வெற்றி கடிதங்கள் 13

images

அன்பு ஜெமோ சார்,

வெற்றி சிறுகதைக்கான, என்னுடைய கருத்துகளை பகிர விரும்புகிறேன். கதையின் வரிகள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, ஒரு ஆணோட சிந்தனைகள் எந்த அளவுக்கு சமரசமின்றி எழுதமுடியுமோ, அவ்வளவு நுணுக்கமாக பதிவு செய்யப்பட்டிக்கிறது. ஒவ்வொருத்தருடைய மனிதருடைய சுபாவங்களும் ரொம்ப நன்றாக சொல்லப்பட்டிருக்கிறது.

நமச்சிவாயம் தன் மனைவியிடம் சவாலை தெரிவிக்ககூடாதென ரங்கப்பரும், நமச்சிவாயமும் எந்தவித ஒப்பந்தமும் போடவில்லை, நமச்சிவாயம் புத்திசாலியாகதான் கதையில் வருகிறார், அதனால் அவர் மனைவியிடம் சவாலை பற்றி சொல்லி பெண்ணுடைய கற்பை காப்பாற்றிக்கலாம் அல்லது அவர்களுக்கு நோயுற்ற சிறுவன் இல்லாமல் இருந்திருந்தால் அவள் என்ன செய்திருப்பாள்? ஒரு பெண்ணின் கற்பை சோதிப்பதற்காக இந்த இரண்டு விஷயங்களும் சேர்க்கப்பட்டிருக்கிறதா? எந்த மனிதனாக இருந்தாலும் அப்படித்தான் நடக்க வேண்டும். தன் மகனுக்காக அவள் அப்படி நடக்கவில்லை என்றால், அவள் பெண்ணே இல்லை என்று இந்த சமூகம் சொல்லும். எந்த சூழலிலும் பெண்ணே குற்றவாளி என்று இந்த சமூகம் சொல்ல வருகிறதா? அல்லது பெண்ணின் கற்பை பலவீன படுத்துவதற்காக கதை அவ்வாறு புனையப்பட்டுள்ளதா? இந்த மரமண்டைக்கு புரியமாட்டேங்குது!!

இந்த காலத்துக்கு இந்த கதை பொருந்தி வருமா என்றால் வரவே வராது, இளம் வாசகர்கள் இதை எவ்வாறு புரிந்து கொள்ளுவார்கள்? இதே சினிமா என்றால், அது அப்படிதான் என புரிந்து கொள்ளப்பட்டிருக்கும், ஆனால் இது உங்கள் கதை என்பதால் ரொம்ப யோசிக்கிறேனா என்றும் புரியவில்லை? முடிந்தால் விளக்கவும்.

நன்றி,

அசோக்.

***

மதிப்பிற்குரிய ஜெயமோகன்,

வெற்றி வாசித்த பலர் கதையின் முடிவை முன் கூட்டியே தீர்மானித்து விட்டதாக பலர் சொல்லி இருக்கிறார்கள், ஏன் அவர்களுக்கு அப்படி ஒரு முடிவு தோன்றுகிறது, கதையின் இறுதி வாசிக்கும் முன்பே. காலம் காலமாக அவர்களுக்கு பெண்கள் மீது இருக்கும் எண்ண ஓட்டத்தின் வெளிப்பாடு, இவர்கள் ரங்கப்பர் மனநிலை கொண்டவர்கள் தான், ஆனால் வெளியில் பெண்களை இந்த கதை அவமதிப்பதாக சொல்வார்கள்.

“மனைவி மேல் கொண்ட நம்பிக்கை என்பது ஒருவகையில் நம்முடைய மரபு மேல் கொண்ட நம்பிக்கைதான்” இவர்களுக்கு நமது மரபு மீது சற்று நம்பிக்கை குறைவு தான். மொத்த ஆண்களின் பெண்கள் பற்றிய மனநிலையை இந்த கதை நமச்சிவாயம், ரங்கப்பர் மூலம் காட்சி படுத்துகிறது. இதில் சவால் நமச்சிவாயம் அவர் மனைவிக்கும் தான், வெற்றி பெற்றது நமச்சிவாயத்தின் மனைவிதான். நமச்சிவாயம் லதா மீது கொட்டிய வசைகளும், நோயுற்ற அவரது மகன் மீது அவரின் அக்கரையின்மை இரண்டும் சேர்த்து தான் அவளை அந்த முடிவை நோக்கித் தள்ளுகிறது. காஸ்மாபாலிட்டன் கிளப்பில் நமச்சிவாயம் வெற்றி பெற்றவர் ஆனால் தன் குடும்பத்தினரிடம் படுதோல்வி அடைந்தவர். காஸ்மாபாலிட்டன் கிளப்பில் தோற்று இருந்தால் அவர் இறந்து இருப்பார் அதாவது சமுகத்தின் முன் தோற்று இருந்தால் அது அவமானம், குடும்பத்திடம் தோற்பது?

ஏழுமலை

***

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

இக்கடிதம் வெற்றி சிறிகதையைப் பற்றியது.

முதன்முறை இக்கதை வலையேற்றப்பட்ட போதே வாசித்து விட்டேன். பெண் பந்தயப் பொருளாவதைப் பற்றியது என்பதால் கடும் அதிர்ச்சியாக இருந்தது. ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றை வாசித்துத் தான் சமநிலையை மீட்டுக் கொண்டேன்.

இரண்டாம் முறை வலையேற்றப்பட்ட போது ஏதாவது மாற்றியிருக்கிறீர்களா என்று பார்க்கத்தான் வாசித்தேன். ஆனால் இம்முறை கதை புதிய கோணத்தில் புரிய ஆரம்பித்தது. லதா தான் வென்றிருக்கிறாள் என்று மெல்லிய சந்தேகமாகத் தோன்றி பின்னர் உறுதியானது.

சில புள்ளிகள் முக்கியமானவையாகப் பட்டன:

  1. ரங்கப்பர் தான் தோற்று விட்டதாக ஒப்புக் கொண்டு நமச்சிவாயத்துக்கு ஐந்து லட்சங்களைத் தருகிறார்.

அ) அவர் பொய் சொல்கிறார் என்று எடுத்துக் கொண்டால், அத்தனை சுலபமாக தான் வெற்றி பெற்றதை அறிவிக்கும் வாய்ப்பை அவர் ஏன் தவற விடுகிறார் என்ற கேள்வி எழுகிறது. ஒரு பெண்ணின் வாழ்வு தன்னால் கெட்டுப் போகக் கூடாது என்ற எண்ணம் தான் காரணமென்றால், அவர் இந்த ஆபத்தான பந்தயத்திற்கு ஒப்புக் கொண்டிருக்கவே மாட்டார். அவருக்கு இது போன்ற விளையாட்டுக்கள் புதியன அல்ல. அவற்றின் வெற்றிகளை பிரகடனப்படுத்துவதில் அவருக்கு எந்த தயக்கங்களும் இல்லை. கோமளவல்லியின் கதையே அதற்கு சாட்சி. ஆனாலும் லதாவின் விஷயத்தில் அவருக்கு கிடைத்த வெற்றியை மறைக்கிறார் என்றால், அவர் லதாவையும் கோமளவல்லியையும் ஒரே தட்டில் வைக்க வில்லை. அவரின் பாவனையான அக்கறை ஏதோ ஒரு நிமிடத்தில் உண்மையானதாக மாறியிருக்கிறது.

ஆ) அல்லது அவர் பொய்யே சொல்ல வில்லை. உண்மையில் அவருக்கு வெற்றியே கிட்டவில்லை.இந்த இரண்டு சாத்தியங்களிலும் வெற்றி பெற்றவள் லதாவே.

  1. கதை வெள்ளையர்கள் சென்றபின் 50-களில் நடக்கிறது. 30 வருடங்கள் கழித்து 80-களில் ரங்கப்பர் இறக்கிறார். ராயல் கோட்ஸ் என்ற நிறுவனம் 70-களில் மூடப்படுவதாக ஒரு குறிப்பு கதையில் வருகிறது. அதாவது, ரங்கப்பர் தலையெடுத்தவுடன் 10 மடங்கு லாபம் சம்பாதித்த அந்நிறுவனம், அவர் காலத்திலேயே அழியவும் செய்கிறது, என்றால் என்ன நடந்தது, ரங்கப்பர் வாழ்வில்? ”எனக்கு நம்பிக்கை பிறந்துள்ளது” என்று சொல்லி பந்தயத்தை முடிக்கும் ரங்கப்பர், அதற்குப் பின் ஏன் லௌகீக வெற்றி பெற முடியவில்லை?

கதை மௌனமாக இருக்கும் இந்த இடத்தை நான் இவ்வாறு நிரப்பிக் கொள்கிறேன். ரங்கப்பர் லதாவிடம் காட்டும் பாவனையான அக்கறை ஏதோ ஒரு நிமிடத்தில் உண்மையானதாக, காதலாக மாறுகிறது. ஆனால் அவர் என்ன செய்த போதும் அவள் அவருடன் வரப்போவதில்லை. அதனால் அவரின் மிச்ச வாழ்வு வெறுமை சூழ இருக்கிறது. அவருக்கு லௌகீகத்தில் /வெற்றியில் ஆர்வம் போய் விடுகிறது. அவர் மீது இத்தனை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள லதாவே இப்போதும் வெற்றி பெறுகிறாள்.

  1. அந்தக் கடைசி இரவுக்குப்பின்னான உடல் மொழிகள்-ரங்கப்பர் கையை கட்டிக் கொண்டு வேறு பக்கம் பார்க்கிறார்- அவரால் லதாவை பார்க்க முடியவில்லை. இவை குற்றவுணர்வு கொண்டவரின் உடல் மொழிகள். தன் உதவியின் பின்னாலுள்ள உண்மையான நோக்கம் அவளுக்குத் தெரிய வந்ததால் குற்றவுணர்வு கொண்டிருக்கலாம்.

ஆனால் லதா கூனிக் குறுகவில்லை. அவள் இவ்வாறு சித்தரிக்கப்படுகிறாள்-//ஒரே நாளில் அவளுக்கு பத்து பதினைந்து வயது கூடிவிட்டது போல தோன்றியது. அவள் அறிந்த வாழ்க்கை முழுமையாக மாறிவிட்டது போல. அவளுடைய உடலுக்குள் இருந்து இன்னொரு பெண் வெளி வந்து அமர்ந்திருப்பது போல//- அவளுக்கு இந்த பந்தயத்தைப் பற்றி, நமச்சிவாயத்தின்/ ரங்கப்பரின் உண்மை முகத்தைப் பற்றி அவ்விரவில் தெரிய வந்திருக்கிறது. அவளின் அத்தனை வருட திருமண வாழ்வும் பொருளிழந்ததால் வந்த அதிர்ச்சியது.

//அவள் பார்வை வேறு எங்கோ வெறித்திருந்தன. நீர்பரவியது போலிருந்தன விழிகள்.//அவள் கணவன் அவளுக்கு இழைத்த துரோகத்தினால் நேர்ந்தது இது. பகடைக்காயாக ஆக்கப் பட்டதால் உண்டான சிறுமை உணர்வு இது.

// ஆனால் அப்போது மிக அழகாக இருந்தாள். எங்கிருந்தோ ஒரு தனி ஒளி அவள்மேல் விழுந்து கொண்டிருப்பது போலிருந்தது.// அவ்வொளி அவள் வெற்றி பெற்றதால்/இணங்க மறுத்ததால் அவளுக்கு கிடைத்திருக்கலாம். ரங்கப்பர் அவள் மீது கொண்டுள்ள காதலை எண்ணியும் இருக்கலாம்.

  1. //இறப்பதற்கு முன் அவள் என்னிடம் ஓர் உண்மையைச் சொன்னாள். அந்த ஐந்துலட்சம் அவளை ஜெயித்ததற்கு ரங்கப்பர் கொடுத்த பரிசுதான்// இது லதா நமச்சிவாயத்துக்கு தரும் தண்டனை. ஜெயித்தது என்பதை மனதளவில் ஜெயித்ததாகவும் கொள்ளலாம் அல்லவா?

நன்றி,
கல்பனா ஜெயகாந்த்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 21
அடுத்த கட்டுரைவெற்றி -முடிவாக