வெற்றி -முடிவாக

vet

ஜெ அவர்களுக்கு,

வணக்கம்.

வெற்றி சிறுகதை குறித்து மிகப் பெரிய அளவில் விவாதங்கள் நடைபெற்று வருவதைப் பார்த்தேன். என்னைப் பொருத்தவரையில், உங்களுடைய வெற்றி தான் அது. உயிரோட்டமான பாத்திரப்படைப்பு, மனித மனத்தின் விகாரங்களை நேர்மையாக, அப்பட்டமாக காட்டியிருக்கிறீர்கள். அது கண்கூசும் ஒளியுடன் திகழ்கிறது. அது தான் நிறைய விவாதங்களுக்கு வழி வகுக்கிறது.

வாசிப்பவர் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கும் நுண்ணிய வக்கிர எண்ணம் அல்லது தடைமீறும் எண்ணத்தினை உங்கள் வார்த்தைகள் அசைத்துள்ளன. அந்த அசைவு ஏற்படுத்திய உள்ளார்ந்த வலி, தங்களையே கதாபாத்திரங்களாக உணரச் செய்திருக்கிறது. அதனால் தான், தன் மனைவியை பொருத்திப் பார்த்து, தன்னைப் பொருத்திப் பார்த்து என்று பல கடிதங்கள் வந்ததாய் கருதுகிறேன்.

வாழ்த்துகள்

பவித்ரா

***

அன்புள்ள பவித்ரா,

ஆம், கடிதங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஏராளமான கடிதங்கள் வெளியாகி பல கோணங்களும் பேசப்பட்டுவிட்டன. இன்னும் வந்துகொண்டே இருக்கின்றன கடிதங்கள்.ஆனால் நிறுத்திக்கொள்ளலாமென நினைக்கிறேன்

இத்தகைய வாசிப்புகள் வந்துகொண்டே இருப்பதற்கான காரணம் கதையின் மையத்திலுள்ள ambiguity தான். அந்த மயக்கம்தான் கலையின் அடையாளம். உண்மையில் வாழ்க்கையிலுள்ள மயக்கநிலையை மேலும் கூர்மையாக எடுத்து முன்வைக்கிறது கலை. சாதாரணமாக அந்த மயக்கநிலை ஆசிரியரால் சொல்லப்படும். இந்தக்கதையில் சொல்லப்பட்ட கதை தெளிவானது, நேரடியானது. சொல்லப்படாமல் விடப்பட்ட கதை மயக்கம் கொண்டது.

எளிய வாசகர்கள் கதையின் நேரடிப்பொருளை வாசித்தனர். எளிய இறுதிப்பொருளை எடுத்துக்கொண்டு கருத்துருவாக்கி நிறைவடைந்தனர். அடுத்தகட்டம் தேடிச்சென்ற வாசகர்கள் அந்த மயக்கத்தை தங்கள் கோணத்தில் வாசித்து முன்னெடுத்தனர்.

இருநிகழ்வுகளும் வாசிப்பில் எப்போதுமே நிகழ்ந்துகொண்டிருப்பவைதான். இரண்டாம் வகை வாசிப்பு பெருகுவதே ஒரு சூழல் தேர்ச்சிகொள்வதன் அடையாளம். ஆகவே இவ்வாசகர் கடிதங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன

ஜெ

***

முந்தைய கட்டுரைவெற்றி கடிதங்கள் 13
அடுத்த கட்டுரைசீ. முத்துசாமியின் ‘இருளில் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்