நத்தையின் பாதை 1

ahora

உணர்கொம்புகள்

உயிர்களின் வளர்மாற்றத்தில் உருவாகிவந்த மிகநுணுக்கமான உறுப்பு உணர்கொம்புதான். கண்களும்தான். ஆனால் பார்வையின் எல்லை குறுகியது. ஒளியை மட்டும் அறிபவை விழிகள்.  உணர்கொம்புகளைப்பற்றி வாசிக்கையில் நெஞ்சைப்பிடிதுக்கொண்டு  “கடவுளே!” என்று கூவிவிடுவோம்.

சில பூச்சிகளின் தலைமயிர் அளவே உள்ள உணர்கொம்புகள் கண்ணுக்கேத்தெரியாத பல்லாயிரம் நுண்ணிய சிற்றுப்புகளின் தொகைகள். பல கிலோமீட்டர் தொலைவுக்கு அவற்றால் மணங்களையும் ஒலிகளையும் அதிர்வுகளையும் நீர்ப்பதத்தையும் அறியமுடியும். புலியின் உணர்கொம்புகள் அதன் பாதையை வகுக்கின்றன. அதன் உடல்மொழியில் மீசை முக்கியமான கருவி.

இம்மண்ணில் உயிர்கள் வளர்மாற்றம் கொண்ட பெருஞ்செயலுடன் இணைந்தே  உருவானவை உணர்கொம்புகள். எது அவற்றின் சூழலை சமைத்ததோ அது கூடவே உணர்கொம்புகளையும் வடிவமைத்தது. தேனீக்களின் உணர்கொம்புகள் மலர்களின் உறுப்புகளே. புலியின் உணர்கொம்புகள் அக்காட்டின் ஒரு பகுதியே.

உணர்கொம்புகளை இழந்தால் அந்த உயிர் பறிகொடுப்பது எதை? அச்சூழலுடன் அதை இணைக்கும் அனைத்தையும். அதன் கோடிகோடி முன்னோர் வாழ்ந்து அடைந்த ஞானம் அனைத்தையும்..

1995 ல்  ஊட்டி நாராயணகுருகுலத்தில் நான் சந்தித்த ஜெர்மனியப் பேராசிரியர் ஒருவருடன் மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் சென்றிருந்தேன். அகோரவீரபத்ரரின் சிலையை நோக்கி நின்றபின் என்னை நோக்கி “ஒரு பேரழிவுநடனம்” என்றார்.

Danse Macabre  என்பது ஐரோப்பிய நடுவரலாற்றுக் காலகட்டத்தைச் சேர்ந்த ஒரு கலைக்குறியீடு. இறப்பு என்பது மண்ணில் நிகழ்வதாயினும் மண்ணிலுள்ள எதையும் பொருட்படுத்தாத ஒரு பெருநிகழ்வு என்பது அதன் பொருள். அது சார்ந்த குறியீடுகளை நான் மேரி கெரெல்லியின் மாஸ்டர் கிறிஸ்டியன், உம்பர்ட்டோ ஈக்கோ வின் நேம் ஆஃப் த ரோஸ் போன்ற நாவல்களில் வாசித்தும் இங்க்மார் பர்க்மானின் செவந்த் ஸீல் போன்ற படங்களில் பார்த்தும் இருந்தமையால் அத்தருணத்தில் அந்தச் சொல் பெரிய திறப்பாக அமைந்தது.

நடராஜர் சிலையருகே வந்ததும் நான் “இது பிரபஞ்சப்பெருநடனம். அந்த பேரழிவுநடனம் இந்த ஆடவல்லானின் இடதுமேற்கையில் தழல் என அமைந்துள்ளது. மறுகையில் அதை வெல்லும் படைப்புசக்தி உடுக்கின் வடிவில் உள்ளது” என்றேன். அவர் ”ஆம், ஆனந்தகுமாரசாமியின் நூலை வாசித்திருக்கிறேன்” என்றார். இந்தியக்கலையின் தனித்தன்மையைக் குறித்த சிந்தனைகளைத் தொடங்கிவைத்த ஆனந்தக்குமாரசாமியின்  சிவநடனம் ஒரு முன்னோடி நூல்.

சற்றுநேரம் நோக்கிநின்றபின் நடக்கையில் அவர் என்னிடம் “இதைப்பற்றி இங்கு என்ன எழுதப்பட்டுள்ளது?” என்றார். நான் சொல்லத் தொடங்குகையில் “அதெல்லாம் பழையவரிகள். நவீன இலக்கியத்தில், தத்துவத்தில்?” என்றார். “இதுவரை சொல்லப்படாததாக என்ன உள்ளது?” நான்  எண்ணி எண்ணிப்பார்க்க ஒன்றும் நினைவுக்கு வரவில்லை.

“கவிதைகூடவா?” என்றார் பேராசிரியர் ஏமாற்றத்துடன். நான் ஞானக்கூத்தனின் மேஜைநடராஜர் என்ற கவிதையைச் சொன்னேன். “அது ஒர் எளிய புறக்கணிப்பு. நான் கேட்டது இந்த தொல்படிமத்தைத் தொட்டு மேலும் முன்னே சென்ற ஒரு புத்தம்புதிய வெளிப்பாட்டை” அவருடைய பச்சைக்கண்கள் இரக்கமற்றவை என எனக்குப்பட்டன. நான் சலிப்புடன் ”அப்படி ஏதும்  இங்கில்லை” என்றேன்.

அவர் மேலும் சற்றுநேரம் சிலையை நோக்கிவிட்டு “நீங்கள் உணர்கொம்புகளை இழந்துவிட்டீர்கள்” என்றார். உண்மையில் முகத்தில் காறி உமிழப்பட்டவனாக உணர்ந்தேன். அதன் பின் என்னால் அவரிடம் பேசவே முடியவில்லை. அவர்மீது ஆழ்ந்த வெறுப்புதான் எழுந்தது. திரும்ப அவருடன் திருவனந்தபுரம் சென்று வற்கலை நாராயணகுருகுலத்தை அடைவதுவரை நான் பெரும்பாலும் ஒன்றும் பேசவில்லை.

ஆனால் அவர் சொன்னது உண்மை என நான் உள்ளூர உணர்ந்துகொண்டும் இருந்தேன். அன்று தமிழிலக்கியத்தில் பின்நவீனத்துவக் கோட்பாடுகள் உரக்கப்பேசப்பட்டுக்கொண்டிருந்தன. மேலைச்சிந்தனையை எப்பாடுபட்டேனும் கொஞ்சமாவது புரிந்துகொள்வதற்கான முயற்சிகள் என்று மட்டுமே அவற்றைச் சொல்லமுடியும். ஆனால் மேலைப்பண்பாட்டின் படிமங்களையும் உணர்வுகளையும் அதன் வரலாற்றையும் அறியாமல் அதை எய்துவது கடினமானதாகவும் இருந்தது.

ஆனால் நவீன எழுத்தாளர்களுக்கு அதைவிட இந்தியச் சிந்தனைமரபை அறிவதும் இந்தியப்பண்பாட்டுவெளியை உணர்வதும் கடினமானது என்று அப்போது தெரிந்தது. அதற்கான பயிற்சியே நம் சூழலில் இல்லை. ஒரு சாதாரண ஐரோப்பியச் சிறுவனுக்கு ஐரோப்பியக்கலை, இசை, இலக்கியம் ஆகியவை குடும்பச்சூழலில் இருந்தும் கல்விநிலையங்களில் இருந்தும் அறிமுகமாகின்றன. நமக்கு அப்படி எந்தப்பயிற்சியும் இல்லை. நமது கல்விமுறை என்பது மிகஎளிய தகவல்களை நினைவில்நிறுத்துவதற்கான பயிற்சி மட்டுமே. அதோடு உயர்நிலை வரை நம் கல்விமுறை ஐரோப்பியக்கல்வியின் தொலைதூர நிழல்தான்.

நம்மால் மதுரை ஆலயத்தின் சிற்பங்களை உணரமுடியாது. இந்தியாவின் தொன்மங்களின் ஆழத்தை கனவுகளில் எழுப்பிக்கொள்ள முடியாது. இந்தியப்பண்பாடு சார்ந்த ஓர் உள்ளுறையை இலக்கியங்களில் இருந்து விரித்து எடுக்கமுடியாது. தமிழ் நவீன எழுத்தாளர்களில் மரபிலக்கியம் வாசிப்பவர்கள் எத்தனைபேர்?  நாம் வரலாற்றின் போக்கில் உணர்கொம்புகளை இழந்த பெருந்திரள்.

விளைவாக நாம் எழுதும் இலக்கியங்களும் ஐரோப்பிய இலக்கியமரபின் தொலைதூறல்கள் மட்டுமே. தந்தை ஓவியம் வரையும்போது அச்சாயங்களால் தானும் கிறுக்கிவிட்டு தந்தையிடம் காட்டி பாராட்டுக்கு ஏங்கிநிற்கும் சிறுவனைப்போலத்தான் இந்திய நவீனஇலக்கியங்கள் உள்ளன. குனிந்து நோக்கி அளிக்கப்படும் ஒரு பரிவான பாராட்டு பெரும் கொண்டாட்டமாகப் படுகிறது.

நுண்ணுணர்வுள்ள ஐரோப்பியர்களுக்கு இந்திய மரபின், பண்பாட்டின் விரிவும் வரலாறும் தெரியும். நம் எழுத்துக்களையும் கலையையும் பார்த்தும் “பாவம் உணர்கொம்பு இழந்தவர்கள்” என உதட்டைப்பிதுக்கிவிட்டுக் கடந்துசெல்கிறார்கள்.

 ***

தடம் ஜூன் 2017 இதழில் வெளிவந்தது

முந்தைய கட்டுரைமலேசியா கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 28