‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 11

10. படைகொளல்

flowerவிதர்ப்பத்தின் இளவரசி தமயந்திக்கு மணத்தன்னேற்பு அறிவிக்கப்பட்டிருக்கும் செய்தியை பிற மன்னர்கள் அறிவதற்கு முன்னரே நளன் அறிந்தான். அவனிடம் அதை சொன்ன ஒற்றன் “திடீரென்று எடுக்கப்பட்ட முடிவு, அரசே. அன்றைய நாள் அந்தி வரை அப்படி ஓர் எண்ணமே அரண்மனையில் இருக்கவில்லையென்று உறுதியாக நான் அறிவேன். அந்தி மயங்கியபின் ஏதோ செய்தி வந்திருக்கிறது. முன்னிரவில் அரசரை சென்று பார்த்து ஓலையில் இலச்சினை வாங்கி உச்சிக்குள் ஓலைகளை அனுப்பிவிட்டார்கள். மகதருக்கு அனுப்பப்பட்ட ஓலையைத்தான் நான் பார்க்க முடிந்தது. அத்தருணத்திலேயே நான் கிளம்பி இங்கு வந்தேன்” என்றான்.

தன் தனியறையில் சாளரத்தருகே நின்றிருந்த நளன் சில கணங்கள் வெளியே தெரிந்த கோதையின் பெருக்கை நோக்கி நின்றபின் “அதில் ஐயமேதும் இல்லையல்லவா?” என்று கேட்டான். “ஏனென்றால் அரசாடலில் அப்படி பல நுண்சூழ்ச்சிகள் நிகழ்வதுண்டு. அது எவரையோ ஏமாற்றுவதற்கான முயற்சியாக இருக்கலாம். ஒருவேளை நம்மை கூட.”

ஒற்றன் “இல்லை” என்றபின் புன்னகைத்து “அத்தகைய நுண்ணிய அரசாடலைச் செய்யும் திறன் கொண்ட எவரும் குண்டினபுரியில் இன்றில்லை” என்றான். நளனும் புன்னகைத்து “நன்று” என்றபின் திரும்பிவந்து மஞ்சத்தில் அமர்ந்து கால் நீட்டி உடல் தளர்த்தி கைகளை மார்பில் கட்டிக்கொண்டான். எண்ணம் பெருகியொழுக தலைதாழ்த்தி அரைவிழி மூடி தன்னுள் மூழ்கினான்.

அவன் முன் நின்றிருந்த ஒற்றன் நெடுநேரம் அவனை நோக்கி நின்றபின் மெல்ல கனைத்து “நாம் செய்வதற்கொன்றே உள்ளது, அரசே” என்றான். “சொல்!” என்றான் நளன். “இளவரசி உங்கள்மேல் காதல் கொண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை. இன்றே கிளம்பினால் சிறியதோர் புரவிப்படையுடன் சென்று இளவரசியை கவர்ந்துகொண்டு வரமுடியும். நம்முடன் அவர் கிளம்பி வருவார் என்பதிலும் எனக்கு எண்ணமாற்றில்லை.”

நளன் “ஆம். முதலில் எனக்கும் அதுவே தோன்றியது. ஆனால் பெண் கவர்தல் என்பது நேரடியாகவே போருக்கான அறைகூவல்” என்றான். “இன்று கலிங்கமும் மாளவமும் மகதமும் இணைந்து படைகொண்டு வந்தால் நிஷதநாடு இரண்டு நாட்களுக்கு மேல் போர்முனையில் நின்றிருக்க முடியாது” என்றான் “அனல்குலத்து ஷத்ரியர் அனைவரும் தங்கள் எதிரிகள் என்பதை ஷத்ரியர் நன்கறிவார்கள். தங்கள் பூசல்களை விடுத்து ஒருங்கிணைய முடியாததனால்தான் நம்மை அவர்கள் விட்டுவைத்திருக்கிறார்கள். இது அவர்கள் ஒருங்கிணைவதற்கான உகந்த தருணமாக நம்மால் அளிக்கப்படலாகாது.”

“ஆனால்…” என்று அமைச்சர் கருணாகரர் ஏதோ பேசத் தொடங்க “மணத்தன்னேற்பு நிகழட்டும். அதில் இளவரசி என்னை மாலையணிவித்து வேட்பாளென்றால் அதன் பின்னர் அதன்பொருட்டு என்னிடம் போருக்கு முரசறைய நூல்நெறி ஒப்பாது” என்றான் நளன். “அத்துடன் கலிங்கமும் மாளவமும் மகதமும் இன்று அவர்களைவிட தொன்மையான ஷத்ரியர்களிடம் மோதிக்கொண்டிருக்கின்றனர். இவர்களை இன்று எழுந்து வந்தவர்கள், தொல்நெறியறியாதவர்கள் என்று பண்டைய பதினாறுகுடி ஷத்ரியர்கள் ஏளனம் செய்கிறார்கள். அதன் பொருட்டு இவர்கள் அந்தணர்குடிகளை தங்கள் அரசுகளில் உருவாக்கி வேள்விகளை நாளும் நிகழ்த்துகிறார்கள். தாங்கள் செய்யும் ஒவ்வொன்றும் அந்தணர் அவையின் ஒப்புதல் பெற்றே என்று அனைத்து அறிவிக்கைகளிலும் குறிப்பிடுகிறார்கள். மணத்தன்னேற்பில் பெண்ணை கொண்டுசென்ற ஒருவன்மேல் அதன்பொருட்டு போர்தொடுக்க அந்தணர் அவைகள் ஒருபோதும் ஒப்பா.”

குழப்பத்துடன் “ஆம்” என்றார் கருணாகரர். தானும் மெல்லிய குழப்பத்துடன் எழுந்து அறைக்குள் கைகளை பின்னால் கட்டியபடி நடந்து சாளரத்தின் வழியே வெளியே சற்று நேரம் நோக்கி நின்று திரும்பி “ஆம். வேறு வழியில்லை. நாம் மணத்தன்னேற்பில் பங்குகொள்வதே ஒரே வழி” என்றான். கருணாகரர் “நமக்கு அழைப்பில்லை” என்று சற்றே சலிப்புடன் சொன்னார். “அவ்வழக்கம் இல்லை. விதர்ப்பம் இன்றுவரை நம்மை ஓர் அரசாக எண்ணியதே இல்லை. ஆனால் நூல் நெறிகளின்படி அழைக்கப்படாமலும் மணத்தன்னேற்பில் கலந்து கொள்ளலாம். முடிசூடி கொடியேந்திய பெருங்குடி ஷத்ரியர்களை மட்டுமே முறைப்படி அழைக்க வேண்டுமென்பது வழக்கம். மணத்தன்னேற்புகளில் அரக்கரும் அசுரரும்கூட கலந்து கொள்ளலாம் என்று பண்டைய நூல்கள் சொல்கின்றன” என்றான் நளன். “நாம் செல்வதற்கு நூலொப்புதல் உண்டு.”

பின்னர் தனக்குத்தானே என “நாம் செல்வதை அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. நான் அவள் உள்ளத்தில் இடம் பெற்றது இன்னமும் விதர்ப்பனுக்கு தெரியாது அல்லவா?” என்றான் நளன். “விதர்ப்பத்தில் மக்களிடையே அந்தப் பேச்சு சில நாட்களாக இருக்கிறது. அமைச்சரும் அரசரும் அதை அறியாதிருக்கமாட்டார்கள்” என்றான் ஒற்றன்.

நளன் நகைத்து “ஆனால் நான் மிகச் சிறியவன் என்பதனாலேயே அவர்கள் அதை நம்பமாட்டார்கள். வீணாக விரும்பி ஏளனத்துக்குள்ளாகும் பொருட்டே நான் நண்ணுவதாக எண்ணுவார்கள். அவ்வெண்ணமே நமது காப்பு. கலிங்கனும் மகதனும் மாளவனும் வங்கனும் யானைக்காலடியில் ஊரும் எறும்பென்று நம்மை கருதுவதனாலேயே நாம் எதிர்ப்பற்றவர்கள். நாம் நச்சுநா கொண்டு கடிக்கும்வரை விழிகளுக்குத் தெரியாத நாகம்” என்றான்.

அவனுக்குள் திட்டம் உருக்கொள்ள குரல் எழுந்தது. “அணிபடைகளும் அகம்படியும் இல்லாமல் எளிமையாக மணத்தன்னேற்புக்கு செல்லலாம். மணத்தன்னேற்பில் பங்கெடுப்பதை நிகழ்வுக்கு சில நாழிகைக்கு முன்னர் அறிவித்தால் போதும். அரசர்களுக்கு அடிபணியும் பரிசுகளுடன் சென்று அனைவரையும் ஒருமுறை கண்டு வணங்கிவிட்டால் நாம் அரசவையில் அமரும் வாய்ப்புக்கென வந்த எளியோர் என எண்ணுவார்கள் விதர்ப்பர். நிஷாதர்கள், அசுரர்களின் சிறுகுடிகள் அவ்வாறு மணிமுடி சூடுதல் முதலிய ஷத்ரியப் பெருவிழவுகளுக்குச் சென்று அவையமர்ந்து மீள்வது வழக்கம்தான். ஓர் அரசவையில் அமர்தல் தங்களவர்கள் நடுவே சிறு அரசகுடியென மதிப்பு கொள்ளுதல்தான் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.”

“ஆம். உண்மையில் ஒருமுறை அப்படி சென்று வருவது அவர்களின் குடிகளையும் அவர்களின் எதிர்குலங்களையும் அவர்கள் அரச ஆதரவுகொண்டவர்கள் என எண்ணவைக்கிறது. ஒரு நிஷத குடித்தலைவன் சென்று வங்கனையும் கலிங்கனையும் மகதனையும் கண்டு பரிசளித்து வணங்கி மீள்வதே பிற குடிகளுக்குமேல் ஒரு கொடி உயரத்தை அளிக்கிறது” என்றார் கருணாகரர். “ஆம். அதன் பொருட்டே நாம் செல்கிறோம். அவ்வாறே அவர்கள் எண்ணட்டும். அதுவே நமது வழியென்றாகட்டும்” என்றான் நளன்.

flowerமறுநாள் அமைச்சர்கள் கூடிய அவையில் அவன் தன் திட்டத்தை சொன்னபோது அமைச்சர்களும் படைத்தலைவர்களும் ஒருங்கே எழுந்து எதிர்ப்புக் குரலெழுப்பினர். படைத்தலைவன் வஜ்ரகுண்டலன் “என்ன செய்கிறோமென்று எண்ணிச் சூழ்ந்துள்ளீர்களா, அரசே? நாம் செல்வது எளிது. அங்கு மணத்தன்னேற்பில் பலரில் ஒருவராக சென்று நிற்பதும் இயல்வதே. ஒருவேளை விதர்ப்ப இளவரசி தங்கள் கழுத்தில் மாலை சூட்டவும் கூடும். ஆனால் அதே நூல்நெறிகளின்படி அங்கு மணத்தன்னேற்புக்கு வந்திருக்கும் அரசர்கள் அனைவருக்கும் குண்டினபுரியின் எல்லை வரை உங்களை துரத்தி வரவும் கொன்று இளவரசியை சிறைபிடிக்கவும் உரிமை உண்டு. அந்நகரியின் எல்லைக்குள் உங்களை எவர் வேண்டுமென்றாலும் போருக்கு அழைக்கலாம்” என்றான்.

நளன் “மெய், அங்கிருந்து மிக விரைவாக நகரெல்லையைவிட்டு நீங்குவதற்கான ஒருக்கங்களை செய்த பிறகே நான் மணத்தன்னேற்புக்கு சென்று நிற்கவேண்டும்” என்றான். ஒற்றன் “குண்டினபுரியின் தெருக்கள் மிகக் குறுகியவை. சேற்றுப்பரப்புக்குமேல் மரத்தரை அமைந்தவை. வரதாவின் கரையிலமைந்த அந்நகரம் ஒரு குன்றுமேலிருந்து பலபடிகளாக கீழிறங்கி நதிக்கரைச் சதுப்பு வரை வரும் அமைப்பு கொண்டது. தெருக்களெல்லாமே படிக்கட்டுகள்தான். தேர்களில் விரைய அங்கே இயலாது. புரவிகள் மட்டுமே பாயமுடியும்” என்றான்.

NEERKOLAM_EPI_11

நளன் முகம் மலர்ந்து “ஆம், அதைத்தான் நானும் எண்ணினேன். அந்நகரின் வரைபடத்தை பலமுறை பார்த்தேன். அந்நகரில் எங்கும் அகன்ற தேர்ச்சாலை இல்லை. வரதாவின் பெருக்கினூடாகவே அவர்கள் தங்கள் வணிகப்பயணங்களை நிகழ்த்துகிறார்கள்” என்றான். “நகரை எவரும் தொடராமல் விரைந்து கடக்கும் வழி ஒன்று உள்ளது” என்றபின் எழுந்து மான்தோல் சுருளை விரித்து நகரின் வரைவு ஒன்றை காட்டினான். “அந்நகரின் அனைத்துத் தெருக்களும் படிக்கட்டுகளைப்போல் உள்ளன. கலிங்கர்களுக்கோ மகதர்களுக்கோ படிக்கட்டுகளில் துணிந்து தாவும் புரவிகள் இல்லை. நமது புரவிகளை நாம் தாவுவதற்கு பயிற்றுவித்திருக்கிறோம்.”

“அங்குள்ள மிகச் சிறந்த படிக்கட்டு ஒன்றை நான் காட்ட விழைகிறேன்” என்று நளன் சுட்டிக்காட்டினான். “அங்குள்ள இல்லங்கள் அனைத்தும் பட்டைக்கற்களை கூரைகளென அமைத்து அவற்றின்மேல் களிமண் நிறைத்து மலர்ச்செடிகள் நட்டு வளர்க்கப்பட்டவை. படிகளாக இறங்கும் பூங்காக்களால் ஆனது அந்நகர் என்று கவிஞர் பாடுகிறார்கள். அக்கூரைகள் மேல் பாய்ந்தே நாம் நகரை கடக்கமுடியும். அவர்களின் காவல்மாடங்கள், வில்லவர்மேடைகள் அனைத்தும் தெருக்களையே இலக்குகொண்டவை. கூரைமேல் பாய்பவர்களை நோக்கி வேலோ அம்போ தொடுக்க அவர்களுக்கு அமைப்பே இல்லை.”

அந்தக் காட்சி உள்ளத்திலெழுந்து அவர்களனைவரையும் ஓசையழிந்து அமையச்செய்தது. நகர்க்காவல் அமைச்சர் சுக்தர் “ஆம், நல்ல வழி அதுவே” என பொதுவாக சொன்னார். ஆனால் அது நளனால்கூட எளிதில் இயல்வதல்ல என்று தோன்றியது அவருக்கு. “குண்டினபுரிக்குத் தெற்கே உருளைக்கற்கள் மட்டுமே நிறைந்த பாதை உள்ளது. அதனூடாக நாம் வருவோமென்றால் எந்தப் புரவிப்படையும் நம்மை தொடர இயலாது” என்றான் ஒற்றன். “ஆம். அதுவே நமது வழி” என்று நளன் சொன்னான். பேச்சு முடிந்தது. எவ்வகையிலோ அது நிகழ்ந்துவிடும் என்னும் எண்ணம் அனைவருக்கும் எழுந்தது. எதிர்காலம் நிகழத்தொடங்க அவர்கள் அமைதியில் விழிநிலைத்து அமர்ந்திருந்தனர்.

மெல்ல அசைந்து கலைந்த அமைச்சர் கருணாகரர் “தாங்கள் மணமகனாக அவை நிற்கையில் உடைவாள் தாங்கி அருகே நிற்க வேண்டியது யாரென்பதையும் இப்போதே முடிவு செய்துகொள்ளலாம். நமது குடிகளுக்குள் பின்னர் அது ஒரு பேச்சென்று ஆகவேண்டாம்” என்றார். “ஏனென்றால் இது ஒரு பெருநிகழ்வு. இது சூதர்களால் பாடப்படும். தொல்கதையாக நம் குடிகளில் நிலைகொள்ளும். உங்களுக்கு இணையாகவே அவரும் பாடப்படுவார்.” பின்னர் தாழ்ந்த குரலில் செயற்கையான இயல்புடன் “எண்ணியிராது ஏதேனும் நிகழ்ந்தால் உங்கள் மைந்தர் அகவை எய்துவது வரை அவரே அரசுப்பொறுப்பேற்கவேண்டும் என நீங்கள் கருதுவதாகவும் அதற்கு பொருளுண்டு” என்றார்.

நளன் திரும்பி நோக்க இளைய அமைச்சரான நீரவர் “உடன்குருதியினன் உடைவாள் தாங்க வேண்டுமென்பது நெறி” என்றார். நளன் “பிறகென்ன, என் இளையோன் புஷ்கரன் உடைவாள் ஏந்தட்டும்” என்றான். அவர்கள் முகங்களில் மிகச் சிறிய மாறுதலொன்று வந்தது. கருவூல அமைச்சர் ஸ்ரீதரர் “நன்று! அதுவே முறை” என்றார். பின்னர் அதே குரல் தொடர “தங்கள் தந்தைக்கு நிஷதர்களின் பன்னிரு குடிகளின் துணைவியரில் பிறந்த மைந்தர்களில் அவரே மூத்தவர். ஆனால் அவர் காளககுடியைச் சேர்ந்தவர் என்பதை மறக்க வேண்டியதில்லை” என்றார்.

அவரை கூர்ந்து நோக்கி நளன் “நீங்கள் சொல்ல வருவதை உங்கள் முழு எண்ணத்துடன் புரிந்துகொண்டேன், அமைச்சரே” என்றான். “ஆம். தாங்கள் உணர்ந்துவிட்டீர்கள் என்று எனக்குத் தெரிகிறது. ஆனால் பிறர் உணர நான் சொல்ல வேண்டியுள்ளது” என்றார் அமைச்சர். “நிஷத குடியில் முதன்மையானது நமது குடி. இந்நகரம் தோன்றிய காலம் முதல் நாமே ஆண்டுவருகிறோம். பிற குடிகள் நம் தலைமையை ஏற்றுக்கொண்டவை.” அவர் சித்தம் பிழையாக சொல்லிவிடலாகாது என எண்ணி எண்ணி சொல்லெடுப்பது தெரிந்தது. “பாரதவர்ஷம் முழுக்க குடித்தொகைகளால் உருவான நாடுகளில் எண்ணிக்கையும் வடிவ அளவும் வல்லமையும் மிகுந்த முதன்மைக் குடியே ஆட்சி அமைப்பது வழக்கம். அவர்களுக்கு என்றும் எதிர்நிலையாக அமைவது இரண்டாவது பெருங்குடியே. அது இயல்பு. ஏனென்றால் அறமும் உணர்வுகளும் தனிமனிதர்களுக்குரியவை. குடிகளும் குலங்களும் ஆற்றலையும் வெற்றியையும் மட்டுமே நாடுகின்றன.”

“அந்த எதிர்ப்பு இருக்குமென்பதை உணர்ந்து அதன் பொருட்டே ஆட்சி செய்யும் முதற்குடியின் அரசர்கள் இரண்டாவது பெருங்குடியின் பெண்ணையே இணையரசியாக ஏற்றுக்கொள்கிறார்கள். தன் குடியிலிருந்தே பட்டத்தரசியை கொள்கிறார்கள். நம் அரசரும் அவ்வாறே செய்தார். மணிமுடி நம்  குடிக்குள் இருக்கையில் பிற அனைத்திலும் அரண்மனையிலும் அவையிலும் படையிலும் இரண்டாமிடம் அக்குடிக்குரியது” என ஸ்ரீதரர் தொடர்ந்தார்.

“உண்மையில் இப்படி இரண்டாமிடம் அளிப்பதே அவர்களை விழைவுகொண்டவர்களாக ஆக்குகிறது. இரண்டாமிடத்தில் அமைந்து அவர்கள் ஆட்சியின் ஆற்றலை, அதன் இன்பங்களை, அதன் வழியாக உருவாகும் மதிப்பை அறிந்துகொண்டிருக்கிறார்கள். அயல்நாட்டு அரசர்களுக்கும் பெருவணிகர்களுக்கும் அவர்களும் அறிமுகமாகிறார்கள். சூதர்கள் அவர்களையும் புகழ்கிறார்கள். அந்தச் சுவை ஒரு துளி அறிந்தபின் ஒழிவது இயலாது.”

“ஆனால் இரண்டாமிடத்தை அவர்களுக்கு அளிக்காமல் நாம் ஆளவும் முடியாது. ஆகவே சிம்மத்தை நம் குருதியையே கொடுத்து பழக்கி நாளும் உடன் வைத்திருப்பவர்களாகிறோம்” என்றார் ஸ்ரீதரர். “அரசே, அதை வெல்ல நாம் செய்வதற்கிருப்பது ஒன்றே. நம் எதிரியை அவன் ஆற்றலை பிரித்து நம்முடனேயே வைத்திருப்பது. காளககுடியை எட்டு படைப்பிரிவுகளாக்கி நம் எல்லையில் நிறுத்தியிருக்கிறோம். இன்றுவரை அக்குடியிலிருந்து அரசருக்கெதிராக ஒரு குரல்கூட எழுந்ததில்லையென்றாலும் அவர்களின் மூத்தோர் மன்றுகளில் என்றும் நமக்கு இரண்டாமிடமா என்றொரு குரல் எப்போதும் எழுவதை நாம் அறிவோம்.”

“புஷ்கரனை நாம் இப்பின்னணியில் நோக்கவேண்டும். புஷ்கரன் தங்களைப்போலவே வீரர் என்று அக்குடி உணரத்தொடங்கிய காலம் முதல் அக்குரல் வலுத்து வருகிறது. அவர் வீரமும் அறிவும் தமையனாகிய உங்களால் பயிற்றுவிக்கப்பட்டதென்பதை இன்று நாம் அவர்களிடம் சொல்ல முடியாது. அது அவர் முதுமூதாதை செங்கானகத்துத் துஞ்சிய காளகர் கோசிகரின் ஆற்றலின் குருதித்தொடர்ச்சி என அவர்கள் நம்புகிறார்கள்.”

அனைவர் முகங்களும் அச்சொற்களுக்கு ஆதரவாக மாறியிருந்தன. “ஆனால் அவனை நானறிவேன். அயோத்தியின் ராமனுக்கு இளவல்போல அவன் எனக்கு ஆட்பட்டவன்” என்றான் நளன். “உண்மை. இன்று அவரது உள்ளம் அவ்வண்ணமே உள்ளது. ஆனால் அது எப்போதும் அவ்வண்ணம் இருக்கவேண்டுமென்பதில்லை. அவ்வாறு மானுட உள்ளங்கள் மாறாநிலை கொண்டிருந்தமைக்கு வரலாற்றுச் சான்றுகளேதும் இல்லை” என்றார் அமைச்சர் ஸ்ரீதரர். “அவர் குடி அவரை சூழ்ந்துள்ளது. அவர்கள் பேசும் சொற்களே அவர் எண்ணமாக மாறி உள்ளே நிறைகிறது. உள்ளும் புறமும் என சூழ்ந்திருப்பவை உண்மையில் நம் சுற்றத்தின் எண்ணங்களே.”

“மீன் நீரை எதிர்த்து போராட முடியுமா? சில மீன்களால் இயலக்கூடும். அது அத்தனை எளிதல்ல, அரசே. ஓர் அரசன் தெய்வச்சொல்போல தன்னுள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ள வேண்டிய நுண்சொல் ஒன்று ‘மனிதர்கள் ஆற்றல் அற்றவர்கள், மனிதர்கள் எங்கோ ஒரு முனையில் முழுமையாக தோற்பவர்கள்’. எப்போதும் நின்று தெய்வங்களுக்கு இணையாக தலைதூக்கி எழும் மானுடர் உண்டு. அவர்கள் தலைமுறைகளுக்கு ஒருவர் மட்டுமே.”

நளன் “ஆனால் தம்பி என அவன் இருக்க பிறிதொருவன் வாள் சூடுவது அவனை சிறுமைப்படுத்துவது போலல்லவா?” என்றான். “ஆம், அப்படி எண்ண வாய்ப்புள்ளது. எண்ணாவிடிலும் அதை ஒரு ஐய விதையாக அவர் உள்ளத்தில் சிலர் தூவவும் கூடும்” என்றார் அமைச்சர் ஸ்ரீதரர். “நமது எல்லையில் கிழக்கிலிருந்து கலிங்கத்துப் படைகள் வந்து தாக்கக்கூடும் என்ற எண்ணத்தை உருவாக்குவோம். புஷ்கரன் தலைமையில் படையொன்றை கிழக்கெல்லையை நோக்கி அனுப்புவோம். எதிர்பாரா செய்தி கிடைத்து உடன் முடிவெடுத்து விரைவாக கிளம்பிச் செல்வதுபோல் நாம் விதர்ப்பத்துக்கு செல்வோம். அங்கு பிறிதொரு துணையின்றி நின்றபொழுதில் அப்போது தோன்றியதென நம் படைத்தலைவர்கள் எவரேனும் வாளேந்தி உங்கள் அருகே நிற்கட்டும்” என்றார் ஸ்ரீதரர்.

“அவ்வாறு வாளேந்துபவன் ஓர் எளிய படைத்தலைவனாகவே இருக்கவேண்டும். அங்கே நிகழும் போரில் அவன் கொல்லப்படவும் வேண்டும். அவனுக்கு நாம் நடுகல் நாட்டி படையலிட்டு நம் பெருவீரன் என கொண்டாடுவோம். ஆனால் அங்கு சூடிய வாளுடன் அவன் அரசுகோரி ஒருபோதும் வரக்கூடாது” என்றான் வஜ்ரகுண்டலன். அவர்கள் அதை முன்னரே எண்ணித்தெளிந்திருந்தனர் என்பதை அமைச்சர்களின் முகக்குறிகள் காட்டின.

நளன் அமைச்சரை நோக்கியபடி சில கணங்கள் அமர்ந்திருந்தான். பின்பு புன்னகைத்து “புஷ்கரனாக நான் இருந்தால் இச்சூழ்ச்சியை உணர்ந்துகொள்வேனா என்று எண்ணினேன். உடனடியாக தெளிவாக புரிந்துகொள்வேன் என்று தோன்றியது. பின்னர் இதையொட்டிய என் உணர்வுகள் என்னவாக இருக்கும் என்று சூழ்ந்தேன். மூத்தவனால் நான் கைவிடப்படுகிறேன் என்றே எண்ணுவேன். ஐயத்திற்குரியவனாகிறேன் என உணர்பவனே முதல் எதிரியாகிறான். அது அவன் ஆண்மையை, நேர்மையை, அவன் கொண்ட அன்பை சிறுமைசெய்வது. உச்சவெறுப்பென்பது புறக்கணிக்கப்பட்ட அன்பின் மாற்றுரு.”

“நான் அவ்வெண்ணத்தை அவனுக்கு கொடுக்கலாகாது. அவன் எனக்கு இலக்குவனென்றால் நான் அவனுக்கு ராமனாக இருந்தாக வேண்டும். அவனே வந்து எனது உடைவாளை தாங்குக!” என்றான் நளன். அவன் இறுதியாக சொல்லிவிட்டான் என்னும் எண்ணம் அனைவருக்கும் எழ அவர்கள் தலைவணங்கினர். நளன் எழுந்து “எனக்குரிய புரவியை தெரிவுசெய்ய நானே வருகிறேன். நம் வெற்றி நாம் தெரிவுசெய்யும் புரவியிலேயே உள்ளது. விதர்ப்பினிக்கும் நிகரான ஒரு புரவி தேவை” என்றான். “அவர்கள் தங்கள் அளவுக்கு புரவித்திறன் கொண்டவர்களா என்று தெரியவில்லை” என்றார் அமைச்சர். “என் திறன்களை அவள் பெற்றுக்கொள்வாள். அதற்கான தருணம் அது” என்றான் நளன்.

அவர்கள் செல்வதற்காக எழுந்தபோது அமைச்சர் கருணாகரர் “பிறிதொன்றும் நான் சொல்லவேண்டும்” என தயங்கினார். “நாம் இந்திரனை நிறுவியது ஒரு அரசுசூழ்தலாகவே. உண்மையில் நம் தெய்வம் கலியே. கிளம்பும்போது நம் தெய்வத்திற்கு பலியும் பூசனையுமிட்டு செல்வதே உகந்தது.” நளன் “வேண்டியதில்லை. நாம் செய்வன நம் உள்ளத்தையும் மாற்றியமைக்கின்றன. வென்று எழுந்து நிற்கும் இந்திரனை வழிபட்டபின் கருமைகொண்டு ஒடுங்கிய கலியை வணங்க என் உள்ளம் ஒப்பவில்லை. நாம் கலியிலிருந்து விடுபட்டாகவேண்டும், அமைச்சரே. அன்றேல் ஒருபோதும் நம்மால் மெய்யான ஷத்ரியர்களாக ஆகமுடியாது. பரசுராமர் நமக்களித்த செய்தி அதுவே” என்றான்.

“ஆனால் கலி…” என சொல்லவந்த கருணாகரரை கையமர்த்தி “கலிக்குரிய பூசனைகள் செய்யப்படட்டும். நான் வழிபட முடியாது. இந்திரனை வணங்கிவிட்டு கிளம்புவதே என் திட்டம்” என்றான் நளன். தலைவணங்கி “அவ்வண்ணமே ஆகுக, அரசே!” என்றார் கருணாகரர்.

முந்தைய கட்டுரைகுமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருது சபரிநாதனுக்கு
அடுத்த கட்டுரைவெற்றி கடிதங்கள் 3