அன்புள்ள ஜெ.மோ,
வணக்கம் . நலமா? தினமும் உங்கள் பதிவுகள் எதாவது புதிதாக வந்திருக்கின்றதா என்று கவனிப்பதும், படித்து முடித்தவுடன் அப்படியே அதில் கரைந்து உள்ளே உள்ளே என்று எண்ணக்கடலில் போவதுமாக இருக்கின்றேன்.
(எழுத்துத் தமிழில் இதுதாங்க என் கஷ்டம். நினைச்சதைச் ‘சட் னு சொல்ல முடியாது)
உங்க இந்தியப் பயணத்தையே பலமுறைத் திருப்பித்திருப்பி வாசிச்சேன். ஊமைச் செந்நாயோ…கணக்கே இல்லை. அழிமுகம். தீ ன்னு எதைச் சொல்ல எதை விட!
படிச்சோமா முடிச்சோமா இருக்க முடியலையே. அதன் தொடர்பான பல எண்ணங்கள் மனசுலே ஓடிக்கிட்டே இருக்கு. இணையத்துலே மட்டும் நீங்க எழுதாமல் இருந்தா…… ஐயோ….. எப்பேர்ப்பட்ட வாசிப்பு அனுபவத்தை இழந்துருப்பேன்.
அம்மாவின் நினைவுகளும், அப்பாவின் அன்பையும் மறக்கவே முடியாமச் செஞ்சுருக்கீங்க.
என் மனசுலே இருக்கறதை எழுத்தில் சொல்லும் திறமை எனக்கில்லை.
இந்த முறை இந்தியா வரும்போது உங்க புத்தகங்களை முதல்முறையா வாங்கிக்கப் போறேன்.
அருண்மொழிக்கும், சைதன்யா & அஜிதனுக்கும் என் அன்பு.
வணக்கம்.
என்றும் அன்புடன்,
துளசி.
அன்புள்ள துளசி
தங்கள் ஆர்வத்துக்கு நன்றி. என் நாவல்கள் இன்னும் விரிவான ஓர் அக உலகை உங்களுக்குக் காட்டும் என்று உறுதி சொல்கிறேன். இந்த உணர்ச்சிகள் ஒரு அந்தரங்கக் குரலாக நின்றுவிடுகின்றன.நாவல்களில் அவற்றை நான் மேலும் விரிவான வரலாற்றுப் பின்னணியில் பொருத்துவது வழக்கம். எந்த மனிதனும் அவன் வாழ்ம் கலம் அக்காலத்தின் வரலாற்றுப் பின்னணி ஆகியவற்றுக்குக் கட்டுபப்ட்டவன் என்பது என் எண்ணம்
ஜெ
அன்புள்ள ஜெ
பூதம் முதற்சுவை போன்ற கடுரைகளில் வரக்கூடிய உங்கள் அப்பாவைப்போல ஒரு அபாரமான கதாபாத்திரத்தை நான் கண்டதே கிடையாது. ஆனால் அப்படித்தான் நம் நாட்டில் உள்ள ஏராளமான அப்பாக்கள் இருபபர்கள் என்ற எண்ணமும் வருகிறது. என் நண்பர்கள் நிறைய பேர் கல்லூரி நாட்களில் அவர்களின் அப்பாக்களை மிகவும் வெறுத்தார்கள். [பெரும்பாலானவர்கள் தேவர்கள்] பின்னர் அவர்கள் தங்கள் அப்பாக்களைப் புரிந்துகொண்டு மிகவும் அன்புகாட்ட ஆரம்பித்தார்கள். பலாபப்ழம்போல வெளியே முள்ளும் உள்ளே இனிப்புமாக இருக்கும் இத்தகைய மனிதர்கள் நம் நாட்டில் மிகவும் அதிகம்
சண்முகம்
அன்புள்ள ஜெ,
உங்கள் ‘பூதம்’ மற்றும் ‘முதற்சுவை’ படித்தேன்.
மென்மையும், ஆழமும், சுதந்திரமும் கிரஹித்த இந்த அம்மாவை சந்திக்க வேண்டுமென தோன்றியது (நிஜத்தின் வெறுமையையும் மீறி).
எனக்கு தெரிந்த, வாழ்வை நுணுக்கத்துடனும், தைரியமாகவும் அணுகும் பல ஒற்றைத் தாய்மார்களை (single mothers) நினவு கூர்ந்தேன்.
ஏதோ ஒரு தளத்தில், ‘உடலிலக்கியம்’ கட்டுரையுடன் இந்த கட்டுரைகளும்
தொடர்பித்தது. I do not know if I am using politically correct words. Please consider the following..
வெளிப்பாடு (expression) ஆண் வயமானது. இதன் வரிசையில் எழுதப் படும் எழுத்தும். வாழ்கையையே வெளிப்பாடாக கிரகிக்கும் தன்மை பெண் வயமானது. இவை இரண்டும் நேர்த்தியாக இணைய முடியம். உங்களது வெளிபாடே, உங்கள் அம்மா வாழ்ந்த வாழ்க்கையும், வெளிப்பாடாகவும்.. (கிரகிப்பு என்கிற சொல்லை – internalize – என்கிற சூழலில் உபயோகித்துள்ளேன்)
வாழ்வே வெளிப்பாடு என்பதை பற்றி மகாத்மா காந்தி பதிவு செய்துள்ளார். நமது நாட்டு பெண்கள் செய்துள்ளனர். தனக்கு எது இயற்கை என்று புரிந்து கொள்வது. அதனையே அன்பாகவும் பரிவாகவும் வெளிப்படுத்துவது. பிள்ளையார், சிவனையும் பார்வதியையும் சுற்றி ஞானப்பழம் பெறுவதை போல. அதன் படி, சுப்பிரமணியர் உலகை சுற்றுவதும் சரியே.
எழுதும் பொது, ஆண் விகிதம் அதிகரித்து, பெண் விகிதம் குறைகிறதோ என தோன்றும். இந்த தருணத்தில்தான் உங்கள் ‘உடலிலக்கியம்’ வந்து இணைக்கிறது.
பெண் வரிசையில் – மீரா பாய் – உடலியக்கத்தின் வெளியே உள்ளவரோ?
கன்னட சன்யாசினி – அக்க மகாதேவி – யை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ( பன்னிரண்டாம் நூற்றாண்டு என நினைக்கிறேன் )
ஆனால் இந்த நோக்கில், பெண்களின் தனி-யொருமை (identity) ஆண்களின் ஒருமையுடன் கரைக்கப்படுகிறது என்று என் மனைவி (ரஞ்சனி) சொல்கிறாள். அதுவும் சரியே என தோன்றும். வேறொரு பதில் என்னிடம் இல்லை.
அன்புடன்
முரளி
அன்புள்ள முரளி
பூதம் முதற்சுவை போன்ற கட்டுரைகளை அந்நினைவுகளை வெறுமே மீட்டிக்கொள்ளும்பொருட்டு எழுதினேன். சென்ற செப்டெம்பரில் எழுத ஆரம்பித்தவை அவை. 1985 செப்டெம்பரில்தான் அம்மா இறந்தாள். அந்நினைவுகளை எளிமையாக தொகுப்பது என் படைப்புமனத்துக்கு இயல்பாக இல்லை, அவற்றை ஒரு வகையான கட்டமைப்புக்குள் கொண்டுவரவேண்டியிருந்தது. அனுபவங்களை நான் ஏதோ ஒருவகையில் பிறருடைய விரிந்த வாழ்க்கைபுலத்தில் பொருத்துகிறேன். அவ்வண்ணம்தான் அவை கதைபோல ஆகின்றன. அதுவே அவற்றின் இலக்கியக்குணம்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்
பூதம் முதற்சுவை போன்ற கட்டுரைகளில் தெரியும் உங்கள் அம்மா அப்பா இருவர் சித்திரமும் மிக நுட்பமாக உள்ளது. முரட்டுத்தனம் மிக்க அப்பாவும் நுண்மையான அம்மாவும். அவர்கள் இருவரும் ஏன் சேர்ந்துவாழமுடியாமல் இறந்தார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது. அம்மாவின் பிடிவாதம் போன்ற தன்மைகளை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். வேகமாகவும் சுருக்கமாகவும் சொல்வதுபோல கட்டுரை போனாலும் உள்ளே ஏராளமான தகவல்களுக்கும் ஊகங்களுக்கும் இடம் விடுகிறீர்கள். தேர்ந்த இலக்கியவாசகனால் மட்டுமே வாசித்து உள்வாங்கிக்கொள்ளக்கூடிய பல இடங்கள் உள்ளன இந்தக் கட்டுரைகளில்,. கண்டிப்பாக உங்கள் சமீபத்திய சாதனை என்று இந்தக்கட்டுரைகளைச் சொல்ல முடியும்
கருணாகரன்
மதுரை