இனங்களும் மரபணுவும்

gene

அன்பின் ஜெமோ,

வணக்கம்.நான் தங்களின் படைப்புகளை கடந்த எட்டு வருடங்களாக படித்து வருகிறேன்.விஷ்ணுபுரத்தில் உள்ள தத்துவ உரையாடல்கள்தான் என்னை தூய கணிதத்தில் உள்ள dialectic ஐ அனுபவமாக உள்வாங்கி கொள்ள உதவின.

நேற்றைய The hindu வில் இந்தியாவில் ஆரியர் குடியேற்றம் என்பது கருதுகோள் அல்ல, உண்மை என்பதற்கான genome தரவுகள் கண்டறியப்பட்டுள்ளது என்றும் மேலும் இந்தியா என்பது குடியேற்றங்களின் நிலபரப்பாக இருந்து வந்திருக்கிறது. மேலும்,திராவிடம் என்பது கற்பனையான கருதுகோள் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். தங்கள் கருத்தை அறிய.விழைகிறேன்.

ஜானகிராமன்

***

அன்புள்ள ஜானகிராமன்,

இவ்விஷயத்தில் நான் ஒரு பொதுவாசகன் மட்டுமே. நிபுணனாக என் கருத்துக்களைச் சொல்லமுடியாது. ஆனால் மிக எளிய பொதுவாசகனாகவே ஒன்றைச் சொல்வேன். எவ்வகையிலும் நம்பகத்தன்மையை உருவாக்காத, ஆய்வுகளை இதழியல் நோக்கில் எளிமைப்படுத்தி திரித்து எழுதிய ஒரு கட்டுரை இது. இவ்வகையில் நான் வாசிக்கும் முதல்கட்டுரையும் அல்ல.

இந்தியவியலை ஆராயும் ஒருதரப்பினருக்கு இந்தியாவையே அழித்தாலும்கூட நிறுவியாகவேண்டிய கொள்கையாக ஆரியப்படையெடுப்பு இருக்கிறது. அதற்காக எந்த எல்லைக்கும் செல்லமுடியும் என நினைக்கிறார்கள். அதன்மேல் நிறைய கட்டி எழுப்பிவிட்டார்கள்

இத்தகைய சில பிடிவாதங்களை மேலை ஆய்வுலகில் காணலாம். உதாரணமாக பரிணாமவாதத்தை கிறித்தவத்தின் படைப்புக்கொள்கைகளையும் உள்ளடக்கியதாக விளக்கும்பொருட்டு அங்கே மேற்கொள்ளப்பட்டுவரும் Creationism என்னும் கருத்தியல் கழைக்கூத்தாட்டம். அறிவியலை எப்படியெல்லாம் அதன்பொருட்டு வளைக்கமுடியும், எப்படிப்பட்ட அறிவியல்மேதைகளை எல்லாம் அதைச்சார்ந்து பேசவைக்கமுடியும் என்பது பிரமிப்பூட்டக்கூடியது.

எந்த ஒரு பொதுப்புத்திக்கும் தெரியும் ஒரு விஷயம் உண்டு. மரபணு சார்ந்த ஆய்வுகள் எவையும் ’சமீப’ கால வரலாற்றை புறவயமாக நிறுவ உதவக்கூடியவை அல்ல. மரபணுச்சோதனைகள் மானுட இனத்தின் கலப்பு, பரவல் பற்றிய மிகமிகப் பொத்தாம்பொதுவான சித்திரத்தையே அளிக்க முடியும். பல்லாயிரம்காலத்து உயிரினவிரிவாக்கத்தை மட்டுமே அதைக்கொண்டு சித்தரிக்கமுடியும். ஒப்புநோக்க மானுட வரலாற்றில் மிகச்சமீபத்தைய நிகழ்வான ’இன’ கொள்கையை அல்ல.

அவ்வப்போது இந்த வகையான ‘உயிரியல்’ ‘மரபியல்’ ஆய்வுமுடிவுகள் ஊடகங்களில் தென்படுவதும் ஆறுமாதம் கழித்து அபத்தமானவை என்று பேச்சுவாங்குவதும் இங்கே நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. என்ன சிக்கல் என்றால் இவை அபத்தமானவை என்பது அறிஞர் நடுவே நிறுவப்பட்டாலும் வாட்ஸப் – மேடையுரை வழியாக மெய்ஞானம் புழங்கிவரும் தமிழ்ச் சூழலில் அதை மறுக்க எவராலும் இயலாது. திரும்பத்திரும்ப நம் காதுக்கே வந்துகொண்டிருக்கும்.

இந்தியாவில் மட்டும் அல்ல உலகமெங்குமே கூட எப்படியும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மானுட இனங்களின் பரவலும் கலப்பும் தொடங்கிவிட்டன. அதை ஜாரேட் டைமண்ட் [தமிழிலும் அவரது துப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு – ஜாரேட் டயமண்ட் : வெளிவந்துள்ளது. தமிழாக்கம் பிரவாகன்] முதற்கொண்டு மானுடவியல்- புவியியல் அறிஞர்கள் விரிவாக பேசி நிறுவியிருக்கிறார்கள். இன்றைக்கு தோராயமாக இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறுதிப்பனிக்காலத்தில் வாழ்வதற்குரிய நிலங்களைத் தேடி மானுட இனம் பல்லாயிரம் கிலோமீட்டர்கள் பயணம்செய்து புதியநிலங்களைக் கண்டடைந்துள்ளது

இந்தியப்பெருநிலம் பூமத்தியரேகையை ஒட்டியது. பலவகையான இயற்கைச் சூழல் கொண்டது. ஆகவே ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு பல மக்களினங்கள் குடியேறியிருக்கலாம். அவர்கள் கலந்து பரவியிருக்கலாம். மகாபாரதமே பலவகையான அயலவர்களின் வருகை பற்றிச் சொல்கிறது. ஹூணர்கள், கிரேக்கர்கள், மங்கோலியர், துருக்கியர் என இந்தியாவுக்கு அயலவர் வந்துகொண்டே இருந்திருக்கிறார்கள். இந்தியர்களின் மரபணுக்களில் அக்கலவையின் சித்திரம் இருக்கும் என்பது மிக இயல்பானதே. அதில் இன்ன ஆண்டுகள் முதல் இன்ன ஆண்டுகள் வரை இன்ன இனத்தினர் வந்தனர் என மரபணுச்சோதனையில் நிரூபிக்கிறார்களாமா?

அந்த மானுடப் பரவலும் கலவையும் நிகழத்தொடங்கி மேலும் பற்பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தபின்னரே நாம் இன்றுபேசும் மானுடப்பண்பாடு ஆரம்பிக்கிறது. நாம் பேசும் மானுடப்பண்பாடு என்பதே எப்படி இழுத்தாலும் ஏழாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் செல்லாதது. அதன்பின்னரே மொழிகள் பிறக்கின்றன. குலங்களும் குடிகளும் உருவாகின்றன.இன அடையாளங்கள் கண்டடையப்படுகின்றன

இங்கே பேசப்படும் ஆரியதிராவிட இனப்பிரிவினையும், பண்பாட்டுப் படையெடுப்புகளும் அதற்குப்பின்னர் நிகழ்ந்தவை என்றுதான் சொல்லப்படுகின்றன. திராவிடநாகரீகம் இந்த மண்ணில் வேரூன்றியிருந்தது என்றும் ஆரியர் வந்து அதை வென்றார்கள் என்றும் சொல்லப்படும் ஊகங்களுக்கும் மானுடப்பரிணாமத்தின் தொடக்க காலத்தில் நிகழ்ந்த இனப்பரவலுக்கும் என்ன உறவு இருக்கமுடியும்?

ஆரியம்-திராவிடம் என்னும் பிரிவினை இந்தியாவின் தொன்மையான சில நூல்களில் இருந்த நிலம்சார்ந்த ஒரு பகுப்பு மட்டுமே. சிற்பநூல்களின்படி திராவிடம் என்பது கிருஷ்ணைக்கு கீழே காஞ்சிவரையிலான நிலம். அந்தப்பிரிவினையை இந்திய மொழிகளைப் பிரித்து ஆராய எல்லிஸ், கால்டுவெல் போன்ற ஆங்கிலேய ஆய்வாளர்கள் பயன்படுத்தினர். அதை சில ஆய்வாளர்கள் உடனடியாக இரு இனங்களாக உருவகித்துக்கொண்டனர்.எந்த விவாதமும் நிகழவில்லை. எந்த ஆதாரபூர்வமான தரவுகளும் பரிசீலிக்கப்படவில்லை.

விவேகானந்தர் முதல் அம்பேத்கர் வரை அத்தனை இந்திய சிந்தனையாளர்களாலும் அந்த ஆரிய- திராவிடக் கோட்பாடு நிராகரிக்கப்பட்டாலும் ஐரோப்பிய இந்தியவியலாளர்கள் அதை நம்பி, எழுதி பரப்பி ஒரு நிரூபிக்கப்பட்ட கொள்கையாக நிறுவிவிட்டுச் சென்றனர். இன்று அது அடிப்படையற்ற ஊகம் என்பது ஆய்வாளர் மத்தியில் பெரும்பாலும் கருதப்படுகிறது. அதை எதிர்க்கும் கடைசி மோசடி முயற்சி இம்மாதிரியான ‘அறிவியல்’ ஊகங்கள். இதற்கெல்லாம் ’அடச்சீ’ என்பதற்கு அப்பால் எதிர்வினையாற்றுவதே தவறு.

இரண்டு கருதுகோள்கள் மிக வன்மையாக நிராகரிக்கப்படவேண்டியவை. ஒன்று, இந்தியபெருநிலத்தில் ‘தூய’ இனம் என ஒன்று இருக்க முடியாது. ஆரிய இனமும் சரி, திராவிட இனமும் சரி. ஏனென்றால் கற்கருவிகளை கையாளத் தொடங்கிய காலத்திலேயே இங்கே இனக்கலப்பு நிகழத் தொடங்கிவிட்டது.இங்குள்ள பண்பாடு அந்த கலவையினத்தால் உருவாக்கப்பட்டதே.இனமோ சாதியோ குருதித்தூய்மை என்பது நம்மவர் உருவகித்துக்கொள்ளும் ஒரு மாயை.

இரண்டு, இங்கு ஐரோப்பியர்களால் முன்வைக்கப்பட்ட இரண்டு இனங்களின் மோதல் என்னும் கொள்கை மிக மிக பிழையானது. இங்கு தூய இனம் என ஏதும் இல்லை. மேலோங்கியிருக்கும் உடற்கூறுகளைக் கொண்டு நோக்கினால்கூட குறைந்தது நான்கு வெவ்வேறு இனங்கள் இருக்கிறார்கள். ஆகவே இங்குள்ள பண்பாடு இனமோதலால் உருவாகிவந்தது என்பது நம் மீது பிறர் சுமத்தும் இழிவான வரலாறு. மோதல்கள் இல்லாமல் பண்பாடு இல்லை. ஆனால் மிக விரிவான உரையாடல், உள்ளடக்கிக்கொள்ளுதல் மூலம் உருவான பண்பாடு இது

*

நீங்கள் இடதுசாரி என்றால் சோவியத் ருஷ்யாவின் ராதுகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘மானுட இனங்கள்’ என்னும் முக்கியமான நூலை வாசிக்கலாம். தமிழில் வெளிவந்துள்ளது.

ஐரோப்பாவின் அறிவுத்துறையில் பதினேழாம் நூற்றாண்டு முதல் இனவாதக் கொள்கைகள் எப்படி போலி அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு அரசியல்ரீதியாக பரப்பப் பட்டன, எப்படி பல நாடுகளின் வரலாறுகளே அவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டன , இனமோதல்கள் உருவாக்கப்பட்டு பேரழிவுகள் நிகழ்ந்தன, அவற்றின் அடிப்படையில் சில தரப்பினரால் அதிகாரம் கையகப்படுத்தப்பட்டது என்பதை விரிவாக பேசுகிறது அந்நூல்.

தோலின் நிறம். கண்ணின் நிறம், மூக்கின் அளவு அளவு என வெவ்வேறு உயிரியல் அடிப்படைகள் அவ்வாறு மானுட இனங்களை பகுப்பதற்கு செயற்கையாக ஆய்வாளர்களால் கட்டமைக்கப்பட்டன. மண்டை ஓட்டியல் என்னும் போலி அறிவியல்துறை நூறாண்டுகளுக்கும் மேல் பலநூறு அறிவியலறிஞர்களின் ஆதரவுடன் செயல்பட்டது. அவையனைத்தும் மிகப்போலியானவை என்பதை அந்நூல் ஆணித்தரமாக நிறுவுகிறது.

நூலின் இறுதியில் மானுட இனங்களைப்பற்றிய நூறு அறிவியலாளர்களின் பொது அறிக்கை ஒன்றும் உள்ளது.ஒரு சிந்திக்கும் மனிதன் மானசீகமாக கையொப்பமிடவேண்டிய ஆவணம் அது.

இன்று இடதுசாரிகள் கூட இனவாதம் பேசும் கீழ்மையைக் காண்கிறோம். ஒருகாலத்தில் சோவியத் ருஷ்ய நூல்களுக்குள் அவர்கள் சிந்தனையை தேக்கி நிறுத்தியிருந்ததை அறிவியக்கத்தவர் விமர்சித்தனர். இன்று அவற்றை வாசிப்பதை நிறுத்தி நாலாந்தர மேடைப்பேச்சாளர்களை மட்டுமே அறிந்தவர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள் நம் இடதுசாரிகள் . ‘அய்யா சாமி, குறைந்தது ராதுகா பிரசுர நூல்களையாவது வாசிங்க’ என்று மன்றாடவேண்டியிருக்கிறது

நீங்கள் வலதுசாரி என்றால் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய இந்த எதிர்வினையை வாசிக்கலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைஅந்திமம் -கடலூர் சீனு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 34