நுழைதல் –ஒரு கடிதம்

vish

எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

நான் சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளேன். சமீபத்தில் தங்களின் இணையதளம் எனக்கு அறிமுகம் ஆனதில் இருந்து உங்களின் எழுத்துக்களை தொடர்ந்து நான் வாசித்து வருகிறேன். ஒரு கட்டுரையில் தஞ்சை பகுதியில் இருந்து வாசகர்கள் அதிகம் கடிதம் எழுதுவது இல்லை என குறிப்பிட்டு இருந்தீர்கள். நானும் என்னுடைய நண்பர்கள் சிலரும் உங்களுடைய தீவிர வாசகர்கள் ஆகி விட்டோம் என்பதை அறியவும்.

வரலாறு, தத்துவம், மதம் ஆகியவற்றில் எனக்கு இருந்த ஒரு ஆர்வத்தை உங்கள் கட்டுரைகள்மிகப் பெரிய அளவில் தூண்டி இருக்கின்றன. முக்கியமாக இந்திய தத்துவ ஞானம் பற்றிய ஆறு தரிசனங்கள் நூலை வாங்கி நான் படித்து விட்டு அதை பற்றிய விவாதத்தையும் அலுவலகத்திலும் நண்பர்கள் மத்தியிலும் செய்து கொண்டு இருக்கிறேன். இடதுசாரிகள் மத்தியில் நீங்கள் ஏன் இவ்வளவு வசை பாடப் படுகிறீர்கள் என்று முதலில் எனக்கு புரியவில்லை. பிறகு, மார்க்சின் இந்திய ஞானம் பற்றிய கட்டுரையைப் படித்த பின் காரணம் புரிந்தது. நான் சில வருடங்களாக இடது சாரி தொழிற்சங்கத்தில் பொறுப்பாளராகவும் பணி செய்து கொண்டு இருப்பவன். அவர்களில் சிலரிடம் உங்களை பற்றி கேட்கும் போதும், சிலரின் எழுத்துக்களிலும் உங்களை மிகக்கடுமையாக வசை பாடுவதைக் கண்டு வருத்தமுற்றேன்.

நிறைய கடிதங்கள்உங்களுக்கு எழுத வேண்டும் என்ற ஆவல் இருந்த போதிலும் நீங்கள் எப்படி எடுத்து கொள்வீர்கள் என்ற தயக்கமும் இருக்கிறது. உங்களின் அறம் சிறு கதைகள் எனக்கு வnழ்க்கையில் சில முடிவுகளை தயக்கம் இன்றி எடுக்க உதவிடும் என நான் நம்புகிறேன். நான் சில தினங்களாகவே தங்களின் கதைகள், கட்டுரைகள் வாயிலாக உங்களுடனே சிந்தனை செய்பவனாக உணர்கிறேன். ஆங்கில புனைவு மற்றும் பத்திரிக்கை வாசிப்பில் இருந்து என்னை தமிழுக்கு அழைத்து வந்து இருக்கிறீர்கள்.

ஏராளமான விஷயங்களை அனாசயமாக எழுதி செல்கிறீர்கள். பெரியதோ சிறிய தோ உங்களின் எல்லா கட்டுரை கதைகளையும் படித்து விடுவது என முடிவு செய்து, படித்து கொண்டு இருக்கிறேன். அற்புதமான வாசிப்பு அனுபவங்களை தந்து கொண்டு இருக்கும் உங்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள். பாராட்டுக்கள். விஷ்ணுபுரம் வாசிக்க ஆரம்பித்து இருக்கிறேன். அதையே ஒரு தகுதியாக எண்ணும் அளவிற்கு பூரிப்பாக இருக்கிறது. உங்களுக்கு தொந்திரவு இல்லையெனில் எனது வாசிப்பு அனுபவங்களை தொடர்ந்து எழுதுகிறேன்.

நான் சில தினங்களாக வாழ்வதையே கூடுதல்சுவாரஸ்மாக உணர்கிறேன். அதை சாத்தியப்படுத்திய தங்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நானும் எழுத முயற்சிப்பது என ஆரம்பித்து விட்டேன். முதலில் கட்டுரைகளாக எழுதுவது என்றும் தீர்மானித்து அதற்கான குறிப்புகளையும் எனது blog இல் பதியத் தொடங்கி இருக்கிறேன். மொழிபெயர்ப்பு கட்டுரைகள் எழுதிய அனுபவம் மட்டும் உண்டு. இந்த உந்துதலும் தங்களைக் கண்டு தான். உங்களின் எழுத்துக்கள் புதிய

புதிய உச்சங்களைத் தொட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்,

S சுப்ரமணியம்,

கும்பகோணம் .

***

அன்புள்ள சுப்ரமணியம் அவர்களுக்கு

நன்றி

என் தளத்தை திரும்பிப்பார்க்கையில் எனக்கே கொஞ்சம் ஆச்சரியம்தான். ஒரு சிறு நூலகம் அளவுக்குக் கட்டுரைகள், விவாதங்கள் உள்ளன. உங்களுடன் சில ஆண்டுகள் விவாதிப்பேன் என நினைக்கிறேன். அது நாம் இருவரையுமே அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்லலாம். எழுதுங்கள்

ஜெ

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 23
அடுத்த கட்டுரைவல்லினம்