வாசிப்பின் வெற்றி

images

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் வெற்றி சிறுகதையை படித்து முடித்ததும் புதுமைப்பித்தனின் பொன்னகரம் நினைவுக்கு வந்தது. பொன்னகரம் கதை ஒரு பெண்ணின் கற்பு பற்றிய கதை மட்டும் அல்ல என்றே நினைக்கிறேன். புதுமைப்பித்தன் முதலில் பொன்னகரம் பற்றிய பகீர் வர்ணனை தந்துவிட்டு, அம்மாளு என்கிற ஒரு பெண்ணின் (Instance) கதைக்குள் செல்கிறார். அவர் ஒட்டுமொத்த பெண்குலத்தை பற்றியோ (Generalisation) அல்லது பெரும்பாலான பெண்கள் இப்படி அப்படி என்று புள்ளிவிவரங்கள் (Statistics ) எதனுள்ளும் செல்லவில்லை. ஆனால், கடைசி வரியில் “இதுதான் ஐயா உங்கள் பொன்னகரம்” என்று புதுமைப்பித்தன் சொல்லும்பொழுது ஒரு சமூக சாடல் தெறிக்கின்றது. ஒரு சமூகமோ அல்லது அரசாங்கமோ தனது பிரஜைகளை கல்வியற்ற, பாதுகாப்பற்ற, அங்கீகாரமற்ற, எதிர்காலமற்ற, சுகாதாரமற்ற சாக்கடைக்குள் தள்ளினால், அந்த சூழ்நிலையில் மனிதர்களும் அவர்களின் அறமும் தடம் புரளும் என்பதை எச்சரிக்கிறார் புதுமைப்பித்தன்.

வெற்றி சிறுகதை ஒரு Game Theory வடிவத்தில் செல்கிறது. ரங்கப்பர் லதா இருவருக்குள் நடந்த விஷயங்களை, “நீல ஜாடி” போல் சொல்லாமல் விட்டது, மிக சிறப்பு. ஆகவே கதையின் முடிவை (Win-Win, Win-Lose, Lose-Lose என ) வாசகர்கள் எப்படியும் வைத்துக்கொள்ளலாம். வெற்றி சிறுகதை லதாவின் கற்பு பற்றிய கதை மட்டும் அல்ல என்றே நினைக்கிறேன். கதையில் ரங்கப்பர் அமெரிக்காவில் படித்து வந்தவர் என்ற குறிப்பு வருகிறது. ரங்கப்பர் எனும் பாத்திரத்தை அமெரிக்கா போன்ற வளர்ந்த மேலை நாடுகள் என்று வைத்துக்கொண்டு, நமச்சிவாயம் பாத்திரத்தை இந்தியர்கள் என்று வைத்துக்கொண்டு, லதாவின் பாத்திரத்தை இந்திய மண் மற்றும் அதன் கலாச்சாரம் என்று நினைத்தால், வேறு ஒரு வடிவமும் முடிவும் கிடைக்கிறது. இந்தியர்களாகிய நாம் தருமனை போல் இந்தியாவை வைத்து சூது விளையாடிக்கொண்டு இருக்கிறோம். இந்த விளையாட்டில் நாமெல்லாம் வெற்றி பெருகிறோமா என்றால், ஆம், நாம் வெற்றி பெறுகிறோம். ஆனால் அந்த வெற்றிக்கு விலையாக நாம் இந்தியாவின் ஆன்மாவை கொன்று முன்னே செல்கிறோம். புதுமைப்பித்தனின் பொன்னகரம் போல் வெற்றி சிறுகதையும் அற மீறலை கண்டு வெளிப்படும் ஒரு எச்சரிக்கையே.

நன்றி.
அன்புடன்,
ராஜா.
சென்னை

***

அன்புள்ள ராஜா,

வெற்றி சிறுகதையின் நான் எதிர்பார்த்திருந்த ஒரு குரல் இது. நான் மலேசியாவில் இருக்கையில் வெற்றி வெளியாகியது. மறுநாள் நவீன் என்னிடம் இரவெல்லாம் விழித்திருந்து அக்கதையை வாசித்ததாகச் சொன்னார். ரங்கப்பர் கதாபாத்திரத்தின் தேடலும் தோல்வியுமே கதை என உணர்ந்ததாகச் சொன்னார். ”நான் நிறைவுகொள்ளும் வாசிப்பு அது. அக்கதையின் எளிய வாசகர்கள் அது ஒரு பெண்ணை ஆண் வெற்றிகொள்ள முடியுமா முடியாதா என்பதாக அக்கதையை வாசிப்பவர்கள். வெற்றி என்பது என்ன, எவருடைய வெற்றி அது என அக்கதை பேசுவதை புரிந்துகொள்பவர்களே அதன் மெய்யான வாசகர்கள். என் கதைகள் சுவாரசியமான வாசிப்பனுபவத்தை அளிக்கவேண்டும். ஆனால் அதன் மேலதிக வாசிப்புகள் நுண்வாசகர்களால் நிகழ்த்தப்படவேண்டும்” என்றேன்

”மேலதிகமாக என்ன வாசிப்பு வரக்கூடும்?” என்று நவீன் கேட்டார். “அந்தப்பெண் கணவனிடம் ஏன் அதைச் சொல்லிவிட்டுச் சென்றாள்? அதில் இருக்கிறது கதையின் உண்மையான சிக்கல். அதை வாசிப்பவர்கள் சில நாட்களுக்குப்பின் வருவார்கள்” என்றேன். “சரி, அதற்குப்பின்?” என்று கேட்டார். ஆறுமாதம் அல்லது ஓராண்டுக்குப்பின்னர், இந்த விவாதங்கள் அடங்கிய பின்னர் வாசிக்கும் ஒருவர் அதில் பிரிட்டிஷ் முறைமை காலாவதியாகி அமெரிக்க முறைமை வருவதைப்பற்றிய நீண்ட விவரணை ஏன் என்பதை யோசிக்கையில் அது நான் இன்று எழுதிவரும் அத்தனை கதைகளிலும் உள்ள ‘இந்தியநிலம் மீதான ஆதிக்கம்’ என்னும் உள்ளடக்கம் கொண்டது என்பதை புரிந்துகொண்டு அப்படி ஒரு வாசிப்புக்கு இடமிருப்பதை கண்டுகொள்வார் என்றேன். நேரடியான ஆதிக்கம் அல்ல ரங்கபருடையது. அந்தப்பெண் தேடும் ஒரு பாவனையை அளித்தபின் செய்யும் ஆதிக்கம். இன்னும் நுட்பமானது, ஆனால் முழுமையானது. அந்த வாசிப்பு இத்தனை விரைவாக அமைந்தது ஒருவகையில் பெரும் கிளர்ச்சி அளிக்கிறது. இன்று மலேசியாவிலிருந்து கிளம்புகிறேன். நவீனிடம் அந்த வாசிப்பு இத்தனை விரைவாக வந்ததைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தேன்.

ஜெ

***

முந்தைய கட்டுரைஜெயகாந்தன் , கங்கா ஈஸ்வர்- கடிதங்கள் –
அடுத்த கட்டுரைசபரிநாதன் நேர்காணல்