‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 21

20. பொய்ப்புரவி

flowerசகதேவனுக்குப்பின் ஏழு நாட்கள் கடந்து நகுலன் விராடநகரியை சென்றடைந்தான். அரண்மனையின் குதிரைக்கொட்டிலில் தோலாடையும் கையில் சவுக்குமாக வந்து அவன் பணிந்து நின்றபோது தொலைவிலிருந்து அவனைக் கண்ட புரவிகள் திரும்பி நோக்கின. இரு வெண்புரவிகள் கொட்டில் அழியினூடாக தலைநீட்டி பெருமூச்சுவிட்டு மெல்ல கனைத்தன. ஒரு குட்டி வாயில் கவ்விய புல் தொங்கியாட அவனை நோக்கி துள்ளி வந்து தயங்கி நின்று பிடரிமயிர் சிலிர்த்து ‘ம்ரெ?’ என்றது. இன்னொரு பெரிய பெண்குட்டி அதற்குப் பின்னால் வந்து நின்று “வந்துவிடு. அங்கெல்லாம் செல்லக்கூடாது தெரியுமா?” என்றது.

 NEERKOLAM_EPI_21

உடனே சிறியகுட்டி அவனை நோக்கி தாவி வந்து அருகே அணைந்து ‘நான் சும்மாதானே வந்தேன்?’ என்னும் நடிப்புடன் வேறுபக்கம் திரும்பி விழியுருட்டி பின்னால் நோக்கி நின்றது. நகுலன் அருகே சென்று அதன் முதுகை தொட முயல துள்ளி விலகியது. அவன் கையை எடுத்துக்கொண்டு வேறுபக்கம் திரும்பி நின்றபோது அது சற்று அருகே வந்தது.

அதன் தமக்கை “வந்துவிடு… அம்மாவிடம் சொல்லிவிடுவேன்” என்றது. “போடி” என்றபின் குட்டி நகுலனை அணுகி அவன் தொடையை தன் தலையால் முட்டியது. அவன் அதன் பிடரிமயிரை கையில் கொத்தாக அள்ளிப்பிடித்து மெல்ல உலுக்கினான். அது “நான் புல் தின்பேன்” என்று புல்லை மென்றுகாட்டியது. ஆனால் பல் நிலைக்காத வாயிலிருந்து எச்சில்கோழையுடன் புற்சரம் நழுவியது.

கொட்டில்சூதர் எட்டிப்பார்த்து “யார்?” என்றார். “நான் கிரந்திகன். அயலூர் சூதன். தலைமைச்சூதரை பார்க்கும்பொருட்டு வந்தேன்” என்றான். “உள்ளே வருக!” என்றார் அவர். அவன் அருகே செல்ல “நானும் வருவேன்” என்று குட்டி கூடவே வந்தது. “வேண்டாம். அவர்கள் கெட்டவர்கள். வந்துவிடு” என்றது தமக்கை. குட்டி அதை திரும்பிப்பார்க்கவில்லை. நகுலன் கொட்டகை வாயிலில் சென்று கைகட்டி நிற்க தமக்கையும் வந்து அவனருகே நின்றது. அவன் திரும்பிப்பார்க்காமலிருக்கவே “ர்ர்ப்?” என்று கூப்பிட்டது. அவன் திரும்பி புன்னகைத்து அதன் அடிக்கழுத்தை வருடினான். அது தலையைச் சிலுப்பி “நான் விரைந்து ஓடுவேன்” என்றது.

கொட்டில்சூதர் “என் பெயர் நாமன். இங்கே இருபதாண்டுகளாக பணிபுரிகிறேன்… உன் ஊர் எது? குடிப்பெயர் என்ன?” என்றார். “நான் சௌவீர நாட்டான். பிரபவகுடிப் பிறந்தவன். அங்கிருந்து அயலூர் காணும்பொருட்டு கிளம்பினேன்.” அவர் “ஏன்? ஊரில் என்ன இடர்?” என்றார். “என் உடன்பிறந்தான் பிரிந்து அகன்றான். அவனின்றி என்னால் அங்கு இருக்கமுடியவில்லை. அவனைத் தேடி நானும் கிளம்பினேன்” என்றான் நகுலன்.

“நீங்கள் இரட்டையரா?” என்றார் நாமர். “ஆம்.” அவர் புன்னகைத்து “ஏனோ அப்படி தோன்றியது. ஒரு சிலையின் இடப்பக்கத்தை மட்டும் பார்த்ததுபோலிருக்கிறது உன்னைக் கண்டால்” என்றார். நகுலன் புன்னகைத்தான். “இரட்டையரில் ஒருவர் பிரிந்தால் பிறிதொருவர் வாழ்வது கடினம். நீ அவனை சந்திக்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன்” என்றார் நாமர். “ஆம், இங்கே பணியாற்றிக்கொண்டு இவ்வட்டாரங்களில் தேடலாமென நினைக்கிறேன்” என்றான் நகுலன்.

கொட்டிலின் தலைமைச்சூதர் சுதமர் இருமியபடி வந்தார். நகுலன் தலைவணங்கினான். “நீர் எங்கு புரவிக்கலை பயின்றீர்?” என்றார் சுதமர். “சௌவீரத்தில். என் குடி எழுபது தலைமுறைகளாக புரவித்தொழில் செய்வது” என்றான் நகுலன். “நீர் தேர்ந்தவர்…” என அவர் நகுலனை கூர்ந்து நோக்கினார். “இங்கிருப்பவரில் எவரும் உம்மளவு புரவியை அறிந்தவர்களல்ல…” நகுலன் தலைவணங்கினான். அவர் திரும்பி நாமரிடம் “பத்மை இவரரருகே நின்றிருப்பதை பாரும். இளைய பெண்புரவிகள் ஒருவரை நம்ப பல மாதங்களாகும்” என்றார். நாமர் அப்போதுதான் வியப்புடன் அந்தப் பெண்குட்டியை பார்த்தார். அது நகுலனின் தோலாடையின் முனையை சப்பிக்கொண்டிருந்தது.

“நீர் போர்த்தொழிலும் கற்றவர், உமது கைகள் சொல்கின்றன. அதை எண்ணியே ஐயுறுகிறேன்” என்றார் சுதமர். நகுலன் “எங்களூரில் சூதர்களுக்கு போர்த்தொழிலும் தேவை. நாங்கள் வாழ்வது அரைப்பாலையில். போர்த்தொழிலறியா சூதன் புரவிகளை பாதுகாக்க இயலாது. எங்கள் நாட்டில் செல்வமென்றால் அது புரவி மட்டுமே” என்றான். அவர் ஐயத்துடன் “நீர் ஷத்ரியர் அல்லவா?” என்றார். “இல்லை, சூதன் மட்டுமே” என்றான் நகுலன். “நீர் இங்கே பணிபுரியலாம். எங்களுக்கு தேர்வலர்கள் புரவித்தொழிலர்கள் எப்போதும் தேவை. எங்கள் ஆற்றலே எங்களிடமிருக்கும் புரவிப்படைதான். மாமன்னர் நளன் காலம் முதலே நாங்கள் புரவித்திறன் வழியாகத்தான் இந்நிலப்பகுதியை ஆள்கிறோம்” என்றார் சுதமர். “ஆம், அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான் நகுலன்.

“அவருடைய புரவிநூலை அறிவீரா?”“ என்றார் சுதமர். “எந்நூலை?” என்றான் நகுலன். “அவர் ஆக்கியதாக இன்றிருப்பது ஒரு நூல் மட்டுமே. அஸ்வரஹஸ்யம், ஆயிரத்தெட்டு ஈரடிகள் கொண்டது” என்றார் சுதமர். “இல்லை. போர்ப்புரவிகளைக் குறித்த துரகாவபோதம் என்னும் நூலும் நளமாமன்னரால் இயற்றப்பட்டுள்ளது. அதை இங்குள்ளோர் மறந்துவிட்டனர் என நினைக்கிறேன். அதன் ஒரு வடிவத்தை நான் காசியில் கற்றேன். சொற்தேர்வும் செய்யுளமைப்பும் நளமாமன்னருடையது அது என காட்டுகின்றன. அதற்கு பிருகத்பலர் எழுதிய பாயிரமும் அதை நளன் எழுதியதை உறுதிசெய்கிறது” என்றான் நகுலன்.

சுதமர் திகைத்துப்போய் சில கணங்கள் நோக்கியபின் “நன்று. அந்நூலை உங்களிடமிருந்து பாடம்கேட்க விழைகிறேன். இக்குதிரைக்கொட்டிலையே நீங்கள் ஆளலாம், சௌவீரரே” என்றார். “நான் தங்களுக்குக் கீழே பணியாற்றவே வந்தேன். நான் கடந்துசெல்பவன்” என்றான் நகுலன். “வருக…” என அவர் அவனை அழைத்துச்சென்றார். “நள மாமன்னரின் புரவித்திறனே உருளைக்கற்கள் சிதறிப்பரவிய இக்குறுங்காட்டை நாடென்றாக்கியது. அவர் அடைந்த மெய்மை ஒன்றே. இங்குள்ள நிலத்திற்கு ஏற்ப புரவியூர்பவர்களின் விழிகளை தேர்ச்சி பெறச்செய்ய அவர் முதலில் முயன்றார். ஆனால் புரவிகளின் கால்கள் அதைவிட எளிதாக அத்தேர்ச்சியை அடைவதை அவர் கண்டுகொண்டார்” என்றார் சுதமர்.

“எந்தச் சூழலுக்கும் புரவியைப் பழக்குவதே சிறந்த வழி என்பதுதான் நளநெறி. புரவியை இரண்டு மாதம் முதல் கால்பழக்கத் தொடங்கவேண்டும். அது விழுந்தால் அடிபடாத அகவையில். புரவிகளைப் பழக்குவதற்குரிய வழிமுறைகளைத்தான் அஸ்வரஹசியத்தில் இரண்டாம் பகுதியில் எட்டு பாதங்களிலாக அவர் விளக்குகிறார். முதல் பகுதியின் மூன்று பாதங்கள் புரவிகளின் குலங்களையும் குடிகளையும் உடற்சுழிகளையும் பிறவியியல்புகளையும் விளக்குகின்றன” என அவர் தொடர்ந்தார்.

“ஆனால் எங்கள் குலம் சிதறிப்பரவியபோது புரவியறிவு தேங்கியது. இரண்டாம் மகாகீசகர் இந்நகரை அமைத்தபோது மீண்டும் புரவித்தொழிலை வளர்த்தெடுக்க ஆணையிட்டார். நளமாமன்னரின் காலத்தில் இங்கே தேரப்பட்ட புரவிகளுடன் இங்குறைந்தவர்கள் கீழ்நிலங்களுக்கு சென்றுவிட்டிருந்தனர். அப்புரவிகள் கால்மறந்துவிட்டிருந்தன. இங்கு நகர் அமைந்தபின் மூத்த சூதரான கூர்மர் இங்குள்ள காடுகளில் வாழும் புரவிகளின் குட்டிகளை பிடித்துவந்து பழக்குவதே எளிதென்று கண்டுகொண்டார். நளனின் கலையை அவர் குடிகள் மறந்துவிட்டிருந்தனர். அவர் பயிற்றுவித்த புரவிகளின் தலைமுறை தங்கள் கால்களில் நினைவுவைத்திருந்தது. அவ்வாறு உருவானதே இன்றுள்ள புரவிப்படை.”

“எங்கள் புரவிதேரும் கலையை ஷத்ரியர் அறியலாகாதென்பதில் நாங்கள் கூர் கொண்டிருக்கிறோம். அரசர் விராடரின் மாற்றிலா ஆணை அதை அறைகூவுகிறது. ஆகவேதான் ஷத்ரியரையோ அயல்சூதரையோ நாங்கள் இங்கு நுழைய ஒப்புவதில்லை” என்றார் சுதமர். “ஆனால் ஏன் உம்மை உள்ளே விட ஒப்புகிறோம் என்று நீர் கேட்கலாம். நீர் அறியாத ஒன்று புரவியிலிருக்கும் என தோன்றவில்லை. அப்படி ஒன்றுண்டு என்றால் புரவிகளே வந்து உம்மிடம் அவற்றை சொல்லிவிடக்கூடும். உம்மை அகற்றுவதைவிட அணுக்கமாக வைத்திருப்பதும் நீர் அறிந்தவற்றை கற்று எம்மை மேம்படுத்திக்கொள்வதுமே நன்றென்று தோன்றுகிறது. அதையே எங்கள் படைத்தலைவர் கீசகரும் விரும்புவார்.”

“கீசகரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான் நகுலன். “அரசியின் இளையவர். மகாகீசகரின் குருதிவழி வந்தவர். நீங்கள் அறிந்திருப்பீர்கள், இங்கே உண்மையான செங்கோல் இருப்பது கீசகரிடம்தான்” என்றார் சுதமர். “நான் மிகையாகப் பேசுகிறேன் என எண்ணுகிறீர்கள் என அறிவேன். மிகையாகப் பேசுவது என் வழக்கம். பொதுவாக குதிரைச்சூதர் மிகையாகப் பேசுவார்கள். நாளெல்லாம் அவர்கள் குதிரைகளுடன் தனித்திருப்பார்கள். குதிரையுடன் பேசத்தொடங்கினாலொழிய அவர்களால் இந்தத் தனிமையை கடக்கவியலாது. அதில் பழகிப்போனால் எதிர்நிற்பவர்களின் செவியை எண்ணாமல் பேசிக்கொண்டிருக்க இயலும். நான் குதிரைக்கொட்டிலுக்குள் நுழைந்து எழுபதாண்டுகளாகின்றன. எந்தை என் ஐந்து வயதில் என் கையில் சேணத்தை அளித்தார்… வருக! உம்மை இங்கேயே தங்கவைக்கிறேன். புரவித்தொழிலருக்கு அவற்றின் சாணியும் நீரும் நறுமணமே என்று அறிவேன்…”

அவர் நகுலனை அழைத்துச்சென்று அவன் தங்கவேண்டிய அறையை காட்டினார். அவர்களுக்குப் பின்னால் இரு குதிரைக்குட்டிகளும் வந்தன. தமக்கை வெளியே நின்றுகொள்ள தம்பி உள்ளே வந்து சுற்றிலும் மோப்பம் பிடித்து “நல்ல இடம்தான்” என்றது. “உள்ளே சிறுநீர் கழிக்கப்போகிறது” என்றார் நாமர். “கழிக்காது, அதற்குத் தெரியும்” என்றான் நகுலன். “மாலை எங்கள் இளவரசர் புரவிபழக வருவார்… நீர் அவரை சந்திக்கலாம்” என்றார் சுதமர். நகுலன் வியப்புடன் “மிக இளையவரா இளவரசர்? மூத்தவர் என்றார்கள்” என்றான். நாமர் “உள்ளத்தால் இளையவர்” என்றார். சுதமர் சிரித்தபடி “ஆம், ஆனால் அரண்மனைப் பெண்டிருக்கு மாற்றுக்கருத்து உள்ளது” என்றார்.

flowerநகுலன் நெடுந்தொலைவு நடந்த களைப்புகொண்டிருந்தான். உணவுண்டதுமே படுத்து ஆழ்ந்து உறங்கினான். மாலையில் புரவிகளின் ஓசைகேட்டு விழித்துக்கொண்டான். அறைக்குள் ஒரு மூலையில் குட்டிக்குதிரை சுருண்டு தூங்கிக்கொண்டிருந்தது. அதன் வாய் தரையில் ஊன்றியிருக்க எச்சில் வழிந்து மண்ணில் ஊறியிருந்தது. வெளியே அதன் தமக்கை நின்றபடி தலைதாழ்த்தி எச்சில் குழாய் வழிந்து துளி சிலந்திபோல அசைந்தாட அரைத்துயிலில் நின்றிருந்தது. அவன் எழுந்த ஓசைகேட்டு அது திடுக்கிட்டு “ப்ரே” என்றது. உள்ளே குட்டி எழுந்து “ம்ம்ம்” என்றபின் முன்னால் சென்று சுவரில் தலையை முட்டி அப்படியே நின்று துயிலில் ஆடியது. ஏழெட்டு சூதர்கள் புரவிகளின் கடிவாளத்தைப் பிடித்தபடி ஓடுவதை நகுலன் கண்டான்.

ஓடிவந்த நாமர் “இளவரசர் வந்துவிட்டார்” என்றார். “ஏன் இத்தனை குதிரைகளை கொண்டுசெல்கிறார்கள்?” என்றான் நகுலன். “அவர் பல குதிரைகளை கேட்பார். எதை கொண்டுசென்றாலும் சினம் கொள்வார்… வருக!” என்றார் நாமர். நகுலன் விரைந்து கொட்டிலை ஒட்டியிருந்த சூதர்களுக்கான அடுமனைக்குச் சென்று கைகால் முகம் கழுவி அவர்கள் அளித்த இன்கிழங்குக் கூழை அருந்திவிட்டு முகப்புமுற்றத்திற்கு சென்றான். அங்கே முன்னரே குதிரைச்சூதர்களும் பல உயரங்களிலான குதிரைகளும் நின்றிருந்தன. அப்பால் ஒரு தேர் செந்நிறப் பட்டுத்திரைகள் காற்றிலாட நின்றிருந்தது.

காவலர்களுக்கு நடுவே பீடத்தில் அமர்ந்திருந்த மெலிந்த உடல்கொண்ட இளைஞனை நகுலன் தொலைவிலேயே பார்த்தான். பார்த்ததுமே புன்னகைக்க வைக்கும் ஒன்று அவனிடமிருந்தது. தசையமைப்பால் அவனை அழகன் என்றே சொல்லிவிடமுடியும். சிவந்த நீள்வட்ட முகம். பெண்களுடையவை எனத் தோன்றிய உதடுகள். புகைப்படிவு போன்ற மீசை. பச்சைநரம்போடிய நீண்ட கைகள். அவன் முகத்திலிருந்த ஒரு சிணுக்கம்தான் அந்தப் புன்னகையை உருவாக்குகிறது என நகுலன் புரிந்துகொண்டான். எதையோ கேட்டுப்பெற முயன்று மறுக்கப்பட்ட குழந்தையின் தோற்றம்.

“இதுவல்ல, இதுவல்ல, மூடா” என அவன் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் பெயர் உத்தரன் என்பதை நகுலன் நினைவுகூர்ந்தான். “என் காலணிகள் இவை அல்ல… நான் சொல்கிறேன்” என்றான். “நேற்று அணிந்தவை இவைதான், இளவரசே” என்றான் சூதன். “நேற்று இவை இப்படி இறுக்கமானவையாக இல்லை” என்றான் உத்தரன். “நான் சற்று இறுக்கிக் கட்டுகிறேன். நேற்று இவை இருமுறை கழன்றன. நீங்கள் சினம்கொண்டீர்கள்.” உத்தரன் “ஆம், ஆனால் இன்று என் கால்கள் வலிக்கின்றன. ஆ, என் விரல்கள்!” என்றான். “மெதுவாக” என்றார் அருகே நின்றிருந்த சுதமர்.

அவனை நோக்கி “யார் இவன்?” என்றான் உத்தரன். “சௌவீரநாட்டை சேர்ந்தவன். புரவிதேர்ந்தவன்” என்றார் சுதமர். “இன்றுதான் இங்கு வந்திருக்கிறான்.” நகுலன் “என் பெயர் கிரந்திகன்” என்றான். “நன்று, புரவித்தொழிலை இங்குபோல நீ எங்கும் கற்றுக்கொள்ள இயலாது. இது நிஷதர்களின் தொன்மையான புரவித்தொகை, அறிந்திருப்பாய்” என்றான் உத்தரன். “ஆம்” என்றான் நகுலன். “இவற்றை பிறநாட்டார் அணுகவியலாது. நாங்கள் பிறரை அணுகவிடுவதுமில்லை” என்றபின் உத்தரன் கையில் சவுக்குடன் எழுந்துகொண்டான். “எங்கே என் புரவி?” சுதமர் கைகாட்ட ஒரு சிறிய புரவியை கொண்டுவந்து நிறுத்தினான் சூதன்.

“என்ன விளையாடுகிறீர்களா? இது குதிரையா அத்திரியா? இதன்மேல் நான் ஏறவேண்டுமா? மூடர்களே, குதிரையை கொண்டுவருக!” என்றான் உத்தரன். சுதமர் பணிவுடன் “நேற்று கொண்டுவந்த புரவி பெரிதென்று சொன்னீர்கள்” என்றார். “அதை பெரிதென்றா சொன்னேன்? மூடா, பெரிதென்றா சொன்னேன்? சொல், நான் என்ன சொன்னேன்? சொல்!” உத்தரன் சுதமரை நோக்கி கைநீட்டி “நீ புரிந்துகொண்டதை சொல்லாதே, நான் சொன்னதை சொல்” என்றான். சுதமர் “தாங்கள் சொன்னது…” என இழுக்க “அதன் சேணம் சரிவர அமைக்கப்படவில்லை என்றேன். பிறிதொன்றைக் கொண்டுவர ஆணையிட்டேன்” என்றான்.

“சேணம் சரிவர அமைத்து அதை கொண்டுவருக!” என்றார் நாமர். “அது வேண்டியதில்லை. சேணத்தை அதுவே சரித்துக்கொள்கிறது. நன்கு பழகாத புரவி. பிறிதொன்று வருக!” என்றான் உத்தரன். சுதமர் கைகாட்ட நடுத்தரமான ஒரு மாந்தளிர் நிறப் புரவியை சூதன் கொண்டுவந்தான். “இதுவும் சிறிய புரவிதான். ஆனால் பயின்றதுபோலத் தோன்றுகிறது” என்றபடி உத்தரன் தன் கையை அதை நோக்கி நீட்ட அது கனைத்தபடி கால்களை உதைத்து வால் சுழற்றி பின்னால் தாவியது. “என்ன இது? இது பயிலாத குதிரையா?” என்றான் உத்தரன். “இளவரசே, நீங்கள் அதன் விலாநோக்கி கைநீட்டினீர்கள். புரவிகள் அதை விரும்புவதில்லை” என்றான் சூதன். அவனை நோக்கி சவுக்கை ஓங்கிய உத்தரன் “எனக்கு நீ புரவி கற்றுத்தருகிறாயா? நான் யாரென்று அறிவாயா? நான் யாரென்று தெரியுமா உனக்கு? சொல்!” என்றான்.

அவன் தலைகுனிந்து நிற்க “நீங்கள் நளமாமன்னரின் குருதிவழி வந்தவர்” என்றான் இன்னொரு சூதன். முகம் மலர்ந்த உத்தரன் “ஆம், அதை கவிஞர் பாடுகிறார்கள். புரவிகளுக்கு என்னைத் தெரியும்… எனக்கு புரவிகளை அதைவிட நன்கு தெரியும்” என்றபடி அந்தப் புரவியை நோக்கி சென்றான். அது விலா சிலிர்த்தது. அவன் தயங்கி மெல்ல கைநீட்ட “கைநீட்ட வேண்டாம், இளவரசே” என சுதமர் மெல்லிய குரலில் சொன்னார். அவன் கையை சட்டென்று இழுத்துக்கொள்ள புரவி சற்று துள்ளி விலகி மூச்சு சீறியது.

“மூடா!” என்றான் உத்தரன். “கையை சட்டென்று இழுக்கலாகாது, இளவரசே” என்றார் நாமர். உத்தரன் அவரை நோக்கி சவுக்கை ஓங்கி “எனக்கே கற்றுத்தருகிறாயா? என்னிடமே புரவிபற்றி பேசுகிறாயா?” என்றான். “தங்களுக்குத் தெரியாதது அல்ல… இந்தப் புரவி…” என்று சுதமர் சொல்லத் தொடங்க “வேறு புரவி வருக… நன்கு பயின்ற புரவி” என்றான் உத்தரன். நகுலன் அங்கு நின்ற பெரிய கரிய புரவியின் கடிவாளத்தைப்பற்றி அதன் முகத்தை வருடியபடி அருகே கொண்டுவந்து “ஏறுக, இளவரசே!” என்றான்.

சுதமர் திகைப்புடன் “இதுவா? இது… இது இன்று நல்ல நிலையில் இல்லை” என்றார். “நன்றாகவே உள்ளது. இளவரசர் ஏறலாம்” என்றான் நகுலன். “கரிய குதிரை… சுழிகள் பொருத்தமானவையாக இல்லை… மேலும்” என்றான் உத்தரன். “ஏறுங்கள், இளவரசே!” என்றான் நகுலன். “இல்லை, அந்த வெண்புரவி வருக. நான் கரிய புரவிகளை பொதுவாக விரும்புவதில்லை” என்றான் உத்தரன். “சற்று முயன்றுபாருங்கள்” என்றான் நகுலன். உத்தரன் ஐயத்துடன் சுதமரை நோக்க அவர் வேறெங்கோ விழிதிருப்பினார். “நாமர் அந்தக் கடிவாளத்தை பிடிக்கட்டும்” என்றான் உத்தரன். “நானே பற்றிக்கொள்கிறேன்” என்றான் நகுலன். “இன்று நெடுநேரமாகிறது. அந்த சிறிய குதிரையை கொண்டுவருக! முதலில் வந்த குதிரை… அது சிறிதாக இருந்தாலும் துடிப்பானது” என்றான் உத்தரன்.

அப்புரவியை அருகே கொண்டுவந்து “தொட்டுப்பாருங்கள், இளவரசே!” என்றான் நகுலன். உத்தரன் அஞ்சியபடி கைநீட்டி புரவியின் விலாவை தொட்டான். அவன் கை நீண்டபோது அப்பகுதி விதிர்த்தது. முன்வலக்கால் குளம்பை எடுத்து அமைத்தபின் புரவி பெருமூச்சுவிட்டது. நகுலன் அதன் முகவாயின் பெருநரம்புகளை வருடிக்கொண்டே இருந்தான். “காலை குதிவளையத்தில் வையுங்கள்” என்றான் நகுலன். “நான் இன்னமும் என் காலுறையை மாட்டவில்லை” என்றான் உத்தரன். “எடுத்து வையுங்கள், இளவரசே” என்றான் நகுலன்.

“ஒரு காலை வைக்கிறேன்…. அதன்பின் அந்தக் குதிரையில்…” என்றபடி காலை தூக்கி வளையத்தில் வைத்த உத்தரனை அவன் முற்றிலும் எதிர்பாராதபடி பின்பக்கத்தைப்பற்றி உந்தி மேலேற்றி அவன் மறுகாலைப்பிடித்து சுழற்றி அப்பாலிட்டான் நகுலன். “என்ன செய்கிறாய்? மூடா! என்ன செய்கிறாய்…? அய்யோ” என உத்தரன் கூவினான். “குதிவளையத்தில் கால்நுழையுங்கள்” என்றான் நகுலன் “எங்கே? எங்கே?” என்றான் உத்தரன் பதறி திரும்பி இறங்க முயன்றவனாக. நகுலன் அந்தக் காலை பிடித்து வளையத்திலிட்டு “கடிவாளத்தை பற்றிக்கொள்க!” என்றான். “வேண்டாம், வேண்டாம்… இந்தப் புரவி அஞ்சுகிறது” என்றான் உத்தரன்.

“செல்க!” என நகுலன் புரவியின் மூக்கை வருடினான். “இந்தப் புரவி அஞ்சுகிறது… வேண்டியதில்லை… என்னை இறக்கிவிடு… என் ஆணை! இப்போதே…” உத்தரன் கூவிக்கொண்டிருக்கையிலேயே புரவி பெருநடையிட்டு முன்னால் சென்றுவிட்டது. “வேண்டாம்… வேண்டாம்” என்று உத்தரன் கூவினான். “கடிவாளத்தை விடாதீர்கள். குதிகாலை உருவாதீர்கள். முன்குனிந்து அமர்ந்திருங்கள்” என்று நகுலன் உரக்க கூவினான். “வேண்டாம், வேண்டாம்… போதும் பயணம்… இந்தப் புரவி கெட்டது” என்று உத்தரன் கூவியபடி கண்களை இறுகமூடி கடிவாளத்தை பற்றிக்கொண்டான்.

“விடாதீர்கள், இளவரசே!” என்றபின் மிக மெல்ல சீழ்க்கையடித்தான் நகுலன். புரவி காதுகளை பின்னால் சரித்து வால்சுழற்றி எம்பி குளம்பறைய விழுந்து கால்கள் சகடவிளிம்புகளாக சுழன்றுபறக்க விரைந்தோடியது. “விழுந்துவிடுவார்… விரைந்து பின்னால் செல்லுங்கள்” என்று சுதமர் நடுங்கும் குரலில் சொன்னார். “விழமாட்டார்” என்றான் நகுலன். “சூதனே, அவருக்கு எட்டாண்டுப் பயிற்சிக்குப் பின்னரும் புரவிக்கலை சற்றும் தெரியாது. கடிவாளமும் குதிவளையமும் நிலைகொள்ளாது” என்றார் சுதமர். “ஆம், அறிவேன். ஆனால் புரவியிடம் சொல்லியிருக்கிறேன். அது அவரை காத்து அழைத்துச்சென்று மீளும்” என்றான் நகுலன்.

“அதனிடமே சொல்லமுடியுமா?” என்றார் சுதமர். “ஏன் உங்களிடம் சொல்லமுடிகிறதே?” என்றான் நகுலன். புரவி கண்ணிலிருந்து மறைந்தது. “இத்தனை விரைவாக சென்ற பின்னரும் அவர் விழவில்லை! பெருவியப்பு!” என்றார் நாமர். “இதற்குள் மண்டை உடைந்திருக்கும் என நினைத்தேன்” என்றான் ஒரு சூதன். அவர்கள் மெல்ல இயல்படைந்தனர். “விழுவதென்றால் அது கிளம்பிய தருணத்திலேயே விழுந்திருப்பார்” என்றார் சுதமர். “ஆம், இத்தனை தொலைவுக்கு சென்றுவிட்டார்” என்றார் நாமர். தொலைவில் புரவி தெரிந்தது. குளம்புகள் விழியிலிருந்து மறையும்படி பறக்க அது காற்றில் மிதந்து வந்தது.

“நேர்கொண்ட வருகை. இடவலம் நிகர்கொண்ட சுழியமைந்த சீருடல்” என்றான் நகுலன். “ஆம், இங்குள்ள புரவிகளில் முதன்மையானது” என்றார் நாமர். “அந்தப் புரவியின் பெயர் காரகன். சற்று கடுமையான உள்ளம் கொண்டது. அவர் பயிற்சி முடித்து கிளம்பும்போது பிற புரவிகளை கொண்டுசென்றுவிடுவோம். அந்தப் புரவியை மட்டும் அழைத்தபடி ஒரு சூதன் அவர் பின்னால் சாலைவரை செல்வான். அதில் அவர் பயிற்சி செய்வதாக ஊரார் நினைக்கவேண்டுமென அவர் எண்ணுகிறார்” என்றார் சுதமர். “ஆனால் ஊராருக்கே தெரியும், அவரால் கன்றுக்குட்டிமேல்கூட அமர இயலாதென்று.”

காரகன் உருப்பெருக அணுகி வந்து விரைவழிந்து குளம்புகள் தாளம் நிலைக்க மூச்சிரைத்தபடி நின்று நகுலனை அணுகி அவன் தோள்மேல் தன் பெரிய தலையை வைத்தது. கடைவாயில் வெள்ளிநூல்வலை என தொங்கிய நுரை அவன் தோள்மேல் சொட்டியது. புரவிமேல் அப்போதும் உடலை இறுக்கி பற்களை கிட்டித்து கடிவாளத்தை முறுகப்பற்றி கால்களை அணைத்து விழிமூடி அமர்ந்திருந்தான் உத்தரன். “இளவரசே” என்றார் சுதமர். “ஆ” என விழித்துக்கொண்டு அவன் விழப்போனான். நகுலன் அவன் கால்களை பற்றிக்கொண்டான்.

உத்தரன் நிலைகொண்டபின் திரும்பிப்பார்த்து அதிர்ந்தான். புரவி நின்றுகொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தவன்போல கீழே குதிக்க முயன்றான். நகுலன் அவன் கால்களைப்பற்ற அவன் மெல்ல இறங்கி நின்று தரையில் புரவியின் விசை எஞ்சிய உடல் நிலைகொள்ளாமல் தள்ளாடினான். நகுலன் அவன் தோளை பற்றிக்கொண்டான். அவனால் அப்போதும் என்ன நிகழ்ந்தது என்று தெளிவுற முடியவில்லை. திரும்பி தன்னருகே வியர்வைத் துளிகள் வழிய நின்றிருந்த கரிய புரவியை பார்த்தான். ஒரு கணத்தில் அனைத்தும் விளங்கிவிட “என்ன நின்றுகொண்டிருக்கிறீர்கள்? புரவியின் கால்களை உருவி விடுங்கள்… அத்தனை விரைவாக ஓடியபின் அது இளைப்பாறவேண்டாமா?” என்றான்.

“விரைவாக ஓடியபின் உடனே புரவியை உருவுவது…” என சுதமர் தொடங்க நகுலன் “நீர் காட்டியபின் கொட்டிலில் கட்டுக! நானே வருகிறேன்” என்று சொல்லி கடிவாளத்தை சூதன் ஒருவனிடம் அளித்தான். “நல்ல புரவி… என் உளவிரைவை கூடுமானவரை எட்ட முயன்றது” என்றான் உத்தரன். “ஆம், இன்னும் கொஞ்சம் தங்களிடம் பழகினால் மேலும் விரைவை எட்டும்” என்றான் நகுலன். உத்தரன் ஓரக்கண்ணால் அவனை நோக்கியபடி “ஆம், சிலநாட்கள் போகட்டும். அதன்பின் மீண்டும் அதற்கு பயிற்சி கொடுப்போம்” என்றான்.

மெல்ல பீடத்தில் சென்றமர்ந்த உத்தரன் “மூடா! என் காலணிகளை கழற்று” என காலை நீட்டினான். “இன்னும்கூட ஒரு சிலமுறை சுற்றியிருக்கலாம். பொழுதில்லை. அவையில் பணிகள் பல எஞ்சியிருக்கின்றன” என்றான். சூதன் அவன் காலணிகளை கழற்ற “குதிமுள்ளால் குத்தி அதை ஊக்கினேன். நல்ல புரவி, என் நோக்கத்தை புரிந்துகொண்டது” என்றான். நகுலன் “நாளை இன்னொரு புரவியில் செல்வோம், இளவரசே” என்றான். “நாளை என்றால்…” என அவன் இழுக்க “நான் இங்கிருப்பேன்” என்றான் நகுலன்.

அந்தச் சொற்குறிப்பைக் கேட்டு விழிதூக்கி அவனை நோக்கி உடனே திரும்பிக்கொண்டு “நீர் உடனிரும். நானறிந்த புரவிக்கலையை நீர் கற்றுக்கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே” என்றான் உத்தரன். “அது என் நல்லூழ்” என்று நகுலன் சொன்னான். உத்தரன் எழுந்துகொண்டு நகுலன் தோளில் தட்டி “நன்று… உமக்கு நான் ஒரு பொற்கங்கணத்தை அளிக்க ஆணையிடுகிறேன். அதை அணிந்துகொள்ளும். இளவரசனுக்குரிய புரவித்துணைவன் என்றால் அவனைப் பார்த்ததுமே பிறர் அறியவேண்டும்” என்றான் உத்தரன்.

அவன் சென்றதும் சுதமர் “விந்தை!” என்றார். “என்ன விந்தை? இவர் புரவிக்கு ஆணையிட்டார். புரவி அதை கேட்டது” என்றார் நாமர். “புரவியிடம் எப்படி பேசினீர்?” என்றார் சுதமர். நகுலன் புன்னகையுடன் “நாம் புரவிகளுக்கு பயிற்சி கொடுக்கவேண்டும் அல்லவா?” என்றான்.

முந்தைய கட்டுரைஉயிர்மை சிறப்பு உறுப்பினர் திட்டம்
அடுத்த கட்டுரைவெற்றி கடிதங்கள் 13