இலக்கியவாதி வளர்கிறானா?

deva

அன்புள்ள ஜெ,

வளரும் படைப்பாளி என்பது தவறு என்ற கான்செப்ட் பலருக்கு புரியவில்லை. போதுமான அளவு வளர்ந்து விட்டார் என்பது பாராட்டுதான் என்றாலும்வளர்ச்சிக்கு வழி இல்லை என்பது குழப்பமாகவே இருக்கிறது..

சற்று இந்த கருதுகோளை விளக்கவும்

அன்புடன் பிச்சை

 

el

அன்புள்ள பிச்சை,

சரி இந்தக் கருத்தை இப்படி மாற்றிச் சொல்கிறேன். ஓர் எழுத்தாளன் தான் எதை எழுதவேண்டும், எப்படி எழுதவேண்டும் என்று கண்டுகொண்டபின் வளர்வதில்லை.

வளர்வது என்றால் என்ன? மாறுவது அல்ல. கூர்மைப்படுவது அல்ல. தெளிவடைவது அல்ல. வளர்ச்சி என்பது வளர்சிதைமாற்றம். அவனில் சில கூறுகள் இல்லாமலாகின்றன. சிலகூறுகள் பெரிதாகின்றன. வளர்பவர் முழுமையாகவே மாறிக்கொண்டிருக்கிறார். ஒரு காலகட்டத்திற்குப்பின் பிறிதொருவராக ஆகிவிடுகிறார்.

அந்த மாற்றம் உண்மையில் நல்ல எழுத்தாளர்களிடம் இருக்கிறதா? தேவதேவனின் முதல் தொகுதி ‘குளித்துக்கரையேறாத கோபியர்கள்’ அதில் மிகையான ஒரு கற்பனாவாதமும் முழங்கும் சொல்லாட்சியும் இருக்கும். ஆனால் சில வரிகளில் தேவதேவனின் இயல்புகளும் தெரியும்

உடனே வந்த அடுத்த தொகுதி ‘மின்னற்பொழுதே தூரம்’. அதில் உள்ள கவிதைகளில் இன்றைய தேவதேவன் வெளிப்படுகிறார். அவரது மொழி, படிம அமைப்பு, பார்வை ஆகியவை முழுமைகொண்டுள்ளன

 “அசையும்போது தோணி
அசையாத போது தீவு
தோணிக்கும் தீவுக்கும் இடையே
மின்னற்பொழுதே தூரம்,

என்ற வரிதான் தேவதேவன்.பிரமிள் அத்தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் அவரை முழுமையாக மலர்ந்த ஒரு கவிஞராகவே குறிப்பிடுகிறார்

பின்னர் அவர் அடைந்தது என்ன? நெருப்பு ஒரு மூலையிலிருந்து பற்றி எரிந்து விரிவதுபோல அந்த வாழ்க்கைக்கோணத்தை அந்த மொழியில் அப்படிமங்களில் விரித்து பரப்பிக்கொண்டே இருக்கிறார். அதைத்தான் அத்தனை கலைஞர்களும் செய்கிறார்கள். நான் சொன்னது அதையே.

cn

எழுத்தாளனின் தரிசனம் என்பது படித்து ஆராய்ந்து தரவுகளைச் சேர்த்து அடுக்கி அடையப்படுவது அல்ல. அவ்வகையில் செயல்படும் மனம் கொண்டவர்கள் இலக்கியவாசகர்கள்கூட ஆகமுடியாது. இலக்கியம் என்பது கற்பனையில் நிகழ்வது. கற்பனை மிக இளம் வயதிலேயே அமைந்துவிடுகிறது. அதைக் கருவியாக்கி எழுத்தாளன் தன் தரிசனத்தைக் கண்டடையும் அலைக்கழிப்புக்காலம் ஒன்று உண்டு. அதன் பின் அவன் செய்வதெல்லாம் தொடர்ச்சியாக வெளிப்படுவது மட்டும்தான்

எழுதி எழுதி மேம்படும் எழுத்தாளர்கள் உண்டா? சிலர் இருக்கலாம். சிலருக்கு அந்த தத்தளிப்புக்காலம் மேலும் மேலும் நீடிக்கக்கூடும். உதாரணம் சி.என் ஸ்ரீகண்டன்நாயர். மலையாளத்தில் அவர் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 20 ஆண்டுக்காலம். ஆனால் வாழ்வின் கடைசிக்காலகட்டத்தில் நாடகங்களைக் கண்டுகொண்டார். காஞ்சனசீதா, சாகேதம்,லங்காலட்சுமி என மூன்றுநாடகங்களை தொடர்ச்சியாக எழுதினார், இறந்தார். மலையாள நாடகங்களில் உச்சகட்ட சாதனைகள் அவை. சிறுகதைகள் எவையும் எவர் நினைவிலும் இல்லை. அதாவது அவர் தன் வடிவை கண்டடைய அத்தனை பிந்தியிருக்கிறது.

வெகுசிலர் தொடர்ச்சியாக எழுதி மேம்படக்கூடும். இலக்கியத்தில் மாறாநெறி என ஏதுமில்லை. ஆனால் அத்தகையவர்கள் பெரும்பாலும் தர்க்கபுத்தியை நம்பி எழுதுபவர்களாக, சற்று மேலோட்டமான எழுத்தாளர்களாகவே இருக்கக்கூடும் என்பது என் கணிப்பு

இது ஏன் என எண்ணிப்பாருங்கள் எழுத்தில் வளர்ச்சி உண்டு என்றால்,. எழுதி எழுதி மேம்பட முடியும் என்றால், எழுத்தாளர்கள் எழுதும் பிந்தைய ஆக்கங்கள்தானே முந்தையவற்றை விட மேம்பட்டவையாக இருக்கமுடியும்? லா.ச.ராவின் இதழ்கள், ஜனனி, புத்ர, அபித போன்றா பிற்கால எழுத்துக்கள் இருக்கின்றன? கணிசமான எழுத்தாளர்கள் தொடங்கிய இடத்தில் நின்றிருக்கிறார்கள், அல்லது பின்னுக்குச் செல்கிறார்கள் இல்லையா?

எழுதி அடையும் பயிற்சி, அனுபவம் இலக்கியத்தில் எவ்வகையிலும் பயன்படுவதில்லை. அது முழுக்க முழுக்க உள்ளுணர்வின் வெளிப்பாடு. ஆழ்மனத்தின் நிகழ்வு. ஆழ்மனதை மொழியுடன் இணைப்பதற்கான ஆரம்பகட்டப் பயிற்சிக்கு அப்பால் அதற்கு எந்த தேர்ச்சியும் தேவையில்லை.

டி.எஸ்.எலியட் ‘கலை வளர்வதில்லை. கலையின் மூலப்பொருட்கள் மட்டுமே மாறிக்கொண்டிருக்கின்றன’ என்றார். முதல் வாசிப்பில் அதிர்ச்சியடையச்செய்யும் சொற்றொடர். ஆனால் அது உண்மை. நியூட்டனிடமிருந்து ஐன்ஸ்டீன் வளர்ந்திருக்கிறார். கம்பனிடமிருந்து சேக்கிழார் வளர்ந்திருக்கிறாரா என்ன? மானுட நாகரீகத்தின் தொடக்கத்திலேயே பல கலைப்படைப்புக்கள் உருவாகி இன்றுவரை கடக்கமுடியாத சாதனைகளாக நிலைகொள்கின்றன. கம்பனுக்குப்பின் வந்தவன் என்பதனால் நான் கம்பனைவிட மேலாக எதையும் அறிந்திருக்கவில்லை, அடையவுமில்லை. கம்பன் எழுதாத களங்களையே எழுதுகிறேன்

எண்ணிப்பார்த்தால் இந்தக்கூற்றுக்கள் இலக்கியம் என்னும் அசாதாரணமான வெளிப்பாட்டுமுறையை அடையாளம் காட்டும். நாம் சாதாரணமாக பிற அறிவுச்செயல்பாடுகளுடன் இலக்கியத்தையும் ஒன்றெனக் கருதுகிறோம். அதுவே இக்கூற்றுக்களை அறியத் தடையாக அமைகிறது. இதை அறிந்தால் இலக்கியத்தின் தனித்தன்மையை எளிதில் அறியமுடியும்

ஜெ

***

முந்தைய கட்டுரைஒரு கதைக்கருவி
அடுத்த கட்டுரைவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல்