சிற்பம் தொன்மம்

senthii

இனிய ஜெயம்,

உத்ரகண்ட். கேதார்நாத் நோக்கிய பயணத்தில் கௌரிகுண்ட் அருகே ஃபடா எனும் கிராமத்தில் நின்றிருந்தோம். குளிர்பொழியும் அதிகாலையில் தேநீர்க்கடை ஒன்றினில் உறைந்த விரல்களை அனலில் அருகில் காட்டி உறுக்கிக் கொண்டிருந்தேன். வெளியே நில விளிம்பில் வானுயர்ந்த மலை. வெண்க்ரீடம் சூடிய பனிவரை. கேதார்நாத். கண்கள் பின்வாங்கி சாலையை அடைய, பனிமுடியே உடலெனக் கொண்டு, முற்றிலும் சாம்பல் மூடிய திகம்பர கோல, பைராகி ஒருவர் வந்து கொண்டிருந்தார். வெண்பனியும் வெண் சாம்பலும் ஒன்றா? அக்கணம் உணர்ந்ததை எப்படி சொல்ல? திகைப்பிலிருந்து மீளுமுன் என்னைக் கடந்து போயே போய்விட்டார்.

பைரவ் பாத்தீங்களா என்றார் எனக்குப் புரியும் மழலை ஹிந்தியில் தேநீர்க்கடைக்காரர். நெற்றியில் செந்திலகம். அவர்பின்னால் சட்டமிட்ட புகைப்படத்தில் மல்லாந்து கிடந்த சிவத்தின் நெஞ்சில் மிதித்து நின்றிருந்தாள் பன்னிருகை காளியன்னை. அன்றைய தினமெல்லாம் என்னுள் நிகழ்ந்ததை ஒருபோதும் வார்த்தையில் சொல்லிவிட முடியாது என்றே எண்ணுகிறேன்.

அன்றிரவு அறைக்குள் ஒடுங்கி, துயிலா எண்ணங்களை, பெருகும் சித்திரங்களை அளைந்து கொண்டிருக்கையில் ஒரு கணம் பேலூர் ஹளபேடு கலை மேன்மைகளை எண்ணி அகம் விம்மி அடங்கியது. கிளாசிசம் இந்த மண்ணின், இங்கு விளைந்த பண்பாட்டின் செழுமையில் இருந்து உதித்தது அது. ஒரு பக்கம் கலைமகளின் நடனம். உளியை உதடுகள் என்றாக்கி முத்தி முத்தி அந்த சிற்பி வடித்தெடுத்த கலை மேன்மை அவளை பாரதி பார்த்திருந்தால் இன்னும் பலநூறு பாடல் கொண்டு அந்த வெள்ளைக் கமலத்தவளை கொண்டாடி இருந்திருப்பான். அதே சிற்பிதான் அதே கோவிலின் மற்றொரு மூலையில், இடது கை சுண்டுவிரலை கடித்தபடி சிருங்கார இளிப்புடன், பிணங்களை உண்டு, சுடலையில் கூத்தாடும் சுடலைமகள், மயான காளியையும் செய்து நிறுத்தி இருக்கிறான். விஸ்வரூபம் கொண்டு கூத்தாடும் மயான காளி காலடியில், ஒரு கிங்கரன் நிற்கிறான். மனிதக் காலின் அருகே தேங்காய் அளவு. மற்றொரு படிமையில் விஸ்வரூபம் கொண்ட சிவனின் ருத்ர தாண்டவம். அவன் காலின் கீழ் அதே தேங்காய் அளவு, மயான காளி. [எனில் அந்த கிங்கரனுக்கு சிவனின் பாதமன்றி வேறெதுவும் தெரியாது] துளியை அணுகி, பெருக்கிக் காட்டி, அத்துளியை மாபெரும் கடலொன்றின் துமியென காட்டுகிறான் சிற்பி. க்ளாஸிஸம்.

தனி வாழ்வில் என் தாத்தா திக. அப்பா காலத்தில்தான் அதிலிருந்து இறங்கி வந்தார். பின் மொத்த கூட்டு குடும்பமும் தீவிர பக்தியில் விழுந்தது. அப்பா வழி கிடைத்த வாசிப்பு, தொடர் [பக்திதான்] கோவில் பயணங்கள். தேடல்கள் பல்வேறு அலைக்கழிப்புகள், பின்னர் கைக்கு கிடைத்த விஷ்ணுபுரம் நாவலே என் விழிகளை திறந்து விட்ட நாவல் என்பேன். பெரும்பாலும் மாலை நெல்லையப்பர் அம்மன் சன்னதியில்தான் கிடப்பேன். இத்தனை வருடம் கழித்து முதன் முறையாக அக்கோவிலின் சிற்பங்கள் முதன் முதலாக எனது குருட்டுப் புள்ளியைக் கடந்து பார்வைப் புலனுக்குள் வந்தது விஷ்ணுபுர வாசிப்புக்குப் பிறகே. இன்று இந்த நிலமெங்கும் திரிந்து, திளைக்கும் கலை அளிக்கும் உவகை அனைத்துக்கும் தோற்றுவாய் விஷ்ணுபுரம் நாவலே.

சிலவருடம் முன்பு ஆண்டாள் கோவிலில் நின்றிருந்தேன். ஒப்பற்ற செல்வங்கள் மீது [பாவாடை ஏற்றி கட்டி] துகில் போர்த்திக் கிடந்தது. அர்ச்சகர் சொன்னார் ”இளவட்ட பசங்க பொண்ணுங்க வர்ற இடம், இது பத்தி யாருக்கும் ஒண்ணும் தெரியாம விசேஷ நாளெல்லாம் வெறும் கேலியும் கிண்டலுமா ஆகிப் போகுது அதனாலதான் இப்டி ”என்றார். திருச்சி அருகே நாம் பார்த்த கோவில் ஒன்றினில் கோபித்து செல்லும் உமையை சிவம் சமாதானம் செய்கிறார். வலது கரம் உமையின் முகத்தை ஏந்த, இடது கரம் உமையின் இடது ஸ்தனத்தின் பாரம் தாங்க, ஊடல் நிறைந்து கூடலுக்கு நகரும் துவக்க கணத்தில் உறைந்த கலையழகு, துகிலுக்குள்தான் பொதிந்து வைக்கப்பட்டு இருந்தது. இன்று ஒட்டுமொத்தமாக பீடித்திருக்கும் இந்த குருட்டுப் புள்ளியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி வரும் இளம் தலைமுறையையும் சரி சமமாக காண முடிகிறது. அன்று காஞ்சிபுரம் கைலாச நாதர் கோவிலில் நின்று, தோழிக்கு அடித்தளம் முதல் சிகரம் வரை கோவில் என்ற கட்டுமானத்தில் இடம்பெறும் அமைப்புகள் குறித்து குடவாயில் பாலசுப்ரமணியம் அவரது கட்டுரைகளில் சொன்னவற்றை சொல்லிக்கொண்டிருந்தேன். [வாசித்தது எனக்குள் சேகரம் ஆக எனக்கு நானே சொல்லிக்கொண்டதுதான் அது] அருகே ஒரு இளைஞர் அது குறித்து மேலதிக தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டார். பொதுவாக நான் என்னுள் நானே மூழ்கிக் கிடக்கும் பித்துக்குளி. அவரை எங்கோ தவறவிட்டு விட்டேன். தோழி அவருக்கு நல்ல புக்ஸ் சஜஸ்ட் பண்ணிருக்கலாம் விட்டுட்டோம் என்று வருத்தப்பட்டார். ஆம் இன்றைய சூழலில், எதிர் படும் அனைத்து, லௌகீக லாபங்கள், பொருளற்ற கேளிக்கைகள் அனைத்தையும் கடந்து, ஒரு கோவிலுக்குள் நின்று, ஒரு சிற்பத்தைக் கண்டு, இது என்ன எனும் வினாவை ஒரு இளம் மனம் எழுப்பிக்கொள்ளும் நிலை அபூர்வத்திலும் அபூர்வமே. அவன் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட பிறவி என்பதை அக் கணம் அவனுக்கு உணர்த்தக்கூட அவன் கடந்து வந்த கல்வி அவனுக்கு உதவுவதில்லை.

நமது சிற்பக் கலை மீது, நமது இளம்தலைமுறை கவனம் திருப்பும் இந்த சூழலில், நமது கோவில் கலை மரபு சார்ந்த, தெளிவான, சரியான, சரளமான, தீவிரம் குன்றாத, அறிமுக நூல்கள் சிலவே தமிழில் கிடைக்கின்றன. இவ்வாண்டு வெளியான நூல்களில், பாரத சிற்பவியல் கலை சார்ந்த, என்சிபிஎச் வெளியீடான செந்தீ நடராஜன் அவர்களின் சிற்பம் தொன்மம் மிக முக்கிய நூல்.

………………………………………………………………………………………………………………………………..

பேளூர் ஹளபேடு, நாட்டிய சரஸ்வதி, பிரம்மா, கோவர்தனன், ஹிரண்யவத நரசிம்மர், அணிப்பாவைகள், கங்கைகொண்ட சோழபுரம், நடராஜர், மகிஷாசுர மர்த்தினி, சண்டேச அனுக்கிரக மூர்த்தி, கஜலக்ஷ்மி, ஆந்திரா வாரங்கல் ராமப்பா கோவில் ருத்ரகணிகை, ஸ்ரீவைகுண்டம் ராமர் ஆஞ்சநேயர், வீரபத்ரர், குறவன் குறத்தி, சாஞ்சி யோகினி, சிதறால் அம்பிகா யக்ஷி, வேனூர் பாகுபலி.

அகோபிலம் நரசிம்மம் வேட்டுவத்தி. ரதி மன்மதன். போல பாரதக் கோவில் மரபின் முக்கியமான இருபத்து எட்டு படிமைகளை அறிமுகம் செய்து கொள்வதற்கான முழுமையான அடிப்படைகளை வாசகர்களுக்கு அளிக்கிறது செந்தீ நடராஜன் அவர்கள் எழுதிய இந்த சிற்பம் தொன்மம் நூல்.

காவல்கோட்டம் நாவலின் சாகித்ய அகாடமி வெற்றிக்குப் பிறகான விற்பனை அரங்கில், தமிழினி வசந்தகுமார் அண்ணன் மிக உற்சாகமாக இருந்தார். நூல் வாங்கிய புதிய வாசகர்களில் சிலர், காவல்கோட்டம் நாவலின் முகப்பு அட்டைப்படமான நவகண்டம் செய்துகொள்ளும் புடைப்பு சிற்பத்தை சுட்டி ஆவலுடன் அது என்ன என விளக்க சொல்லி கேட்க, வசந்தகுமார் அண்ணன் ஒவ்வொரு முறையும் உற்சாகம் குன்றாமல், சலிக்காமல் அந்த சிற்பம் குறித்து விளக்கிக்கொண்டு இருந்தார். தீவிர வாசக தளத்தில் அவரது தமிழினி இதழின் அட்டைப்படங்கள் உருவாக்கிய உரையாடல்கள் மிக முக்கியமானவை [அதில் எத்தனை எழுத்தாக பதிவாகி இருக்கிறது என தெரியவில்லை.உங்கள் தளத்தில் நீங்கள் எழுதிய கட்டுரை தவிர்த்து]. தமிழினி இதழின் முகப்பை அலங்கரித்த நமது சிற்ப கலை மேன்மைகளில் தேர்வு செய்யப்பட்ட இருபத்து எட்டு படிமைகள் மீதான அறிமுகம் இந்த நூல்.

இந்த நூல் எனக்குள் பல கதவுகளை திறந்து வைத்தது. குறிப்பாக மங்கி துங்கி அருகமலையில் நான் கண்ட கிருஷ்ண பலராமர் படிமைகளுக்கு இந்த நூல் அளித்த பின்புலம். வ்ருஷ்ணி குலம் எகானம்சா எனும் அன்னை வழிபாட்டை அடிப்படையாக் கொண்ட தாய் வழி சமூகமாக இருக்கும் போது, கிருஷ்ண பலராமர் துணை தெய்வங்களாக இருந்து, தந்தை வழி சமூகமாக மாறுகையில் எவ்வாறு கிருஷ்ணர் மேலெழுந்து வந்தார், மருத நில இந்திரனுக்கு, முல்லை நில உபரி செல்வதை, முல்லை நில கிருஷ்ணன் தடுத்ததால் எழும் இந்திர கிருஷ்ண சமர், அதில் வெல்லும் கிருஷ்ணன் தொட்டு உருவாகி வந்த கோவர்தனன் படிமை என இப்படிமைகள் பின்னுள்ள சமூக வரலாற்று வளர்ச்சியின் சித்திரத்தை அளிக்கிறார் நடராஜன்.

செந்தீ நடராஜன் அவர்கள் மார்க்சியர். அவரது கருவியும், இந்துத்துவர் ஜடாயுவின் கருவியும் எந்த அளவு முரணே இன்றி, ஒரு படிமையைக் கொண்டு முன்னெடுக்கும் சமூக பண்பாட்டு ஆய்வில் இணைகிறது என்பதை இந்த நூலின் முதல் அத்யாயமான நரசிம்மன் வெட்டுவத்தி படிமைக்கும், இறுதி அத்யாயமான ஹிரண்ய வத நரசிம்மர் படிமைக்கும் நடராஜன் அளிக்கும் ஆய்வு பின்புலத்தையும், ஜடாயு அவர்களின் காலம்தோறும் நரசிங்கம் கட்டுரையையும் இணை வைத்து வாசித்தால் புரியும். [அரசியல்நோக்கு என்று வரும்போதே இந்த இரண்டுகருவிக்குள்ளும் அடிதடி பிறக்கிறது.]

எழுதப்போனால் ஒவ்வொரு அத்யாயம் குறித்துமே எழுதித் தள்ளிவிட வேண்டும் என ஆவல் பொங்குகிறது. பிரம்மா படிமத்தை முன்வைத்து, வேதத்தில் இருக்கும் பிரம்மம் என்ன? பிரம்மா எனும் படைப்பு கடவுள் யார்? கிமு எட்டு முதல் கிமு ஐந்து வரை உயரம் கண்ட பிரம்மா வழிபாடு, பின் வைணவத்தில் பத்மநாபன் எனும் தத்துவம் வழியே பிரம்மன் வைணவத்தில் கரைந்தது, ஐந்து தலை பிரம்மனின் தலைகளில் ஒன்றினை கிள்ளி, பைர சிவம் பிரம்மனை கர்வபங்கம் செய்யும் புராணம் வழியே சைவம் பிரம்மனின் மேலே கடந்து சென்றது, என இதில் பேசு பொருளாக இருக்கும் ஒவ்வொரு படிமைக்குமான அடிப்படையான பின்புலத்தை, செறிவும் தெளிவுமாக அறிமுகம் செய்கிறார் ஆசிரியர்.

உங்களது தெய்வங்கள், பேய்கள் தொடரில் அருகொலை தெய்வங்கள் எவ்வாறு நாட்டுப்புற தெய்வமாக மாறுகின்றன, அதில் சில எவ்வாறு பௌத்தத்தாலும் சமணத்தாலும் உள்ளிழுக்கப்பட்டு பலியேற்பு விடுத்து அருள் வழங்கும் தெய்வங்களாக ஆகின்றன என்ற சித்திரம் வரும், அந்த தொடரின் துணை நூல்களாக நான் வாசித்த நூல்களில் ஒன்று, வே.வெங்கடாசலம் அவர்கள் எழுதிய தமிழகத்தில் யக்ஷி வழிபாடு நூல். அந்த நூலில் வெங்கடாசலம் அம்பிகா யக்ஷியின் நாட்டார் பின்புலத்தை அதன் கதை கொண்டு விளக்குகிறார். அம்பிகாவின் கணவன் அம்பிகாவின் தெய்வாம்சம் கண்டு பயந்து அவளை விட்டு பிரிகிறான். துயர் தாளா அம்பிகா குழந்தைகளை விட்டு விட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். மனம் ஆறாத அம்பிகா ஆவியாக வந்து குழந்தைகளை அவ்வப்போது காண்கிறாள். மனம் திருந்தி அவள் கணவன் திரும்ப வருகிறான். மீண்டும் குடும்பம் துவங்க, ஒரு சூழலில் கணவன் அம்பிகாவை அணுக, அவள் பேய் உருவம் கொள்கிறாள். அம்பிகா தற்கொலை செய்து பேயாக அலைவது அறிந்து கணவனும் தற்கொலை செய்து கொள்கிறான். இந்த நாட்டுப்புற தெய்வம் சமணத்தால் உள்ளிழுக்கப்பட்டு நேமிநாதரின் பரிவார தேவதை அம்பிகா யக்ஷியாக மாறுகிறாள் அம்பிகா, அவளது சிம்ம வாகனமாக ஆகிறான் அவளது கணவன். இப்படி தொட்டு தொட்டு விரித்து செல்கிறது அந்த நூல். இந்த சிற்பம் தொன்மம் நூலில் கூடுதலாக நடராஜன் அம்பிகா யக்ஷி கதைக்கும், காரைக்கால் அம்மையார் கதைக்கும் உள்ள ஒற்றுமையை விளக்குகிறார் சித்ரால் அம்பிகா யக்ஷி குறித்த இந்த நூலின் அத்யாயத்தில்.

சரஸ்வதி படிமைகளிலேயே தனித்துவம் கொண்டது ஹளபேடு நடனமிடும் சரஸ்வதி. அவள் குறித்த அத்யாயம் பல சிந்தனை ஓட்டங்களை அளித்தது. நமது சமணப் பயணத்துக்குப் பின் நான் தேடி வாசித்த நூல்களில் ஒன்று, அருண வசந்தன் அவர்கள் எழுதிய ஜைனத் திருமேனிகள் நூல். அதில் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களின் பரிவார தேவைதைகளும் எந்தெந்த வாணிகளின் அம்சம் என்றொரு அத்யாயம் வருகிறது. இருபத்து நாலு வாணிகளுக்கும் மேலானவள், ரிஷபதேவரின் மூத்த மகளான பிராமி [எழுத்துக்கு சொந்தக்காரி] மற்றும் இளயமகளான சுந்தரி [எண்களுக்கு சொந்தக்காரி] [குறள் ஒரு சமண நூல் என்பதன் மற்றொரு ஆதாரம். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப..] இவர்களுக்கும் மூத்தவள் முதல்வள் வாக்தேவி. மகாஜீன வாணி. மகாஜீனவாணி அமர்ந்திருக்க சுற்றிலும் இருபத்து நான்கு வாணி இருக்கும் பளிங்கு சிலையின் படம் அதில் கண்டிருந்தது. கடலூர் அருகே பிற்படுத்தப்பட்டோர்கள் ஒரு சிறிய கோவிலை காட்டியுள்ளனர். அக்கோவின் சரஸ்வதி ஒரு கையில் பறையை ஏந்தி அலர்மேல் அமர்ந்திருக்கிறாள்.

…………………………………………………………………………………………………………………………….

கடந்த ஊட்டி வகுப்பில் சிற்பக்கலை மீதான அறிமுக வகுப்பின் பின்னான உரையாடலில், கலாக்ஷேத்ரா நண்பர் ஜெய்குமார் சொன்னார், நாம் பொதுவாக பல்லவர் பாணி, பாண்டியர் பாணி, நாயக்கர் பாணி, என்றே கோவில் கலையை புரிந்து கொள்கிறோம். இது எவ்வாறானது என்றால் கம்பன் இயற்றிய ராமாவதாரம் சோழர் பாணி என்பதை போன்றது.அது அவ்வாறு அல்ல, சிற்ப கலை பொதுவாக சாக்தம், தாந்த்ரீக உபாசகர்களின் கொடை என்றார். பிடரியில் அடி வாங்கியது போல இருந்தது. இந்த நூலில் சிற்ப ரத்னம், காசியம், பூக்காரணா, அம்சுமத்பேதா, சுப்ரபேதா, விஷ்ணு தர்மேந்திரா போன்ற வெவ்வேறு சிந்தனைப்பள்ளிகள் தந்த சிற்ப சாஸ்திர நூல்கள் குறித்த குறிப்பு வருகிறது. ஒரு மகிஷாசுர மர்த்தினி சிலையை பார்க்கையில் அது எந்த சிந்தனைப் பள்ளியின் சிற்ப நூலை அடிப்படையாக கொண்டது என்று சொல்லிவிட முடியும் என்பது எனது ஆச்சர்யத்தை அதிகரித்தது.

கீழ்வாலை பாறை ஓவியங்களை காணும் போது ஒன்று புரிந்தது. மீன்பிடி குடி, இருந்திருக்கிறது, [ஒருவன் குதிரையில் அமர்ந்திருக்க ஒருவன் அந்த குதிரையை வழி நடத்துகிறான்] குதிரை பழக்கும் குடி இருந்திருக்கிறது, மாட்டிலிருந்து மிருகத்தில் இருந்து தோலை உரித்து எடுக்கும் நுட்பமான கருவியை செய்யும் கருமார் குடி இருந்திருக்கிறது, வேட்டை குடி இருந்திருக்கிறது [ஒரு ஊகம்தான்], அத்தனையும் அந்த ஓவியத்தில் சக்கரம் எனும் [அல்லது சூரியன்] குலசின்னத்தின் கீழ் கூடி இருக்கிறது. ”நாங்கள் ” எனும் தன்னுணர்வு ”இங்கே இருக்கிறோம் ” என்ற இட கால வரலாற்று உணர்வு. எல்லாம் அங்கே துவங்கி விட்டது. இதன் விரிவாக்கமே நெல்லையப்பர் கோவில் வரை நீள்கிறது. பரதவர்களும் குன்றக் குறவர் குடிகளும், நாம் என்று இணைந்ததன் கலை பண்பாட்டு சாட்சியமே அக்கோவிலின் மேன்மைமிகு குறவன் சிலையும், முத்துக் குமரன் படிமமும்.

இந்த நூல் அந்த கலைப்பண்பாட்டு பொக்கிஷங்கள் வழியே பயணிக்கிறது. நூலின் துவக்கத்திலேயே இந்த படிமைகளை முற்ற முழு கலை அனுபவமாக உள்வாங்க தேவையான அடிப்படைகளை நடராஜன் அளித்து விடுகிறார். மகுடங்களின் வகைமாதிரிகள், அபய வரத போன்ற கரங்களின் முத்திரைகள், கரங்களின் அத்தனையிலும் அலங்கரிக்கும் ஆயுதங்கள், நின்று, இருந்து, கிடக்கும் கோலங்களின் இலக்கணங்கள், அணிகலன்கள், ஆடைகள் என ஒரு சிற்பத்தை கேசாதிபாதம் உள்வாங்க தேவையான அனைத்தும் நூலின் துவக்கத்திலேயே கோட்டு சித்திரமாக இடம்பெறுகிறது.

பின்னர் வேதம், வேத மறுப்பு பண்பாடு வழியே, குல வழிபாடுகள், மதங்கள் உருவாகிவந்த நாட்டார் கதைகள், புராணக்கதைகள், அதன் வேறுபாட்டு வகைமைகள் வழியே, ஒரு தொன்மம் காலாகாலமும் உயிர்கொண்டு வளர்ந்து வரும் சித்திரத்தை [சமுக பண்பாட்டு ஆய்வு வழியே] சிகரமுகமாக அதில் விளங்கும் சிற்பங்கள் [இருபத்தி எட்டு கருப்பு வெள்ளை புகைப்படங்கள்இடம்பெறுகிறது] எனும் கலை செல்வங்களை அதன் முழுமையான பின்புலத்துடன் அறிமுகம் செய்கிறார் நடராஜன். ஒரு தொன்மம் சமூக ஆழ்மனத்தில் அகத்தில் என்னவாக உரு திரண்டு, புறத்தில் எவ்வாறு வளர்ந்து நிற்கிறது என்பதை அந்தரங்கமாக உணரசெய்யும் கொற்றவை நாவல் இந்த நூலில் வாசகருக்கு சுட்டப்படுகிறது. வாசித்து வளரும் அனைவருக்கும் என்றென்றும் மேலதிக வாசிப்புக்கு துணைநிற்கும் மூலநூல்கள் பட்டியல் நூலின் இறுதியில் இடம்பெறுகிறது. கிட்டத்தட்ட முழுமையான கலை சொற்களின் பட்டியல் கொண்டு நூல் நிறைகிறது.

இந்த நூலில் இலங்கும் நடராஜரை அறிமுகம் செய்துகொள்ளுவது வழியே, சிற்பக்கலையின் ரசிகனாக உள்ளே நுழையும் ஒரு கலா ரசிகன் வெகு நிச்சயமாக உணர்கொம்புகள் கட்டுரையில் வரும் நடராஜ தத்துவத்துக்கு விரைவாகவே வந்து சேர்ந்து விடுவான்.

ஆம் இன்றைய உணர்கொம்புகள் பதிவு அளித்த உதேகத்தில்தான் அமர்ந்து இந்த பதிவை எழுதினேன். இவ்வாண்டின் மிக முக்கிய நூல் வரவுகளில் தனித்துவமான ஒன்று செந்தீ நடராஜன் அவர்கள் எழுதிய இந்த சிற்பம் தொன்மம் நூல்.

 

 குடவாயில் பாலசுப்ரமணியம் 

முந்தைய கட்டுரைநத்தையின் பாதை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇரு நிகழ்ச்சிகள்