‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 31

30. முதற்களம்

flower“தாங்கள் அறிந்திருப்பீர்கள், நெடுநாட்களுக்கு முன் இங்கு நளமாமன்னருக்கும் அவரது தம்பிக்குமான பூசல் ஓர் உணவுக்களத்தில்தான் வெடித்தது. எந்தப் பூசலும் பின்திரும்ப முடியாத ஒரு புள்ளியில் உச்சம்கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்லும். அப்புள்ளி ஒரு சொல்லாக, ஒரு செயலாக இருக்கலாம். ஆனால் ஒரு துளிக் குருதி முற்றிலும் வேறானது. குருதி ஒருபோதும் நினைவிலிருந்து அகல்வதில்லை” என்றார் பூர்ணர்.

“குருதியிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று மூத்தவர் சொல்வது அதனால்தான். அது நம் உடலில் ஓடலாம். ஆனால் அது நம்முடையது அல்ல. அது தெய்வங்களால் நேரடியாக கையாளப்படுவது. ஆகவேதான் குருதி தெய்வங்களுக்குரிய பலியுணவு எனப்படுகிறது. சமையலில் முற்றிலும் குருதிநீக்கம் செய்யப்பட்டு நன்கு கழுவிய உணவையே சமைக்கவேண்டும் என நளபாகநூல் சொல்கிறது. குருதியை பொரித்து உண்ணும் வழக்கம் முன்பு நிஷாதர்களிடமிருந்தது. அதை நளமாமன்னர் முற்றிலும் தடைசெய்தார். குருதியை உண்பவன் அவ்விலங்கின் ஆன்மாவில் குடிகொள்ளும் தெய்வங்களை அறைகூவுகிறான் என்பது அவரது சொல்” என்றார் சங்கதர்.

“அன்று என்ன நிகழ்ந்தது என்பது வரலாறு. ஆகவே அது முழுதுணரமுடியாதபடி மிகுதியாக சொல்லப்பட்டுவிட்டது. அத்தருணத்தை வெவ்வேறு வகையில் எழுதியிருக்கிறார்கள் கவிஞர்கள். சூதர்கள் பாடியிருக்கிறார்கள். தங்கள் குலச்சார்பின்படி மூத்தோர் விளக்கியிருக்கிறார்கள்” என்றார் பூர்ணர். பீமன் “கதைகளென சில கேட்டிருக்கிறேன்” என்றான். பூர்ணர் “நிகழ்ந்தவற்றை இன்று நம்மைக்கொண்டு நாம் உணரலாம். நமக்காக நாம் புனைந்துகொள்ளலாம்” என்று தொடர்ந்தார்.

மூத்தவனுக்கும் இளையவனுக்கும் இடையே முன்னரே மோதலும் பிளவும் இருந்து வந்தது. இளையவன் நிஷாதரின் குலதெய்வமான கலியை முதன்மை தெய்வமாக முன்னெடுக்கலானான். மூத்தவன் இந்திரனை தெய்வமென நாட்டியவன். அவன் துணைவி இந்திர வழிபாட்டை தலைமுறைமரபெனக் கொண்ட ஷத்ரியகுடிப்பெண். ஒருகுடை நாட்டி பாரதத்தை ஆள அமர்ந்த சக்ரவர்த்தினி அவள். நிஷதகுடிகளில் பெரும்பாலானவர்கள் தங்கள் குடி வாழ வந்த மூதாதை வடிவமென நளனை எண்ணியவர்களே. அவன் விண்ணுலகு சென்று வென்று வந்த திருமகளென்று தமயந்தியை வழிபட்டவர்களும்கூட. ஆனால் அவர்கள் உள்ளத்தின் ஆழத்தில் கலி முதல் தெய்வமென வாழ்ந்தது. அவர்களின் தொல்குடி மூதாதை வேனனிடமிருந்து அந்த நம்பிக்கை தொடங்குகிறது.

கலி வழிபாட்டை முன்னெடுத்ததுமே குடிகளில் பெரும்பாலானவர்கள் இளவரசன் புஷ்கரனின் ஆதரவாளராக மாறிவிட்டிருந்தனர். தமயந்தி கலி வழிபாட்டுக்கு வந்தது அவர்களின் உள்ளங்களை சற்றே குளிரச்செய்தது. ஆனால் படைகொண்டுசென்றபின் நகர் மீண்ட நளன் கலி வழிபாட்டுக்கு ஆலயத்திற்கு வரவில்லை. அச்செய்தியை புஷ்கரனின் அணுக்கர் குடிகள் நடுவே வாய்ச்செவி வழக்கென பரப்பினர். நளனையும் தமயந்தியையும் வணங்கிய மக்களின் உள்ளம் எளிதில் மாறவில்லை. ஆனால் அவர்கள் அதை உள்ளொதுக்கியமையாலேயே உள்ளிருளில் வாழ்ந்த தெய்வங்கள் அவற்றை பற்றிக்கொண்டன. அவ்வெண்ணங்களை அவியென உண்டு அவை அங்கே வளர்ந்து பேருரு கொண்டன.

நாள்தோறும் ஐயமும் கசப்பும் வளர்ந்தாலும் அவர்கள் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. உண்மையில் தங்களுக்கேகூட தங்கள் உள்ளம் மாறிவிட்டதை அவர்கள் காட்டவில்லை. பகலில் அரசிக்கு அணுக்கமும் பணிவும் கொண்டவர்களாக மெய்யாகவே திகழ்ந்தனர். இரவின் இருண்ட தனிமையில் கலியின் குடிகளென மாறினர். புஷ்கரன் கலிதேவனுக்கென நாள்பூசனைகளை தொடங்கினான். நிஷத குடிகள் ஒவ்வொன்றிலுமிருந்தும் பூசகர்களை கொண்டுவந்து அங்கு புலரி முதல் நள்ளிரவு வரை பூசனைகளுக்கு ஒருங்கு செய்தான். நள்ளிரவுக்குப்பின் கருக்கிருட்டு வரை அபிசாரபூசனைகள் அங்கே நிகழ்ந்தன. கூகைக்குழறல் என அங்கே கைமுழவு ஒலிப்பதை பந்தவெளிச்சம் நீண்டு சுழல்வதை நகர்மக்கள் அறிந்தனர்.

முன்பெல்லாம் பிறர் அறியாமல் கலியின் ஆலயத்திற்கு சென்று வருவதே கிரிப்பிரஸ்த குடிகளின் வழக்கமாக இருந்தது. அஞ்சியவர்கள் அனைவரும் தங்கள் எண்ணிக்கை மிகுந்ததும் முகம் தெரிய செல்லலானார்கள். பின்னர் அது ஒரு மீறலாக, ஆண்மையாக மாறியது. இறுதியிலொரு களியாட்டாக நிலைகொண்டது. முப்பொழுதும் கலியின் ஆலயம் தேன்கூடுபோல நிஷாதர்களால் மொய்க்கப்பட்டிருந்தது. இந்திரன் ஆலயத்திற்கு செல்பவர் முன்னரே மிகச் சிலர்தான். செல்பவரை பிறர் களியாடத் தொடங்கியதும் அவர்களும் குறைந்தனர். அரச காவலரும் அரண்மனை மகளிரும் அன்றி மலையேறி எவரும் அங்கு செல்லாமலாயினர். விதர்ப்பத்திலிருந்து வந்த ஷத்ரியர்கள் மட்டும் அங்கு சென்று வணங்கலாயினர்.

படைகளில் இருந்த விதர்ப்ப வீரர்களின் எண்ணிக்கை ஒப்புநோக்க சிறிது. அவர்களுக்கே படைநடத்தும் பயிற்சி இருந்தது. அவர்களால் படையென நடத்தப்படுவது நிஷாதர்களுக்கு மேலும் உளவிலக்கை அளித்தது. ஓரிரு மாதங்களுக்குள் நிஷாதர்கள் இந்திரனை வெறுக்கலானார்கள். இல்லங்கள் அனைத்திலுமிருந்து இந்திர வழிபாட்டின் அடையாளங்களான மஞ்சள்பட்டு சுற்றிய வெண்கலச்செம்பும் மயில்தோகையும் அகன்றன. பிளவுகள் உருவாகி வளர்வதுபோல இப்புவியில் வியப்பூட்டுவது பிறிதொன்றில்லை.

அந்நாளில் இளவரசன் புஷ்கரனின் திருமணப் பேச்சுக்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. அவனுக்கு பாரதவர்ஷத்தின் முதன்மை ஷத்ரிய குலங்களில் எதிலிருந்தாவது இளவரசியை கொள்ளவேண்டுமென்று பேரரசி தமயந்தி விரும்பினாள். ஆரியவர்த்தத்தின் அரசகுடிகள் அனைத்திற்கும் தூதர்கள் ஓலைகளுடன் சென்றனர். பல ஷத்ரிய குடிகளுக்கும் பேரரசியின் உறவில் மணம்கொள்ள உள்விழைவு இருந்தது. இந்திரபுரியுடனான மணத்தொடர்பு அவர்களை பிற இணைமன்னர்களுக்குமேல் வல்லமை கொண்டவர்களாக ஆக்கும் என்று அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் ஒருவர் அவ்வாறு மணம்கொள்ள முன்வந்தால் பிறர் அவர்களை இழிவுசெய்து ஒதுக்கி தங்கள் சினத்தை காட்டுவார்கள் என்று அனைவரும் அறிந்திருந்தனர்.

உண்மையில் அவ்வாறு மணம்கொண்டு படையாற்றல் பெற்ற ஓர் அரசரை எதிர்கொள்ளும் சிறந்த வழியென்பது அவரை இழிசினன் என அறிவித்து அதனடிப்படையில் பிற அரசர்கள் ஒருங்குதிரள்வதே ஆகும். ஷத்ரியர் எப்போதும் அம்முறையையே கைக்கொள்கிறார்கள். ஷத்ரிய அரசர்களில் எவரேனும் ஒருவர் அம்மணத்தூதை ஒப்புக்கொண்டு அடுத்த கட்ட பேச்சுக்கு முன்வருவாரென்றால் உலுக்கப்பட்ட கிளையிலிருந்து கனிகள் உதிர்வதுபோல பிற அனைவருமே தூதுஏற்பு செய்துவிடுவார்கள் என்று தமயந்தி அறிந்திருந்தாள். ஆகவே அந்த முதல் நகர்வுக்காக அவள் காத்திருந்தாள். துலாவின் இரு தட்டுகளும் அசைவற்று காலமில்லாது நின்றிருந்தன.

அந்நாளில் நிஷாதகுலத்தின் ஒற்றன் ஒருவன் கலிங்கத்திலிருந்து வந்து புஷ்கரனை சந்தித்தான். கலிங்க அரசர் பானுதேவரின் மகள் மாலினிதேவி புஷ்கரனை தன் உளத்துணைவனாக எண்ணி அவன் ஓவியத்திற்கு மாலையிட்டிருப்பதாக அவன் சொன்னான். இளவரசி கொடுத்தனுப்பிய கணையாழியையும் திருமுகத்தையும் அளித்தான். பானுதேவர் தாம்ரலிப்தியை ஆண்ட அர்க்கதேவரின் இளையவர். அர்க்கதேவரை வென்றபின் கலிங்கத்தை நளன் இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை பானுதேவருக்கு அளித்திருந்தான். தண்டபுரத்தை தலைநகராகக்கொண்டு அவர் ஆண்டுவந்தார்.

உண்மையில் அது ஓர் அரசியல் சூழ்ச்சி. மாலினிதேவி அச்செய்தியை அனுப்பவில்லை. மகதனும் மாளவனும் கூர்ஜரனும் சேர்ந்து இயற்றியது அது. பிறிதொரு தருணத்தில் என்றால் ஷத்ரிய இளவரசி ஒருத்தி தன்னை அவ்வாறு தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்னும் செய்தியை புஷ்கரன் நம்பியிருக்கமாட்டான். ஆனால் அப்போது அவன் நளனுக்கு எதிராக எழுந்து நின்றிருந்தான். எண்ணி எண்ணி தன்னை பெருக்கிக்கொண்டு மெல்ல அவ்வெண்ணத்தை தானே நம்பத் தொடங்கியிருந்தான். அவ்வண்ணமொரு வாய்ப்பு வராதா என்ற ஏக்கம் அவனுக்குள் எங்கோ இருந்தது. விழைந்த ஒன்று எதிர்வரும்போது அதன்மேல் ஐயம் கொள்ள மானுடரால் இயல்வதில்லை.

மேலும் கலிங்கம் நிஷத நாட்டுக்கு கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்தது. அதன் வணிகம் முழுக்க நிஷாதர்களின் நிலங்களில் இருந்து கோதாவரியினூடாக வரும் பொருட்களால் ஆனது. கீழ்நிலங்கள் புஷ்கரனின் ஆளுகையில் இருந்தன. எனவே அவ்வுறவு எவ்வகையிலும் கலிங்கத்துக்கு நன்றே என்று அரசியல் அறிந்த எவரும் உரைக்கும் நிலை. விரைவில் அவளை மணம்கொள்ள வருவதாக மாலினிதேவிக்கு செய்தி அனுப்பினான் புஷ்கரன். உடன் தன் குறுவாள் ஒன்றையும் கன்யாசுல்கமென கொடுத்தனுப்பினான்.

செய்தி வந்ததை அவன் தன் குடியின் மூத்தாரிடம் மட்டும்தான் சொன்னான். அவர்கள் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். எவரும் ஐயம் கொள்ளவில்லை. ஒவ்வொரு நாளும் காளகக்குடியின் ஆற்றல் பெருகுவதாக அவர்கள் எண்ணிக்கொண்டிருந்தனர். கலியின் பூசகர்கள் அது கலியின் ஆணை என நாளும் நற்சொல் உரைத்துக்கொண்டிருந்தார்கள். அந்நம்பிக்கையை அச்செய்தி உறுதி செய்தது. அத்தகைய முதன்மை அரசமுடிவை அரசியிடம் கேளாது, அவைமுன் வைக்காது புஷ்கரன் எடுத்திருக்கக் கூடாது. அதை அவனோ அவன் குடியோ உணரவில்லை. அவர்களின் உள்ளம் எதிர்நிலையால் திரிபுகொண்டிருந்தது.

மறுதூதனுப்பி அதற்கு மாலினிதேவி அனுப்பிய மாற்றோலையையும் அவளுடைய காதணியின் ஒரு மணியையும் பெற்ற பின்னரே  அச்செய்தியை அவனே இந்திரபுரியின் பேரவையில் எழுந்து தமயந்தியிடம் சொன்னான். உண்மையில் அவன் அரசியையோ தன் மூத்தவனையோ தனியறையில் கண்டு அதை சொல்லியிருக்கவேண்டும். அல்லது அமைச்சர் கருணாகரரைக் கண்டு உரைத்திருக்கலாம். பேரவையில் சபரர்களும் காளகர்களும் பிற குடித்தலைவர்களும் பெருவணிகர்களும் அந்தணர்களும் நிறைந்திருந்தனர். மாமன்னன் நளன் காட்டுப்புரவிக்குட்டிகளை பிடிக்கும்பொருட்டு சென்றிருந்தான். அவை நிகழ்வுகள் முடிந்து தமயந்தி எழுந்து செல்லவிருந்த தருணம் அது. கைதூக்கி எழுந்த புஷ்கரன் “அவைக்கும் அரசிக்கும் ஒரு நற்செய்தி!” என்றான்.

அவ்வாறு எழுந்தமையே முறைமீறல். அதிலிருந்த ஆணவம் உறுத்துவது. தமயந்தியின் இடதுவிழி சற்று சுருங்கியது. ஆனால் புன்னகையுடன் “நற்செய்தி கேட்க விழைவுடன் உள்ளேன், இளவரசே” என்றாள். காளகக்குடிகளின் தலைவரான சீர்ஷர் “நம் குடிக்கு புதிய அரசி ஒருவர் வரவிருக்கிறார்” என்றார். தமயந்தியின் விழிகள் சென்று கருணாகரரைத் தொட்டு மீண்டன. “சொல்க!” என்றாள். புஷ்கரன் நிகழ்ந்ததை மிகமிகச் செயற்கையான அணிச்சொற்களால் சுழற்றிச் சுழற்றிச் சொல்லி முடிக்க நெடுநேரமாயிற்று. அதற்குள் காளகக்குடிகள் எழுந்து கைக்கோல்களைத் தூக்கி வாழ்த்தொலி எழுப்பலாயினர். பிறர் என்ன என்றறியாமல் நோக்கி அமர்ந்திருந்தனர்.

அதைக் கேட்டதுமே அது ஓர் அரசியல் சூழ்ச்சி என்று தமயந்தி அறிந்துகொண்டாள். ஒற்றர் மூலம் ஓரிரு நாட்களிலேயே அதை அவளால் உறுதி செய்துகொள்ள முடியும் என்றும் உணர்ந்திருந்தாள். ஆனால் அந்த அவையில் அதைச் சொல்வது புஷ்கரனை இழிவுபடுத்துவதாகும் என்று தோன்றியது அவளுக்கு. கலிங்கத்து இளவரசி ஒருத்தி அவனை விரும்புவது நிகழ வாய்ப்பில்லை என்பதுபோல அது பொருள்கொள்ளப்படலாம். அவனுக்கு அத்தகுதியில்லை என்று அவன் குடியில் சிலரால் திரிபொருள் கொள்ளப்படவும்கூடும். அவள் அதை அவையிலிருந்து எவ்வகையிலேனும் வெளியே கொண்டுசெல்ல விழைந்தாள். அப்போது அதை சிடுக்கில்லாது முடித்துவைக்க வேண்டுமென்று வழிதேடினாள். ஆனால் புஷ்கரன் பேசிக்கொண்டே சென்றான்.

புஷ்கரன் உரைத்த சொற்களிலேயே பல உள்மடிப்புகள் இருந்தன. அரசியை வணங்கி பலவகையிலும் முகமன் கூறிய பின்னர் “பேரரசிக்கு வணக்கம். பேரரசி அறிந்த கதை ஒன்றை நினைவுறுத்த விரும்புகிறேன். நெடுங்காலத்துக்கு முன் விதர்ப்ப நாட்டின் ஷத்ரிய இளவரசி பெருந்திறல் வீரனாகிய நிஷத அரசனை விரும்பினார். அவர் புரவித்திறனையும் மேனியழகையும் கண்டு தன்னை இழந்தார். அன்னப்பறவை ஒன்றை தன் தூதென்றனுப்பி தன்னை ஏற்குமாறு கோரினார். இன்று காவியம் கற்ற அனைவரும் அறிந்த கதை அது. நிஷதஅரசனின் இளையோனுக்கும் அதுவே நிகழ்கிறது” என்றான். அதற்குள் காளகர்கள் கூவி ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். சீர்ஷர் எழுந்து நின்று கைகளைத் தூக்கி மெல்ல நடனமிட்டபடி “காளகக்குடியின் வெற்றி! நிஷதர்களின் வெற்றி!” என்று கூவினார்.

அவர்களை முகமலர்ச்சியுடன் கைகாட்டி அமர்த்திவிட்டு “இம்முறை கலிங்கத்திலிருந்து அச்செய்தி வந்துள்ளது. இரு கால்கள் எழுந்து நடக்கும் அந்த அன்னத்தின் பெயர் சலஃபன். கலிங்கத்தில் இருக்கும் நமது தலைமைஒற்றன்” என்றார். காளகக்குடியினர் சிரித்து உவகையொலி எழுப்பி புஷ்கரனை வாழ்த்தினர். “என் ஓவியத்திற்கு மாலையிட்டிருக்கிறாள் கலிங்கத்தின் இளவரசி. அவளுக்கு நிஷதகுடிகளில் மூத்ததான காளகக்குடியின் மரபுப்படி தாமரை மாலையை அணிவிக்கவேண்டியது என் கடன். அதை அறிவித்து என் குறுவாளை அனுப்பியிருக்கிறேன்” என்றான். அவையின் பிற குடிகளும் எழுந்து கோல்களைத் தூக்கி வாழ்த்து முழக்கமிட்டனர்.

காளகக்குடித்தலைவர் சீர்ஷர் கைகளைத் தூக்கி “எங்களுக்கு எவர் ஒப்புதலும் தேவையில்லை. கலிங்கத்தின் இளவரசி எங்கள் இளவரசரை விரும்பினால் அவர்களை சேர்க்கும்பொருட்டு ஆயிரம் தலைகளை மண்ணிலிட நாங்கள் சித்தமாக உள்ளோம்” என்று கூவினார். “அதற்கு இங்கு என்ன நடந்தது? எவர் உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்?” என்றார் கருணாகரர். “எதிர்ப்பு தெரிவியுங்கள் பார்ப்போம். இனி எந்த எதிர்ப்பையும் நாங்கள் அஞ்சப்போவதில்லை” என்றார் சீர்ஷர். “சொல்லமையுங்கள், சீர்ஷரே. அரசி இன்னும் தன் சொல்லை முன்வைக்கவில்லை” என்றார் நாகசேனர்.

தமயந்தி பெருநகையை முகத்தில் காட்டி “நன்று! நாம் எதிர்பார்த்திருந்த செய்தி இது. மிக நன்று. இனி பிறிதொன்றும் எண்ணுவதற்கில்லை. நமது அமைச்சரும் பிறரும் சென்று பானுதேவரிடம் நிஷதகுடியின்பொருட்டு இளவரசியின் வளைக்கையை கோரட்டும். கலிங்க இளவரசி வந்து இங்கு இளைய அரசியென அமர்வது நம் மூதன்னையரை மகிழ்விக்கும். குலமூத்தோரை பெருமிதம் கொள்ள வைக்கும். நம் அரசு ஆற்றல் கொண்டு சிறக்கும்” என்றாள். புஷ்கரரை வாழ்த்தி அனைத்து குடிகளும் முரசென குரல் எழுப்பினர். பலமுறை கையமர்த்தி குரலெழ இடைவெளி தேடவேண்டியிருந்தது. “நாளையே தலைமை அமைச்சர் கிளம்பிச்செல்லட்டும். இதுவரை பாரதவர்ஷத்தில் எந்த மணக்கோரிக்கையுடனும் செல்லாத அளவுக்கு பரிசில்கள் அவரை தொடரட்டும்” என்று தமயந்தி ஆணையிட்டாள்.

flowerகருணாகரர் நான்கு துணையமைச்சர்களுடன் பன்னிரு வண்டிகளில் பட்டும் பொன்னும் அருமணிகளும் அரிய கலைப்பரிசில்களுமாக கீழ்க்கலிங்கத்திற்கு சென்றார். அவர் செல்லும் செய்தியை முன்னரே தூதர்கள் வழியாக தண்டபுரத்திற்கு அறிவித்திருந்தார். அவர்களை நகரின் கோட்டை முகப்பிற்கே வந்து பேரரசி வழியனுப்பி வைத்தாள். அச்செய்தி நகரெங்கும் பரவியது. காளகக்குடிகளில் ஒவ்வொரு நாளும் களிவெறி மிகுந்து வந்தது. அவர்கள் எண்ணுவதன் எல்லையைக்கடந்து எண்ணினர். நளனுக்குப்பின் நிஷதப்பேரரசின் பெருமன்னரென புஷ்கரன் அமைவதைப்பற்றி புஷ்கரனினூடாக காளகக்குடி பாரதவர்ஷத்தின் தலைமை கொள்வதைப்பற்றி விழைவுகள் கணமெனப் பெருகி நிறைந்தன.

கருணாகரர் கலிங்கத்திற்கு சென்றுசேர்ந்த செய்தி தமயந்தியை வந்தடைந்தது. பதற்றத்துடன் என்ன நிகழ்கிறதென்று அவள் பறவைச்செய்திகளை பார்த்திருந்தாள். கலிங்க இளவரசி புஷ்கரனுக்கு அளித்த செய்தியைக் கேட்டு அவள் சினங்கொண்டு மறுப்பாள் என்று அச்சூழ்ச்சியை செய்தவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று அவள் நினைத்தாள். ஏனெனில் அவள் மகதனோ மாளவனோ கூர்ஜரனோ புஷ்கரனுக்கு மகள்கொடை அளிக்கவேண்டுமென்று எதிர்பார்த்திருந்தாள். கீழ்க்கலிங்கம் மிகச் சிறிய அரசு. அவர்கள் அளிக்கும் படைத்துணையென பெரிதாக ஏதுமில்லை. அவர்களின் துறைநகருக்கு பொருள்கொண்டு அளிக்கும் பேரியாற்றை முழுமையாக ஆளும் நிஷதத்தை ஒரு நிலையிலும் அவர்களால் மீறிச்செல்ல முடியாது. கலிங்கத் தூதை அவள் மறுக்கையில் புஷ்கரனுக்கும் அவளுக்குமான பூசல் முதிருமென்று அவர்கள் கருதுகிறார்கள் என்று கணித்தாள். ஆகவேதான் அதை ஒப்புக்கொண்டு அவர்கள் மறுஎண்ணம் எடுப்பதற்குள் பெரும்பரிசில்களுடன் அமைச்சரையே அனுப்பினாள்.

அத்திருமணம் நிகழ்ந்து புஷ்கரன் உளம் குளிர்ந்தால் சிறிது காலத்திற்கேனும் அவனுள் எழுந்த ஐயமும் விலக்கமும் அகலும் என்று எண்ணினாள். காளகக்குடிகள் தாங்களும் ஒரு வெற்றியை பெற்றுவிட்டோம் என்று எண்ணக்கூடும். அவர்களின் தாழ்வுணர்ச்சியை கடக்க அது வழியமைக்கலாம். தென் எல்லையில் தான் வென்ற விஜயபுரியை புஷ்கரனுக்கு அளித்து அவனை தனியரசென்றாக்கி நளனுக்கு இளையோனாகவோ தொடர்பு மட்டும் உள்ள இணைநாடாகவோ அமைத்தால் காளகக்குடிகளிலிருந்து எழுந்த அந்த அரசுமறுப்பை கடந்துவிடலாமென்று அவள் கருதியிருந்தாள்.

ஆனால் நிகழ்ந்தது மற்றொன்று. கருணாகரரை வரவேற்று உரிய முறைமைகளுடன் அவையமரச் செய்தார் பானுதேவர். அங்கு குலத்தாரும் குடிமூத்தாரும் அந்தணரும் கூடிய அவையில் அவர் எழுந்து தன் தூதுச்செய்தியை சொல்ல வைத்தார். முறைமைகளும் வரிசையுரைகளும் முடிந்தபின் கருணாகரர் கலிங்கத்து இளவரசி புஷ்கரனுக்கு அனுப்பிய ஓலையையும் கணையாழியையும் காட்டி அந்த விழைவை பேரரசி தமயந்தி ஏற்றுக்கொள்வதாகவும் அதன்பொருட்டு மணஉறுதி அளிக்க தூதென வந்திருப்பதாகவும் சொன்னார். அவை எந்த விதமான எதிர்வினையுமில்லாமல் அமர்ந்திருந்தது. வாழ்த்தொலிகள் எழாதது கண்டு கருணாகரர் அரசரை நோக்கினார். பானுதேவர் தன் நரையோடிய தாடியைத் தடவியபடி ஏளனமும் கசப்பும் நிறைந்த கண்களுடன் அவரை நோக்கிக்கொண்டிருந்தார்.

கருணாகரர் அந்தத் தூது கலிங்க இளவரசியின் விழைவை ஒட்டியே என அழுத்த விரும்பினார். “எங்கள் அரசி முன்பு தன் கொழுநர் நளமாமன்னருக்கு அனுப்பிய அன்னத்தூது இன்று காவியமென பாடப்படுகிறது. அதற்கு நிகரான காவியமாக கலிங்கத்து இளவரசி மாலினிதேவி அளித்த இக்கணையாழித்தூதும் அமையுமென எண்ணுகிறோம். தன்னுள்ளத்தைப் போலவே இளவரசியின் உள்ளத்தையும் உணர்ந்தமையால் நிகரற்ற பரிசுகளுடன் என்னை அனுப்பியிருக்கிறார் பேரரசி” என்றார்.

தான் உன்னுவதை எல்லாம் ஊன்றிவிட சொல்லெடுத்து “கலிங்கம் நிஷதப்பேரரசின் ஒரு பகுதியே என்றாலும் இம்மணம்கோள் நிகழ்வு இரு நாடுகளுக்கிடையே குருதித் தழுவலாக ஆகும். தென்திசையின் இரு தொல்குடிகளின் இணைவால் ஆயிரமாண்டுகளுக்கு வெல்ல முடியாத அரசென்று எழும். மலைமுடிபோல் இப்பெருநிலத்தை நோக்கியபடி காலம் கடந்து நின்றிருக்கும் அது” என்றார் கருணாகரர். தன் சொற்கள் அமைதியான அவையில் அறுந்த மணிமாலையின் மணிகள் என ஒவ்வொன்றாக ஓசையுடன் உதிர்ந்து பரவுவதை உணர்ந்தார்.

பானுதேவர் தன் அமைச்சர் ஸ்ரீகரரை நோக்கி “இவ்வண்ணம் ஒரு செய்தியை நான் எதிர்பார்க்கவில்லை. நமது இளவரசி புஷ்கரருக்கு கணையாழியும் திருமுகமும் அனுப்பியிருப்பதாக சொல்கிறார்கள். தாங்கள் நோக்கி இதை மதிப்புறுத்த வேண்டும், அமைச்சரே” என்றார். அமைச்சர் ஸ்ரீகரர் எழுந்து வணங்கி “நிஷதப்பேரரசின் அமைச்சர் வந்து அளித்த இச்செய்தியால் இந்த அவை பெருமைகொள்கிறது. அந்தக் கணையாழியையும் ஓலையையும் இந்த அவையின் பொருட்டு நான் பார்க்க விழைகிறேன். அது எங்கள் இளவரசியின் செய்தி என்றால் அதைப்போல் இனியதொரு நோக்கு எனக்கு இனிமேல் அமையப்போவதில்லை” என்றார்.

கருணாகரர் கைகாட்ட துணையமைச்சர் அந்தத் திருமுகமும் கணையாழியும் அமைந்த பொற்பேழையை ஸ்ரீகரரிடம் அளித்தார். அதை வாங்கித் திறந்து கணையாழியை எடுத்து கூர்ந்து நோக்கியதுமே அவர் முகம் மாறியது. ஐயத்துடன் ஓலையை இருமுறை படித்தபின் அரசரிடம் தலைவணங்கி “சினம் கொள்ளலாகாது, அரசே. இது எவரோ இழைத்த சூழ்ச்சி. இது நம் இளவரசியின் கணையாழி அல்ல. இந்தத் திருமுகமும் பொய்யானது” என்றார். பானுதேவர் சினந்து அரியணைக்கையை அறைந்தபடி எழுந்து “என்ன சொல்கிறீர்?” என்றார்.

“ஆம் அரசே, இவை பொய்யானவை” என்றார் ஸ்ரீகரர். “அரசகுடிக்குரிய கணையாழிகளின் எந்த அமைப்பும் இதில் இல்லை. இதிலுள்ள அருமணிகள் மெய்யானவை. அவை அமைந்திருக்கும் முறை பிழையானது. இவ்வோலையின் முத்திரை உண்மையானது, ஆனால் கணையாழி பொய்யென்பதால் இதன் சொற்களையும் ஐயுற வேண்டியிருக்கிறது.” பானுதேவர் உரக்க “எவருடைய சூழ்ச்சி இது?” என்றார். கருணாகரர் “சூழ்ச்சி இங்குதான் அரங்கேறுகிறது. கலிங்க அரசமுத்திரை எவரிடம் இருக்கமுடியும்?” என்றார்.

ஸ்ரீகரர் “சினம்கொள்ள வேண்டாம், அமைச்சரே. தங்களுக்கு ஐயம் இருப்பின் இளவரசியை இந்த அவைக்கு கொண்டு வருவோம். இந்த ஓலையும் கணையாழியும் அவர் அளித்ததென்று அவர் சொல்வாரேயானால் அனைத்தும் சீரமைகின்றன. அல்ல என்றால் இது சூழ்ச்சி என்று கொள்வோம்” என்றார். பானுதேவர் “ஆம், அதை செய்வோம். பிறகென்ன?” என்றபின் திரும்பி ஏவலனிடம் “இளவரசியை அழைத்துவருக!” என்று ஆணையிட்டார்.

கருணாகரருக்கு அனைத்தும் தெளிவாகிவிட்டது. அவர் அரசரின் முகத்தை சிலகணங்கள் கூர்ந்து நோக்கியபின் உடல் தளர்ந்து தன் பீடத்தில் அமர்ந்தார். ஸ்ரீகரர் நிலையழிந்த உடலுடன் இருவரையும் பார்த்தபடி அவையில் நின்றார். அச்சூழ்ச்சியை அவரும் அறிந்திருக்கவில்லை என்பதை கருணாகரர் உணர்ந்தார். இளவரசி அவை புகுந்தபோது திரும்பி அவர் முகத்தை பார்த்ததும் சூழ்ச்சியை இளவரசியும் அறிந்திருக்கவில்லை என்று தெளிவுற்றார். அவை மேடை வந்துநின்ற இளவரசியை நோக்கி பானுதேவர் “மாலினிதேவி, கீழ்க்கலிங்கத்தின் இளவரசியாகிய நீ இந்த அவையில் ஒரு சான்று கூற அழைக்கப்பட்டிருக்கிறாய். உன் பெயரில் ஒரு திருமுகமும் கணையாழியும் நிஷத இளவரசராகிய புஷ்கரருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர் ஓவியத்திற்கு நீ மாலையிட்டு கணவனாக ஏற்றுக்கொண்டதாக அத்தூது சொல்கிறது. அது நீ அனுப்பியதா?” என்றார்.

அவர் முதலில் அச்சொற்களை செவிகொள்ளவே இல்லை. ஆனால் ஏதோ ஒன்று புரிய திகைத்து கருணாகரரையும் அமைச்சரையும் பார்த்தபின் வாயை மட்டும் திறந்தார். அரசி மீண்டும் அவ்வினாவை கேட்டார். “தூதா? நானா?” என்றார். பின்பு உரக்க “இல்லை, நான் எவருக்கும் தூதனுப்பவில்லை. இளவரசர் புஷ்கரரின் பெயரையே இப்போதுதான் அறிகிறேன்” என்றார். “பிறகென்ன தேவை, கருணாகரரே?” என்று பானுதேவர் கேட்டார். கருணாகரர் எழுந்து வணங்கி “இளவரசி என்னை பொறுத்தருள வேண்டும். நிஷதப் பேரரசி தமயந்தியின் பெயரால் இந்த விண்ணப்பத்தை வைக்கிறேன். இந்நிகழ்வை மறந்துவிடுக! சூழ்ச்சியொன்றை மெய்யென்று நம்பி இங்கு வந்தோம்” என்றார்.

ஸ்ரீகரர் நடுவே புகுந்து “சூழ்ச்சியே ஆனாலும் நன்று ஒன்று நடந்துள்ளது. விதர்ப்பப் பேரரசியின் மணத்தூது இங்கு வந்தது ஒரு நல்லூழே. நிஷத இளவரசருக்கு நிகரான மணமகன் இளவரசிக்கு அமைவது அரிது. இந்த மணத்தூதை நமது அரசர் ஏற்பதே நன்றென்பது என் எண்ணம்” என்றார். சினத்துடன் எழுந்த பானுதேவர் “ஆம் ஏற்றிருக்கலாம், உரிய முறையில் இத்தூது வந்திருந்தால். இச்சூழ்ச்சி எவருடையதென்று உங்களுக்குத் தெரியவில்லையா? என் மகளைக் கோரி தூதனுப்பும்போது தான் ஒரு படி கீழிறங்குவதாக நிஷதப் பேரரசி எண்ணுகிறார். ஆகவேதான் பொய்யாக ஓர் ஓலையும் கணையாழியும் சமைத்து என் மகளே அவ்விளவரசனை களவுமணம் கோரியதாக ஒரு கதையை சமைக்கிறார். நாளை இது சூதர்நாவில் வளர வேண்டுமென்று விழைகிறார்” என்றார்.

அவர் மேற்கொண்டு சொல்லெடுப்பதற்குள் கருணாகரர் “தங்கள் சொற்களை எண்ணிச்சூழ்வது நன்று, அரசே” என்றார். பானுதேவர் உரக்க “ஆம், எண்ணிச் சொல்கிறேன். இது கலிங்கத்தை கால்கீழிட்டு மிதித்து மணம்கோர நிஷதர் செய்யும் சூழ்ச்சி. அருமணி பொறிக்கப்பட்ட கணையாழிகளை பேரரசுகள் மட்டுமே உருவாக்க முடியும். இதிலுள்ள அருமணிகள் பேரரசர்களின் கருவூலங்களுக்குரியவை. அவை மெய்யான அருமணிகள் என்பதனால்தான் நானும் ஒரு கணம் நம்பினேன். இது தமயந்தியின் சூழ்ச்சியேதான். ஒருவேளை அமைச்சருக்கு இது தெரியாமல் இருக்கலாம்” என்றார்.

தன் நிலையை குவித்து தொகுத்து சீரான குரலில் கருணாகரர் சொன்னார் “அத்தகைய எளிய சூழ்ச்சிகளினூடாக உங்கள் மகளைக் கொள்ளும் இடத்தில் பேரரசி இல்லை என்று அறிக!” பானுதேவர் சினத்தால் உடைந்த குரலுடன் “நிஷத இளைஞனுக்கு தூதனுப்பும் இடத்தில் தொல்குடி ஷத்ரியப் பெண்ணாகிய என் மகளும் இல்லை” என்றார். கருணாகரர் “சொல்தடிக்க வேண்டியதில்லை. நா காக்க. இல்லையேல் கோல் காக்க இயலாது போகும்” என்றார்.

அவை மறந்து கொதிப்பு கொண்ட பானுதேவர் கைநீட்டி “இனியென்ன காப்பதற்கு? இந்த அவையில் என் மகளை இழிவுபடுத்திவிட்டார்கள். இந்த மணத்தை நான் ஏற்றால் அதன் பொருளென்ன? இவர்கள் இப்படி மணத்தூதுடன் வரவேண்டுமென்பதற்காக இவ்வோலையையும் கணையாழியையும் நான் சமைத்தளித்திருப்பதாகத்தானே உலகோர் எண்ணுவர்? எனக்கு இழிவு. ஓர் இழிவு போதும், பிறிதொன்றையும் சூட நான் சித்தமாக இல்லை” என்றார். “போதும்! வெளியேறுங்கள்! எனக்கு இழிவு நிகழ்த்தப்பட்டமைக்கு நிகர் இழிவை அந்தணராகிய உம் மேல் சுமத்த நான் விரும்பவில்லை.”

அத்தருணத்தில் ஸ்ரீகரரும் அனைத்தையும் உணர்ந்துகொண்டார். அது அவரறியாத பெருஞ்சூழ்ச்சி வலையென்று. கருணாகரர் “நன்று! இனியொன்றே எஞ்சியுள்ளது. நான் சென்று அரசியிடம் சொல்லவேண்டிய சொற்களெவை? அதை சொல்க!” என்றார். “இருங்கள், அமைச்சரே. இந்த அவையில் நாம் எதையும் இறுதி முடிவென எடுக்கவேண்டாம். நாளை இன்னொரு சிற்றவையில் அனைத்தையும் பேசுவோம்” என்றார் ஸ்ரீகரர். “இனியொரு அவையில் நான் இதை பேச விரும்பவில்லை. என் சொற்களை இதோ சொல்கிறேன்” என்றார் பானுதேவர். “அரசே, அரசியல் சொற்களை எழுத்தில் அளிப்பதே மரபு” என்றார் ஸ்ரீகரர். “இது அரசச்சொல் அல்ல. என் நெஞ்சின் சொல்” என்றார் பானுதேவர்.

சிவந்த முகமும் இரைக்கும் மூச்சுமாக “இவ்வாறு சொல்லுங்கள், அமைச்சரே. இச்சொற்களையே சொல்லுங்கள்” என பானுதேவர் கூவினார். “நிஷதப் பேரரசி நானும் ஒரு அரசனென்று எண்ணி என்னை நிகரென்றோ மேலென்றோ கருதி இம்மணத்தூதை அனுப்பியிருந்தால் ஒருவேளை ஏற்றிருப்பேன். எவரோ வகுத்தளித்த இழிந்த சூழ்ச்சியொன்றால் எனது மகளை சிறுமை செய்தார். அதற்கு அடிபணிவேன் என்று எதிர்பார்த்ததனால் என்னை சிறுமை செய்கிறார். ஆகவே இந்த மணத்தூதை நான் புறக்கணிக்கிறேன். நிஷத அரசுக்கு முறைப்படி மகள்கொடை மறுக்கிறேன்.”

“போரில் தோற்றமையால் கலிங்கம் நிஷதத்திற்கு கப்பம் கட்டலாம். ஆனால் நிஷதகுடிகள் சமைத்துண்ணத் தொடங்குவதற்கு முன்னரே சூரியனின் முதற்கதிர் இறங்கும் மண்ணென கலிங்கம் பொலிந்திருக்கிறது. நூற்றெட்டு அரச குடிகள் இங்கு ஆண்டு அறம் வாழச்செய்திருக்கிறார்கள். என் கடன் என் மூதாதையரிடம் மட்டுமே. என் செயல்களினூடாக என் கொடிவழியினருக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். இன்று சிறுத்து மண்ணில் படிந்திருக்கலாம் எனது குடி. நாளை அது எழும். அந்த வாய்ப்பைப் பேணுவது மட்டுமே இத்தருணத்தில் நான் செய்யக்கூடுவது” என்றார் பானுதேவர். பின்னர் மூச்சுவாங்க அரியணையில் அமர்ந்தார்.

“நன்று! இச்சொற்களையே அரசியிடம் உரைக்கிறேன்” என்று சொல்லி தலைவணங்கிய கருணாகரர் “இச்சொற்களை இளவரசி ஏற்கிறாரா என்று மட்டும் கேட்க விழைகிறேன்” என்றார். மாலினிதேவி “ஆம், அவை என் சொற்கள்” என்றார். “நன்று, உங்கள் அவைக்கும் கோலுக்கும் நிஷத அரசின் வாழ்த்துக்கள்! நன்றே தொடர்க!” என வணங்கி கருணாகரர் அவை நீங்கினார்.

முந்தைய கட்டுரைதிருப்பூர் காதுகேளாதோர் பள்ளி- அடுத்த சூழ்ச்சி
அடுத்த கட்டுரைமலேசியா, கண்கள், கருத்துக்கள்