அன்புள்ள ஜெ,
வாஞ்சிநாதன் ஆஷ் துரையைக் கொன்றது ஆஷ் துரை தலித்துக்களுக்கு ஆதரவாக நடந்துகொண்டமையால்தான் என்று ஒரு வாட்ஸப் செய்தி நேற்றும் இன்றும் சுற்றிவருகிறது. அதில் உண்மை என்ன?
முருகேஷ்
***
அன்புள்ள முருகேஷ்,
தமிழ் அறிவுத்துறையில் இதைப்பற்றி விரிவாக எழுதி விளக்கி கடந்துசென்று நெடுநாட்களாகிறது. இதற்குமேல் இதைப்பேசுகிறார்கள் என்றால் அவர்கள் எழுத்து -வாசிப்பு தளத்தில் எந்த அறிமுகமும் இல்லாதவர்கள். செவிவழிச்செய்திகள் , வாட்ஸப் உதிரிச்செய்திகளில் உழல்பவர்கள். அவர்களை எந்த நூலும், எந்த வரலாற்று விளக்கமும் மாற்றாது. அது ஒருவகை மூடநம்பிக்கை.
சுருக்கமாகச் சொல்கிறேன். வாஞ்சி காலகட்டத்தில் இந்திய சுதந்திரப்போராட்ட மரபில் இரு கருத்தியல்போக்குகள் இருந்தன. ஒர் அணி இழந்துபோன பாரதப்பெருமையை மீட்டு, அதை அன்னிய அடிமைத்தளையிலிருந்து வெளியே கொண்டுவரவேண்டுமென விரும்பியது. திலகர் அதன் முகம். இன்னொரு அணி ஐரோப்பாவில் உருவாகி வந்துகொண்டிருந்த நவீன ஜனநாயக சமூகம் ஒன்றை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என விரும்பியது. கோகலே அதன் முகம்
வாஞ்சி முதல் அணியைச் சேர்ந்தவர். அவர்கள் அன்றைய தீவிரவாதிகள். இரண்டாம் தரப்பினர் அன்றைய மிதவாதிகள். அந்தக் கருத்தியல்பூசல் காங்கிரஸில் தொடர்ந்து நடந்தது. நேரடி நாற்காலிவீச்சு வரை காங்கிரஸ் கூட்டங்களில் சாதாரணமாக நடந்தது.
பின்னர் காந்தி வந்தார். அவர் கோகலே அணியைச் சேர்ந்தவர். அணிகளை கடந்து நேரடியாக அவரால் எளிய மக்களிடம் பேசி அவர்களை அணிதிரட்டமுடிந்தது. அவர் அடைந்த அரசியல் வெற்றி என்பது அவ்வாறு வந்தது. இது முதல் அணியை மெல்ல தேம்பி மறையச்செய்தது. அவர்களில் கணிசமானவர்களுக்கு கடைசிவரை காந்திமேல் கடும் கசப்பு இருந்தது.
முதல் அணியைச்சேர்ந்தவர்களே அன்று வன்முறையை நம்பினார்கள். அவர்களில் ஒருவராகிய வ.வே.சு.அய்யரால் தூண்டுதல் பெற்றவர் வாஞ்சி. அவரது கடிதம் அந்தக் கருத்தியலைக் காட்டுகிறது.
அன்றைய தலித்தியக்கத்தினர் பலருக்கு ஆங்கில ஆட்சி தங்களை விடுதலைசெய்ய வந்தது என்னும் எண்ணம் இருந்தது. ஆகவே அவர்கள் மிகத்தீவிரமாக ஆங்கிலேயரை ஆதரித்தனர். சுதந்திரப்போராட்டத்தை தங்களை விடுவிக்க வந்த ஆங்கிலேயருக்கு எதிரான உயர்சாதியினரின் போராட்டமாகவே அவர்கள் பார்த்தனர் [ஆங்கில ஆட்சியே பஞ்சங்களுக்குக் காரணம் என்ற எண்ணமெல்லாம் அன்று இல்லை. அத்தகைய விரிவான பொருளியல்நோக்கு உருவாகி வருவதெல்லாம் மேலும் பல ஆண்டுகள் கடந்துதான்]
இதுதான் அன்றைய கருத்தியல்தரப்புக்கள். ஒரே செயலை இவர்கள் வெவ்வேறு கோணங்களில் பார்த்தனர். தீவிரத்தரப்பினர் வாஞ்சியை ஒரு தியாகியாக அணுகினர். மிதவாதிகள் அவரை அத்துமீறியவர் என்று எண்ணினர். தலித் தரப்பினர் அவரை உயர்சாதிவெறியர் என எண்ணினர்.
இதில் இன்னொரு பலவீனமான தரப்பு உண்டு, அது நீதிக்கட்சி. அது ஆங்கிலேயருடன் ஒத்துழைத்து அரசியலதிகாரத்தை கையாண்டவர்களால் ஆனது. பெரும்பாலும் நிலச்சுவான்தார்கள் குத்தகைதாரர்கள் போன்ற உயர்குடியினரால் ஆனது அது. அவர்களுக்கு வாஞ்சி ஒரு கொலைகாரனாகவே தோன்றினான். நீதிக்கட்சியின் நீட்சியே திராவிடர் கழகமும் திராவிடக் கட்சிகளும்.
ஆஷ் துரையின் கொலை அன்று ஆங்கிலேயர் நடுவே பெரிய பதற்றத்தை உருவாக்கியது. ஏனென்றால் முன்னர் நிகழ்ந்த சிப்பாய்ப்புரட்சி ஆங்கிலேயரை பெருமளவில் கொன்றழித்தது வாஞ்சியின் கடிதம் அப்படி ஒரு கிளர்ச்சி நெல்லையில் உருவாகக்கூடும் என்ற [பொய்யான] சித்திரத்தை அவர்களுக்கு அளித்தது
ஆகவே ஆங்கிலேய ஆதரவாளர்கள் அனைவரும் பதறியடித்து வாஞ்சிக்கு எதிராக கடும் கண்டனங்களைப் பதிவுசெய்தனர். ஆங்கிலேயருக்கு ஆதரவாக அறிக்கைகளை விட்டனர். அதில் ஆங்கிலேயர் வானளாவப் புகழப்பட்டிருந்தனர். ஆஷ் துரையும். ஆனால் அது எவ்வகையிலும் உண்மை அல்ல.
சென்னை கவர்னர் ஆக இருந்த கோல்ட் அவர்களின் காலம் முதல் இந்தியாவின் சாதிப்பிரச்சினைகளில் தலையிடுவதில்லை என்பதே ஆங்கிலேயரின் நிலைபாடாக இருந்தது. அது அவர்களின் வணிகம், ஆட்சி இரண்டுக்கும் வசதியானது.நேரடியாகவே ஒன்று சொல்லலாம். நெல்லையில் இந்தியா சுதந்திரம் பெறும் காலம் வரை பல கிறித்தவ தேவாலயங்களில் தலித்துக்கள் அனுமதிக்கப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட தேவாலயங்களில் பிறசாதியினர் கண்களில் அவர்கள் படாமலிருக்க தனி தடுப்புச்சுவர் கட்டப்பட்டிருந்தது. ஆங்கில அரசு அதை தடுத்திருக்கலாமே? [ஆ.சிவசுப்ரமணியம் கிறித்தவமும் சாதியமும் என்னும் நூல்]
உண்மையில் பிரிட்டிஷ் காலகட்டத்தில் பெரும்பகுதி நிலம் அவர்களுக்கு கப்பம்கட்டும் ஜமீன்தார்களின் ஆட்சிக்குக் கீழே இருந்தது. ஜமீன்தார்கள் மிகப்பழைமையான சாதிவெறி ஆட்சியே நடத்தினார்கள். அவர்களுக்கு முழுமையான ராணுவ ஆதரவை பிரிட்டிஷ் ஆட்சி அளித்தது. வரலாற்றில் வெள்ளை ஆட்சிக்காலம் அளவுக்கு ஜமீன்தார்கள் அதிகாரத்துடன் என்றும் இருந்ததில்லை. இது அவர்களை கேட்பாரற்ற கொடூர ஆட்சியாளர்களாக ஆக்கியது. கிராமங்களில் சாதியமைப்பு நெகிழவிடாமல் அவர்கள் பார்த்துக்கொண்டனர்
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் உச்சகட்ட சுரண்டல், உணவு ஏற்றுமதி இரண்டும் இணைந்து பெரும்பஞ்சங்களை உருவாக்கியது. இந்திய தலித்துக்களில் பெரும்பகுதி பஞ்சத்தில் இறந்தனர். ஆனால் பிரிட்டிஷார் அந்தப்பஞ்சத்திற்குக் காரணம் என்னும் உணர்வு அன்றிருக்கவில்லை. அவர்கள் செய்த எளிய நிவாரண உதவிகள் பெரிய கொடையாக கருதப்பட்டன
பிரிட்டிஷ் ஆட்சி நேரடியாக நடந்த பகுதிகளில் பிரிட்டிஷ் சட்டம் தலித்துக்கள் மீதான கொடுமைக்கு எதிரான காப்பாக அமைந்தது உண்மை. பஞ்சம் தலித்துக்களை கூட்டம்கூட்டமாக இடம்பெயரச் செய்து நகர்களை நோக்கி வரச்செய்தது. அங்கே அவர்களின் உடலுழைப்புக்கு மதிப்பிருந்தது. அது அவர்களில் ஒருசாராரை பிரிட்டிஷ் ஆதரவாளர்களாக ஆக்கியது. நகர்ச்சூழலில் தலித்துக்கள் கல்விபெற்றனர். அரசியல் உரிமைகளைப்பற்றிய விழிப்புணர்வை அடைந்தனர். தலித் இயக்கம் உருவாகி வந்தது.
இதுதான் அன்றைய சூழல். இதில் கவனிக்கவேண்டியவை சில. ஒன்று ஆஷ் துரை எவ்வகையிலும் இந்தியர்கள்மீதோ தலித்துக்கள் மீதோ கருணையுடன் நடந்துகொள்ளவில்லை.. அவர் தலித்துக்களின் காவலன் என்ற செய்தி எங்கும் எப்போதும் பதிவானதில்லை. அது ஒரு கட்டுக்கதை. அவர் பெரும்பாலான வெள்ளைய அதிகாரிகளைப்போல தனிப்பட்ட லாபநோக்கு கொண்ட, கறாரான ஒரு மனிதர். ஆ.இரா வேங்கடாசலபதி மிக விரிவாக ஆய்வுசெய்து இவற்றை எழுதியிருக்கிறார் [ஆஷ் அடிச்சுவட்டில்]
இரண்டாவதாக, வாஞ்சி ஆஷ்துரையைக் கொல்ல வரவில்லை. தீவிரவாத தரப்பினர் இலக்காக்கியவர் திருநெல்வேலி கலெக்டராகிய விஞ்சு துரைதான். ஆஷ் துணை கலெக்டர்தான். விஞ்சு அந்த ரயிலில் வரவில்லை. ஆகவே அவர் சிக்கிக்கொண்ட ஆஷ் துரையைக் கொன்றார். ஒரு வெள்ளை அதிகாரியைக் கொல்வது மட்டுமே அவரது நோக்கம்
மூன்றாவதாக, அது போதிய அரசியல் பிரக்ஞையோ பயிற்சியோ இல்லாத ஒரு தனிநபர் முயற்சி. அதன் விளைவாக, குறிப்பாக அந்த அசட்டுத்தனமான கடிதத்தின் எதிரொலியாக, திருநெல்வேலியின் சுதந்திரப்போராட்டத்தை மூர்க்கமாக ஒடுக்க பிரிட்டிஷாருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் இந்திய விடுதலை வரை திருநெல்வேலி எழுச்சி பெறவே இல்லை
நான் வாஞ்சிநாதனின் ‘தியாகத்தை’ போற்றவில்லை. எனக்கு அம்மாதிரி சில்லறைக் கலவரங்களில் நம்பிக்கை இல்லை. அது போன்ற நிகழ்வுகளுக்கு சுதந்திரப்போரில் ஒரே ஒரு மதிப்புதான் உண்டு, அவை மக்களின் கவனத்தைக் கவர்ந்து சுதந்திரப்போர் குறித்த செய்தியை கொண்டுசெல்கின்றன. ஆனால் ஏற்கனவே பஞ்சத்தில் நொந்து அஞ்சிப்போய் கிடக்கும் மக்களுக்கு அவை மேலும் அச்சத்தை ஊட்டி சுதந்திரப்போராட்டத்தை மேலும் பின்னுக்கிழுத்தன. ஆம், பகத்சிங் மீதும் , படுகேஷ்வர் தத் மீதும் சந்திரசேகர ஆஸாத் மீதும் எனக்கு இதே அபிப்பிராயம்தான்.
ஜெ
***
பழைய கட்டுரைகள்
வாஞ்சி,ஆஷ்,வேங்கடாசலபதி
மிஷனரி வரலாறு, வாஞ்சி, சக்கிலியர்
***