வெற்றி -ஒரு கடிதம்

uni

அன்புள்ள ஜெ

வெற்றி வாசித்தேன். அதைப்பற்றிய என் கருத்துக்களை பின்னர் எழுதுகிறேன். நான் வியப்பது ஒரு விஷயம் பற்றி. நான் அக்கதையை வாசிக்கச்சொன்ன அத்தனைபேரும் ‘முடிவ ஊகிச்சுட்டேன்ங்க’ என்றார்கள். சும்மா ராஜேஷ்குமார் வாசகர்கள் பாதிப்பேர். அவர்கள்தான் மேதைகளா , இல்லை நான்தான் மொக்கையா?

ராஜேந்திரன்

***

அன்புள்ள ராஜேந்திரன்,

இதைப்பற்றி நான் குழும விவாதங்களில் பலமுறை எழுதியிருக்கிறேன். ஓர் இலக்கியவாசகன் ஒருபோதும் இதைச் சொல்லமாட்டான். சொல்பவர்கள் ‘கதை’ படிக்கும் வாசகர்கள். இவர்கள் பெரும்பாலான புனைவுகளைப்பற்றி இதைத்தான் சொல்வார்கள்.

ஏன் இது நிகழ்கிறது? வெற்றி கதையை எடுத்துக்கொள்வோம். அ அல்லது ஆ தான் அதற்கு விடை அல்லவா? எந்த வாசகனும் இரண்டையும் மாறி மாறி ஊகித்தபடியே வாசிப்பான். இரண்டில் எது முடிவு என்றாலும் தான் அதை முன்னரே ஊகித்துவிட்டதாகவே அவனுக்குத் தோன்றும்

சரி, அக்கதையின் முடிவு மறுபக்கமாக இருந்திருந்தால்? அப்போதும் இதே ஆட்கள் இதையேதான் சொல்லியிருப்பார்கள். அப்படியென்றால் என்னதன முடிவு?

இத்தகைய கதைகளை அசோகமித்திரன் நிறைய எழுதியிருக்கிறார். இவை ‘எதிர்பாரா முடிவு’ ரக கதைகள் அல்ல. முடிவுக்குப்பின் புதிய கேள்விகளுடன் கதை மீண்டும் வாசகன் உள்ளத்தில் தொடங்கியாகவேண்டும். அதுவரை அவன் வாசித்த கதையை அவன் மறு அடுக்கு செய்தாகவேண்டும். இலக்கியத்தில் இத்தகைய கதைகளின் வடிவம் கோருவது இதைமட்டுமே

ஜெ

வெற்றி [சிறுகதை]

***

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-9
அடுத்த கட்டுரைவெற்றி ஒரு கட்டுரை