கதைகள் – கடிதம்

soun

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். கடந்த ஒரு வருடமாக, தங்களின் கதைகளையும், கட்டுரைகளையும் உங்கள் இணையதள மூலமாகவும், நேரடியாக புத்தகங்கள் வங்கியும் படித்து வருகிறேன். அமெரிக்காவின் தென் பகுதியில் ஆஸ்டின் என்ற  ஊரில் கம்ப்யூட்டர் வேலை பார்த்துக்கொண்டு, உங்களின் கதைகளையும் கட்டுரைகளையம் அன்றாடம் படிக்கும் வழக்கத்தை உடையவன் நான்.  ஒரு நல்ல இசையைக் கேட்கும்பொழுது ஒரு இன்பம் கிடைக்குமே , அப்படித்தான் உங்களின் கதைகளை (கட்டுரைகளை) படித்தால் கிடைக்கிறது. நீங்கள் வண்ணதாசனின் ‘ஒரு சிறு இசை’ புத்தகத்தின்  முகவுரையில், ‘வண்ணதாசனின் சிறுகதைகள் தமிழ் சேர்த்துக்கொண்ட செல்வம்’ என்று சொல்லியிருப்பீர்கள். அதை படிக்கும்பொழுது உங்கள் கதைகளும்தான் தமிழுக்கு கிடைத்த செல்வம் ஜெ என்று உரக்கவே வாய்விட்டுச் சொன்னேன்.   தூர தேசத்தில் நான் முனங்கவது உங்கள் காதில் விழப்போவதில்லை. ஆதலால்தான் இந்தக் கடிதம். நான் பெயருக்குச் சொல்லவில்லை , கீழே காணும் எனது பேஸ்புக் பதிவுகளை பாருங்கள். தேதிவாரியாக கொடுத்திருக்கிறேன். நீங்கள் பேஸ்புக் பிரியர் அல்ல என்பதும் எனக்குத் தெரியும். நீங்கள் இந்தக் கடிதத்தை (ஈமெயில்) , நேரம் இருந்து படித்திருந்தால், ஆமாம் சௌந்தர் படித்தேன் என்று பதில் போடுங்கள்.

வீட்டில் அருள்மொழி, அஜிதன், சைதன்யா அனைவரையும் கேட்டதாகச் சொல்லவும். நீங்கள் பாகுபலி 2 படத்தை    வெய்யிலில் நின்று அவதிப்பட்டு பார்க்கமுடியாமல் திரும்பிச் சென்ற சமயம் கூட்டமே இல்லாத (வெறும் 14 பேர்) , ஆஸ்டின் திரையரங்கு ஒன்றில் நான் படம் பார்த்தபொழுது எனக்கு ஒரு வலி வந்தது. ஒரு நல்ல எழுத்தாளனுக்கு வீடு தேடி வந்து டிக்கெட் கொடுக்கும் நாள் என்று வரும்.

அன்புடன்,

வ. சௌந்தரராஜன்

***

 நல்ல நல்ல கதைகள் படிப்போம்

சுஜாதாவின் ‘நகரம்’ சிறு கதைபோல, எஸ். ராமகிருஷ்ணனின் ,’உனக்கு 34 வயதாகிறது’ என்கின்ற கதைபோல, இனிமேல், இன்று படித்த ஜெயமோகனின் கதையான ‘சோற்றுக்கணக்கும்’ என் மனதை வருடிக்கொண்டே இருக்கும்.

http://www.jeyamohan.in/11992

– வ சௌந்தரராஜன்

06/29/2016

***

 அறம் தந்த சுவையை அசைபோடுகிறேன்

(புத்தக விமர்சனம்)

காதுவழியாக கேள்விப்பட்டோ , விமர்சனங்களின் மூலமோ, எழுத்தாளர் ஜெயமோகன் கவனிக்கப்படவேண்டிய எழுத்தாளர் என்று குறித்து வைத்திருந்தேன்.  ஆனால், அவரது கதையையோ கட்டுரையையோ, நானாக  படித்துவிட்டு எனக்கென்று ஒரு அபிப்ராயம் இருந்ததில்லை. இந்த வருடம் ஜூன் மாதத்தில் ஒரு நாள் அவரது வலைதளத்தில், சோற்றுக்கணக்கு கதை படித்தேன். என்னை மிகவும் பாதித்த (பிடித்த) கதைகளில் ஒன்றாக உடனே இடம் பிடித்தது.

கதை சொல்லி, தன் கையில் காசு இல்லாதபோது கெத்தேல் சாகிப் கடையில்  சாப்பிட்டுவிட்டு, நல்ல வேலை கிடைத்ததும் சீட்டுப் பணம் பெற்றுக்கொண்டு அவர் வைத்திருக்கும் உண்டியலில் பணம் போடுகிறார். அந்த வகையில் சோற்றுக்கணக்கை அடைக்கிறாரா? இல்லை, தான் படிக்கும்போது கணக்குப் பார்த்து சாப்பாடு (தண்ணீர்விட்ட சோறு அதிலேயே விடப்பட்ட குழம்பு)  போட்ட மாமியின் மகளை கல்யாணம் செய்து சோற்றுக்கணக்கை அடைக்கிறாரா. எந்த வகையில் பார்த்தாலும் கதையில் வரும் ஒவ்வொரு நிகழ்வும், கதை மாந்தர்களும் , வறுமையும், பசியும், கெத்தேல் சாகிப்பின் மீன்குழம்பும், தனது மகனின் எழுநூறு ரூபாய் சம்பளத்தை ஏற்றுக்கொள்ளமுடியாமல் பார்த்த  தந்தையின் பார்வையும், பசியிலும் வறுமையிலும் குழந்தைகளை வளர்த்த தாய்க்கு,  பணம் வந்தபிறகும் போதும் போதுமென குழம்பை  ஊத்தும் பழக்கம் வராது என்ற நிதர்சனமும், மனதை உறுத்திக்கொண்டே இருந்தது.

கஷ்டங்கள் அல்லாமல்,  வாழ்வியலில் பார்க்கும் நல்ல மனிதமும்  நிகழ்வுகளும் கதையில் உண்டு., கணக்கே பார்க்காமல்,  மீண்டும் மீண்டும் சாப்பிடச் சொல்லி மீனைப் பரிமாறும் கெத்தேல் சாகிப்பின்  கனத்த கரடிக்கரங்கள். ஏழைப் பெண்ணிடம் தப்பாக நடந்துகொண்ட கொச்சுகுட்டன்பிள்ளைக்கு  , கெத்தேல் சாகிப் ஓங்கி கொடுக்கும் ஒர்அறை.  கதை சொல்லி,  அரிசி மண்டியில் கணக்கு எழுதி, வரும் வருமானத்தில் கல்லூரியில் ஃபீஸ் கட்டி, மிச்சம் பிடித்து வீட்டுக்கும் அனுப்பி , படித்த கல்லூரியிலேயே விரிவுரையாளர் ஆவது என  வாழ்வில் நம்பிக்கை கொடுக்கும் ஆதார விஷயங்கள்.

கதையில் விவரிக்கப்பட்டிருக்கும் பல வகையான உணவும், மணமும் வந்து போகும். உதாரணத்திற்கு – எலிசம்மா கடை இட்லி, சாலைமகாதேவர்கோயில் பாயசம், கெத்தேல் சாகிப் சாப்பாட்டு  கடையின் – சிவப்பு சம்பா சோறு, பொரித்த சிக்கன் கால், பொரித்த மீன், கறி பொரித்த மிளகாய்காரத்தின் தூள், கருகிய கோழிக்கால்.

இவையல்லாமல் ஒரு இழையோடும்  காதலும் இந்தக் கதையில் இருக்கிறது என்றே நினைக்கிறேன். பிறகு ஏன் கதை சொல்லி, ராமலட்சுமியை ஒரு சூட்டிகையான பெண் என்று சொல்லிவிட்டு  , கூட்டு வட்டி கணக்கை அவளுக்குச் சொல்லிக் கொடுக்க இருபது நாள் என்று கொஞ்சம் கிண்டலும் செய்கிறார்.

மேலும் மேலும் இந்தக் கதையை ஆராய்ச்சி செய்யப் போய், இது அறம் என்ற சிறுகதைகளின் தொகுப்பாக வந்த நூலில் ஒரு கதை என அறிந்தேன். கடந்த இரு வாரங்களில், மீதம் இருந்த பனிரெண்டு கதைகளையும் படித்துவிட்டேன். ஒவ்வொரு கதையும் ஒரு விதம். எல்லாக் கதைகளும் தரமானவை.  வித்தியாசமானவைகள். மனங்கொத்திப் பறவைகள்.

அறம், வணங்கான், யானை டாக்டர், நுறு நாற்காலிகள், ஓலைச்சிலுவை, உலகம் யாவையும் என்னை மிகவும் பாதித்தன. என்னை எழுதவிட்டால், ஒவ்வொரு கதை பற்றியும் , மேற்கண்டவாறே , ஒன்று அல்லது இரண்டு  பக்கங்கள் அவைகளை பற்றி விமர்சனம் எழுதுவேன். இப்போதைக்கு அவைகளை , மனதில் அசைபோட்டுக்கொள்வதே சுகமாய் இருக்கிறது.

– வ. சௌந்தரராஜன்

10/30/2016

 எப்பொழுதும் ஒரு கிறக்கத்திலேலேயே இருக்கிறேன்

கடந்த ஒரு வருடமாக , எப்பொழுது பார்த்தாலும்,  நான் ஒரு கிரக்கத்திலேலேயே இருக்கிறேன்.  எப்படி இவரது எழுத்துக்களைப் படிக்காமல் இத்தனை வருடம் கழித்தேன். தேடி தேடி அவசர அவசரமாக, இதுவரை படிக்காமல் விட்டதை எல்லாம் ஒரு நாளைக்கு ஒரு கட்டுரை அல்லது ஒரு கதை என்று படித்துவிடுகிறேன். ‘தேவகிச் சித்தியின் டைரி படித்துவிட்டு , நினைவுகளிலிருந்து  தப்பமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும்  சமயத்தில்,   ‘டார்த்தினியும்’ படித்துவிட்டு, அவஸ்தைப் பட்டுக் கொண்டு இருக்கிறேன். நான் எந்த ஒரு பத்திரிகைக்கும் எனது ஈமெயில் விலாசத்தை கொடுத்ததில்லை,  இவரது வலைதளத்திற்கு மட்டும்  கொடுத்துவிட்டு , அன்றைய  தினத்தில்  வந்த பதிப்புகளில்  ஒன்று அல்லது இரண்டைப்  படித்துவிட்டு, எழுத்து என்றால் இது எழுத்து என்று பத்தாயிரம் மைல் கடந்து இருக்கும் அவரை உளமார  பாராட்டுகிறேன்.

காதலிக்கும் பருவத்தில் உள்ள ஒரு வயது பையன் தனது காதலியைப் பற்றி ,  சொன்னதையே திருப்பி திருப்பி சொல்வதுபோல் (உதாரணம் – அச்சம் என்பது மடமையடா – சிம்பு), கொஞ்சம் காது கொடுத்து கேட்பவர்களிடம், இவரைப் பற்றியும் இவரது எழுத்துக்கள் பற்றியும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

நான் ஜெயமோகனின் எழுத்துக்களை படித்துவிட்டுட்டு ஒரு  கிரக்கத்தில் இருக்கிறேன். எனக்கு அது பிடித்திருக்கிறது. மற்றபடி எந்த பாதிப்புமில்லை.

– வ. சௌந்தரராஜன்.
03/18/2017

***

அன்புள்ள சௌந்தர்

உங்கள் குறிப்புகளை வாசித்தேன். எப்போதுமே புனைவிலக்கியம் குறித்து முன் முடிவுகள் இல்லாமல் இயல்பாக உள்ளே சென்று சொல்லப்படும் கருத்துக்களுக்கு பெருமதிப்புண்டு.அவை பெரும்பாலும் கதைகளை அல்ல வாழ்க்கையையே பேசுகின்றன. நன்றி

ஜெ.

முந்தைய கட்டுரைவிருதுகள் மதிப்பீடுகள்
அடுத்த கட்டுரைதிருப்பூர் காதுகேளாதோர் பள்ளி- அடுத்த சூழ்ச்சி