சபரிநாதன் கவிதைகள் – காளி பிரசாத்

2 (2)

அன்புள்ள சார்,

சென்ற மே மாத இறுதியில் அதுவும் இருநாட்களில், மூன்று வெவ்வேறு திசைகளிலிருந்து சபரிநாதன் கவிதைகளைப் பற்றி கவனிக்கத்தக்க குறிப்புகள் கிடைக்கப்பெற்றேன். முதலில் குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது, மறுநாள் கவிஞர்.யுமாவாசுகி தன் உரையாடலில் கூறியது அடுத்து இம்மாத தடம் இதழில் கவிஞர். விக்ரமாதித்தன் பேட்டியில் தனக்கு பிடித்த கவிதைகளில் ”சனீஸ்வரனிடம் பயிற்சி பெற்ற அம்மாச்சி” யை குறிப்பிட்டிருந்தது.. அன்றுதான் இவரின் இரு கவிதை தொகுதிகளையும் வாங்கி படிக்கத்துவங்கினேன். இதுவரையில் சமூக வலைதளத்திலோ, வெகுஜன, இடைநிலை இதழ்களிலோ இவர் பங்களிப்பு அதிகம் இல்லை என்பதால் இவரைப்பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. அது சற்று வெட்கமாகத்தன் இருந்தது. இன்னும் என்னைத் தேடி வரும் தகவல்கள் சூழத்தான் வாழ்கிறேன் என்ன..

கவிதைகள் அளிக்கும் செய்தி பிடிபடாத நாட்கள் இருந்தன. கவிதைகளை வாசிக்கையில், அதன் அனத்தலே முன்வந்து நின்றிருக்கிறது. என்னிடம் சொல்வது ஒரு புலம்லைத்தான் என்பது போல. அதைக் கடக்க ஞானக்கூத்தனை மட்டுமே பற்றிக்கொண்டு வந்திருக்கிறேன். ஊட்டியிலிருந்து, தேவதேவனிடமிருந்து வாங்கி வந்த மாற்றப்படாத வீடு ஒருமாதமாகியும் இன்னும் முடிக்கப்படாத நிலையிலேயே, இரு கவிதை தொகுப்புகளை ஒரு வார காலத்தில் படித்து ஒரு கடிதமும் எழுத உட்கார்ந்திருக்கும் ஒரு தன்னம்பிக்கை பிரமிக்க வைக்கிறது

சபரியின் களம்-காலம்-ஆட்டம் தொகுப்பில் இருந்த பல்லிக்குஞ்சுகள் கவிதையிலிருந்தே அதை ஒழுங்காக படிக்கத் துவங்கினேன். அது ஞானக்கூத்தன் ஞாபகத்தை கொண்டு வந்து வைத்தது

/ஒருநாள் ராச்சாப்பாட்டின்போது அம்மா அப்பாவிடம் இன்னொரு மாடியெடுத்தால் என்ன/என்ற யோசனையைக் கூறினாள் அப்போது பார்த்து ஒரு கௌளி கத்தியது/எங்களுக்கு ஆச்சர்யம் அவனோ தான் பிய்த்த தோசையைக் கைவிட்டான்/மாடிகள் கூடக் கூட பல்லிகளுக்கு ஒரே குஷி இருட்டில் ஓடியோடிப் புணர்ந்தலைந்தன/கவிஞனுக்கோ தலைசுற்றலும் வாந்தியும் அதிகமாகி வருகிறது/அவனுக்குத் தெரியுமா கீழே விழுந்தால் தப்பிப்பதற்கான வாய்ப்பு குறைந்துகொண்டு வருவது..//

அதன் பின் அத்தொகுப்பில் இருந்த உயர்திரு ஷன்முகசுந்தரம் கவிதை அதை இன்னும் உறுதிசெய்தது. ஆனால் இவர் ஞானக்கூத்தன் வகையறா இல்லை என்பதையும் உணர்ந்திருந்தேன். சபரிநாதனுக்கு தன் கவிதை மரபு மீது நல்ல பயிற்சி இருக்கிறது. அவர் தேவதச்சம் கட்டுரையும், தேவதச்சன் உரையுமே அவர் தன் படைப்பு மீது எந்தளவு கவனம் கொள்வார் என்பதை உணர்த்துகிறது. ஐந்து வருடங்கள் கழித்து வந்த ”வால்” தொகுதியை படிக்கயில் அவர் அதை முழுவதும் உணந்திருக்கிறார் என்பது தெரிகிறது, ஒரு கவிஞனின் இரண்டாம் தொகுப்பே மிக முக்கியமானது அதில்தான் அவரது முழு ஆளுமை வெளியாகிறது என நீங்கள் சொல்வதுண்டு. வால் தொகுதியில் சபரியின் முதல் தொகுப்பில் இருந்த ஒரு இன்பாக்ஸ் கவிதை தன்மை போய் விட்டிருக்கிறது என்று நினைக்கிறேன் . அதுவே அவரை தனித்தும் காட்டுகிறது. கவனம் என்று சொல்வது அவர் தன் மொழிமீது கொள்ளும் கவனமும் தான். கன்மம், கூதல் என்று சொற்களைத்தேர்ந்தே கையாளுகிறார்.

இதற்கு முன் படித்த குமரகுருபரனின் கவிதைகளும் சொற்களை பேணுவதில் அங்ஙனமே இருந்திருக்கின்றன. குமரகுருபரன் தன் குடும்ப சூழலிலேயே இயல்பாக மொழியை அணுகும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். அதனாலே என்னவோ கவிதை முதலில் வாய்த்திருக்கிறது. அந்த கவிதை குறித்த அறிதலை/ அதன் வடிவத்தை/ நுட்பங்களை துவக்கத்தில் அறிந்திருக்கவில்லை. பின்னர்தான் அதை புரிந்து தொடர்திருக்கிறார். அதிலும் மதில் மேல் பூனையாகவே தன்னை உருவகிக்கிறார். ஆனால், சபரிக்கு அந்த தேற்றங்கள் முதலிலேயே இயல்பாகவே பழகியிருக்கின்றன. ஒரு எதிர்நிலை போலத்தான் தோன்றுகிறது இருவருக்கும். இருந்தாலும், இந்நூற்றாண்டில் கவிதை கொண்ட மாற்றத்தை ஒத்தே தனிமை /காமம்/ பிதற்றல்/ எக்கம் கொண்ட படைப்புகள் இருவருக்கும் பொதுவாகவே நிகழ்ந்திருக்கின்றன. மிக முக்கியமாக இருவரும் ஐந்தாறு பக்கங்கள் தாண்டும் நீள் கவிதைகளை எழுதுவதில்லை. ( என்பது எவ்வளவு பெரிய ஆறுதல்) . ஆனால் சபரியிடம் அதையும் கடக்க செய்யும் முயற்சிகள் இரண்டு இருக்கின்றன. :-)

இறுதிவரியில் தன் கவிதையின் திரண்ட கருத்து போல ஒரு வரியை குறிப்பிடுவது குமரகுருபரனின் பாணி எனலாம்…

//உண்மையில் நாம் மிகத் தெளிவாகவே ஆகிறோம்/ ஒரு மதுப்போத்தலின் முடிவில்// ( ஞானம் நுரைக்கும் போத்தல் )

// எனினும், புறக்கணிப்பை தாம் அறிந்த ஞானத்தின் பொருட்டும்/எருமைகள் பெரிதுபடுத்துவதில்லை//

//உண்மையில் யாரும் இறப்பதே இல்லை //

//மிருகங்களின் விழிகளால் இருட்டைக் கடக்கிறது மொழி எவ்வுலகிலும்// ( மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்க முடியாது)

இவ்வாறு நாமும், யார்க்கும் எங்கும் என அவர் தான் உணர்ந்ததை சொல்லிக்கொண்டிருக்கிறார். இது பிறகு அனேக கவிஞர்களின் படைப்புகளிலும் காண முடிந்தது.

ஆனால் சபரியின் சமீபகால படைப்பான ”வால்” தொகுப்பில் அவர் வாசகனுக்கு என எதுவும் உரைப்பதில்லை. அது ஒரு முக்கியமான மாற்றமாக எனக்குத் தோன்றியது. இந்த தொகுப்பின் கவிதைகள் பெரும்பாலும் தனக்குள் பேசும் தன்மை அல்லது ஒரு பிரார்த்தனையைபோன்ற வடிவம் கொண்டுள்ளன

// இனி நான் வெறுங்கையுடன் பயணிக்கவேண்டும் ஓர்/ அலைசறுக்கு வீரனைப் போல// ( நல்வரவு -வால்)

// தேவனே, உண்மையில் நான் மறந்துவிட்டேன்/ நான் ஏன் புகைக்கிறேன் என்பதை// ( நான் ஏன் புகைக்கிறேன் – வால் )

அல்லது பகடிசெய்து கடக்கின்றன

// இது பஜனைக்கான நேரம்/ மூன்றும் தமக்குள்ளேயே சிரித்துக்கொள்கின்றன/ உலகமே வேடிக்கை பார்க்கிறது/ என்ன செய்யப்போகிறார் என் ஏழைத்தந்தை// ( மூன்று குரங்குகள் – வால் )

நான் தனித்து நின்று இந்த உலகை எதிர்கொள்கிறேன் அப்போது எனக்கு இங்ங்னம் தோன்றுகிறது என சொல்வதே அவரின் கவிதைகளின் நோக்கம். அதற்குள் இதுவரையில் நவீன கவிதை அடைந்துள்ள அத்துணை வடிவங்களையும், இவர் சோதித்து பார்க்கிறார். அதற்கான களம்-காலம் எல்லாம் வாய்த்திருக்கிறது. ஆட்டம் இன்னும் தொடர்ந்து, வரும் ஆண்டுகளில் தமிழின் மிக முக்கிய கவிஞராக அடையாளம் காணப்படுவார். இந்த குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது அதற்கான ஒரு துவக்கம்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 16
அடுத்த கட்டுரைஜெயகாந்தன் , கங்கா ஈஸ்வர்- கடிதங்கள் –