வெற்றி கடிதங்கள் 11

images

அன்பு ஜெ,

“வெற்றி” கதையும் அதை சார்ந்த கடிதங்களும் படித்தேன். இந்த ஆண் பெண் மீது கொள்ளும் வெற்றி எனும் பார்வை பல வகைகளாக மாறி மாறி சென்று கொண்டு இருப்பதாகவும், பெண் அதை எதிர் கொள்ளுதலும், கால் ஊன்றல்களும், சுயம் கொள்ளுதலும் வளர்ந்து கொண்டு இருப்பதும் தெரிகிறது. சுமதியின் சீற்றம் இந்த பார்வையில் எடுத்து கொன்டேன்.

அந்த கால கதை பின்னணியில், வீட்டில் அடைந்து கிடைக்கும் ஒடுங்கிய ஒரு பெண்ணுக்கு ஜமீனின் திடீர் அன்போ பணமோ இழுக்க முடியாது என்று யோசித்து கொன்டேன். காச நோய் பையனோ, மகனின் படிப்புக்கோ என்று தான் கொக்கி முள் இருக்க கூடும் போல…. ஜெ, எனக்கு உண்மையில் ரங்கப்பர் தோற்று போனதாக தான் படுகிறது. ்அதை ஒத்து கொண்டு தட்டி விட்ட படி அவரின் லட்ச்சிய பெண் கண்ட ஆசையின் நிறைவேறுதல் தரும் திருப்தி, தோல்வி என்பதையும் கூட வெற்றி போல எடுத்து செல்லும் பணக்கார தானம் என்று தோன்றுகிறது. ரங்கப்பர் போன்ற ஆட்களுக்கு வெற்றியை விட்டு கொடுக்கும் பெருந்தன்மை எதிர்பார்க்க வேண்டாம் என்று தோன்றியது. ஆனால் தோல்வி வந்தால், ஏற்று கொண்டு முதல் தோல்வியை வெற்றி என்று எடுத்து செல்லும் வகை ஆட்கள் அந்த அமெரிக்க படிப்பு ஆட்கள். நாச்சிமுத்து வந்து பேசியது கூட அவளின் கணவனை பணிய வைப்பதற்கான வழி என்று எடுத்து கொன்டேன்.

இப்படி சூதில் வைக்கப்பட்டோம் என்பது தரும் வெம்மையும், மகனின் வைத்திய காரணம் கொண்டு உடல் தொடும் ரங்கப்பர் போன்ற ஆட்களின் பிம்ப வீழ்ச்சி ( மருதமலை முருகன் ஆகி ) தரும் வலியும், தான் வெறும் உடல் என்றும் பண்டம் என்றும் வரிகளாக உணரா விட்டாலும் அந்த தெரிதல் கொடுக்கும் வெறுமையும் தான் அவளுக்கு அந்த இறுகிய அமைதியை தந்து இருக்க கூடும். அப்படி இருந்தும் கணவனின் உயிர் இருப்பது வரை விஷம் கனிய வைத்து இறுதியில், அதை நமசிவாயத்திற்கு குடுத்து விட்டு செல்வது தான் அவள் வெற்றி என்று எடுத்து கொன்டேன்.

அந்த பணத்தில் தானே அவர் அடைந்தது எல்லாம். கட்டிய பின் தட்டி விடும் வெற்றி ஒரு உச்ச ருசி வகைகள். அவள் இறந்தது 40 வருடம் கழித்து.

படித்த எல்லோருக்கும் நீங்கள் சொன்ன கடைசி வரி தான் ஒரு திருப்தி தந்து இருக்கும் போல. .ஆதி மனித உணர்வுகளின் அலைக்கழிப்புகளை புனைவுகளில் வைத்து விளையாடி, கற்பனையில் யோசித்து விரித்தபடி சென்று ( நான் சொன்னவை எல்லாம் கிறுக்கு வகையில் எடுத்து கொண்டாலும் கூட ), ஒரு நல்ல அனுபவம்

அன்புடன்,

லிங்கராஜ்

***

ஜெமோ அவர்களுக்கு,

தங்கள் வெற்றி சிறுகதையின் தாக்கத்திலிருந்து என் ஆசான் செந்தில் குமார் அவர்கள் மீளவில்லை என்பது அவர் நடையின் தொனியிலேயே தெரிந்தது. எங்கள் அலுவலகதிற்குள்ளேயே இப்படியும் அப்படியுமாக திரிந்துகொண்டிருந்தார். என் பார்வையில் ஒளிந்திருந்த காரணத்தை அவராகவே தெரிந்துகொண்டு சற்றுமுன் தான் வெற்றி சிறுகதை படித்ததாகவும் அக்கதையில் இருந்து என்னால் வெளிவரமுடியவில்லை என்றும் கூறினார். அவர் படும் அவஸ்தைக்கு ஏதோ நாட்டு மருந்து கொடுக்கும் நினைப்பில் ஜெமோ அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் செய்துவிடுங்களேன் என்றும் கூறினேன். அப்பொழுது நான் நினைக்கவில்லை என் சொல்லே திரும்பி என்னை நோக்கி பாயும் என்று. படித்துகொண்டிருக்கும் போதே இடையூறுகள் பல என்னை சுற்றி மொய்த்துக்கொண்டிருந்தது. அலுவலகம் முடிந்து அனைவரும் விடைபெற்ற பின்பு தனி நபராய் தனிமையில் படிக்கலானேன். இக்கதையின் முடிவு எதுவாக இருக்கும் என்னும் ஆர்வம் தான் வாசிப்பின்னூடே சுவாரஸ்யத்தை புகுத்தி என் கரம் பிடித்து அழைத்து சென்றது.

நகம் முளைக்காத விரல்களை கடித்துக்கொண்டும், பிடரியை சிக்கெடுத்துக்கொண்டும் அவதிபடும் நிலைமைக்கு புதைகுழிக்குள் தாங்கள் என்னை தள்ளிவிட்டதாகவே ஒரு எண்ணம். ஏழாம் உலகத்திலிருந்தே நான் மீண்டு எழ தவித்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் வெற்றி சிறுகதை என்னை மேலும் அழுதிக்கொண்டிருக்கிறது. நான் வீட்டிற்கு செல்லும் இரயில் பயண நேரங்களில் என்னால் வேறொரு படைப்பை புரட்டிக்கொண்டிருக்க முடியவில்லை. வாழ்கை ரகசியத்தை உடைத்து காட்டும் திருவுகோலாய் தான் மது இங்கே பல மனிதர்களுக்கு பழக்கப்படுத்திவிட்டது போலும் இக்கதை படித்த மது பிரியர்கள் பலர் நண்பர்களுடன் செல்லும் ஒவ்வொரு வினாடியும் எச்சரிக்கை மணியை தங்களுக்குள்ளே அடித்துக்கொண்டிருப்பார்கள் குறிப்பாக காஸ்மாபாலிட்டன் கிளப்பில் வலம் வரும் தொழில் முனைவர்கள். மகாபாரதத்தின் காதாபாத்திரங்கள் கூட ஏதோ ஒரு வகையில் நிகழ் மனிதனின் குணாதிசியத்தோடு பின்னைக்கபட்டிருப்பதை இக்கதை எனக்கு தெளிவுபடுத்திவிட்டது.

பீமனோ, தருமனோ, லக்ஷ்மணோ சந்தர்ப்ப சூழ்நிலையே நாம் எந்த அளவிலான பிம்பத்தை சார்ந்திருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டும். அப்பிடி ஒரு நிலையை தான் நமச்சிவாயம் எட்டியிருக்கிறார். தன் மனைவியை பகடை காயாக வைத்து விளையாட நினைக்கும் நமச்சிவாயமும் சரி, தன் பணத்திமிரை முதலீடாக வைத்து வேடிக்கைகாட்டும் ரங்கப்பரும் சரி வெற்றி பெற்ற நிலையிலும் கூட தோதாங்கோலிகளாக தான் மற்றவர் கண்களுக்கு தென்படுவார்கள். பயம், பலவீனம், ஆசை இவ்மூன்றும் ஒன்றின் மேல் ஒன்று சுழன்று மனித வாழ்க்கையில் தடம் பதித்துகொண்டே வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயம் செய்வதாக நான் கருதுகிறேன். இதை கொடுத்தால் இது கிட்டும் என்ற முன்னைப்பில் பந்தயத்தில் குதிக்கும் ரங்கப்பர் பெண்களை மயக்குவதில் கைதேர்ந்தவன் என்று சொன்னால் என்னால் ஏற்றுகொள்ள முடியாது. வாழையடி வாழையாக வளர்ந்து வரும் பணக்கார்களுக்கே உண்டான ஆணவம் அது. பணம் பத்தும் செய்யும் என்னும் பழமொழியை தான் இக்கதையில் பொருத்தி பார்க்க முடிகிறது.

நோக்கம் அறியாது செய்யும் செயல்களை தான் பெண்கள் பலர் விரும்பிக் கொண்டிருக்கின்றனர் ரங்கப்பரின் நோக்கத்தை லதா கணித்திருந்தால் வேறொரு பாதையில் முடிவு அமைந்திருக்கும். எல்லாம் நடந்தும் நடகாதது போல் தோசை சுட்டு கொண்டிருக்கும் சராசரி பெண்கள் பட்டியலில் லதாவும் இணைந்தது கொஞ்சம் ஏமாற்றம் தான். வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன் என்பதை தன் அண்ணன் முன் பிரதிபலிக்க முயற்சி செய்வது, பந்தய பணத்தில் எதிர்கால வாழ்கையை கணக்கிடுவது, பந்தயத்திற்கு பலியாகப்படும் மனைவி மேல் எரிந்து விழுவது போன்ற நிகழ்வுகள் நமச்சிவாயம் உருவத்தில் திரிந்து கொண்டிருக்கும் மனிதர்களின் எதார்த்தநிலை. இக்கதையில் ஒன்று மட்டும் ஆணித்தரமாக புலப்படுகிறது வாழ்கை ரகசியங்களை அடைகாக்க நினைப்பது நம்பிக்கையின் பலபரீட்சை மட்டுமே அவை நாற்பது வருடம் கழித்தோ இல்லை அடுத்த வினாடியோ சிதறு தேங்காய் துண்டுகளாய் உடைத்தெரியபோவது நிச்சயம். இறக்கும் தருவாயில் லதா நமச்சிவாயதிடம் சொல்வதும், போதையின் கைபிடியில் தலை கவிழ்ந்த நிலையில் நமச்சிவாயம் உலறுவதும் ரகசியங்களை ஒரு போதும் காபாற்றலாகாது என்னும் விதியிற்குள் அடங்கும். இனி வரும் நாட்களில் வெற்றி சிறுகதையின் நினைவலைகள் இல்லாமல் அண்ணா சாலையை கடப்பதென்பது சிரமமான காரியம் தான் காஸ்மாபாலிட்டன் கிளப்பின் முகப்பு வாசலை பார்காமலிருந்தால் ஒழிய.

இப்படிக்கு

பிரவின் குமார்

***

அன்புள்ள ஜெ. வணக்கம்.

வெற்றிச்சிறுகதையில் பெண்கள் எளிதில் வளைந்துவிடக்கூடியவர்களா? என்று கேள்வி எழுப்பப்படுகின்றது. கதை அதைநோக்கித்தான் செல்கிறது. கதையின் திசை அதுவாக இருந்தாலும் அதன் நோக்கம் பெண்களைப்பற்றியப் பார்வையை மாற்றிக்கொள்ளச்செய்கின்றது.

பெண்களைப்பற்றி ஆண்கள் வரைந்துவைத்திருக்கும் சித்திரம் என்னவாக இருக்கிறது என்பதை நமச்சிவாயம், ரங்கப்பர். நாச்சிமுத்துவழியாக கதைக்காட்டுகிறது. இந்த மூவர்க்குள் மொத்த ஆண்வர்க்கத்தையும் அடக்கிவிடமுடியும்.

நமச்சிவாயம் வரைந்துவைத்திருக்கும் பெண் சித்திரம் புராணங்களின் பத்தினிகள் ஆனால் நடைமுறையில் அவள் தன் உள்ளத்தின் சலனங்களுக்கு வாலாட்டி வாசல்படியில் காத்திருக்கும் தெருநாய். தனது உடமை அப்படியே வார்த்து எடுக்கும் அச்சு. தன் இயலாமைகளின் கழிவுகளை அப்படியே தாங்கிக்கொண்டு தன்னை சுத்தமாக்கிக்காட்டும் குப்பைக்கூடை. அவளுக்கு வேண்டிய தருணத்தில் அவளே சுமைதாங்கியாகவும் சுமையாகவும் இருக்கவேண்டிய ஜென்மம்.

ரங்கப்பர் தன்னளவில் சீதைகளை திருடும் ராவணன், திருடப்பட்ட சீதைகள் சீதையாக இல்லாததற்காக கண்ணீர்விடும் ராவணன். இவர் வரைந்துவைத்திருக்கும் சித்திரம் பெண்கள் ஆசைகளுக்காகவும், கடமையின் அழுத்தங்களுக்காகவும் வளைந்துவிடும் எளியவர்கள்.

நாச்சிமுத்து ராவணன் இல்லாத ராவணன். அதனால் அவருக்கு சீதைகள் சீதைகளாக இருக்கவேண்டும் என்ற மானிடகருணை இருக்கிறது. இவர் பெண்களைப்பற்றி வரைந்துவைத்து இருக்கும் சித்திரம் என்பது பெண்கள் கஷ்டங்களில் இருந்து வெளிவர தெரியாத தன்னம்பிக்கை இல்லாதவர்கள், அறிவற்றவர்கள்.

பெண்ணைப்பற்றி பெண் வரைந்துவைத்திருக்கும் சித்திரம் என்ன? இருப்பதைக்கொண்டு அவளால் நேர்த்தியாக இருக்கமுடியும், தன்னை நெருக்கும் அழுத்தங்களுக்கு அப்பால் அவளால் விடுதலையை உணரமுடியும். கடமைகளுக்கு கவலைகளுக்கு இடையில் அவளால் கனிவுடன் இருக்கமுடியும். துன்பத்திற்கு இடையில் அவளால் துயில் கொள்ளமுடியும், துயிலிலும் அவளால் தனது குழந்தைகளை கணவனை குடும்பத்தை பேணமுடியும். அதைக்கட்டிக்காக்க முடியும்.

பெண்களை புராணமாக்கியவர்கள் நமச்சிவாயம்போன்ற ஆண்கள்தான். அவர்களை தெருநாயாக நடத்துபவர்களும் நமச்சிவாயம்போன்ற ஆண்கள்தான்.

பெண்களை ஆசைகளுக்கும் கடமைகளின் ஆழுத்தத்திற்கும் ஆளாக்குபவர்கள் ரங்கப்பர்போன்ற ஆண்கள்தான் ஆனால் அவர்களுக்கு அந்த குற்ற உணர்வு என்பது துளியும் இல்லை.

பெண்களை தன்னம்பிக்கை அற்றவர்களாகவும்,அறிவற்றவர்களாகவும் வைப்பவர்கள் நாச்சிமுத்துபோன்றவர்கள்தான் ஆனால் அவர்கள் சிறிது சிந்தித்தால் அந்த நிலையில் இருந்து பெண்களை மேல் எடுத்துவந்துவிடமுடியம் அதற்காக அவர்கள் தன் பணத்தை எந்தவிதத்திலும் இழக்கமாட்டார்கள். ஆனால் அவர்கள் அகங்காரம் வெல்வதற்காக எத்தனை லட்சத்தையும் இழப்பார்கள். தங்கள் குறைகளை அடுத்தவர் அறியாமையால் மறைப்பாார்கள்.

ஆண்களின் இந்த மனஓட்டத்தையும் பெண்களின் வாழ்க்கை விசித்திரத்தையும் கொண்டு இந்த கதையை புரிந்துக்கொள்ள முயற்சிக்கின்றேன்.

ஆணின் அகங்காரத்தின் தராசு மையத்தில் பெண் எப்போதும் நிறுத்தப்படுகின்றாள். ஆணின் அகங்காரத்தின் எடைக்கு ஏற்ப அவள் சமநிலையில் நிற்கமுடியாமல் தராசின் முள்போல் தத்தளித்து தவித்துக்கொண்டே இருக்கின்றாள். இந்த தத்தளிப்பு என்பது ஆண்களின் கண்களுக்கு பலவீனமாக தெரிகின்றது. அதுவே ஆண்களின் அகங்காரதின் வலிமையாகவும் கொள்ளப்படுகின்றது. உண்மையில் ஆண் அகங்காரத்தின் மூலம் வெள்ளும் அனைத்தையும் பெண் தனது கருணையைால் தோற்கடித்துக்காட்டுகின்றாள். ஆணின் வலிமை என்றும் பெண்ணின்மென்மை என்றும் நாம் பார்ப்பது உருவ உண்மை அன்றி, அருவ உண்மை இல்லை.

அகங்காரத்தால் வெல்வதற்கு ஏற்படும் வலிமையைவிட அன்பால் வெல்வதற்கு தேவைப்படும் வலிமை அதிகமாக உள்ளது. அதை அகத்தில் இருந்தே எடுக்கவேண்டி உள்ளது, அதை பெண்கள் எதையும் குலைக்காமல் சிதைக்காமல் காயப்படுத்தால் எடுத்து வெல்கிறார்கள்.அதனால் அவர்கள் வெற்றி என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தாமல் நீரில் கல்போல் சலனமின்றி மூழ்கி கிடக்கிறது. அகங்காரம் தான் வெல்வதற்கான கருவிகள் அனைத்தையும் புறத்தில் இருந்து எடுத்து வென்று பரபரப்பை ஏற்படுததி விடுகின்றது., அன்பின் கருவியும் கையும் வேறுவேறானது இல்லை.

நமச்சிவாயம் ஏழ்மையில் இருப்பவர். ரங்கப்பர் பணத்திமிரில் இரு்பபவர். இவர்கள் இருவரும் சமமாக ஆவது அவர்களின் அகங்காரத்தால்தான்.

ரங்கப்பர் வென்றும் தோற்றவர் என்று சொல்கின்றார். நச்சியப்பர் தோற்றவர் என்று மனைவியின் மாறுபட்ட வடிவத்தால் உணர்ந்தும் வென்றவர் என்று நம்புகின்றார். அப்படி என்றால் உண்மையில் யார்தான் இங்கு வென்றது. லதாதான் வென்று செல்கிறார். ரங்கப்பரின் சொல்லுக்கும் நமச்சிவாயத்தின் நம்பிக்கைக்கும் இடையில் நிற்கும் லதா எதுவும் சொல்லாமல் தனது செயலால் எங்கோ அவர்களை திருப்பி்ப்போடுகின்றாள். தான் வெல்வதற்காக அவள் அவர்களை திருப்பிப்போடவில்லை மாறாக அவர்களின் மனங்களை திரும்பி்ப்பார்க்க வைக்கிறாள்.

கதையின் படி அரக்கருக்கும் தேவருக்கும் இடையில் நிற்கும் மனிதனாக வரும் நமச்சிவாயம் கொஞ்சம் கொஞ்சமாக பணஆசையுடைய அரக்கனாக மாறுகின்றார்.

பெண்கள் அனைவரையும் இரண்டேவகையில் பிரித்து வீழ்த்திவிடமுடியும் என்று நம்பும், வெல்வதற்காக மட்டுமே வாழும் அரக்கனாகிய ரங்கப்பர் லதாவிற்காக கொஞ்சம் கொஞ்சமாக தேவனாக மாறுகின்றார். லதாதான் இன்று மனிதராக இருக்கிறாள்.

நான் உங்கள் கணவரின் தம்பிப்போல என்பதை நம்புகின்றாள். இடத்திற்கு தகுந்ததுபோல் வாழவேண்டும் என்பதற்காக நேர்த்தியாக இருக்கிறாள். அவரின் பரிசுகளை அன்பின் அடையாளமாகவே ஏற்கிறாள். தனது அழுத்தங்கள் குறைய குறைய விடுதலையை உணர்கின்றாள். ரங்கப்பரை தனது மகனை காப்பாற்றவந்த மருதமலை முருகனாக நினைக்கிறாள். அனைத்தும் மனித தன்மைகள்

ரங்கப்பரை போட்டி நாட்கள் இடையில் சந்திக்கும் நமச்சிவாயம் “ஐந்து லட்சத்தில் ஒரு அம்பாசிட்டர் ஏஜென்சி எடுப்பதைப்பற்றி ஓசிக்கின்றேன்“ என்கிறார். அப்போது ரங்கப்பர் நமச்சிவாயத்தின் விழியை உற்றுப்பார்க்கிறார். ஐந்து லட்சம் பணமும் தனால் வரும் வியபாரமும் பணக்காரவாழ்க்கையும் நமச்சிவாயத்தின் அடிமனதில் விரிந்துக்கொண்டுதான் இருக்கிறது அதை நமச்சிவாயத்தின் விழியின் வழியாக நமச்சிவாயத்தின் பலகீனம் அறிகின்றார்.

ரங்கப்பர் நமச்சிவாயத்தின் பலகீனத்தை வைத்துதான் லதாவை வளைக்கிறார் ரங்கப்பர். நமச்சிவாயம் ரங்கப்பராக மாற ஆசைக்கொண்டு உள்ளார். நமச்சிவாயம் குடிக்கும் பிளாக்லேபில் விஸ்கியின் ருசி ரங்கப்பரிடம் இருந்துவந்து தொற்றிக்கொண்டு தொடர்கின்றது இன்றுவரை தொடர்கின்றது. இறுதிநாளில் மனைவி மூலம் உண்மையை உணர்ந்தபின்னும் நமச்சிவாயம் பிளாக்லேபில் ருசியில் திளைப்பதுதான் உச்சம். நமச்சிவாயம் லதாவை திட்டும்போது அவனுடன் படுத்தாள் ஐந்தலட்சம் தருவான் என்ற உண்மையை உடைத்துவிடுகின்றார். இது வெறும் வசைஇல்லை என்பதை ரங்கப்பர் வாயிலிருந்து லதா அறிந்து இருக்கமுடியும். தான் பணயம்வைக்கப்பட்டவள் என்பதை ரங்கப்பர்தான் அவளுக்கு தெரிவித்து இருக்கிறார். இது லதாவிற்கு தெரியாது என்பதை உடைக்கத்தான் லதா இறுதியல் கணவனிடம் அதை சொல்கிறாள். குழந்தைக்காகதான் லதா வளைந்தால் என்றால் அதை நமச்சிவாயத்திடம் அவள் சொல்லவேண்டிய எந்த தேவையும் இல்லை. அப்படிச்சொல்லி இருந்தாள் அது அவளுக்கான தண்டனை, குற்றமனத்தின் உணர்ச்சி. இது நமச்சிவாயத்தின் மீது தொடுக்கப்பட்ட அஸ்திரம், அவரின் முகத்திரையை கிழிக்கும் பாணம்.

மனைவி என்பவள் அகம். அகத்தின் தூய்மையை இழப்பவன் மனைவியின் கற்பை எடைபோட தகுதியற்றவன். இங்கு வேசியாக இருந்தது வாழ்ந்தது வாழ்வது எல்லாம் லதாவின் கணவனே. அதற்கான தண்டனைதான் மனைவியால் இறுதியில் சொல்லப்பட்ட உண்மை.

ரங்கப்பர் வென்றும் தோற்றேன் என்பது நமச்சிவாயம்மீது கொண்ட கருணையால் அல்ல, ஒரு குடும்பத்தை அழித்தபாவம் வேண்டாம் என்பதற்காக அல்ல. தனது அகத்தை எல்லாவகையிலும் வேசித்தனமாக வைத்துக்கொண்டு மனைவியை தூய்மையாக இருக்கவேண்டும் என்று கனவுகாணும் நமச்சிவாயத்தை வெல்வதற்காக ஒரு நல்ல மனைவியை வளைக்கசென்ற அவர் கொள்கை தவறாகும் கணத்தால்.

//“உங்க மனைவி நல்லவர்கள்” என்றார். கோணலாக வாய் இழுபட, “ஏன், வருகிறேன் என்று சொல்லிவிட்டாளா?” என்றேன். “இன்னும் இல்லை” என்று புன்னகை செய்தார். “இரண்டுவகையான பெண்கள் இருக்கிறார்கள். ஒரு வகையான் பெண்களை ஆசை இயக்கிக் கொண்டு செல்லும். இன்னொரு வகையான பெண்களை கடமைகளின் அழுத்தங்கள் கொண்டு செல்லும். நல்ல பெண்கள் அழுத்தத்தால் வளைந்துவிடுவார்கள். மற்றவர்கள் ஆசையால் வளைந்துவிடுவார்கள்” என்றபின் உரக்கச் சிரித்து “எப்படி இருந்தாலும் வளைவார்கள்” என்றார்.//

லதாவை வளைக்க அவர்க்கொடுக்கவேண்டிய விலை தோற்றவன் என்றவிலைதான். தோற்றுப்போனதாக சொல்லும் ரங்கப்பர் ஏன் பார்ட்டி வைக்கிறார்?. தான் உள்ளுக்குள் ஜெயித்தவன் என்ற ரகசிய இன்பத்தாலா? இல்லை. அவர் பெண்கள் எல்லாம் வளைக்கக்கூடியவர்கள் என்பதில் உறுதியாக இருந்தவர். வளையக்கூடாது என்று வேண்டிக்கொண்டு வளைத்தபோது வளைந்த பெண்களுக்காக அழுதவர். இன்று அவர் நமச்சிவாயம் இடம் “எனக்கு ஒரு நம்பிக்கை வந்திருக்கிறது அதற்காக நான் நமச்சிவாயத்திற்கு நன்றி சொல்லவேண்டும்“ என்கிறார். எந்த பெண்ணும் தராத ஒரு நம்பிக்கையை லதாவால் தரமுடிகின்றது என்பதுதான் ரங்கப்பர்மீது லதாவின் வெற்றி. லதா ரங்கப்பருடன் கலந்தது ஆசையால் இல்லை, மகன் உடம்பு குணமாகவேண்டும் என்ற கடமையின் அழுத்தத்தால் அல்ல, பெண்ணாக நச்சிவாயத்தை தோற்கடிக்கவேண்டும் என்பதற்காக, ரங்கப்பர் மட்டும் நினைத்தால் நமச்சிவாயத்தை தோற்கடிக்க முடியாது அதற்கு லதாவின் பக்கபலம்வேண்டும் அந்த பலத்தை லதாதான் ரங்கப்பருக்கு வழங்குகின்றாள், அதற்கு ரங்கப்பர்தரும் விலை தோல்வி. எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கிறது என்ற நினைத்த ரங்கப்பர் அகங்காரத்திற்கும் ஒரு விலை இருக்கிறது என்பது புரியும் தருணம்.

மனைவி என்பது பதவிதான் அந்த பதவியில் அவள் ஜெயித்துக்காட்டிவிட்டாள். அவள் கணவன் ஊரறிய வென்றவர். கற்பில்கூட அவள் ஜெயித்தவள்தான். அவள் சொல்லாமல் இந்த உண்மை நமச்சிவாயத்திற்கு தெரியாது. ஒளி என்பது இருளை தள்ளிவைக்கும் கலைதான், இருளே இல்லாத நிலையல்ல.

ஆசை, சுடமை, கஷ்டம். தன்னம்பிக்கை இன்மை. அறிவு இன்மை என்று பெண்களை வேட்டையாட ஆண்வர்க்கம் நினைத்தாலும், பெண் தனது சுயத்தால் வாழ்க்கையில் வென்றுச்செல்கிறாள். அவள் தன்னை யாருக்காகவும் நிறுபிப்பது இல்லை வாழ்ந்துச்செல்கிறாள். ஆண் வாழ்வது இல்லை தன்னை நிறுபித்துக்கொண்டு இருக்கிறான். வெற்றியை பரிசு நிர்ணயம்செய்வதில்லை அதை அகம் தீர்மானிக்கிறது.

அன்புடன்

ராமராஜன் மாணிக்கவேல்.

***

அன்பு ஜெயமோகன்,

வணக்கம். நலமா?

வெற்றி என்று ஒரு கதையை எழுதினீர்கள். எண்ணக் குமிழிகள் கொப்பளிக்கின்றன. சில சிதறல்களை இங்கு தருகிறேன்.

  1. பாணிக்ரகண மந்திரங்களில் ‘சோமன் உன்னை முதலாவதாக அடைந்தான்; கந்தர்வன் உன்னை இரண்டாவதாக அடைந்தான்; அக்னி உன்னை மூன்றாவதாக அடைந்தான். இவர்களின் அனுமதியுடன் நான் உன்னை நான்காவதாக அடைகிறேன்’ என்று மணமகன் சொல்வதாக வரும். இது ஏன் என்று நான் யோசிப்பதுண்டு. கற்பு என்கிற கற்பிதத்துக்கு புராண காலங்களிலும் தற்போது இருக்கிற வரை முறைகளில் நிறைய வித்யாசம் இருப்பதினாலேயே இது என்று எனக்குத் தோன்றும்.
  2. சகல பாவங்களும் தொலைவதற்கு ‘அகல்யா திரௌபதி குந்தி தாரா மண்டோதரி ததா, பஞ்ச கன்யா ஸ்மரேன் நித்யம் மகா பாதக நாசனம்’ என்கிற பஞ்ச கன்யைகளின் ஸ்லோகத்தை பெண்கள் சொல்லக் சொல்வார்கள். அகல்யா இந்திரனால் வஞ்சிக்கப் பட்டு ராமனால் மோட்சம் அடைந்தவள்; திரௌபதி ஐவரைக் கலந்தவள்; குந்தி கர்ணனை ரகசியமாகப் பெற்றவள்; தாரா வாலிக்கும் சுக்ரீவனுக்கும் மனைவியாக இருந்தவள். சில ராமாயணங்களில் மண்டோதரி விபீஷணனை மணந்ததாக வருகிறது. இதில் கற்பு நெறி என்பது எது என்று சிந்திக்கத் தோன்றுகிறது.
  3. பெண்களின் கற்பு நெறி பெண்கள் சம்மந்தப் பட்டது தானா? அதில் ஆண்களின் பங்கு ஒன்றும் இல்லையா?
  4. வெற்றியின் நாயகி கற்பிழந்தவளா? அது உண்மையானால் அவள் எப்போது கற்பினை இழக்கிறாள்?

இதை தற்கால ஒப்பிடுகளுடன் வரைமுறைபடுத்த முடியாது என்பதனாலேயே இதை அந்தக் காலத்திலேயே துலாக்கோல் கொள்ளாமல் தான் வரைந்து வைத்திருக்கிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது.

  1. வெற்றியின் நாயகி கற்பை இழக்கும் தருணம் அவள் கணவன் அவளை பந்தய பொருளாக எந்தக் கணத்தில் வைத்தானோ அந்தக் கணத்தில் தான் என்று எனக்கு தோன்றுகிறது. காரணம் அவன் பௌருஷத்தின் மேல் அவள் கட்டமைத்திருந்த விசுவாசம் அவன் பணயம் வைத்த கணத்தில் தொலைந்தது. (சம்பந்தம் இல்லை ஆயினும் கூட ‘நாளை மற்றுமொரு நாளே’ பற்றி உங்களுக்கும் குவளைக் கண்ணனுக்கும் நடந்த சம்பாஷணை பற்றி நீங்கள் எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது).
  2. ஜெயகாந்தனின் ‘சீசர்’ சிறு கதையை நீங்கள் படித்திருக்க கூடும். ‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள்’ என்கிற பழமொழி உண்மையில் சீசரின் பௌருஷத்தைத் தான் சுட்டுகிறது என்று ஆணித்தரமாக நிறுவியிருப்பார் அவர்.
  3. இதே காரணத்திற்க்காகத் தான் திரௌபதி பிரதிகாமியிடம் ‘தருமர் முதலில் என்னை வைத்துப் பின் தன்னை இழந்தாரா அல்லது தன்னை வைத்த பின் என்னை இழந்தாரா?’ என்று சீறுகிறாள். அவர் பௌருஷத்தின் மீது தான் வைத்திருந்த நம்பிக்கையை அவரே குலைத்த சிறுமை கண்டு பொங்கும் அறச் சீற்றம் தான் இது.
  4. சந்தர்ப்பங்கள் தற்செயலாக ஏற்படும் போது ஏற்படும் தற்காலிக சறுக்கல்கள் கற்புடை மகளிரை புடம் போட்ட மாதிரி ஆக்கி விடுகிறது என்பதைத் தான் இலக்கியங்களும் புராணங்களும் சுட்டுகின்றன என்பதே உண்மை.
  5. இதையே அவர்கள் மலை போல் நம்பியிருக்கும் ஆண்கள் விலை பேச முற்படும் போது அவர்களின் கற்புக்கான சாதாரண அளவு கோல்கள் அவர்களைக் கட்டுப் படுத்தாது என்பது தான் நிதர்சனம்.
  6. கொஞ்ச நாட்களுக்கு முன் அக்னிப் பிரவேச நாயகியைப் பற்றி இது போல் தான் நீங்கள் எழுதியிருந்த நினைவு. ஜெயகாந்தனுக்கு இது குறித்து சந்தேகமே இல்லை. ஜெயகாந்தன் அளவுக்கு கங்கை நீர் கூட தேவைப் படவில்லை புதுமைப் பித்தனுக்கு. ‘கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே இது தான் அய்யா பொன்னகரம்’ என்று ஒரே போடாகப் போட்டு விட்டார்.
  7. நான் பார்த்த வரை ஒரு குறை தான். இந்தக் கதையை நீங்கள் அந்தப் பெண்ணின் மன நிலையிலிருந்து எழுதியிருந்தால் கதை இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்று தோன்றுகிறது. எம்விவி ‘நித்திய கன்னி’யை அப்படித் தான் எழுதியிருக்கிறார். ஆனால் நீங்கள் வைத்த முடிவு மேற் கூறிய காரணங்களால் கதாநாயகியின் மேன்மையை உணர்த்திடுவதாகத் தான் கருத வேண்டியிருக்கிறதே ஒழிய சிறுமை படுத்துவதாய்த் தோன்றவில்லை.

அன்புடன்,

அஸ்வத்

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

மிக்க நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

வெற்றி சிறுகதை வாசித்தேன். வெளியில் வேறு வேலைகளில் இருந்தாலும், மனதிற்குள் வெற்றி சிறுகதையால் அலைகழிக்கப்பட்டேன்,. கிடைத்த இடைவெளியில் மீண்டும் மீண்டும் வாசித்தேன். காஸ்மொபாலிட்டன் கிளப்பில் நானும் சென்றமரந்து, கன்னத்தில் கைவைத்து, கதை கேட்டது போன்ற, நிகர்வாழ்க்கை அனுபவத்தை தந்தது.

கதையில் வரும் விவரணைகளை ரசித்தேன். அவைகளும் கதையின் போக்கிற்கு வலு சேர்த்தது.

பெரிய தண்ணீர்ப்பை போல எடை கொண்டிருந்த உள்ளம் நாற்காலியில் நிறைந்து படிந்திருந்தது.

காதுவழியே ஸ்க்ரூவை விட்டு மூளையைக் குடைவது போல,

பெரிய களிமண் பொம்மை போல அவள். நான் எப்படியும் பிசைந்து உருவாக்கிக் கொள்ளலாம். சோப்பில் சாவியை அழுத்தி எடுத்த அச்சுபோல என்னுடைய உடம்பின் பதிவு அவளில் இருக்கும்.

கதையில் சாகா வரம் தரும் அமுதத்தை பெற்று, தேடல் நிறைவடைந்த தேவர்களை, இன்னும் தங்களுக்கு கிட்டாத, அமுதத்தினை பெறும் போராட்டத்தில், எந்த எல்லைக்கும் சென்று, எதையும் இழக்க தயாரான, அசுரர்கள், ஒயாமல் சீண்டுகிறார்கள். பாதாளத்தில் இருந்து ஏறி வரும் இந்த அசுரர்கள் ஒவ்வொருவரின் இயல்பின்படி அமுதம் வேறுபடுகிறது. அமுதத்திற்கு கீழாக கிடைத்த எந்த ஒரு வரமும் அவர்களுக்கு போதவில்லை. நிம்மதி இழக்கிறார்கள், பூசலிடுகிறார்கள்.

காஸ்மொபாலிட்டன் கிளப்பை நிறுவிய, ஒரு சிறிய தீவிலிருந்து சொற்ப ஆயிரம் எண்ணிக்கையில் வந்த வெள்ளையர்கள், பீரங்கி, துப்பாக்கி, கப்பல்களின் துணை கொண்டு, மேற்கிலிருந்து, கிழக்கு வரை, வியாபாரம் செய்து, போரிட்டு, ராஜதந்திரத்துடன் பேசி, காலனிகளை அமைத்து, பேரரசான பின்னும் அமுதம் கிடைக்காத, அரக்கர்களாகவே, இருக்கிறார்கள்.

கதையின் துவக்கத்திலேயே நமச்சிவாயம், தன் தேடல் முடிந்து அமுதம் பெற்று ஆசுவாசமாக செட்டில் ஆன தேவர்களில் ஒருவர் போல தெரிகிறார். ஆனால் கதை நகரும் போதோ, முந்தைய கார் விற்பனையாளனான நமச்சிவாயம், தன் வேலையில் அவ்வப்போது, கிடைக்கும் வரமான சொற்ப பணம் போதாமல் அரக்கனாக இருக்கிறார். காஸ்மோபாலிட்டன் கிளப்பில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் தேவர்களில் ஒருவராவதே, அவர் தேடி அடைய நினைக்கும் அமுதம் என முதல் விவரனையிலேயே குறிப்பாக வருக்கிறது. அவருக்கு வரம் தரும் தேவராக ரங்கப்பர் அறிமுகமாகிறார். முரட்டு குதிரையில் இருந்து இறங்கி வரும், அமெரிக்காவில் படித்த ரங்கப்பரிடம், அரக்கர்களின் சாயல் இருப்பது போல தோன்றினாலும், அவர் நமச்சிவாயத்திற்கு வரம் தரும் தேவர். அப்படியென்றார் அரக்க குணமும் கொண்ட, ரங்கப்பர் தேடுவது என்ன? பெண்தான்.

ஆணவம் புண்படாமல் பணம் கொடுத்து, இதுவரை ரங்கப்பர் கட்டிலில் வென்ற பெண்கள் அதிகம்.இருந்தாலும். பணக்காரர்கள் நினைத்தால் அடைய முடியாத லட்சங்களில் ஒரு பெண் என்னும் அமுதத்திற்காக, ரங்கப்பரும் அரக்கன் போல தேடுகிறார்.பெண்களை வென்ற தருணங்களை பற்றி பீற்றி கொள்ளும் தொனி இருந்தாலும், ஒவ்வொரு முறையும் பணிந்த பெண்களை கண்டு, அந்த தேடலில் தோல்வியுற்று, உறவு கொண்ட பின் உப்பரிகையில் நின்று அழுகிறார். அவருக்கு தன் மனைவி லதா என்கிற அமுதம் தரும் தேவராக, நமச்சிவாயம் ரங்கப்பர் வாழ்வில் வருகிறார்.

இருவரும் ஒருவரை ஒருவர் சீண்டி, பந்தயத்தில் இறங்கும் தருணத்திற்காக, எதிர்பார்த்து காத்து இருந்தது போல, அறைகூவலிட்டு, சவாலினை ஏற்று பந்தயத்தில் இறங்குகிறார்கள். நமச்சிவாயத்தின் மனம், எல்லா சாத்தியங்களையும் யோசித்து, மனைவி கற்பினை இழந்து தோற்பது பற்றி முதலில் அமைதியிழக்கிறது, ரங்கப்பரோ தான் பழகி தேர்ந்த, பெண்களை கவரும் அணுகுமுறையினை கொண்டு, படி படியாக லதாவை நெருங்குகிறார். சவலை பிள்ளையின் உடல் நலகுறைவு, ரங்கப்பருக்கு தோதாக வருகிறது.

ரங்கப்பர் ஆர்டர் கொடுத்த பென்ஸ் காருக்கான முன்பணம் ஐந்தாயிரம் என்கிற வரம் அவருக்கு போதவில்லை. இருந்தாலும் அதை வைத்து மேலதிகாரி, அண்ணன் என பார்பவர்களை எல்லாம் சீண்டுகிறார். ஒருவேளை மனைவியால் ரங்கப்பர் நிரந்தரமாக ஈர்க்கப்ட்டால், அவர்கள் உறவின் மூலம் ஐந்து லட்சத்திற்கு மேல் கிடைக்கலாம் என்கிற எண்ணம் எழுந்தவுடன், காரினை பேசி பணக்காரர்களுக்கு விற்பது போல, மனைவியை ரங்கப்பருக்கு பணிய வைக்க, அவளை எரிச்சல் படுத்தி, அவள் வீழும் கணத்திற்காக, ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறார். நமச்சிவாயத்திற்கு மனைவியின் கற்பு இழத்தலை விட, தன் இரண்டாவது மகனின் தீராத காச நோயை விட, அல்பாக்கா கோட்டும், காலிகோ சட்டை வாங்குவதும், கிளப்பில் உறுப்பினராகி தேவராவதுதான் முதன்மை நோக்கம்.

அன்றிரவு, லதா, ரங்கப்பர் இடையே உடலுறவு நிகழ்ந்ததா, இல்லையா என்பதை வாசகனின் ஊகத்திற்கு விடப்படுகிறது. மூன்று பிள்ளைகள் பெற்று, எந்த வெளியுலகமும் தெரியாதிருந்த லதாவை, அர்ஜூனன் போன்ற அழகும், பெண்களை கவரும் அணுகுமுறையும் கொண்ட ரங்கப்பர் வெல்கிறார். ஒரு ஆண், பெண்ணிடம் தன்னால் என்றுமே தர்க்கத்தால் அறிய முடியாத, ஈர்ப்பினை கண்டறியவே ஏங்குவான். முடிவில்லாமல் ஈர்க்கும் அந்த விசைக்கான காரணம் தெரிந்த கணம், நிறைவுணர்வின் உச்சத்தை கொடுக்கும். அது அவனுக்கு வெற்றிதான்.

என் வாசிப்பின்படி, லதா மீதான ரங்கப்பரின் வெற்றி என்பது, அவள் ரங்கப்பரிடம் கட்டிலில் வீழ்ந்து விட்டாள் என்று சுருக்குவதை விட, அங்கு நடந்த வேறொரு நிகழ்வு, பெரிய திறப்பாக இருவருக்கும் இருந்திருக்கலாம் என்கிற சாத்தியமே அதிகம். வெற்றி பெற்ற ஊரினை சூரையாடி, தீயிட்டு கொளுத்தி, பெண்களை வல்லுறவு செய்யும் ஆண் கூட்டம் நிரம்பிய போர்படையை போல, பந்தயத்தில் வெற்றி பெறும் ஆண் ஆணவத்தின் உச்சத்தில், தோற்றவனை நிர்மூலமாக்கும் அனைத்து வாய்ப்புகளையும் எந்த தயக்கமும் இல்லாமல் பயன்படுத்துவான். நமச்சிவாயத்தின் லட்சியம் என்னவென்று நன்றாக அறிந்து பந்தயத்தில் இறங்கிய, ரங்கப்பருக்கு, நமச்சிவாயத்திற்கு அவனை அங்கிருந்து அவமானப்படுத்தி விரட்டுவதே முதன்மை நோக்கமாக இருந்திருக்கும். ஆனால் அவரோ பந்தயத்தின் தோல்வியை ஒப்புகொண்டு ஐந்து லட்சம் தருகிறார். லதா ரங்கப்பர் இடையே நடந்த நிகழ்வின் உச்ச கணத்தில், தன்னுணர்வு சுத்திகரம் (Catharisis) அடைந்த ரங்கப்பருக்கு, அன்று முதல் உயர்ந்த விழுமியங்கள் மீது நம்பிக்கை தருகிறது. அது தந்த நிறையுணர்வில் அடுத்த 30 வருடம் வாழ்ந்து இறக்கிறார்.

என்றும் அன்புடன் உங்கள் வாசகன்,

சிவமணியன்

முந்தைய கட்டுரைகுமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெற்றி கடிதங்கள் 12