சீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் –சிவானந்தம் நீலகண்டன்

c mu

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

இருளுள் அலையும் குரல்கள் – சீ.முத்துசாமி (மூன்று குறுநாவல்களின் தொகுப்பு)

1876ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து 50 விதைகள் ரப்பர் மரம் வளர்ப்பதற்காக சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டன. ஆனால் வரும் வழியிலேயே அவை இறந்துவிட்டன. அதற்கு அடுத்த வருடம் மீண்டும் அனுப்பப்பட்ட 22 விதைகளில் பாதி சிங்கப்பூரிலும், மீதி மலேசியாவிலும் (அன்று இரண்டு பகுதிகளுமே பிரிட்டிஷ் மலாயா) விதைக்கப்பட்டன. அவற்றில் ஒன்றிரண்டு வளர்ந்து மரங்களாக ஆயின. அப்படித்தான் மலாயாவுக்கு ரப்பர் வந்தது.

பிறகு சுமார் பத்தாண்டுகள் கழித்து (1888ல்) ஹென்றி நிக்கோலஸ் ரிட்லி என்பவர் சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவின் முதல் இயக்குனராகப் பணியாற்ற இங்கிலாந்திலிருந்து வந்தார். அவருக்கு ஏனோ ரப்பரின் மீது அபாரமான காதல். மரத்தைப் பாதிக்காமல் பாலெடுக்கும் முறையைக் கண்டறிந்தார். கண்ணில் கண்டவர்களிடமெல்லாம் ரப்பர் விதைக்கச்சொல்லி, பேண்ட் பாக்கெட்டில் விதைகளுடன் மலாயாவில் பைத்தியமாய் அலைந்துகொண்டிருந்தார். ஆனால் அன்று ரப்பருக்கு அவ்வளவு மவுசில்லை. உலகம் காபி, கரும்பு, மிளகு இவற்றின் பின்னால் சுழன்ற காலம். ஆறுவருடம் காத்திருந்து ரப்பரில் பணம்பார்க்க அதிகம்பேருக்கு பொறுமையில்லை. இருந்தும் ரிட்லியின் நச்சரிப்பில் சிலர் முன்வந்தனர்.

சிலநேரம் நாம் விதியை நம்பத்தான் வேண்டும். அதே 1888ல் டன்லப் என்பவர் காற்றடிக்கும் ரப்பர் டயரைக் கண்டுபிடித்தார். அடுத்த பத்தாண்டுகளில் உலகில் கார்கள் தயாரிப்பு சூடுபறக்க ஆரம்பித்தது. ரப்பர் பொன்னாக மாறியது. அதற்கும் ரிட்லி மலாயாவில் பட்டபாடுகள் கனிந்து, ரப்பர் கொஞ்சம் தலைதூக்குவதற்கும் சரியாக இருந்தது. மீண்டும் விதி மலாயாவின் காபித்தோட்டங்களில் விளையாடியது. விதவிதமான நோய்கள்தாக்கி காபி பெரும் அழிவுகண்டது. அனைவரும் ரப்பருக்கு வந்தனர். உலகுக்கே ரப்பர் சப்ளை செய்ய மலாயா தயாரானது. அப்படித்தான் இருபதாம் நூற்றாண்டில் மலாயாவின் விதியை ரப்பர் மாற்றியமைத்தது. ஏற்கனவே தாதுவருஷப்பஞ்சத்தில் (1876-78) தப்பிப்பிழைக்க நம்மக்கள், கூட்டம்கூட்டமாக தமிழகத்திலிருந்து பஞ்சம்பிழைக்க உலகின் பலபகுதிகளுக்கும் சென்றபோது மலாயாவுக்குள்ளும் வந்திருந்தனர். அவர்கள் இயல்பாக ரப்பரில் நுழைந்தனர்.

**********************

புல், பூண்டு, செடி, கொடி, பாம்பு, பன்றி முதல் அந்த கித்தாகாட்டையும் அதற்குள் தனி உலகமாக நிகழ்ந்த தோட்டத்துத் தமிழர்களின் வாழ்க்கையையும் நம்முன்னால் கொண்டுவருகிறார் சீ.முத்துசாமி. அகதிகள், விளிம்பு, இருளுள் அலையும் குரல்கள் ஆகிய மூன்று குறுநாவல்களும் ஒரே கதையாய்த்தான் இருக்கின்றன. மூன்றையும் ஒரே நாவலாகவும் ஆக்கலாம்.

மையச்சரடுகொண்ட கதைகளாக இல்லாமல் சம்பவங்களின் சிதறல்களாக ஒருவிதமான போதைதரும் மொழியில் புனைந்திருக்கிறார் ஆசிரியர். போதை தலைக்கேறியபிறகு, இன்னொரு கிளாஸ் அருந்தினாலும் அதே போதைதான் அதே ருசிதான் என்றாலும் அடுத்த கிளாஸை அருந்தச்சொல்வது எதுவோ அதுவே முத்துசாமியின் அடுத்த பத்தியையும் வாசிக்கச்சொல்கிறது. இப்படி ஒரு மொழியமைப்பையும் இப்படி ஒரு (கதைக்)களத்தையும் நான் வாசிப்பது இது முதன்முறை. நூலை எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கி ஒரு நான்குபத்திகள் வாசித்து சிறப்பான ஒரு அனுபவத்தைப் பெறலாம். இந்த சொல்முறை, இலக்கியம் எதையும் கோர்வையாகச் சொல்கிறேன் என்று சுமந்தலையத் தேவையில்லையோ என்றுகூட எண்ணவைத்தது.

தொடர்ச்சியைப் பற்றிக் கவலைப்படாமல் தாவித்தாவிச்செல்லும் எழுத்துதான். இப்படித்தான் தொடர்ந்து வரப்போகிறது என்பது புரிந்தவுடன் வாசிக்க ஒரு கொண்டாட்டமாக ஆகிவிடுகிறது இவரது எழுத்துகள். இது தவறாக அல்லது சரியாக இருந்தது என்று ஒருவரிகூட பொழிப்புரை இல்லை. எது யாருடைய பிழை? ஒழுக்கம், அறம்…ம்ஹூம், பேச்சில்லை. இடையிடையே வரும் வழக்குச்சொற்களின் பொருளென்ன என்று யோசிக்க ஆசிரியருக்கோ நமக்கோ நேரமுமில்லை. ஆனாலும் இவரின் எழுத்து பொறுப்பாக இருப்பது தெரிகிறது. ரப்பர் தோட்டத்துத் தமிழர் வாழ்வுக்குள் வாசகரை இழுத்து நுழைத்துவிடுகிறார்.

சமீபத்தில் மறைந்த ரெ.கார்த்திகேசு ‘வாசிக்க விரும்புதலும் விரும்பி வாசித்தலும்’ என்ற தலைப்பில் ஒரு சிறப்பான முன்னுரையை இந்த நூலுக்கு அளித்துள்ளார். அதிலுள்ள ஒவ்வொரு வரியும் உண்மையானது. எண்ணிப்பார்த்து ரசிக்கத்தகுந்தது. கதை என்பது முத்துசாமிக்கு ஒரு சமாதானம்தான், அவர் சொல்லவருவது அதையல்ல என்பது ரெகா முன்னுரையின் சாராம்சம். சில எழுத்தாளர்கள் பின்னணியைக் குறைத்து கதையை நீட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் பின்னணியில் செடிகளை வைத்து அழகுபடுத்துமிடங்களில் காட்டையே வைக்கிறார் முத்துசாமி என்பவை ரெகாவின் அற்புதமான பொருட்பொருத்தமுள்ள வரிகள். காடு என்ன ஒரே சமமாக வெட்டப்பட்ட, சீரான தொடர்ச்சிகொண்ட குரோட்டன்ஸ் செடிகளா? இல்லையே. கதையும் அப்படியே இருக்கட்டும் என்று ஆசிரியர் நினைத்திருக்கலாம்.

முத்துசாமியின் கோணம் எதிலும் வித்தியாசமானதாக இருக்கிறது. தோட்டத்துக் கழிவறை நாவலில் வருமிடத்தில் அங்கு கிறுக்கப்பட்ட விஷயங்களால் கொலைகூட விழுந்திருப்பதைச் சாதாரணமாக சொல்லிப்போகிறார். ‘தோட்டத்தின் எல்லா ரகசியங்களும் என்றாவது ஒருநாள் அந்த கக்கூசுக்கு வந்தே ஆகும் என்பதால் ரகசியங்களோடு வாழ்ந்துவந்தவர்கள் தூரத்தில் நின்று கக்கூசைப்பார்த்து மௌனமாகத் திரும்பிப்போயிருப்பார்கள்’ என்று எழுதுமிடத்தில் எதைப்பற்றியும் நாலுவரி புதிதாக எழுத அவரிடம் விஷயமிருக்கிறது என்று நமக்கு விளங்கிவிடும்.

தமிழகத்துக்கும் மலாயாவுக்கும் இடையே மிதந்துகொண்டிருந்த ரஜூலா கப்பல், ‘இத்தனை சோகங்களையும் ஒவ்வொரு பயணத்திலும் சுமந்துசெல்லும் தன் தலைவிதி குறித்து இறைவனை நொந்துகொள்ளலாம். நடுக்கடலில் வலிந்து மூழ்கி தற்கொலை செய்ய முயற்சிக்கலாம். ஒருவேளை பாவப்பட்ட இந்த அப்பாவி மனிதர்களை நினைத்து தன் முயற்சியைக் கைவிடலாம்’ என்கிறார். இந்த ரப்பர் மனிதர்களின் வாழ்க்கை அவர்களைத்தவிர மற்ற அனைவராலும் அனைத்து திசைகளிலும் வளைக்கப்படுகிறது.

இன்னொரு மண்ணில் கிட்டத்தட்ட அகதிகளாக வாழ்ந்த இத்தொழிலாளர்களில் சிலர், குடும்பத்துடன் ஒருதலைமுறை காலத்துக்குப்பிறகு தமிழகம் திரும்பி அங்கும் ஒட்டமுடியாமல் சொந்தமண்ணிலேயே அகதிகளாக உணர்வதும் நாவலில் ஓரிடத்தில் ஒருகடிதத்தில் வரும் செய்தியாகப் பதிவாகியுள்ளது. இன்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று இது.

சிவப்பு பாஸ்போர்ட், அனுமதி புதுப்பித்தலுக்கு அதிகாரி தயவு, ரப்பர் மறைந்து பனைநெய் வரவினால் வேலையிழப்பு இவற்றுக்கிடையே காதல், கல்யாணம், தற்கொலை, கொலை, கள்ளக்காதல், கருக்கலைப்பு, சாதிப்பிளவுகள், ஆலயவழிபாடு, தீமிதி என்று எதையும் ஆசிரியர் விட்டிருப்பதாகத் தெரியவில்லை.

முன்னுரையில் ரெகா, எழுத்தாளர்களாக இல்லாமல் வாசகர்களாகமட்டும் இருப்பவர்கள் முத்துசாமியை வாசிப்பது கடினம் என்றுசொல்லி லேசாக வாசகருக்கு பயம் காட்டியுள்ளார். நான் எந்த இடத்திலும் அவ்வளவு கடினமாக உணரவில்லை. புதிய எழுத்துமுறையைப் புதிய இலக்கியவாசகனாக, முன்முடிவுகளின்றி வாசித்தாலேபோதும் என்று நினைக்கிறேன்.

**********************

அடுத்தபதிப்பில் கீழ்க்கண்ட அருஞ்சொற்பொருள் அகராதியை – மேலும் செம்மைப்படுத்தி – பின்னிணைப்பாக சேர்த்துக்கொள்ளப் பரிந்துரைக்கிறேன்.

(பொருள் தந்தவர் : Pandian Munusamy)

கித்தா- ரப்பர்

தீம்பார்- காடு (woods, probably derived from ‘timber’)

பாசா- புல், சிறு செடிகொடிகள் அடர்ந்த பகுதி

மங்கு- தட்டு அல்லது கோப்பை (commonly enamel coated steel bowls. Sometimes plates too)

சிலுவார்- கால் சட்டை (pants, probably derived from malay word ‘seluar’)

பிளாஞ்சா- கொண்டாட்ட செலவு (derived from malay word ‘belanja’ meaning ‘treat’)

ஆம்பர்- சுத்தியல் (derived from english word ‘hammer’)

அல்லூரு- சாக்கடை (probably derived from malay word ‘alor’ meaning ‘river’)

சொக்கரா- குழந்தைத் தொழிலாளர் முறை (to be confirmed)

வாங்கு- விசுப்பலகை (bench)

வங்குசா- மளிகைக் கடை

பெரஜா- பிரஜா உரிமை (referring to immigrant’s status similar to permanent resident)

டபுள்வெட்டு- ரப்பர் மரத்தில் இரட்டை வரிகளாக வெட்டப்படும் முறை (to be confirmed)

சியாம்காரி- தாய்லாந்துக்காரி (commonly referring to person doing jinx)

கங்காணி- மேற்பார்வையாளர் (கண்காணி, supervisor in rubber estate)

கிராணி- எழுத்தர் (clerk)

தண்டல்- கங்காணி போன்றவர்தான் (இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை)

குசினி- அடுப்பங்கரை, சமையலறை

சூரா- கடிதம் (letter, derived from malay word ‘surat’ with the same meaning)

தாசா கத்தி- புல்வெட்டும் கத்தி (crescent sword used to cut tall grass)

மணக்கட்டை- சமையலின்போது உட்கார ஏதுவான சிறு விசுப்பலகை (small bench used to sit on the kitchen floor during preparation for cooking)

தக்கர்- மண்சாடி (clay made container in vase shape to store water, usually knee to thigh height)

காண்டா- ரப்பர் வாளிகளைக் கம்பில் கட்டி தோளில் சுமப்பதற்காகச் செய்தது (Used to hang pails full of water or liquid rubber on one side of shoulder. The wooden stick is usually oval shaped cross sectionally and about 2-3 meters long)

சடம்பு நார்- சணல் நார்

பாக்கார்- வேலி (‘pagar’ is derived from malay word meaning ‘fence’)

நீப்பா- ஒருவகைப்பனை (a type of palm tree which it’s leaves used to make roof in substitute of coconut leaves)

சின்னாங்கு- சுலபம் (derived from malay word ‘senang’ with same meaning)

தொங்கல் லைன்- கடைசி நிரல் அல்லது வரிசை

ஜின்னு- குட்டிபூதம் (small ‘soft’ creature believed to be cast by witch/wizard to steal valuables from someone’s house)

===================================================

முந்தைய கட்டுரைசபரிநாதன் கவிதைகள்: வாழ்க்கைக்குள் ஊடுபாய்ந்து செல்லும் வித்தை
அடுத்த கட்டுரைஉயிர்மை சிறப்பு உறுப்பினர் திட்டம்