25. அழியாநாகம்
முக்தன் பகல் முழுக்க அந்தக் காவல்மேடையில் அமர்ந்து வெயில் பரவிய காட்டின் இலைப்பரப்பின் அலைகளை பார்த்துக்கொண்டிருந்தான். எப்போதாவதுதான் புல்லிடைவெளிகளிலும் திறந்த பாறைகள் மீதும் இளவரசியின் சேடிகளிலொருத்தி வண்ணச் சிறுபூச்சியெனத் தோன்றி சிறகு என ஆடை பறக்க சுழன்று மீண்டும் மறைந்தாள். அவர்கள் அக்காட்டுக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் பல்லாயிரம் உயிர்ச்செயல்பாடுகளில் ஒன்றெனக் கலந்துவிட்டது போலவே மேலிருந்து நோக்கியபோது தோன்றியது. வண்ணத்துப்பூச்சிகளைப்போல, பொன்வண்டுகளைப்போல, புள்ளிமான்களையும் குழிமுயல்களையும் துள்ளும் வெள்ளிமீன்களையும் போல.
ஒவ்வொரு நாளும் காவல்மாடத்தின் உச்சியில் அமர்ந்து காட்டின் பசுமையை பார்த்துக்கொண்டிருக்கையில் தன் கற்பனையால் அவன் கீழே நிகழ்வனவற்றை தீட்டி விரித்துக்கொள்வதுண்டு. இலைத்தழைப்பின்மீது எழுந்து அமர்ந்து சுழன்ற பறவைகளை, உச்சிக்கிளையில் வந்திருந்து கதிரெழுவதையும் வீழ்வதையும் நோக்கி ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் கருங்குரங்குகளை, கிளைகளுடன் ஒட்டி தேன்கூடுபோல அமர்ந்திருக்கும் மரநாய்களை, கம்பத்தில் கயிற்றில் இழுக்கப்படும் கொடி மேலேறுவதுபோல வந்துகொண்டிருக்கும் தேவாங்குகளை, உச்சிக்கிளை வரை வந்து வானம் நோக்கி மண்விழி சிமிட்டித் திகைக்கும் பழஉண்ணிகளை, காற்றிலாடும் கிளைநுனிகளில் இருந்து தெறிக்கும் நீர்த்துளிகள்போல பறக்கும் அணில்களை அவன் விழிகள் தவறவிடுவதில்லை.
“இங்கு கிடைப்பது எப்போதும் வெள்ளிதான் அங்கிருக்கையில், பின் மீள்கையில் அது பொன்னென்றாகிறது” என்றொரு முறை அவன் தீர்க்கனிடம் சொன்னான். அவன் புன்னகையுடன் “நீ சூதர்பாடல்களை நிறைய கேட்கிறாய். பிழையில்லை… கேட்டவற்றை நினைவில் கொள்ளலாகாது” என்றான். “ஏன்?” என்று அவன் கேட்டான். “நதியென்பது நீர்ப்பெருக்கே. ஆனால் முகில்களும் இலைத்தழைப்புகளின் பாவைகளும் மூடியதாகவே அது எப்போதும் நம் கண்களுக்குப் படுகிறது. காடென்றும் விண்ணென்றும் நாம் அவற்றை ஒருபோதும் மயங்குவதில்லை” என்றான். “இதுவும் பிறிதொரு சூதர் சொல் போலிருக்கிறது” என்று முக்தன் புன்னகைத்தான்.
அங்கு அவர்கள் என்ன விளையாடுவார்கள் என்று முக்தன் எண்ணிக்கொண்டான். நகர்களில் அவர்கள் ஆடும் பலவகையான ஆடல் உண்டென்று அவன் கண்டிருக்கிறான். பட்டுநூல் சுருள்களை எறிந்தாடும் மலர்ப்பந்தாடல். ஒலிக்கும் அரிமணியுருளைகளை ஒருவர் மேல் ஒருவர் எறிந்து ஆடும் மணிப்பந்து. நீர்ப்பரப்பின் மீது சுரைக்காய்க் குடுவைகளை வீசி எறிந்தும் நீந்திப் பற்றியும் ஆடும் அலைப்பந்து. மரங்கள்மேல் கொடிகளைக் கட்டி பற்றித் தொங்கி ஆடி ஒருவரை ஒருவர் துரத்தும் குரங்காடல். அவையனைத்திலும் ஆடுநெறிகள் உண்டு. வெற்றி தோல்வியை வகுப்பதற்கென்று அமைந்தவை அவை. வெற்றி என ஒன்று இருப்பதனால் அதுவே உவகையென்று ஆகிறது. தோல்வி துயரமென்றும் தேர்ச்சி ஆற்றலென்றும் தவறுதல் வீழ்ச்சி என்றும்.
இக்காட்டிற்குள் வருகையில் அந்நெறிகளனைத்தையும் துறந்துவிடவேண்டும். அக்கணங்களில் எது தோன்றுகிறதோ அதை செய்யவேண்டும். மரங்களிலிருந்து நீருக்கு தாவலாம், புல்வெளிகளில் ஓடி கால்தடுக்கி விழுந்துருளலாம். அனைவரும் வெல்லும் ஓர் ஆடல். உவகையன்றி பிறிதில்லாத ஒரு களியாட்டு. அதை இப்பெண்டிருக்கு எவரேனும் கற்றுக்கொடுத்திருப்பார்களா? அங்கு நெறி வகுக்கப்பட்ட ஆடல் சலித்துத்தான் இங்கு வருகிறார்கள். இங்கு நெறிகளை அவர்கள் உதறிவிட்டாலே போதும். பிற அனைத்தும் கைகூடிவிடும். விளையாடுவதற்கு மனிதர்களுக்கு எவரும் கற்றுத்தர வேண்டியதில்லை. மனிதர்கள் குரங்கெனவும் முயலெனவும் மானெனவும் மீன் எனவும் அணில் எனவும் புள்ளெனவும் தாங்கள் மாறக் கற்றவர்கள். பிற எவ்வுயிரும் பிறிதொரு இருப்பென உளம் மாறுவதில்லை. மானுடன் அவ்வாறு மாறக் கற்றபின்னரே அவன் இன்று கொண்டிருக்கும் அனைத்தையும் அறிந்தான். ஊர்களை அரசுகளை குடிகளை அறிவை தவத்தை.
என்ன எண்ணிக்கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்தபோது அவன் புன்னகைத்தான். எப்போதும் மூத்தவர்கள் அவனிடம் சொல்வது அதுதான். ஒரு காவலனாக பணிபுரியும் தகுதியை காவலனுக்கு மீறிய கல்வியாலும் எண்ணங்களாலும் இழந்தவன் அவன். ஒதுக்கு உன் எண்ணங்களை. காவலன் வெறும் கண். படைக்கலத்துடன் நுண்சரடால் பிணைக்கப்பட்ட கண் மட்டுமே அவன். ஆம், கண்ணென்றே இங்கிருப்பேன். நாள் செல்லச்செல்ல என் உடலில் கண் மட்டுமே செயல்படும். பிற அனைத்தும் அணைந்து இருளும். முதுகாவலர் அப்படித்தான் இருக்கிறார்கள். கண்களுக்கு அப்பால் காட்சியை அள்ளிக்கொள்ளும் ஏதுமில்லை.
தொலைவில் ஓர் அலறலைக் கேட்டு அவன் திடுக்கிட்டு எழுந்தான். முதல் மெய்யுணர்விலேயே அது இளவரசியின் குரல் என்று அவனுக்கு எப்படி தோன்றியது என்பதை பிறிதொரு உள்ளத்துள் வியந்தான். அவள் தோழியர் கூவிக் கலைவதை சிலர் அங்குமிங்கும் ஓடுவதை காணமுடிந்தது. அவன் செய்ய வேண்டியதென்ன என்பதை சில கணங்களுக்குள் சித்தம் ஆணையிட கயிற்றுப்படிகளில் கால் தொற்றி ஏறி முரச மேடையை அடைந்து முழவுத்தடியை எடுத்து “இளவரசிக்கு இடர்… இளவரசிக்கு இடர்…” என்று அறையத் தொடங்கினான். அவ்வொலி கேட்டு மேலும் பல இடங்களில் முரசுகள் முழங்கின. காவலர் படையொன்று அம்புகளும் விற்களும் வேல்களும் ஏந்தி ஆணைக்கூச்சல்களுடன் அணிக்காட்டின் வெளிமுற்றத்திலிருந்து ஒன்றையொன்று தொடர்புகொண்டு சரடென நீண்டு வலையென வளைந்து காட்டுக்குள் சென்றது.
இறங்கி அவர்களுடன் செல்லவேண்டுமென்று அவன் விழைந்தாலும் காவல்சாவடியை விட்டுச்செல்லக்கூடாதென்ற கடமையை எண்ணி அங்கு நின்று தொலைகூர்ந்தான். அக்காட்டுக்குள் என்ன நிகழ்ந்திருக்கக் கூடும்? அங்கு கொலை விலங்குகளோ நச்சு நாகங்களோ இல்லை. ஆனால் காட்டில் எதுவும் நஞ்சாகலாம். நஞ்சு பிறப்பது கொம்புகளில், பற்களில், நகங்களில், அலகுகளில், கொடுக்குகளில், முட்களில், கற்களில், வேர்களில், மலர்களில் என நூற்றெட்டு இடங்களில். நாகத்தின் நச்சுப்பல் என ஒவ்வொன்றும் ஏதோ ஒரு முனையில் நஞ்சு கொண்டுள்ளன என்று அவன் கற்றிருந்தான். என்ன நிகழ்கிறதென்று தெரியாமல் அங்குமிங்கும் தெரிந்த அசைவுகளை விழியால் தொட்டு அறிய முயன்றபடி காவல் மாடத்திலேயே சுற்றி வந்தான்.
படையின் வலை காட்டுக்குள் ஊடுருவிச்சென்று மறைந்தது. தீர்க்கன் “என்ன? என்ன நிகழ்கிறது?” என்றபடி மேலேறி வந்து “என்ன நிகழ்ந்தது?” என்று உரத்த குரலில் கேட்டான். “அறியேன்… நானும் நோக்குகிறேன்” என்றான் முக்தன். மதுமயக்கு தெளிந்த மூத்த காவலன் அவன் பின்னால் வந்து “இளவரசியின் குரலல்லவா அது?” என்றான். தொடர்ந்து ஏறிவந்த பிறிதொரு காவலன் “கந்தர்வர்கள். ஐயமே இல்லை. இப்படைகள் சென்று எவரிடம் போரிடப்போகின்றன?” என்றான். “கந்தர்வர்களாயினும் போர் புரிந்து இறப்பது காவலர்களின் கடன்” என்றான் தொடர்ந்து ஏறிவந்த பிறிதொருவன்.
“நான் சென்று பார்க்கிறேன்” என்றபடி முக்தன் நூல்படிகளில் ஊர்ந்தவனாக இறங்கினான். “அதற்கு உனக்கு ஆணையில்லை” என்றான் தீர்க்கன். “ஆம். ஆயினும் இத்தருணத்தில் இங்கு வாளாவிருக்க என்னால் இயலாது” என்றபடி அவன் கீழிறிங்கி காட்டுக்குள் செல்லும் பாதையில் நுழைந்தான். பாதை முனையில் ஒருகணம் திகைத்து நின்று பின்னர் அருகிலிருந்த நீண்ட வேலை கையிலெடுத்துக்கொண்டு உள்ளே புகுந்தான். அதன் கூர்விளிம்பால் முட்செடிகளை வெட்டி அகற்றியபடியும் சிறிய புதர்களை அதன் கோலை ஊன்றி தாவிக்கடந்தும் பாறைகளிலும் விழுந்த மரங்களிலும் காலூன்றி உள்ளே சென்றான். முற்றிலும் திசைமறக்கச் செய்யும் நிழலிருளுக்குள் செல்ல அங்கு கேட்ட பெண்களின் குரல்களே வழிகாட்டின. மீண்டும் மீண்டும் பசுந்தழைகள் அவன் முன் சரிந்து வழிமறிக்க கிழித்துக் கிழித்து முடிவிலாமல் சென்றுகொண்டே இருப்பதுபோல் தோன்றியது.
பின்னர் ஒரு சதுப்பு வளையத்தை அடைந்தபோது அங்கு தேங்கி நின்றிருந்த வெயிலொளியில் கண்கூசி விழி தாழ்த்தி ஒருகணம் நின்றான். குரல்களின் கலவை வந்து செவிசூழ நிமிர்ந்து நோக்கியபோது ஒரு பெண் இளவரசியை கைகளில் தூக்கியபடி வர அவளுக்குப் பின்னால் மற்ற பெண்கள் அலறியும் அழுது அரற்றியும் ஓடி வருவதைக் கண்டான். மறு எல்லையிலிருந்து ஒரே தருணத்தில் தோன்றிய விராடநாட்டுப் படைவீரர்கள் முள்ளம்பன்றி சிலிர்த்துக்கொள்வதுபோல் நூற்றுக்கணக்கான அம்பு முனைகளாக எழுந்தனர்.
காவலர்தலைவன் வேலை நீட்டியபடி “யார் நீ? அரசியை கீழே விடு” என்றான். அவளுக்குப் பின்னால் ஓடி வந்த சேடி “இளவரசியை நாகம் ஒன்று தீண்டியது. இப்புதியவள் அந்த நச்சை முறித்து இளவரசியை காத்தாள். இளவரசி இன்னமும் மயக்கில் இருக்கிறார்” என்றாள். இளவரசியை கையில் வைத்திருந்தவள் “அஞ்சுவதற்கு ஏதுமில்லை” என்றாள். அவளுக்குப் பின்னால் வந்த பிறிதொருத்தி காட்டுக்கொடியில் கட்டி சுருட்டி பொதிபோல் மாற்றப்பட்டிருந்த பெரிய நாகத்தை நீண்ட கழியொன்றின் நுனியில் கட்டித் தூக்கி வந்தாள். அது அப்பொதிக்குள் உடல் நெளிய வெட்டி எடுக்கப்பட்ட நெஞ்சுக்குலையின் இறுதி உயிரசைவுபோல் தோன்றியது.
வேலை தாழ்த்தாமல் “யாரிவள்? எப்படி உள்ளே வந்தாள்?” என்றான் காவலர்தலைவன். “நான் ஒரு அயலூர்ப்பெண். இவ்வழி சென்றேன். மலை உச்சியிலிருந்து இக்காட்டைக் கண்டபோது இது தவம் செய்ய உகந்ததென்று எண்ணி இங்கு வந்தேன்” என்றாள் இளவரசியை கையில் ஏந்தியிருந்தவள். இளங்கருமை நிறம் கொண்டிருந்தாள். வெண்செந்நிறத்தில் பட்டாடை சுற்றி கல்மாலைகளும் ஒளிரும் மணிக்குண்டலங்களும் அணிந்திருந்தாள். அவள் குரல் பெருங்குடம் கொண்ட யாழின் முதல் தந்திபோல இனிய கார்வை கொண்டிருந்தது.
“தவமா? இங்கென்ன தவம்?” என்று மேலும் ஐயத்துடன் கேட்டபடி தலைவன் முன்னால் வந்தான். “நான் ஆட்டக்கலை தேர்ந்தவள். அதையே தவமென கொண்டிருக்கிறேன். அதில் முழுமை அடையும்பொருட்டு இங்கு வந்தேன்” என்றாள் அந்தப் பெண். “இளவரசியை கீழே விடு. இரு கைகளையும் விரித்தபடி பின்னால் செல்” என்றபடி தலைவன் வேலை நீட்டிக்கொண்டு முன்னால் வர எண்ணியிராக் கணமொன்றில் ஒரு கையால் இளவரசியைச் சுழற்றி தோளுக்கு மேல் கொண்டு சென்று மறுகையால் அவ்வேல் முனையைப்பற்றி சற்றே வளைத்து அதன் கீழ் நுனியால் காவலர் தலைவனின் நெஞ்சுக்குழியில் ஓங்கிக் குத்தி அவனை மல்லாந்து விழச்செய்தாள். பிற படைவீரர்களின் விற்கள் நாணொலி எழுப்பியதும் வேலைத் திருப்பி அதன் நுனியை தலைவன் கழுத்தில் வைத்து “வேண்டியதில்லை. வில் தாழ்த்துக! இளவரசியையும் உங்கள் தலைவனையும் இழக்க வேண்டாம்” என்றாள்.
தேள்கொடுக்கென விழியறியா விரைவில் நிகழ்ந்து முடிந்த அவள் கைத்திறனைக் கண்டு வியந்த வீரர்கள் ஒருவரை ஒருவர் நோக்கினர். கீழே கிடந்த தலைவன் மூச்சொலியுடன் “வில் தாழ்த்துக!” என்றான். பின் “நீ எவராயினும் இளவரசிக்கு தீங்கிழைத்தால் இங்கிருந்து அகல முடியாது” என்றான். “தீங்கிழைப்பவள் அவளை காப்பாற்ற வேண்டியதில்லை, மூடா!” என்றபடி அவள் முன்னால் நடந்தாள். அவளைச் சூழ்ந்து இறுகி கூர்கொண்டு நின்ற அம்புகளுடன் வீரர்கள் உடன் சென்றனர். இளவரசியின் கால்கள் நடையில் அசைய வெண்பரல் சிலம்பு குலுங்கும் ஒலி அவர்களின் காலடியோசையுடன் சேர்ந்து எழுந்தது.
அணிக்காட்டுக்கு வெளியே ஆற்றின் கரையில் நின்றிருந்தவர்கள் இளவரசியைத் தூக்கியபடி வந்த அவளைக் கண்டு வியப்பொலியுடன் மேலும் சூழ்ந்து கொண்டனர். இளவரசியை மென்மணலில் படுக்க வைத்து திரும்பி “அந்த பாம்பை கொணர்க!” என்றாள். கொடிகளில் கட்டப்பட்டு நெளிந்துகொண்டிருந்த பாம்பை வாங்கி அதன் முடிச்சுகளை அவிழ்த்தாள். சீறி படம் தூக்கி எழுந்த அதன் விரைவை மிஞ்சும் கைத்திறனுடன் அதன் கழுத்தை பற்றிக்கொண்டாள். அது வால்சொடுக்கி வளைந்து அவள் கைகளைச் சுற்றியது. அருகிருந்த இலையொன்றை பறித்து கோட்டிக்கொண்டாள். நாகத்தின் வாய்க்கு அடியில் சுருங்கி விரிந்துகொண்டிருந்த நச்சுப்பையை கட்டை விரலால் அழுத்தி சொட்டும் இளமஞ்சள் சீழ் போன்ற நஞ்சை இலைக்குமிழியில் எடுத்தாள்.
இயல்பாக கைசுழற்றி அந்தப் பாம்பை நீர்ப்பரப்பில் எறிந்தாள். நீர்மேல் அது சாட்டை சொடுக்கென நெளிந்து பின் ஒளிரும் பரப்பின்மேல் தலையை மட்டும் வெளியே நீட்டி சுட்டுவிரல்கோடு செல்வதுபோல் நீந்தி அகன்றது. அருகிருந்த மூங்கில் குவளையை எடுத்து அதில் நதிநீரை அள்ளி அந்த நஞ்சை அதில் கலந்து கொண்டு வந்தாள். இளவரசியின் தலையைத் தூக்கி தன் மடியில் வைத்தாள். அவள் விழிகள் பாதி விரிந்து வெண்மை காட்டின. உலர்ந்த உதடுகள் வெண்பல்முனைகளால் கடிக்கப்பட்டிருந்தன. இடையிலிருந்த சிறுகத்தியை எடுத்து இறுகியிருந்த அவள் பற்களுக்கு நடுவே செலுத்தி நெம்பிப் பிளந்து திறந்து அந்நச்சுக்கலவை நீரை ஊட்டினாள். மூன்றுமுறை அதை அருந்தியபின் மூச்சுவாங்கினாள் உத்தரை. மேலும் இருமுறை அவள் அந்நீரை ஊட்டினாள். இமைகளைத் திறந்து கண்களுக்குள்ளும் காதுகளிலும் மூக்கிலும் நச்சுநீரை சொட்டினாள்.
மணலைக் குவித்து தலை சற்று மேலே தூக்கி நிற்கும்படி செய்து படுக்கவைத்தபின் “இன்னும் சற்று நேரத்தில் எழுந்துவிடுவார். அஞ்சுவதற்கொன்றுமில்லை” என்றாள். இளவரசி ஒருமுறை விக்கி நுரையை வாயுமிழ்ந்தாள். சேடியர் அருகே நின்று அவள் வாயை நீரால் கழுவினர். மீண்டுமொரு முறை அவள் வாயுமிழ்ந்தாள். அவள் காலில் நாகம் கடித்த இடத்திற்கு மேல் காட்டுக்கொடியால் கட்டப்பட்டிருந்த முடிச்சை அவிழ்த்து சற்று தள்ளி மீண்டும் கட்டினாள். கடிவாயை குறுக்கு நெடுக்காக அம்பு முனையால் கிழித்திருந்தாள். அதிலிருந்து வழிந்த குருதியை அவள் பிழிந்திருந்த பச்சிலைச்சாறு நிணமென்றும் நீரென்றும் தெளியவைத்திருந்தது.
இளவரசியின் கண்கள் அகன்று பின் விரிசலிட்டு திறந்தன. ஒளிக்குக் கூசி மீண்டும் மூடிக்கொண்டபோது இரு முனைகளிலும் நீர் வழிந்தது. பின்னர் ஓசைகளால் தன்னுணர்வு கொண்டு கைகளை ஊன்றி அமர்ந்து சுற்றும் நோக்கினாள். “அஞ்சவேண்டியதில்லை, இளவரசி. தாங்கள் நலமுடனிருக்கிறீர்கள்” என்று அவள் சொன்னாள். “யார் நீ?” என்று இளவரசி கேட்டாள். “என் பெயர் பிருகந்நளை. ஆடற்கலை தேர்ந்தவள். ஆடற்தவத்தின்பொருட்டு இக்காட்டுக்குள் வந்தேன். நாகம் தீண்டி தாங்கள் எழுப்பிய குரல் கேட்டு வந்து காப்பாற்றினேன்” என்றாள். “நான் நாகர்களுடன் இருந்திருக்கிறேன். அவர்களின் நச்சு முறிகளை அறிவேன்.”
உத்தரை “நாகர்களுடன் நீ எதற்கு இருந்தாய்?” என்றாள். புன்னகைத்து “ஆடற்கலையை நெளியும் நாகங்களிடம் அன்றி வேறெங்கு கற்றுக்கொள்ள முடியும், இளவரசி?” என்று அவள் கேட்டாள். “நீ ஆண்மை கலந்தவள் போலிருக்கிறாய்” என்றாள் உத்தரை. “ஆம், நான் இருபாலினள்” என்று அவள் சொன்னாள். சுற்றி நின்றவர்களில் மெல்லிய உடலசைவாக வியப்பு வெளிப்பட்டது. முக்தன் அதை முன்னரே தன் அகம் அறிந்திருந்ததை உணர்ந்தான்.
காவலர்தலைவன் “இளவரசி, தாங்கள் அரண்மனைக்கு திரும்பலாம். தேரிலேயே படுத்து ஓய்வெடுத்தபடி செல்லலாம். அங்கு மருத்துவர்கள் சித்தமாக இருக்கும்படி சொல்கிறேன்” என்றான். “ஆம்” என்றபடி உத்தரை எழுந்து தோழியரின் தோள் பற்றி நின்றாள். “சற்று தலைசுற்றும். விழிநோக்கு அலையடிக்கும். பொழுதுசெல்ல மெல்லிய வெப்பமும் உடலில் தோன்றும். அஞ்சவேண்டியதில்லை” என்றாள் பிருகந்நளை. உத்தரை தேரை நோக்கி நடந்தாள். படியில் கால்வைத்த பின்னர் திரும்பி “நீயும் அரண்மனைக்கு வருக!” என்றாள். “ஆம், வருகிறேன். தங்கள் நஞ்சுமுறி மருந்துகள் மூலிகைகள் சிலவற்றை இக்காட்டிலிருந்து எடுத்தாக வேண்டியிருக்கிறது” என்றாள் பிருகந்நளை.
தேர் சென்றதும் காவலர்தலைவன் “இளவரசியின் உயிர்காத்தமைக்காக நாங்கள் உனக்கு கடன்பட்டிருக்கிறோம்” என்றான். “அதற்கான வாய்ப்பு அமைந்தது” என்றாள் பிருகந்நளை. அவள் திரும்பி முக்தனை நோக்கி “நீர் காவலரா?” என்றாள். “ஆம்” என்றான். “என்னுடன் காட்டுக்குள் வருக!” என்றாள். அவன் உடன் சென்றபடி “நாகங்களே இல்லாத காடென்றால் நாகமுறி மருந்துமட்டும் எப்படி முளைக்கிறது?” என்றான். பிருகந்நளை புன்னகைத்தபோது அம்முகத்திலெழுந்த அழகைக்கண்டு அவன் உளம் மலர்ந்தான். அவள் “நன்று, இளைஞரே! எந்தக் காடும் நாகமெழ வாய்ப்புள்ள ஒன்றே” என்றாள்.
காட்டுக்குள் புகுந்து பச்சிலைகளையும் சில வெண்காளான்களையும் பறித்து இலைப்பொதிக்குள் கட்டிக்கொண்டு வெளியே வந்த பிருகந்நளை முக்தனிடம் “தங்களிடம் புரவிகள் இருக்கின்றனவா, வீரரே?” என்றாள். “ஆம், காவல் புரவிகள் உள்ளன. என் பணி முடிந்தது. இனி சின்னாள் நான் ஊருக்குச் செல்ல முடியும்” என்றான். “என்னுடன் வருக! நான் அரண்மனைக்குச் செல்ல விரும்புகிறேன்” என்றாள். அவன் இன்னொரு புரவியை பெற்றுக்கொண்டு வந்ததும் பிருகந்நளை அதில் ஏறிக்கொண்டாள். அவன் வியந்து நோக்க ஓரவிழியில் நோக்கி “என்ன?” என்றாள். “இத்தனை இயல்பாக புரவி மேல் ஏறும் ஒருவரை பார்த்ததில்லை” என்றான் முக்தன். “இத்தனைக்கும் இது புரவிகளின் நாடென்று பெயர் பெற்றது.”
பிருகந்நளை புன்னகைத்து “சௌவீரமும் புரவிகளின் நாடே. இங்கு புரவிகள் சிட்டுக்களைப்போல. அங்கு அவை செம்பருந்துகள்” என்றாள். “ஆம், சௌவீரம் பெரும்பாலையும் மலைச்சரிவுகளும் கொண்டது என்று அறிந்திருக்கிறேன்” என்று முக்தன் சொன்னான். “அங்கு புரவியே கால்களென்றான மக்கள் வாழ்கிறார்கள்” என்றாள் பிருகந்நளை. அவர்கள் காட்டுப்பாதையில் இணையாகச் சென்றனர். பிருகந்நளையின் புரவி தன் மேல் எடையில்லாததுபோல சீரான தாளத்துடன் முன்னால் சென்றது. அவன் மீண்டும் வியப்புடன் திரும்பிப்பார்க்க “காவடியின் நெறியேதான். இருபுறமும் எடை நிகரென்றாகும் தோளில் எடை குறைவாக இருக்கிறது. உடலை முற்றிலும் சமன் செய்கையில் புரவிக்கு முழு விடுதலை அளிக்கிறோம்” என்றாள். “புரவிக்கலையை நீங்கள் ஏன் பயில வேண்டும்?” என்றான் அவன். “நடனம், போர், புரவியூர்தல் மூன்றும் ஒரு கலையின் மூன்று முகங்கள்தான். உடலை பயிற்றுவித்து முற்றிலும் நேர்நிலையும் சீரமைவும் கொள்ளச் செய்தல்” என்றாள் பிருகந்நளை.
அவர்கள் விராடநகரியின் கோட்டைக்குள் நுழைந்தபோது முன்னரே அவளைப்பற்றி கேட்டிருந்த வீரர்கள் கோட்டை வாயிலில் கூடி நின்று முட்டி மோதியபடி வியப்புடனும் உவகையுடனும் நோக்கினர். ஒரு முதியவர் “இருபாலினத்தவரில் இப்படி ஓர் அழகியை பார்த்ததில்லை” என்றார். அருகிலிருந்த சூதர் “இருபாலினமே தேவர்களுக்குப் பிடித்த மானுட உடல். பெரும்பாலான இருபாலினத்தோர் ஆணின் அழகின்மையும் பெண்ணின் அழகின்மையும் கலந்தவர்கள். சிலரில் இரு அழகுகளும் இருக்கும். ஒத்திசைவின்மையால் அவை அழகின்மையென்றாகியிருக்கும். ஓருடலில் ஈரழகுகளும் நிகரென அமைந்து முற்றிலும் ஒத்திசைவு கொண்டிருந்தால் அதுவே மானுடப்பேரழகாகும்” என்றார். “ஆம், பூசகர் இதைச் சொல்லி கேட்டிருக்கிறேன். இப்போதுதான் விழியால் பார்த்தேன்” என்றான் ஓர் இளைஞன். “இருபாலினத்தவர் இரு பக்கமும் நிகர்செய்யப்பட்ட காவடிகளைப்போல” என்று அப்பால் ஒரு குரல் எழுந்தது.
தன்மேல் இருந்த நோக்குகள் எதையும் பிருகந்நளை அறிந்ததுபோல் தோன்றவில்லை. சற்றே கள்மயக்கில் இருப்பதைப்போல் சிவந்த நீண்ட விழிகள். காற்றிலாடும் மரக்கிளையில் சிறகு குலையாமல் அமர்ந்திருக்கும் சிட்டுபோல தன்னியல்பான புரவியூர்தல். கலையும் ஆடையையும் குழலையும் சீரமைப்பதில் பயின்ற அசைவின் ஆடலழகு. நகரினூடாக அவள் சென்றபோது மாளிகைகள் அனைத்திலும் பெண்கள் முண்டி அடித்து ஒருவரையொருவர் உடலுரசிக்கொண்டு செறிந்தனர். “அவ்வுடலில் எதை பார்க்கிறோம்? பெண்ணையா? ஆணையா?” என்று ஒருத்தி கேட்டாள். “ஆண்கள் பெண்களையே நோக்குவர். பெண்கள் ஆணுடலையும் பெண்ணுடலையும் நோக்குவார்கள். இரண்டிலும் அவர்கள் மகிழும் அழகுகளுண்டு. இரண்டும் ஓருடலில் அமைந்திருக்கையில் நோக்கு விலக்குவதெப்படி?” என்றாள் விறலி ஒருத்தி.
“அவர்களில் அழகென வெளிப்படுவது எது?” என்று ஒருத்தி கேட்டாள். “பெண்ணின் உச்ச அழகென்பது பெண்ணென்ற அசைவுகொண்டு ஆண் இயல்பு வெளிப்படுவது. ஆணில் அவ்வண்ணம் பெண் வெளிப்படுவது. இவள் ஒருகணம் ஆணென்றும் மறுகணம் பெண்ணென்றும் ஒழியாத ஆடலொன்றை ஒவ்வொரு அசைவிலும் நிகழ்த்திச்செல்கிறாள்” என்றாள் விறலி.
அவர்கள் அரண்மனையின் மைய முகப்பை அடைந்ததும் முக்தன் பிருகந்நளையிடம் “நான் காவல் வீரன். இதற்கப்பால் வருவதற்கு எனக்கு ஒப்புதல் இல்லை” என்றான். “வருக, நான் அழைத்துச் செல்கிறேன்” என்று பிருகந்நளை சொன்னாள். அவன் அஞ்ச “என் ஆணையை ஏற்காதவர்களை நான் பார்த்ததே இல்லை, காவலரே. வருக!” என்று புன்னகைத்தாள். அவன் பிறிதொரு எண்ணமில்லாமல் அவளுடன் சென்றான். முதற்காவல்நிலையிலேயே உத்தரையின் இளமருத்துவன் ஒருவன் அவளைக் காத்து நின்றிருந்தான். “தங்களை மருத்துவர்கள் அங்கு அழைத்து வரச்சொன்னார்கள். இளவரசி நலமடைந்துவிட்டார். ஆயினும் கடித்த பாம்பும் நச்சு நிறைந்தது. நாளையோ பின்னாளிலோ நரம்புகள் அதிர்வுகொள்ளக்கூடும். பேச்சோ விரலசைவோ குறைகொள்ள வாய்ப்புண்டு என்கிறார்கள்.”
“ஆம், அதற்காகவே இம்மருந்துளை கொண்டு வந்தேன்” என்றாள் பிருகந்நளை. திரும்பி முக்தனிடம் “வருக!” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். அவன் அவள் இடையின் அழகிய உலைவை, தோள்களின் அசைவை, கைவீசலை நோக்கி விழி பிறிதொன்றை அறியாமல் உடன்சென்றான். இளமருத்துவன் அவளை இட்டுச்சென்றான். இடைநாழிகளைக் கடந்து சிறுசோலை ஒன்றுக்கு அப்பாலிருந்த மருத்துவநிலைக்கு அவர்கள் சென்று சேர்ந்தார்கள். காவலர் இருவர் நின்றிருப்பதைக் கண்டு இளமருத்துவன் “அரசர் வந்திருக்கிறார் போலும்” என்றான். “நீங்கள் வெளியே நில்லுங்கள். நான் சென்று கேட்டு வருகிறேன்” என உள்ளே சென்றான். அவள் அடிமரத்தில் கொடி என இயல்பாக அத்தூணில் சாய்ந்து நின்றாள். இளமருத்துவன் அவர்களை உள்ளே அழைத்தான். உள்ளே விராடரும் அரசியும் பீடங்களில் அமர்ந்திருக்க நடுவே தாழ்ந்த மஞ்சத்தில் மான்தோல்மேல் உத்தரை படுத்திருந்தாள்.
பிருகந்நளை கைகுவித்து இடை வளைத்து வணங்கி “விராடப் பேரரசரை வணங்கும் பேறு பெற்றேன். நான் சௌவீர நாட்டைச் சேர்ந்த பிருகந்நளை. ஆடற்கலை தேர்ந்தவள். கலைதேரும்பொருட்டு எப்போதும் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றாள். அவர் தன் பழுத்த விழிகளால் அவளை நோக்கியபின் “உன்னைப்பற்றி சொன்னார்கள்” என்றார். “என் மகளை காப்பாற்றியதற்காக நான் உன்மேல் அன்புகொண்டிருக்கிறேன். நீ விழைவதை கோரலாம்.” பிருகந்நளை “நான் விழைவது இங்குள்ள ஆடற்கலைகளை கற்றுத்தேர்ந்தபின் விட்டுச்செல்வதை மட்டுமே” என்றாள். “நன்று, அரண்மனையிலேயே நீ தங்கலாம்” என்றார் விராடர்.
அரசி “இவளுக்கு நாகக்குறை உண்டு என நிமித்திகர் பலர் சொல்லியிருந்தனர். இங்கு வந்த புதிய கணியர் அதற்கு மாற்றே இல்லை என்றார். அதையும் மீறி காட்டுக்குச் சென்றிருக்கிறாள். நல்லூழாக ஒன்றும் நிகழவில்லை” என்றாள். “நாகம் காட்டில்தான் இருக்கிறதென்றில்லை” என்றாள் பிருகந்நளை. “ஆம், அதைத்தான் நானும் சொன்னேன். அவள் பேரரசரைப் பெறுவாள் என ஊழ்நெறி உள்ளது என்றார் அமணக் கணியர். அவ்வூழ் அவளை காக்கும்” என்றார் விராடர். “ஊழை நம்பி இருப்பவர் அரசர் அல்ல” என்றாள் அரசி. “என்ன சொல்கிறாய்? நான் ஊழை நம்பி இருக்கிறேனா?” என அவர் சினத்துடன் அரசியை நோக்கி திரும்ப பிருகந்நளை “அரசரைப்பற்றி நான் நன்கறிவேன். தங்கள் வீரத்தையும் நெறியையும் உணர்ந்தே இந்நாட்டுக்குள் வந்தேன்” என்றாள்.
முகம் மலர்ந்த விராடர் “நீ இங்கு விரும்புவதை கற்கலாம். இவள்கூட ஆடல் கற்கிறாள். நீ அறிந்தவற்றை இவளுக்கு கற்பிக்கலாம்” என்றார். அரசி “இளவரசிக்கு எதற்கு ஆடல்? அவளை மணக்கவிரும்பி கலிங்கத்திலிருந்தே ஓலை வந்துள்ளது” என்றாள். “ஓலையா? கலிங்கத்திலிருந்தா? அவர்கள் நம்மை கொல்லைப்பக்கம் கூடையுடன் வந்து நிற்பவர்கள் என்கிறார்கள்” என்றார் விராடர் சினத்துடன். “உங்களை அப்படி சொல்வார்கள்போலும். எங்கள் குலமென்ன என்று அவர்களுக்குத் தெரியும்” என்றாள் அரசி. ஊடே புகுந்த மருத்துவர் சினம்கொண்டு பேசத்தொடங்கிய அரசரைக் கடந்து “இளவரசி சற்று ஓய்வெடுக்கவேண்டும். இவள் கொண்டுவந்த மருந்துகளை எப்படி அளிப்பதென்று பார்க்கிறேன்” என்றார்.
“ஆம், அதை நோக்குக!” என விராடர் எழுந்துகொண்டார். பிருகந்நளையிடம் “அவைக்கு வந்து நான் அளிக்கும் பரிசிலை பெற்றுக்கொள்க!” என்றார். அரசி “அகத்தளத்திற்கும் வா. நானும் உனக்கு பரிசில் அளிக்கவேண்டும்” என்றாள். விராடர் “கலிங்கத்தைப்பற்றி எதன் அடிப்படையில் சொன்னாய்?” என்றார். “என் இளையோன் சொன்னான்” என்றாள் அரசி. “உன் இளையோனுக்கு ஏதும் தெரியாது. அரசுசூழ்தலென்பது உண்டு கொழுத்து தோள்பெருப்பதல்ல.” அவர்கள் பேசியபடி விலகிச்செல்ல புன்னகையுடன் மருத்துவர் பிருகந்நளையை நோக்கி “காய்ச்சல் உள்ளது. இம்மருந்துகள் அதை தடுக்குமா?” என்றார். “ஆம், நாளையே இளவரசியை முன்பென மீட்டுவிடும் இவை” என்றாள் பிருகந்நளை.