வெற்றி கதைகுறித்து பல கடிதங்கள், கேள்விகள் வந்தன. அனைத்துக்கும் விரிவான பதிலை எழுதமுடியவில்லை. மொத்தமகா இங்கே சொல்லிவிடுகிறேன்
கதைக்கு வெளியே நின்றுகொண்டு ஆசிரியன் அக்கதையைப்பற்றி பேசுவது ஒரு பிழை. அது ஒரு குறிப்பிட்ட வகையான வாசிப்பை நோக்கி வாசகனை தள்ளுவதாகும். ஆனால் தமிழில் புதுமைப்பித்தனிலிருந்து அனைவருமே அதைச் செய்யும் ஒரு கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். ஏனெனில் இங்கு முதிர்ச்சியான ஒரு வாசிப்புச் சூழல் குறைவு. இருவகையான வாசிப்புகள் இங்குள்ளன. ஒன்று பெருவாரியான மக்களின் வாசிப்பு. அவர்கள் கதையை வாசிக்கிறார்கள். சொல்லப்பட்டதென்ன என்று தெரிந்துகொள்கிறார்கள். இன்னொன்று மிகச் சிறுபான்மையினரான சிற்றிதழ் சார்ந்த வாசகர்களின் வாசிப்பு.
அவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் மிக இளமையிலேயே அவர்கள் வாசித்த ஒரு வாசிப்பு முறைக்கு பழகியவர்கள். அன்று கற்றவற்றை வாழ்நாளின் இறுதி வரைக்க்கும் கொண்டு சென்றுகொண்டிருப்பவர்கள். அவர்களுடைய வாசிப்பு அவர்களுடைய கற்பனையை மிகக்குறுக்குவதாக காலப்போக்கில் மாறிவிடுகிறது. ஒருகதைக்குள் சென்று வாழ அவர்களால் இயல்வதில்லை. அந்தக் கதையை ஒரு விளையாட்டுப்பொருள் போல ஒரு மின்னணுக்கருவி போல பிரித்துப்போட்டு ஆராயவே அவர்கள் முயல்கிறார்கள்.
முதல் வகையினருக்கு கதைக்குள் செல்வதற்கான அடிப்படைப் பயிற்சி இருப்பதில்லை என்றால் இரண்டாவது வகையினருக்கு வாசித்து அடைந்த ஆணவம் தடை நிற்கிறது. ஒரு கதை முன் களங்கமற்ற வாசகனாக தன்னை நிறுத்த முடியவில்லை. ஆகவே தன்னுடைய நிலைபாடு தன்னுடைய அடையாளம் ஆகியவற்றை சார்ந்தே இவர்கள் வாசிக்கிறார்கள்.
இவற்றுக்கும் அப்பால் தான் மிகக்குறைவான தீவிர வாசகர்கள் இருக்கிறார்கள். எல்லா நல்ல கதைகளும் அவர்களை நோக்கியே எழுதப்படுகின்றன. அவர்களின் கருத்துக்களை மட்டுமே இன்றைய சூழலில் ஒரு எழுத்தாளன் கருத்தில் கொள்ள வேண்டும். மற்றவை அவர்களின் தனிப்பட்ட தேடலையோ தேடலின்மையையோ காட்டுகின்றன. ஜெயகாந்தனிலிருந்து சுந்தர ராமசாமி வரை இக்கருத்தை பலர் சொல்லியிருக்கிறார்கள். மீண்டும் அதை சொல்ல வேண்டியிருக்கிறது.
ஆனால் இன்று இணையம் மூலம் இலக்கிய அறிமுகமில்லாத வாசகர்களுக்கு படைப்புகள் சென்று சேரும் சூழலில் நாம் இலக்கிய வாசிப்பு குறித்து சில விஷயங்களை பதிவு செய்யலாம். தற்செயலாக கதைகளுக்குள் வரும் பெருவாரியான வாசகர்களில் ஒரு சிலருக்கு வாசிப்புப் படிநிலைகளைப்பற்றிய ஒர் அறிமுகத்தை அது அளிக்கலாம். இவ்வாறெல்லாம் வாசிக்கலாம் போலும் என்று உணர்வதே மேற்கொண்டு அவ்வாறு வாசிப்பதற்கான ஒரு வழிகாட்டலாக அமையலாம்.
கதை தன் முடிவை இப்படி நேரடியாக முன்வைத்திருக்கலாமா? அதை பூடகமாக உணர்த்துவதல்லவா இலக்கியத்தின் வழி என்பது ஒரு வினா.
என்று ஒரு படைப்பில் எதை பூடகமாக வைக்க வேண்டுமென்பது ஆசிரியனின் தெரிவு. இதுதான் அதன் மையம் என்று எண்ணும் ஒன்றைத்தான் ஆசிரியர் சொல்லிவிட்டார் என்று எண்ணி அது பூடகமாக இருந்திருக்கலாமே என்று கேட்கப்படுகிறது.. வெற்றி கதையின் மையம் அதன் இறுதி முடிச்சு அல்ல அதை மையமாக்கி வாசிக்கும் வாசகர் அதனுடன் நின்றுவிடுகிறார். அந்த முடிச்சு மையத்தை நோக்கி வாசகனை சுண்டி தெறிக்கவிடுவதற்கான ஒரு உத்தி மட்டுமே
இத்தகைய ‘இறுதிமுடிச்சு’ கதைகளை தமிழில் அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். இதற்கு வடிவ ரீதியாக ஒற்றுமை கூற வேண்டுமென்றால் இன்னும் சில நாட்கள் அந்தக் கதையின் முடிவை மிக தெளிவாக அவர் இறுதியில் சொல்கிறார். அந்த முடிவில் ஒரு வாசகன் ஆ என்று நின்றுவிட்டானென்றால் அவன் கதையை இழந்துவிடுகிறான். அங்கிருந்து கதைக்குள் சென்று பிறிதொரு கதையை அடைந்து அதன் மையத்தை நோக்கிச் செல்பவன் மட்டுமே இலக்கிய வாசகன் அவனுக்காகவே அந்தக் கதை எழுதப்பட்டுள்ளது.
ரங்கப்பர் லதாவை அடைந்தாரா இல்லையா என்பதல்ல கதை அந்தக் கதை அதற்குள் மூன்று வெவ்வேறு மனிதர்களை முன்னிலைப்படுத்துகிறது. அவர்களுடைய அடிப்படையான பலவீனங்களை சொல்கிறது. ஒரு நல்ல வாசகனுக்கு இதைவிட அதிகமான குறிப்புகளை கொடுக்க வேண்டியதில்லை. மேலும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் அந்த மனைவி ஏன் தன் கணவனிடம் அத்தனை காலத்திற்கு பிறகு அந்த ரகசியத்தை சொல்லிவிட்டு செல்கிறாள். அதற்கான தேவை என்ன இக்கேள்வியுடன் கதைகளுக்குச் சென்றால் மிகவிரிவாக அதற்கான விடை பேசப்பட்டிருப்பதைக் காணலாம்.
கதை ரங்கப்பர்- லதா குறித்தது. அது பேசப்படவில்லை. அதைப்பற்றிய நமச்சிவாயத்தின் உளநாடகம் மட்டுமே கதைக்குள் உள்ளது. கதையில் அவரது உள்ளம் அத்தனை சொல்லப்பட்டிருப்பதற்குக் காரணம் அதுதான் உண்மையில் பிறவற்றுக்கான சாவி என்பதுதான்.
அதுவன்றி அந்த முடிவுதான் கதை என்று எண்ணிக்கொள்பவர்களுக்கு அந்த உள நாடகங்கள் அனைத்துமே தேவையற்றவை என்று தோன்றும். இக்கதையில் எந்த இலக்கியப்படைப்பையும் போல எது வாசகன் ஊகிக்க வேண்டுமோ அவனே விரித்தெடுக்க வேண்டுமோ அது முற்றிலும் சொல்லப்படவில்லை. அது சொல்லப்படாததனால் தான் பிற அனைத்தும் அவ்வளவு விரிவாக சொல்லப்படுகிறது.
*
இக்கதை பெண்ணை வரையறுக்க முயல்கிறதா?
இக்கதை பெண்களை பணத்தால் வென்றுவிட முடியுமென்று சொல்ல வரவில்லை என்றே நான் நினைக்கிறேன். பொதுவாக நம் வாசிப்புமுறையில் உள்ள பிழை கதைக்குள் எந்தக்கருத்து பேசப்பட்டாலும் அதை ஆசிரியன் கூற்றாக, கருத்துவெளிப்பாடாக எடுத்துக்கொள்வது. கதைக்குள் அது அந்தக்கதாபாத்திரத்தின் தரப்பு. அக்கதாபாத்திரத்தின் உளவியல் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது.
கதைக்குள் வரும் கருத்துக்கள் பெரும்பாலும் உணர்ச்சிகளின் ஒருவகை வெளிப்பாடுகளே என எடுத்துக்கொள்வதுதான் சரியான வாசிப்பாக இருக்கமுடியும். எந்த உணர்வுநிலையை அக்கதாபாத்திரம் கருத்தாக முன்வைக்கிறது, அதை முன்வைப்பதன் வழியாக அது கொள்ளும் பாவனைகள் என்ன, எதை ஒளித்து எதை முன்வைக்கிறது என்பதெல்லாம்தான் கவனிக்கவேண்டியவை.
உதாரணமாக ரங்கப்பர் பெண்களைப்பற்றி ஒரு கருத்தைச் சொல்கிறார். அவர் சொல்வது தன் கருத்தை அல்ல, கருத்தாக மாற்றிக்கொண்ட கசப்பை என அவரே கடைசியில் சொல்கிறார்.
வெற்றி கதை மனிதர்கள் உடையும் எல்லையொன்று உண்டா, முடிவிலாது தாக்குப்பிடிக்கும் மனிதர்கள் உண்டா என்றே தேடுகிறது. பெண் நல்லவளா கெட்டவளா என்பதல்ல. பெண்ணை பணத்தால் வளைக்க முடியுமா என்பதல்ல. அந்தக் கேள்விக்கு இந்தக் கதை உருவாக்கும் உளநாடகங்கள், இத்தனை உளவியல் மாற்றங்கள் தேவையில்லை.
*
இந்தக் கதை மிக நீளமாக மானுட உணர்வுகளைப்பேசுகிறது. சுருக்கமாக சொல்லியிருக்கலாமல்லவா? சொல்லியிருக்க முடியும். அப்படி சொல்லியிருந்தால் சம்மந்தப்பட்ட உணர்வுகள் அனைத்தும் உறைந்த நிலையில் இருக்கும். உணர்வுகளின் தொடர் மாற்றங்களை , ஒருவன் தனக்குத்தானே போட்டுக்கொள்ளும் உளப்பாவனைகளைச் சொல்வதற்குத்தான் இந்த விரிவான தொடர் சித்திரம் தேவையாகிறது. மாறாக அனைத்து கதாபாத்திரங்களும் தத்தம் இயல்புகளுடன்ஒரு புகைப்படத்திலென மாறாமல் இருந்திருந்தால் அதிகபட்சம் ஐந்து அல்லது ஆறுபக்கங்களுக்குள் சொல்லப்படக்கூடிய கதைதான் இது.
இக்கதையில் ஒரு வாசகன் வாசித்தெடுக்கக்கூடிய முக்கியமானது ஆரம்பத்திலிருந்து கடைசி வரை தொடர்ச்சியாக உணர்வுகள் எப்படி மாறிவந்திருக்கின்றன என்பதும் அந்த மாற்றத்தை நெடுங்காலத்திற்குப்பின் அவர் எவ்வாறு தொகுத்துக் கொள்கிறார் என்பதும் தான் கதையின் நீளம் அதன்பொருட்டே.
ஒரு பெரிய சமரசப்புள்ளி நோக்கிச் செல்பவன் நேரடியாக அதை அணுகமாட்டான். அதைச்சுற்றிச்சுற்றி வருவான். உரிய சுயசமாதானங்களை செய்துகொண்டு சுழல்பாதையில் அதைச் சென்றடைவான். நமச்சிவாயத்தின் பயணம் அக்கதையில் உள்ளது.
*
இந்தக்கதையின் காலம், அதன் நிகழ்வுகளிலுள்ள பழகியதன்மை. இந்தக்கதை மிகச்சமகால நிகழ்வு ஒன்றிலிருந்து என்னுள் எழுந்தது. ஆனால் அதை வேண்டுமென்றே காலத்தில் பின்னால் கொண்டுசென்றேன். ஏனென்றால் கிளப்களில் பிரபுக்கள் பந்தயம் வைத்து விளையாடும் பல கதைகள் உலக இலக்கியத்தில் உள்ளன. உலகைசுற்றி நூறுநாட்களில் ஃப்லியாஸ் ஃபோக் பந்தயம் வைப்பது முதல் செக்காவின் ‘பந்தயம்’ வரை நூறுகதைகளை பட்டியலிட முடியும். அந்தக்கதைகளின் நினைவு எழவேண்டுமென விரும்பினேன்
அதை உண்மையில் திட்டமிடவில்லை. 2016ல் திரையுலகு சார்ந்து கேள்விப்பட்ட ஒரு நிகழ்வை என் மனம் எழுபதாண்டுகளுக்கு முன்பு இருந்த வாழ்க்கையுடன், அன்று எழுதப்பட்ட புனைவுகளின் உலகுடன் இயல்பாக சம்பந்தப்படுத்திக்கொண்டது. ஏனென்றால் இது எப்போதும் நிகழலாம். ஆனால் இதன் மையப்படிமங்கள் அந்த காலகட்டத்தில் உருவானவை.அங்கிருக்கையில் வேறுபல நினைவுகளுடன் இணைந்து மேலும் வலிமை கொள்பவை.
அதோடு அசாதாரணமான சூழலில் அசாதாரணமான வியூகங்களோடு அந்த ‘பெண்வேட்டை’ நிகழக்கூடாதென்றும் எண்ணினேன். வழக்கமான சூழலில் வழக்கமாக என்ன நிகழுமோ அது நிகழவேண்டும். லதா வழக்கமான பெண்ணாக இருக்கவேண்டும். இச்சூழலில் நம் ஆளுமைகளின் பெறுமதி என்ன என்பதே என் கேள்வி.
*
கதையில் ஒரு ஆடல் உள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்குமானது. ஒரு பெண். இரு ஆண்கள். பெண்ணுக்குள் நான் செல்லவில்லை. ஆண்கள் அவளை இருவகையில் அணுகி தங்கள் போக்கில் புரிந்துகொள்கிறார்கள். அந்த ஆடலை வாசித்தவர்கள் கதைக்குள் வந்துவிட்டார்கள்.
தன்னளவில் இது ஒவ்வாமையை உருவாக்கும் கதைதான். ஏனென்றால் இது சங்கடமான கண்டடைதல்களைச் சென்றடைவது. ஆனால் நல்ல வாசகன் அதை ஓர் சுய அறிதலாக அடைவான் என நினைக்கிறேன்.
ஜெ