‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 17

16. பசுந்தளிர்ப்புள்

flowerவிதர்ப்பத்தின் எல்லையை காட்டுப்பாதையினூடாக பாண்டவரும் திரௌபதியும் கடந்துசென்றனர். காட்டு விலங்குகளின் கால்களால் வரையப்பட்டு வேடர்களால் தீட்டப்பட்ட அப்பாதையில் எல்லைக்காவல் என ஏதுமிருக்கவில்லை. ஒருவர் பின் ஒருவரென காலடியோசை சூழ்ந்தொலிக்க உடலெங்கும் விழிக்கூர்மை பரவியிருக்க சொல்லற்றவர்களென நடந்து சென்றனர். வெண்வடுவென குறுக்கே கடந்துசென்ற நீரிலாத ஓடைதான் விதர்ப்பத்தின் எல்லை என்று முன்னரே அவர்களுக்கு விடைசொல்லி அகன்றிருந்த பிங்கலனும் குழுவினரும் உரைத்திருந்தனர். “அதற்கு அப்பாலும் அதே காடுதான். ஷத்ரியர்களின் காட்டுக்கும் நிஷாதர்களின் காட்டுக்கும் எந்த வேறுபாடுமில்லை” என்றான் பிங்கலன்.

தருமன் அவர்களை வணங்கி தன் கையிலிருந்து ஒரு வெள்ளி நாணயத்தை அளித்தார். அதை பெற்றுக்கொண்டு விழிகளில் ஒற்றிய பிங்கலன் “நல்வழி சூழ்க! எது தொடரினும் இறுதியில் வெற்றி உடனிருக்க தெய்வங்கள் அருள் புரிக!” என்றான். “நீங்கள் எங்களை உணர்ந்துவிட்டீர்கள் என்று இக்கதையின் போக்கிலேயே உணர்ந்துகொண்டேன், சூதரே” என்றார் தருமன். “ஆம். இக்கதையினூடாக ஏழைச்சூதன் பாரதவர்ஷத்தை ஆளப்போகும் சக்ரவர்த்தியிடம் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டேன்” என்றான் பிங்கலன். “அவற்றை நான் முழுதுணரவில்லை. உணரும்படி அமையட்டும்” என்றார் தருமன்.

பிங்கலன் கைகூப்பி தலைவணங்க “ஒருநாள் நாம் மீண்டும் சந்திப்போம், சூதரே” என்றார் தருமன். “ஆம், அது தாங்கள் மாபெரும் வேள்விகள் முடித்து கருவூலம் ஒழியும்படி ஏழு வகைக் கொடைகளையும் அளிக்கும் பெருநாளாக இருக்கும். அங்கு இந்த யாழும் முழவும் வந்துநிற்கும். என் குரல் என் கொடிவழியினர் நாவில் ஒலிக்கும்” என்றான் பிங்கலன். சில கணங்கள் சொல்லற்ற அமைதியில் நின்றுவிட்டு தருமன் நீள்மூச்சுடன் “தங்கள் சொல் திகழட்டும்” என்று உரைத்தார். அவர்கள் வணங்கி திரும்பி காட்டுக்குள் நுழைவதுவரை பிங்கலனும் அவன் குடியினரும் அங்கே நோக்கி நின்றிருந்தனர்.

பிங்கலன் சொன்ன நளதமயந்தி கதையினூடாக உளம் அலைய நீள்தொலைவு அகன்றபின் பீமன் “இந்தக் கதையில் முழுக்க மாற்றுரு கொள்வதைப்பற்றியே பிங்கலர் பாடியதாக எனக்குத் தோன்றியது” என்றான். “ஆம், பிறிதொன்றென ஆகி அறியும் மெய்மைகளைப்பற்றி” என்றார் தருமன். “அதற்கு மேலும் அவர் உரைத்தார். அதை இன்று நாம் உணர முடியாது. அவர் அளித்தது உடன் வளரும் ஒரு கதையை. வருவனவற்றினூடாக மீண்டு வந்து தொட்டு எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.”

சிறிது நேரத்திற்குப் பிறகு பீமன் “நாம் முற்றிலும் காட்டு வழியாக விதர்ப்பத்தை கடக்க முடியாது, மூத்தவரே. எங்கோ ஊர்களை கடந்தே ஆகவேண்டும். விதர்ப்பம் காடுகளை அழித்து இரு திசையிலும் பெருகி வளர்ந்திருக்கிறது. கிழக்கு திசைக்கு நகர்ந்து சென்றால் ஆளில்லாத மேய்ச்சல் நிலங்களையும் ஆயர் சிற்றூர்களையும் கடக்கலாம். இவ்வழி சென்றால் நாம் குண்டினபுரியின் புற எல்லை வழியாக செல்ல வேண்டியிருக்கும்” என்றான். தருமன் “அதைத்தான் நானும் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றார். “ஆளில்லாத நிலமென்று ஒன்று இல்லை. ஆயர்கள் விரிநிலத்தை விழிகளால் கணக்கிட்டு வைக்க கற்றவர்கள் அவர்களின் நிலங்களினூடாக அறியாமல் எவரும் கடந்து செல்வது இயலாது.”

“அங்கு நாம் ஐவரும் ஒன்றாகவே செல்ல இயலும். ஐவரும் தேவியும் என்பதே நம்மை அறியச்செய்யும். நம்மை காணும் முதற்சூதர் நமது வரவை அறிவார். அவரது சொல் நம்மை சூழ்ந்துகொண்டதென்றால் எங்கும் ஒளிய இயலாது” என்றார் தருமன். அவர்கள் அவர் மேலும் சொல்வதற்காக காத்து நிற்க “நாம் குண்டினபுரியினூடாகவே செல்வோம்” என்று தருமன் சொன்னார்.

“நாம் மும்முறை இந்நகரத்திற்குள் முன்பு வந்திருக்கிறோம்” என்று பீமன் சொன்னான். “ஆம், அது இளையோராக. இளைய யாதவன் விதர்ப்பினியை பெண்கொண்ட பின்னர் நமக்கும் இந்நாட்டிற்கும் தொடர்பென ஏதும் இருந்ததில்லை. இவர்கள் நம்மைப்பற்றி தீட்டிவைத்திருக்கும் பதினான்கு ஆண்டு பழைய உளஓவியம் ஒன்றே இங்குள்ளது. அதிலிருந்து நாம் நெடுந்தொலைவு அகன்று வந்துவிட்டோம். நம்மை பிறருக்குக் காட்டுவது இன்று ஐவர் எனும் அடையாளமே. அதை கலைப்போம். நானும் நகுலனும் தனியாக செல்கிறோம். சகதேவன் அர்ஜுனனை துணைக்கொள்ளட்டும். தேவி பீமனுடன் செல்லட்டும். மூன்று தனி வழிகள் தேர்வோம்” என்றார் தருமன்.

“குண்டினபுரிக்கு அப்பால் நிஷதநாடு செல்லும் காட்டின் தொடக்கத்தில் மீண்டும் சந்திப்போம். அங்கு புரந்தர முனிவர் முன்பு தங்கியிருந்த குருநிலை ஒன்றுள்ளது. இன்று அவர்களுடைய மாணவர்களே அங்கிருக்கிறார்கள். அது வேதமுடிபுக்கொள்கையை ஏற்ற குருநிலை. நம் மந்தணத்தை அவர்கள் காப்பார்கள்” என்றார் தருமன். “அங்கு ஒருங்கு கூடுவோம். எவர் முதலில் வந்தாலும் பிறருக்காக அங்கு காத்திருக்க வேண்டும்.”

அர்ஜுனன் “நன்று, மூத்தவரே. ஆனால் ஒரு சிறு மாற்றம். தங்களுடன் நான் வருகிறேன்” என்றான். தருமன் ஏதோ சொல்ல வாயெடுக்க பீமன் “ஆம், அவன் வருவதே உங்களுக்குக் காப்பு, மூத்தவரே” என்றான். “நீங்கள் அரசர். நாங்கள் உங்களுக்காக மெய்க்காவல் சூளுறை கொண்டவர்கள்.” அக்குரலிலிருந்த உறுதியால் தருமன் “ஆகுக” என்றார். பின்னர் சில கணங்களுக்குப்பின் “இளையோர் இருவரும் தனித்து வருவதா?” என்றார். “இது சிறுபயணமே. அவர்கள் தனித்து வருவதில் இடரொன்றுமில்லை” என்றான் அர்ஜுனன். “இளையவனே, சிற்றன்னையின் மைந்தர்கள் அவர்கள். மறைந்த அன்னைக்கு நாம் மூவரும் அளித்த சொல் அவர்களின் காப்பு” என்றார் தருமன்.

“நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்” என்று பீமன் சொன்னான். தருமன் நோக்க “நான் தேவியுடன் வரும்போது இளையவரை எப்போதும் என் பார்வையில் வைத்திருப்பேன்.” என அவன் சொன்னான். “நன்று! உன் சொல்லை நம்பி அவர்களை நான் ஒப்படைக்கிறேன்” என்று தருமன் சொன்னார். பீமன் “நாம் தனித்தனியாகச் செல்வது பிறிதொருவகையிலும் நன்று. சேர்ந்து செல்கையில் ஐவரும் ஓருள்ளமாகவே திகழ்கிறோம்” என்றான்.

flowerவிதர்ப்பத்தின் காடு இலைகள் உதிர்ந்து சோர்ந்து நின்ற உயரமற்ற மரங்களும், குற்றிலை செறிந்த முட்புதர்களும் கலந்து பரவி சருகுகள் காற்றில் ஓசையுடன் அலைய ஊடே காலடி ஓசைக்கு விதிர்த்து துள்ளிப்பாயும் மான்களின் சலசலப்புடன் சூழ்ந்திருந்தது. பாம்புகளும் கீரிகளும் கடந்தோடும் கலைவோசையும் தலைக்குமேல் எழுந்து சிறகடித்துக் கூவிய பறவைகளின் கூச்சல்களுமாக அவர்களிடம் அது சொல்லாடியது. அதன் சீவிடு ஒலி சுழன்று சுழன்று உடன்வந்தது. நிழலிலும் மண்ணிலிருந்து எழுந்த வெம்மையின் அலைகள் உடலை தாக்கின. அந்திவரை நடப்பதற்குள் மூன்று மரநிழல்களில் அமர்ந்து நீர் அருந்தி ஓய்வெடுக்க வேண்டியிருந்தது.

இரவில் தங்குவதற்குரிய பாறை ஒன்றை பீமன் நெடுமரமொன்றின் மேலேறி நோக்கி கண்டடைந்தான். அங்கு சென்றதும் காட்டுக்குள் இறங்கி உலர் விறகு சேர்த்து வந்தான். பிளந்து நின்ற பாறையின் இடுக்குக்குள் வெளியே ஒளிதெரியாமல் அனல் மூட்டி தேடிக்கொண்டுவந்த கிழங்குகளையும் காய்களையும் நான்கு முயல்களையும் சுட்டு அவர்களுக்கு உணவு அளித்தான். பின்னர் புகையெழுந்த அடுப்பை மணலிட்டு முற்றாக மூடினான். அவர்கள் உணவுண்டதுமே விழிசோர்ந்து துயில்நாடலானார்கள்.

பாறை உச்சிவெயிலின் வெம்மை கொண்டிருந்தது. காடெங்கும் பரவிய குளிருக்கு அது இனிய அணைப்புபோலிருந்தது. திரௌபதியை நடுவே படுக்க வைத்து சுற்றிலும் ஐவரும் படுத்துக்கொண்டனர். விழிகள் திறந்து விண்மீன் வெளியை நோக்கியிருக்க வலக்கையருகே அம்பும் இடக்கையருகே வில்லுமாக அர்ஜுனன் படுத்திருந்தான். மறுஎல்லையில் அலுப்போசையுடன் தன் பெரியஉடலை சாய்த்த பீமன் “நாளை உச்சிக்குள் நாம் விதர்ப்பத்தின் மையச் சாலையை சென்றடையக்கூடுமல்லவா?” என்றான். அர்ஜுனன் “ஆம்” என்றான். “நாளை காலை பிரிகிறோம்” என்றான் பீமன் மீண்டும். அர்ஜுனன் “ஆம்” என்றான்.

பீமன் பேச விழைந்தான். “விதர்ப்பத்தில் பெருநிகழ்வேதோ எழுகிறது போலும். பகலெல்லாம் தொலைவில் சாலையினூடாக புரவிகளும் வண்டிகளும் சென்றுகொண்டிருப்பதை கண்டேன்” என்றான். அர்ஜுனன் “குண்டினபுரி இன்று விதர்ப்பத்தின் வணிகத்தலைநகர் மட்டுமே. ருக்மி போஜகடகத்திற்கு தன் தலைநகரை மாற்றிக்கொண்டபின் அவன் தந்தை பீஷ்மகர் சில காலம் இந்நகரை ஆண்டார். பின்னர் அவரும் போஜகடகத்திற்கே தன் அரண்மனையை மாற்றிக்கொண்டார். குண்டினபுரியில் நடந்த அரசப்பெருவிழாக்கள் அனைத்தும் போஜகடகத்திற்கு இடம் பெயர்ந்தன. அதை நிகர் செய்யும் பொருட்டு ஆண்டுக்கு எட்டு பெருஞ்சந்தைகள் இங்கு கூடும்படி அமைத்திருக்கிறான். முதுவேனில் காலத்து சந்தை இன்னும் சில நாட்களில் இங்கு கூடவிருக்கிறது” என்றான்.

“ஆனால் சாலைகளில் செல்லும் கவச வீரர்களை காண்கையில் சந்தை நிகழ்வு மட்டும் என்று எண்ணத்தோன்றவில்லை” என்றான் பீமன். “ஆம், நானும் அதை பார்த்தேன். முதுவேனிற் சந்தையை ஒட்டி பிறிதேதோ அரச நிகழ்வொன்று நடைபெற உள்ளது. ஆனால் பேரரசர்களின் வருகை எதுவுமல்ல. அத்தனை பெரிய ஏற்பாடுகள் தெரியவில்லை. சிறிய அரசநிகழ்வுதான்” என்று அர்ஜுனன் சொன்னான். “எதுவாயினும் வழிகளில் காவல் நிறைந்திருக்கும். முகங்களை கூர்ந்து நோக்குவார்கள். சந்தைக்குச் செல்லும் அயல்முகங்களின் திரள் மட்டுமே நமது காப்பு” என்று பீமன் சொன்னான். அர்ஜுனன் “ஆம்” என்றான்.

தங்கள் உரையாடலை திரௌபதி கேட்டுக்கொண்டிருப்பதை இருவரும் உணர்ந்தனர். பிறருடைய துயில்மூச்சுக்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. பீமன் இருமுறை கோட்டுவாயிட்டான். “சென்றுகொண்டே இருக்கிறோம். எங்கும் நிலைக்க முடியுமா இனிமேல் என்றுகூட எண்ணிக்கொண்டேன்” என்றவன் இருமுறை புரண்டுபடுத்தான். சற்று நேரத்திலேயே அவன் உரக்க குறட்டை விட்டு துயில் கொள்ளலானான்.

திரௌபதி தாழ்ந்த குரலில் “இளையவரே…” என்றாள். அர்ஜுனன் “சொல், தேவி” என்றான். “மாற்றுரு கொள்வது அத்தனை கடினமானதா?” என்றாள் திரௌபதி. அர்ஜுனன் “நீ மாற்றுரு கொண்டதே இல்லையா?” என்றான். இருளுக்குள் திரௌபதி சற்று நேரம் அமைதியாக இருந்தாள். பின்பு “உடலுக்குள் நாம் கொள்ளும் உருவங்களனைத்தும் நம் புறத்தோற்றத்தால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. புறத்தோற்றம் மாறுபடும்போது நம்முள் என்ன நிகழுமென்று அறியும்பொருட்டே கேட்டேன்” என்றாள்.

அர்ஜுனன் “நாம் புறத்தோற்றத்தை மாற்றிக்கொள்கையில் அதுவல்ல நாம் என்று உள்ளிருப்பது முரண்டுகிறது. நான் பிறிது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஆனால் நம்மை சூழ்ந்திருப்பவை அனைத்தும் நம் தோற்றமே நாமென நம்மிடம் மீளமீள கூறுகின்றன. நமது இருப்பும் இடமும் அவ்வாறு வரையறுக்கப்படுகின்றன. என்ன நிகழ்கிறதென்று நாம் அறியாதிருக்கையிலேயே நம்முள் இருப்பது மாறிவிடுகிறது. பிறகெப்போதோ ஒருமுறை அது நினைவுகளில் இருந்து தன் முந்தைய வடிவை கண்டெடுத்து அதை கனவென அணிந்து திரும்பிப்பார்க்கையில் துணுக்குறுகிறது, எப்படி மாறினோம் என்று” என்றான்.

“அக்கணத்திலெழுவது ஒரு பெரும் அச்சம் மட்டுமே. நாம் இனிமேல் மீள முடியாதோ என்று. உண்மையில் அக்கணமே நாம் கொண்டிருக்கும் தோற்றத்தை உரித்து வீசிவிடவேண்டுமென்று வெறியெழும். அதை கடப்பது எளிதல்ல” என்றான் அர்ஜுனன். திரௌபதி “நாம் நமது தோற்றமல்ல, பிறிதொருவர் என்பதை வெளிக்காட்டிக்கொண்டே இருக்கும் உந்துதல் ஏற்படுமா?” என்றாள். “ஆம், அது தொடக்க நாட்களில்தான். நீங்கள் பார்ப்பதல்ல நான் என்று நாம் சொல்லிக்கொண்டே இருப்போம். ஆனால் அது எவ்வகையிலும் நமது மாற்றுருவை கலைப்பதில்லை” என்றான் அர்ஜுனன்.

“ஏன்?” என்றாள் திரௌபதி. “நாம் கொண்ட மாற்றுரு ஓர் ஆளுமையாக பிறரால் அறிந்து வரையறுக்கப்படும் தொடக்கப்பொழுது அது. அந்த மீறல் குரலும் நமது ஆளுமையின் ஒரு பகுதியென்றே எண்ணப்படும்.” மெல்ல சிரித்தபின் “நீ சூடப்போகும் பெயரென்ன?” என்றான் அர்ஜுனன். திரௌபதி “சைரந்திரி என்ற பெயர் எனக்குத் தோன்றியது” என்றாள். வியப்புடன் “எப்போது?” என்றான் அர்ஜுனன். “சற்று முன் விதர்ப்பத்தின் எல்லையில் நுழையும்போது நான் என் மாற்றுருவை நோக்கி ஒவ்வொரு அடியாக வைத்து நெருங்கிக்கொண்டிருக்கிறேன் என்று தோன்றியது. பெயரில்லாமல் அந்த மாற்றுருவை என்னால் கற்பனை செய்யமுடியவில்லை. என்ன பெயரிடலாம் என்று உள்ளத்தில் துழாவியபோது இப்பெயர் அகப்பட்டது.”

அர்ஜுனன் “இது எவருடைய பெயர்?” என்றான். “இதுவா? இளமையில் எனக்கொரு தோழி இருந்தாள். அவள் பெயர் அது” என்றாள். “அவள் இப்போது என்ன செய்கிறாள்?” என்று அர்ஜுனன் கேட்டான். “இப்போது அங்கு நிஷத நாட்டில் எனக்காக காத்திருக்கிறாள்” என்றாள் திரௌபதி. அவன் புரிந்துகொண்டு சிரித்தான். “என்னுடன் இருந்த மரப்பாவைக்கு நான் அந்தப் பெயரை இட்டேன். அது நான் கேட்ட ஏதோ ஒரு கதையில் இருந்த வனதேவதையின் பெயர். இளங்குழந்தையாகவே அவளை நான் கற்பனை செய்திருந்தேன். இன்று என்னுடன் அவளும் வளர்ந்திருக்கிறாள்” என்றாள். “என்ன கதை அது?” என்றான் அர்ஜுனன்.

“இன்று அக்கதை தெளிவாக நினைவில்லை. நான் அதை இப்போது தோன்றுவதுபோல் புனைந்து சொல்லமுடியும்” என்றாள் திரௌபதி. “அரசுரிமைப் பூசலால் காசி நாட்டின் இளவரசியை ஒற்றர்கள் தூக்கிக்கொண்டு சென்று விட்டார்கள். அவளுக்கு இரண்டு வயது. அவள் பெயர்தான் சைரந்திரி. நஞ்சூட்டப்பட்டு துயின்றுகொண்டிருந்த அவளை கொல்லும்பொருட்டு காட்டு வழியாக கொண்டுசென்று கொண்டிருக்கையில் அவர்களில் இருவரை நச்சுப்பாம்புகள் கடித்துவிடுகின்றன. குழந்தையை நிலத்திலிட்டுவிட்டு அவர்கள் இறந்துவிடுகிறார்கள்.” அர்ஜுனன் பேசாமலிருக்க “கேட்கிறீர்களா?” என்றாள். “ஆம்” என்றான்.

“மறுநாள் குழந்தை விழித்தெழுந்து நோக்கியபோது படமெடுத்த பாம்புகள் சூழ்ந்த அடர்காட்டுக்குள் தன்னை உணர்ந்தது. பசித்து அழுதபடி எழுந்து சென்றபோது பசுங்கிளைகளுக்குமேல் ஒரு பச்சைநிறமான இலைதாவிப் புள்ளாக சென்றுகொண்டிருந்த கானகத்தெய்வம் ஒன்று அவளை பார்த்தது. அவள் அழுகையைக் கண்டு அது தன்னை அவளுடைய மாற்றுரு வடிவமாக ஆக்கிக்கொண்டு கீழிறங்கி அவளை நோக்கி வந்தது. தன்னைப்போன்ற இளந்தோழியைக் கண்டதும் இளவரசி முகம் மலர்ந்ததாள். இருவரும் தழுவிக்கொண்டார்கள். கைகோத்தபடி காட்டுக்குள் சென்றனர். இளவரசியை மரங்களில் தாவவும் உச்சி மரங்களில் சென்று கனிகளைப் பறித்து உண்ணவும் நிலவு பொழியும் இரவுகளில் மரக்கிளைகளில் அமர்ந்து வான் நோக்கி பாடவும் அந்தத் தோழி கற்பித்தாள். இளவரசி அங்கே அழகிய கன்னியாக வளர்ந்தாள்.”

“இளவரசி இறக்கவில்லை என்பதை நிமித்திகர்களின் குறிப்புகளிலிருந்து அறிந்த அரசர் ஒற்றர்களை அனுப்பி காடுகளெங்கும் தேடினார். அங்கு இறந்துகிடந்த இரண்டு எலும்புக்கூடுகளில் இளவரசி அணிந்திருந்த நகைகள் இருப்பதை ஒற்றர்கள் கண்டனர். அந்தக் காட்டில் தேடியபோது இளங்கன்னியாக மரக்கிளைகளில் பச்சைக்கிளிபோல பறந்தலைந்த இளவரசியை கண்டனர். அவள் தோற்றத்திலிருந்தே காசி நாட்டில் மறைந்த குழவிதான் அவள் என்று கண்டடைந்தனர். அவர்களைக் கண்டு அவளும் ஆவலுடன் கீழே வந்தாள். அவளை தங்களுடன் அரண்மனைக்கு வரும்படி அழைத்தனர். காட்டுக்குள் இருப்பது தனக்கு உவப்பானதென்றும் அவர்கள் கூறும் அந்நகரத்தை நினைவுகூர இயலவில்லை என்றும் அவள் சொன்னாள். அவர்கள் மன்றாடியும் அவள் அவர்களுடன் செல்லவில்லை. அவளை பிடித்துச்செல்ல அவர்கள் முயன்றபோது உச்சி மரக்கிளை நோக்கி பாய்ந்து இலைத்தழைப்புக்குள் மறைந்துவிட்டாள்.”

“அவர்கள் திரும்பிச்சென்று அரசரிடம் செய்தியை கூறினர். அரசர் தன் துணைவியுடன் காட்டுக்கு வந்து மரக்கிளைகளை நோக்கிக் கூவி அவளை அழைத்தார். அவள் அன்னை இளம்வயதில் அவளை அழைக்கும் பெயரை சொல்லி கண்ணீருடன் விளித்தாள். அப்பெயரைக் கேட்டு நினைவுகொண்டு மரக்கிளைகளிலிருந்து கிளிபோல பறந்து இறங்கிய இளவரசி அன்னையை உடனே அடையாளம் கண்டுகொண்டாள். கைகளை நீட்டியபடி ஓடிவந்து அன்னையை தழுவிக்கொண்டாள். தந்தை அவள் தோள்களைப் பற்றியபடி விம்மி அழுதார். எங்களுடன் வந்துவிடு மகளே, நீயில்லாமல் நாங்கள் வாழமுடியவில்லை என்று அன்னை அழைத்தாள். அன்னையைப் பிரிய உளமில்லாமல் இளவரசி அதற்கு ஒப்புக்கொண்டாள்.”

“அவர்கள் இளவரசியை நகருக்கு அழைத்துச் சென்றார்கள். குடிபடைகள் கூடி உவகைப்பேரொலி எழுப்பி வாழ்த்த இளவரசி நகர் புகுந்தாள். அவையில் பொன்னும் மணியும் இழைத்த அரியணையில் அமர்ந்து குலமுறைமைகளை ஏற்றுக்கொள்கையில் அவள் ஒளிமிகுந்த காட்டையும் பசுமை அலையடிக்கும் மர உச்சிகளையும் தன்னுள் கண்டுகொண்டிருந்தாள். அவளுக்கு அந்த அவையும் நன்கு தெரிந்ததாக இருந்தது. அப்பால் காடு மேலும் அணுக்கமாக தோன்றியது.”

“அன்றிரவு அவள் தன் பட்டுமஞ்சத்தில் துயில் இல்லாமல் புரண்டுகொண்டிருந்தாள். சாளரம் வழியாக வெளியேறி மீண்டும் காட்டுக்குள் சென்றுவிட்டாலென்ன என்று எண்ணினாள். ஆனால் அன்னையும் தந்தையும் தன்னை காணாமல் துயருறுவார்கள் என்ற எண்ணம் அவளை தடுத்தது. நூறு முறை உளத்தால் கிளம்பியும் அவளால் உடலை எழுப்ப முடியவில்லை. சாளர விளிம்பில் அமர்ந்து அப்பால் தெரிந்த விண்மீன்களையும் மரக்கூட்டங்களின் நிழலசைவுகளையும் கண்டு கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருக்கையில் இருளுக்குள் ஒரு சிறகடிப்பை கேட்டாள். ஒரு பச்சைக்கிளி அவள் முன் வந்து அமர்ந்தது.”

“அது யாரென்று அவள் உடனே உணர்ந்துகொண்டாள். அதை கையிலெடுத்து ‘என்னைத் தேடி வந்தாயா?’ என்றாள் சைரந்திரி. ‘ஆம், நான் உன்னைப் பிரிந்து அக்காட்டில் இருக்க இயலாது’ என்றாள் காட்டணங்கு. ‘நீ உன் அன்னையை நோக்கி கைநீட்டியபடி கண்ணீருடன் சென்றதை பார்த்தேன். உன் பின்னால் நானும் அதைப்போல கைவிரித்து ஓடிவந்தேன். நீ அதை பார்க்கவில்லை’ என்றாள். ‘என்னால் இங்கு இருக்க இயலாது. நானும் வருகிறேன். நாம் மீண்டும் காட்டுக்கு சென்றுவிடுவோம்’ என்றாள் சைரந்திரி. ‘இல்லை அக்காட்டில் நீ இனி வாழமுடியாது’ என்றாள் காட்டணங்கு.”

“சைரந்திரி ‘அக்காடின்றி என்னால் இங்கும் வாழ முடியாது’ என்றாள். ‘அந்தக் காட்டை நான் உனக்காக கொண்டு வந்திருக்கிறேன். என்னுடன் வா’ என்று இளவரசியை காட்டணங்கு அழைத்தாள். இளவரசி அவளைத் தொட்டதும் தானும் ஒரு பச்சைக்கிளியாக மாறினாள். இருவரும் பறந்து அரண்மனை சோலைக்குள் நுழைந்தனர். நிலவு பெருகி இலை நுனிகளில் ததும்பிய மரக்கூட்டங்களுக்கு நடுவே இரு கிளிகளும் விடியும் வரை பறந்தலைந்தன. புலர்வதற்கு முன் மீண்டும் மஞ்சத்தறைக்கு இருவரும் திரும்பி வந்தனர். ‘என்னை உன் வளர்ப்புக்கிளியாக ஒரு கூண்டுக்குள் வைத்துக்கொள். எவருமறியாத இரவுகளில் என்னை மீட்டெடு’ என்று காட்டணங்கு சொன்னாள். சைரந்திரி அந்தப் பச்சைக்கிளியை ஒரு புற்கூண்டில் அடைத்து தன் மஞ்சத்தறைக்குள்ளேயே வைத்துக்கொண்டாள்.”

“எப்போதும் அன்று மலர்ந்த இளம்பசுந்தளிர்போல அக்கிளி அவளுடன் இருந்தது. வேண்டும்போது அதை தொட்டு உயிர்ப்பிக்க அவளால் இயன்றது” என்று திரௌபதி சொன்னாள். அர்ஜுனன் நெடுநேரம் ஒன்றும் சொல்லவில்லை. பின்னர் “உருமாற்றம் உனக்கு அத்தனை கடினமாக இருக்காதென்று எண்ணுகிறேன்” என்றான்.

முந்தைய கட்டுரைசபரிநாதன் நேர்காணல்
அடுத்த கட்டுரைவெற்றி -கடிதங்கள் 8