வெற்றி -கடிதங்கள் 4

images

அன்புள்ள ஜெ

சரவணகார்த்திகேயனின் பதிவு நன்றாக இருந்தது.

அப்படியாகப்பட்ட லதா ஏன் நடந்ததை சொல்லிவிட்டுப் போகிறாள் என்ற கேள்வியும் எழுகிறது. தன் இறுதி நாட்களில் குற்றவுணர்வை தாங்காமல் சொல்லியிருப்பாள் என்ற எளிய முடிவுக்கு வரலாம். ஆனால் அவள் எந்தவித மன்னிப்பும் கேட்டதாக நமச்சிவாயம் சொல்லவில்லை.

அவளைப் பொறுத்தவரை அது ஒரு ‘நாக் அவுட் பன்ச்’, அவர் எஞ்சிய வாழ்நாளை நரகத்தில் கழிக்கும்படி செய்த கடைசி வஞ்சம் என்று தோன்றுகிறது. விஷம் நமச்சிவாயத்தின் தொண்டையில் மாட்டிக்கொண்டுள்ளது.

மதுசூதன் சம்பத்

***

அன்புள்ள மதுசூதனன்,

உண்மையில் கதையின் மையமே அதுதான். அதை வாசகர் எவரேனும் சொல்லவேண்டுமென எண்ணியிருந்தேன். வெற்றி என்பது எவருடையது என்பதே கதை முன்வைக்கும் வினா

ஜெ

***

வெற்றி சிறுகதை வாசித்தேன்.

காஸ்மோபாலிட்டன் கிளப் வருணனை பாளையம்கோட்டை டிஸ்ட்ரிக்ட் கிளப் பற்றி சொல்வதைப் போல் இருந்தது.

மனைவியிடம் பாரம்பரியம் சார்ந்த நம்பிக்கை, ஒரு பெண்ணின் பொதுவான சார்ந்திருக்கும் மனோபாவத்தால் உருவாகும் அவநம்பிக்கை, தான் ஜெயித்தால் மட்டும் கிடைக்கும் ஐந்து லக்ஷம், பணம் மேல் உள்ள ஆசை, தோற்றால் உண்டாகும் மானக்கேடு, இவைகளினால் அலைக்கழிக்கப் படும் ஒரு ஆணவ ஆணின் உளச்சிக்கலை நன்றாகக் காட்டி இருக்கிறீர்கள்.

ஆனால் ஒரு விஷயம் நெருடுகிறது. நமச்சிவாயம் மனைவி ஒரு மனைவி மட்டும் அல்ல, ஒரு கொடிய நோய் தாக்கிய ஒரு மகனின் தாய். மகனை காப்பாற்ற வேண்டும் என சதா துடித்துக் கொண்டு இருக்கும் ஒரு மனம். லௌகீக வாழ்க்கையிலும் மகன் மீதுள்ள பாசத்தினாலும் மனம் நலிந்தவள். இந்த போட்டியில் அவளை பகடையாக வைத்தது அவள் ஜெயிக்கப் பட வேண்டும் என்பதினாலா?

இறுதியில் ரங்கப்பரின் செயல் அவருடைய உள் மன ஏக்கத்தின் வெளிப்பாடு.

சிவா சக்திவேல்

***

அன்புள்ள சிவா,

நன்றி

வெற்றி முன்வைக்கும் உண்மையான கதை ரங்கப்பருக்கும் லதாவுக்குமான உறவு. அது கதைக்குள் சொல்லப்படவே இல்லை. அதைச்சுற்றி உள்ள அனைத்தும் சொல்லப்பட்டு அது மட்டும் விடப்பட்டுள்ளது

ஜெ

***

அன்பிற்கினிய ஆசான் ஜெ அவர்களுக்கு,

வணக்கம்.

“உங்களைப்போன்ற வக்கிர புத்திகொண்ட மனநிலை பிறழ்ந்த ஒரு மனிதனை இதுவரை பார்த்ததே இல்லை….”

……என்ற மாபெரும் செய்தியுடன்தான் என் நண்பர் ஆரம்பித்தார்.

நான் சும்மாயிருக்காமல் “வெற்றி” சிறுகதையை அவரை கட்டாயப்படுத்தி படிக்கவைத்ததனால் வந்த வினை.

தனிப்பட்ட வசவுகள்…. தரம் குறைந்தவைகளும் கூட…. நிமிடத்திற்கொருமுறை தலையாட்டல்…. பெருமூச்சு…. உச்சுக்கொட்டல்…. பாவம் அந்த மனிதர்……வழக்கமாக ஜொள் வடியும் அவரது வாய் வரண்டிருப்பதை காணும் அருங்கணம்…… அட அட என்ன ஒரு ஆனந்தம்.

“Face-Book-கில சும்மாவிடமாட்டானுங்க….. மகளிர் அமைப்புங்கள்ளாம் பொங்கி எழுந்துடுவாங்க…. கண்டிப்பா பெரிய ப்ரச்சனை ஆகும்” போன்ற ஆரூடங்கள்…. பொங்கல்கள்…. வடைகள்…. இத்யாதி…..

சும்மாயிருக்கமாட்டாமல் “ஏன் பாஸ்…நீங்க நமச்சிவாயம் நெலமைல இருந்தா ஜெயிச்சிருப்பீங்களா?” – என்று வேறு கேட்டுத்தொலைத்து மேலதிக செந்தமிழ்த்தேன் மொழிகளை எனக்கும் பெற்றுக்கொண்டு மனம் மகிழ்வுற இப்படிக்கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

சிலமணிநேரங்களுக்குப் பிறகு வழக்கமாக நேரத்தைக்கொல்லும் தேனீர்க்கடையின் மூலையில் சமநிலைக்கு வந்தார்.

“இருக்குற எல்லா நம்பிக்கையையும் ஒடச்சா ஒரு மனுஷன் எப்படித்தான் வாழ்றது?”..என்றார்.

“நம்பிக்கைனா என்னா பாஸ்?- ஒத்தையா ரெட்டையால ஒத்தைமட்டும்தான் நடக்கும்னு நாமளே நெனச்சிக்கறது தான….” – அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு மீண்டும் செந்தமிழ்த்தேன் மொழியாள் பாடல் என் காதுகளில் ஒலிக்க நான் சத்தியமாக கொடுத்து வைத்திருந்தேனா என்று தற்போதுவரை தெரியவில்லை.

ஆனால் கதை அவரை உலுக்கியெடுத்து விட்டது நன்றாகவே தெரிந்தது.

நெடுநாட்க்களுக்குப் பிறகு முற்றிலுமாக உள்ளிழுத்துக்கொண்ட ஒரு கதை.

என்னால் இறுதிவரை முடிவை ஊகிக்க முடியவில்லை அல்லது கதை அப்படி ஒரு இடைவெளியை எனக்குத் தரவில்லை.

சுஜாதாத்தனமான(??) முடிவு என்று நினைத்தாலும் அந்த முடிவிலிருந்துதான் எனக்கு கதை தொடங்குகிறது.

ஒட்டுமொத்த கதையைவிட கதையின் முடிவில் இருக்கும் அந்த சமரசம்…. லதாவிற்கும், ரங்கப்பருக்கும் எப்படி நடந்திருக்கும் என யோசிப்பதிலிருந்தே என் ஆச்சர்யமும்….ஆனந்தமும் அடங்கியிருக்கிறது.

எப்படிப்பார்த்தாலும் அதைக் கற்பனை செய்யமுடியவில்லை அல்லது ஒன்று குறைகிறது…..கடைசியில் அதைச்சொல்லித்தான் என் நண்பரை மீண்டும் என் பக்கம் இழுத்தேன். மீண்டும் ஒருமுறை அவரது ஜொள்ளுவாய் வரண்டிருப்பதை பார்க்கும் பாக்கியம்.

அப்புறமென்ன மறுபடியும் தலையாட்டல்…. பெருமூச்சு…. உச்சுக்கொட்டல்…. அவரே சொந்தமாக தமிழ் சினிமா பாதிப்பில் அந்த சீனை நடித்துக்காட்டினார்….. சிவாஜியின் தீவிர ரசிகர்….. சுண்டன்…… அவராலும் முடியவில்லை…. பாவம்…

மூன்று பேருமே மேற்பார்வைக்கு வெற்றி பெற்றிருந்தாலும் மிகக் கீழ்மையான அல்லது பலன் குறைவான வெற்றி நமச்சிவாயத்திற்குத்தான்…..அவரையும் விட மேம்பட்ட ஆத்மார்த்தமான அல்லது அதற்கும் ஒரு மாற்றுக் குறைந்த வெற்றி ரங்கப்பருக்கு….லதா முழுமுற்றான வெற்றி பெற்றவள். தன்னை பகடைக்காயாகப்பயன்படுத்திய இரண்டு ஆண்கள், பிள்ளைகள், குடும்பம், தற்கால வாழ்வு, பிற்கால வாழ்வு ஏன் இறக்கும் தருணத்திலும் அதற்குப்பின்னாலும்………முழு வெற்றி.

தோல்வி என்று பார்த்தால் மேற்சொன்ன வரிசை பின்னோக்கிப் போவது ஆச்சர்யமளிக்கிறது. (லதா கொஞ்சமாவது தோற்றாள் என்று சொன்னால் மாத்திரம்தான் என் நண்பரை சமாளிக்க முடிகிறது….மற்றபடி அவரவர் சட்டங்கள் அவரவர்க்கு….என் சட்டத்தை அவள்மேல் திணித்து அவள் தோற்றாள் என்று சொல்ல நான் பெரும் ஒழுக்கவாதியாகவோ இல்லை தமிழ் வாத்தியாராகவோ தான் இருக்க முடியும்.)

ரங்கப்பர் ஒரு பெருங்காதலர் என்று என் அடுத்த குண்டைத் தூக்கிப்போட்டு….செந்தமிழ்த்தேன் மொழியாளை எதிர்பார்த்து ஏமாந்தேன்….. சிந்திக்க ஆரம்பிக்கும் நண்பர்களைப்போல நமது வெறுப்புக்குரியவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்று ஒரு தத்துவார்த்தமான சிந்தனையோடு நிறுத்திக்கொண்டேன்.

நண்பர் மன உளைச்சல் அல்லது நமைச்சல் தாளாமல் மேற்படி சிறுகதையை அவரது வட்டத்திற்குள் சிக்கிய அனைவருக்கும் சொல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் உங்களுக்கு மேலதிக ரசிகர்கள் அல்லது வசை வழங்குவோர் கிடைப்பர் என்றும் தெரிகிறது.

“மங்கிகேப்புல இருந்து மாதர் சங்கம்வரைக்கும் பாத்தவருங்க எங்காளு…” என்று மார்தட்டியிருக்கிறேன்.

இன்று காலை வாயெல்லாம் பல்லாக ஓடிவந்து அவர் சொன்ன செய்திதான் எந்த அளவு அவர் இதைப்பற்றி சிந்தித்திருக்கிறார் என்பதையும் ஏன் நான் உங்களுக்கு இந்தக்கதை குறித்து கடிதம் எழுதவில்லை என்பதையும் யோசிக்க வைத்தது.(அவர் என்னைவிட வயதிலும் அனுபவத்திலும் பலவருடங்கள் மூத்தவர்…..)

அவர் சொன்னது இதுதான்…..

‘இன்றளவும் இருக்கின்ற ஒரு புகழ்பெற்ற தொழிலதிபரின் கதை இந்த வெற்றி’.

அட இருந்துட்டுப் போகட்டும்……எங்காளு அப்ப சரியாத்தான சொல்லியிருக்காரு…

மீண்டும் ஒரு சிறந்தகதைக்காக…..

நன்றிகளும்….வாழ்த்துக்களும்….

அன்புடன்…..

பிரபு (சேலம்)

***

அன்புள்ள பிரபு

வெற்றி போன்ற கதைகளின் சிக்கலே அதன் சீண்டல்தன்மை மேலதிக வாசிப்பை தடுத்துவிடும் என்பது

ஆனால் எல்லா கதைகளும் நல்ல வாசகர்களுக்காகவே எழுதப்படுகின்றன

ஜெ

***

வெற்றி [சிறுகதை]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 12
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் கடிதம்