கூறினார். அவர் திருச்சபைக்கு எதிரானவர் அல்ல. இதை நான் அவருக்கு கொற்கைக்கு சாகித்ய அக்காதமி விருது கிடைத்தபோது நடந்த பாராட்டுக்கூட்டத்திலும் குறிப்பிட்டேன். காகு சாமியார் போன்ற ஒரு இலட்சிய கிறித்தவ ஊழியரை அவர் ஆழிசூழ் உலகு நாவலில் முன்வைத்ததை நாம் மறந்துவிடக்கூடாது. திருச்சபையின் சமூகப் பணிகளை, அதன் மத ஆதிக்கத்தை ஜோ எதிர்க்கவில்லை. அவர் அது மீனவர்களின் அரசியலைக் கட்டுப்படுத்தவேண்டாமே என்றுதான் வாதிட்டார்.

அந்த அரசியல்நோக்கே அவரை பாரதிய ஜனதாக் கட்சி நோக்கிக் கொண்டுசென்றது. அதற்கான காரணங்களை அவர் விஷ்ணுபுரம் சந்திப்பில் குறிப்பிட்டார்.. சுருக்கமாக இரண்டு கோரிக்கைகளாக அவற்றை சொல்லலாம். ஒன்று தென்கடலின் மாபெரும் மீன்வளம் ஒரு தேசியப்பொதுச்சொத்து என அவர் கருதுகிறார். அது பலசர்வதேச மீன்பிடிப்பு நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாகவே அரசியல்வாதிகளால் அளிக்கப்படுகிறது. மீன்வளம் சூறையாடப்படுகிறது. சென்ற ஐம்பதாண்டுக்காலம் மத்திய மாநில அரசுகளை ஆண்ட காங்கிரஸ், திமுக கட்சிகளே அதற்குப் பொறுப்பு.

அதில் கொள்ளையடித்துப்பெருகிய அரசியல்வாதிகள் பலர். விஷ்ணுபுரம் சந்திப்பில் பேசும்போது “திரீ ஜி ஊழல் என்கிறோம். அதை பொரிகடலை ஆக ஆக்குமளவுக்குப் பெரியது மீன்வளக்கொள்ளை” என்றார் ஜோ.

இரண்டாவதாக, தென்கடலின் மீன்வளமும் இங்குள்ள மீனவர் வாழ்க்கையும் ஒன்றுடன் ஒன்று கலந்துள்ளன. இங்கே பெருந்தொழிலாக மீன்பிடிப்பை அனுமதித்தான் மீன்வளம் அழியும், மீனவர்களும் அழிவார்கள். ஆகவே பெருந்துறைமுகக் கட்டுமானங்கள் போன்றவை தவிர்க்கப்படவேண்டும். மீனவர்களின் நலன்களை கலந்தாலோசித்தபின்னரே எந்த திட்டமும் முன்னெடுக்கப்படவேண்டும் என்கிறார்.

சென்றகால காங்கிரஸ் ஆட்சிகளில் இந்தச் சூறையாடல் தொடங்கியது என்பதனாலும், கடற்கரை ஒழுங்காற்று வரைவுத்திட்டம் போன்று கடற்கரைமேல் மீனவர்களுக்கு இருக்கும் ஆதிக்கத்தை அழிக்கும் திட்டங்கள் அவர்களால் கொண்டுவரப்பட்டன என்பதனாலும் அவர் மாற்று அரசியலாக பாரதிய ஜனதாவைக் கண்டார். பாரதிய ஜனதாவுக்கு மீனவ வாக்குகள் ஒரு ‘போனஸ்’ என்பதனால் அவர்களுடன் அதன்பொருட்டு பேசமுடியுமென நினைத்தார்.

ஆனால் அவர் கண்டது பாரதிய ஜனதாவின் அரசும் பெருந்தொழில் உட்பட பலவற்றில் காங்கிரஸின் நகல் என்றுதான். பெரும் சுரண்டல் திட்டங்களுக்கு அரசியல் இல்லை என்றுதான். அவருடைய எதிர்பார்ப்புகள் பொய்ப்பதை அவர் நேரடியாகவே அந்த வாசகர்ச்சந்திப்பில் சொன்னார். ஆனால் அன்று அப்போதும் மோடிமேல் நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிட்டார்.

அவருக்கு பாரதிய ஜனதா முக்கியமான தனிப்பட்ட வாக்குறுதிகளை அளித்தது என எனக்குத் தெரியும். ஆனால் தன் அரசியல்கோரிக்கைகளுடன் சமரசம் செய்துகொண்டு அவற்றை ஏற்க அவர் சித்தமாக இருக்கவில்லை. குமரிமாவட்டத்தில் நிகழும் துறைமுகப்பணிகள், மீன்வளக்கொள்ளை ஆகியவற்றைப் பற்றி அவர்களுக்குச் சங்கடமூட்டும் வினாக்களை கேட்பவராகவே நீடித்தார். மெல்ல அவர்களால் ஒதுக்கப்பட்டு தானும் ஒதுங்கிக்கொண்டார்.

ஜோ.டி.குரூஸ், நேற்று நம் முற்போக்காளர்கள் அவரை ‘விலைபோய்விட்டவர்’ என வசைபாடியதை எப்படி ஏற்றுக்கொண்டாரோ அதே மனநிலையுடன் இன்று அவரது முன்னாள் சகாக்கள் ’கேட்ட விலை கிடைக்காமல் போகிறார்’ என வசைபாடுவதையும் எதிர்கொள்ள வேண்டும். இந்தக்கும்பல் விலைபோகச் சித்தமாக கடைவிரித்து அமர்ந்திருப்பது. இலட்சியவாதம் என்றால் என்னவென்றே அறியாதது.ஆகவே எவரையும் விலைகொண்டே பேசமுடியும் இவர்களால்.

ஜோ டி குரூஸ் முன்னெடுக்கும் அரசியல் இன்றைய சூழலில் மிகமிக இன்றியமையாதது. அது ஒரு முன்னோடிக் கருத்து என்பதனாலேயே எளிதில் அதை பிறர் புரிந்துகொள்ள முடியாது அவர் பெரிய அமைப்புகளுக்கு எதிரான தனிமனிதர் என்பதனாலேயே அவர்மீதான கசப்புகளும் தாக்குதல்களும் அதிகம் இருக்கும். ஆனால் மீனவர்களை அரசியல்படுத்துவதும் மதத்திற்கு அப்பாற்பட்டு அவர்கள் திரள்வதும் இன்றைய அவசியத்தேவை. மிகமெல்ல அவர்களின் பூர்விக நெய்தல் நிலமும்  கடலும் அவர்களை விட்டுச்சென்றுகொண்டிருக்கிறது வருங்காலத்தில் அதைக்காக்க அவர்கள் போராடுவதற்குரிய அடித்தளப்பணி ஜோ செய்துகொண்டிருப்பது.

ஜெ

ஜோ டி குரூஸ், அ.மார்க்ஸ், நவயானா ஆனந்த்- எளிய விளக்கம்
கொற்கை: ஆர். என். ஜோ டி குரூஸ்
விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 19- பேசபட்டவை… கிருஷ்ணன்
விழா 2015 – விஷ்ணுபுரம் விருது
மீன்குருதி படிந்த வரலாறு
ஜோ -சில வினாக்கள்
ஜோ- ஞாநி-விமர்சனங்கள்
ஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி
ஓராயிரம் கண்கள் கொண்டு
ஆழிசூழ் உலகு- நவீன்
எழுதப்போகிறவர்கள்
ஜோ டி குரூஸின் ‘ ஆழிசூழ் உலகு ‘ – கடலறிந்தவையெல்லாம்…

முந்தைய கட்டுரைசீ.முத்துசாமி சிறுகதைகளில் குறியீட்டு மொழி
அடுத்த கட்டுரைஜோ டி குரூஸும் இனையம் துறைமுகமும்