பிறனரசியல், பிரிவினையரசியல்

mohandas-gandhi-painting-H (1)

அன்புள்ள ஆசிரியருக்கு,

இன்றைய தி இந்து நடுப்பக்க கட்டுரை கோபாலகிருஷ்ண காந்தி எழுதியது. ’தேசப்பிரிவினைக்கு இன்றும் வட்டி கொடுக்றோம்’  தேசப்பிரிவினையில் ஆரம்பித்து இன்றைய பிரச்னை வரை விளக்கியுள்ளார். நீங்கள் கூறியதுபோல நமக்கு எப்போதும் நாம்x அவர்கள் விளையாட்டு தேவை என்றே படுகிறது.

முக்கியகமாக கட்டுரையின் கடைசி பத்தி முகத்தில் அறைவது போல் உள்ளது “ஊடுருவும் அச்சம்” இப்படி முடிகிறது. “சுதந்திர போராட்டத்துடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத புதிய தலைமுறை 70 வைத்து சுதந்திர நினைத்தை கொண்டாடுகிறது. இந்து சமூகத்துக்கு உள்ளயேயும் வெளியேயும் இருக்கும் சில பிரிவுகளை அது இலக்காகக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள சக்திக்களுக்கு அது வலுவான மாற்று. அது இஸ்லாத்துக்கு உள்ளயேயும் வெளியேயும் இருப்பதை நோக்கிக் கவனம் செலுத்துகிறது. அது இஸ்லாத்துக்கு எதிரானது அல்ல; இரட்டைப்பிரிவினைவாதிகளின் மதம் இஸ்லாமோ இந்துவோ கிடையாது; பிளவுபடுத்தல்தான் மதம்.”

இந்த வரி மிக முக்கியமானதாகவே கருதுகிறேன். இதைத்தான் இப்போது அரசியலில் முக்கியமான கருதுகோள் ஆக பயன்படுத்துகிறார்கள்.

நான் தினம்தோறும் சந்திக்கும் மக்களிடமும் இதையே காண்கிறேன். உதாரணமாக ஒருவர் இன்றைய ஆட்சியின் அனைத்து அசட்டைகளையும் நியப்படுத்துபவர்களில் ஒன்று இந்து வெறியர்களாக இருக்கிறர்க்கிறார்கள் அல்லது உயர் பிராமண வகுப்பை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.  சரி இதை சொல்பவர் கூட திருமாவளவன் பேச்சு எழும்போது அவரை திட்டி தீர்க்கிறார்.

என் கேள்வி அந்த கட்டுரை காட்டும் காலம் இதைவிட மோசமாகவே இருந்திருக்கவே  வாய்ப்புள்ளது காந்தி எப்போதுமே இதை எதிர்த்தே வந்துள்ளார் அப்படியெனில் அவருடைய போராட்டமுறை எப்படி இருந்தது. பத்திரிக்கை மூலம் பேசினார் என்றால் இன்றைவிட எழுத்தறிவு குறைவாகவே இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் மொழி இன்று உள்ளது போல சுலபமாக இருந்ததா? பிரச்சாரம் மூலமே இதனை சாத்தியப்படுத்தினாரா?

கண்டிப்பாக அவர் அவர்காலத்தின் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு ஒரு எதிர் சக்தியாக இருந்துள்ளார் என்றே என்னால் உணர முடிகிறது.

திருமலை பச்சமுத்து

***

அன்புள்ள திருமலை,

முப்பதாண்டுகளுக்கு முன்னர் நான் அட்டப்பாடியில் கண்ட ஒரு காட்சி ஒரு படிமமாக என்னுள் உள்ளது. பலமுறைச் சொல்லியிருப்பேன். பழங்குடிகளை வண்டிகளில் ஏற்றி தோட்டவேலைக்குக் கொண்டுசென்றுகொண்டிருந்தனர். ஒரு மினிலாரியில் நெருக்கி நெருக்கி கொஞ்சபேர் சென்றனர். அடுத்த மினிலாரியில் இருவர் மட்டுமே.

வியப்புடன் அதைப்பற்றி கேட்டேன். இருசாராரும் இரு இனங்கள் என்றனர். அவர்கள் தொட்டுக்கொள்ள மாட்டார்கள். சேர்ந்து அமர மாட்டார்கள். பேசிக்கொள்வதும் அரிது. நூறாண்டுகளுக்கு முன் அவர்கள் நேரில் பார்த்துக்கொண்டாலே கொலைதான். மற்றபழங்குடிமீதான அச்சம் ஐயம் அருவருப்பு அவர்களிடம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. தங்களுக்கு எந்த நோய் நொடி வந்தாலும் அதற்கு மற்றபழங்குடியின் சூனியமே காரணம் என நம்புவார்கள்.

இருதரப்புமே சில மந்திரவாதிகளின் பிடியில் இருந்தன. அம்மந்திரவாதிகள் திரும்பத்திரும்ப அத்தனை நோய்களுக்கும் மற்றஇனமே காரணம் என்று ‘குறி’ சொல்வார்கள். அவர்களிடம் விவாதிக்கவே முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு அவ்வெறுப்பை தெய்வங்கள் நேரடியாக வந்து சொல்கின்றன! ஒருமுறை பெருமழை பெய்தபோது அதற்கும் மறுதரப்பே காரணம் என இருசாராரும் எண்ணி நேரடியாக கைகலப்பில் இறங்கினார்களாம்

பழங்குடிகளில் இருக்கும் மனநிலை நம்மிடம் ஆழத்தில் உறைந்திருக்கும். நாம் அதிலிருந்து நெடுந்தொலைவுக்கு வந்திருக்கமாட்டோம். மேலோட்டமாக ஒருவகை ‘புழக்க நாகரீகத்தை’ கடைப்பிடிப்போம். வெறுப்புகள் , காழ்ப்புகள், ஐயங்களுக்கு கொள்கை, கோட்பாடு சார்ந்த விளக்கங்கள் சொல்வோம். அரசியல்நிலைபாடாக முன்வைப்போம்.

இந்தியா நெடுங்காலம் நிலப்பிரபுத்துவ வாழ்க்கையும், அரைப்பழங்குடி வாழ்க்கையும் நிலவிய நிலம். சங்ககால வாழ்க்கை எப்படிப்பட்டது? திருச்சியை ஆண்ட அரசன் முசிறியை கைப்பற்றி அங்குள்ள மக்களை கொன்றுகுவித்து வீடுகளுக்கு தீவைத்து  நீர்நிலைகளை யானைகளைவிட்டு அழித்து விளைநிலங்களில் உப்பைப் பரப்பி உழுது அவர்களின் பெண்களின் தாலியை பறித்து மலைபோலக் குவித்து அவர்களின் குழந்தைகளின் அழுகுரல்களை இசையாகக் கேட்டபடி கள் குடித்து மகிழ்ந்திருந்த சித்திரம் அல்லவா அது நமக்கு அளிக்கிறது?

பின்னர் பேரரசுகள் உருவாயின. அவற்றுக்கிடையே பூசல்கள். சோழர்கள் கர்நாடகநிலத்தில் செய்த அழிவுகளின் இடிபாடுகளை இன்றும் நேரில் சென்றுபார்க்கலாம். தமிழகம் முழுமையாகவே பலமுறை இடித்து அழிக்கப்பட்டது. மீண்டும் கட்டி எழுப்பப் பட்டது. கடைசியாக பிரிட்டிஷ் அரசு வந்தது. அது நவீன முதலாளித்துவ அரசு. சுரண்டலின்பொருட்டு அது நம்மை வலுக்கட்டாயமாக ஒருங்கிணைத்தது. ஒற்றை அரசியல்பரப்பாக ஆக்கி ராணுவம் மூலம் நம்மை அடக்கி ஆண்டது.

ஆனாலும் அதற்குள் வட்டாரப்பூசல்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தன எந்த ஒரு பகுதிக்குச் சென்றாலும் அவர்களைச் சூழ்ந்துள்ள பிற வட்டாரங்களைப் பற்றிய அவநம்பிக்கையை கசப்பை இளக்காரத்தை அவர்கள் தங்கள் ‘பண்பாடாக’ கொண்டிருப்பதைக் காணலாம். குமரிமாவட்டத்தில் ‘பாண்டி’ என்ற சொல்லுக்கு ‘இழிந்தவன், வரண்டநிலத்தைச் சார்ந்தவன், குளிக்காதவன்’ என்றெல்லாம் பலபொருட்கள். நெல்லையில் ‘மலையாளத்தான்’ என்றால் அதேபோல மேலும் இழிவான உருவகம்.

ஒருவட்டாரத்திற்குள்ளாகவே சாதி, மதம் சார்ந்தும் இதே அவநம்பிக்கைகள், கசப்புகள், இளக்காரங்கள் இருப்பதைக் காணலாம். உண்மையில் நூறாண்டுகளுக்கு முன்புகூட நாம் சிறுசிறு சாதியச்சூழல்களில், வட்டாரங்களில் பிறருடன் ஒட்டாமல் வாழ்ந்தோம். நவீன வாழ்க்கைச்சூழல்தான் அனைவருடனும் இணைந்து வாழ நம்மை கட்டாயப்படுத்துகிறது. பள்ளிகள், சாலைகள், பொதுக்கேளிக்கை இடங்கள் நமக்கு இன்றும்கூட சிக்கல்தான். இன்றும்கூட ’மற்றவர்களுடன்’ புழங்குவது நமக்கு தெரியாது.

பலகுடும்பங்களில் ‘மற்றவர்களை’ ப்பற்றி ‘ஜாக்ரதையா இருக்கணும்டா’ என்றே பிள்ளைகளை வளர்க்கிறார்கள். சொந்தச் சாதி, மத வட்டாரத்திற்கு வெளியே நண்பர்கள் இருப்பவர்களே நம்மில் மிகக்குறைவு. எதற்கும் மற்றவர்களை ஐயப்படுகிறோம். மற்றவர்களை ஏளனம் செய்வதை நகைச்சுவை என ரசிப்போம். நம்மவர்களை எங்கும் கண்டுபிடிப்போம்.

இந்தப் பழங்குடிமனநிலை அரசியலுக்கு மிக வசதியானது. கொள்கை, கோட்பாடு அடிப்படையில் மக்களை இணைப்பது மிகக்கடினம். ஏனென்றால் சிலவரலாற்றுத்தருணங்களில் தவிர மக்கள் அதை ஏற்பதில்லை. சுயநலத்தின் அடிப்படையில் இணைப்பது மேலும் எளிது. இழப்புகள் உருவாகும் என்னும் அச்சத்தின் அடிப்படையில் இணைப்பது மேலும் எளிது. அந்த இழப்புகள் ‘பிறரால்’ வரும் என ஐயமூட்டி இணைப்பது மிகமிக எளிது. அதைத்தான் சோட்டா அரசியல்வாதிகள் முதல் ஆலமரமாக எழுந்து வரலாற்றை ஆக்ரமித்துள்ள பெரும் அரசியலியக்கங்கள் வரைச் செய்கின்றன.

 ‘உன் துயரங்களுக்கு காரணம் அவன்’ என சுட்டிக்காட்டும் அரசியல்வாதி எவனாக இருந்தாலும் அவனை ஐயுறுவோம். அவனுக்கு அதில் என்ன லாபம் என்று பார்ப்போம். அவன் உணர்ச்சியின் மொழியில் பேசப்பேச அவனை அருவருப்புடன் விலக்கிவைத்து ஆராய்வோம்.அதுவே அரசியல்விழிப்புணர்வின், ஜனநாயகப்புரிதலின் முதல் அடிப்படை.  நம் பிரச்சினைகளை நம்மிடம் பேசுபவரே உண்மையான அரசியல்வாதி. அவர் அதற்கு அளிக்கும் விளக்கமும், மீளும் வழியுமே நம்மால் கவனிக்கப்படவேண்டியது.

இந்த விழிப்புணர்வு இந்தியச்சூழலில் இன்றில்லை. படித்தவர்கள்கூட இந்த ‘பிறன்’ அச்சத்தை அதன் வெளிப்பாடான காழ்ப்பையே ‘தீவிர அரசியலாக’ வெட்கமில்லாமல் வெளிப்படுத்தும் சூழல் இங்குள்ளது

காந்தியின் காலகட்டத்தில் அவருக்கு இரு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று பிரிட்டிஷ் அரசால் ஏற்கனவே இந்தியா அரசியல்ரீதியாக ஒரே பரப்பாக ஆக்கப்பட்டிருந்தது. அதை உணர்வுபூர்வமாக ஒருங்கிணையச் செய்வது மட்டுமே அவருடைய சவால்

இரண்டாவதாக பொது எதிரியாக பிரிட்டிஷார் இருந்தனர். அவர்களுக்கு எதிராக இந்தியர்கள் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைய முடிந்தது. வேறுபாடுகளைப் பேசும் அரசியல்வாதிகளை பிரிட்டிஷார் உருவாக்கி அவர்களை காந்திக்கு எதிராக வளர்த்துவிட்டனர். அவர்களை காந்தி வாழ்நாளெல்லாம் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. சாதி, மத, இன, வட்டார உரிமைகளைப் பேசுபவர்கள் என்னும் முகம் அவர்களுக்கு இருந்தது. அந்ந்தந்த மக்களால் அவர்கள் தங்கள் நலம்நாடும் தலைவர்களாகக் கொண்டாடப்பட்டார்கள். ஆனால் அன்றைய பொது இலட்சியவாதம் அவர்களை கடந்துசெல்ல காந்திக்கு உதவியது. ஆனால் அவர்களில் ஒருவனால் அவர் கொல்லப்பட்டார்

காந்தி ஜனநாயகத்தையே மக்களுக்கு கற்பிக்க முற்பட்டார். ஆகவே அவர் மிக எளிய சில வழிகளை தவிர்த்தார். ஒன்று ’எதிரி’ மீதான வெறுப்பால் அரசியல் ஒருங்கிணைவை உருவாக்கக்கூடாது என அவர் நினைத்தார் . பிரிட்டிஷாரை வெறுக்க அவர் அறைகூவவில்லை. பிரிட்டிஷார் மேல் பெருமதிப்புடன் அரசியல் பேசினார். பிரிட்டிஷ்சட்டமும் நீதிமுறையும் அளித்த கொடைகளுக்காக எப்போதும் நன்றியுடனிருந்தார். அதை எப்போதும் குறிப்பிட்டார். இன்று ஒரு கும்பல் அவரை பிரிட்டிஷாரின் ரகசிய ஆதரவாளர் என்று சொல்வது அதனால்தான்

இரண்டாவதாக நமது பிரச்சினைகளுக்கு காரணம் பிறர் அல்ல நாமே என நம்மிடம் சொல்லிக்கொண்டே இருந்தார். சுகாதாரம் முதல் சாதிப்பிரச்சினை வரை. ஏன் பிரிட்டிஷார் உருவாக்கிய பஞ்சங்களைக்கூட அதில் நம் பங்கென்ன என்ற கோணத்திலேயே அவர் அணுகினார். நம்மை மேம்படுத்திக்கொள்ளவே அவர் சர்வோதய இயக்கம் போன்ற பயிற்சியமைப்புக்களை உருவாக்கினார். நம் ஒற்றுமையின்மையைக் களைய மீண்டும் மீண்டும் முயன்றபடியே இருந்தார். ஆலயநுழைவுப்போராட்டம் உட்பட எதுவும் நம் ஒற்றுமையின்மையை வளர்க்கக் கூடியதாக அமையக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். உதாரணமாக வைக்கம் சத்யாக்கிரகத்தில் தாழ்த்தப்பட்டோர் ஆலயத்துள் நுழைவதற்கான போராட்டத்தில் ஒவ்வொரு குழுவிலும் எல்லா சாதியினரும் இருக்கவேண்டுமென அவர் அறிவுறுத்தினார்

ஆனால் சுதந்திரத்திற்குப்பின் அந்த இலட்சியவாதமும் ஒருங்கிணைவுநோக்கும் இல்லாமலாயின. இந்தியாவைச் சுரண்டிய பிரிட்டிஷார் அகன்றதும்  ‘இந்தியாவைப் பங்கிட்டுக்கொள்ளுதல்’ மட்டுமே நம் அரசியல் கொள்கையாக மாறியது. அந்தப் பங்கீட்டில் அத்தனை பிரிவினைநோக்குகளும் உருவாகி வந்தன. சுதந்திரத்திற்குப்பின் இந்திய அரசியலில் புகழப்பட்ட அத்தனை அரசியல்வாதிகளும் ஏதேனும் ஒரு பிரிவின் நலனுக்காக காழ்ப்பின் குரலில் பேசியவர்கள். பங்கீட்டு அரசியலில் விளையாடியவர்கள். யாராவது ஒரு ‘அயலவனை’ எதிரியாக்கி மக்களைத் திரட்டியவர்கள்.

இன்று உருவாகிவரும் புதிய அரசியல்சில்லறைகளும் அந்த வழியே மிக எளியது என கண்டுகொள்கிறார்கள். ஏனென்றால் புழுக்களால் உணவை மட்டுமே பார்க்கமுடியும்

ஜெ

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 63