சபரிநாதன் கவிதைகள்- கடலூர் சீனு

11377335_1042072852470269_2572984212452231563_n

இனிய ஜெயம்,

நமது கவிதை விவாதக் கூடுகைகளில் தொடர்ந்து பங்கு கொண்டும் தினமும் ஏதேனும் ஒரு கவிதையுடன், அது குறித்த கட்டுரை உடன், உறவாடிக்கொண்டிருந்ததன் பயன், கவிஞர் தேவதச்சன் அவர்களுடன் உரையாடுகையில் முழுமை கொண்டது என்பேன். அவருடனான உரையாடல் கவிதைகள் வாசிப்பு மீதான ”பிடி கிட்டிய ” தருணம்.

உள்ளே ஆணி அடித்து இறங்கிய முதல் பாடம் சும்மா ஓரிரு முறை ஒரு கவிதையை வாசித்து விட்டு புரியல என்று உதட்டை பிதுக்குவதோ புரிஞ்சது என்று கடந்து போவதற்கானதோ அல்ல கவிதை. ஒரு கவிமனம் ”பிறிதொன்றில்லா தனித்துவமான ஒன்றினை” காற்றில் இலங்கும் மகரந்தம் போல மொழியில் பொதிந்து கையளிக்கும் செயல்பாடே கவிதை. ஒரு கவிதை வாசகன் செய்ய வேண்டியது தனது அகம் ஏந்த அந்த மகரந்தச் சேர்க்கைக்காக காத்திருப்பதே.

உதாரணமாக பிரமிளின் ”பாதைதோறும் நிழல் வலைக் கண்ணிகள்” எனும் வரி. சும்மா நினைவுகளுக்குள் சிக்கி உழன்று கொண்டே இருந்த ஒன்று. நிழல் வலைக்கண்ணி என்பது பறவைகளைப் பிடிக்க நிழலில் தானியங்களை பரப்பி அதன் கீழே வலையை விரித்து வைக்கும் ஒரு உத்தி என மிக மிக பின்னால் விழுப்புரத்தில் ஒரு குறவர் வசமிருந்த அறிந்தேன்.

அதற்கும் மிக மிகப் பிந்தியே பறவைகளின் விரல்கள் குறித்து அறிந்தேன். பறவைகள் கிளைகளில் வந்து அமர இயல்பாக அதன் அனைத்து விரல்களும் பாதி வளையமாக அமைந்திருக்கும். அவற்றால் விரல்களை நீட்டி மடக்க இயலாது. பறவை தானியம் பொறுக்க தரை வந்துவெயிலில் சமதளத்தில் நிற்கவேண்டி அதன் விரல்கள் விரித்து தட்டை ஆகும். மீண்டும் அவை பறக்க எழுகையில் அதன் விரல்கள் மடங்கும். மடங்கும் விரல்கள் வலையில் சிக்கிக் கொள்ளும்.

பின்னொரு சமயம் விருப்பித் தேர்ந்து, இழைத்துக்கொண்ட அவமானத்தில் எரியும் அகத்துடன் அந்த கட்டிடத்தில் இருந்து வெளியில் வந்தேன். வன்மதியம், சிறு காற்றுமில்லா வெற்று வெயிலில் கட்டிடங்களும், மரங்களும், வாகனங்களும், சாலை தடுப்பரண்களும், அதன் நிழலில் அதுவே சிக்கி ஸ்தம்பித்து நின்றிருந்தன. எனது அகமும் புறமும் சிக்கி ஸ்தம்பித்த அந்த நொடியில் வந்து விழுந்தது பிரமிளின் வரி ”பாதைதோறும் நிழல்வலைக்கண்ணிகள் ” ஆம் ஆம் ஆம் என ஆயிரம் முறை அரற்றி இருப்பேன். அற்ப மானுடன் சிக்கி அலைக்கழிய அவன் பாதை எங்கும் கண்ணிகள், பேராசை, பெண்பித்து, வித விதமான நிழல் வலைக் கண்ணிகள். அவனால் சென்று அமராமல் இருக்க இயலாது. சென்றால் மீள வழி கிடையாது. ”பாதை தோறும் நிழல்வலைக் கன்னிகள் ”.

எனது கவிதை வாசிப்பை இவ்வாறு வகுத்துக் கொண்டேன். ஒரு நாளுக்கு ஒரு கவிதை. அந்த நாளின் கவிதை. குறிப்பிட்ட அனைத்து கவிதைகளையும் வாசிப்பேன். அது எழுந்து வந்த பின்புலம் உட்பட. அக் கவிதை சுட்டும் தனித்துவமான கணம் ”உள்ளே ” வரும் வரையில், அக் கவிதை சுட்டும் அக் கணம் பேசப்பட்ட வேறு சில புனைவுக் கணங்களை அக் கவிதையுடன் இணைத்து யோசிப்பேன். உணர்கொம்புகளை நம்பி காத்திருப்பேன். எல்லாவற்றுக்கும் மேல் எனக்குப் புரியாத, என் உணர்வு வட்டத்த்துக்குள் வராத கவிதைகளும் [ பெரும்பாலும் பலரும் பாராட்டும்] இருக்கும். ஒன்றும் செய்வற்றைக்கு இல்லை.

சபரி நாதன் கவிதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக இணையத்தில் வாசித்திருக்கிறேன். தற்போதுதான் தொகுதியாக கையில் எடுத்திருக்கிறேன்.

கொண்டு கூட்டி
கொள்ளமுயலுந்தோறும்
குழம்பிப் பொருள்மாறுமந்த சீரிளமைத் தேகம்
தளை தட்ட

துறைவிட்டகலாது மருகி நிற்கிறது
மல்லர்ப்பெறியாற்றின்
நீர்வழிப்படுவூம் எனது புணை.

என்ற மோகனரங்கன் கவிதையைத்தான் சொல்லவேண்டும் ஒரு வாசகனாக சபரிநாதன் கவிதையை தொகுதியாக அணுகுகையில் கிடைத்த அனுபவத்தை.

எனது வழமை போல தினம் ஒரு கவிதையாகத்தான் அணுகப் போகிறேன். இதில். , சபரிநாதனின் கவிதைகளை உள்வாங்க நமது கவிதை விவாத அரங்கு அளிக்கக்கூடிய அடிப்படையான தளம் போன்ற ஒன்றினை நண்பர் மணிகண்டனின் ஒளிகொள் சிறகு அளித்தது. அநேகமாக சபரிநாதனின் கவிதைகள் சாரத்தை, அழகியலை வகுத்து அளித்த முதல் கட்டுரையாக இது இருக்கக்கூடும்.

பின் சென்று அவர் தேவதச்சன் கவிதைகள் குறித்து பேசிய காணொளியை கண்டேன். உரையை விடுங்கள். கவிஞரை பாருங்கள். சபரிநாதன் அழகன். கம்பீரன். இசையமைப்பாளர் இளையராஜாவின் இடது கண் எப்போதும் ஒரு தீராத வியப்பை வெளிக்காட்டும் வகையில் விரிந்திருக்கும். மேடையில் இளையராஜாவையும், கவிஞர் தேவதேவனையும் அருகருகே காண்கயில் கண்டேன், தேவதேவனின் இடது விழியும் இளையராஜா போலவே வியப்பில் விரிந்த விழி. சபரிநாதனின் வலது விழி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி வலது விழியை ஒத்தது. உருவிலும், உள்ளுறை தன்மை ஒன்றின் வெளிப்பாட்டிலும். ஜிட்டுவும் கவிதைகள் எழுதி இருக்கிறார் என நினைக்கிறேன். முதல் வாசிப்பிலேயே கவர்ந்த கவிதை விழி

விழி

அஸ்தமனம்-சாய்கதிர்கள் மெது மெதுவாக உருட்டி விரிக்கின்றன நிழற்பாய்களை.
வெண்ணிற இரவுகளின் நாயகனைப் போல நானும் அஞ்சுகிறேன்
‘எல்லோரும் எனை விட்டுப் போகிறார்களோ…’
இது மார்கழி. கருக்கலின் அடர்புதர் மறைவினின்று இரவு பாய்கையில் எனக்குத்
தோன்றுகிறது,
இப்போதிந்த மொத்த அந்தகத்தையும் நான் ஒருவனே குடித்தாக வேண்டுமென்று
ஆதலின் இருளில் மட்டும் பிரதிபலிக்கும் சொல்லை உச்சரிக்கிறேன்:தனிமை.
ஆயினும் இப்புராதன உடலோ விதிர்த்து, எனக்கெதிராய் காய் நகர்த்த,
இன்னும் இன்னும். . என விரிகிறது கண்மணி:உற்பவம்.

நிமிர்கையில் தென்படுவது
தொடுவான மலைத்தொடரின் வரைகோடு
பைய்யப் பைய்ய வெளிவருவன
மரங்கள், தெருக்கள், கோபுரங்கள், வீடுகள்
அம்மாக்கள், அப்பாக்கள், அக்கா தம்பிகள்
அணிற்பிள்ளைகள், கோழிக்குஞ்சுகள்……

எல்லோரும் என்னை விட்டுப் போகிறார்களே. . . வெண்ணிற இரவுகளின் நாயகன் போல புலம்பும் கவி மனத்தை சேர்ந்த எல்லோரும் ”பகலுடன் ” ”ஒளியுடன் ” இணைந்தவர்கள். பகலுடனும் ஒளியுடனும் இணைந்து எண்ணும் அனைவரும் போவதை விட தனிமைத் துயர் பிரித்துண்டா என்ன? இருளில் மட்டுமே பிரதிபலிக்கும் சொல் தனிமை. உச்சரிக்கப்பட்டதுமே உடல் விதிர்த்து எழுகிறது. இன்னும் இன்னும் என விரிகிறது கண்மணி. [ இரவு நாவலில் நாயகன் மெல்ல மெல்ல இரவுலாவி ஆக மாறும் பொழுது, இந்த சித்தரிப்பு விரிவாக வரும்]

நிமிர்கையில் தென்படுவது
தொடுவான மலைத்தொடரின் வரைகோடு
பைய்யப் பைய்ய வெளிவருவன
மரங்கள், தெருக்கள், கோபுரங்கள், வீடுகள்

துல்லியமான புறத்திலிருந்து துவங்கி,

அம்மாக்கள், அப்பாக்கள், அக்கா தம்பிகள்
அணிற்பிள்ளைகள், கோழிக்குஞ்சுகள்……

அகத்தில் முடியும் கவிதை. ஆசுவாசம் கொள்ளவைக்கும் கவிதை.

நியூ ஜம்போ சர்க்கஸ் கவிதை கம்பியில் நடக்க வேண்டும், மிருகங்கள் இரண்டு கால்களால் நடக்க வேண்டும். அந்த பிரயத்தனங்கள் மேல் மைய ஒளி பாய்ச்சப்பட வேண்டும். மக்கள் ”கவனிக்க ” இத்தனையும் வேண்டும். அத்தனை ”வித்தைகளும்” முடிந்து வெறித்த களத்தில் ஒருவராலும் ”கவனிக்கப்படாத” ”அதிசயம் ” அரங்கேறுகிறது. ஆம் மீண்டும் அங்கே புற்கள் முளைக்கின்றன. உயிர் என்பதைக் காட்டிலும் இப் புவியில் பெரிய அதிசயம் வேறில்லை. மின்மினி கவிதை முழுக்க முழுக்க உயிர் குறித்த கவிதையாகவே எனக்கு பொருள் பட்டது. பொருண்மயப் பிரபஞ்சத்தில் வந்து விழுந்த முதல் உயிர்த்துளி. ஆதி உயிர்த்துளி.

ஒரு மழைப் பூச்சியை அறிதல் கவிதை அளிப்பது ஒரு சொடுக்கும் அனுபவம். செத்து விட்டதாக அருகே சென்று புரட்டிப் பார்க்கையில் அந்தப் பாம்பு சட்ரென்று தலை தூக்கினால், உள்ளே ஒரு கணம் சொடுக்கும். அது உயிர்ப் பீதி அளிக்கும் சொடுக்கு. ஆனால் உணர் கொம்பும், ஒளிர்ச்சிறகும் கொண்ட பூச்சி, அதன் காலோ, உணர்கொம்போ ஒரு சொடுக்கின் வழி தனது உயிர் இருப்பை அறிவிக்கிறது. இந்த சொடுக்கு முற்றிலும் வேறானது. நமது ப்ரக்ஞயைக் கடந்து சித்தத்தை தீண்டும் சொடுக்கு இது. அந்தத் தீண்டலை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டிய கவிதை இது.

கவிஞனின் பிரார்த்தனை கவிதையின் இரண்டாம் பகுதி கவிஞன் மித்ரு தேவி வசம் பேசுகிறான். முதல் பகுதியில் தன்னை ஆக்கிய வாக்தேவி இடம் ப்ராத்திக்கிறான்.

கோபுர உச்சியில் நிற்கும் குருடன் உன் நிசப்தத்தைக் கேட்கிறான்
என்னையும் அவ்விடத்திற்குக் கூட்டிச் செல். ஆனால்
பார்வை எஞ்சுகிற வரை மண்ணில் பாதம் இழுபடுகிற வரை
என்னோடு பேசு.

வலி மிகுந்த வரிகள். எல்லா படைப்பாளிகளும் இறுதியில் கோபுரத்தின் மேல் நிற்கும் அந்தகன்தானா ? தந்தையர் சென்ற அதே கோபுரசிகரத்துக்கு தனயர்களும் செல்ல விழைவது, பார்வை எஞ்சும்போதே, மண்ணில் பாதம் தோயும் போதே, அவள் குரல் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, போதும் இதற்கு மேல் சொல்ல இயலாது.

***

முந்தைய கட்டுரைவெற்றியின் நிகழ்தகவுகள்
அடுத்த கட்டுரைபச்சைப்பாம்பும் சிவப்புக்கண்ணும்