விருது,எதிர்ப்பு,வெளியீடு

or0

ஜூன் பத்தாம்தேதி குமரகுருபரன் பிறந்தநாள். குமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருது சபரிநாதனுக்கு வழங்கும் விழா. காலை ஏழுமணிக்கு சென்னை சென்றுசேர்ந்தேன். கவிஞர் தேவதேவன் எட்டு மணிக்கு வந்துசேர்ந்தார். இருவரையும் கே.பி.வினோத் அழைத்துவந்து அறைசேர்த்தார். தேவதேவனிடம் கே.பி.வினோத் “சார் எங்கே இருக்கீங்க?” என்று தொலைபேசியில் கேட்க “வினோத் நீங்க சொன்னதுபோல நான் விழுப்புரத்திலே எறங்கிடறேன்” வினோத் அலறலாக “சார் அது எக்மூர்” என்றார். “அப்டியா?”

காலைமுதலே அறையில் நண்பர்கள் வரத்தொடங்கிவிட்டனர். காளீப்பிரசாத் குண்டாகிவிட்டிருந்தார். “என்ன செய்ய? குருஜிகிட்டே யோகா கத்துக்கறேன். அதான் இப்டி” என்றார். குருஜி சௌந்தர் சோகமாக “தினமும் வர்ரதில்ல. வாரம் ஒருதடவை வந்து மூர்க்கமா செய்றது. நேரா போய் நெய்வழிய வெண்பொங்கல், காபி” என்றார். எனக்கே யோகா செய்யவேண்டும் என்ற ஆசை எழுந்தது.

or1

மதியம் சற்றே தூங்கினேன். உரையைத் தயாரிக்கவேண்டும். சபரிநாதன் கவிதைகளை விமானத்தில்தான் வாசித்தேன். பின்னர் வீட்டில். ஆனால் எங்கிருந்து தொடங்குவதென்று தெரியவில்லை. கவிதையின் ஏதேனும் ஒருவரியிலிருந்து தொடக்கத்தை எடுப்பது என் வழக்கம். அரைத்துயிலில் அந்த வரி தொடக்கத்துடன் எழுந்து வந்தது

ppp

விழா ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. நல்ல குளிரூட்டப்பட்ட அரங்கம். மிதமான ஒளி. மனுஷ்யபுத்திரன் போக்குவரத்துச்சிடுக்கில் மாட்டிக்கொண்டமையால் கொஞ்சம் தாமதமாகியது. சபரிநாதனை சந்தித்தேன். கூச்சம்நிறைந்த இளைஞராக இருந்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி என அறிந்தேன். அதோடு கோணங்கியின் தம்பியின் மகளை விரைவில் மணக்கவிருக்கிறார் என்றும். கோணங்கியுடன் அவர் இல்லத்திற்கு முன்பு சென்றிருக்கிறேன். அவரும் மனைவியும் மகளும் கணவரும் வந்திருந்தார்கள்.

இரவு அறைக்குத்திரும்பி நள்ளிரவு வரை பேசிக்கொண்டிருந்தோம். பொதுவாக இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்திமுடித்தபின் நிறைவுடன் பேசிக்கொண்டிருப்பது நெடுங்காலம் நினைவில் நின்றிருக்கும் அனுபவம்.

or2

நான் மலேசியாவில் இருந்தபோது செல்பேசியை தொடவே பயந்தேன். தமிழகத்திலிருந்து ஒரு கவிஞர் ஒருநாளுக்கு கிட்டத்தட்ட நூறு தவறிய அழைப்புகள் அளித்துக்கொண்டிருந்தார். குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருதுக்கு எதிர்ப்பும் அவரது கவிதைகளுக்கு அவரே ஆதரவும் தெரிவித்து. மின்னஞ்சல்கள் குறுஞ்செய்திகள் வேறு. எனக்கென்றால் ஒற்றைக்கண். அதில் நீர்வழிவு. கூடவே வெண்முரசுவேலைகள். நாளுக்கு நான்கு வகுப்புகள். நண்பர்கள்தான் செல்பேசியை எடுத்துப்பார்த்தார்கள்

லட்சுமி மணிவண்ணன் அழைத்திருந்ததை அதனால்தான் நான் பார்க்கவில்லை. திரும்பிவந்தால் அவர் என் பெயரை இரண்டு நிகழ்ச்சிகளில் சேர்த்திருந்தார். ஒன்று ஒற்றை இந்துத்துவா எதிர்ப்புக் கருத்தரங்கு. இன்னொன்று பாலைநிலவனின் கவிதைநூல் வெளியீடு. எனக்கு அவரை பல ஆண்டுகளாகத்தெரியும், அவருக்கு என்னையும். ஆகவே அந்த உரிமை அவருக்கு உண்டு. அவர் இம்மாதிரி விஷயங்களில் தவறுகள் செய்யமாட்டார் என எனக்கும் ஒரு நம்பிக்கை

or4 5

11 ஆம் தேதி காலையில் கண் மீண்டும் வீங்கிவிட்டது. முந்தையநாள் குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விழாவில் கண்ணுக்குநேராக குவிவிளக்கு வீசியதா இல்லை அதற்கு முந்தையநாள் ரயிலில் சாதாரண பெட்டியில் வந்ததா என்று தெரியவில்லை. குளிர்பதனப்பெட்டி பயணச்சீட்டு உறுதியாகவில்லை. அதைவிட அதிகமான கட்டணத்தில் உடனடியாக கிடைக்கும் சீட்டை எடுத்து அளித்திருந்தார்கள். பெட்டிக்குள் நல்ல புழுதிக்காற்று. காலை எழுந்து வெண்முரசை எழுதினால் கைபோன இடங்களில் நான் எண்ணிய எழுத்துக்கள் இல்லை.நாநூறு வார்த்தை தட்டச்சிட இரண்டுமணிநேரம்

uu

மணிவண்ணன் அழைத்ததும் காலையுணவை துறந்துவிட்டு அவசரமாகக் கிளம்பி கொஞ்சம் தாமதமாக மணிவண்ணனின் நிகழ்ச்சிக்குச் சென்றுசேர்ந்தேன். கூட என் அறையிலேயே தங்கியிருந்த கவிஞர் தேவதேவனும் வந்தார். சிறிய அரங்கு. சிறியகூட்டம். பலசிக்கல்களுக்கிடையே நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார். காவல்துறைக் கெடுபிடிகள் காரணமாக நிகழ்விடத்தை இருமுறை மாற்றநேர்ந்திருந்தது. நெடுநாட்களுக்குப்பின் கோணங்கியைச் சந்தித்தேன். சந்துருமாஸ்டர் வந்திருந்தார். நிகழ்ச்சியில் சுருக்கமாகப் பேசினேன்.இருபத்தைந்தாண்டுக் காலமாக நான் சொல்லிவரும் அதே கருத்து. அன்று நான் தனிக்குரல்..இன்று என் குரலுடன் வேறுசிலகுரல்களும் இணைந்துள்ளன.

or4

நான் இந்து என்று சொல்லிக்கொள்ள நாணவில்லை. இந்துமதம் அழியவேண்டியதென்று எண்ணவுமில்லை. அதன் அனைத்து பழமையின் குறைவுகளுடன் அது எனக்கு மெய்ஞானத்தேடலுக்கான வழிமுறைகளை திறந்து காட்டுகிறது. கட்டற்ற சுதந்திரத்தை அளிக்கிறது. நவீன வாழ்க்கையில் முழுமையாக பொருந்தியபடி அதை கடைப்பிடிக்க நெகிழ்வுகொள்கிறது. என் மூதாதையரின் வரலாறும் பண்பாடும் அதில் உறைகின்றன. ஆழ்மனமாக என்னில் நிறைந்துள்ள அனைத்துப் படிமங்களும் அதில் உள்ளவையே.

நான் நம்பும் இந்துமதம் கங்கையைப்போன்றது. பல்லாயிரம் ஓடைகள் பலநூறு கிளையாறுகள் பற்பல துணையாறுகள் கலந்து ஓடும் பெருக்கு அது. அதன்மேல் எந்த மையக்கட்டுப்பாட்டையும் எவரும் ஏற்ற நான் ஒப்பமாட்டேன். அதை ஒற்றைப்படையாக்குவதை எதன்பொருட்டும் ஏற்கமாட்டேன். எத்தனையோ எதிர்ப்புகளைக் கண்டது அம்மரபு. அவற்றை தன் மகத்தான பன்மைத்தன்மையாலெயேஎ அது வென்றது. ஒற்றைப்படையாக, அமைப்பாக அதை ஆக்குவது மட்டுமே அதை அழிக்கும்.

or5

மீண்டும் திரும்பி விடுதியறை. நேராக ஒரு சினிமாச்சந்திப்பு. அங்கிருந்து நான்கரை மணிக்கு டிஸ்வகரி புத்தகநிலையம். அங்கே பாலைநிலவனின் கவிதைநூல் வெளியீட்டுவிழாவில் பேசினேன். நான் ஒருகண்னால் வாசித்த தொகுதி அதுமட்டுமே. செகாலின் ஓவியம் ஒன்றில் ஊருக்கு ஓடிச்செல்லும் காதலனுடன் காதலி பறந்து செல்வாள். அதைப்போல சபரிநாதன் கவிதைகள் நடந்துசெல்ல பாலைநிலவன் கவிதைகள் கூடவே பறப்பதாகத் தோன்றியது. கண்கூசி வலித்தாலும்  நன்றாகவே பேசினேன் என நினைக்கிறேன்.

yyy

பேசிமுடித்து வீடுவந்தபோது கண்கள் இரண்டுமே கலங்கி ஒளிக்குக் கூசின. நண்பர்கள் அறையில் வந்து நிறைந்திருந்தனர். மீண்டும் ஒரு உற்சாகமான சந்திப்பு. சிரிப்பு அரட்டை என நள்ளிரவு வரை.

முந்தைய கட்டுரைசீ. முத்துசாமியின் ‘இருளில் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 22