சபரிநாதன் கவிதைகள் 2

 

 

sapari

2017 ஆம் வருடத்திற்கான குமரகுருபரன்விஷ்ணுபுரம் விருது பெற்ற சபரிநாதனின் கவிதைகள். அவருடைய வால் என்னும் தொகுப்பில் இருந்து

 

வகுப்பிலேயே மிக அழகான பெண்

அவளை நாங்கள் எல்லோருமே காதலித்தோம்
சீனியர் பலரும் ஆசிரியர் சிலரும் கூட.
அவளுக்குத் தெரியும் தான் அழகாய் இருப்பது ஆனால் ’அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது’
என்பது போலத் தான் நடந்துகொள்வாள்.
பூச்செண்டுகளோ வாழ்த்தட்டைகளோ எது கொடுத்தாலும் முகம் சுளிக்காது
வாங்கிக்கொள்வாள்.எங்கு அழைத்தாலும் பிகு செய்யாமல் வந்திடுவாள்.
நான் அவளோடு சுற்றியதில்லை காதல் கடிதம் தந்திருக்கிறேன்.மறுநாள் காலை எனை
அழைத்து கடிதம் நன்றாக வந்திருப்பதாகவும் தொடர்ந்து எழுதித் தருமாறும் கூறினாள்.
பிறகவள் என்ன ஆனாள் என்று யாருக்கும் தெரியாது.

கல்லூரி விரிவுரையாளருடன் ஓடிப்போனதாகவும்,மேற்படிப்பிற்கு லண்டன் சென்றதாகவும்
ஒரு பேச்சு இருந்தது.சிலர் கூறினர்
அவள் பாலிவுட்டில் நடிக்க முயற்சிக்கிறாளென,சிலர் கூறினர்
மார்பகப் புற்றுநோயுடன் கடற்கரை சிற்றூர் ஒன்றில் ஒண்டியாய் வசித்து வருகிறாளென.
நேற்று,முன்னால்-மாணவர்-கூடுகைக்கு வந்திருந்த அவளைக் கண்டபோது நான்
நினைத்தேன் ஒருவேளை எல்லா வதந்திகளும் உண்மையாக இருக்குமோவென
தவிர இப்போது அவள் கிடையாது
வகுப்பிலேயே மிக அழகான பெண்.
ரெட்டைப் பின்னலிட்டு சீருடை அணிந்தே வந்திருக்கலாம்;பொருத்தமற்ற
சிங்காரமும் மிகையான உடல்மொழியும்…
முடி கொட்டி முடித்த நண்பன் கூறினான் “அவள் ஏன் அலுப்பூட்டும் மேஜிக் ஷோவை
அரங்கேற்றுகிறாள்”
கூலர்ஸும் குழந்தைகளுமாய் வந்திருந்த சகமாணவிகள் கண்டுகொள்ளவே இல்லை.
மேஜை மேல் நிற்பதைப் போல,நின்ற படியே மே ஐ கம் இன் கேட்பவளைப் போல
காட்சியளித்தவள் சொல்லிக்கொள்ளாது கிளம்பிவிட்டாள் இடையிலேயே.
பள்ளியில் இருந்து ரயில்நிலையம் செல்லும் பாதையில்
அவள் ஒரு சரக்கு லாரியை வாயில் கட்டி இழுத்து நடந்ததை
என் வாழ்நாளில் மறக்கமுடியாது.
***

ஆரோக்கிய மாதா ஆலயம்

எனக்கு கிராமத்து தேவாலயங்களைப் பிடிக்கும்.
முற்றத்தில் கோழிக்குஞ்சுகள் விளையாடித் திரிய,
படிகளில் பெண்பிள்ளைகள் பேன் பார்த்து பொழுதோட்ட,
உலரும் ரத்தச்சிவப்பான வற்றல்களின் திருமுன்னில்
அநேகமாய் பூட்டியே கிடக்கும் சிறுகூடங்கள்.
அசமந்தமாய் வாயிலில் சருகுக் குருத்தோலைத் தோரணம்
ஓட்டுச்சாய்ப்பில் குடித்தனம் செய்பவை போக்கிரி அணில்கள்.
போன வருடக் குடிலில் குட்டிகளைப் பத்திரப்படுத்திய வெள்ளைப்பூனை
நெட்டி முறிக்கும் நீலப்புள்ளிகள் சிதறிய மஞ்சள் நட்சத்திரம் நோக்கி.
வில்மாடம்,அலங்கார விளக்கு,நிலையிருக்கை,எதுவும் இல்லை
குளிர் செங்கற் தளத்தில் அங்கங்கே மிதக்கும் ஒளித்தீவுகள் மட்டுமே.
பழைய ஓடுகளை மாற்ற வேண்டும்.வாரம் ஒருமுறை தூத்துப் பெருக்கவேண்டும்.
மின்சாரம் அற்றுப்போன சாமங்களில் எல்லா வீடுகளையும் போலவே அங்கும்
ஓர் இளைத்த மெழுகுதிரி ஒளி வீசிக் கொண்டிருக்கும்.
எவரும் எழுந்தருளவில்லை அவ்விடம்;தந்தையின் வீட்டில்
வேலையில்லாப் பட்டதாரியென,அவ்வப்போது எடுபிடி வேலைகள் செய்துகொண்டு
-கட்டிக்கொடுக்க வேண்டிய வயதில் தங்கைகளுடன்-வசித்து வருகிறார் ஏசு.
காட்டு வேலை ஓய்ந்து வந்த மரியாள் குளித்து முடித்து
கங்கு வாங்கப் போகிறாள்.மழை வரும் போல் இருக்கிறது.

***

பேராசான்

எனது தந்தை தான் பூமியை மிதிக்கக் கற்றுத் தந்தார்
நன்றாக அழுத்தி இன்னும் இன்னும் வலுவாக
எனது தந்தை தான் எழுந்து நிற்கக் கற்றுத் தந்தார்
எதையாவது பற்றிக்கொண்டு உதாரணத்திற்கு ஒரு நீர்த்தொட்டியை
வாசலுக்கு வெளியே அல்லது பேருந்து படியில்
எனது தந்தை தான் நடக்கக் கற்றுத்தந்தார்
அவர் சொன்னார்
ஒரு மனிதன் ஓயாது நடப்பது எதன் மீதும் சாயாதிருப்பதற்கு
நடுரோட்டில் தெருவோரத்தில் சமைந்து நில்லாதிருப்பதற்கும் தான்
நீ நட
விடுதியிலிருந்து பணியிடத்திற்கு
பணியிடத்திலிருந்து விடுதிக்கு
திரும்பி நட
பரிசோதனை அறிக்கையைப் பெற்றுக் கொண்டு
தனது பெயர் இது தானா என ஆராய்ந்து கொண்டு
எனது தந்தை தான் நீந்தக் கற்றுத்தந்தார் பிறகு
ஒரே நேரத்தில்
நீரிலொன்றும் நிலத்திலொன்றுமாய் வீடுகள் கட்டி
இழுபடும் மிருகம் ஆனேன்
நீரிலும் ஊர வேண்டியிருந்தது தரையிலும் நீந்த வேண்டியிருந்தது
சுவாசிப்பதற்காக எம்பி எம்பி தவ்வும்படியானது
எனது தந்தை தான் மிதிவண்டி விடக் கற்றுத்தந்தார்
இப்படித்தான் இப்படியேதான்..
நானும் இங்குதான் விழுந்தேன்,இப்படித்தான்
திரும்பித் திரும்பிப் பார்த்தபடி ஓட்டினேன் இப்படித்தான்
எனது மிதிவண்டியையும் மூலைவீட்டில் துருப்பற்றவிட்டேன்
என்னை தன் சாயலில் பிறப்பித்த அவர் மட்டும் இல்லையென்றால்
தவழ்ந்து தவழ்ந்து
இரு மென் தொடையிடையில் முட்டி மோதியாவது
தப்பிச் சென்றிருப்பேன்
எனது தந்தை
அதோ அவர் தான்
யான்
அறிந்தது
அறியாதது
மறந்தது
மறதிக்கு அப்பாற்பட்டது
எல்லாவற்றையும் கற்றுத் தந்தார்
ஒன்றைத் தவிர,அது
மண்ணைத் தின்று
புழுதியில் புரண்டு
சுவற்றில் மோதி
மலை மீதேறி
அங்கிருந்து குதித்து
மீண்டும் ஏறி
மீண்டும் குதித்து
நாமே கற்றுக்கொள்ள வேண்டியது
இதையும் அவரே சொன்னார்.

***

அதிகாலையில் ஒரு ரவுண்டானா

கிழக்கு கடற்கரை சாலை வடகிழக்காகக் கிளை பிரியும்
ரவுண்டானாவில் சிக்னல் செயல்படவில்லை தொப்பிவாசி யாருமில்லை.
எதையோ அசைவெட்டியபடி சந்தியில் நிற்பது ஓர் எருமை மாடு.
காதுகளால் துடுப்பிடும் பழக்கத்தைக் கைவிடமுடியாதது
திடிரெனத் தும்முகிறது திடீர் திடீரென கோளை வடியக் கத்துகிறது.
அவ்வப்போது வாலாட்டி வெட்கமில்லாமல் சாணி போடுகிறது
மெதுநகர்வில் கொம்பசைத்து இங்கிட்டும் அங்கிட்டும் பார்க்க
இருசக்கர வாகனங்களும் இறக்குமதி செய்யப்பட்ட கார்களும்
தாவா ஏதுமின்றி தத்தமது வழியில் போகின்றன.
சில தருணம் யாவுமே அத்தனை எளிதாகிவிடுகிறது இல்லையா?

***

மலைக்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து

செவ்வகச் சிறுபுழை வழியாகக் காண்கிறேன்
இருத்தலின் ஒரு வாய்க்கடி,நிகழ்தலின் சிறுபனித்துண்டம்.
மாரிப்பருவம் முடிந்து,கொழுத்த விருந்திற்குப் பின்
உறங்கச் சென்றுள்ளது வரலாறு,இந்நிலையில்
வந்து கதவு தட்டுகிறது இன்றைய இன்று
இளவெளியிலோடு ஈரப்பதம் மிகுந்த ஒரு சாதா தினம்.
செவ்வகச் சிறுபுழை வழியாகக் காண்கிறேன்
வேடிக்கையான துதிக்கைகளால் வணங்கியவாறு
திரும்பிப் போய் விட்டன பீரங்கிகள்
முன்னைப் போல் கனைப்பதில்லை குதிரைகள்,அவை
பக்கத்து ஊர் கொட்டகையில் ஒரு
பொற்கூந்தலாள் பேச்சைக் கேட்டு
எட்டு வைத்து நடக்கின்றன பின்னோக்கி.
செவ்வகச் சிறுபுழை வழியாகக் காண்கிறேன்
தொடுவானக் கரையில் படை திரட்டி நிற்கிறது கூதிர்
இக்கவசத்தையும் கேடயத்தையும் இலச்சினைகளையும்
(எனக்கே சிரிப்பு வருகிறது)
எடைக்குப் போட்டாக வேண்டும்
கம்பளி வாங்கிக் கொள்ளலாம் கூடவே தேநீர்க் குடுவை
முடிந்தால் சுருட்டுப் பொட்டலமும் கருப்பு நிறத்தில் ஜாக்கெட்டும்.

எல்லா வாழ்விலும் வருமொரு தருணம் அப்போது
காட்சிக்கு மீதமிருப்பது செவ்வகச்சிறுபுழை மட்டுமே.
அது வழியே காண்கிறேன்
பழைய இருட்டும் பழைய காற்றும்
தெக்கெட்டு ஊரணியில் துணி துவைக்கும் ஓசை.
நீர்வளையங்களே..பாசிப்படிவுகளே
ஏன் கோட்டைகள் இடிகின்றன?
ஏன் குரங்குகள் ஈரெடுக்கின்றன?

***

இன்னும் ஓர் அதிகாலை

நம்பமுடியவில்லை.இன்னமும்
பார்க்கமுடிகிறது.இப்போதும்
காது கேட்கிறது-செடிங்காட்டில் இருந்து செம்போத்து விக்கல்.
படுக்கை விட்டெழுகையில்
நம் ரத்த ஓட்டத்தின் உஷ்ணத்தை நாமே உணர முடிகிறது.
தோட்டச் செடிகளுக்கு நீரளிப்பதற்கான கட்டளை
இறங்கி நடப்பதற்கான கட்டளை
சென்று புத்தம் புது காய்கறிகளை வாங்குவதற்கான கட்டளை
வெண்டை கால்கிலோ,முள்ளங்கி இருநூறு,முருங்கை ஐந்து
வெங்காயம் அரைகிலோ,மிளகாய் நூறு,கரிமசால் பட்டை,
ஒரு மூட்டு பொன்னாங்கண்ணி,ஒரு கொத்து மல்லி இலை
=உயிர்வாழ்தலின் எடை.

பூஜ்யத்தில் இருந்து தொடங்குவதாக ஒரு பிரமை
நேற்று தான் பெருவெடிப்பு நிகழ்ந்தது என்றால் நம்பி விடுவேன்.
இருந்தும் நான் அறிவேன்
மீண்டும் இரவுகள் வருகை தரும்
பெறுநர் அற்ற பதிவுத்தபால்களென
கிழிந்துவிடக்கூடும் என்ற குறிப்புடன் ஒப்படைக்கப்படும் சலவைத்துணியென.

முன்னர் புலப்படாத கறைகள் உருப்பெறத் துவங்குகையில்
ஒருவர் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
இருட்டறையில் நிழற்படங்களை அலசுபவர்களைப் போல்
துயில் பொருட்டு உழைக்க வேண்டும்.
ஏனெனில் காலையில் கண் திறவும் பொழுது
வீடு ஒதுங்க வைக்கப்பட்டிருக்கும்,நமக்கு பதில்
யாரோ ஒருவர் பாத்திரங்களை விளக்கி வைத்திருப்பார்.

கடவுளே
என் அன்புமிகு சகோதரன் ஒரு பொறுப்பான நல்ல பையன்
அவனது மூளைக்குள் கடினமான மங்கலான சிந்தனைகளை மூட்டாதேயும்
இன்று நாள் முழுக்க அவன் யோசிக்கட்டும்
நாளை நடக்கவிருக்கும் ஒருநாள் ஆட்டத்தைப் பற்றி
அவனது விடைத்தாளை
நிறைய கருணையோடும் கொஞ்சம் நகையுணர்ச்சியோடும் திருத்தித் தாரும் சுவாமி.

***

சகமாணவர்கள் இருவர்

ஒருவர் மரியாளின் மகன் ஈஸா
ஒருவர் மாயாவின் மைந்தன் சித்தார்த்
இருவரது உருவமும் மேஜையில்
ஒருவர் சிலுவையில் தொங்குகிறார்
ஒருவர் தியானத்தில் அமர்ந்துள்ளார்
ஒருவர் முடிவை நெருங்குகிறார்
ஒருவர் இப்போது தான் பிறந்துள்ளார்
ஒருவர் முகத்தில் நிச்சலனம்
ஒருவர் முகத்தில் வேதனை
ஒருவர் ஆன்மா இல்லை என்கிறார்

ஒருவர் அவ்வினோத ஜந்துவின் பொருட்டு விழுந்து விழுந்து மன்றாடுகிறார்
ஒருவர் மாப்பிள்ளை பெஞ்சின் வாடிக்கையாளர்
ஒருவர் முதல் வரிசையில் அமர்ந்து குறிப்பெடுப்பவர்
ஒருவருக்கு கால்குலஸ்ஸில் ஆர்வம்
ஒருவர் ஆய்வறையில் கவிதை எழுதுபவர்
ஒருவர் காதல் கடிதத்தைத் திருப்பித் தருகிறார்
ஒருவர் உதிர்க்கிறார்

’காதலில் தோல்வியுற்றவன் முன்னெப்போதும் இத்தனை அழகாயிருந்ததில்லை’
ஒருவர் விடுதிவாசி
ஒருவர் தினக்கூலி
பழைய பத்தாம் வகுப்பு புகைப்படத்தில்
நெருக்கியடித்து முழிக்கும் மாணவர்களிடையே
அருகருகே நிற்கின்றனர் இருவரும்:
திருஅரசருகே எளிய அத்தி!
ஒரு கணமுமில்லை
இரு தருக்களும் தொட்டுக் கொளாது
ஒரு கணமுமில்லை
தளிரிலையேனும்
வீழ்சருகேனும்
கருநிழலேனும்…

***

திருவான்மியூர் மேகங்கள்

இவ்வாண்டின் உறுதிமொழிகளை உடைக்க நான்கு நாட்கள் போதுமானதாக இருந்தது
ஒரு கிரகம் இத்தனை வேகமாக சுற்றினால் என்ன செய்ய?
அண்டை வீட்டாருக்கு இதைப் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது
அவ்வளவு பிரியமாக அவர்கள் கார்களைக் கழுவுகிறார்கள்
ஒருவர் இங்கே கழுத்துப்பட்டைகளை உயர்த்திவிட்டு பீட்டர்ஸ்பர்க்கில் நடந்து செல்லலாம்
யாரும் கேட்க முடியாது ‘வெட்கமாயில்லை உனக்கு?’ என்று
ஏனெனில் இந்த வருடம் திருவான்மியூரில் யாரது உறுதிமொழியும் நிறைவேறவில்லை.

சறுக்குக்கட்டைகளோடு கிளம்பிச் செல்லும் சிறுவர்கள்.
கலியுகம் என்றால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடம் தான் கண்ணில் வரும் அவர்களுக்கு
எனக்கு வேண்டாத யாரோ ஒருவர் என் பாதை அனைத்திலும் மஞ்சள் நிற விரைவீக்க
சுவரொட்டிகளை ஒட்டி வைத்துள்ளார்
ஆனால் எல்லா சறுக்குக்கட்டைகளும் இங்கு தான் வந்தாக வேண்டும்
அதாவது காலணி கழற்றி வைக்கும் இடத்திற்கு,வாசலில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பாள்
பார்த்தால் தெரியாது எனினும் அவளுக்கு மருந்தீஸ்வரரிடம் நம்பிக்கை கிடையாது.

இறகுப்பந்தை குனிந்தெடுக்கும் இயற்கை மார்பகங்கள் இடையே சிலுவை ஜொலிக்கும்
இங்கு கண்ட கண்ட இடங்களில் இருந்தெல்லாம் சூரியன் உதிக்கும்.
மதிய வெயிலில் உண்மையான காதலர்களை வேடிக்கை பார்ப்பது போல் அலுப்பூட்டுவது
ஒன்றே ஒன்று தான்-தயிர் பச்சடி தொட்டு சைவ பிரியாணி சாப்பிடுவது.
அதற்கு நீங்கள் கடற்கரைகளை மூடிவிடலாம்
மூப்பினால் குழிநண்டு பொறுக்குபவர்களை பட்டினி கிடக்க சொல்லலாம்.

மீண்டும் மீண்டும் மூத்த பெண்களை மையலிப்பதற்கும் இந்த வானிலைக்கும்
ஏதோ தொடர்புள்ளது.அது உங்களை அதிகப்பிரசங்கியாக மாற்றும்:
மனிதன் கீரைத்தோசையாலும் கலக்கியாலும் மட்டும் உயிர் வாழ்வதில்லை
அவனுக்கு சோகப்பாடல்கள் வேண்டும் புதிய புதிய நகைச்சுவைத் துணுக்குகள் வேண்டும்
நான் மனிதன் என்பது உறுதியானால் எனக்கு சில்லி பீஃப் வேண்டும்
கலாக்ஷேத்திராவில் தப்பாக கைத்தாளம் போடுபவர் கூறினார்;எதிரே சோடா விற்பவரும்
வழிமொழிந்தார்.இவ்வூரின் மேகங்கள் எதுவும் இவ்வூரைச் சேர்ந்ததில்லையாம்.
இருவரும் நம்பவில்லை யாரும் நம்பப் போவதுமில்லை
இம்மீபொருண்மை பதார்த்தங்களிடையே நானொரு பறக்கும் தட்டைக் கண்டேன் என்பதை.

எனதருமை ரகசியங்களே
நான் உமை காப்பது போல்
நீவீர் எனை காப்பீராக.

***

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 13