‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ –24

23. அன்னமும் காகமும்

flower“நள மாமன்னர் பேரரசி தமயந்தியின் சொல்பணிந்தவராக, அணிக்கூண்டுப் பறவையென இருந்தபோது எவரும் எதையும் உணரவில்லை. அவர் அவளிடமிருந்து விடுபட்டு அவளை முற்றிலும் மறந்தவர்போல் புரவிப்போர்க்கலையில் ஈடுபட்டு நிகரற்ற படையொன்றை அமைத்தபோதுதான் அனைத்தும் தொடங்கின” என்றார் சுதமர். “அரசி தமயந்தி அரசுசூழ்தலில் குருநகரியின் தொல்லரசி தேவயானியைப் போன்றவர் என்கின்றனர் புலவர். அரசரோ களத்தில் தேவர்தலைவனுக்கு நிகரானவர். அவர் புரவிகள் விண்ணில் பறப்பவை என்று சூதர்பாடல்கள் பாடுகின்றன.”

புன்னகையுடன் “உண்மையிலேயே அவரது புரவிப்படைகள் பல களங்களில் வானிலிருந்து பறந்து இறங்கியிருக்கின்றன. அந்த அதிர்ச்சியாலேயே பலமடங்கு பெரிய படைகளை வென்றுள்ளன” என்றார் சுதமர். “அதன் சூழ்ச்சி என்ன என்று எங்களுக்குத் தெரியும். அவர் மிக எளிதாக மடித்துக் கொண்டுசென்று தவளையின் நாக்குபோல கணத்தில் நீட்டி விரிக்கத் தக்க பலகையடுக்குகளாலான பாலம் ஒன்றை அமைத்திருந்தார். செறிந்த மரக்கூட்டங்களுக்குமேல் கிளையிலைத் தழைப்புமீதே அதை விரித்து அதன் வழியாக புரவிகளை பாய்ந்து செல்லச் செய்தார். உறுதியற்ற பரப்பில் புரவிகள் குளம்புகளை ஊன்றுவதில்லை. நளன் தன் புரவிகளை அதற்கு பழக்கியிருந்தார்.”

“அவர் புரவிகளுடனேயே வாழ்ந்தவர்” என நாமர் சொன்னார். “இன்று இரட்டை லாடம் அவர் பெயரால் நளத்திராணகம் என்றே அழைக்கப்படுகிறது.” நகுலன் “ஆம், இங்குள்ள லாடங்களை நோக்கினேன்” என்றான். சுதமர் சொன்னார் “சௌவீரரே, புரவிகளுக்கு விரல்நுனி நகமே குளம்பாகியிருக்கின்றது. அவை கல்லிலும் உலோகங்களிலும் பட்டு கூச்சமோ வலியோ அடையும்போதே குதிரை விரைவழிகிறது. அதற்காகவே லாடங்கள் அறையப்படுகின்றன. புரவியின் குளம்புகளை செவியணி குழையின் வடிவம் கொண்டவை என்கின்றன நூல்கள். முன்பக்கம் அது நீள்வட்ட வளைவுகொண்ட எலும்பு. பின்பக்கம் திறந்திருக்கும் இடைவெளியை கடுந்தசையும் மெல்லெலும்பும் மூடியிருக்கும். புரவிகள் ஓடும்போது உடல்விசையாலும் எடையாலும் குளம்பின் நீள்வட்டம் சற்றே அகன்று பின்பக்க இடைவெளியில் வலி எழுகிறது. அதன்பொருட்டே  குளம்பு வளைவை ஒன்றென இறுக்கிப் பிணைக்கும் அரைவட்ட லாடம் அறையப்படுகிறது.”

“ஆனால் இங்கே நிஷதமண்ணில் ஒற்றை லாடம் குதிரைகளை கூழாங்கற்களில் வழுக்கச் செய்தது” என சுதமர் தொடர்ந்தார். “ஆகவே இங்கு இரட்டை லாடம் ஒன்றை நளன் வடிவமைத்தார். நீள்அரைவட்ட லாடத்திற்கு மாற்றாக குளம்பின் நீள்வளைவின் இரு பக்கவாட்டிலும் ஒன்றை ஒன்று நோக்கிய இரு பிறைகள்போன்ற வடிவில் அறையப்படும் இரு   தனித்தனியான லாடங்கள் அவை. நன்கு அகன்ற பிறைவடிவங்கள் என்பதனால் குதிரையின் கால்கள் நிலையற்ற பரப்புகளில்கூட ஊன்றிக்கொள்ள முடியும். அக்குளம்புகளில் ஒன்று நிலைகொண்டாலே போதும் குதிரை நிகர்நிலை அடைந்துவிடும்.  இன்று அத்தகைய லாடங்களை நம் புரவிகள் அணிவதில்லை. ஏனென்றால் நாம் இன்று புரவிகளுடன் வானில் பறப்பதில்லை.”

அரசி தமயந்தி நளனை தன் தாழாப் படைக்கலமாகக் கொண்டு முப்புரம் எரித்த கலையமர்ச்செல்வி என பிறநாடுகள்மேல் படைசூழ்ந்தார். அஸ்மாகர்களையும் குண்டலர்களையும் வாகடர்களையும் சவரர்களையும் கோயர்களையும் கடபர்களையும் வென்றார். கலிங்கம் மீது படைகொண்டுசென்று தென்னகத் தலைநகராகிய தண்டபுரத்தை கைப்பற்றினார். ஒவ்வொரு நாளும் அவர் படைகள் கொண்ட ஒரு வெற்றிச்செய்தி இந்திரபுரியை வந்தடைந்தது. வென்றவர்களை அரசி அழிக்கவில்லை. அவர்களை அணைத்து தன்னுடன் இணைத்துக்கொண்டார். நீரோடை செல்லச்செல்ல விரிவதுபோல அவர் படை பெருகியது.

அவரை அஞ்சிய மாளவனும் மகதனும் வங்கனும் கலிங்கனும் அவந்தியின் உஜ்ஜயினியில் கூடி கடந்தகாலப் பூசல்களை மறந்து ஒருங்கிணைந்தனர். வரும் போர்களில் எல்லாம் ஒற்றைப் படையுடன் நின்று போர்புரிவதாக ஓலைச்சாத்திட்டு அரசறிவிப்புகளை வெளியிட்டனர். அதையும் தனக்கு உகந்ததாக மாற்றிக்கொண்டார் அரசி. அவரை நளன் மணம்கொண்டதும் சினம்கொண்ட பீமகர் அவருக்கோ அவர் மைந்தருக்கோ விதர்ப்பத்தின் முடியுரிமை இல்லை என அறிவித்தார். அவருக்கு பிற குலங்களைச் சேர்ந்த மகளிரில் பிறந்த மைந்தர் எவரையேனும் இளவரசர்களாக அறிவிக்கலாமென்று அமைச்சர்கள் கூறினர். வடகிழக்கு எல்லையான மேக்கலகிரியின் மலைக்குடிகளான ஃபீலர்களின் குலத்தலைவர் மகளை மணந்து அதில் ஏழு மைந்தர்களை அவர் பெற்றிருந்தார். மூத்த மைந்தன் தண்டன் போர்க்கலைகளில் தேர்ந்து படைநடத்தும் திறன் கொண்டிருந்தான். சேதிநிலத்தைச் சேர்ந்த பைகர் குலத்தலைவர் மகளில் பன்னிரு மைந்தர் இருந்தனர். அவர்களில் மூத்தவனாகிய தமன் ஆற்றல்மிக்கவன் என்று அறியப்பட்டான்.

இருவரில் ஒருவரை இளவரசனாக பட்டம்சூட்டலாமென்று அவருக்கு அமைச்சர்கள் சொல்லுரைத்தனர். அவர் வழக்கம்போல ஒவ்வொன்றையும் எண்ணி எண்ணி தயங்கி அவர்களுக்கு விழைவளித்து ஏமாற்றி மீண்டும் விழைவை மூட்டி ஒத்திப்போட்டுக் கொண்டிருந்தார். அக்குலங்களில் முடிவிழைவு எப்போதுமிருந்ததில்லை. ஆனால் மூட்டப்பட்டபோது அது எழுந்தது. பின் அடங்க மறுத்தது. அவர்கள் படைக்கலங்கள் திரட்டவும் படையென ஆகவும் முயன்றனர். அவர்களின் தூதர்கள் மாறிமாறி பீமகரை வந்தடைந்தபடியே இருந்தனர்.

அந்நாளில்தான் வடபுலத்தரசர்களின் படைக்கூட்டு குறித்த செய்தி வந்தது. அப்படைநிலை வடமேற்கின் அவந்தியை மையம் கொண்டதாகையால் எதையும் எண்ணாமல் உடனே பைகர் குலத்துத் துணைவியின் மகன் தமனை பீமபலன் என்ற பேரில் இளவரசனாக அறிவித்தார் பீமகர். செய்தியறிந்த வடகிழக்கின் ஃபீலர்கள் சினம் கொண்டனர். அவர்களை மகதர்கள் கையிலெடுத்துக் கொள்ளக்கூடும் என அமைச்சர்கள் அச்சுறுத்தவே அவர்களில் பிறந்த மைந்தன் தண்டனை பீமத்துவஜன் என்ற பெயரில் இன்னொரு இளவரசனாக அறிவித்தார். இருவரில் எவர் பட்டத்து இளவரசர் என்று அறிவிப்பதை முடிவில்லாது ஒத்திப்போட்டு அந்நெருக்கடி முற்றும்தோறும் மேலும் மதுவருந்தி பகல்துயில் கொள்ளலானார்.

இவ்வாறு மகதக்கூட்டுக்கு எதிராக நாட்டை வலுப்படுத்த முயன்று நாட்டை இருகூறாகப் பகுத்து போர்நிலைவரை கொண்டுசென்றார். எல்லையில் இரு குடிகளின் படைகளும் பல சிறுபூசல்களில் ஈடுபட்டிருந்தன. விளைவாக வணிகம் வீழ்ச்சியடைந்தது. சந்தைகள் வெறுமைகொள்ளவே மக்கள் வறுமை நோக்கி சென்றனர். வறுதி பல இடங்களில் தலைகாட்டலாயிற்று. வளம் குறித்த விழைவே மக்களை அரசை ஏற்கவைக்கிறது. வறுதி குறித்த அச்சம் கொடுங்கோலனை வாழ்த்தச் செய்கிறது. விதர்ப்பமக்கள் தமயந்தியை எண்ணி ஏங்கலானார்கள்.

ஒவ்வொரு நாளும் அரசியின் வெற்றிச்செய்திகள் அவர்களுக்கு வந்துகொண்டிருந்தன. நிஷதகுலத்தவனை மணந்தார் என அவரை அரசுநீக்கம் செய்துவிட்டு வேறு மலைக்குடிகளுக்கு முடிசூட்டவிருப்பதன் பொருளின்மையைப்பற்றி தெருக்களிலேயே ஏளனக் குரல்கள் எழுந்தன. “அவர் எளிய அரசமகள் அல்ல, பாரதத்தை ஆளும் கொற்றவை. நளனை ஏன் அவர் தேர்ந்தார் என்பதை அவர்கள் இன்று பெற்றுக்கொண்டிருக்கும் வெற்றிகளே காட்டுகின்றன. அன்று அவையில் நெளிந்தமர்ந்திருந்த மகதனும் கலிங்கனும் இன்று அஞ்சி ஒளிந்திருக்கிறார்கள்” என்றனர். “பாரதவர்ஷத்தை அவர் முற்றாளும்போது குண்டினபுரி அதன் தலைநகராக இருந்திருக்கக்கூடும். அறிவிலியாகிய பீமகரும் அமைச்சர்களும் அதை நமக்கு மறுத்தனர்.”

இருவரில் மூத்தவனாகிய பைகர்குலத்து இளவரசன் தமன் நுண்ணுணர்வுகொண்டவன். நிலைமையை உய்த்தறிந்ததும் அவன் தன் குடித்தலைவர் எண்மருடன் இந்திரபுரிக்குச் சென்று தமக்கையைப் பணிந்து தனக்கு முறையே உரிமைகொண்ட மணிமுடியை பெற்றுத்தரும்படி கோரினான். அரசி தமயந்தி அதை ஏற்று தன் புரவிப்படையுடன் வந்து பெருவெள்ளம் என நகரைச் சூழ்ந்து கைப்பற்றினார். உண்மையில் போரே நிகழவில்லை. அவர் படைகளுடன் வருகிறார் என்று கண்டதுமே விதர்ப்பத்தின் படைகள் கொடிகளும் பாவட்டாக்களும் ஏந்தியபடி வரவேற்புமுரசோசையும் வாழ்த்தொலிகளுமாக சென்று அவரை எதிர்கொண்டு பணிந்து அழைத்துவந்தனர். முடியரசி நகர்க்கோலம் செல்வதுபோல அவர் அணிபுனைந்த களிற்றின்மேல் ஏறி அமர்ந்து குண்டினபுரியின் தெருக்களில் சென்றார். இருபுறமும் கூடியிருந்த நகர்மக்கள் மலரும் மஞ்சளரிசியும் பொழிந்து களிவெறி கொண்டு வாழ்த்தொலி எழுப்பி கைவீசி ஆடை சுழற்றி நடனமிட்டு அவரை வரவேற்றனர். முகில்மேல் செல்லும் இந்திராணிபோல அவர் தெரிந்தார் என்றனர் புலவர்.

அவரை அரண்மனை முகப்பில் அவர் அன்னையான பட்டத்தரசி அமைச்சர்களுடன் வந்துநின்று மங்கலத்தாலம் ஏந்தி மலரும் சுடரும் காட்டி வரவேற்றார். பீமகர் சினம்கொண்டு தன் அறையிலேயே இருந்தார். “அவள் என்னை சிறைப்பிடிக்கட்டும். அவள் மணந்த நிஷாதன் முன் கொண்டுசென்று கைபிணைத்து நிறுத்தட்டும். நான் ஒருபோதும் அந்த நிஷாதைக்கு பணியப்போவதில்லை” என்று அவர் சொன்னார். “அரசே, அரசியின் உள்ளம் இப்போது எப்படி இருக்கிறதென்று நாம் அறியோம். தன் படைகளை ஒளிந்திருந்து காட்டுநெருப்பெழுப்பி அழித்த சூடககுலத்தின் அரசனை அவர் நகர்நடுவே உடலில் திரிசுற்றி நெய்யூற்றி எரித்தார் என்கிறார்கள். பேரரசுகளை ஆள்பவர்கள் மெல்ல மெல்ல தெய்வங்களின் உளநிலையை அடைகிறார்கள். மறுசொல் கேட்க ஒவ்வாதவர்களாக, பெருங்கருணையும் கொடுஞ்சினமும் கொண்டவர்களாக மாறுகிறார்கள்” என்றார் அமைச்சர்.

“நான் முழுமையாக தோற்றுவிட்டேன். இனி எஞ்சியிருப்பது இறப்பு ஒன்றே. தந்தையைக் கொன்று அவள் தன் நிஷாதத்தன்மையை நிறுவிக்கொள்ளட்டும்” என்றார் பீமகர். அரசியின் மன்றாட்டையும் அவர் ஏற்கவில்லை. முட்ட மது அருந்தி எழமுடியாமல் மஞ்சத்திலேயே கிடந்தார். தமயந்தி நேராக அவருடைய அறைக்குச் சென்று “தந்தையே, என் பிழை பொறுத்தருள்க! நீங்கள் ஆணையிடும் எப்பிழைநிகருக்கும் ஒருக்கமாக உள்ளேன்” என்று சொல்லி அவர் கால்களில் தலைவைத்து வணங்கினார். உளமுருகிய பீமகர் மகள் தலையில் கைவைத்து கண்ணீர்விட்டார். “நீ என் குலத்தின் விளக்கு. நான் எளிய களிமகன். என் கோழையுள்ளத்தால் என் குடிகளுக்கு இயற்றிய பிழைகளுக்கெல்லாம் உன்னால் நிகர்செய்தேன்” என்றார்.

அன்று முழுக்க மதுவுண்டு களித்து சிரித்துக்கொண்டும் அழுதுகொண்டும் இருந்த பீமகரை கைத்தாங்கலாக அழைத்துச்சென்று அரியணை அமர்த்தினர். அவர் முடிதொட்டுக் கொடுக்க குண்டினபுரியின் இளவரசனாக தமன் முடிசூட்டிக்கொண்டான். அவனும் அவன் இளையவன் தமனனும் தமயந்தியின் கால்களை சென்னிசூடி எப்போதும் அவர் படைத்துணைவராக அமைவோமென சொல்லுறுதி கொண்டனர். மடியில் குழவிகளான இந்திரசேனனும் இந்திரசேனையும் அமர்ந்திருக்க விதர்ப்பத்தின் அரியணையில் பேரரசி என தமயந்தி அமர்ந்து அந்த மணிமுடியை சூட்டிக்கொண்டார்.

அங்கிருந்து அவர் படைகொண்டு ஃபீலர்களை நோக்கி சென்றார். நிஷதர்களின் புரவிப்படைகளைக் கண்டதுமே தண்டன் மேற்கே பின்வாங்கலானான். அவன் அவந்தியுடன் சேர்ந்துகொள்ளலாகாது என்று உணர்ந்த தமயந்தி அவன் எண்ணியிராத தருணமொன்றில் தானே படைகொண்டுசென்று அவனை சூழ்ந்து வென்று சிறைப்பிடித்தார். ஆனால் அஞ்சியபடி அவைக்கு வந்த அவனை தன் இளையோன் என்று ஏற்று பரிசளித்து வாழ்த்தினார். அவனை இரண்டாம் இளவரசன் என அறிவித்து முடிசூட்டினார். அவனுக்காக போஜகிருகம் என்னும் ஆயர்சிற்றூரில் கோட்டை ஒன்றைக் கட்டி போஜகடகம் என்று பெயரிட்டு அவனை அங்கே அமர்த்தினார். இரு உடன்பிறந்தாரும் தமக்கையின் இரு கைகளென ஆயினர்.

அதன்பின் அவர் இந்திரபுரிக்கு திரும்புவார் என அனைவரும் எண்ணியபோது அங்கிருந்தே படையெடுத்துச் சென்று அவந்தியை வென்று அதன் அரசன் பிரபாவர்மனை அடிபணியச் செய்தார். அவ்வெற்றியால் அஞ்சி நிலைகுலைந்திருந்த மாளவ அரசன் விஷ்ணுகுப்ஜனை நளனின் முதன்மைப் படைத்தலைவன் வஜ்ரகீர்த்தி வென்று மீண்டான். மகத மன்னன் ஜீவகுப்தன் அவளை அஞ்சி தன் படைகளை எல்லைகளில் நிறுத்திவிட்டு ராஜகிருகத்தை கைவிட்டு வடஎல்லையில் அமைந்த பாடலிக்குச் சென்று ஒடுங்கியிருந்தான். அரசர்கள் அனைவரின் கனவிலும் நளனின் பறக்கும் புரவிகளே தோன்றிக்கொண்டிருந்தன.

மாளவத்தின் தாமிர வயல்களை தமயந்தி முழுமையாக கைப்பற்றியமையால் கலிங்கத்தின் துறைநகரான தாம்ரலிப்தியின் வணிகம் ஒழியத் தொடங்கியது. பொருள் இழந்து சோர்ந்து சிதறுண்டிருந்த கலிங்கனை நளனின் படைத்தலைவன் சிம்மவக்த்ரன் தெற்கிலும் நளன் மேற்கிலும் ஒரே சமயம் தாக்கினர். கலிங்கமன்னன் அர்க்கதேவன் தோல்வியடைந்து வங்கம் நோக்கி சென்றான். வங்கமன்னன் பகசேனனின் படைகள் வந்து உடன் இணைந்துகொண்டன. அவர்களை தாம்ரலிப்திக்கு அருகே இருந்த புண்டரவனம் என்னும் குறுங்காட்டில் நளன் படைகள் சந்தித்து முறியடித்தன. பின்வாங்கிச் சென்ற அப்படைகளுடன் மகதப் படைகள் இணைந்துகொள்ள கங்கைக்கரையின் முக்தவனம் என்னும் இடத்தில் இறுதிப்போர் நிகழ்ந்தது. வடபுலப் படைகளை நளன் முழுமையாக தோற்கடித்து மூன்று மன்னர்களையும் வென்றார்.

மகதமன்னன் ஜீவகுப்தனையும் கலிங்கமன்னன் அர்க்கதேவனையும் வங்கமன்னன் பகசேனனையும் ஒரே சங்கிலியில் கட்டி தன் முன் இழுத்துவரச் செய்தார் நளன். அவர் அமர்ந்திருந்த பீடத்தின் முன் சோர்ந்து நின்றிருந்த அவர்களை இருபுறமும் கரும்புரவிகளைக் கட்டி இழுத்து இரண்டாகக் கிழிக்கும்படி ஆணையிட்டார். அதை தவிர்க்கவேண்டும் என்றால் அவருடன் தனிவாட்போரிட அவர்கள் ஒப்பவேண்டும் என்றார். மகதமன்னன் ஜீவகுப்தன் உறுதியாக மறுத்துவிட்டான். “உன்னுடன் வாள்கோத்தல் குலமிலாச் செயல் என்று எந்தை அவையில் சொன்னார். தந்தையிடமிருந்து மைந்தன் பெறுவது குலத்தை மட்டுமே. நான் அதை எந்நிலையிலும் இழக்கமாட்டேன்” என்றான். அவனது இரு கைகளிலும் இரு வடங்கள் கட்டப்பட்டு இருமுனையிலும் மூன்று புரவிகள் கட்டப்பட்டன. அவை அவனை இழுத்துக் கிழிக்க அவன் கதறி உடல் அதிர்ந்து துடித்தான். ஒவ்வொருமுறை புரவிகள் நிற்கும்போதும் “வாளேந்துவாயா?” என்று கொடுந்தொழிலன் கேட்க “இல்லை… என் குலமே முதன்மையானது” என்றான் மகதன்.

முழுப்பகலும் அவனை இழுத்து எலும்புகளை உடைத்து தசைகளை கிழித்தனர். இரு துண்டுகளாகி அவன் உடல் கிடந்து துடிப்பதைக் கண்டு வங்கனும் கலிங்கனும் “நாங்கள் வாளேந்துகிறோம்” என கூவினர். அவர்களுக்கு அவை நடுவிலேயே வாள் அளிக்கப்பட்டது. அவர்களை ஒரே சுழற்றலில் வாள்தெறிக்கச் செய்து வீழ்த்தி அவர்களின் தலையை மும்முறை காலால் உதைத்தார் நளன். அவர்களை முடியும் மீசையும் மழித்து யானை மேலேற்றி நகர்வலம் வரச்செய்து திருப்பி அனுப்பினார். அவர்கள் தங்கள் இளமைந்தர்களை அரசர்களாக முடிசூட்டியபின் கான் புகுந்தனர்.

அரசர்களை நளன் சிறுமை செய்ததை தமயந்தி ஏற்கவில்லை. அவரே நேரில் சென்று கலிங்கத்திலும் வங்கத்திலும் மகதத்திலும் இளவரசர்களுக்கு முடிசூட்டிவைத்து அன்னையின் இடத்தில் இருந்து அரிமலரிட்டு வாழ்த்தினார். அவர்களை தன் மைந்தர்களாக ஏற்றுக்கொள்வதாக அவர் விடுத்த திருமுகம் பாரதவர்ஷத்தின் அரசர்களிடையே பரவி அவரை மதிப்புக்குரியவராக ஆக்கியது. “காக்கும் கருணைகொண்டவளுக்கு வெல்லும் உரிமையும் உண்டு” என்று அயோத்தியின் அரசன் ரிதுபர்ணன் சொன்ன வரியை சூதர்கள் சொல்லி பரப்பினர். சேதிநாட்டரசன் சுபாகு அவருக்கு காணிக்கைகள் அனுப்பியபோது அதை தன் உடன்பிறந்தானின் கொடை என ஏற்பதாக அவர் அறிவித்தார்.

தமயந்தி நதிக்கரைச் சேற்றில் வாழ்ந்த மச்சர்களையும் மலைமடிப்புகளுக்குள் வாழ்ந்த அசுரர்களையும் கொள்ளையடித்து அலையும் சூரர்களையும் வென்றார். அவருடைய வெற்றிகள் அவர் வெல்லப்பட முடியாதவர் என்னும் எண்ணத்தை உருவாக்கின. அதுவே அவரை மேலும் வெற்றிபெறச் செய்தது. “அதன்பின் அவருடைய தூதர்கள் சென்ற நாடுகள் அனைத்தும் அவருக்கு வாள்தாழ்த்தி கப்பத்தை அனுப்பிவைத்தன. பாரதவர்ஷத்தின் முதன்மைச் சக்ரவர்த்தினி என அவர் அறியப்பட்டார். அதன்பின்னரே நிஷாதகுலங்களுக்குள் ஐயமும் அச்சமும் உருவாகத் தொடங்கியது” என்றார் சுதமர்.

“தங்களில் ஒன்றென்றிருந்த சபரர்குலம் மேலும் மேலும் வலுப்பெற்று பாரதவர்ஷத்தின் அரசகுடிகளில் முதலிடம் பெறுவதை அவர்களின் உள்ளத்தின் இருண்ட ஆழம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. இரவில் விழித்துக்கொள்கையில் பகலில் அவர்களை ஆட்சிசெய்த அனைத்து தெய்வங்களும் விலக இருளை ஆளும் தெய்வங்களே உள்ளும் புறமும் ஓலமிட்டன. சினமும் ஆற்றாமையும் துயரும் கொண்டு அவர்கள் புரண்டு புரண்டு படுத்தனர், நெடுமூச்செறிந்து எழுந்தமர்ந்தனர். இரவின் நீளம் தாளாமல் தன்னைச் சினந்தனர். கழிவிரக்கம் கொண்டு விழிசிந்தினர்.

இரண்டாவது பெருங்குலமான காளகர்களே பெரிதும் துயருற்றிருந்தனர். காளககுலத்து இளவரசனாகிய புஷ்கரன்மேல் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை அவன் தமயந்தியின் திருமணத்தின்போது உடைவாளுடன் அசையாமல் அமர்ந்திருந்த செய்தியுடன் சேர்ந்து அழிந்தது. என்றோ ஒருநாள் நளனின் கொடையால் அல்லது படைகளை நிகர்செய்யவேண்டிய அரசியல் தேவையால் அவன் தனக்கென ஒரு நகரைப் பெற்று முடிசூடி ஆட்சிசெய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்குள் இருந்தது. அவன் தெற்கே சிம்பர்களுடனான போரில் தொடையில் வேல்பட்டு பல மாதங்கள் படுக்கையில் கிடந்தபோது அது முழுமையாக இல்லாமலாகியது.

அந்தச் சோர்வு தமயந்திமேல் கசப்பாக ஆகியது. அவர் வெற்றிமேல் வெற்றி கொண்டபோது அது வளர்ந்தது. அவர்கள் தங்கள் குடியினனாகிய நளனை வெறுக்க விழையவில்லை. ஆகவே தமயந்தியே புஷ்கரனை சிறுமைசெய்து எல்லைகளில் நிறுத்தியிருக்கிறார் என்று எண்ணத்தலைப்பட்டனர். அந்நாளில்தான் தமயந்தி தன் இரண்டாம் இளையோனுக்கு போஜகடகத்தை அமைத்து முடியளித்தார். அதை அவர் புஷ்கரனுக்கும் செய்யலாமே என்ற எண்ணம் ஒருபோதும் எந்த அவையிலும் ஒலிக்காமல் ஒவ்வொரு நாளும் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. “விதர்ப்பினியின் வெற்றிக்கென காளகர்கள் ஏன் குருதி சிந்தவேண்டும்?” என்று எந்த உரையாடலிலும் எவரோ ஒருவர் கேட்க பிறிதொருவர் அதை கூரிய குரலில் அடக்கினார்.

புஷ்கரன் போர்முனைகளில் இருந்து உறுதியாக தெரிந்துகொண்டான், அவனால் போர்செய்ய இயலாது என. போர்க்கு முன் அவன் உள்ளம் கிளர்ந்தெழுந்தது. வென்று புகழ்சூடுவதற்காக அவன் உள்ளத்தில் கனவுகள் பெருகின. போர்முனையில் அவ்வெண்ணங்களுக்கெல்லாம் அடியிலிருந்து பிறிதொருவன் எழுந்து வந்தான். கோழையும் தன்னலத்தை மட்டுமே எண்ணுபவனுமாகிய ஒருவன். பின்னர் அவன் உணர்ந்துகொண்டான், அந்த ஆழ்ந்திருக்கும் ஆளுமையே தன்னுடையது என்று. நினைவறிந்த நாள்முதல் தன்னையன்றி எதைப் பற்றியும் எண்ணியதில்லை என்று. வெற்றி, புகழ் என அவன் உருமாற்றிக்கொள்வன எல்லாம் வெறும் தன்னலம் மட்டுமே என.

அதை அவன் சிருங்கபேரத்தில் கால் உடைந்து கிடந்த படுக்கையில்தான் ஐயமில்லா அறிவென்றாக்கிக் கொண்டான். அத்தெளிவு அவனை முழுமையாக மாற்றியது. அதுவே தான் என்றறிந்ததுமே அதை முழுமையாக பிறரிடமிருந்து மறைத்துக்கொள்ளவேண்டும் என்றும் புரிந்துகொண்டான். அவன் விழிகள் இளைஞனின் நகைப்பொளியை இழந்து எச்சரிக்கை நிறைந்த மங்கலை அடைந்தன. நிலைக்காமல் குமிழியிடும் பேச்சு எண்ணிச் சொட்டும் சொற்களென்றாகியது. பிறர் பேசும்போது சொல்லுக்கு அப்பால் சென்று அவர்களின் முகங்களை நோக்கிக்கொண்டிருக்கலானான். அன்றுவரை அவன் அறியாத ஒரு மொழியில் பிறிதொரு உரையாடல் நிகழ்வதை அறிந்தான்.

அதன் பின்னரே அவன் முழுமையான படைக்கலப் பயிற்சிக்கும் புரவிப் பயிற்சிக்கும் தன்னை ஒப்புக்கொடுத்தான். முன்பு பயிற்சிக்குச் சென்ற சிலநாட்களிலேயே வாளால் நீர்க்குமிழிகளை வெட்டவேண்டும் என்றும் புரவியால் ஓடைகளைக் கடந்து தாவவேண்டும் எனவும் முயன்றவன் அடிப்படைகளை பொறுமையாக கற்றுக்கொள்ளலானான். அந்தக் கல்வி அவனை உறுதியானவனாக ஆக்குவதை அவன் குலத்தவர் கண்டனர். மீண்டும் அவன்மேல் நம்பிக்கை கொள்ளலாயினர்.

அந்நம்பிக்கையை உறுதிசெய்யும்பொருட்டே அவன் செண்டுவெளி புரவிவிளையாட்டில் தன் புரவியுடன் வந்து கலந்துகொண்டான். விழாவில் நிகழ்த்துவதற்காக புரவியில் பாய்ந்தபடியே அம்புகளை எய்து ஒன்றன்மேல் ஒன்றென தைக்கவைக்கும் முறை ஒன்றை ஓராண்டாக எவருமறியாமல் பயின்றிருந்தான். செண்டுவெளியில் அவனும் புரவியாட விழைவதாகச் சொன்னபோது நளன் நகைத்து “நீயா? செண்டுவெளியிலா?” என்றார். தமயந்தி புன்னகையுடன் “அவர் பயிற்சி எடுத்திருப்பார்” என்றார். நளன் “நன்று” என்று மீண்டும் புன்னகைத்தார்.

தமயந்தியின் புன்னகையால் அவன் துன்புற்றான். இரவெல்லாம் துயிலாமல் நிலையழிந்து அரண்மனையில் சுற்றிவந்தான். புலரியில் எழுந்து புரவியுடன் ஆற்றங்கரை முற்றத்திற்குச் சென்று அவ்வித்தையை பன்னிருமுறை பயின்ற பின்னர் செண்டுவெளிக்கு வந்தான். அவன் வந்தபோது அங்கே விழா உச்சம்கொண்டிருந்தது. வேசரநாட்டு பரிவீரனாகிய சௌமித்ரன் புரவியில் எரியும் அனல் வளையங்களினூடாக தாவினான். நிறுத்தப்பட்ட எட்டு வேல்முனைகளை மறிகடந்தான். அவனுக்கு வாழ்த்தொலிகள் எழுந்தமைந்தபோது கைகளைத் தூக்கியபடி புஷ்கரன் உள்ளே நுழைந்தான்.

அவனைக் கண்டதும் காளகர்கள் வாழ்த்துக்கூச்சலிட்டனர். ஆனால் மற்ற குடிகளிடமிருந்து ஏளனக்கூவல்கள் எழுந்தன. நிமித்திகன் நிகழவிருப்பதை அறிவித்ததும் காளகர் சற்று அஞ்சி ஓசையடங்க பிறர் நகைக்குரலெடுத்தனர். தன் புரவியில் ஒருமுறை முற்றத்தைச் சுற்றிவந்தபின் புஷ்கரன் வில்லிழுத்து அம்பைத் தொடுத்தான். அந்த அம்பு சென்று தைத்ததும் அதன்மேல் அடுத்த அம்பைத் தொடுக்க அவன் நாணை இழுத்தபோது வில்லின் கீழ்முனை புரவியின் விலாவை முட்டியது. அது முன்னரே கூடியிருந்தவர்களின் ஓசையால் அஞ்சி உடல்விதிர்த்துக்கொண்டிருந்தது. அவன் பயின்ற புரவி அல்ல அது. அது களைத்திருந்தமையால் பிறிதொரு கரிய புரவியை நாகசேனர் அவனுக்கு அளித்திருந்தார். விலாவில் பட்ட தொடுகையை குதிமுள் என எண்ணி புரவி எகிறிப் பாய்ந்தது. இரு கையையும் விட்டு வில்லும் அம்புமாக அமர்ந்திருந்த புஷ்கரன் அந்த எதிர்பாரா விசையில் தடுமாறி புரவியிலிருந்து களமுற்றத்தில் விழுந்தான். அவன் கையிலிருந்த அம்பின் பின்கூர் அவன் வயிற்றில் பாய்ந்தது.

நளன் “பிடியுங்கள்!” என்று கூவ சிம்மவக்த்ரனும் அவன் துணைவர்களும் ஓடிவந்து அவனைத் தூக்கி வலைமஞ்சத்திலிட்டு உள்ளே கொண்டுசென்றனர். “அடுத்த வீரன் களம் புகுக!” என்று ஆணையிட்டுவிட்டு நளன் எழுந்து உள்ளே சென்றார். உண்மையில் அவர் அவ்வாறு பதறியபடி உள்ளே சென்றதுதான் பிழையாகியது. இளவரசனுக்கு உயிர்க்காயம் என்று காளகர்கள் எண்ணினர். அவர்கள் கொண்ட அச்சமும் பதற்றமும் பிறருக்கு வெளிக்காட்டா இளிவரலென்றாகியது.

புஷ்கரனுக்கு மிக மெல்லிய புண்ணே பட்டிருந்தது. நளன் செல்வதற்குள் மருத்துவர் அம்பை உருவி குருதி நிறுத்தி கட்டுபோட்டுவிட்டிருந்தார். அவனருகே குனிந்த நளன் “என்ன ஆயிற்று?” என்று பதற “ஒன்றுமில்லை. நாளையே எழுந்துவிடுவார்” என்றார் மருத்துவர். “குதிரை தவறாக புரிந்துகொண்டுவிட்டது” என்றான் காவலன். “குதிரையை நாமும் தவறாக புரிந்துகொள்ளக்கூடாது” என்றார் நாகசேனர் புன்னகையுடன். நளன் மேலும் ஏதோ கேட்க சுருங்கிய முகத்துடன் புஷ்கரன் கண்களை மூடிக்கொண்டான். அதை வலி என எண்ணிய நளன் அவன் தலையைத் தொட்டு “நன்று, ஓய்வெடுக்கட்டும்” என்றபின் மீண்டும் களத்திற்கு மீண்டார்.

நிஷாதர்களின் புரவிப் போர்த்திறன் அயலவர் முன் மாற்றுக் குறைந்துவிடலாகாதென்பதனால் நளன் அன்று அவர்கள் எவரும் தங்கள் மிகைக்கதைகளில் கூட அறிந்திராத புரவித்திறன்களை காட்டினார். இழுத்துக் கட்டிய சரடின்மேல் அவர் புரவி பாய்ந்தோடியதைக் கண்டு களத்தோர் ஓசையழிந்தனர். பின் வாழ்த்தொலிகள் சுவர்கள் அதிர எழுந்து அலையடித்தன.

அந்த ஓசையை புஷ்கரன் பகல் முழுக்க கேட்டுக்கொண்டிருந்தான். தன் உதடுகளை அவன் இறுகக் கடித்திருந்தான். அதை வலியால் என எண்ணிய மருத்துவர் அவனுக்கு அகிபீனா புகை அளித்தார். ஆனால் அவன் விழிகள் சிவக்க முகம் அனல்கொள்ள மேலும் விழிப்பையே அடைந்தான். திறந்திருந்த நீர்படிந்த கண்களுக்கு அப்பால் அவன் அவர்கள் அறியாத எதையோ கண்டுகொண்டிருந்தான்.

NEERKOLAM_EPI_24

“அன்றிரவு அவனை கலி அணுகியதாக கதைகள் சொல்கின்றன” என்றார் சுதமர். “இரவில் அவன் ஒரு காளைமாட்டின் ஓசையை கேட்டான். பலமுறை அது குரலெழுப்பிய பின்னரே அது ஒரு சொல் என்று உணர்ந்தான். அச்சொல் புரியத் தொடங்கியதும் திகைத்து எழுந்து வெளியே செல்ல முயன்றான். அவன் கால் மருந்துகளால் உறைந்திருந்தது. அதை மரக்கட்டைபோல இழுத்தபடி வெளியே சென்றபோது அங்கே ஓர் உருவம் நின்றிருப்பதை கண்டான். மனிதர்களை விட உயரமானது. இரு கைகளும் விரிந்து எழுந்திருந்தன. அதற்கு எருதுத்தலை இருப்பதை பின்னர்தான் கண்டான். அதை நோக்கியபடி அவன் இருளில் நின்றுகொண்டிருந்தான்.”

முந்தைய கட்டுரைசீ முத்துசாமியின் மொழி கே.பாலமுருகன்
அடுத்த கட்டுரைதமிழ் மின்னிதழ்