18. அரவுக்குறை
புரந்தர முனிவரின் குருநிலையிலிருந்து பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியும் தனித்தனியாக கிளம்பி நிஷத நாட்டிற்குள் செல்வது நன்று என்று தருமன் சொன்னபோது பீமன் உரத்த குரலில் “நானும் தேவியும் இணைந்தே செல்கிறோம். அல்லது நம்மில் ஒருவர் தேவியுடன் இருக்கட்டும். இதுவரை நாம் அவளை தனியாக விட்டதில்லை” என்றான். தருமன் முகம் சுருங்க “நானும் அதை எண்ணினேன். அவள் இதுவரை மாற்றுரு கொண்டதே இல்லை. தன் புதிய உருவுடன் விழிகளுக்குமுன் அவள் இறங்கிச் செல்லட்டும். இங்கிருந்து நிஷத அரண்மனை வரை சென்று சேர்வது தன்னை உருமாற்றிக்கொள்வதற்கான பயிற்சியாக அமையும்” என்றார்.
பீமன் மீண்டும் சொல்லெடுப்பதற்குள் திரௌபதி “அரசர் கூறுவதே உகந்தது என்று நானும் எண்ணுகிறேன். என் புதிய முகத்தை நான் தனித்தே பயில விரும்புகிறேன்” என்றாள். பீமன் “ஆனால்…” என்று சொல்லத் தொடங்க “சைரந்திரி ஆணை அறியாத கன்னி. உங்களை கணவனென எண்ணமாட்டாள், இளையவரே” என்றாள் திரௌபதி. பீமன் அவள் சொன்னதை முழுக்க உள்வாங்காமல் சிலகணங்கள் நோக்கிவிட்டு “நீ அவ்வண்ணம் எண்ணினால் நன்று” என்றான். “தன்னை காத்துக்கொள்ள அவள் பழகட்டும், இளையோனே” என்றார் தருமன். பீமன் தலையசைத்தான்.
குருகுலத்தின் முற்றத்தில் எரிந்த எண்ணெய் விளக்கின் ஒளிவட்டத்திற்கு அப்பால் மடியில் வில்லுடன் அமர்ந்திருந்த அர்ஜுனன் “நாம் அரண்மனைக்குத்தான் சென்றாக வேண்டும் என ஏன் எண்ணுகிறோம்?” என்றான். சகதேவன் “நேற்று மாலை அதை மூத்தவர் என்னிடம் கேட்டார். நாம் அரண்மனையில் மட்டும்தான் மறைந்திருக்க முடியும். குடிகளுடன் நம்மால் கலக்க முடியாது. நமது உடல்மொழியும் விழியொளியும் சொற்களும் சில நாட்களிலேயே நம்மை வேறுபடுத்திக் காட்டிவிடும்” என்றான். “ஆனால் அரண்மனை என்பது அவ்வாறு வேறுபட்டவர்கள் மட்டும் சென்று சேரும் ஓரிடம். அவ்வேறுபாடு அங்கு ஒரு தனித் தகுதியாக கருதப்படும்.”
தருமன் “அதை இளையவன் சொன்னபோது நானும் முழுதுணர்ந்தேன், இளையோனே. பாரதவர்ஷத்தில் நீள்குழலை கால்வரை விரித்திட்டு செல்லும் வேறொரு பெண் இருக்க வாய்ப்பில்லை” என்றார். அர்ஜுனன் “மெய்” என்றபின் எழுந்து “நாம் ஒவ்வொருவரும் எவ்வடிவில் செல்லப்போகிறோம் என்பதை முடிவு செய்துவிட்டோம். எப்படி எங்கு சந்திப்பதென்பதை வகுத்துக்கொள்வோம்” என்றான்.
“நாம் ஒருவரோடொருவர் எவ்வகையிலும் தொடர்புகொள்ள வேண்டியதில்லை” என்றார் தருமன். “குங்கன் என்ற பெயரில் அரசரின் சூதுத் தோழனாகவும் மதியுரைப்பவனாகவும் சென்று சேரவிருக்கிறேன். எனது நூலறிவு அதற்கு உதவும். அங்கிருக்கையில் உங்கள் ஐவரையும் நான் கண்காணிக்கவும் இயலும். அதுவன்றி நம்மிடையே எவ்வித சொல் ஊடாட்டும் தேவையில்லை. ஒவ்வொருவரும் அவரவர் பாதையில் சென்று அங்கு வாழ்வோம். நாம் தனித்திருக்கையிலும் ஐவர் என்றே நம் உள்ளம் எண்ணுகிறது. நம் அசைவுகளில் எஞ்சிய நால்வர் எவ்வண்ணமோ வெளிப்படுகிறார்கள். ஐவரில் இருந்து உதிர்ந்து ஒருவரென்று ஆகாமல் நாம் மாற்றுரு கொள்ள இயலாது, இளையோரே.”
சகதேவன் “ஆம்” என்றான். தருமன் திரௌபதியிடம் “நீ அரசியின் அடையாளத்தை துறக்கலாம். எங்கள் துணைவியென்னும் அடையாளமே துறக்கக் கடினமானது. கன்னியென்றாகி சைரந்திரியென மாறி அதிலிருந்து விடுபட்டாயென்றால் முற்றிலும் பிறிதொருத்தியென்றாவாய்” என்றார். பின்னர் புன்னகையுடன் “ஒருவேளை மீண்டு வர விரும்பாதவளும் ஆகக்கூடும்” என்றார். திரௌபதி புன்னகையுடன் “நான் முயல்கிறேன்” என்றாள். அவர்கள் ஐவருமே அவள் முகத்தை திரும்பி நோக்கி விழிவிலக்கினர்.
சற்றுநேரம் கழித்து சகதேவன் “நாளை கருக்கிருட்டிலேயே நான் இங்கிருந்து கிளம்பலாம் என்று எண்ணுகின்றேன், மூத்தவர்களே” என்றான். “அரிஷ்டநேமி என்னும் பெயரை எனக்கு நான் சூட்டியுள்ளேன். தென்னாட்டுக் கணியர்கள் அமணர்களாகவோ ஆசீவகர்களாகவோதான் இருக்கிறார்கள். ஆகவே ஐயமெழாது.” நகுலன் “கிரந்திகன் என்று என்னை சமைத்துக்கொண்டிருக்கின்றேன். தேர்த்தொழிலும் புரவிநுட்பமும் தேர்ந்தவன், சௌவீரர்களின் நாட்டிலிருந்து வந்தவன்” என்றான். பீமன் புன்னகைத்து “ஆம். உன் முகத்தில் மத்ர நாட்டு வண்ணமும் கூர்மையும் உள்ளது. சௌவீரனன்றி பிற எந்த அடையாளமும் உனக்கு பொருந்துவதல்ல” என்றான். நகுலன் “மாற்றுரு கொள்வதற்குக்கூட குறைந்த வாய்ப்புகளையே நம் உடல் வழங்குகிறது” என்றான்.
“வலவன் என்ற பெயரில் அடுமனை புகுவேன். அங்கு மல்லன் என்றும் அறியப்படுவேன்” என்றான் பீமன். “மேலும் குறுகுகிறது மாற்றுருவின் எல்லை. தோள்களை மறைக்கமுடியாது. வயிற்றை பேணியாகவேண்டும்” என்றான் நகுலன் சிரித்தபடி. அவர்களின் நோக்குகளனைத்தும் அர்ஜுனனை நோக்கி திரும்பின. அர்ஜுனன் “எனது காண்டீபத்தை இங்கு எங்கேனும் விட்டுவிட்டு செல்லவேண்டும்” என்றான். “ஆம், அது இருக்கும் வரை நீ விஜயன்” என்றார் தருமன். “இதுவரை வில்லை நீங்கியதில்லை. வில்லில்லாதபோது என்னிலெஞ்சுவது என்ன என்று அறியும் ஒரு தருணம் இது. நன்று” என்றபடி அர்ஜுனன் எழுந்தான். “என்ன பெயர் சூடவிருக்கிறாய்?” என்றார் தருமன். “பிரஹன்னளை” என்றான் அர்ஜுனன். “நீண்ட நாணல் என்று பொருள். நாணலின் குழைவு என்னில் கூடவேண்டும். முதிர்கையில் அம்பென கூர்கொண்டு இலக்கு தேர்வது அது.” சகதேவன் “நளனில் இருந்து அப்பெயரை எடுத்துக்கொண்டீர்கள் என எண்ணினேன்” என்றான். அர்ஜுனன் புன்னகைத்தான்.
சிலகணங்களுக்குப்பின் தருமன் “அத்தோற்றத்தில் என் முன்னால் வருவதை கூடுமானவரை தவிர்த்துவிடு” என்றார். அர்ஜுனன் “அத்தோற்றத்தில் ஆடியை நோக்கலாகாது என்று சற்று முன்பு வரை எண்ணிக்கொண்டிருந்தேன். ஆடியில் நோக்கி நோக்கித்தான் நான் அதுவாக முடியுமென்று இப்போது தோன்றுகிறது. மூத்தவரே, உங்கள் முன் தோன்றி உங்கள் விழிகளால் முற்றேற்கப்படுகையிலேயே நான் அதுவாக ஆவேன்” என்றான். தருமன் நீள்மூச்சுடன் “இது ஒரு தவக்காலமென்றே தோன்றுகிறது. இதில் உழன்று மறுகரை தொடுகையில் நாம் அறியக்கூடுவன அனைத்தையும அறிந்திருப்போம். அதைவிட துறக்க வேண்டியன அனைத்தையும் துறந்திருப்போம்” என்றார்.
சகதேவன் “நாம் மீண்டும் சந்தித்து விடைபெறப்போவதில்லை, மூத்தவரே” என்று எழுந்து சென்று தருமன் காலடிகளைத் தொட்டு சென்னி சூடினான். “அப்பெயர் சூட ஏன் தோன்றியது இளையோனே?” என்றார் தருமன். “நான் என்றும் அப்பெயரிலிருந்து விலகியதில்லை, மூத்தவரே” என்றான் சகதேவன். “இவையனைத்திலிருந்தும் நான் ஆற்ற வேண்டியதை முடித்துவிட்டேன் என்றால் இங்கிருந்து கிளம்பி அப்பெருந்தவத்தார் வாழ்ந்த ரைவதமலைக்கே செல்வேன். அவர் இருந்த குகைக்குள் சென்றமர்வேன். ஆற்றியவை அடைந்தவை அனைத்தையும் இன்மை செய்து அவரேறிய முழுமையின் ஒரு துளியையேனும் நானும் அடைவேன்.” தருமன் உளம் கனிந்து அவன் தோளில் கைவைத்து “நீ அதுவாவாய், இளையோனே” என்றார்.
இரவில் தங்கள் குடிலுக்குச் சென்றதும் சகதேவன் நகுலனிடம் விடைபெற்றுக்கொண்டான். இயல்பான குரலில் “புலரியில் நாம் சந்திக்கப் போவதில்லை” என்றான். நகுலன் குழப்பமாக “ஏன்? நானும் உடனிருக்க நீ விடைபெற்றாலென்ன?” என்றான். “நான் சூடிக்கொண்ட பெயருக்கேற்ப கிளம்பிச் செல்லவிருக்கிறேன், மூத்தவரே” என்றான் சகதேவன். நகுலன் சிலகணங்களுக்குப் பின்னால் “இளையோனே, அவ்வாறு முற்றறுத்து கிளம்பிச் செல்ல மானுடருக்கு இயலுமா என்ன?” என்றான். சகதேவன் “இயன்றிருக்கிறது. நேமிநாதர் அவ்வாறு கிளம்பிச் சென்றார்” என்று சொன்னான்.
“ஆம். ஆனால் மெல்ல அவரை கதையென திருவுருவென மாற்றி நம்புவதற்கு அப்பால் எங்கோ வைத்துவிட்டார்கள். தெய்வமென அவரை நம்பலாம். மானுடரென ஏற்பது கடினம்” என்றான் நகுலன். சகதேவன் “அறியேன். ஆனால் இந்தப் பெயருடன் அவரென சிறிது காலம் என்னை நடிக்கலாமென்றிருக்கிறேன். அதனூடாக ஒரு சிறு சாயல் என்மீது படியுமென்றாலும் நான் ஈட்டும் பெருஞ்செல்வம் அது என்றே கொள்வேன்” என்றான். “நன்று சூழ்க!” என்றான் நகுலன்.
இரவு உணவுண்டபின் சகதேவன் நகுலன் அருகே படுத்துக்கொண்டான். ஒரு சொல்லும் உரையாடாமல் ஒருவரை ஒருவர் உணர்ந்தபடி அவர்கள் நெடுநேரம் படுத்திருந்தனர். பின்னர் சகதேவனின் துயிலோசையைக் கேட்டபடி நகுலன் தன் எண்ணங்களுடன் தனித்து விழித்திருந்தான். புலரியில் இவனை நான் பார்க்கப் போவதில்லை. அன்னையைப் பிரிந்த நாள் முதல் ஒருபோதும் பிரிந்திராதவன். நெடுநாள் பிரிவல்ல. விரைவிலேயே மீண்டும் ஒரே இடத்தில் சந்திக்கப் போகிறவர்கள். ஆனால் அன்று அவன் பிறிதொருவனாக இருப்பான். நானும் பிறிதொருவனாக இருப்பேன். இரு அயல் முகங்கள் ஒன்றையொன்று கண்டுகொள்ளும். ஒருவரையொருவர் வரைந்து எடுக்கும் அவர்கள் எவராக இருப்பார்கள்?
விந்தையான அவ்வெண்ணத்தை எண்ணி அவனே புன்னகைத்துக்கொண்டான். விடியும்வரை துயிலப்போவதில்லை என்றுதான் தோன்றியது. ஆனால் சகதேவனின் சீரான மூச்சு அவனையும் துயிலுக்கு ஆற்றுப்படுத்தியது. எப்போதுமே அவனுடைய உணர்வுகள் சகதேவனின் உணர்வுகளின் நிழலாட்டம் போலவே நிகழ்ந்தன. அல்லது தன் நிழல் அவன். கரிய உடலுக்கு வெண்ணிழல். இருவரும் சேர்ந்தே அடைவது வழக்கம். தனக்கென ஓர் உணர்வு உருவானதே இல்லையா? பின்னோக்கிச் சென்று தேடத்தேட அத்தனை உணர்வுகளிலும் இருவராகவே இருந்ததுதான் நினைவுக்கு வந்தது. சினம், துயர், உவகை அனைத்தும். ஏன் தனிமையைக்கூட. எண்ணத்தை ஓட்டும்தோறும் மிக தனிப்பட்ட ஓர் எல்லைக்குச் சென்று அவன் திடுக்கிட்டு பின்வாங்கிக்கொண்டான்.
ஓராண்டு தனிமையில் இருக்கவேண்டும். பாதியாக. உள்ளத்தால். உடலாலும் கூடத்தான். புரண்டு புரண்டு படுத்து அதைக் குறித்தே எண்ணிக்கொண்டிருந்தான். தன் பெயர் என்ன? கிரந்திகன். நூலோன். ஏன் அப்பெயரை தெரிவு செய்தேன்? அவன் அகம் ஒரு சிலிர்ப்பை அடைந்தது. அது அவனைவிட சகதேவனுக்கே பொருத்தமான பெயர். அவனுக்குத்தான் நான் பெயர் சூட்டியிருக்கிறேன். அவனைத்தான் நடிக்கப்போகிறேன். என்னுள் இருக்கும் நான் வெண்ணிற உடல்கொண்டவன். அவனுக்குள் கரிய சகதேவன் வாழ்கிறானா என்ன? நாளை அங்கே அரிஷ்டநேமிக்குள் கிரந்திகனும் கிரந்திகனுக்குள் அரிஷ்டநேமியுமென வாழவிருக்கிறோமா?
சலிப்புடன் மீண்டும் புரண்டு படுத்தான். இல்லை, அப்பெயரை நான் முழுமையாக ஓர் ஆளுமையாக ஆக்கிக்கொள்ள முடியும். அவன் இல்லாத ஓர் உடல், உள்ளம். புரவிகள் தேர்கள் சூதர்பெண்கள். அவ்வாழ்க்கையில் ஒரு சொல்லைக்கூட நான் இவனிடம் சொல்லப்போவதில்லை. ஓர் எண்ணத்தைக்கூட இவனுடன் இணைத்துக்கொள்ளப் போவதில்லை. ஆம், அதை முயன்றாகவேண்டும். தனித்திருக்க முடியுமா என்று அறிந்தாகவேண்டும். நான் என எஞ்சுவதென்ன என்று. ஒருவேளை போரில்… மெய்ப்பு கொண்டு அவன் உடலை இறுக்கிக்கொண்டு சிலகணங்கள் உறைந்தான். பின்னர் தன்னை மீட்டுக்கொண்டு தொடர்ந்தான். ஒருவேளை அவன் இறந்து நான் எஞ்சினால் எவ்வண்ணம் இருப்பேன் என பயின்றாகவேண்டும். காட்டுக்குச் சென்று மரத்தடி ஒன்றில் அமர்ந்து தவம்செய்து உயிர்விடுவதற்காவது எனக்கென ஏதும் எஞ்சுமா என்று பார்க்கவேண்டும். ஒரு விதையேனும்.
எஞ்சாமலிருக்காது. எவரும் ஆழத்தில் தனியர்களே. ஒரு துளித் தனிமை, தன்னுணர்வின் ஓர் அணு அங்கே எஞ்சியிருக்கும். அதை வளர்த்தெடுக்க முடியும். அந்த எண்ணம் மெல்ல தித்திக்கத் தொடங்கியது. முற்றிலும் தனியாக நடக்கும் அவனை அவனே நோக்கிக்கொண்டிருந்தான். அந்த உருவம் நிழலற்றிருந்தது. தயங்கி காலெடுத்து நீரா நிலமா என்றறியாததுபோல் நடந்தது. பின்னர் கைகளை வீசியது. தலை தூக்கி வானை நோக்கியது. கைகளில் காணாச்சிறகுகள் எழுகின்றன. அதன் கால்கள் தரையிலிருந்து தென்னித் தென்னி எழத்தொடங்குகின்றன. பஞ்சை மென்காற்றென சூழ்வானம் அதை அலைக்கழிக்கவும் தாலாட்டவும் தொடங்குகிறது. அவன் அதை உள்ளக் கிளர்ச்சியுடன் நோக்கிக்கொண்டிருந்தான். ஆனால் எங்கோ அறியாது ஒரு திடுக்கிடலை உள்ளம் அடைந்தது. உடல் பதறத் தொடங்கியது. அவன் திரும்பிப் படுத்து பெருமூச்சுவிட்டான்.
ஆனால் இவன் கிளம்பிச் செல்கிறான். கிளம்பிச் செல்லுதல் என்னும் கனவு நெடுங்காலம் உள்ளூர இருந்திருக்கிறது. இந்தப் பெயரையே முன்னர் தெரிவு செய்து வைத்திருந்திருக்கிறான் போலும். நெடுங்காலம் இதை ஒரு கரவுப் படைக்கலம்போல கூர்முனையை வருடிக்கொண்டிருந்திருக்கிறான். ஒரு நச்சுச் சிமிழ்போல பட்டில் பொதிந்து வைத்திருந்திருக்கிறான். நாளை இருளில் அவன் கிளம்பிச்செல்வது என்னிடமிருந்தா? தான் என தனித்து இருக்க அவனால் இயலுமா? ஒருமுறை பிரிந்த எதுவும் கூடுவதே இல்லை என்பதே பொருள்களின் இயல்பென்று அவன் கற்றிருந்தான். அவ்வாறென்றால் இதுவே இறுதி இரவு. அவன் இருளுக்குள் சகதேவனை கூர்ந்து நோக்கினான். இவன் நாளை இருளில் கிளம்புவது என்னிடம் விடைபெற இயலாதென்று அஞ்சித்தானா? எழுந்து அவன் முன் எரியும் விழிகளுடன் நான் நின்றால் எப்படி கிளம்பிச்செல்வான்? தொப்புள்கொடி அறுத்த குருதி சொட்ட விலகுவானா என்ன?
விழித்தெழுந்தபோது அவன் அடைந்த முதலெண்ணமே அருகே சகதேவன் இருக்கிறானா என்பதுதான். கைநீட்டி தேடாமலேயே இல்லையென்று உணர்ந்து நெஞ்சு திடுக்கிட எழுந்து அமர்ந்தான். அவன் படுத்திருந்த ஈச்சையோலைப்பாய் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. சகதேவன் எப்படி அகன்றிருப்பான் என்று தன் உள்ளத்தில் எண்ணி நிகழ்த்திக்கொள்ள நகுலன் முயன்றான். அவ்வெண்ணத்தையே அகம் மறுத்தது. எழுந்து இருட்டு அடர்ந்துகிடந்த சூழ்சோலையை நோக்கிக்கொண்டிருந்தான். விழி தெளிந்தபோது மரங்களின் கருங்குவைகளும் இலைகளின் விளிம்புகளும் உருவாகி வந்தன. விண்மீன்கள் சரிந்த வானம் இலைத்தழைப்புகளினூடாக துலங்கியது. காற்றே இல்லை. ஒவ்வொன்றும் அசைவற்று ஓவியச் சுவரென சமைந்திருந்தன. நகுலன் நீள்மூச்செறிந்தான்.
கருக்கிருட்டிலேயே குருநிலையிலிருந்து வெளியேறி சோலைக்குள் புகுந்து விண்மீன்களைக்கொண்டு திசைதேர்ந்து தென்மேற்காக சகதேவன் நடந்தான். இருட்டு நரைத்து விழி துலங்க வண்ணங்களும் வடிவங்களும் கொண்டு புலரி எழுந்தது. முகில்களின் விளிம்புகளில் கசிந்த வெளிச்சம் மண்ணை தெளிய வைத்தபோது கோதாவரிக்குச் செல்லும் சிற்றாறு ஒன்றின் கரையை அவன் அடைந்தான். அங்கு படித்துறை ஒன்றில் நீர்மருதமரத்தின் வேர்மடிப்புக்குள் அமர்ந்திருந்த முதிய நாவிதனை அணுகி அவனருகே அமர்ந்து “முழுமுடி களைதல்” என்றான். அவன் விழிகள் மாறுபட “தாங்கள் அமணர்த்துறவு கொள்ளப்போகிறீர்களா, உத்தமரே?” என்றான். “ஆம்” என்றான் சகதேவன். “வடக்குநோக்கி அமருங்கள், அதுவே மரபு” என்றான் நாவிதன். சகதேவன் வடக்குநோக்கி மலரமர்வில் கால்மடித்து அமர்ந்துகொண்டான்.
நாவிதன் “என் பெயர் சங்கன். நான் இதுவரை நூற்றுக்கணக்கான அமணர்களுக்கு முழுமழிப்பு செய்துள்ளேன்” என்றான். தன் தோல்பையை எடுத்து கத்தியையும் தேய்ப்புக் கல்லையும் எடுத்து பரப்பினான். படிகாரக்கல் பளிங்குபோல ஒளியுடன் இருந்தது. பனையோலையைப் போன்றிருந்த தேய்ப்புக் கல்லில் கத்தியை தீட்டிவிட்டு சொரசொரப்பான உள்ளங்கையிலதை மீள மீள நீவியபின் சகதேவனின் உச்சித்தலையில் வைத்து “அருகர் புகழ் ஓங்குக!” என்றழைத்துக் கொண்டு கீழ்நோக்கி இழுத்தான். சுருள்முடிக் கற்றையொன்று சகதேவனின் மடியில் உதிர்ந்தது. காட்டுத்தீயில் எரிந்த சருகின் கரிச்சுருள் போல.
மேலும் மேலுமென குழல்கற்றைகள் மடியில் விழுந்தன. காக்கைச் சிறகுகள். காய்ந்த வாகைநெற்றுக்கள். மடியில் கோழிக்குஞ்சுகள் கிடப்பது போலிருந்தது. உயிரின் நுண்துடிப்பு கொண்டது, முற்கணம் வரை நான் என எண்ணுகையில் இணைந்திருந்தது. இன்று பிறிதொன்று. அவன் அதை உதறினான். மண்ணில் விழுந்து கிடந்தது. இப்போதே மட்கத் தொடங்கிவிட்டிருக்கும். ஓரிரு நாட்களுக்குள் நாற்றம் கொள்ளும். நாள் சென்றபின் தோண்டிப் பார்த்தால் உப்பென்று எஞ்சும்.
தன் முடியில் அத்தனை நரை இருப்பதை சகதேவன் அப்போதுதான் உணர்ந்தான். தலையை மழித்து முடித்ததும் நீர் அள்ளித்தெளித்து படிகாரத்தைக் கொண்டு வருடினான். மெல்லிய எரிச்சலுடன் வெறுந்தலையை உணர்ந்தான். காற்று அவன் தலையின் தோல் வளைவை தடவிச்சென்றது. தேவையே அற்ற இத்தனை எடையை தன்னுணர்வே இல்லாமல் தலையில் தாங்கியிருக்கிறோம் என்று எண்ணியபோது புன்னகை வந்தது. ஒவ்வொரு கணமும் முடியின்மையை தலையில், முகத்தில் தாடையில் உணர்ந்தான். ஆடைகளைந்த உடலின் விடுதலை போலிருந்தது.
“எழுந்து நில்லுங்கள், உத்தமரே” என்றான் நாவிதன். அவன் எழுந்து நின்றபோது அவன் இடையணிந்த ஆடையை நாவிதன் களைந்து அப்பாலிட்டான். அறியாது திடுக்கிட்டு கையால் அதைப் பற்ற “ஆடை களைவதே அமணத்தின் முதல்படி, உத்தமரே” என முதுநாவிதன் கரிய பற்களைக்காட்டிச் சிரித்தபடி சொன்னான். “ஆம்” என அவன் திணறியபடி சொன்னான். “முழுதுடல்” என்றான் நாவிதன். “நீங்கள் தேர்ந்த போர்வீரர் என நினைக்கிறேன்.” சகதேவன் “படைக்கலம் பயின்றுள்ளேன்” என்றான். நாவிதனின் கத்தி அவன் உடல்மேல் வருடிச்சென்றது. தூரிகை ஓர் ஓவியத்தை வரைந்தெடுப்பதுபோல அவனை அது தீட்டியது. அவன் உருவம் காற்றில் திரண்டு வந்தபடியே இருந்தது.
“தங்களுக்கு உடன்பிறந்தார் உள்ளனரா, உத்தமரே?” என்றான் நாவிதன். “இல்லை” என்றான் சகதேவன். “இறந்துவிட்டனரா?” என்றான். “ஆம்” என்றான் சகதேவன். “உங்கள் தொப்புள் காட்டுகிறது, இரட்டையர் நீங்கள் என்று. அவர் எப்படி மறைந்தார்?” சகதேவன் சிலகணங்களுக்குப்பின் பெருமூச்சுடன் தன்னைப் பெயர்த்து “போரில்” என்றான். நாவிதன் அவன் முழங்கால்களை மழித்துக்கொண்டிருந்தான். “எவருடனான போரில்?” என்றான். “என்னுடன்” என்றான் சகதேவன். நாவிதன் ஏறிட்டுப் பார்த்தான். கையில் கத்தி கூர் ஒளிர நின்றிருந்தது. “அருகர் அடி பணிக! விடுதலை கொள்க!” என்றபின் அவன் மீண்டும் மழிக்கத்தொடங்கினான். தன் உடலைச் சூழ்ந்து பறந்த காற்றை சகதேவன் உணர்ந்தான்.
சகதேவன் விராடபுரிக்கு பின்னுச்சிப்பொழுதில் சென்று சேர்ந்தான். இடையில் மரவுரி ஆடை அணிந்து முண்டனம் செய்த தலையுடன் கையில் கப்பரையுடன் நடந்த அவனை அருகநெறி வணிகர் வணங்கி தங்களுடன் சேர்த்துக்கொண்டனர். ஒரு பொழுது உணவை உண்டு வெறும் மண்ணில் படுத்து உறங்கி அவன் அவர்களுடன் சென்றான். வணிகர்களில் சிலர் விராடபுரியை அப்போதும் கிரிப்பிரஸ்தம் என்றே சொன்னார்கள். “ஒரு காலத்தில் அந்த மலையின் பெயர் அஸனிகிரி. பின்னர் பரசுராமர் அளித்த இந்திரனின் சிலையை அங்கே நிறுவி அதை கிரிப்பிரஸ்தம் என்றழைத்தனர். நள மாமன்னர் நிறுவிய மாபெரும் இந்திரன் சிலை அங்கிருந்ததாகச் சொல்கிறார்கள். அப்போது அது இந்திரகிரி என்று பெயர் பெற்றது. அன்று மலைவணிகத்தின் மையம் இந்நகர்” என்றார் மூத்தவணிகரான பூர்ணசந்திரர்.
“நள மாமன்னருக்குப்பின் நிஷதகுடிகள் ஒருவரோடொருவர் போரிட்டு ஆற்றல் அழிந்தனர். கீழிருந்து சதகர்ணிகள் பெருகிவந்து அவர்களை வென்றனர். நிஷாதர்கள் சிதறிப்பரந்து பதினெட்டு பெருங்குடிகளாகவும் எழுபத்தி நான்கு சிறுகுடிகளாகவும் ஆகி சதகர்ணிகளுக்கு கப்பம் கட்டலானார்கள். நிஷாதர்களில் பெரியதான சபரர்குடி கிரிப்பிரஸ்தத்தின் கீழே கோதையின் கரையில் மீன்பிடிக்கும் மச்சர்குடியாக நீடித்தது. நூறாண்டுகளுக்குப்பின் அக்குடியில் பிறந்த இரண்டாவது மகாகீசகர் மீண்டும் பிற குலங்களை இணைத்துக்கொண்டு விராடநிஷதசம்யோகம் என்னும் அமைப்பை உருவாக்கினார். அவர்களின் ஊர் இந்திரனின் குன்றுக்குக் கீழே விராடபுரி என்னும் நகரமாக உருவாகி வந்தது. இன்று தென்னகத்தின் மிகத் தொன்மையான பெருநகர் இது. மலைவணிக மையமாகவும் திகழ்கிறது” என்றார் இன்னொரு வணிகரான நாகநாதர்.
விராடபுரி அவ்வளவு பெரியதாக இருக்கும் என்று சகதேவன் எதிர்பார்த்திருக்கவில்லை. முதற்காவல்கோட்டத்தைக் கண்டதுமே அவன் வியப்படைந்தான். மகதத்தின் காவல்மாடங்களுக்கு நிகராக பன்னிரு அடுக்குகளுடன் உச்சிமாடத்தில் ஏழு பெருமுரசுகளுடன், அதற்கடுத்த மாடத்தில் அம்பு தொடுக்கப்பட்ட விற்பொறிகளுடன் நின்றிருந்தது. அதன் கீழே சென்ற அகன்ற சாலை மரப்பாளங்கள் சீராக அடுக்கப்பட்டு சேறும் புழுதியும் எழாது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அதன்மேல் சகடங்களும் குளம்புகளும் செல்லும் ஓசை அறுபடாது எழுந்துகொண்டிருந்தது.
விராடபுரியை சுற்றிச்சென்ற கோட்டை பனைமர உயரமான கல்லடுக்குக்குமேல் செங்கல்கட்டு கொண்டிருந்தது. அதன்மேல் முகப்புமுற்றத்தை நோக்கியபடி பன்னிரு காவல்மாடங்கள் மழையில் கரிந்த மரக்கூரைகளுடன் மாலைவெயிலில் ஒளிகொண்டு மின்னிச் சரிந்திருந்தன. அங்கு நின்றிருந்த காவலர்களின் வேல்முனைகளும் இரும்புக் கவசங்களும் மின்னின. எட்டு நிரைகளாக தேர்களும் வண்டிகளும் அத்திரிகளும் புரவிகளும் தலைச்சுமையர்களும் கால்நடையர்களும் உள்ளே சென்றுகொண்டிருந்தனர். ஒவ்வொரு நிரையும் வெவ்வேறு சுங்கச்சாவடிகளுக்குள் நுழைந்து மறுபக்கம் வெளியேறின.
சுங்கக்காவலன் சகதேவனைப் பார்த்ததும் ஒருகணம் விழி சுருங்கினான். “நீர் ஷத்ரியரா?” என்றான். “ஆம், படைக்கலம் பயின்றவன்” என்றான் சகதேவன். மேலும் சில கணங்கள் நோக்கியபின் அவன் திரும்பி முதிய தலைமைக்காவலனிடம் ஏதோ சொன்னான். அவன் “மூடா, அவர் முகமே காட்டுகிறதே. நூலறிந்தவர், அறமுணர்ந்தவர், இங்கிருப்பினும் எக்கணமும் கடந்துசெல்லக்கூடியவர்” என்றபின் சகதேவனிடம் “உத்தமரே, எளியவனின் வணக்கத்தை பெற்றுக்கொள்க!” என்றான். “நலம் திகழ்க! அருகனருள் சூழ்க!” என்றான் சகதேவன். “தங்கள் பெயர் என்ன என்றறியலாமா?” என்றான் முதிய தலைமைக்காவலன். “அரிஷ்டநேமி என்னும் பெயரை சூடிக்கொண்டிருக்கிறேன்” என்றான் சகதேவன்.
சகதேவனின் அருகே நின்ற நாகநாதர் “அனைத்து நெறிநூல்களையும் கற்றிருக்கிறார். கணித்தொழில் சிறந்தவர். அரசர் இவரை சந்திப்பது நன்று” என்றார். அவன் தலைவணங்கி “அவ்வாறே நானும் எண்ணுகிறேன். உத்தமரே, இவரை உங்களுக்கு அணுக்கனாக அனுப்புகிறேன். எங்கள் அரண்மனை புகுந்து அரசரை சந்திக்க உளம்கொள்ளவேண்டும்” என்றான். சகதேவன் “அவ்வண்ணமே ஆகுக!” என்றான். நாகநாதர் “தங்கள் சொல்சூழ்திறம் விராடபுரியின் அரசருக்கு நலமுரைக்கட்டும், உத்தமரே. இத்தனை தூரம் எங்களுடன் தாங்கள் வந்தமைக்கு நாங்கள் நல்வினை ஈட்டியிருக்கிறோம்” என்றார்.
துணைவந்த வீரனுடன் சகதேவன் விராடபுரியின் தெருக்களினூடாக நடந்தான். ஆரியவர்த்தத்தின் பெருநகர் ஒன்றுக்கு நிகராக சீராக நிரைகொண்ட ஏழ்மாட அடுக்குகளும் இரு மருங்கும் அணித்தோரணத் தூண்களும் நகர் முழுமையையும் நோக்கும்படி அமைந்த காவல்மாடங்களுமாக விரிந்துகொண்டே சென்றது விராடபுரி. வணிகத்தெருக்களில் வண்ணக் கொப்பளிப்பென நகர்மக்கள் நெருக்கியடித்தனர். விலைக்கூவல்களும் கொள்குரல்களும் உசாவலோசைகளும் கலங்களும் பொருட்களும் முட்டியும் இழுபட்டும் எழுப்பும் அரவங்களும் கலந்து செவிநிறைத்தன.
தெருமுனைகள் முழுக்க அன்னசாலைகள் நிறைந்திருந்ததை சகதேவன் கண்டான். அது உணவுண்ணும் பொழுதல்ல என்றாலும் கூட்டம் செறிந்து உண்ணொலி பெருகி எழுந்துகொண்டிருந்தது. அவை இரவலர்க்கும் அயலவருக்கும் மட்டும் உரியவை அல்ல என்று தெரிந்தது. அங்கே நகர்மக்களும் அன்னசாலைகளில்தான் கூடி உண்கிறார்கள் எனத் தோன்றியது. ஆரியவர்த்தத்தின் நகர்களில் விழவுக்காலங்களில் மதுக்களியாட்டின்போது மட்டுமே திகழும் உவகை அங்கே தெரிந்த அத்தனை முகங்களிலும் நிறைந்திருந்தது. வெண்மலர்கள் செறிந்த தேக்குக்காடுபோல நகர்த்திரள் சிரிப்புகளாலானதாக இருந்தது.
அரண்மனைக் கோட்டையை அடைந்தபோது நெடுங்காலம் கடந்துவிட்டதைப்போல உணர்ந்தான். நகரம் என்பது காலப்பரப்பாக மாறியது. முகங்கள், இடங்கள், ஒலிகள் ஒன்றை ஒன்று கவ்வி நீண்டு சுற்றிச்சுற்றி ஒரு கண்டாக ஆகி நிற்பது. அரண்மனைக் கோட்டை வாயிலில் காவலன் அவனை சிற்றமைச்சர் தைவதரிடம் அழைத்துச்சென்றான். அவர் எழுந்து கைகூப்பி வணங்கி “அடிகள் முன் நிற்கும் பேறு பெற்றேன். எங்கள் அரசரை திருவிழி நோக்க உளமருளவேண்டும்” என்றார். “அவ்வாறே ஆகுக!” என்றான் சகதேவன்.
விராடபுரியில் வேதமாமுனிவர்களுக்கு நிகரான வணக்கம் அருகநெறியினருக்கு இருப்பதை சகதேவன் உணர்ந்தான். அவனை அரண்மனை அமைச்சர் முக்தர் எதிர்கொண்டு வரவேற்று கொண்டுசென்றார். “அரசவை கூடியிருக்கிறது, உத்தமரே. தாங்கள் அரசரைக் கண்டு அருட்சொல் உரைத்த பின்னர் தங்களுக்குரிய குடிலுக்குச் செல்லலாம். தாங்கள் விரும்பிய வண்ணம் அனைத்தும் இங்கே அமைத்தளிப்பதை எங்கள் நல்லூழாகக் கருதுவோம்” என்றார்.
அமைச்சர்களும் குடித்தலைவர்களும் கூடிய அவையில் அவன் வரவறிவிக்கப்பட்டதும் காவலன் அழைத்துச்செல்ல சகதேவன் உள்ளே நுழைந்தான். அவையினர் எழுந்து நின்று “அருகனடிகளுக்கு தலை தாழ்த்துகிறோம்” என்று வணக்கச் சொல்லுரைத்தனர். அரியணையில் அமர்ந்திருந்த மகாவிராடரான தீர்க்கபாகுவும் பட்டத்தரசி சுதேஷ்ணையும் எழுந்து “அருகனடி தொழுகிறோம், உத்தமரே” என்று கைகூப்பி வணங்கினர். தலைமையமைச்சர் விருதர் வணங்கி முகமனுரைத்து அழைத்துச்சென்று அரியணைக்கு வலப்பக்கம் அருகநெறியினர் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த சாணிபூசப்பட்ட மண்திண்டில் அமரச்செய்தார்.
“அடிகள் இவ்வவைக்கு எழுந்தருளியதனால் அருள்பெற்றோம். கருணைச்சொல் பெறக் காத்திருக்கிறோம்” என்றான் விராடன். சகதேவன் “அரசே, நான் அருகநெறியை ஏற்று சிலநாட்களே ஆகின்றன. நான் அதுவாக முனையும் எளியவன் மட்டுமே. அதற்கப்பால் நான் யாரென்று கேட்கவேண்டியதில்லை. இந்த வணக்கங்கள் அனைத்தும் இந்த உருவுக்கும் இவ்வுருகொண்டு இங்கு அமைந்து நிறைந்தவரும் திகழ்பவருமான அருகநெறியினருக்கே என்று கொள்கிறேன்” என்றான். விராடன் “ஆம், தங்கள் சொல்லை தலைக்கொள்கிறோம்” என்றான்.
“தாங்கள் கணியர் என்றார்கள். நல்லூழாக தாங்கள் அவை நுழையும்போது என் மகளைக் குறித்தே பேசிக்கொண்டிருந்தோம். அவள் வருவாழ்வை கணித்துரைக்கவேண்டும்” என்றாள் அரசி சுதேஷ்ணை. “ஆம்” என்றான் சகதேவன். அரசி திரும்பி தன்னருகே நின்ற சேடியிடம் “இளவரசியை வரச் சொல்க!” என்றாள். அவள் பட்டுத்திரைக்குப் பின்னால் சென்று அங்கு அமர்ந்திருந்த இளவரசியை அழைத்துக்கொண்டு வந்தாள். “என் மகள் உத்தரை, வரும் ஆவணியில் பதினெட்டு அகவை நிறைகிறது” என்றாள் அரசி.
உத்தரை ஆலிலை வடிவ முகமும், நீண்டு வளைந்த விழிகளும் சிறிய குமிழ் மூக்கும் சற்றே மேலெழுந்து வளைந்த சிவந்த சிற்றிதழ்களும் கொண்டிருந்தாள். மின்னும் கரியநிற உடல். வெண்பட்டாடை அணிந்திருந்தாள். வலச்சரிவுக் கொண்டையில் முத்துச்சரம் சுற்றி கழுத்தில் வெண்முத்து ஆரம் அணிந்திருந்தாள். கைகளில் சங்கு வளையல்கள். சிலம்புகளின் மென்சிணுங்கல் சொல்லழிந்து விழிகள் விரிந்து அமர்ந்திருந்த அவையில் தெளிவாக ஒலித்தது. அவள் வந்து கைகூப்பி நின்றாள். காற்றிலாடிய ஆடையில் அவள் உடலே மெல்லிய மலர்க்கொடி என துவள்வதாகத் தோன்றியது.
“அவள் பிறவிநூலை தங்களிடம் அளிக்கிறேன், உத்தமரே” என்றாள் சுதேஷ்ணை. “வேண்டியதில்லை, முகக்குறிகளே போதும்” என்றான் சகதேவன். “ஆவணி மாதம் ஆயில்யம் நாளில் ஞாயிற்றுக்கிழமை முதற்பொழுதின் முதல்நாழிகை ஏழாவது மணியில் பிறந்தாள். பிறந்த பொழுதுக்கு சற்றுமுன் அரண்மனை அகத்தளத்தில் நாகம் ஒன்று விழிப்பட்டது.”
“ஆம்” என்றாள் அரசி கைகூப்பியபடி. “நன்றும் தீதும் உண்டு அரசி. பெருங்குலம் ஒன்றுக்கு திருமகளாவாள். பெருவீரனை மணப்பாள். அவள் வயிற்றில் பிறக்கும் மகன் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி என்றமைவான். அவன் கொடிவழியினர் பாரதவர்ஷத்தை முழுதாள்வார்கள். இந்நிலம் இங்கு உள்ளளவும் இவள் பெயரும் இவள் குடிநிரையினர் புகழும் இங்கு பேசப்படும். இமய மலைகளைப்போல கங்கை நதியைப்போல முக்கடல் முனையைப்போல” என்றான் சகதேவன். அரசியின் கண்கள் கலங்கிவிட்டன.
“ஆனால் அரவுக்குறை கொண்டது இவள் பிறவிநூல். என்றும் இவளுடன் நாகவஞ்சம் தொடரும்” என்றான் சகதேவன். அரசி கூப்பிய கைகள் நடுங்க “அதற்கு மாற்றுசூழ இயலுமா, கணிகரே?” என்றாள். “இல்லை, ஊழ் மருந்தற்ற நோய்” என்றான் சகதேவன். “நாகம் இப்புடவி நெசவின் ஊடுபாவுகளில் ஓடும் அழியாச்சரடு.” பெருமூச்சுடன் “இறையருள் சூழ்வோம். வேறேது செய்ய இயலும்?” என்றான் விராடன். “ஆம், மூதன்னையர் அருளட்டும்” என்றாள் அரசி. விராடன் “உத்தமரே, இங்கு அரண்மனைச் சோலையின் குடிலில் தாங்கள் விரும்பும் காலம் வரை உறைக! உங்கள் சொற்கள் எங்களுக்கு பாதை வெளிச்சமாகுக!” என்றான். “நன்று சூழ்க!” என சகதேவன் வாழ்த்தினான்.