28. அன்னநிறைவு
அடுமனை வாயிலில் பீமன் சென்று நின்றதுமே அடையாளம் கண்டுகொண்டனர். மடைப்பள்ளியர் இருவர் அவனை நோக்க ஒருவன் “உணவா?” என்றான். பீமன் “ஆம்” என்றான். “வருக!” என்று அவன் அழைத்துச்சென்று அடுமனை முற்றத்தில் அமரச்செய்தான். அரிசியும் காயும் அரிந்திட விரிக்கப்பட்ட பழைய ஈச்சம்பாயை எடுத்துவந்து அவன் முன் விரித்ததும் மேலும் இருவர் புன்னகையுடன் அவனை நோக்கினர். பீமன் கால்மடித்து அமர்ந்து அவர்கள் கலங்களில் அன்னமும் அப்பமும் சுட்ட கிழங்குகளும் கொண்டுவருவதை நோக்கினான். அவர்கள் உணவை கொண்டுவந்து அவன் முன் குவித்தனர்.
“குவிக்காதீர்… உண்ண உண்ண அளிப்போம்” என்றார் முதிய மடைப்பள்ளியரான பூர்ணர். “குவித்திட்ட உணவை ஒருவர் உண்ணக் காணும் இன்பத்தை ஏன் இழக்கவேண்டும்? அருள்கொண்ட வயிறு. அனலோன் குடியிருக்க தேர்ந்த ஆலயம்” என்றார் பிறிதொரு மடைப்பள்ளியரான சாலர். மெல்ல அவனைச் சூழ்ந்து அங்கிருந்த அனைவரும் வந்து அமர்ந்துகொண்டனர். “உங்கள் கைகள் காட்டுகின்றன நீங்கள் உணவுண்ணும் ஆற்றல்கொண்டவர் என்பதை” என்றார் சாலர். “அத்துடன் உங்கள் இறுகிய வயிறு காட்டுகிறது நாவில் சுவைகொண்டவர் என்று. உந்தி திரண்ட வயிற்றுக்குள் அனலால் உண்ணப்படாத கொழுப்பு எஞ்சுகிறதென்று பொருள். அது நாச்சுவையை மழுங்கச்செய்யும்.”
ஒவ்வொருவராக சென்று அங்கிருந்த மிகச் சிறந்த உணவுகளை கொண்டுவந்தனர். உச்சியுணவுப்பொழுது முடிந்துவிட்டிருந்தமையால் அப்பால் பந்திக்கூடத்தில் எவருமிருக்கவில்லை. எஞ்சிய உணவு சீறிக்கொண்டிருந்த அனலடுப்பில் கொதித்துக்கொண்டிருந்தது. “பருப்புக்குழம்பு… அதோ அந்தப் பெரிய அண்டாவில்” என்றார் பூர்ணர். “வறுத்தஊன் சற்று ஆறிவிட்டிருக்கிறது. அதை மீண்டும் ஒருமுறை அனலில் காட்டி கொண்டுவாருங்கள்” என்றார் சங்கதர். “சில உணவுகள் தீர்ந்துவிட்டன. நீர் சற்று முன் வந்திருக்கலாம்” என்றார் வச்சர்.
அனைவர் முகங்களும் அவன் உண்ண உண்ண மலர்ந்தபடியே சென்றன. ஒவ்வொருவரும் அவர்கள் சமைத்த மிகச் சிறந்த உணவை அவனுக்கென கொண்டுவந்தனர். “வீரரே, இது என் கைத்திறன். உப்புநோக்கி பாரும்” என்றார் சம்பவர். “இந்தக் கறியை முற்றிலும் புளியே இல்லாமல் சமைத்தேன். தயிர் மட்டுமே” என்றார் உரகர். பீமன் ஒவ்வொரு சுவைக்கும் தலையசைத்தான். அவன் உடலே நாவென்றாகி சுவையில் திளைத்தது. காரக்கறியை பரிமாறிய சுமரிடம் “காந்தார மிளகு!” என்றான். அவர் “ஆம், அதன் மணமெழலாகாதென்று ஒன்று செய்தேன்” என்றார். “மோரில் காய்ச்சி கறியில் விட்டிருக்கிறீர்” என்றான் பீமன்.
அவர் முகம் மலர்ந்து “நீர் அடுமனையாளரா?” என்றார். “அவர் உண்பதைக் கண்டாலே தெரியவில்லையா?” என்றார் சம்பவர். அவன் உண்டபடியே இருந்தான். “இதற்கு நிகராக உண்பவர் இங்குள்ள இளவரசர் கீசகர் மட்டுமே” என்றார் சுமர். “ஆனால் அவருக்கு இத்தனை சுவை தெரியாது. உணவை வென்று கடந்துசெல்ல முயல்பவர் போலிருப்பார்.” அவர்கள் விழி நீர்மைகொள்ள உளம் நெகிழ்ந்திருந்தனர். “தெய்வம் வந்து பலிகொள்வதைப்போல உண்கிறீர், வீரரே. நீர் எவரென்றாலும் சரி, அன்னத்தை ஆளும் தெய்வங்கள் உம்முடன் இருக்கும்” என்றார் சிருங்கர். “அன்னமிட்டு காய்த்த கைகளால் உம்மைத் தழுவி வாழ்த்தவேண்டும் போலிருக்கிறது. உண்பவரைப்போல் சமைப்பவருக்கு இனியவர் வேறில்லை.”
பீமன் “சற்று சோறு” என்று கேட்டான். அங்கிருந்த அனைவரும் வெடித்து நகைத்தனர். இருவர் “இதோ” என்று ஓடினர். சோறு அவன் முன் சரிக்கப்பட்டதும் பீமன் “அந்த ஊன்கறி… அது நல்ல ஆடு” என்றான். “இங்கு ஆடுகள் சுவையுடன் உள்ளன. இந்த ஆட்டின் தோல் மாந்தளிரென ஒளிவிட்டுக்கொண்டிருந்திருக்கும். இரு முன்னங்கால்களுக்கு நடுவே முழைதொங்கியிருக்கும். தொடை பெருத்து நடையில் ததும்பும். குழம்பில் மிதக்கும் கொழுப்பு அதை காட்டுகிறது.” அவர்கள் வியப்புடன் “ஆம், மெய்” என்றார்கள். “ஆடு மிகுதியாக உண்ணும் தழையின் மணத்தையே ஊனில் அறிந்துவிடமுடியும்” என்றான் பீமன். “இது இளங்கீரைகளை உண்ட ஆடு.”
கர்த்தகர் “இன்னும் சற்று கொண்டுவாரும்” என்றார். “நம் உணவுக்காக எடுத்துவைத்தேன்” என்றான் இளைய அடுமனையாளனாகிய சித்ரன். “மூடா, நாம் உண்பதா இப்போது பெரிது? உண்பதற்கென்று தெய்வங்களால் அருளப்பட்டவர் இவர்… கொண்டுவருக!” பீமன் அன்னத்தை குழம்புடன் உருட்டியபடி “இத்தனை சுவையான ஆடுகள் கூர்ஜரத்திலும் சிபிநாட்டிலும் உண்ணக்கிடைத்துள்ளன” என்றான். “கங்கைக்கரைகளில் மழை மிகுதி. ஆடுகளின் தோலில் முடியுதிர்கிறது. அந்த மணம் ஊனிலும் ஊடுருவுகிறது.”
சூரர் “சௌவீரத்தில் ஆட்டு ஊன் எப்படி?” என்றார். பீமன் “அங்குள்ளவை செம்மறியாடுகள். அவற்றின் ஊன் வேறுவகை மணம் கொண்டது. நார்களென நீள்வாட்டில் பிரியும். அவற்றை எண்ணை கலக்காது சுடவேண்டும்” என்றான். “ஆடு மிகுதியாக நடந்திருக்கக்கூடாது. ஆனால் அனைத்துவகை தழைகளையும் நாச்சுவையால் தேடி உண்டிருக்கவேண்டும். சுவையாக உண்ட ஆடு சுவையானது என்பது நெறி.” கூர்மர் உரக்க நகைத்து “பாரதவர்ஷத்தையே நக்கி நோக்கியிருக்கிறீர், வீரரே” என்றார்.
“இந்தக் குழம்பை நான் சமைத்தேன்” என்று மேலும் இரு அப்பங்களை வைத்து கரிய குழம்பை ஊற்றினார் சூரர். “ஆம், அவரைப்பருப்பை கருக்க வறுத்து அரைத்து சற்று பாலும் ஊற்றி ஊன்துண்டுகளுடன் சேர்த்து சமைத்திருக்கிறீர்” என்றான் பீமன். சூரர் நகைத்து “இதை எங்கு உண்டீர்கள் முன்பு?” என்றார். பீமன் “இப்போதுதான் உண்கிறேன். மணத்தால் அறிந்தேன்” என்றான். சூரர் “குழம்புமணத்திலிருந்து அதில் சமைத்துக் கலக்கப்பட்ட அனைத்தையும் அறிவீரோ?” என்றார். பீமன் “ஆம், இதுவரை பிறழ்ந்ததில்லை” என்றான்.
கூர்மர் “இதை உண்டு சொல்லும் பார்ப்போம்” என்று ஒரு வெண்ணிறக்குழம்பை கொண்டுவந்தார். “பச்சைமொச்சையை அரைத்த பாலில் சமைத்த முயலின் ஊன்” என்றான் பீமன் தொலைவிலேயே. “வீரரே, நீர் மூக்கால் முதலில் உண்கிறீர்” என்றார் சூரர். சங்கர் “அதற்கு முன் விழிகளால். அதற்கும் முன் ஆன்மாவால்” என்றார். அவர்கள் சிரித்து கூவினர். “உணவை உண்ணவேண்டியது உணவின் மறுவடிவமான உடல்” என்றார் பூர்ணர். “அன்னம் அன்னத்தை அறிவதே சுவை என்பது என்பார்கள்.”
பீமன் கையை நக்கியபடி அமர்ந்திருக்க பூர்ணர் “மேலும் அன்னமா?” என்றார். பீமன் நாணத்துடன் தலையசைத்தான். திகைப்புடன் “மேலுமா? அய்யோ!” என்றார்கள் அடுமடையர்கள். பூர்ணர் “முகக்குறி நோக்கத் தெரியவேண்டும் அடுதொழிலருக்கு… கொண்டுவருக!” என்றார். அன்னம் கொண்டுவந்து குவிக்கப்பட்டது. “மீண்டும் ஊன்கறியா?” என்றார் பூர்ணர். பீமன் தலையசைத்தான். “பச்சைப்பயிறுடன் சேர்த்து சமைத்த கறி இருக்கிறதா? அதை இவர் இதுவரை உண்ணவில்லை” என்றார் பூர்ணர். “அது உச்சிப்பொழுதிலேயே தீர்ந்துவிட்டது” என்றான் ஒருவன். “பொறுத்தருள்க, வீரரே, நாளை நானே அதை சமைத்து அளிக்கிறேன்” என்றார் பூர்ணர்.
மெல்ல அவர்களின் பேச்சு அடங்கியது. அவன் உண்ணும் ஒலிமட்டும் காட்டில் புலி நடக்கும் ஓசையென உட்செவி மட்டும் அறியும்படி ஒலித்தது. அவன் உண்பதை அவர்கள் விழிநிலைக்க நோக்கி நின்றனர். கை உணவை அள்ளுவதும் உருட்டுவதும் வாய்க்கு கொண்டுசெல்வதும் ஓர் அழகிய நடனம்போலிருந்தன. இதழ்பிரியாது மென்றான். நாவொலி கேட்காமல் விழுங்கினான். ஒவ்வொன்றுடனும் உகந்ததை மட்டுமே சேர்த்துக்கொண்டான். ஊனையும் கிழங்குகளையும் கலக்கவில்லை. காய்கறிகளுடன் ஊனை சேர்க்கவில்லை. வேள்விச்செயலின் ஒத்திசைவு கூடியிருந்தது அவனிடத்தில்.
விரித்த பாயில் பருக்கையும் எஞ்சாமல் உண்டபின் அவன் மெல்ல ஏப்பம் விட்டான். அவ்வோசை அவர்களனைவரையும் உடல்நெகிழ்ந்து அசைவுகொள்ளச் செய்தது. பூர்ணர் கைகூப்பி “எழுந்தருளிய தேவனே, நிறைவுகொண்டு நீர் அளித்த வாழ்த்தை பெற்றோம். எங்கள் குடியும் மைந்தரும் பொலிக!” என்றார். பீமன் கையூன்றாமல் எழுந்து சென்று அருகே இருந்த தொட்டி நீரில் கைகழுவினான். வாய்கழுவி ஓசையில்லாமல் துப்பிவிட்டு மரவுரியால் முகம் துடைத்தபடி வந்தான். பூர்ணர் “யானைபோல் உண்ணவேண்டும் என்பார் என் ஆசிரியர். அவர் சொன்னதை இன்றுதான் கண்டேன்” என்றார்.
பீமன் “நல்லுணவு மூத்தவர்களே, வணங்குகிறேன்” என்றான். “சுக்குநீர் அருந்துக!” என்று கூர்மர் பெரிய சுரைக்குடுவையை கொண்டுவந்து நீட்டினார். அதை வாங்கி உதடுதொடாமல் ஒருதுளியும் சிந்தாமல் அருந்தி முடித்து ஒழிந்த குடுவையை திருப்பி அளித்தான். “அமர்க!” என்ற பூர்ணர் “வெற்றிலையும் நறும்பாக்கும்” என்றார். சம்பவர் கொண்டுவந்த வெற்றிலைச்சுருளை வாங்கி அவன் மென்றான். “கிராம்பு வேண்டுமா?” என்றார் சுமர். “ஆம்” என்றான் அவன். அவர் எடுத்துத் தந்த கிராம்பை கையில் வைத்திருந்தான். “வெற்றிலை மணமறிந்தவர் அது உமிழ்நீருடன் கலந்து மூப்படைந்த பின்னரே கிராம்பு சேர்ப்பார்கள்” என்றார் சம்பவர்.
பூர்ணர் “வீரரே, உமது ஊர் எது? பதியும் குடியும் பெயரும் எவை?” என்றார். “என் பெயர் வலவன். பிறப்பால் ஷத்ரியனாயினும் சூதன் என்று வாழ்வை மேற்கொண்டேன். அடுதொழிலன். மல்லன். சிராவக குடியில் பால்ஹிக நாட்டில் பிறந்தேன்” என்றான் பீமன். “ஆம், உமது மஞ்சள் நிறத்தைப் பார்த்தபோதே நீர் பால்ஹிகர் எனத் தோன்றியது” என்றார் சம்பவர். “நீர் அடுதொழில் மேற்கொண்டது ஏன்?” என்றார் பூர்ணர். “அதை நான் நாளை இங்கு சமைக்கையில் அறிவீர்கள். நாரதர் ஏன் இசை தேர்ந்தாரோ நந்தி ஏன் முழவு தேர்ந்தாரோ அதே காரணத்தால் நான் அடுதொழில் கொண்டேன்.”
பூர்ணர் நகைத்து “நல்ல மறுமொழி… சொல்லெண்ணி உரைக்கப்பட்டது” என்றார். “எங்கள் மாமன்னர் நளன் அடுதொழிலராகவே இறுதிவரை இருந்தார். அறிவீரா?” என்றார் பூர்ணர். “ஆம், அவர் யாத்த நளபாகம், நளரசனா, நளபதார்த்தமாலிகா என்னும் மூன்று அடுகலைநூல்களையும் உளப்பதிவாக கற்றுள்ளேன். ஒவ்வொன்றையும் ஏழுமுறை செய்தும் நோக்கியிருக்கிறேன்” என்றான் பீமன்.
“அவருடைய அடுகலையைப்பற்றி நீர் என்ன எண்ணுகிறீர்?” என்று பூர்ணர் கேட்டார். “சமையலைப்பற்றி அவர் சொல்லும் அத்தனை செய்திகளையும் மிகச் சிறிய அளவுகளில் எடுத்துக்கொண்டு விளக்குகிறார். நளபாகம் என்பதே குறைவாக சமைப்பதன் நுட்பம்தான். அச்சமையலை பல மடங்காக்கலாம். ஆயினும் அது குறைவான அளவுகளால் கற்பனை செய்யப்பட்டதே” என்றான் பீமன்.
“மூத்தவரே, கைப்பிடி அளவு பருப்பு வேகும்போது எழும் மணமல்ல ஒரு மூட்டை பருப்பு வேகும்போது எழுவது. சிறிதளவு பருப்பு வேகும் மணத்தை உணர்ந்து மகிழ்பவர் பெருமளவு பருப்பு வேகும் மணம் கொண்டு வாயுமிழக்கூடும்” என்று அவன் தொடர்ந்தான். “மணமென்பது சுவையே. சமையலில் பொருட்களின் இயல்பு, கலவை, வேகும்முறை, வேகும் நேரம், கிளறும்முறை, கிளறும் நேரம், ஆறும்முறை, ஆறும் நேரம் என எட்டு முதன்மைநெறிகளும் கலத்தின் இயல்பு, நீரின் இயல்பு, அடுப்பின் இயல்பு என மூன்று இரண்டாம்நெறிகளும் கடைக்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு நிகரான முதன்மைநெறி பொருளின் அளவு. அது சுவையிலும் மணத்திலும் வண்ணத்திலும் பெரிய மாற்றங்களை உருவாக்கும்.”
“விந்தை… இப்படி ஒருவர் சொல்லி இதுவரை கேட்டதே இல்லை” என்றார் பூர்ணர். “ஆனால் பருப்பைப் பற்றி நீர் சொன்னதை நான் ஏற்கிறேன்.” பீமன் “நளபாகத்தில் சொல்லப்பட்ட அதே உணவுகள் சிலவற்றை பீமபாகத்தில் நான் சமைத்துக்காட்டுகிறேன். உண்டபின் கூறுக, சுவையிலென்ன வேறுபாடு என்று” என்றான். “ஆம், நாளை சமையுங்கள் வீரரே. நாளை நாங்களும் சிலவற்றை கற்றுக்கொள்கிறோம்” என்றார் சுமர். சூழ்ந்து நின்றிருந்த அடுமனையாளர்கள் “ஆம்! நாளை!” என்று உவகைக்குரலெழுப்பினர்.
மறுநாள் முதற்புலரியிலேயே பீமன் அடுமனைக்கு வந்தான். அப்போது சங்கதர் அடுமனையைத் திறந்து கலங்களை எடுத்துவைத்துக்கொண்டிருந்தார். குளித்து நீர் சொட்டும் குழலுடன் வந்த பீமனை புன்னையெண்ணை ஒளியில் பார்த்த சங்கதர் முதலில் ஏதோ தெய்வ உருவமென்றே எண்ணி மெய்ப்பு கொண்டார். பின்னர் “ஒருகணம் அஞ்சிவிட்டேன். இந்த முன்காலையில் இத்தனை பேருருவுடன் வந்து நிற்கிறீர்கள்…” என்றார். “நெடுநாட்களுக்குப்பின் இன்று பெருஞ்சமையல் செய்யவிருக்கிறேன்” என்றான் பீமன். அவர் புன்னகை செய்து “அதற்கு இத்தனை முற்பொழுதில் வரவேண்டியதில்லை. நம்மவர் எழுந்து வர இன்னும் பிந்தும்” என்றார்.
“நானே அனைத்தையும் செய்யவேண்டும் என்பதே என் விழைவு” என்றபடி பீமன் உள்ளே வந்தான். இடையில் கைவைத்து சுற்றிலும் பலவகையில் கவிழ்க்கப்பட்டிருந்த கலங்களை பார்த்தான். வாய்திறந்த அண்டாக்களும் சருவங்களும் நிலவாய்களும் அவன் பேசும்போது ரீங்கரித்தன. “சில தருணங்களில் இவை உணவுக்கு வாய்திறந்த குழவிகளென தோன்றும். சில சமயங்களில் அன்னைக் கருவறைகள் என” என்றான். “ஆனால் நன்கு கழுவிய கலங்களை நோக்குவதை நான் எப்போதும் விரும்புவேன். நானே கலங்களை கழுவி வைப்பதையும்.”
சங்கதர் புன்னகையுடன் “நான் பிற பணியாளர்களை அவ்வப்போது நோக்கி எண்ணுவதுண்டு, அவர்களுக்கு எப்படி அத்தொழில் சலிக்காமலிருக்கிறது என்று. அடுமனைத்தொழில்போல ஒவ்வொருநாளும் தெய்வமெழும் தொழிலை அவர்களுக்கு அறிய அருளில்லையே என வருந்துவேன்” என்றார். “ஆம், சிற்பத்தொழிலும் கலம்வனைதலும் கலைத்திறன்கள். புரவிபேணுதலும் ஆபுரத்தலும் உயிர்த்தன்மை கொண்டவை. அவை இனியவைதான். ஆனால் அடுமனைத்தொழிலில் அவ்விரண்டும் நிகரென கலந்துள்ளன. இது இணையற்றது” என்றான் பீமன்.
கோட்டையடுப்பு நிரையின் தெற்கு ஓரத்திலிருந்த சிறிய அடுப்பருகே சென்று சுள்ளிவிறகுகளை எடுத்து ஒன்றன்மேல் ஒன்றென வைத்தான். செம்புக்கலத்தில் நீர் அள்ளிவந்து கிழக்குநோக்கி நின்று “ஓம்…” என்றபடி அதை அடுப்பின்மேல் வைத்தான். அனற்கற்களை எடுத்து கைகளில் வைத்தபடி கண்மூடி ஊழ்கத்திலமைந்து அதை உரசினான். அனலெழுந்து மென்பஞ்சில் பற்றிக்கொள்ள அதை விறகுக்கு அடியில் வைத்தான். அடுமனையின் கதவு எவரோ உள்ளே நுழைவதுபோல மெல்ல முனக சங்கதர் திரும்பி நோக்கினார். இளங்காற்று ஒன்று வந்து சுழன்று சென்றது. அனல் மேலெழுந்து சிவந்த இதழ்களாக விரிந்தது.
ரிக்வேதத்தின் அன்னசூக்தத்தை தாழ்ந்த குரலில் பீமன் பாடினான். முழவை சுட்டுவிரலால் மீட்டுவதுபோன்ற அனுஷ்டுப்பு சந்தம். சொல் கேட்டு அன்னத்தின் தேவதை அங்கு வந்து நிற்பதாக சங்கதர் உணர்ந்தார். அறியா நெடுங்காலத்தில் பருப்பொருள் உடலும் உயிரும் எண்ணமும் ஞானமும் ஆக மாறும் பெருவிந்தையை எண்ணிய மூதாதையரின் நெஞ்சிலெழுந்த வரிகள். தொட்டு எடுக்கத்தக்க, உண்டு சுவைக்கத்தக்க, எரித்து எழத்தக்க பிரம்மம். “அளிக்காதவன் அடைவதெல்லாம் வீணே” என மையவரியை ஏழுமுறை சொல்லி கைகூப்பியபின் பீமன் எழுந்தான்.
மடைப்பள்ளி ஊழியர்கள் ஒவ்வொருவராக நீராடி ஈர ஆடையுடன் வரத்தொடங்கினர். சிறிய குழுக்களாக உரக்கப் பேசிச் சிரித்தபடி வந்தவர்கள் மடைப்பள்ளியில் சமையல்பணிகள் தொடங்கிவிட்டிருப்பதை கண்டார்கள். பீமன் ஏழு அடுப்புகளை பற்றவைத்து பெருங்கலங்களை ஏற்றியிருந்தான். “யார் ஏற்றியது பெரிய உருளியை?” என்றார் சூரர். “அவரே ஏற்றினார்… தோள்வலிமை மட்டுமல்ல உடனிணையும் சித்தக்கூரும் கொண்டவர்” என்றார் சங்கதர். “பெருங்கலங்களை எடுத்து உருட்டிச்சென்று உரிய இடத்தில் நிமிரச்செய்யலாம். மிக எளிது” என்றான் பீமன். “யானைகளுக்கு எளியது ஆடுகளுக்கு அல்ல” என்று சங்கதர் நகைத்தார்.
“இதென்ன, இத்தனை பருப்பு?” என்றார் கர்த்தகர். “இன்று ஊருக்கே உணவிடுவோம். அரண்மனை அடுமனையில் உணவுக்கா வறுதி?” என்றான் பீமன். “ஆம், இப்போதே ஊட்டுமணியை ஒலிக்கச் சொல்லுங்கள். இன்று எவரும் நகரில் அடுப்பு மூட்டவேண்டியதில்லை” என்றார் சங்கதர். “எதற்கென்று சொல்வது?” என்றார் கர்த்தகர். சங்கதர் சிரித்து “நேற்று இளவரசர் திருவிடத்தின் மாமல்லன் ஒருவனை வென்றார் அல்லவா? அதன்பொருட்டு…” என்றார். “ஆம், நாம் நிறைவடையச் செய்யவேண்டியது அவரை மட்டுமே. அவருக்காக என்றால் அரண்மனையையே பொளித்து விற்றாலும் ஒன்றும் சொல்லமாட்டார்” என்றார் சூரர். அடுமனையாளர்கள் கூச்சலிட்டு நகைத்துக்கொண்டு வேலைகளில் பரவினர்.
சற்றுநேரத்தில் அங்கே நூற்றுக்கணக்கான கைகள் வேலை செய்யத்தொடங்கின. ஓரக்கண்ணால் திரும்பி அக்கைகளை மட்டும் பார்க்கையில் புறாக்கூட்டங்கள்போல அவை குறுகியும் உறுமியும் சிறகுசரித்தும் தத்திநடந்தும் எழுந்தமர்ந்தும் சிறகடித்துப் பறந்து சுழன்றமைந்தும் அங்கே நிறைந்திருப்பதாகத் தோன்றியது. கிழங்குகளை தோல்சீவினர். காய்களை நறுக்கினர். தேங்காய்களை துருவினர். கீரைகளை ஆய்ந்தனர். பருப்பிலும் அரிசியிலும் கல்களைந்தனர். அப்பால் சிறுசகடமுள்ள வெண்கலத் தள்ளுவண்டிகளில் கொண்டுவந்து இறக்கப்பட்ட உரிக்கப்பட்ட ஊனை மரக்கட்டைகளில் வைத்து வெட்டினர். வேலை தொடக்கத்தில் பேச்சுக்கள் இருந்தன. பின்பு அவை மறைந்து பொருட்கள் தம்மைத்தாமே உணவென்று உருமாற்றிக்கொள்வதுபோன்ற ஒலி மட்டுமே அங்கு நிறைந்திருந்தது.
பூர்ணர் வந்து “அன்னமணி அடித்துவிட்டோம். பன்னிரு நகர்மையங்களில் அதை ஏற்று அடித்துக்கொண்டிருக்கிறார்கள். நகரொலியிலேயே அதை அறியலாம்” என்றார். சங்கதர் “ஆம், முரசுக்கார்வைபோல ஒலிக்கிறது நகர்” என்றார். “உணவுக்கு மட்டுமே இந்த ஓசை எழுகிறது. விழவுக்கும் களியாட்டுக்கும் எழும் ஓசை அலையலையென்று எழும்” என்றார் பூர்ணர். “ஏன்?” ஓர் இளைஞன் கேட்டான். “அது உண்மையான உவகை அல்ல. ஆகவே காற்றில் பறக்கும் பட்டம்போல அது இறங்குகிறது. மீண்டும் உளவிசையால் அதை மேலேற்றுகிறார்கள். மீண்டும் இறங்குகிறது. அன்னம் அப்படியல்ல. அது அனைவரையும் நாவென்றே ஆக்கிவிடுகிறது.”
பீமன் முற்றிலும் சொல்லிழந்து சமையல்பணியில் ஈடுபட்டிருந்தான். “தவமுனிவரின் முகம் கொண்டிருக்கிறார்” என்றார் சங்கதர். “யார் இவர்? அன்னத்திற்குரிய தேவர்களில் எவரேனும் மாற்றுரு கொண்டு வந்திருக்கிறார்களா?” பூர்ணர் புன்னகையுடன் “ஏன் கேட்கிறீர்?” என்றார். “பூர்ணரே, அவர் பொருட்களை எடுப்பதை பார்க்கிறேன். விழியாலேயே அளந்துவிடுகிறார். எதையும் பிறிதொருமுறை நோக்குவதில்லை. சரிபார்ப்பதே இல்லை. ஒவ்வொன்றையும் முன்னரே அறிந்திருக்கிறார்.” பூர்ணர் புன்னகையுடன் “இங்கு எங்கோ நுண்வடிவில் நளமன்னர் வந்து நின்று நோக்கிக்கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்” என்றார்.
வெளியே ஓசைகளெழுந்தன. “கீசகர் அணைகிறார்” என்றார் சங்கதர். “இவ்வேளையில் இங்கு ஏன் வருகிறார்?” என்று பூர்ணர் சலிப்புடன் கேட்டார். வாழ்த்தொலிகள் எழுந்து ஒலித்தன. “அடுமனைக்கு வருகையிலும் வாழ்த்தொலி…” என்றார் சிருங்கர் சிரிப்புடன். “அவர் என்ன போர்க்களத்திற்கா செல்கிறார்? அவர் அடைந்த வெற்றிகளில் பெரிதும் இங்குதானே?” என்றான் ஓர் இளைஞன். “மூடா, உன் நாவை கட்டு. அது உன்னை கழுவிலமரச்செய்ய சூழ்ச்சி செய்கிறது” என்றார் பூர்ணர். “அங்கே நீங்கள் மென்குரலில் சொன்னதை நான் கேட்டேன்” என்றான் இளைஞன். “அடுமனையாளனாக வந்தபின் நான் கற்ற முதற்கலை உதடுகளை கூர்ந்து நோக்குவதுதான்.” பூர்ணர் நகைத்தார்.
இரு வீரர்கள் உள்ளே வந்தனர். முதலில் வந்தவன் ஒரு சங்கை ஊத தொடர்ந்து வந்தவன் “விராடபுரியின் பெரும்படைத்தலைவர், அரசமைந்தர் கீசகர்” என்று கூவினான். அடுமனையாளர்கள் எழுந்து கைவணங்கி நின்றனர். ஓங்கிய பேருடலுடன் கீசகன் உள்ளே வந்தான். இறுகிய தசைக்கோளங்களால் ஆன அவன் உடல் கரிய பாறைக்கூட்டம் போலிருந்தது. உடல் பெருத்திருந்தமையால் தலை மிகச்சிறிதாகத் தோன்றியது. தாடை தடித்து முகவாய் சற்றே முன்நீண்டு ஒரு குரங்குத்தன்மை அவனிடமிருந்தது. நெற்றி உந்தி வளைந்து முடிப்பரப்பு மேலேறியிருந்தது. சிறிய கண்கள் முதலைகளுக்குரியவைபோல மெல்லிய வெண்படலம் மூடி துயிலில் இருப்பவை போலிருந்தன.
வெண்பட்டாடை அணிந்து பொன்னூல் இழைத்த கச்சையில் அருமணிகள் மின்னும் கைப்பிடிகொண்ட குத்துவாளை செருகியிருந்தான். பெண்களின் முலைபோல புடைத்த மார்புகளின்மேல் நீர்த்துளிபோல் மணிமாலை நலுங்கியது. தோள்வளைகளும் கங்கணங்களும் கழல்களும் மணிபதித்த கிளிச்சிறைப் பசும்பொன்னாலானவை. கைகளைத் தூக்கி வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டபோது யானையின் துதிக்கை என தசை இறுகி நெகிழ்ந்தது. முதலில் அவன் விழிகள் பீமனைத்தான் நோக்கின. ஆனால் அவனை நோக்காதவன்போல விழிவிலக்கி சங்கதரிடம் “இன்று விழவென்று எவர் ஆணையிட்டார்கள்?” என்றான்.
“எவரும் ஆணையிடவில்லை. நேற்று நானே வந்து தங்கள் கைகளில் மலைப்பாம்பால் வெள்ளாடு என திருவிடத்துப் பெருமல்லன் நொறுங்குவதை கண்டேன். திரும்பிவந்தபோது ஏதேனும் செய்யவேண்டும் என்று தோன்றியது. மூத்தவரிடம் கேட்டேன். அவர் நம்மால் செய்யக்கூடுவது அன்னமளிப்பது மட்டுமே என்றார்” என்றார். பூர்ணர் “ஆம், மேலும் கொள்ளப்பட்ட உணவுப்பொருட்கள் நிறைய குவிந்துள்ளன. வீணாகக்கூடாதென்று தோன்றியது” என்றார். சிருங்கர் “அத்துடன் அன்னம் வழியாகவே மக்களின் உள்ளங்களுக்கு செல்லமுடியும் என்றும் எண்ணினோம். தங்கள் பெயரை அல்லவா இன்று பல்லாயிரம் பேர் பந்தியிலமர்ந்து உண்ணவிருக்கிறார்கள்?” என்றார்.
முகம் மலர்ந்ததை மறைக்க கீசகனால் இயலவில்லை. ஆனால் உடனே சிரிப்பை மறைத்து பீமனை நோக்கி “அடேய் தடியா, வா இங்கே!” என்றான். பீமன் வந்து வணங்கி நிற்க “எந்த ஊர் உனக்கு?” என்றான். அவன் விழிகள் பீமனின் இறுகிய வயிற்றைத்தான் நோக்கின. “நான் பால்ஹிகன். வலவன் என்று என் பெயர். பயணத்தான். வழியில் இங்கு தங்கினேன்” என்றான் பீமன். “அடுதொழில் அறிவாயா?” என்றான் கீசகன். “நன்கறிந்திருக்கிறார்” என்றார் கர்த்தகர். “என்ன அறிந்திருப்பான்? அடேய், இது அடுதொழிலில் மெய்கண்ட நளமாமன்னர் வாழ்ந்த நிலம். அவர் சொல்வாழும் குடி” என்றான் கீசகன். “ஆம், அறிவேன்” என்றான் பீமன்.
கீசகன் பூர்ணரிடம் “நன்று. உணவு சிறக்கவேண்டும். ஒரு குறையும் இருக்கலாகாது. அரசகுடியினருக்கான உணவு முன்பு எப்போதுமில்லாததாக அமையவேண்டும்” என்றபின் திரும்பிச்சென்றான். இயல்பாக நின்றதுபோல் தயங்கி “நீ மற்போரிடுவாயா?” என்றான். பீமன் “ஆம், ஆனால் அதில் தேர்ச்சி என ஏதுமில்லை” என்றான். “அல்ல, உன் தோள்கள் பெரியவை… அவை போர் பயின்றவை” என்றான் கீசகன். “கற்று மறந்தவை” என்றான் பீமன். “நாம் ஒருமுறை தோள்கோக்கவேண்டும்…” என்று கீசகன் சொன்னான். “அது என் நற்பேறு” என்றான் பீமன். கீசகன் தலையை அசைத்தபின் வெளியே சென்றான்.
பூர்ணர் “மற்போரிடுவதிலேயே வாழ்கிறார்” என்றார். “பாரதவர்ஷத்தில் பலராமர், துரியோதனர், பீமன் ஆகிய மூவர் மட்டிலுமே அவரை வெல்லும் தகைமை கொண்டவர்கள் என்கிறார்கள் சூதர்கள். இடும்பனும், பகனும், ஜராசந்தனும் நிகரானவர்கள் என்று பேச்சிருந்தது. அவர்கள் பீமனால் கொல்லப்பட்டார்கள்.” பீமன் “இம்மூவரையும் மிக எளிதாக வெல்பவரும் இருப்பர்” என்றான். “மூவரையும் வெல்பவர் எவர்?” என்றார் சங்கதர். “அங்கநாட்டரசன் கர்ணன்…” என்றான் பீமன். சிலகணங்கள் அமைதி நிலவியது. “அவனை சிபிநாட்டு பால்ஹிகர் வெல்லக்கூடும். அஸ்தினபுரியின் பீஷ்மர் பால்ஹிகரை வென்றவர்” என்றான் பீமன்.
“ஆம்” என்று பெருமூச்சுடன் பூர்ணர் சொன்னார். “பால்ஹிகரை ஒற்றைக்கையால் வென்றார் பலாஹாஸ்வ முனிவர்” என்றான் பீமன். “அது அப்படியே சென்றுகொண்டிருக்கும் போலும்” என்றான் இளைய அடுமனையாளன் ஒருவன். பீமன் “ஆம்” என்று புன்னகைத்தான். “வீரரே, பலாஹாஸ்வரின் மைந்தனே பீமன் என்கிறார்களே, அது உண்மையா?” என்றான். பீமன் “அதை ஒருவரே சொல்லமுடியும். அவர் சொல்லப்போவதில்லை. பிறர் சொல்லெல்லாம் வீணே” என்றான். “ஆம், அதை விடுவோம். பலாஹாஸ்வரை வெல்லக்கூடுபவர் எவர்?” என்றார் சங்கதர்.
பீமன் எண்ணம்சூழ்ந்தபின் “போர் நிகழ்ந்தால் துவாரகையின் இளைய யாதவன்” என்றான். “அவனா? அத்தனை பெரிய தோள்கள் கொண்டவனா?” என்றார் சம்பவர். “அல்ல. ஆனால் அவன் கைகள் அரவைவிட ஏழுமடங்கு விரைவுகொண்டவை” என்றான் பீமன். “சிறுகுழந்தைகள் தங்கள் கைகளுடன் ஒப்புநோக்க மிகப்பெரிய எடைகளை எடுப்பதை கண்டிருக்கிறீர்களா? ஒருவயதுக் குழந்தை செங்கல்லை தூக்குகிறது. என் கையுடன் ஒப்பிட அதற்கு நிகராக வேண்டுமென்றால் நான் ஓர் எருமையை ஒற்றைக்கையால் தூக்கவேண்டும்.” அவர்கள் “ஆம்” என்று வியப்பொலி எழுப்பினர். “ஏனென்றால் குழந்தை விளையாடுகிறது. இளைய யாதவனும் அவ்வாறே, அவன் தீராத விளையாட்டுப்பிள்ளை.”
அவர்கள் பெருமூச்சுவிட்டனர். பூர்ணர் “அவனை ஒரு நோக்கு காண வாய்க்குமோ என எண்ணிக்கொண்டதுண்டு” என்றார். “கண்டால் அவன் காலடியில் விழுந்து விழிநீர் உகுப்பதையே நம்மால் செய்யமுடியும்” என்றார் சங்கதர். “அவன் யார்? மானுடனேதானா? ஆழிசங்குகதையுடன் அலகிலியில் நிறைந்திருப்பவனே வந்து பிறந்தான் என்கிறார்களே?” என்றார் சம்பவர். “வீரரே, அவரையும் வெல்பவன் உண்டா?” என்றான் இளைஞன். “மூடா, மண்ணில் அவரை எவன் வெல்ல முடியும்?” என்றார் சங்கதர். “வென்றதுண்டு” என்றான் பீமன். அவர்கள் திகைப்புடன் திரும்பினர். “யார்?” என்றார் பூர்ணர்.
“அருகநெறியர்களின் மெய்ப்படிவரான நேமிநாதர். முன்வாழ்வில் அவரை அரிஷ்டநேமி என்றழைத்தனர்” என்று பீமன் சொன்னான். “அது எவ்வண்ணம்?” என்றார் பூர்ணர். “நம்ப முடியவில்லை.” பீமன் “அன்று நான் துவாரகையில் இருந்தேன். அப்போரை என் விழிகளால் கண்டேன்” என்றான். “எப்படி? அந்த வெற்றி நிகழ்ந்தது எவ்வாறு?” என்றார் சங்கதர். “விளையாடுபவன் வெற்றிகொள்வது ஏனென்றால் அப்போது அவன் முற்றிலும் அச்செயலில் இருக்கிறான் என்பதனால்தான். அவனை எதிர்கொண்ட அரிஷ்டநேமியோ முற்றிலும் அச்செயலுக்கு அப்பாலிருந்தார். நமது மெய்யுலகு அவருக்கு கனவென்றிருந்தது. கனவில் நம் ஆற்றல் எல்லையற்றது.”
“பெருந்தோளர் என்று அவரை அருகமுறைமையர் வழிபடுகிறார்கள்” என்றார் சம்பவர். “ஆம், அவர்களின் முழுமெய் உணர்ந்த படிவர்கள் அனைவருமே பெருந்தோளர்கள்தான்” என்றான் பீமன். “ஏனென்றால் உடல்முழுமையே உடலுறுவதன் முழுமை.” அங்கே ஆழ்ந்த அமைதி நிலவியது. சொல்லாடியபடி அவர்கள் விறகுதூண்டி எரிபேணியும் கொதிக்கும் குழம்புகளை கிளறியும் பணியாற்றிக்கொண்டிருந்தனர். “ஆற்றலின் முழுமையைச் சென்றடைந்தார் அருகமெய்யர். அதையே முடிவிலாப் பெருங்கருணை என்கிறார்கள் அவர்கள்” என்றான் பீமன்.
“ஆம், அடுநெறியில் ஒரு சொல் உண்டு. ஆற்றலாகும் உணவு நிறைவடைகிறது. அறிவென்றாகும் உணவு மேன்மையடைகிறது. கருணையென்றாகும் உணவே முழுமைகொள்கிறது” என்றார் பூர்ணர். மூடிதிறந்து முதல்பருப்புக்குழம்பு ஆவி உமிழ்ந்தது. வெந்த கறியின் நறுமணம் எழத்தொடங்கியது. கைகூப்பி “தெய்வங்களே, இங்கு எழுக!” என்றார் பூர்ணர்.