19. புறமெழுதல்
சகதேவன் தங்கியிருந்த சிறுகுடில் விராடநகரியின் தென்மேற்கு மூலையில் இருந்த பிருங்கவனம் என்னும் சோலைக்குள் அமைந்திருந்தது. நகருக்குள் வரும் தவத்தார் தங்குவதற்கான இடமாக அது நீண்ட காலமாக உருவாகி வந்திருந்தது. நகரிலிருந்து எந்த ஒலியும் அதை அடையவில்லை. நகரத்தின் தெற்குச் சுற்றுப்பாதையில் இருந்து பிரிந்த ஒற்றையடிப்பாதை இருபுறமும் எழுந்த மலர்ப்புதர்களின் நடுவே கொடியென வளைந்துசென்று அந்தச் சோலையின் வெளிவட்டமாக அமைந்த இலந்தை, நாவல், அத்தி, மா, பலா என்னும் பழ மரக்கூட்டங்களுக்குள் நுழைந்தது. பின்னர் இருள்நீலச் சுனைக்குள் இறங்கி மறையும் ஓடைபோல குளிர்ந்த நிழலுக்குள் புதைந்தது.
எப்போதும் ஏதேனும் ஒரு பழ மரம் கனிவு செறிந்திருக்கும்படி அந்தச் சோலை திட்டமிடப்பட்டிருந்தமையால் தலைக்குமேல் பறவைகளும் குரங்குக் கூட்டங்களும் எப்போதும் ஒலியெழுப்பி நிறைந்திருந்தன. கோதையின் மேல்வளைவில் இருந்து வெட்டித் திருப்பி கொண்டுவரப்பட்ட நீரோடை எட்டு கிளைகளாகப் பிரிந்து அச்சோலைக்குள் நுழைந்து மேலும் பதினெட்டு சிற்றோடைகளாக ஆகி வழிந்தோடி மீண்டும் ஒன்றென்றாகி அப்பாலிறங்கி அருவியெனக் கொட்டி கோதை நோக்கி சென்றது. அந்நீரோடைகளின் ஓசை காட்டின் இலைப்பசுமையின் இருளுக்குள் எப்போதும் சூழ்ந்திருந்தது.
வேர்முனைகளின் செறிவாலும் நாணல்களாலும் வரம்பிடப்பட்ட நீரோடைகளில் நீர் காற்றைப்போல வண்ணமில்லாமல் நெளிவு மட்டுமேயாக சென்றுகொண்டிருந்தது. ஒவ்வொரு குடில்தொகையும் ஓர் ஓடையின் அருகே பிறவற்றை முற்றிலும் அறியாதபடி கட்டப்பட்டிருந்தது. அடர்காட்டில் தனித்துவிடப்பட்ட தவநிலை எனத் தோன்றினாலும் அத்தனை குடில்களும் அரச ஏவலர்களால் நன்கு பேணப்பட்டிருந்தன. சிவப்படிவர்கள், விண்ணவனின் அடியார்கள், வேதியர், அருகநெறியினர் என அனைத்து வகையினரும் அங்கே தங்கியிருந்தனர். அவர்களின் இடங்கள் வெவ்வேறாக வகுக்கப்பட்டு கொடிகளாலும் மரங்களில் கட்டப்பட்ட துணியடையாளங்களாலும் சுட்டி அளிக்கப்பட்டிருந்தன.
அருகநெறியினருக்கான தவக்குடில்களின் இடது ஓரமாக அமைந்திருந்த சகதேவனின் சிறுகுடிலின் முன்னால் ஒளியுடன் நீரோடை எழுந்து வளைந்து விழுந்து ஒழுகியது. முந்தையநாள் அந்தி சாய்ந்த பின்னர்தான் அவன் அங்கே வந்தான். அப்போது அந்த நீர்வளைவு இருளுக்குள் நிற்கும் புதரில் ஒரு வெண்மலர் இதழ் கொண்டிருப்பதுபோல தெரிந்தது. ஓசை காடெங்கும் நிறைந்திருந்தமையால் அது நீர் என சித்தம் உணரவில்லை. அவனை அங்கே விட்டுவிட்டு அனைவரும் சென்றபின் முற்றத்தில் அமர்ந்து சூழ்ந்திருந்த காட்டை கேட்டுக்கொண்டிருந்தபோது ஒரு கணத்தில் நீரோசை வந்து அந்த நீரிதழுடன் இணைய அது நீரென்று தன்னை காட்டியது.
இதழ்மலர்ந்த நீரின் அருகேதான் அவன் அதன்பின் எப்போதும் அமர்ந்திருந்தான். நண்பகலில் நான்கு நாழிகைப்பொழுது மட்டுமே துயின்றான். இரவெல்லாம் விழித்திருந்து விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தான். புலரியிலும் அந்தியிலும் பொழுது எழுவதையும் அமைவதையும் கணம் கணமென பார்த்தான். இரவுவானம் மாபெரும் சூதுக்களம் எனத் தோன்றியது. காய்களை அறியாக் கைகள் நீக்கி வைத்து ஆடிக்கொண்டிருந்தன. முதலில் அவற்றின் அசைவை பின் அதன் இசைவை அவன் அறிந்தான். ஒரு கட்டத்தில் ஆட்டம் தெளிவுறத் தொடங்கியது. பின் அதன் சூழ்வுகளை உய்த்தறிந்தான். ஆடுபவன் ஒருவனே என்றும் தன் இரு கைகளாலும் இரு நிலை எடுத்து தனக்குத்தானே வென்றும் தோற்றும் அவன் ஆடுவதையும் கண்டான். அவன் எண்ணங்களையும் தயக்கங்களையும்கூட அவனால் காணமுடிந்தது. ஒரு அசைவைக்கூட விடமுடியாதவனாக அவன் நெஞ்சுகூர்ந்து விழிநிலைக்க வானை நோக்கிக்கொண்டிருந்தான்.
அவனிடம் தங்கள் பிறவிநூலைக் காட்டி ஊழணைவு உசாவும்பொருட்டு ஒவ்வொருநாளும் அரசகுடியினரும் பெருவணிகர்களும் வேளிர்களும் வந்துகொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பிறவிநூலையும் தனித்தனியாக கணித்து வருந்திறன் உரைத்து அனுப்பினான். பின்னர் தனக்குள் அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்துப்பின்னிப் பரப்பி ஒரு வலையென்றாக்கினான். வானிலெழுந்த களத்தின் கரு நகர்வுகளுடன் இணைத்து அதை முடிவிலியாக ஆக்கிக்கொண்டான். அவனுள் மும்முகம் அழிந்து காலம் ஒற்றைப்பரப்பென்று நிலைகொண்டு அலையடித்தது.
ஒவ்வொரு முகத்திலும் வான்முழுமையின் ஆடலை அவன் கண்டான். அவர்களைக் கண்டதுமே அவன் முகம் மலர்ந்து கண்களில் சிரிப்பு ஒளிவிட்டது. நன்றையும் தீதையும் ஒன்றென்றே எண்ணி அவன் சொல்கோத்தான். துயர்கொள்பவர்களை பெருங்கருணையுடன் தொட்டு “எதிலும் பொருளில்லை என்று உணர்க! நாமறியும் பொருளென்று ஏதுமில்லை என்று அதற்குப் பொருள்” என்றான். “ஒப்புக்கொடுத்தலும் இயைந்திருத்தலுமன்றி வென்று நிலைகொள்ள, எஞ்சாது கடந்துசெல்ல வேறுவழியென்று ஏதுமில்லை மானுடனுக்கு” என்றான்.
அவன் சொற்களை அருமணி என நெஞ்சில் சூடி திரும்பிச்சென்றனர் மக்கள். அவன் புன்னகை தெய்வச்சிலைகளில் மட்டுமே திகழ்வது என்று சொல்லிக்கொண்டனர். “அனைத்துமறிந்தவன் ஏதுமறியாதவனின் சிரிப்பை அடையும் மாயமே ஞானமெனப்படுகிறது” என்றார் அவைக்கவிஞராகிய சிந்தூரர். “அவர் அமர்ந்திருக்கும் நிலம் வேர்களால் ஆனது. அவர்மேல் குவிந்த வானமும்தான்” என்றார் முதுசூதரான கண்டிதர். அவனை அவர்கள் விராடபுரி வாழவந்த மெய்ப்படிவர் என்று வணங்கினர்.
வேதச்சொல்லை கடமையெனக் கொண்ட அந்தணர்களுக்கு உலகியலின்பொருட்டு நிமித்தநூல் நோக்க நெறியொப்பு இல்லை என்பதனால் வைதிகர் அவனை அணுகவில்லை. ஆனால் விராடபுரியில் பிற நகரிகளைவிட கூடுதலாகாவே வேளாப்பார்ப்பனர் இருந்தனர். அவர்கள் மணியொளி நோக்கவும் பட்டுநிலை கணிக்கவும் பயின்றிருந்தார்கள். படைக்கலத்திறன் முதல் வேளாண்நெறி ஈறாக பிற திறத்தோர் அறிந்த கலைகளையும் அறிவுகளையும் செம்மொழியில் நூல்களாக யாத்தனர். அதற்கு அரசக்கொடை நிறைய அளிக்கப்பட்டது. அங்கே நாளொரு நூல் என அறிவு பெருகியதை சகதேவன் கண்டான்.
பிறநாடுகளில் அந்தணரின் முதற்தொழில் வேதமே என்றும் அதை வழுவுவோர் வீழ்ந்தவர் என்றும் எண்ணப்பட்டனர். வேளாப்பார்ப்பனர்களுக்கு கோட்டைக்கு வெளியே வடக்குப்பக்கம் தனியான பார்ப்புச்சேரிகள் அமைக்கப்பட்டன. நன்னாட்களிலும் விழவுகளிலும் அவர்கள் நகர்புகுவது தடுக்கப்பட்டது. முடிசூடி அமர்ந்த அரசனின் அவையில் அவர்கள் தோன்றுவது விலக்கப்பட்டது. பிறர் அறியாத உலகொன்றில் அவர்கள் வாழ்ந்து மறைந்தனர். அறியா உலகென்பதனாலேயே அது ஐயத்துடனும் அச்சத்துடனும் நோக்கப்பட்டது. அந்த விலக்கமே அரண் என அமைந்து பிறர் விழிகளிலிருந்து காக்க நாளடைவில் அவர்களும் இயல்பான மந்தணத்தன்மை கொண்டனர்.
அந்த மந்தணத்தன்மையாலேயே அவர்களிடம் நிழல்படர்ந்த மெய்மைகளும் இருள்மூடிய நுண்திறன்களும் வளரத் தலைப்பட்டன. எளிய மானுடர் அறியாது உலவும் படிவர்களும் அறிஞர்களும் அவர்களை நாடி வந்தனர். விழிகடந்து உளமறியும் கலை, உளம்பற்றி உருமாற்றி விளையாடும் கலை, புறப்பொருளை அகத்தால் ஆக்கி மறைக்கும் கலை என மாயக்கலைகள் அவர்களால் பயிலப்பட்டன. எரியுறையும் மருந்துகள், புயலை கருக்கொண்ட வேதியங்கள் அவர்களிடமிருந்தன. மின்னலையும் இடியையும் அவர்களால் தங்கள் மடியில் கட்டி எடுத்துச்செல்ல முடிந்தது. கற்பாறையை உருகச்செய்யும் கொடுநஞ்சுகளை, வெட்டிரும்பை தளிரென்று நெகிழச்செய்யும் குளிர்ந்த அனல்களை அவர்கள் கைக்கொண்டிருந்தனர்.
அவர்கள் மீது அச்சம் மிகுந்து மக்கள் துயர்சொன்னால் அவர்கள் அக்கணமே விலகிச் சென்றாகவேண்டும் என்று அரசர்கள் ஆணையிட்டார்கள். அவர்களேகூட எந்த அறிகுறியும் இல்லாமல் கிளம்பிச் செல்வதுமுண்டு. வேளாப்பார்ப்பனருக்கு நாடேதுமில்லை என்ற சொல் அவர்களை ஆண்டது. அவர்களுக்கு பிரஹஸ்பதியும் சுக்ரரும் முதலாசிரியர்கள். கணாதரும், பரமேஷ்டியும், அஜித கேசகம்பளரும் நெறியுரைத்த முன்னோடிகள். அவர்களின் மொழி ஒவ்வொரு சொல்லும் திருகிக்கொண்டு ஒலியும் பொருளும் மாறுபட பிறர் அறியமுடியாததாக இருந்தது. அவர்களின் நூல்கள் முற்றிலும் மந்தண எழுத்துக்களில் எழுதப்பட்டன. மக்கள் பேசும் மொழியை அவர்களின் நா உரைக்கையில்கூட அவர்களில் ஒருவர் கேட்டால் அது பிறிதொரு பொருள் அளித்தது. அவற்றுடன் விரலசைவும் கண்சுழல்வும் இணைந்து மூன்றாம் மொழியொன்றை உருவாக்கியது. மானுடரை அறியாத வேறு தெய்வங்களால் புரக்கப்படும் மக்கள் அவர்கள் என்றனர் மூத்தோர்.
விராடபுரியில் வேளாப்பார்ப்பனர் வைதிகப்பார்ப்பனரைவிட மதிக்கப்பட்டனர். செல்வமும் குடிப்பெருமையும் கொண்டு நகர்நடுவே அவர்கள் வாழ்ந்தனர். அரண்மனைக்கு வலப்பக்கமாகப் பிரியும் பெருவீதி அவர்களுடையது. அங்கே இரு பக்கமும் வெண்முகில்கள்போல மாடக்குவைகள் எழுந்த மாளிகைகளில் அவர்கள் வாழ்ந்தனர். முற்றங்களில் அவர்கள் ஊரும் பல்லக்குகளும் மஞ்சல்களும் காத்திருந்தன. அவர்கள் பயிலும் துறைக்கு ஏற்ப வாயில்களில் கொடிகள் பறந்தன. அவர்களின் குடிக்குறிகள் வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன. அவர்களின் அறிவுத்துணை நாடி அணைந்தவர்களும் மாணாக்கர்களாக நண்ணியவர்களும் வாயில்களில் காத்திருந்தனர்.
வேளாப்பார்ப்பனர்களின் தலைவரான வஹ்னர் தன் நான்கு மாணாக்கர்களுடன் சகதேவனை பார்க்க வந்தார். அவருடைய வருகையை அரண்மனைக்காவலன் வந்து அறிவிக்க சகதேவன் எழுந்து கைகூப்பி நின்று அவர்களை வரவேற்றான். நீரோடையருகே அவன் முன்னால் வெறும் மண்ணில் அமர்ந்துகொண்ட வஹ்னர் “தங்களைக்குறித்து ஊரெங்கும் பேச்சு பரவியிருக்கிறது, உத்தமரே. இருமுறை தங்களை முறைப்படி சந்தித்து வணங்கியிருக்கிறேன். இம்முறை நேரில் வந்து பணியும் நல்லூழ் அமைந்தது” என்றார். சகதேவன் புன்னகை புரிந்து அது என் நல்லூழ் என நெஞ்சில் கைவைத்து செய்கை காட்டினான். “நான் வந்திருப்பது தங்கள் கணித்தொழிலுக்கு நெறிகளென எவையெல்லாம் உள்ளன என்று அறியும்பொருட்டே” என்றார் வஹ்னர். “தாங்கள் விரும்பினால் அவற்றை நூல்வடிவாகத் தொகுக்க நான் சித்தமாக உள்ளேன்.”
“சூரியதேவரின் பிருஹதாங்கப்பிரதீபமே என் முதல் நூல். வேதாங்கமான நிமித்த மெய்யறிவுக்கு அதுவே தொடக்கம் என அறிந்திருப்பீர்கள். பிரஸ்னதாசரின் உத்தராங்கஸ்வரூபம், சிபிரரின் ககனஸ்வரூபம், தௌம்ரரின் அஷ்டாத்யாயி போன்ற நாநூறு நூல்கள் உள்ளன. அவற்றிலிருந்தே என் நிமித்தநூலறிவை நான் அடைந்தேன்” என்றான் சகதேவன். “ஆம், அந்நூல்களை நிமித்திகம் கற்கும் அனைவருமே அடிப்படையாகக் கொள்கிறார்கள். ஆனால் அதிலிருந்து முன்சென்று நீங்கள் நிகழ்த்தும் நுண்ணிய உய்த்துணர்தல் ஒன்று உண்டு என அறிகிறோம். அதை நீங்கள் எவ்வகையிலேனும் அறிநெறிகளாக, சொற்கூட்டுகளாக ஆக்கமுடியும் என்றால் அதை நூலென்று ஆக்கி தலைமுறைகளுக்கு அளித்துச்செல்ல விழைகிறோம்” என்றார் வஹ்னர்.
சகதேவன் திகைத்து “ஆம், நான் எல்லைகளுக்கு அப்பால் செல்லும்போதே என் நுண்ணறிவை அடைகிறேன்” என்றான். “ஆனால் அதை மொழியென்று ஆக்கவியலுமா நெறியென்று வகுத்துரைக்கலாகுமா என ஐயுறுகிறேன்” என்றான். “அருகநெறியினரே, அறிதலென இங்குள்ள அனைத்தும் அவ்வாறு நுண்மையென அறியப்பட்டவையே. அவற்றை மொழியிலேறிச்சென்று தொட்டுவிடவும் அள்ளி வைக்கவும் முடியுமென்பதன் சான்றுகளே இங்குள்ள நூல்கள் அனைத்தும். தன் உளம் கவர்ந்த பெண்ணின் அழகைச்சொல்ல முதலில் முயன்றவனும் இதே திகைப்பைத்தான் அடைந்திருப்பான். பல்லாயிரம் காவியங்களுக்கு அப்பாலும் சொல்வதற்கு ஒவ்வொரு பெண்ணிலும் தனியழகு என ஒன்று எஞ்சியிருப்பதனால்தான் காவியங்கள் இன்னும் எழுதப்படுகின்றன” என்றார் வஹ்னர்.
“உணர்ச்சிகளும் தத்துவமும் நுண்ணுணர்வும் மட்டும் அல்ல, ஒரு கல்லின் இயல்பை சொல்வதுகூட மொழியை அதன் எல்லைவிட்டு உருகிமீறவும் சிறகுகொண்டு பறந்தெழவும் செய்வதே ஆகும். நுண்மை ஒன்றை பருமையால் உணர்த்துவதற்கென்று உருவானதே மொழி. எதையும் மொழியால் சொல்லிவிட முடியும் என்பதனாலேயே அது வாழ்கிறது. முழுக்க சொல்லிவிட முடியாதென்பதனாலேயே அது வளர்கிறது” என்றார் வஹ்னர். “நான் முயல்கிறேன். இனி என் அறிதல்முறையை சொற்களாலும் தொடர முயல்கிறேன்” என்றான் சகதேவன்.
“உத்தமரே, பாரதவர்ஷத்தின் மெய்யறிஞர்கள் காலத்தை, கடுவெளியை, அறிதலை, இருத்தலை, இன்மையை தங்கள் மொழியால் சொல்லமுயன்றனர். நூல்களென ஆக்கி தொகுத்தனர். அந்த மெய்மைக்கு அவர்கள் அளித்த இடத்தை நம்மைச் சூழ்ந்துள்ள உலகை அறியும் ஆய்வுக்கு அளிக்கவில்லை. வேளாப்பார்ப்பனர் என்பது ஒரு குலப்புறனடை என்றே பாரதவர்ஷத்தில் கற்றறிந்தார்கூட நம்புகிறார்கள். அது ஒரு கொள்கை நிலை என்றறிக! அறியமுடியாததை நோக்கி அறிவை எய்து விளையாடும் வீண்செயலை முற்றாகத் தவிர்த்து திரும்பிக்கொண்டவர்கள் நாங்கள். இங்கு சூழ்ந்துள்ள பொருட்களே நாம் அறியக்கூடிய மெய்மை. அப்பொருட்களுடன் நாம் கொண்டுள்ள உறவு துயரற்றதாகுதலே விடுதலை. நோய், பசி, மிடிமை எனும் மூன்றையும் வெல்லுதல் மட்டுமே மீட்பு என நாங்கள் நம்புகிறோம்” என்றார் வஹ்னர்.
“நாங்கள் பரசுராமரின் பிருகுகுலத்தில் தோன்றியவர்கள். அனற்குடி அந்தணர். வேதமென்னும் பாறையை புணையென்று தழுவிக்கொள்ளும் அறியாமையிலிருந்து எங்களை விடுவித்தது இங்கு எழுந்த பெரும்பஞ்சம். பரசுராமர் அளித்த வேதத்துடன் இங்கே வந்த எங்கள் மூதாதை ஜஹ்னர் இங்கே மக்கள் பிடியுணவுக்காக போரிட்டுச் சாவதை கண்டார். வெறித்த கண்களுடன் கைவிரித்து வானோக்கி இரந்தபடி இறந்துகிடந்த குழந்தைகளைக் கண்டபோது அவருள் அனல் பற்றிக்கொண்டது. அன்னமும் மருந்தும் அரணும் ஆகாத அறிதலேதும் உளமயக்கே என அவர் அறைகூவினார். அன்று எங்கள் மூதாதையர் வேதம் ஒழிந்தனர். பொருளை அறியும் நோக்கு கொண்டனர்.”
“ஜஹ்னர் இங்குள்ள பன்னிரு கிழங்குகளையும் இருபது கீரைகளையும் நஞ்சுநீக்கி சமைத்து உண்ணும் வழிகளை கண்டடைந்தார். பஞ்சம் நீங்கி குடிகள் எழுந்ததும் வேளாண்மை செய்யவும் மீன் பிடிக்கவும் புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து சொன்னார். அன்றுமுதல் இங்கே வேளாப்பார்ப்பனரின் குமுகம் ஒன்று உருவாகி அரசர்களால் பேணப்படுகிறது. இங்குள்ள அரசே எங்களால் உருவாக்கப்பட்டதுதான்” என்றார் வஹ்னர். “நிஷாதர்களின் முதற்பேரரசர் மகாகீசகர் எங்களுக்கு கிரிப்பிரஸ்தத்தின் கிழக்குச்சரிவில் தெரு அமைத்துக்கொடுத்தார். அவர் கொடிவழிவந்த நளமாமன்னரின் ஆட்சியின்போதுதான் நாங்கள் முழுவளர்ச்சி அடைந்தோம்.”
“நளமாமன்னரா?” என்று சகதேவன் வியப்புடன் கேட்டான். “ஆம், அனைத்து மானுட அறிவையும் நூல்களென ஒருங்கிணைக்கும்படி எங்களை ஏவியவர் அவரே” என்றார் வஹ்னர். “இளமையில் அவர் தன் குலதெய்வமாகிய கலியை துறந்தார். இந்திரனை தன் குன்றின்மேல் நிறுவி நகரத்தை இந்திரபுரி என்று பெயர்மாற்றம் செய்தார். அனைத்தையும் அவர் இயற்றியது விதர்ப்பத்தின் இளவரசி தமயந்தியை மணக்கும்பொருட்டே என்கிறார்கள்.” சகதேவன் “ஆம், அவ்வாறுதான் கதைகள் சொல்கின்றன” என்றான். “அது உண்மையென்றிருக்கலாம். ஏனென்றால் மிக விரைவிலேயே அவர் அரசியிடமிருந்து விலகி அதே உளவிரைவுடன் எங்களை நோக்கி வந்தார்” என்று வஹ்னர் புன்னகைத்தார். சகதேவனும் சிரித்தான்.
“பெண்பற்று தளர்வது மண்பற்று வளர்வது என்பது சொல்” என்றார் வஹ்னர். தேவியின்மேல் மாளாக்காதல்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகாலம் தவமிழைத்தார் நளமாமன்னர். அவருக்காக தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டார். மணம் முடித்த நான்காண்டு காலம் அவர் ஒழுகும் நீரடியில் குளிர்ந்துறைந்த பாறை என அவர் காதலில் ஆடிக்கிடந்தார். பிறிதொரு நினைவில்லாமல் அகத்தளத்திலேயே வாழ்ந்தார். அரசப்பொறுப்பை முழுமையாக அரசியே எடுத்துக்கொண்டார். அரசர் ஆண்டுக்கொருமுறை இந்திரவிழவின் கொலுமேடையில் மட்டுமே அமரக் கண்டனர் குடிகள்.”
அரசி தன் மாயத்தால் அவரை சித்தமில்லாது ஆழ்த்தி வைத்திருந்தார். அவருக்கு இரு மைந்தர் பிறந்தனர். அதைக்கூட அரசர் அறிந்ததாகத் தெரியவில்லை என்று நகையாடினர் சேடியர். ஒருமுறைகூட அரசர் மைந்தரை எடுத்து மார்பின் மீதிட்டு கொஞ்சவில்லை. அவர்களின் அகவையும் பெயரும்கூட அவருக்கு தெரிந்திருக்கவில்லை. அரசநிகழ்வுகளில் அக்குழவியரை சேடியர் அருகே கொண்டுவருகையில் திகைத்தவர்போல நோக்கி அறியாது பின்னடி எடுத்து வைத்தார். “மைந்தரை கொள்க, அரசே!” என முதுசெவிலி குழந்தைகளை நீட்டினால் நடுங்கும் கைகளுடன் வாங்கிவிட்டு மூச்சுத்திணற திருப்பி அளித்தார்.
அரசர் காமத்தில் நெஞ்சழிந்தார் என்கின்றன கதைகள். அது காமம் எனில் ஆம். ஆனால் காமம் என்பது ஒற்றை உணர்வல்ல. வென்றுநிற்பதென்றும் அடிபணிந்தமைவது என்றும் கொன்று உண்பதென்றும் சுவைக்கப்பட்டழிவதென்றும் அது ஒவ்வொருவரிலும் ஒன்று. அரசர் கொண்ட காமம் அரசியின் உடல் மேல் அல்ல. அவர் சூடிய பெண்மையெழில்கள்மீதும் அல்ல. அவரில் திகழந்த மூன்று தெய்வங்கள் மீதுதான். சொல்மகளும் கொற்றவையும் திருமங்கையும் ஒவ்வொரு கணமும் மாறிமாறி குடிகொள்ளும் மானுட உருவென்றிருந்தார் அரசி. அனல் என பெண்ணில் கணம் ஒரு தோற்றம் கூடி அழிந்து உருக்கொள்ளும் விந்தையில் வீழ்ந்த ஆண்மகன் எளிதில் மீள்வதில்லை.
அவர் எப்போதும் ஓர் அரியணையில் செங்கோல் சூடி முடியணிந்து அமர்ந்திருக்கும் நிமிர்வு கொண்டிருந்தார். விழிதிரும்பினால் அங்கு நின்றிருப்பவர் அறியாது தோள் ஒடுக்கி தலைவணங்கும் பெற்றி திகழ்ந்தது அவரில். எளிய செண்பக மலர் ஒன்றைக்கண்டு ‘அய்யோ’ என கைகளால் கன்னம் பொத்திக் கூச்சலிட்டு வியப்பவளில் எழுபவள் பீமகர் பெற்று மடிமீதிருந்து இறக்கிவிடாத இளஞ்சிறுமி. நிலவொளியில் விழிமுனை நீர்மை கொண்டு ஒளிர கனவில் சமைந்திருப்பவள் அணுகமுடியாத பிறிதொருத்தி. ‘வேண்டாமே’ என காமத்தில் கன்னம் சிவக்க குரல் குழைபவள் ஒருத்தி. மறுகணமே அன்னையென்றாகி மடியிலேற்றிக்கொள்பவளும் அவளே.
ஆனால் ஒருநாள் ஒரு கணத்தில் அவர் அரசியிடமிருந்து விலகிவிட்டிருப்பதை தானே அறிந்தார். அதற்கு நெடுங்காலம் முன்னரே அவ்விலகல் தொடங்கிவிட்டிருந்தது. அதை ஆழம் அறிந்திருந்தது என அப்போது தெரிந்தது. அதன்மேல் முதலில் எரிந்தாடலாகவும் பின்னர் நெகிழும் சொற்களாகவும் மெல்ல வழக்கமான நிகழ்வுகளாகவும் அவருள் திகழ்ந்த காமத்தை அள்ளி அள்ளிச் சொரிந்து அவரே அறியாமல் மூடிவைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் ஒரு துளியென அவர் உளம் மாறிக்கொண்டிருந்தது.
அரண்மனையில் இருந்து குதிரைக்கொட்டில்கள் வழியாக நோக்குநடை செல்லத் தொடங்கினார். இளம்புரவிகளுடன் ஆடினார். கருவுற்ற புரவிகளை புரந்தார். காலை எழுந்ததும் கொட்டில் நோக்கி வந்தார். இரவு படுக்கும்போது நோயுற்ற புரவி ஒன்றை எண்ணிக்கொண்டு விழிசோர்ந்தார். அடுமனையில் சென்று அனல்நோக்கினார். அவர்களுடன் மடைத்தொழில் நுட்பங்களை பேசினார். ஒருநாள் அடுப்பிலேற்றிய உருளியில் கொதித்துக் குமிழியிட்ட வெல்லப்பாகின் முன் இன்கனித் துண்டுகளுடன் நின்றிருக்கையில் உணர்ந்தார் அவர் அரண்மனை விட்டு வெளியே வரும்போது அரசி துயின்றுகொண்டிருந்தார் என்று. அவர் துயின்றபின்னரே முந்தையநாள் படுக்கைக்குச் சென்றதை நினைவுகூர்ந்தார். அப்போது தெரிந்தது அவர் தனக்கு நெடுந்தொலைவில் எங்கோ இருப்பது.
அவ்வெண்ணம் வந்ததுமே ஒவ்வொன்றும் உருமாறலாயிற்று. சூடிய சொற்கள் அனைத்தையும் உதறிவிட்டு வந்து முன்நின்றது நெடுநாள் உடனிருந்த ஒன்று. உள்மறந்து புறத்திலாழ்ந்தார். மீண்டும் அடுதிறனரும் புரவியறிஞரும் என்றானபோதுதான் வேளாப்பார்ப்பனரைப் பற்றி அவர் அறிந்தார். தேர்ச்சகடத் தொழில் குறித்து சக்ரவாஹிகம் என்னும் சிற்பநூல் இருப்பதை முதுசூதர் பாலிகர் வழியாக அறிந்து எங்களைத் தேடி வந்தார். மானுட அறிதல்கள் அனைத்தையும் நாங்கள் நூல்களெனத் தொகுப்பதை அறிந்து மகிழ்ந்து எங்களை பரிசளித்து ஊக்குவித்தார்.
“பின் எங்களில் ஒருவரென்றே அவர் உடனிருந்தார். புரவிநுட்பங்களைப் பற்றிய அவருடைய அஸ்வரஹஸ்யம் என்னும் நூலும் அடுமனைக்கலை குறித்த நளபாகம், நளரசனா, நளபதார்த்தமாலிகா என்னும் மூன்று பெருநூல்களும் எங்கள் முன்னோடிகளால் யாக்கப்பட்டன” என்றார் வஹ்னர். “எங்கள் குடிகள் நடுக்காலத்தில் இங்கிருந்து சிதறி தென்னாடுகளில் குடியேறின. மீண்டும் நிஷாத அரசு விராடபுரி என திரண்டெழுந்தபோது இது எங்கள் நாடு என உணர்ந்து மீண்டு வந்தோம். இன்று தென்னாட்டில் நூறு நகர்களிலாக நாங்கள் பரவி வாழ்கிறோம். அமணநெறிக்கு அணுக்கமானவர்களாக இருக்கிறோம். எங்களில் பல குடிகள் அமணர்களாகவே ஆகியும் விட்டனர்” என்றார் வஹ்னர்.
“நாங்கள் தொழில்களும் கலைகளும் பயில்வதில்லை. தொழிலர் கலைஞர்களின் அறிதல்களைக் கேட்டறிந்து தொகுக்கிறோம். வேளாண்மை, ஆபுரத்தல், மீன்கொள்ளல், கலம்கட்டுதல் என நாங்கள் அனைத்துத் துறைகளையும் அறிந்து ஒற்றை மெய்மையென ஆக்க முயல்கிறோம். தச்சுத்தொழில், சிற்பத்தொழில், மருத்துவம் போன்ற துறைகளில் பல்லாயிரம் நூல்களை உருவாக்கியிருக்கிறோம். யானைகளைப்பற்றி மட்டும் எண்பத்தெட்டு நூல்கள் எங்களிடமிருக்கின்றன” என்றார் வஹ்னர். “அனைத்து நூல்களும் ஒரே மொழியில் ஒரே இடத்தில் வந்தமையும்போது அனைத்து அறிதல்களையும் ஒன்றெனப் பிணைக்கும் நெறிகளை நோக்கி செல்லமுடிகிறது. விண்மீன் உதிர்வதற்கும் விளைநலம் பெருகுவதற்கும் என்ன உறவு என்று நோக்கமுடிகிறது.”
சகதேவன் “என் அறிதல்கள் அனைத்தையும் அளிக்கிறேன், உத்தமரே. அவை நூலாகட்டும். மானுட அறிவின் பெருக்கில் அதுவும் துளியென்றாகட்டும்” என்றான். “எது வண்ணத்துப்பூச்சியின் சிறகை அசைக்கிறதோ அதுவே விண்மீனை பறக்க வைக்கிறது என்று ஓர் எண்ணம் இன்று என்னுள் எழுந்தது. அதுவே தொடக்கமென்றாகட்டும்.” வஹ்னர் “வணங்குகிறேன், கணியரே” என்று கைகூப்பினார்.