நான் இயல்பிலேயே கவிதை வாசகன் அல்லன். கவிதை பிடிக்கும், ரசிப்பேன். ஆயினும் தேடிச் சென்று வாசிப்பது கிடையாது. என் பிரியத்துக்கு உகந்த வடிவங்கள் சிறுகதையும், நாவலும் தான். இருப்பினும் ஒரு இளைப்பாறுதலுக்காக கவிதையை வந்தடைவது மீண்டும் மீண்டும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அவற்றிலும் ஒரு தேர்வு உள்ளது. பெரும்பாலும் சங்கக் கவிதைகள். குறிப்பாக குறுந்தொகை. அதை விட்டால் இருக்கவே இருக்கிறான் கம்பன். மின்னல் ஒளியில் தென்றல் கடந்து சென்ற ஒரு பெரும் புல்வெளியைக் கண்டால் வரும் அக எழுச்சிக்காகவே அக்கவிதைகளை சென்றடைகிறேன். இந்த ரசனையின் மறு எல்லையில் கவிதை என்பதை ஒரு ஆடியாக, சொல்லாக ஆகாத தருணங்களுக்கு அருகில் வரும் சொற்களைத் தந்து அத்தருணங்களைக் கடக்க உதவும் நாவாயாக கவிதைகளை அடைந்திருக்கிறேன். அவ்வகையில் பெரும்பாலான நவீன கவிதைகளை ஒருவித மௌனத்துடனே தான் கடந்து வந்துள்ளேன். அவற்றின் படிமங்கள், குறிப்பாக மூளையின் மடிப்புகளில் விழுந்து எழுந்து உருவாக்கப்பட்டவையாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வாமையே ஏற்படுத்தி இருக்கின்றன. அரூபமான ஒன்றைச் சுட்டி, என்னுள்ளில் இருந்து பிறிதோர் அரூபத்தை அடைபவையே என்னளவில் கவிதை என்பதன் இலக்கணம்.
குறுந்தொகை முதலான அகத்திணைக் கவிதைகளில் மிக விரிவான, நுணக்கமான நிலக்காட்ச்சிகள் வரும். அவை உண்மையில் புறக் காட்சிகள் அன்று. அவை ‘அக நிலக் காட்ச்சிகளாக’ப் பார்க்கப்பட வேண்டியவை. அந்த நிலக்காட்சிக்கும், கவிதைக்கும் இருக்கும் உறவைக் கண்டடைவதே அந்த வாசிப்பின் ஆனந்தம். அத்தகைய அகநிலக் காட்சிக் கோர்வைகளால் ஆனவை என சபரிநாதனின் கவிதைகளைக் கூறலாம். சபரிநாதன் சற்றும் தயங்காமல் மிக விரிவான, நுணுக்கமான காட்சி விவரிப்புகளை, சில சமயங்களில் காட்சி விவரிப்புகளை மட்டுமே கொண்ட கவிதைகளை படைத்திருக்கிறார். அதுவும் நாம் தினமும் கண்டு, கடந்த காட்சிகள். அவற்றைக் கூறுகையிலேயே புன்னகைக்க வைக்கும், சில சமயங்களில் வாய் விட்டு சிரிக்க வைக்கும் கோர்வைகள். உதாரணமாக ‘திருவான்மியூர் மேகங்கள்’ என்ற கவிதை. சற்றே நீளமான கவிதை. (இவர் இதை விடவும் நீஈஈஈளமான கவிதைகளை எழுதியிருக்கிறார்)
திருவான்மியூர் மேகங்கள்
இவ்வாண்டின் உறுதிமொழிகளை உடைக்க நான்கு நாட்கள் போதுமானதாக இருந்தது
ஒரு கிரகம் இத்தனை வேகமாக சுற்றினால் என்ன செய்ய?
அண்டை வீட்டாருக்கு இதைப் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது
அவ்வளவு பிரியமாக அவர்கள் கார்களைக் கழுவுகிறார்கள்
ஒருவர் இங்கே கழுத்துப்பட்டைகளை உயர்த்திவிட்டு பீட்டர்ஸ்பர்க்கில் நடந்து செல்லலாம்
யாரும் கேட்க முடியாது ‘வெட்கமாயில்லை உனக்கு?’ என்று
ஏனெனில் இந்த வருடம் திருவான்மியூரில் யாரது உறுதிமொழியும் நிறைவேறவில்லை.
சறுக்குக்கட்டைகளோடு கிளம்பிச் செல்லும் சிறுவர்கள்.
கலியுகம் என்றால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடம் தான் கண்ணில் வரும் அவர்களுக்கு
எனக்கு வேண்டாத யாரோ ஒருவர் என் பாதை அனைத்திலும் மஞ்சள் நிற விரைவீக்க
சுவரொட்டிகளை ஒட்டி வைத்துள்ளார்
ஆனால் எல்லா சறுக்குக்கட்டைகளும் இங்கு தான் வந்தாக வேண்டும்
அதாவது காலணி கழற்றி வைக்கும் இடத்திற்கு,வாசலில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பாள்
பார்த்தால் தெரியாது எனினும் அவளுக்கு மருந்தீஸ்வரரிடம் நம்பிக்கை கிடையாது.
இறகுப்பந்தை குனிந்தெடுக்கும் இயற்கை மார்பகங்கள் இடையே சிலுவை ஜொலிக்கும்
இங்கு கண்ட கண்ட இடங்களில் இருந்தெல்லாம் சூரியன் உதிக்கும்.
மதிய வெயிலில் உண்மையான காதலர்களை வேடிக்கை பார்ப்பது போல் அலுப்பூட்டுவது
ஒன்றே ஒன்று தான்-தயிர் பச்சடி தொட்டு சைவ பிரியாணி சாப்பிடுவது.
அதற்கு நீங்கள் கடற்கரைகளை மூடிவிடலாம்
மூப்பினால் குழிநண்டு பொறுக்குபவர்களை பட்டினி கிடக்க சொல்லலாம்.
மீண்டும் மீண்டும் மூத்த பெண்களை மையலிப்பதற்கும் இந்த வானிலைக்கும்
ஏதோ தொடர்புள்ளது.அது உங்களை அதிகப்பிரசங்கியாக மாற்றும்:
மனிதன் கீரைத்தோசையாலும் கலக்கியாலும் மட்டும் உயிர் வாழ்வதில்லை
அவனுக்கு சோகப்பாடல்கள் வேண்டும் புதிய புதிய நகைச்சுவைத் துணுக்குகள் வேண்டும்
நான் மனிதன் என்பது உறுதியானால் எனக்கு சில்லி பீஃப் வேண்டும்
கலாக்ஷேத்திராவில் தப்பாக கைத்தாளம் போடுபவர் கூறினார்;எதிரே சோடா விற்பவரும்
வழிமொழிந்தார்.இவ்வூரின் மேகங்கள் எதுவும் இவ்வூரைச் சேர்ந்ததில்லையாம்.
இருவரும் நம்பவில்லை யாரும் நம்பப் போவதுமில்லை
இம்மீபொருண்மை பதார்த்தங்களிடையே நானொரு பறக்கும் தட்டைக் கண்டேன் என்பதை.
எனதருமை ரகசியங்களே
நான் உமை காப்பது போல்
நீவீர் எனை காப்பீராக.
காட்சிகள் மேலானதொரு அர்த்தத்தைத் தாங்கி நிற்கும் வகைக் கவிதைகளும் உள்ளன. வெறும் ஒரு காட்சி, சட்டென்று மனதை எளிதாக்கி புன்னகைக்க வைக்கும் திறத்த்தால் கவிதை என்று ஆகிய மாயக்கணங்களும் உள்ளன.
அதிகாலையில் ஒரு ரவுண்டானா
கிழக்கு கடற்கரை சாலை வடகிழக்காகக் கிளை பிரியும்
ரவுண்டானாவில் சிக்னல் செயல்படவில்லை தொப்பிவாசி யாருமில்லை.
எதையோ அசைவெட்டியபடி சந்தியில் நிற்பது ஓர் எருமை மாடு.
காதுகளால் துடுப்பிடும் பழக்கத்தைக் கைவிடமுடியாதது
திடிரெனத் தும்முகிறது திடீர் திடீரென கோளை வடியக் கத்துகிறது.
அவ்வப்போது வாலாட்டி வெட்கமில்லாமல் சாணி போடுகிறது
மெதுநகர்வில் கொம்பசைத்து இங்கிட்டும் அங்கிட்டும் பார்க்க
இருசக்கர வாகனங்களும் இறக்குமதி செய்யப்பட்ட கார்களும்
தாவா ஏதுமின்றி தத்தமது வழியில் போகின்றன.
சில தருணம் யாவுமே அத்தனை எளிதாகிவிடுகிறது இல்லையா?
ஆயினும் இவரது கவிதைகளின் அடிநாதமாக, இலங்குவது என்னவோ மானுடம் பிறந்தநாள் முதல் கொள்ளும் ஒரு முடிவற்ற தேடல். அதன் இறுதிப் பொருளின்மையை அறிந்தும், அதை உணர்வதற்காக அலையும் தேடல். அத்தேடல் இருக்கிறது என்பதை உணர்ந்த கணம் ஒரு மின்மினிப்பூச்சியாக மிதந்தலையும் மனம்.
மின்மினியே…
யார் தொட்டு எழுப்பியது உனை
எந்தக் கரம் உனக்கு பார்வை தந்தது
எவ்வுடல் நீங்கிப் போகிறாய் எவ்வுடல் நோக்கிப் பாய்கிறாய்
கனவா நனவா கருத்த வெட்ட வெளியில்
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்
எத்தனை யுகங்கள் இருட்டில் அமர்ந்திருந்தாய் கண்ணே ஊமையாய்
பின் எத்தனை நூற்றாண்டு காய்ச்சலோடு சுருண்டு கிடந்தாய் நிலத்தடியில்
தன்னுள் இருக்கும் தேடலை அறிந்த ஒருவனே தன்னுடைய இருப்பை அறிய முடியும். இருத்தல் என்னும் தன்னுணர்வு வாய்க்கப்பெற்றவன் எந்த அளவு கொடுத்து வைத்தவனோ, அதே அளவு தீச்சொல்லும் இடப்பட்டவன். என்ன செய்வது மீட்பு எப்பொழுதுமே தீச்சொல்லுடன் தானே வருகிறது. அந்த இருத்தலின் துன்பம், அப்பொருளின்மை அளிக்கும் அச்சம், அந்த பறதி இவரது கவிதைகளில் மிக உக்கிரமாக, மிக மிக உக்கிரமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மின்மினியைப் போல மென்மையாக துவங்கும் அது
“புண்-பழுத்துவிட்டது;இருக்கட்டும்
அதை உணரும் நரம்பை மட்டும் வெட்டி விடு
கன்மம்-யாரும் தரவேண்டாம் நானே எடுத்துக்கொள்கிறேன்
யாவற்றையும் பதிவு செய்துவரும் இவ்வுறுப்பை மட்டும் அணைத்து விடு
இரையைச் சூழ்ந்திறுக்கும் குடற்சுவராகக்
கண்டதையெல்லாம் பற்றிக்கொள்ளும் இந்த உள்ளங்கையில் குழி பறி
இது கிடக்கட்டும்
என்னிடம் மட்டும் பேசும் இந்த நாக்கை அறுத்தெறி
இவை இருக்கட்டும்
என்னை மட்டும் காணும் இந்தக் கண்களை நுங்கெடு
அவை ஓடட்டும்
நின்று கவனித்திருக்கும் இக்கால்களைத் தறித்துப் போடு
இவனை விட்டு விடு
இவனைச் சதா துரத்திக்கொண்டிருக்கும் என்னை மட்டும் அழைத்துக் கொள்” என கவிதைக்காக ஏங்கும் ஒரு கவிஞனைப் பற்றிய ‘கவிஞனின் பிரார்த்தனை’ கவிதையில் உச்சம் கொள்கிறது. இது வெறும் ஒரு கவிஞனின் தேடல் மட்டுமல்ல. எந்த தேடல் கொண்ட உயிரும் அனுபவித்தாக வேண்டிய ஒரு துயர். ஜெ வின் ‘வெறும் முள்’ கதையின் நாயகனை உடலெங்கும் முள் கீறி, உடையவிழ்ந்து சென்று மீட்பன் முன் வீழ வைத்த அந்த உணர்வு இது. இந்த இருத்தலியல் துயர் இயல்பாகவே ஒரு கசப்பு மனநிலையில் கொண்டு ஒருவரைச் சேர்த்து விடும். அக்கசப்பு ஒரு வகை ‘கறுநகையாடலாக’ இவரது கவிதைகளில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. “மனித மூளை தொடர்பாக சில சிந்தனைகள்” என்ற நீள் கவிதையின் துவக்கம் :
“நுரையீரலுக்கோ சிறுநீரகத்துக்கோ நன்கு தெரியும் தன் பணி என்ன என்று
இருதயத்திற்கோ எதுவும் ஒரு பொருட்டில்லை
நான் உட்பட.
ஆனால் இந்த மூளை இருக்கிறதே,தருமருக்கும் கூனிக்கும் பிறந்த குத்துச்சண்டை
வீரனின் கையுறையென காட்சியளிக்கும் இது நடுசாமத்தில் திடுக்கிட்டு விழித்தெழுந்து
தனக்குத் தானே கேட்டுக்கொள்கிறது ‘நான் யார்’ என்று.
அருகில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மயிர்கள் எல்லாம் என்ன நினைக்கும்?”
இதில் மூளையின் உருவுக்கு அவர் கொடுக்கும் உவமை பாருங்கள்…!!!
உயிருள்ள பொருட்களும், இயற்கையும் என்று தான் இல்லை, உயிரற்ற பொருட்களும் கூட இத்துயரத்தில் தான் உழல்கின்றன இவரது உலகில்.
தானியங்கி நகவெட்டி
முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட தானியங்கி நகவெட்டி விரலைக் கடித்தது
சீர் செய்யப்பட்ட இரண்டாவது ரகத்திற்கு சதை என்பது என்னவெனத் தெரியும்
ஆக அது மொத்த நகத்தையும் தின்றது.படிப்படியாக நகவெட்டிகள் மேம்படுத்தப்பட்டன
சமீபத்தில் வெளியான அதிநகவெட்டி முழுமுற்றான தானியங்கிகள்
விலை அதிகம் தான் எனில் அவற்றுக்கு நகம் தவிர வேறெதன் உதவியும் தேவையிராது
என்பதால் நகம் வளர்க்க வேண்டும் நாம் எல்லோரும்
அதன் உலோகப்பற்களின் மினுமினுப்பைச் சிலாகிக்க வேண்டும்.
மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்ட இரவுகளில் அது
அலறும்:நான் ஏ..ன் பிறந்தேன்?
நகம் வெட்டத்தான் என்றால் நம்பாது.
இது தேடலின் பறதி. இப்பறதியில் இருந்து வர தவம் ஒன்றே வழி. ஆயினும் அதுவும் அலைபாயும் மானுடருக்கு கண்ணாமூச்சி காட்டி, மேலும் மேலும் பறதிக்குள் அல்லவா தள்ளுகிறது.
தவம்
பனிமூட்டத்தினுள் மலைகள்,இன்னும் தீரவில்லை நித்திரை.
தூளிக்கு வெளி நீண்ட கைக்குழந்தையின் முஷ்டியென சிச்சில முகடுகள்.
உள்நின்று வந்தருளும் வரம் ஒன்றிற்காக தவம் இயற்றும் இலையுதிர்மரங்கள்
பொடிந்து நொறுங்க விண்ணோக்கி விரிந்த விரல்கள்,மூடப்பட்ட ஆலை,அதன்
வதன வறுமை.
அசையும் வண்ணமலர்கள் அவை இருட்டினின்று வந்துள்ள இன்றைக்கான முறிகள்.
தோல் உரிய நுரையீரற் தேம்பலூடே மலையேறிகள் ஒவ்வொருவராய்
அணையாது பொத்தி எடுத்துப் போகின்றனர் தம்
சொந்த மௌனத்தை.
யாரும் கவனிக்கவில்லை,யதேச்சையாய் திரும்பிப் பார்க்கிறாய்
பள்ளத்தாக்கில் வீற்றிருக்கிறது சோதியின் பேராதனம்.
இவர் இதன் மீட்பைத் தன்னுள் தானே தேடி அடைகிறார். ஆயினும் அத்தேடலின் முழுமை ஒரு முழு அன்பில், அன்பின் உருவான பெண்ணாகவே இருக்கக் கூடுமா?
பதினொரு காதல் கவிதைகளில் ஒன்று
என் வாசலில்
மகத்தான விடியல் போல
ஒரு பெண்
அறுபடாது ஆயிரம் இரவுகள் நகர்ந்து தீர்ந்த பின் வந்துறைந்தது போல்…
அப்படி ஒரு விடியல்
அதைக் காண்பது எவராயினும் அழுதிடுவோம்.
அது போலொரு காட்சியால் மீட்படையாத ஒருவரை
யாராலும் ரட்சிக்க முடியாது
கண் திறந்து நாழிகையே ஆன புதுக்காற்றின் கோர்வைக்கு
ஒலி செய்யும் பறவைகள் முன் பின் அறியாத கீதங்களை.
சிறிதும் பெரிதுமான பொற்கூடுகளில் குஞ்சுகள் எழும் தருணம்
மரங்கள் நிற்கின்றன ’எமக்கு முன்னமே தெரியும்’ என்பதைப் போல.
இங்கு உள்ளே,
ஒளி நோக்கித் தவழும் குழந்தைகளாய் கவிதைகள்
உலுக்கி அவை சொல்லட்டும்:இன்னும் ஓர் இரண்டு அடி எடுத்து வை கண்ணே
நான் வீடு சேர்ந்திடுவேன்.
என் வாசலில்
மகத்தான விடியல் போல
ஒரு பெண்
அறுபடாது ஆயிரம் இரவுகள் நகர்ந்து தீர்ந்த பின் வந்துறைந்தது போல்…
அப்படி ஒரு விடியல்