‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 15

14. அணிசூடுதல்

flower“நெடுங்காலம் காத்திருந்து அடையப்பட்ட மணவுறவுகள் பெரும்பாலும் நிலைப்பதில்லை” என்று பிங்கலன் சொன்னான். “ஏனென்றால் மானுடர் அறியும் காலமென்பது இழப்புகளின் அறுபடா தொடர். உலகியலில் இழப்புகளைக் கொண்டுதான் பெறுபவை அளவிடப்படுகின்றன. இங்கு ஒருவன் பெறுவது எதுவாக இருப்பினும் அது இழந்தவற்றுக்கு ஈடல்ல. ஏனென்றால் இழந்தவை வளர்கின்றன. பெறுபவை சுருங்குகின்றன.” தருமன் “தவம் என்பது காத்திருப்பது அல்லவா?” என்றார். “ஆம், தவமிருந்து பெறவேண்டியது இவ்வுலகு சாராததாகவே இருக்கவேண்டும். பெருநிலை, மெய்யறிவு, மீட்பு. இங்கு எய்துவனவற்றை தவமிருந்து அடைந்தவன் ஏமாற்றத்தையே சென்றடைவான்.”

சற்றுநேரம் அவர்கள் தங்கள் எண்ணங்களை தொடர்ந்தவர்களாக தலைகுனிந்து அமர்ந்திருந்தனர். தருமன் மணலில் சிறு குச்சியால் ஏதோ வரைந்து அழித்தபடி இருந்த திரௌபதியை நோக்கினார். அவள் கன்னம் அப்பால் ஓடிய ஓடையின் நீரொளியில் மெல்லிய அலையசைவு கொண்டிருந்தது. இமைசரிந்த விழிகளின் நீர்மை மின்னியது. பிங்கலன் “பன்னிரு ஆண்டுகள் நளன் தமயந்திக்காக தவமிருந்தான் என்கின்றன கதைகள்” என்று தொடர்ந்தான். “தன் பதினைந்தாவது அகவையில் அவன் அவளைப் பற்றி அறிந்தான். இருபத்தேழாம் அகவையில் அவளை மணத்தன்னேற்பில் கைப்பற்றி அழைத்து வந்தான்.”

தமயந்தி நளனைவிட எட்டாண்டு மூத்தவள். பதினெட்டு ஆண்டுகள் அவள் அரசியென ஓர் அரியணையில் அமர்வதற்காக காத்திருந்தாள். பீமகரின் அவையில் அவளே அரசியைப்போல் அமர்ந்து அரசுநடத்தினாள். அவை எண்ணுவதற்கு முன்னரே எண்ணவேண்டிய அனைத்தையும் எண்ணிக் கடந்து முற்றுச்சொல்லுடன் அமர்ந்திருப்பாள் என அமைச்சர் அறிந்திருந்தனர். பாரதவர்ஷத்தின் பெருநிலவிரிவை ஒற்றை விழியசைவால் ஆளும் ஆற்றல்கொண்டவள் என கவிஞர் பாடினர். படைநடத்தவும் புரம்வென்று எரிபரந்தெடுக்க ஆணையிடவும் அவளால் இயலுமென்றனர்.

அவள் பதினெட்டாண்டு அகவை முதிர்ந்து மணநிலை கொண்டபோது அவளுக்கென வரும் மாமன்னர் யார் என்ற பேச்சே விதர்ப்பத்தில் ஓங்கி ஒலித்தது. அதற்கேற்ப வங்கமும் கலிங்கமும் மாளவமும் அவந்தியும் அவளை பெண்கோரின. மகதம் முன்னெழுந்து வந்தபோது பாரதவர்ஷத்தை ஆளவிருக்கிறாள் என்றே அவைக்கவிஞர் பாடினர். ஆனால் ஒவ்வொரு மணமுயல்வும் பிறிதொன்றுடன் முட்டி அசைவிழந்தது. ஒவ்வொரு ஏமாற்றமும் நகரில் அலரென்றாகி அணைந்து மீண்டும் ஒரு எதிர்பார்ப்பென்றாகியது. என்ன நிகழ்கிறதென்றே எவருக்கும் புரியவில்லை. அரசியல்சூழ்ச்சியா, கோள்கள் கணிப்பை கடந்தாடுகின்றனவா? தெய்வங்களின் சூழ்ச்சியேதானா?

பெருநிலத்தை உரிமைகொண்ட கன்னியை கைத்தலம் பற்ற பேரரசர்கள் அனைவருமே விழைந்தனர் என்பது மெய். அவ்விழைவை கண்டமையாலேயே அவர்களின் அரசியரும் அவ்வரசியரின் குலங்களும் அம்முயற்சியைக் கடந்து எண்ணி வருவதை கணித்து அஞ்சினர். தமயந்தி எவருக்கு அரசியானாலும் அந்தக் கோலும் கொடியும் அவளாலேயே ஏந்தப்படுமென அவர்கள் அறிந்திருந்தனர். அவளை பிறிதொரு மாமுடிமன்னர் கொள்ளலாகாதென்பதில் ஒவ்வொரு மாமன்னரும் கருத்தூன்றினர். அவள்மேல் மாமன்னர்கள் குறி கொண்டிருக்கிறார்கள் என்ற பேச்சால் சிறுமன்னர்கள் ஒதுங்கிக்கொண்டனர்.

காத்திருக்கையில் பெண் பெருகிக்கொண்டே இருக்கிறாள். அவளுக்காக இழந்தவையும் ஆற்றியவையும் அவள் மதிப்பென்றாகின்றன. விழைபவன் அவளுக்காக தன்னை உருமாற்றிக்கொண்டே இருக்கிறான். தான் என பிறந்தவையும் தன்னவை என உணர்ந்தவையும் தன்னிலை என ஆனவையும் ஆன அனைத்தும் அவ்வண்ணம் உருப்பெற்றபின் அவளன்றி அவனுக்கு உலகமென்று ஒன்றில்லை என்றாகிறது. தன் குடிக்குறிகளையும் குலதெய்வத்தையும் அவளுக்காக மாற்றிக்கொண்ட நளன் பன்னிரு ஆண்டுகள் அவளை அன்றி பிறிதொரு பெண்வடிவை எண்ணியதுமில்லை. அவன் எண்ணங்களும் உணர்வுகளும் மட்டுமல்ல நோக்கும் சொல்லும் அசைவுகளும் கூட அவளுக்காகவே திரண்டிருந்தன.

அவன் பிறிதொன்றிலாதோனாக இருந்தான். அவளுடைய ஓவியத்திரைகளுடன் வாழ்ந்தான். நோக்கப்படுகையில் அழகாகாத பொருளென ஏதுமில்லை புவியில். விழைவுகொள்கையில் அவை பேரழகு கொள்கின்றன. முனிவர்களே, பொருளென இங்கு வந்து சூழ்ந்துள்ளது நாம் என்றுமறியா பிறிதொன்று. அது தன் முழுமையில் தான் நிறைந்து அமர்ந்துள்ளது. விழையும் மானுடன் அதன் தவத்தை தொட்டு எழுப்புகிறான். அது விழித்தெழுந்தால் கணம்தோறும் வளர்ந்து பேருருக்கொண்டு தானே உலகென்றாகி சூழ்ந்துகொள்கிறது. நம்மை ஒக்கலில் வைத்துக்கொள்கிறது. தன் உடலில் ஒரு சிறுநகையென சூடிக்கொள்கிறது.

தமயந்தி தவமிருந்தது மணிமுடிக்காக. சந்திரகுலத்துப் பேரரசி தேவயானியின் நாளில் பிறந்தவள். இந்திராணியின் மண்ணுரு. நினைவறிந்த நாள்முதல் அவள் தன் வலப்பக்கத்தில் ஒரு பேரரசனை உணர்ந்துகொண்டிருந்தாள். அவள் வளருந்தோறும் அவ்வுருவம் மாறிக்கொண்டிருந்தது. முதன்முதலாக கலிங்க இளவரசன் அருணவர்மனின் ஓவியத்தை பார்த்தபோது ‘இவனா?’ என்ற எண்ணமே எழுந்தது. அத்தனை ஷத்ரிய இளவரசர்களையும்போலத்தான் அவனும் இருந்தான். உடைவாளை உறையுடன் ஊன்றியபடி அணிமுடி சூடிய தலையை மிடுக்காகத் திருப்பி. குடிப்பிறப்பின், படைப்பயிற்சியின், செல்வத்தின், இளமையின் நிமிர்வு. நிமிர்வுக்கு அப்பால் அவனிடம் ஒன்றுமில்லை. அணிகலன்களை சற்றுநேரம் கூர்ந்து நோக்கினால் உருவாகும் விழிவெறுமையை அடைந்தாள்.

பின்னர் அந்த ஓவியத்தை அவள் நோக்கவே இல்லை. ஆனால் அந்த முகத்தை நினைவில் மீண்டும் மீண்டும் எழுப்பிக்கொண்டாள். தன் கற்பனையைத் தொட்டு அதை மீட்டி உயிர்கொடுத்தாள். ஏதோ ஒரு தருணத்தில் அவன் விழிகள் புன்னகை சூடின. “நீ ஒரு ஆண். அரசனென முடிசூடி அமரவேண்டியவன்” என்று அவள் அவனிடம் சொன்னாள். “நீ எனக்கு அளிக்கவிருப்பவற்றால் எனக்குரியவன் ஆகிறாய். முற்றளிக்கையில் நீ நிறைவுகொள்வாய்.”

மறுநாள் அவளிடம் அன்னை கேட்டபோது “ஓர் அரசனை நான் மணமுடித்தாகவேண்டும் என்பது நெறி. அவன் உருவப்பிழையோ குடிக்குறைவோ அற்றவனாக அல்லாமலிருப்பின் வேறென்ன நோக்கவேண்டும்?” என்றாள். அன்னை அவள் சொல்வதை புரிந்துகொள்ளாமல் நோக்க “இவனை ஏற்பதில் எனக்கு மறுப்பில்லை. அரசர்களில் பிறிதொரு இயல்புடையவன் இல்லை” என்றாள். அன்னை சினத்துடன் “அத்தனை கன்னியருக்கும் உரிய ஆணவம்தான் இது. இளமையில் தங்களை விண்ணிறங்கி மண்ணில் நின்றிருக்கும் தேவகன்னியரென எண்ணிக்கொள்கிறார்கள். அத்தனை ஆண்களையும் சுட்டுவிரலால் தட்டி வீசுவார்கள். அவர்கள் மண்ணிறங்க சற்று காலமாகும்” என்றாள்.

அவள் புன்னகையுடன் “நான் தட்டிவீசவில்லை, அன்னையே” என்றபின் எழுந்துகொண்டாள். அன்னை சினம்கொண்டு “அமர்ந்து பேசு… நீ அரசி அல்ல, நீ சொல்வதை சொன்னபின் பேச்சு முடிந்துவிட்டது என எழுந்து செல்ல. நான் அரசி, தெரிந்துகொள்” என்றாள். தமயந்தி மீண்டும் அமர்ந்துகொண்டு “சரி, அப்படியென்றால் நீங்கள் சொல்லுங்கள்” என்றாள். “என்ன சொல்ல? நீதான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாயே” என்றாள் அரசி. “அதைத்தானே நானும் சொன்னேன்” என்றபின் அவள் புன்னகையுடன் எழுந்து நடந்தாள். அரசி “தருக்கி எழுபவர்களை தெய்வங்கள் குனிந்து நோக்குகின்றன. களத்தில் மேலுயர்ந்த தலையே அம்புக்கு இலக்கு” என்றாள். “அரசனின் தலை மேலேதான் நின்றிருக்கவேண்டும், இல்லையேல் அவனால் களத்தை முழுமையாக நோக்கமுடியாது, அன்னையே” என்றபின் அவள் நடந்து சென்றாள்.

அந்த மணப்பேச்சு பாதியில் முறிந்தது. அருணவர்மன் கோசலத்தின் மித்ரையை மணந்து வடகலிங்கத்தின் அரசனாக முடிசூடிக்கொண்டான். அவள் உளம்சோர்ந்திருப்பாள் என எண்ணி அரசி அவளிடம் வந்து “அவன் ஒருபோதும் பேரரசனாக இயலாது. அவன் தந்தை சூரியவர்மனுக்கு நீண்ட வாணாள் என நிமித்திகர் சொல்லியிருக்கிறார்கள்” என்றாள். அவள் சிரித்தபடி “அவனுக்காக நான் எவ்வகையிலும் துயருறவில்லை, அன்னையே. எனக்கு அவனும் பிற முடிமன்னரும் நிகரானவர்களே. மாளவத்தின் அரசனின் செய்தி வந்துள்ளது என்று அமைச்சர் சற்று முன் சொன்னார். அவன் ஓவியத்தை நான் பார்த்தேன். எனக்கு வேறுபாடே தெரியவில்லை” என்றாள்.

அன்னை அவளை சில கணங்கள் கூர்ந்து நோக்கிவிட்டு “சில தருணங்களில் நீ அனைவரையும் எள்ளிநகையாடிக்கொண்டிருக்கிறாய் என்று தோன்றுகிறது” என்றாள். அவள் புன்னகைத்து “நான் நகையாடுவதே இல்லை” என்றாள். அன்னை பெருமூச்சுடன் “இது அரசியல்சூழ்ச்சி. சூரியவர்மனின் பட்டத்தரசி பிரபாவதி சேதிநாட்டவள். அவள் இளையோன் சந்திரவர்மன் கலிங்கத்திலேயே படைத்தலைவனாக இருக்கிறான். அவர்கள் நம்மை விரும்பவில்லை” என்றாள். “அரசகுடி திருமணங்கள் எல்லாமே அரசுசூழ்தல்கள்தானே?” என்றாள் தமயந்தி. அரசி எண்ணியிராத சீற்றத்துடன் “இது அரசியல் அல்ல. அவள் உன்னை விரும்பவில்லை. நீ ஆணவம் நிறைந்தவள் என அவளுக்கு சொல்லப்பட்டிருக்கிறது” என்றாள். தமயந்தி “அதை நான் பிறந்ததுமே நிமித்திகர் சொல்லிவிட்டார்கள் அல்லவா?” என்றாள். “ஆம், உன் ஆணவமே உனக்கு எதிரி. அனைவரும் அஞ்சுவது அதையே. முள்ளம்பன்றிபோல உன் உடலில் அது சிலிர்த்து நிற்கிறது” என்றபின் ஆடையும் அணியும் ஒலிக்க அரசி திரும்பிச்சென்றாள்.

நாள் செல்லச்செல்ல முதுசெவிலியரின் முகங்களில் அவளைக் கண்டதுமே மெல்லிய கழிவிரக்கம் எழலாயிற்று. சேடிப்பெண்களின் விழிகளுக்குள் ஒரு ஏளனம் ஒளிவிடுவதை அவள் எளிதில் கண்டாள். அரசர் அவ்வப்போது சலிப்புடன் ஓரிரு சொற்கள் சொல்லும்போது திரும்பிப்பாராமலேயே அவையில் அவளைச் சூழ்ந்து அமர்ந்திருக்கும் அத்தனை பெண்களின் முகங்களையும் அவளால் காணமுடிந்தது. அவள் அவர்களை எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை. அது அவளுடைய நடிப்பு என அவர்கள் எண்ணினர்.

ஆனால் அவளுக்கு அணுக்கமானவர்கள் அவள் உண்மையிலேயே எதையும் பொருட்டாக எண்ணவில்லை என்று கண்டு வியந்தனர். அவள் ஆணவத்தால் அரணிடப்பட்ட அறியாமையில் வாழ்வதாக பேசிக்கொண்டார்கள். “ஆம், பேரரசிக்குரிய பிறவிகொண்டவள். விழிமலைக்கும் அழகி. ஆனால் மூப்பு அதையெல்லாம் நோக்குவதில்லை. அவள் கண்களுக்குக் கீழே மென்தசைவளையங்கள் இழுபட்டுள்ளன. முகவாய்க் கோடுகள் அழுத்தமாகின்றன. தாடையின் தசை சற்று தளர்ந்துள்ளது. கழுத்தின் வரிகள் ஆழ்கின்றன. தோளில் பொன்வரிகள் எழுகின்றன. அகவை அவளை இழுத்துச்செல்கிறது. அதை அவள் என்றோ ஒருநாள் தன்னை நோக்கும் ஆண்மகன் ஒருவனின் விழிகளில் உணர்வாள். அன்று உளம் உடைந்து சிறுப்பாள். அதுவரை இந்த ஆணவம் அவளை காக்கட்டும்” என்றாள் முதுசெவிலி ஒருத்தி. அவள் ஒவ்வொரு முறையும் பேரரசர்களால் துறக்கப்படும்போது சேடியர் உள்ளங்களின் ஆழத்திலிருந்து உவகைகொள்ளும் ஒரு பெண் அச்சொற்களைக் கேட்டு முதல்முறையாக அஞ்சினாள். பெண்ணென்று தன்னை உணரும் உடல்கள் அனைத்தும் அஞ்சியாகவேண்டிய ஒழியாத் தெய்வம்.

நிஷாத மன்னன் நளனின் விழைவை அரண்மனை மகளிர் அறிந்தபோது முதலில் திகைப்படைந்தாலும் விரைவிலேயே அது உகந்ததே என்று எண்ணத் தலைப்பட்டமைக்கு அந்த அச்சமும் விளைவான சோர்வுமே அடிப்படையாயின. விதர்ப்பமும் நிஷதமும் இரு அருகமை நாடுகள். அவை ஒரே நிலமாக இணையமுடியும். முதுசெவிலி ஒருத்தி மட்டும் ஆற்றாமையுடன் “பேரரசர்கள் தேடிவந்த கன்னி” என்றாள். “ஆம், ஆனால் அவர்கள் எவரும் அவளுக்காக துணிந்து படைகொண்டு எழவில்லை” என்றாள் இன்னொரு செவிலி. “அதற்கு நம் அரசரும்தான் பொறுப்பு. ஒவ்வொரு முறை ஒரு மன்னர் மணமுடிக்க சித்தமாகும்போதும் இன்னொருவரின் படைநீக்கம் நிகழும். அஞ்சி சொல்லை பின் எடுத்துக்கொள்பவர் இவரே” என்றாள் முதற்செவிலி. “இனி பேச ஏதுமில்லை. நம் இளவரசியின் நிமிர்வை அவர்களால் ஏற்கமுடியாதென்று உறுதியாகிறது. இவளருகே வாளேந்தி நின்றிருக்கும் ஒருவனையே ஊழ் தேடிக்கொண்டிருந்ததுபோலும். அந்நிஷதன் முப்புரமெரித்தவள் காலடியின் சிம்மம்” என்றாள்.

அப்பேச்சை அவளிடம் இளஞ்சேடி சொன்னபோது அதைத்தான் தானும் எண்ணினோமா என அவள் தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள். முதல் புறக்கணிப்புக்குப்பின் எப்படி அவன் தன்னுள்ளத்தில் வளர்ந்தான்? தன்னை முழுமையாக அவள்முன் வைத்துவிட்டிருப்பதை அவன் காட்டினான். பிறந்து எழுந்த இடத்திலிருந்து ஒவ்வொன்றாகத் துறந்து அவன் அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான். அந்த அன்னம் தன் அறைக்குள் வந்த நாளை அவள் நினைவுகூர்ந்தாள். இளம்புன்னகையுடன் அவள் சோலையில் அமர்ந்திருக்கையில் அன்னை அருகே வந்தாள். அவள் எழுந்து தலைவணங்க அருகே கல்பீடத்தில் அமர்ந்தாள். அவள் என்ன சொல்லவந்திருக்கிறாள் என்பதை நன்குணர்த்தியது முகம். தமயந்தி புன்னகை புரிந்தாள்.

“இத்தனை நாள் தெரியாத எதையோ அஞ்சி இந்த மணத்தன்னேற்பை தவிர்த்து வந்தோம். அமைச்சரவையைக் கூட்டி சொல்கேட்டால் ஆளுக்கொன்று சொல்வார்கள். ஷத்ரியர்பகை சூழும் என்ற சொல் உன் தந்தையை நடுங்கச்செய்யும், அனைத்திலிருந்தும் பின்வாங்கிவிடுவார். இன்று ஓர் இடர்ச்சூழலில் பாய்ந்து நெடுநாள் அஞ்சிநின்றதை மிக எளிதாக செய்துகொண்டிருக்கிறோம்” என்றாள் அன்னை. “முதலையை அஞ்சியவனுக்கு நீச்சல் கைவருவதுபோல என்பார்கள்.” தமயந்தி புன்னகை செய்தாள்.

“நாளை மறுநாள் உன் மணத்தன்னேற்பு என அறிந்திருப்பாய். நாம் அஞ்சிய முடிமன்னர் அனைவரும் வருகிறார்கள் என செய்தி வந்துள்ளது. நீ எவரை வேண்டுமென்றாலும் தெரிவுசெய்யலாம்” என்றாள் அன்னை. “ஆம்” என்றாள் தமயந்தி. “உன் தந்தையின் விருப்பம் நீ கலிங்கனை தெரிவுசெய்யவேண்டும் என்பது. அர்க்கதேவன் அனைத்து வகையிலும் உனக்கு பொருத்தமானவன். கலிங்கம் நம் அணுக்கநாடு. அதன் துறைமுகங்களுடன் நாம் கொண்டுள்ள காடுகளும் இணைந்தால் மாபெரும் நாடு ஒன்று உருவாகக்கூடும் என்கிறார்கள் அமைச்சர்கள்.” தமயந்தி புன்னகை மட்டும் செய்தாள்.

எப்போதும்போல அப்புன்னகை அன்னையை சினம்கொள்ளச் செய்தது. “நான் உன் புன்னகையின் பொருளை அறிவேன். நீ அந்த நிஷதனை நினைத்திருக்கக் கூடும். அவனுக்கு அவைக்கு அழைப்பே இல்லை. அவன் வந்தாலும் அவைநிற்கவைக்கும் எண்ணம் அரசருக்கு இல்லை. அவன் எவ்வகையிலும் உனக்குரியவன் அல்ல. ஷத்ரியப் பெண்ணாகப் பிறந்தாய். நிஷாதனின் மைந்தரைப் பெற்றால் நம் குடிக்கு இழிவு.” தமயந்தி சீண்டும் சிரிப்புடன் “அவர்கள் அனல்குலத்து ஷத்ரியர். பிருகுவின் வழிவந்த பார்க்கவ ராமனால் முடியளிக்கப்பட்டவர்கள்” என்றாள்.

“அதெல்லாம் அவர்கள் சொல்லிக்கொள்வது… அப்படிப் பார்த்தால் அத்தனை கிராதர்களும் தங்களை அரசர்கள் என்றே சொல்லிக்கொள்கிறார்கள்” என்றாள் அன்னை. “இருபத்தேழு தலைமுறைகளுக்கு முன்பு நாமும் கிராதர்களாகவே இருந்தோம்” என்றாள் தமயந்தி. “எவர் சொன்னது? அதெல்லாம் வெறும் கதை” என்று அன்னை சினந்து கூவினாள். “அப்படியே இருந்தாலும் நம் முன்னோர் ராஜசூயங்களும் அஸ்வமேதங்களும் ஆற்றி அடைந்த இடம் இது… அத்தனை ஷத்ரியர்களும் வேர்பிடித்துப்போனால் கிராதர்களும் அசுரர்களும்தான்.” தமயந்தி “நிஷதர்களும் அவற்றை எல்லாம் ஆற்றலாமே?” என்றாள். “அப்படி என்றால் நீ அவ்வெண்ணத்தையே கொண்டிருக்கிறாய் அல்லவா? நிஷாதனை மணக்கவிருக்கிறாயா?” என்றாள் அரசி. “நான் எம்முடிவையும் எடுக்கவில்லை. பேச்சுக்காக சொன்னேன்” என்றாள் தமயந்தி.

அன்னை தணிந்து “ஆம், நான் உன்னை அறிவேன். அருணவர்மனை நீ மணந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னரே கைம்பெண் ஆகியிருப்பாய். அவன் பீதர்களுடனான போரில் கொல்லப்பட்டான். இப்போது மணிமுடிக்குரியவனாக இருப்பவன் அர்க்கதேவன். ஆற்றல்மிக்கவன்… அவனை மணமுடித்தால் அனைத்தும் ஒழுங்குக்கு வந்துவிடும். நீ உன் நலம் நாடி எம்முடிவையும் எடுக்கக் கூடாது. நாட்டுக்காகவே ஷத்ரியர் வாழவேண்டுமென்பது ஸ்மிருதிகளின் கூற்று” என்றாள். அவள் புன்னகைத்தாள்.

flowerஅவர்கள் தனித்திருந்த முதல்நாள் நிலவிரவில் நளன் அவளிடம் அதைத்தான் கேட்டான். “நீ அர்க்கதேவனை தேர்ந்தெடுப்பாய் என்றே அனைவரும் எண்ணியிருந்தனர். எவ்வகையில் எண்ணி நோக்கினாலும் அதுவே அரசியலாடலில் சிறந்த முடிவு.” அவள் கைகளைப்பற்றி தன் கைகளுக்குள் வைத்தபடி “நீ எளிய பெண்ணல்ல, ஒவ்வொரு சொல்லிலும் அரசியலாடுபவள் என்றார்கள்” என்றான். அவள் புன்னகையுடன் “நான் ஏன் அம்முடிவை எடுத்தேன் என நீங்கள் எண்ணுகிறீர்கள்?” என்றாள். “என் காதலின்பொருட்டு என்று எண்ணவே நான் விரும்புகிறேன்” என்றான் நளன். “ஆம், அதற்காகவே” என்றாள் தமயந்தி.

“நீ இதை எனக்காக சொல்கிறாய். இதுதான் அரசியல்சொல்” என்று அவன் சொன்னான். “பிறகு என்ன சொல்லவேண்டும்? நிஷதநாட்டை நான் அடைந்ததன் நலன்களை சொன்னால் நிறைவடைவீர்களா?” என்றாள். “விளையாடாதே” என்றான் நளன். “நான் என்ன சொல்லவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?” என்றாள். “இது என்ன வினா?” என்று அவன் சினந்தான். அவள் அவன் பின்னிழுத்துக்கொண்ட கைகளைப் பற்றியபடி “நான் சொல்லவா?” என்றாள். “சொல்” என்னும்போதே அவன் முகம் சிவந்துவிட்டது. “நீங்கள் நெடுங்காலம் காத்திருந்து என்னை அடைந்தீர்கள். உங்களை முழுக்க எனக்கு உகந்தவராக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த முழுப் படையலுக்கு மறுதுலாத்தட்டில் நான் எதை வைப்பேன் என்று அறிய விழைகிறீர்கள்.”

மூச்சுத்திணற “இதென்ன வணிகமா?” என்றான் நளன். “வணிகம் என்றால் என்ன? மானுட உறவுகளை பொருளில் நடித்துப் பார்ப்பதுதானே?” என்றாள் தமயந்தி. “கூரிய சொற்கள் எனக்கு சலிப்பை அளிக்கின்றன. நாம் இங்கு அரசியலாடவா வந்துள்ளோம்?” என்றான் நளன். “நீங்கள் கேட்டதனால் சொல்கிறேன்” என்றாள் தமயந்தி. “கேட்க விருப்பமில்லை என்றால் சொல்லவில்லை” என அவள் புன்னகைக்க அவன் சினம் கொண்டு “நான் என்ன உன் சொல்லை அஞ்சுகிறேன் என நினைக்கிறாயா? சொல்” என்றான். “நான் மறுதுலாத்தட்டில் என்னை முற்றிலும் படைக்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்.”

“இல்லை” என்று அவன் சொன்னான். “ஆம், அதை நீங்கள் உள்ளாழத்தில் கொண்டுள்ள நம்பிக்கையின்மை கரையும்படி கண்ணீருடன் சொல்லவேண்டுமென விழைகிறீர்கள். இப்போது நான் என்னை குழைத்து உங்கள் காலடியில் சாந்தெனப் பூசினால் கரைந்து விழிநீர் உகுப்பீர்கள். என்மேல் பேரன்பு கொள்வீர்கள். எனக்கென அனைத்தையும் அள்ளி வைப்பீர்கள். ஆனால் சின்னாட்களில் மீண்டும் அந்த ஐயம் எழும். மீண்டும் இந்த நாடகம் தேவைப்படும். இது நிகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும், வாழ்நாள் முழுக்க.” நளன் அவளை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். அவள் அவனை நோக்கி கனிவுடன் புன்னகை செய்து “ஆனால் நான் உங்களுக்காக தவம் செய்யவில்லை” என்றாள்.

“ஆம்” என்றதுமே சோர்வு வந்து அவனை பற்றிக்கொண்டது. தலைகுனிந்து “நீ விழைந்தது என்னை அல்ல” என்றான். “இல்லை என நான் மறுக்கவேண்டுமென உங்கள் உள்ளம் விரும்புகிறது. அதை நான் பொய்யாக சொல்லப்போவதில்லை. நான் ஒருபோதும் ஆணுக்காக விழைந்ததில்லை. எளிய மானுடனுக்காக தவம் செய்வேன் என எண்ணவும் இயலவில்லை.” நளன் சீற்றத்துடன் “ஏன், எளிய மானுடப்பெண் அல்லவா நீ?” என்றான். “ஆம், மானுடப்பெண். ஆகவே என்னுள் எழும் நிறைவின்மைக்கு இன்னொரு மானுடன் விடையாக இயலாது” என்றாள் தமயந்தி.

“உனக்கு என்னதான் வேண்டும்?” என்று அவன் சீற்றத்துடன் கேட்டான். “தெரியவில்லை” என்றாள். “எனக்கே தெரியாத ஒன்றை முழு உளவிசையுடன் கணமொழியாது இப்பெருவெளியிடம் வேண்டிக்கொண்டிருக்கிறேன்.” அதற்குமேல் அவனுக்கு சொல்ல ஏதுமிருக்கவில்லை. கைகள் இரண்டும் இயல்பாகவே விலகிவிட்டிருந்தன. மீண்டும் நீண்டு அவை ஒன்றை ஒன்று தொட நெடுந்தொலைவு பயணம் செய்யவேண்டுமென்றும் முற்றிலும் அயலான ஒன்றென அதிர்வுடனும் ஒவ்வாமையுடனும்தான் அத்தொடுகை நிகழுமென்றும் தோன்றியது,

“அன்னத்தை ஏன் அனுப்பினீர்கள்?” என்று அவள் கேட்டாள். அவன் முகம் அக்கணமே மலர்ந்தது. “உன்னையும் அன்னத்தையும் என்னால் பிரித்துப்பார்க்க முடியவில்லை. உன்னுள் உள்ள மிக மென்மையான ஒன்றின் வடிவம் அது என்று தோன்றியது. இங்கு நானும் அன்னங்களை வளர்க்கலானேன். அன்னத்தூவியை மிக மெல்ல தொட்டு நீவும்போது உன்னை மிக அணுக்கமாக உணர்கிறேன் என்று தோன்றியது” என்றான். முகம் சிவக்க மூச்சுதிணற குரல் கம்ம “நான் அன்றிரவு தனித்திருந்தேன். அதுநாள் வரை எண்ணி எண்ணிக் குவித்தவை எல்லாம் அன்றிரவு கூர்கொண்டுவிட்டன. அன்றிரவு முழுக்க அந்த அன்னத்திடம் பேசினேன்” என்றான்.

“பேசினீர்களா?” என்று அவள் கன்னங்களில் குழிகள் விழ சிரித்தாள். “மெய்யாகவே பேசினேன். விழிநீர் உகுத்தேன். பின்னர்…” என்று திணறி சொல்லை அடக்கியபின் கைகளை விரித்தான். “சொல்லுங்கள்” என்றாள். “என் விழிநீரை கைகளில் தொட்டு எடுத்து அதற்கு நீட்டினேன். அது அலகுநீட்டி அத்துளியை பருகியது.” அவள் வளையல்கள் ஒலிக்க கைதட்டி சிரித்துவிட்டாள். “சிரிக்கத்தக்கதுதான். ஆனால் அன்று எனக்கு அத்தருணம்…” என நளன் திணறினான். “என்ன செய்தீர்கள்?” என்றாள்.

“அழுதுகொண்டே இருந்தேன். காலையில் என் நெஞ்சு ஒழிந்துகிடந்தது. பல ஆண்டுகாலமாக சேர்ந்த சொற்கள் ஒன்றுகூட எஞ்சவில்லை. அத்தனை வெறுமையையும் விடுதலையையும் நான் அறிந்ததே இல்லை. என்னருகே என்னிலிருந்து வெளியே வந்து நின்ற என் உணர்வுகள் என அது நின்றிருந்தது. ஒற்றனை அழைத்து அந்த அன்னத்தை உன் அறைக்குள் விட்டுவிடவேண்டும் என ஆணையிட்டேன்.” அவள் “ஓ” என்றாள். “நீ அதைக் கண்டதுமே அறிந்துகொண்டாய் என ஒற்றன் சொன்னான். அதை நெஞ்சுடன் தழுவிக்கொண்டாய் என்றான்.”

“ஆம்” என்றாள். அவன் தாழ்ந்த குரலில் “ஏன்?” என்றான். “அது நீங்கள் அல்லவா?” என்றாள். “ஆம்” என்றான். அவர்களின் கைகள் இயல்பாக நீண்டு தழுவிக்கொண்டிருந்தன. “என்னை முதன்முதலாக பார்த்தபோது என்ன நினைத்தாய்?” என்று கேட்டான். அவள் புன்னகை செய்தாள். “ஏன்?” என்றான். “உலகின் மிகத் தொன்மையான வினா போலும் இது.” அவன் “இருக்கலாம், சொல்” என்றான். “மிக இளையவர் என்று” என்றாள். “ஏன்?” என்று அவன் கேட்டான். அவள் அவ்வாறு சொன்னது ஏன் தன் உள்ளத்தை கிளர்ந்தெழச் செய்கிறது என்று வியந்துகொண்டான். “நான் மூத்தவள் என்பதனால்தான்” என்றாள். அவன் சற்று சினந்து “சொல்” என்றான். “ஓவியங்களில் தெரிவது முகங்களின் ஒரு காட்சி மட்டுமே” என அவள் சொன்னாள். “பன்னிரண்டு ஆண்டுகாலம் நீங்கள் ஒரே உணர்வில் நின்றுவிட்டீர்கள். அகவை மிக அகன்று நின்றுள்ளது.”

அவன் உணர்வுமீதூர “ஆம், நான் பிறிதெதையும் எண்ணாமல் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். இந்நகரையும் என் குடியையும் என் உணர்வுகளுக்கேற்ப இழுத்துவந்தேன்” என்றான். “அரசனை குடிகள் தொடர்வது வழக்கம்தானே?” என்றாள். அச்சொல்லின் பொருளின்மையை உணர்ந்து அவள் விழிகளை அவன் ஏறிட்டுநோக்கியபோது அவை காமம் கொண்டிருப்பதை கண்டான். அவன் உடல் மெல்ல அதிரத் தொடங்கியது. விழிகளை விலக்கிக்கொண்டு “நான் பிறிதெதையும் நினைக்கவில்லை” என பொருளற்ற சொற்றொடர் ஒன்றை தானும் சொன்னான். அவள் கைகள் அவன் தோளில் படர உடல் அவன் மேல் ஒட்டியது. “உம்” என அவள் முனகியது அவன் காதில் ஒலித்தது.

அன்று முயக்கத்தினூடாக அவள் அவனிடம் “அன்னம் போலிருக்கிறீர்கள்” என்றாள். “நானா?” என்றான் அவன். “ஆம், அது நூறு வளைவுகளின் ஆயிரம் நெகிழ்வுகளின் உடல்கொண்டது.” அவன் “ஆம்” என்றான். “அன்று அறையில் உங்கள் அன்னத்தைப் பார்த்ததும் அதைத்தான் எண்ணிக்கொண்டேன்” என்றாள் தமயந்தி.

முந்தைய கட்டுரைகூலிம் இலக்கிய விழா
அடுத்த கட்டுரைசினிவா ஆச்சிபி