‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 25

24. கரவுக்கானகம்

flowerவிராடபுரிக்கு வடக்கே மலைச்சரிவில் கோதையை நோக்கி இறங்கும் தப்தை, ஊர்ணை என்னும் இரு காட்டாறுகளுக்கு நடுவே இருந்த செழித்த சிறுகாடு அரசகுடிகளின் வேட்டைக்கும் களியாட்டுக்குமென ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு வேடர்களோ வேட்டையர்களோ நுழைவது தடுக்கப்பட்டிருந்தது. மாமன்னர் நளனின் ஆட்சிக்காலத்தில் இரு ஆறுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான சிற்றோடைகளை வெட்டி ஒன்றுடன் ஒன்று பின்னிக் கலந்து உருவாக்கப்பட்ட அந்த ஈரநிலத்தில் மலர்மரங்களும் கனிமரங்களும் கொண்டு ஒரு அணிக்காடு அமைக்கப்பட்டது. பின்னர் காலத்தால் மறக்கப்பட்டு விராடபுரி உருவானபோது சுவடிகளிலிருந்து கண்டடையப்பட்டு மீட்டெடுக்கப்பட்டது அது.

NEERKOLAM_EPI_25

தப்தோர்ணம் சிறு யானைக்கன்று சினம் கொண்ட வேழம் என்றாவதுபோல செறிந்த பச்சை நுரைக்குவியலென வானின் கீழ் நின்றிருந்தது. வெய்கதிர்க் கொடிகள் நுழைந்திறங்கமுடியாத பச்சை இருள் நிறைந்த அந்த அடர்வுக்குள் வாழ்ந்திருந்த யானைகளும் கரடிகளும் சிறுத்தைகளும் அரசப்படையினரால் வேட்டையாடப்பட்டும் துரத்தப்பட்டும் முழுமையாக அகற்றப்பட்டன. விழிக்கினிய மான்களும் முயல்களும் அன்னங்களும் மயில்களும் கிளிகளும் கொண்டுவந்து நிரப்பப்பட்டன. ஓடைக்கரைகளில் அரசகுடியினர் தங்குவதற்குரிய கொடிமண்டபங்களும் கிளை விரித்த மரங்களின் கவர்களில் இரவு துயில்வதற்குரிய ஏறுமாடங்களும் அமைக்கப்பட்டன.

அங்கு விண்ணுலாவிகளான கந்தர்வர்களும் தேவர்களும் வந்திறங்கி நிலவிலாடி நீர்விளையாடி இசைமுழக்கி மலர்ப்பொடி சூடி புலரிக் கதிரெழுவதற்கு முன் மீள்வதாக கவிஞர்கள் பாடினர். அங்கு நிகழ்ந்தவை என பல தெய்வக்கதைகள் சூதர்களால் பாடப்பட்டன. பின்னர் அந்நகரின் இனிய கரவு எண்ணம்போல அந்தக் காடு மாறியது. அந்நகர் குறித்த அனைத்துக் கவிதை வரிகளிலும் அக்காடு தொற்றி வந்தது. அவ்வரிகளில் உணர்த்தப்பட்ட சொல்லாப்பொருளை விராடநாட்டுக் குடிகள் ஒவ்வொருவரும் இளமையிலேயே உணர்ந்திருந்தனர். தங்கள் ஆழத்துக் கனவுகளில் அவர்கள் அங்கே உலவினர். அங்கு அறிந்து திளைத்தவற்றை ஒருபோதும் அவர்கள் பகிர்ந்ததில்லை. அங்கு ஆற்றியவற்றை அவர்களின் நாக்கு அவர்களின் செவிக்கு உரைப்பதில்லை என்றும் அங்கு அவர்களின் ஒரு விழி பார்த்ததை பிறிதொரு விழிக்கு காட்டுவதில்லையென்றும் சூதர்கள் பாடினர்.

விராடபுரியின் ஒவ்வொருவரும் உடல் முதிர்ந்து உளம்வற்றி உட்கரந்தவை அணுவெனச் சுருங்கி இறப்பு நோக்கி கிடக்கையில் ஓசையின்றி உலர்ந்த உதடுகள் அசைந்து சொல்லும் சொற்களில் ஒன்று அக்காட்டின் பெயர். அவர்கள் தெற்கு நோக்கிச் செல்கையில் பதைக்கும் உயிரென பின்தொடர்ந்து செல்லும் எஞ்சிய விழைவுகள் அவர்கள் சிதையிலெரிந்து நீரென்றும் புகையென்றுமாகி புடவியில் கலந்த பின்னர் நீள்மூச்சுடன் திரும்பி அந்தப் பசுங்காட்டுக்கே சென்றன. அங்கு தாங்கள் வாழ்ந்து கண்டெடுத்து கரந்துவைத்த ஒவ்வொன்றையும் தேடிச்சென்று தொட்டுத் தொட்டு மீண்டன. எதையும் எடுத்து வெயிலுக்கும் காற்றுக்கும் காட்ட அப்போதும் அவை துணிவுகொள்ளவில்லை. அவை விரலறியா யாழுக்குள் காத்திருக்கும் இசை என கரந்து அங்கிருந்தன.

நாற்பத்தொன்றாவது நாள் விண்ணிலிருந்து குளிர் காற்றுகள் என மூதாதையர் இறங்கி வந்து அவர்களை கைபற்றி மேலெடுத்தனர். மண்ணில் அவர்களின் கொடிவழியினர் வைத்த அன்னமும் நீரும் அவர்களை கீழிருந்து உந்தி மேலேற்றின. முதல் வானில் நின்று இறுதியாக நோக்கி விலகிச் செல்கையில் அக்காட்டையே அவர்கள் கூர்ந்தனர். அவ்விறுதி விழைவே மீண்டும் புவிப்பிறப்பென சொட்டி முளைக்க வைத்தது அவர்களை.

flowerதப்தோர்ணம் ஒருவராலும் பார்க்கப்படாமல் விராடபுரியின் உள்ளங்களை ஆட்சி செய்தது. சொல்லில் எழுந்தவை சொல்லை உண்டு வளர்ந்து சூழ்வதன் முடிவிலா மாயங்கள் தப்தோர்ணத்தை வரைந்தன. அக்காட்டின் எல்லைகளுக்கு வெளியே அதற்குள் நுழையும் பன்னிரண்டு கைவழிகளின் தொடக்கத்திலும் விராடமன்னன் அமைத்த காவல் மேடைகளில் வில்லில் தொடுத்த அம்புகளுடன் வீரர்கள் நோக்கியிருந்தனர்.

பின்புலரியின் வெள்ளி வெளிச்சத்தில் தொலைவில் பல்லக்குகளின் குவைமுகடுகள் ஆயர்பெண்களின் பால்குட நிரை என ஒளியுடன் அசைவதைக் கண்ட காவலன் ஒருவன் எழுந்து விழிமேல் கைவைத்து கூர்ந்து நோக்கியபின் தன் இடையிலிருந்த கொம்பை எடுத்து மும்முறை ஊதினான். அதற்கு மறுமொழியாக பல்லக்கு நிரையின் காவலர்தலைவன் ஊதிய கொம்பு இளவரசி உத்தரையும் சேடியரும் கானாடுவதற்கு வந்து கொண்டிருப்பதை அறிவித்தது. பிறிதொரு கொம்பூதி மறுமொழி அளித்தபின் இளவரசியின் வருகையை பிறகாவல் மாடங்களுக்கு அறிவிக்கும் பொருட்டு நூலேணியில் தொற்றி காவல் மாடம் அமைந்திருந்த மரத்தின் ஏழாவது கவருக்குச் சென்று அங்கிருந்த சிறிய மரத்தட்டின்மீது நின்றபடி நீள்கொம்பை வாயில் பொருத்தி அடிவயிற்றிலிருந்து காற்றெடுத்து மூன்று முறை பிளிறலோசை எழுப்பினான். அவ்வோசைக்கு எதிர்வினையாக அடுத்த காவல் மாடம் ஆம் ஆம் ஆம் என்றது.

அச்செய்தி அனைத்து காவல் மாடங்களுக்கும் சென்று சேர்ந்தபோது எதுவும் நிகழா நாள்காவலில் ஒவ்வொரு புலரியிருளலும் பிறிதொன்றே என காலத்தை அளாவிய காவலர்கள் முகம் மலர்ந்தனர். எட்டாவது மாடத்தின் காவலர் தலைவன் நிகும்பன் “இக்காட்டிற்குள் இதற்கு முன் இளவரசி வந்தது ஏழாண்டுகளுக்கு முன்பு. அன்று அவருக்கு வயது பதினொன்று. நாகமொன்றைக் கண்டு அஞ்சி அன்று அவருக்கு வலிப்புநோய் வந்தது. அதன்பின் இங்கு வந்ததே இல்லை” என்றான். “நாகமா?” என்றான் ஒருவன். “நீரில் இறங்கி அலையிலாடிய வேர் அது என தெரிந்தபோது இளவரசியின் வலிப்பு உச்சம்கொண்டிருந்தது” என்றான் நிகும்பன்.

மூத்த காவலனாகிய கிரணன் “அன்று இந்தக் காட்டின் கந்தர்வர்களும் கின்னரர்களும் அவரை பார்த்திருக்க மாட்டார்கள். வண்ணத்துப்பூச்சிகளையும் பொன்வண்டுகளையும் மட்டுமே பார்த்துவிட்டு திரும்பிச் சென்றிருப்பர்” என்றான். “ஏன்?” என்று இளங்காவலன் முக்தன் கேட்டான். கிரணன் அவனை நோக்கி சிரித்து “மலர்களில் நீ இதழ்களை மட்டுமே பார்க்கிறாய். கந்தர்வர்களும் கின்னரர்களும் பெண்களில் பெண்மையழகை மட்டுமே பார்க்கிறார்கள்” என்றான். பிற காவலர்கள் சிரிக்க அவர்களை மாறி மாறி நோக்கியபின் முக்தன் “அதில் என்ன பிழை?” என்றான். “பிழையேதுமில்லை என்றுதான் சொன்னேன்” என்றான் முதியவன். மீண்டும் காவலர் சிரித்தனர்.

குடிகாரர்களுக்குள்ள விழிகளும் நரம்புகள் புடைத்த தளர்ந்த உடலும் கொண்டிருந்த சூதனாகிய சர்விதன்  “இளையோனே, பெண்களின் குழலுக்கு நீளத்தையும் ஒளியையும், விழிகளுக்கு மலர்வையும், உதடுகளுக்கு செம்முழுப்பையும் அளிப்பவர்கள் கந்தவர்கள். அவர்களின் உடலில் முலைகள் கனிந்தெழுவதும் இடை மெலிந்து ஒழிவதும் தொடை பெருத்து விரிவதும் அவர்களால்தான். அது பனைச்சாறு நிறைந்த கலத்தில் ஒரு கிண்ணம் பழைய கள்ளை உறைகுத்தி மூடி வைப்பதுபோல. கன்னியருக்குள் நேற்று வரை வாழ்ந்த கன்னியர் கொண்ட கனவுகளின் ஒரு கைப்பிடி ஊற்றப்படுகிறது. பின்பு சுவைதுழாவும் நாக்குகளுடன் கின்னரரும் கந்தர்வர்களும் சூழ்ந்து நின்று காத்திருக்கிறார்கள். கன்னியின் இனிமை நொதித்து வெறிதிகழ் கள்ளென்றாகி மூடியைத் திறந்து நுரைத்தெழுகிறது. அவ்வெண்புன்னகையைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சிக் குரலெழுப்புகிறார்கள். அவர்கள் அவளில் பெய்து விளைய வைப்பவை அனைத்தும் அவர்கள் நுகர்வதற்குரியவைதான்” என்றான்.

“திரும்பத் திரும்ப இக்கதைகளைக் கேட்டு சலித்திருக்கிறேன்” என்றபடி முக்தன் எழுந்தான். “கன்னியர் கந்தர்வர்களால் புணரப்படுகிறார்கள் என்றால் ஆண்கள் எதற்கு?” என்றான். கிரணன் உரக்க நகைத்து “கந்தர்வர்களுக்கு உடல் ஏது? அவர்கள் காமம் கொண்ட ஆணுடலில் புகுந்து பெண்களை அடைகிறார்கள்” என்றான். “ஆண்கள் பெண்களை அடைவதேயில்லையா?” என்றான் முக்தன்.  “அடைவதுண்டு. மைந்தரைப்பெற்று வளர்ப்பதுண்டு. ஆணும் பெண்ணும் கொள்ளும் எளிய காமமே இங்கு நம்மைச் சூழ்ந்து மிகுதியும் நிகழ்கிறது. ஆணுடலிலும் பெண்ணுடலிலும் கூடி தெய்வங்கள் அடையும் காமம் பிறிதொரு இடத்தில் பிறிதொரு முறையில் நிகழும் வேள்வி.”

“அப்பெற்றி கொள்ளும் மானுட உடல்கள் சிலவே. அதைப் பெற்றபின் அக்கணமே அதிலிருந்து விலகி அதை சுடரெனப் பேணி நிறைவடையும் தகைமை கொண்டவர் மிகச் சிலர். பிறர் அதை தங்கள் எளிய உடல்களில் மீண்டும் நிகழ்த்த எண்ணி முயன்று ஏமாற்றம் கொண்டு சினந்து மேலும் கீழிறங்கி விலங்குகளென்றாகி மாய்கிறார்கள்” என்றான் சர்விதன். “பல்லாயிரம் சிப்பிகளில் ஒன்றில் மட்டும் முத்து விளைவதுபோல. இறைநிகழ்ந்த காமம் தவம் நிறைந்த முனிவரின் சித்தத்திற்கு நிகரானது.”

“வெறுங்கதை. ஒருபோதும் நாம் நமது மெய்யான உவகைகளை அடைவதில்லை. இதோ, மூன்றாண்டுகளாக இக்காவல் மாடத்துடன் நான் கட்டப்பட்டிருக்கிறேன். எனது தந்தை கோட்டையில் ஒரு காவல் மாடத்துடன் கட்டப்பட்டிருந்தார். அங்கு இல்லத்தில் நம் மகளிர் அடுமனைகளுடன் கட்டப்பட்டிருக்கின்றனர். கட்டுத்தறியில் சுற்றிச் சுற்றி வந்து சூழ்ந்திருக்கும் பெருங்கானகமொன்றை கனவு காண்கிறோம். அப்பால் பெரிய வட்டமென தொடுவான் வேலி” என்றான் முக்தன் கசப்புடன் துப்பியபடி. “நமக்கு அனைத்தும் கனவுகளிலேயே அளிக்கப்பட்டுள்ளது. கனவுகளிலேயே நம் உச்சமும் நிகழமுடியுமென்று சூதர்கள் நம்மிடம் சொல்கிறார்கள்” என்றான்.

குடிகாரச்சூதன் நகைத்து “அது மெய். ஆனால் அதனுடன் இணைத்துக்கொள்ள வேண்டியது இரண்டு. அரசர்களும் முனிவர்களும்கூட கட்டுத்தறியில் சுற்றிவருபவர்களே. மானுடராகப் பிறந்த அனைவருக்கும் அவர்கள் ஈட்டி எய்தி நிறைய வேண்டிய அனைத்தும் கனவுகளிலேயே உள்ளன” என்றான். முக்தன் அவனை ஒருகணம் பார்த்துவிட்டு சலிப்புடன் முகம் சுளித்தான். “நீ விரும்பினால் அக்கனவுகளில் ஒரு மிடறை என்னிடமிருந்து அருந்தலாம். இது சூதர்களின் கனவு உறைகுத்தப்பட்ட இன்கடுங்கள்” என்றான் சர்விதன். முக்தன் சினத்துடன் திரும்பி நூலேணியில் இறங்கி கீழே சென்றான். “மிக இளையோன். ஏதுமறியாதவன்” என்றான் கிரணன். “இளமை தனக்கு முடிவிலா வாய்ப்புகள் உள்ளது என்னும் மாயையால் வாழ்த்தப்பட்டிருக்கிறது” என்றான் சர்விதன்.

முக்தன் கீழிறங்கி அந்த அணிக்காட்டின் தளிர்களையும் மலர்களையும் நோக்கியபடி நின்றான். எங்குமுள்ளன தளிர்களும் மலர்களும். இக்காட்டிற்குள் அவை ஒவ்வொன்றும் சொற்களும் அணிகளுமாக நிற்கின்றன. இங்குள்ள ஒவ்வொன்றும் பொருள் கொண்டதாகின்றன. இது முன்பெப்போதோ கவிஞர் சொல்லில் எழுப்பி பின்னர் தெய்வங்களால் மண்ணில் இயற்றப்பட்டது என்கின்றனர். சொல்திரண்ட பெருங்காவியமென ஒற்றை மெய்மையை உணர்த்தி நிற்கிறது என்கின்றன.

இரண்டாண்டுகளாக அக்காட்டின் எல்லையினூடாக அவன் சுற்றி வந்தும் கூட ஒருமுறையேனும் உள்ளே சென்றதில்லை. அதன் மேல் தெற்குக் காற்று அலையெழுப்பிச் சுழன்று வருவதைக் கண்டதுண்டு. நிலவு குளிர்ந்து இறங்கி சூழ்வதை, பனிவெண்மை மூடி காடு முற்றிலும் மறைவதை, அனைவரும் துயில முழங்கால் கட்டியமர்ந்து முழு இரவும் நோக்கி அமர்ந்ததுண்டு. முதற்புலரி ஒளியில் இலைநுனிகள் வேல்கூர் கொள்வதை, மலர்கள் அனலென பற்றிக்கொள்வதை, சுனைகள் விழிதிறப்பதை பார்த்து நிற்கையில் ஒருமுறையேனும் அனைத்துத் தளைகளையும் உடைத்துக்கொண்டு அதற்குள் இறங்கிச் செல்லவேண்டுமென்று தோன்றியதுண்டு.

“அது தடை செய்யப்பட்டுள்ளது” என்று அவன் தோழனாகிய தீர்க்கன் சொன்னான். “அரசத்தடை மட்டுமல்ல, தெய்வங்களின் தடையும் கூட. அரசத்தடையை மீறி அதற்குள் சென்ற பல குடிகளுண்டு. அவர்கள் அனைவரும் சித்தம் பிறழ்ந்து சிரிப்பும் அழுகையும் என கொந்தளிக்கும் நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை அரசர்கள் தண்டித்ததில்லை. இங்கிருக்கும் தெய்வங்கள் ஆணையிடுவதென்ன என்பதை பிறர் அறியட்டும் என்பதற்காகவே அவர்கள் விட்டு வைக்கப்படுவார்கள்.”

“நமது தெருவிலேயே பத்தாண்டுகளுக்கு முன்பு ஒருவர் இருந்தார். பதறும் விழிகளுடன் சிரித்தும் அழுதும் கொப்பளித்தபடி கைகளை வீசி நடனமிட்டபடி தெருக்களை சுற்றி வருவார். சற்றேனும் சித்தம் மீள்கையில் மது தேடி அலைவார். குடித்து மூக்கு வழிவார சாலையோரத்தில் கிடக்கையில் புரியாத மொழியில் எதையோ சொல்லி கைசுட்டுவார். அந்தப் பெரும் பித்து அவ்வாறே உறைந்து நிற்க ஒருநாள் தெருமுனையில் இறந்து கிடந்தார். காட்டின் களி மயக்கால் கொல்லப்பட்டவர் அவர் என்று என் தந்தை எனக்கு சுட்டிக்காட்டி சொன்னார்” என்றான். “அங்கு செல்வது அடாது என்றார் எந்தை. ஆயிரம் கைகளால் அது நம்மை அள்ளி இழுக்கையில் அன்னையை தந்தையை குடியை குலத்தை எண்ணி ஒழிய வேண்டும் என்றார். நான் அது ஏன் நம்மை இழுக்கிறதென்று தந்தையிடம் கேட்டேன். ஏனெனில் நாம் அங்கிருந்துதான் வந்துள்ளோம் என்று தந்தை சொன்னார்” என்றான் தீர்க்கன்.

காட்டின் எல்லையென அமைந்த ஊர்ணையின் உயர்ந்த கரையின் நீர்மருத மரங்களின் வேர்களினூடாக தாவிச் சென்றுகொண்டிருக்கையில் முக்தன் அச்சொற்களை நினைவு கூர்ந்தான். அங்கிருந்துதான் கிளம்பி இருக்கிறோமா என்ன? ஒரு கணம் ஏதோ அயல் தொடுகையென உளம் சிலிர்க்க அவன் திரும்பிப் பார்த்தான். மலைகளை முலைகளாகக்கொண்டு கோதையை ஆடையென அணிந்து நீரோடைகள் நரம்புகளென பின்னிப்பரவியிருக்க மல்லாந்து கிடந்த அந்நிலமகளின் தொடைஇடை சிறுகருங்காடு என்று அது அவனுக்கு தோற்றமளித்தது. ஓயா ஊற்றுகள் சதுப்பென அமைந்த நிலத்திற்கு மேல் எழுந்த வறனுறல் அறியா பசுஞ்சோலை.

மூன்றாவது காவல்மாடத்தை அடைந்தபோது மேலிருந்து தீர்க்கன் கையசைத்து அழைத்தான். முக்தன் இரு கைகளையும் வாய் அருகே குவித்து “என் பணி முடிந்தது” என்றான். “மேலே வா!” என்று தீர்க்கன் கூவினான். முக்தன் தொங்கவிடப்பட்டிருந்த வடத்தைப்பற்றி அதன் முடிச்சுகளில் கால்வைத்து விரைந்தேறி காவல் மாடத்தை அடைந்தான். அங்கு இருவர் வாய்திறந்து எச்சில் கோடுகள் பாறையின் காய்ந்த ஓடைகளென வெளுத்துத்தெரிய துயின்றுகொண்டிருந்தனர். தீர்க்கன் “நேற்றிரவு எனக்கு துயில் நீக்கப்பணி” என்றான். “இவர்கள் விழித்தெழவில்லையா?” என்று அவன் கேட்டான். “நேற்று மாலையே கள்ளருந்தத் தொடங்கினர். நள்ளிரவில் ஒருமுறை விழித்துக்கொண்டு மீண்டும் அருந்தினர். வெயில் முகத்தில் படத்தொடங்கிவிட்டது. உண்மையில் இப்போதுதான் ஆழ்துயிலுக்குள் சென்றிருப்பர். எனக்கு வேறு வழியில்லை” என்று தீர்க்கன் சொன்னான்.

கைகளை நெளித்து சோம்பல் முறித்து “நான் காலைக்கடன்களை கழிக்க வேண்டும். சற்று உணவருந்த வேண்டும்” என்றான் தீர்க்கன். “சென்று வரவேண்டியதுதானே? இவ்வேளையில் ஒரு காவல் மாடத்தில் எவருமில்லையென்றால் என்ன?” என்றான் முக்தன். “இங்கு நான் பணிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாகின்றன. இன்றுவரை இக்காட்டிற்குள் எவரும் நுழைந்ததில்லை. கீசகர் நான் இங்கு வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் வேட்டைக்கு வந்தார் என்கிறார்கள். நான் எதையும் பார்த்ததில்லை” என்றான் தீர்க்கன் சலிப்புடன். “காட்டிற்கு காவலிடப்பட்டிருப்பது பாரதவர்ஷத்திலேயே இங்குதான் என்று எண்ணுகின்றேன். ஆனால் எப்படியாயினும் இது அரசப்பணி. ஆணையிடப்பட்டதை நாம் நிறைவேற்றியே ஆகவேண்டும்.”

முக்தன் “ஆம். அந்த உணர்வுக்கு பழகியிருக்கிறோம்” என்றான். “இன்று காலை நானும் இந்த வீண்நடிப்பை ஏன் தொடரவேண்டும், இவர்களைத் துயிலவிட்டு கீழிறிங்கிச் சென்று நீராடி உணவுண்டு நிழலில் சற்று ஓய்வெடுப்போம் என்றுதான் எண்ணினேன். அவ்வெண்ணம் எழுந்த சில கணங்களுக்குள்ளேயே இளவரசி கான்நுழையும் கொம்போசை எழுந்தது” என்றான் தீர்க்கன். “அதைத்தான் நானும் எண்ணிக்கொண்டேன். இத்தனை ஆண்டுகளுக்குப்பின் இது என்ன ஒரு புதிய நிகழ்வு?” என்றான் முக்தன். “இவர்கள் நிமித்திகர்களை நம்பியே வாழ்பவர்கள். இளவரசி இந்நாளில் இத்தனை பொழுது இந்தக் காட்டில் கழிப்பது நன்று என்று ஏதேனும் நிமித்திகன் சொல்லியிருக்கக்கூடும்” என்றான் தீர்க்கன்.

முக்தன் “இங்கு அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?” என்றான். “நீராடலாம். மலராடை புனைந்து விளையாடலாம். இங்கிருந்தே பார்த்தாயல்லவா? எத்தனை அழகிய சுனைக்கரைகள், ஓடைமருங்குகள், மலர்ச்சோலைகள்!” முக்தன் “விந்தைதான். இத்தனை அழகிய இடம் பெரும்பாலும் எவராலும் பார்க்கப்படாமல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இங்கு மலரும் கோடிக்கணக்கான மலர்கள் எவ்விழிகளாலும் பார்க்கப்பட்டிருப்பதில்லை” என்றான். தீர்க்கன் நகைத்து “மூடா, மண்ணில் விரியும் மலர்களில் மிக மிகச் சிலவே மானுடரால் பார்க்கப்படுகின்றன. அழகுணர்வுடன் விழிகளால் மலர்கள் பார்க்கப்படாமல் உதிர்வதை எண்ணி வருந்திய ஏதோ கவிஞன்தான் கந்தர்வர்களையும் கின்னரர்களையும் கற்பனை செய்தான். நலம் நோக்கப்படாத ஒரு மலர்கூட உதிர்வதில்லை என்று கவிதை யாத்தான்.”

முக்தன் “நீ கீழே சென்று வா. நான் அமர்ந்திருக்கிறேன்” என்றான். “உன் சலிப்பை புலரியில் என்மேல் ஏற்றிவிடுவாய்.” தீர்க்கன் நகைத்து “மீண்டும் ஒரு கொம்பொலி எழக்கூடுமென்று எதிர்பார்த்திருக்கிறேன்” என்றான். “ஏன்?” என்றான் முக்தன். “இளவரசி உள்ளே சென்றிருக்கிறார். அங்கு கொடிமண்டபங்களும் தளிர்க்குடில்களும் ஏறுமாடங்களும் என்ன நிலையில் இருக்கின்றன என்று அறியோம். அவற்றைப் பேணுவதற்கு பணிக்கப்பட்டுள்ள ஏவலர்கள் எழுபது பேர். இங்கு நான் காவலுக்கு அமர்ந்தபின் ஒருவரைக்கூட பார்த்ததில்லை. பெரும்பாலும் உள்ளே சென்றதுமே சினங்கொண்டு கூச்சலிடப்போகிறார். குடில்களில் முயல்களும் மான்களும் இருக்கும். ஏறுமாடங்களில் மலைப்பாம்புகள் துயிலக்கூடும்” என்றான்.

முக்தன் நகைத்தபடி “நன்று… அவர்கள் தேடிவருவது அங்கு அரண்மனையில் இல்லாத சிலவற்றைத்தானே? நீ சென்று வா” என்றான். தீர்க்கன் எழுந்து கைகளை விரித்து மீண்டும் நன்றாக நெளிந்து “அமர்ந்திருக்கையில் நம் உடல் பிறிதொன்றாகிறது. அதனுள் நீர்கள் உறைந்து நார்போலாகின்றன” என்றான். பின்னர் கைகளை வீசி “புதையல் காக்கும் பாம்புகளைப்போல ஒரு பணி” என்றான். முக்தன் “அச்சொல்லையே இங்கு உரைக்கலாகாது. இளவரசி நாகப்பிழை கொண்டவர் என்கிறார்கள். இப்போது வந்துள்ள அமணக் கணியனும் அதையே சொல்லியிருக்கிறான்” என்றான். “சொல்லாதபோது மேலும் ஆற்றல்பெறுவதே நாகம், அறிவாயா?” என்றான் தீர்க்கன். “அது வேர்களில் விழுதுகளில் கொடிகளில் வால்களில் ஓடைகளில் எல்லாம் தன்னை தோன்றச்செய்யும் மாயம் கொண்டது.”

சிரித்துக்கொண்டே அவன் இறங்கிச்சென்ற பின்னர் கைகளை முழங்கால் மேல் வைத்து கால் மடித்தமர்ந்து முக்தன் காட்டை நோக்கிக் கொண்டிருந்தான். ஏன் காட்டை பார்க்கவேண்டும்? காவலனாக நான் பார்க்க வேண்டியது இதன் வெளிப்பக்கத்தைத்தான். இணையாக ஓடும் ஊர்ணையின் அலைகளை, இதைக் கடந்து யானையோ கரடியோ வருகின்றனவா என்று. எதிரிப்படைவீரர்களின் படைக்கலன்களின் ஒளி எங்கேனும் திரும்புகின்றதா என்று. ஆனால் வந்த நாள் முதல் பெரும்பாலான தருணங்களில் காட்டை நோக்கியே திரும்பியிருக்கிறேன். எதுவோ என்னில் பிழையென உள்ளது.

அவன் தொலைவில் இலைத்தழைப்புகளுக்கு நடுவே அசைவுகளை கண்டான். எழுந்து நின்று கூர்ந்து பார்த்தபோது அங்கு சுனையின் கரையில் தேர்கள் நின்றிருப்பது தெரிந்தது. உத்தரையும் அவள் சேடியரும் ஆற்றுக்கரையில் ஆடைமாற்றி இளைப்பாறிவிட்டு காவலர் தொடர காட்டுக்குள் சென்று மறைந்தனர். பொன்னிறப் பட்டாடைகள் அணிந்த அவர்களின் உருவங்கள் மிகச்சிறிய வண்டுகள்போல மின்னி ஊர்ந்து மறைந்தன. பின்னர் தேர்களைத் திருப்பி காட்டின் எல்லையைக் கடந்து ஆற்றின் கரையில் இருந்த மரநிழல்களில் அணைத்து நிறுத்தினர். புரவிகள் அவிழ்க்கப்பட்டு இளைப்பாறும் பொருட்டு விடப்பட்டன. தேரோட்டிகளும் ஏவலர்களும் ஆங்காங்கே நிழலில் அமர்ந்து ஓய்வு கொள்ளத்தொடங்கினர்.

காட்டிற்குள் அப்பெண்கள் மட்டும் தனியாகச் செல்கிறார்கள் என்று எண்ணியபோது அவனுள் சிறிய அமைதியின்மை உருவாகியது. கதைகள் சொல்லும் கந்தர்வர்களையும் கின்னரர்களையும் உள்ளூர தானும் நம்புகிறேனா என்று கேட்டுக்கொண்டான். கந்தர்வர்களையல்ல என்று தானே சொல்லிக்கொண்டான். இக்காட்டிற்குள் அஞ்சுவதற்கென ஏதுமில்லை. நச்சுப்பாம்புகள்கூட. பாம்புகளை தேடித்தேடி அழித்திருக்கிறார்கள். பாம்பு கடக்க முடியாதபடி சுற்றிலும் நீர் வேலியிட்டிருக்கிறார்கள். மிஞ்சி பாம்பு வருமென்றால் வேட்டையாட கீரிகளை வளர்த்து நிரப்பியிருக்கிறார்கள்.

தன் நிலையழிவை விந்தையென உணர்ந்தபடி அவன் எழுந்தான். ஒருமுறை உடல் விரித்து சோம்பல் முறித்தான். எப்படியும் ஒரு பாம்பு எஞ்சிவிடும் என்று எங்கோ ஏதோ சூதர் பாடலில் கேட்ட வரி நினைவுக்கு வந்தது.

flower“எனது பெரிய தந்தை கருவூலத்தில் காவலராக இருந்தார். அவருக்கு மணமாகவில்லை. குடியில்லாமையால் எங்களுடன்தான் இருந்தார். ஒவ்வொரு நாளும் பெரிய தோல் மூட்டைகளில் பொன் நாணயங்கள் உள்ளே வந்துகொண்டும் வெளியே சென்றுகொண்டும் இருக்கும். ஆண்டுக்கு மூன்று வெள்ளி நாணயங்களை ஊதியமாகப்பெற்று நாற்பதாண்டுகாலம் பணியாற்றி முதிர்ந்து இறந்தார்” என்றான் தீர்க்கன். “இந்த அணிக்காட்டின் காவலனாக நான் வந்தபோது பெரியதந்தையைத்தான் எண்ணிக்கொண்டேன்.” முக்தன் புன்னகை செய்தான். அவர்கள் இருவரும் மட்டும் காவல்மாடத்தின்மேல் அமர்ந்திருந்தார்கள். உச்சிவெயில் எழுந்து அமைய இலைவாடும் மணம் காட்டின் மீதிருந்து வந்துகொண்டிருந்தது.

பெரியதந்தை இறப்புமஞ்சத்தில் என்னிடம் தன் இறுதி விழைவை சொன்னார். ஒரு பொன் நாணயத்தையாவது கையில் வைத்து பார்க்கவேண்டும் என்று. நான் ஓடிச்சென்று என் தந்தையிடம் சொன்னேன். “காவலர்களுக்கேது பொன் நாணயம்?” என்றார் அவர். “ஆனால் இறுதிவிழைவு… அதை நிறைவேற்றுவது நம் கடமை” என்றார் என் அன்னை. என் தாய்மாமன் “நம் குலக்கோவிலில் வீற்றிருக்கும் மூதாதையர் காலடியில் பொன்நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளன. பூசகரிடம் சொல்லி ஒன்றை பெற்றுகொண்டு வந்து அவரிடம் அளிப்போம். அதை தொட்டபின் இறக்கட்டும். தீட்டு கழித்து திரும்ப வைத்துவிடுவோம்” என்றார்.

நான் ஓடிச்சென்று ஆலயத்துப் பூசகரிடம் தாய்மாமன் சொன்னபடி கோரிக்கையை சொன்னேன். பொன்நாணயங்களை மூதாதையரின் காலடியிலிருந்து பெயர்த்தெடுக்க இயலாது என்று அவர் மறுத்துவிட்டார். நான் உண்மையில் அப்போதுதான் அவை பொன் நாணயங்கள் என்றே அறிந்தேன். கொன்றை மலரிதழ் அளவுக்கு சிறிய மஞ்சள் நாணயங்கள் மூதாதையரின் இரு கால்களுக்கும் நடுவே களிமண் பீடத்தில் பதிக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த இருவரிடம் பெரியதந்தையின் இறுதி விழைவு என்று சொன்னேன். அவர்களும் சினத்துடன் பொன்நாணயங்களை பெயர்த்தெடுப்பது மூதாதையரை சிறுமைப்படுத்துவது என்றார்கள். ஒருவர் சினமும் இளக்காரமுமாக “வேல் தாங்கி காவல்நின்ற மறவனுக்கு பொன் நாணயம் மேலென்ன விழைவு? அடுத்த பிறவியில் வைசியனாகப் பிறக்க திட்டமிடுகிறானா என்ன?” என்றார். பிறர் வேண்டுமென்றே உரக்க நகைத்தனர். அழுதபடி நான் திரும்பி வந்தேன்.

எந்தையிடம் சொன்னபோது “ஆம், நான் அதை எண்ணினேன்” என்றார். என் தாய்மாமன் எப்போதும் ஒரு படி கடந்து சென்று எண்ணுபவர். “ஒரு வெள்ளி நாணயம் கொடுங்கள்” என்றார். வெள்ளி அரைநாணயம் ஒன்றை எடுத்து மஞ்சளை அம்மியில் உரசி அவ்விழுதை அதில் நன்கு பூசி இருமுறை துடைத்து அன்னையிடம் அளித்தார். “விளக்கை சற்று தாழ்த்திவிட்டு இதை பொன் நாணயம் என்று அவர் கையில் கொடு” என்றார். என் அன்னை தயங்கினாள். “கொடு! அன்றி ஏங்கி அவர் உயிர் துறக்கக்கூடும்” என்றார் தாய்மாமன்.

அன்னை தயங்கிய காலடிகளுடன் சென்று பெரியதந்தை அருகே மண்டியிட்டு “மூத்தவரே, தாங்கள் கோரிய பொன்நாணயம்” என்றாள். இறுதி மயக்கத்திலும் அவர் உடல் ஒருமுறை விதிர்த்தது. வலது கால் இழுபட்டுத் துடித்தது. இரு கைகளையும் மலரவைத்து பல்லில்லாத வாயில் உதடுகள் படபடக்க “எங்கே?” என்றார். வலக்கையில் அந்த வெள்ளி நாணயத்தை வைத்தார் அன்னை. விழிகளை சரித்து ஒருமுறை அவர் அதை பார்த்தார். அந்த முகத்தில் விரிந்த புன்னகையை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். ஆம் என்பதுபோல் இருமுறை தலையசைத்தபின் விழிகளை மூடிக்கொண்டார். சிறகுதிர்ந்து விழுந்த வண்டுகள்போல இருவிழிகளும் அசைந்தன.

அவரின் உடல் ஓய்ந்ததை நான் திகைத்தவன்போல நோக்கி நின்றேன். தந்தை பதறியபடி “அந்த வெள்ளி நாணயத்தை எடுத்துவிடு, உடனடியாக” என்றார். தாய்மாமன் “ஏன்?” என்று கேட்க “இப்போது அவர் மானுடரல்ல. இப்போது அவருக்குத் தெரியும்” என்றார். திகைத்தவர்போல தாய்மாமன் காலடி வைத்து வெளியே சென்று நின்றார். அன்னை பெரியதந்தையின் மூடிய விரல்களைப் பிரித்து அந்த நாணயத்தை எடுக்க முயன்றாள். இறுதி மூர்ச்சையில் அவர் தன் கைகளை முறுக்கிப் பற்றியிருந்தார். தாய்மாமன் அறைக்கு வெளியே நின்றபடி “சற்று போகட்டும்… உடல் தளரட்டும். நரம்புகள் இன்னும் இறக்கவில்லை” என்றார். “இல்லை இல்லை எடுத்துவிடு” என்றார் தந்தை.

அந்தத் தருணத்தின் அழுத்தத்தை தாள முடியாமல் நான் பின்னால் நகர்ந்து சுவரோடு ஒண்டிக்கொண்டேன். “முடியவில்லை. இறுகப்பற்றியிருக்கிறார்” என்றாள் அன்னை. தந்தை முன்னால் சென்று குனிந்து அவ்விரல்களைப் பிடித்து ஒடிப்பதுபோல விரித்து நாணயத்தை எடுத்தார். அவர் கைகளில் மஞ்சள் படிந்திருந்தது. பொன் நாணயம் மீண்டும் வெள்ளியென்றாகியிருந்தது. “அதை எங்கேனும் வீசிவிடுங்கள்” என்றாள் அன்னை. “இல்லை. அது இங்கிருக்கலாகாது. இங்கிருந்தால் அவர் மீண்டும் இங்குதான் வருவார்” என்று தந்தை சொன்னார். “இதை நாம் வடக்குக் காட்டில் வீசிவிடலாம்” என்று தாய்மாமன் சொன்னார். “என்ன சொல்கிறாய்?” என்று தந்தை கேட்க “அவர் அங்குதான் செல்வார்” என்றார்.

என் தாய்மாமன் அப்போது இந்தக் காட்டின் காவலராக இருந்தார். அந்த நாணயத்தை ஒரு சிறு மரக்குலுக்கையில் போட்டு குலதெய்வத்தின் கோயிலில் ஒரு மூலையில் கொண்டு ஒளித்து வைத்தார். மூத்ததந்தையை சிதையேற்றி நீராடி ஊண்நீத்து துயிலொழிந்து மறுநாள் பாலூற்றி நினைப்பொழிந்தபின் அந்தச் சிமிழை எடுத்து வந்து தன் காவல் மாடத்தில் நின்றபடி மும்முறை தலைக்கு மேலே சுழற்றி உள்ளே வீசினார். இந்தக் காட்டில் எங்கோதான் அது இருக்கிறது.

முக்தன் சிரித்தபடி “ஆம். அப்படி ஒரு வழக்கம் இங்குண்டு. இறந்தவர்களுக்குரியவை என்று கருதப்படும் பொருட்களை இங்கு கொண்டு வீசுகிறார்கள்” என்றான். தீர்க்கன் “சில நாட்களுக்குப்பின் என் அன்னைக்கு ஒரு கனவு வந்தது. பூத்துச் செறிந்த அணிக்காடொன்றுக்குள் அவள் சென்றுகொண்டிருக்கிறாள். இலைகளை விலக்கி புதர்களைக் கடந்து. தரையெங்கும் மஞ்சள் மலர்கள் பொழிந்து மூடியிருக்கின்றன. அந்த மலர்களை கைகளால் அகற்றி அகற்றி அவள் எதையோ தேடினாள். ஓர் இடத்தில் கொன்றைமலரொன்று கைக்கு சிக்கியது. கையில் எடுத்தபோது அது மலரல்ல உலோகம் என்று தெரிந்தது. ஒளிக்காக அங்குமிங்கும் திருப்பி அதை பார்த்தாள். கூர்ந்து நோக்க நோக்க அது மங்கலடைந்துகொண்டே சென்றது. ஆனால் கைகள் சொல்லின அது பொன் நாணயம் என்று.

விழித்துக்கொண்டதும் ஓடிவந்து தந்தையை உலுக்கி எழுப்பி அக்கனவை சொன்னாள். திண்ணையில் படுத்திருந்த தாய்மாமன் எழுந்து வந்து “ஆம், அது பொன்னாகிவிட்டது” என்றார். அவர்கள் மூவரும் உரக்க நகைத்து பேசிக்கொண்டிருந்தனர். பாயில் எழுந்தமர்ந்து நான் அவர்களின் உவகையை பார்த்துக்கொண்டிருந்தேன். பெரியவர் இறந்து பன்னிரு நாட்களுக்கு அவர்களை பேரெடையென ஏறி அழுத்திக்கொண்டிருந்த ஒன்று எழுந்து மறைந்ததன் விடுதலையை கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் இருவரும் சிலகணங்கள் சொல்லின்றி வேறேங்கோ விழிநட்டு அமர்ந்திருந்தார்கள். தீர்க்கன் எழுந்து “இன்றிரவும் எனக்கே காவல்பணி… நான் சற்று துயில்கிறேன்” என்றான். “நான் விழித்திருக்கிறேன். நீ துயில்கொள்” என்றான் முக்தன்.

முந்தைய கட்டுரைஒரு விளக்கம், ஒரு வம்பு, ஓர் ஆரூடம்
அடுத்த கட்டுரைபெண்களின் எழுத்துக்கள்