‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-10

 9. ஊசலின் தாளம்

flowerஅரசவையில் புலவர்களுடன் அமர்ந்து நூலாய்கையில், அவைப்பணிகள் முடித்து நீராட்டறைக்குச் சென்று உடலை சேடியரிடம் அளித்துவிட்டு அமர்ந்திருக்கையில், அணிபுனைந்து மஞ்சத்தறைக்கு செல்லும்போது, அவ்வப்போது அவன் எண்ணமே வந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு கணத்தில் மீள மீள வரும் அவன் எண்ணம் அவளை சினம் கொள்ளச் செய்தது. திட்டமிட்டு ஓர் ஆண் தன்னை ஒரு பெண்ணுள்ளத்தில் செலுத்திவிடமுடியுமென்றால் பெண் உள்ளமென்பது வென்று கைகொள்ளத்தக்க வெறும் பொருள்தானா? அப்படி வலைவீச முடியுமென்று ஒருவன் தன்னைப்பற்றி எண்ணுவதே சிறுமையல்லவா?

அம்முயற்சிக்கு ஆற்றவேண்டிய மறுவினையென்பது ஒருகணமும் அவனை எண்ணாமல் இருப்பது. அவன் பெயரை முழுமையாகவே மறந்து போவது. ஆனால் அது அவளால் இயலும் என்று தோன்றவில்லை. எண்ணம் எழுவதற்கும் உதிர்வதற்கும் காலப்பெருக்கை ஆளும் தெய்வமொன்றின் ஆணை தேவை. மானுடரால் அதை செய்ய முடியாது. அவ்வெண்ணத்தை உதறும்பொருட்டு அவள் வெவ்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள். மூன்று நூல்களை ஒரே தருணத்தில் பயின்றாள். இருபொழுது களம் சென்று படைக்கலம் ஆடினாள். அவையில் நீட்டி வைக்கப்பட்ட இடர் மிக்க வழக்குகளை எடுத்து ஆய்ந்தாள். இருந்தெண்ண பொழுது எஞ்சாதபடி தன் நாட்களை நிறைத்தாள். அன்னங்களுடன் அமையும் தருணங்களும் குறைந்தன.

அவ்வலைகளால் ஆழத்தை மறைக்கவும் இயன்றது. ஆயினும் பொழுது இருண்டபின் துயில்கொள்ளும் பொருட்டு சேடியர் ஆடையும் அணியும் களைய பீடத்தில் அமர்ந்து விழிமூடும்போது காத்திருந்ததுபோல் வந்து அவளை பற்றிக்கொண்டது அவ்வெண்ணம். பின்னர் அவள் உதற உதற அருகிலெங்கோ இருந்தது. அதை மறைக்க அவள் சேடியருடன் மிகையாக சொல்லாடினாள். சிரித்தும் சினந்தும் சொல் சூழ்ந்தாள். மஞ்சத்தில் துயிலும்பொருட்டு படுத்து படுக்கையில் சுடர்மணி நின்ற அகல்விளக்கின் மங்கிய ஒளியில் இறுதியாக தன்னை உணர்கையில் இயல்பாக உடனிருந்தது அவ்வெண்ணம். பின்னர் அதை விலக்கும்பொருட்டு புரண்டு படுப்பதும் எழுந்தமர்வதும் இருளில் எழுந்து வான்நோக்கி மீன்களை நோக்கி சலிப்பதும் இடைநாழியில் நடந்து களைத்து மீள்வதும் விழிஓயும் வரை நூல் பயின்று படுப்பதும் அறியாது துயின்று எழும்போது அவ்வெண்ணம் உடனிருப்பதைக் கண்டு சினப்பதுமாக அவள் நாட்கள் சென்றன.

அவளுக்குள் இருந்த விழைவே ஈர்த்து வந்ததுபோல் ஒவ்வொரு நாளும் அவனைப்பற்றிய செய்தி வந்துகொண்டிருந்தது. அல்லது முன்பும் வந்துகொண்டிருந்தவற்றில் இன்று அவள் உள்ளம் அவற்றை தொட்டுத் தேர்ந்தது. இந்திரனின் பெருநகரின் நடுவே இந்திரசிலையின் முகத்தைமட்டும் தனித்தெடுத்து வரைந்த ஓவியத்தை அவள் முன் காட்டிய சூதர் “இன்று பாரதவர்ஷத்தின் பெருஞ்சிலை இதுவே, இளவரசி” என்றார். அதை கையில் வாங்காமல் “நன்று, கருவூலத்தில் அது இருக்கட்டும்” என்றாள். “என்றேனும் நாம் அதைவிட பெருஞ்சிலை அமைக்கும்போது அளவுகளை அறிய பயன்படும்.” சூதர் தலைவணங்கி “அவ்வண்ணமே” என்றார்.

அன்றும் மறுநாளும் அத்திரைச்சீலையே அவள் எண்ணத்தில் எழுந்துகொண்டிருந்தது. பின்னர் சேடியை அழைத்து எடுத்து வரச்சொல்லி தனிமையில் அமர்ந்து அதை விரித்துப் பார்த்தாள். நோக்குகையில் ஏதோ ஒன்று விழிமறைக்க அது மங்கலாகியது விழி விலகுகையில் உளம் கூர்ந்து அதை இழைவரி தெளிய நோக்கியது. அதை பார்த்துக் கொண்டிருக்கையில் எங்கோ முன்பு அதை கண்டிருந்த நினைவெழுந்தது. சுருட்டி பீடத்தில் வைத்தபின் புருவம் சுளித்து ‘யார், எவர் முகம் அது?’ என்று தன்னுள் உசாவிக்கொண்டாள். அவளுள் அமர்ந்து அழியாது ஒலித்து அவைநிகழ்வின் ஊடாக வந்து சென்றது அவ்வெண்ணம்.

ஒருகணத்தில் அவள் உணர்ந்து கொண்டாள் அது அவன் முகம், வெவ்வேறு தருணங்களில் சேடியர் காட்ட அவள் ஓரவிழியால் ஒருகணம் நோக்கி விலக்கியது. ஐயத்துடன் எழுந்து சென்று அச்சுருளை எடுத்து விரித்து இந்திரனின் முகத்தை பார்த்தாள் அவன் முகமேதான். திட்டமிட்டு அவன் அதை உருவாக்கி இருக்கிறான் என்று முதல் கணம் தோன்றியது. அவ்வாறல்ல என்று பின் சித்தம் உணர்ந்தது. சிற்பியர் ஒருபோதும் அரசனின் ஆணைகளுக்கு கட்டுப்படுபவர்களல்ல. அவர்களின் கைகளை இயக்குவது கற்பனையில் குடிகொள்ளும் தெய்வங்களே. அத்தெய்வங்கள் அவன் முகமே இந்திரனுக்குரியது என்று சொல்லியிருக்கின்றன போலும்.

அவள் அவன் முகத்தை மீண்டும் பார்க்க விழைந்தாள். தன் உளமயக்கு அல்ல என்று தெளிவதற்காக மட்டுமே என்று சொல்லிக்கொண்டாள். சேடியரிடம் அத்திரைச்சீலையை கொண்டுவரும்படி ஆணையிட தயக்கமாக இருந்தது. வாழ்வில் முதல் முறையாக தயக்கம் என்பதை அவள் உணர்ந்தாள். உள்ளம் வெளித் தெரிவதற்கு அஞ்சி உள்ளத்தால் பொத்திக் கொள்ளும் அச்செயலை அவள் முன்பு செய்ததே இல்லை. அவள் உள்ளத்தில் பிறரறியாது எதையும் கரந்ததில்லை. அவள் விழையாத எதுவும் இதழ்களிலும் முகத்திலும் வந்ததுமில்லை.

கரந்து வைத்திருந்த அவ்வெண்ணம் அவள் உடல்அசைவுகளை முழுமையாக மாற்றியது. சேடியரின் முகம் நோக்கி விழியெடுக்க இயலாதவளானாள். அவர்களிலிருந்து தனித்திருக்க விழைந்தாள். அவளில் நிகழ்ந்த அம்மாற்றத்தை சேடியர் உடனேயே உணர்ந்தனர். “இளவரசி ஏன் நம் விழிகளையே நோக்க மறுக்கிறார்?” என்று ஒருத்தி இன்னொருத்தியிடம் கேட்டாள். “ஆம், நானும் அதை நோக்கினேன், அவர் தோள்கள் குறுகியிருக்கின்றன” என்றாள் இன்னொருத்தி. கேட்டு நின்ற முதிய சேடி புன்னகைத்து “இளவரசி காதல் கொண்டிருக்கிறாள்” என்றாள். இளம் சேடி திகைப்புடன் “எவரிடம்?” என்றாள். “அதை அறியேன். எவரிடமோ காதல் கொண்டிருக்கிறாள். ஐயமே இல்லை. பெண்டிர் தங்களிடமே மறைக்க விரும்புவதும் அது மட்டுமே. உலகத்திடமே மறைக்க முடியாததும் அதுவே” என்றாள் முதிய சேடி. இளம் பெண்கள் வாய்பொத்தி சிரித்தனர். அவர்கள் வியந்து அதனால் விலக்கி அதனூடாகவே அஞ்சிய ஒருத்தி பெண்ணென்றாகி அவர்களைப்போல் மாறியதன் உவகையை அவர்கள் கொண்டாடினர்.

நிலை கொள்ளாது தன் தனித்த அறையிலும் ஒளி விழுந்துகிடந்த இடைநாழியிலும் அன்னங்கள் மிதந்து சுழன்ற சுனைக்கரைகளிலும் மலர்கள் பூத்துப்பரவிய அணிக்காட்டிலும் எங்கென்றறியாதவள்போல தனித்து உலவும் அவளை சாளரங்களினூடாக நோக்கி ஒருவரையொருவர் விழிதொட்டு புன்னகைத்தனர். மறுநாள் தமயந்தி இயல்பாக செல்வதுபோல் கருவூலத்தில் நுழைந்து காப்பாளரிடம் ஓவியங்கள் அனைத்தையும் கொண்டுவரச்சொல்லி ஒவ்வொன்றாக பார்த்தாள். ஒவ்வொரு உடல்அசைவையும் நூறு முறை எண்ணியே இயற்றினாள். அவ்வெண்ணத்துடன் உடல் முரண்படவே விந்தையானதோர் நெளிவே அவளில் ஒளிவிட்டது. பெண் உடலை அறியாத முதிய காப்பாளரும்கூட என்ன நிகழ்கிறது அரசிக்குள் என்று எண்ணும்படி வெளிப்படையாக அமைந்திருந்தது அது.

அரண்மனை வரைபடங்களில் சிற்றாலயங்களின் ஓவியங்களை ஒவ்வொன்றாக எடுத்துப்பார்த்து அப்பால் வைத்தாள். கோட்டைகள் சிலைகள் என பார்த்துச்சென்று இயல்பாக “அயல்நாட்டு அரசர்களின் படங்கள் எங்கே?” என்று அவள் கேட்டாள். மகதனையும் கலிங்கனையும் அங்கனையும் வங்கனையும் பார்த்துச் சென்ற கைகள் பதறத் தொடங்கின. மேலுதடு வியர்க்க முலைகள் எழுந்தமைந்தன. அவளை நோக்கிக்கொண்டிருந்த முதிய காப்பாளர் ‘ஆம், பிறிதொன்றுமல்ல’ என்றார் தனக்குள். அவள் கழுத்து நரம்பொன்று பதற உதடுகள் எழுந்தமைய விரித்துப்பார்த்த அந்த ஓவியம் எவருடையது என்று அறியவேண்டுமென்று விழைந்தார். அவள் அதை மட்டும் எடுத்து சுருட்டிக்கொண்டு “நன்று” என்று திரும்பிச் சென்றாள்.

அவளது நடைவிரைவைக்கண்டு எழுந்து பின்னால் நோக்கி நின்றார். அந்த ஓவியம் எந்த அரசனுடையதென்று எளிதில் கண்டுபிடித்துவிட முடியும் என்று ஏன் அவளுக்கு தோன்றவில்லை என்று வியந்தார். எஞ்சியவற்றை எடுத்துநோக்கி அது நிஷத மன்னன் நளனுடையது என்று அறிந்ததும் “மெய்யாகவா…? இதுவும் நிகழுமா இப்புவியில்…?” என்றார். பின்னர் மெல்ல தளர்ந்து பீடத்தில் அமர்ந்து “ஆம். இவ்வாறுதான் எப்போதும் நிகழ்கிறது. மானுடரைக்கொண்டு புதிய நாடகங்களை இயற்றவே தெய்வங்கள் விரும்புகின்றன” என்று சொல்லிக்கொண்டார்.

எவரிடமும் அதை சொல்லலாகாது என்று தனக்கு ஆணையிட்டுக்கொண்டாலும் அன்றிரவே தன் முதிய துணைவியை அழைத்து “அது நிஷத மன்னன் நளன்” என்றார். அவள் வாய்பொத்தி “என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்க “எவரிடமும் சொல்லாதே. நானறிவேன். இளவரசி அவன் ஓவியத்தை எடுத்துகொண்டு சென்றாள்” என்றார். “அது அவன்மேல் உள்ள காதலினால் என்று எப்படி அறிவீர்கள்? நஞ்சூட்டி அவனை கொல்லும்பொருட்டாகக்கூட இருக்கலாமே…?” என்றாள். “நான் கண்ணும் செவியும் மழுங்கிய முதியவன். ஆனால் இளமையில் தானறிந்த இளம்பெண்ணை எந்த ஆணும் மறப்பதில்லை. அவள் உடலிலும் விழிகளிலும் வந்த அந்நிகழ்வு காதல் என்றறியவில்லை என்றால் நான் வாழ்ந்ததில்லையென்றே பொருள்” என்றார் முதியவர்.

மறுநாளே குண்டினபுரி முழுக்க நளனே பேசுபொருளானான். அரண்மனையில் பெண்டிர் மந்தண ஒலியில் ஒருவரோடொருவர் “அவனா…? கரியவன்” என்றார்கள். “அடுமனைத் திறன் கொண்டவன். இனி அரசவை உணவுக்கு தாழ்வில்லை” என்று பேசி வாய்பொத்தி சிரித்துக்கொண்டனர். “அழகன்… அதில் ஐயமில்லை” என்றனர். “யார் பார்த்தது அவ்வோவியத்தை?” என்றாள் ஒருத்தி. “நான் பார்த்தேன். அவன் வடிவிலேயே நகர் மையத்தில் இந்திரன் சிலை எழுந்துள்ளது என்று எனக்குத் தோன்றியது” என்றாள் இன்னொருத்தி. “அவனேதான்” என்றாள் பிறிதொருத்தி. பட்டு கசங்கும் ஒலியில் அவன் பெயர் ஒலித்துக்கொண்டே இருந்தது அகத்தளத்தில்.

மகளிர் எவருக்கும் அது சினமூட்டவில்லை. அரசியின் உள்ளம் இயல்பெனச் சென்று படிந்தது என்ற செய்தியே அவர்களையும் நளனை ஏற்க வைத்தது. காவலரும் பிறரும் முதற்கணம் நிஷாதனா என வியந்தாலும் பின்னர் அவனுடன் தங்களை இணைத்துக்கொண்டார்கள். குடிப்பெருமையையும் தொல்பெருமிதத்தையும் கடந்து நிஷாதனை தங்கள் அரசனாக எண்ணிக்கொள்ளவும் செய்தது அந்த உளம்புகுதல்.

தமயந்தி மட்டும் அதை அறிந்திருக்கவில்லை. தன் அறைக்குள் கதவை தாழிட்டுவிட்டு மஞ்சத்தில் படுத்து அந்த முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் எண்ணியிருந்த உள்ளக்காதலனின் முகமல்ல. சிறிய உருவம். கரிய கூர்முகம். அவன் ஒரு பறவை போன்றிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவளைவிட இளையவன். தன்னருகே நின்றால் உயரம் குறைந்தவனாக, தன் தோளைவிட சிறிய தோள்கொண்டவனாக அவன் இருக்கக்கூடும். அவளை வென்று வளைக்கும் பெருங்கைகள் கொண்டவனல்ல. அவளுக்கு நேர்நின்று வில்லோ வாளோ சுழற்றும் திறன் கொண்டவனல்ல. எவ்வகையிலும் அவனல்ல அவள் எண்ணியிருந்தவன்.

ஆனால் அவனையே எண்ணிக்கொண்டிருக்கிறாள். பெண்ணுள்ளம் கவரும் மாயங்களை நிஷதரும் அசுரரும் அறிவார்கள் என்று கேட்டிருந்தாள். அழகியரை தங்கள் மாயத்தால் கவர்ந்து செல்லும் அரக்கர்களின் கதைகள் நூறு. அவ்வண்ணம் இருக்குமோ இதுவும்? தன் உள்ளத்தில் அவன் செலுத்திய மாயச்சொல்லொன்று தூண்டில் முள்ளென குத்தியிருக்குமோ? மீண்டும் மீண்டும் அவ்வெண்ணத்தைச் சென்றடைவது பிறிதெவரோ ஒருவரா?

அன்றிரவு ஒரு தருணத்தில் அவ்வெண்ணத்தின் சுழலிலிருந்து ஒருகணமும் தான் மீளவில்லை என்று உணர்ந்தபோது எண்ணியிரா கணம் ஒன்றில் சினம் மூண்டெழ அவள் அந்த ஓவியத்தைக் கிழித்து சாளரத்தினூடாக வெளியே வீசினாள். இல்லை, இக்கணமே அவனை மறப்பேன், இனி ஒரு போதும் அவனை நினைக்க மாட்டேன், இதை என் மூதன்னையர் முன் ஆணையிடுவேன். என் குருதியால் உறுதிகொள்வேன்.

தன் மேலாடையை எடுத்து அணிந்தபின் பீடத்திலிருந்து உடைவாளை எடுத்துக்கொண்டு கதவைத் திறந்து வெளியே செல்லப்போனாள். உள்ளம் மூதன்னையரின் ஆலயத்தை அடைந்துவிட்டிருந்தது. கதவுநிலையைக் கடந்தபோது தன் அறைக்குள் ஒரு சிறகோசையை கேட்டாள். திகைத்து தயங்கி நின்று அறைக்குள் பார்த்தபோது அன்னப்பறவை ஒன்று தன் அறைக்குள் தரையில் நின்றிருப்பதை கண்டாள். அவள் அரண்மனையின் அன்னங்கள் அனைத்தையும் அவள் அறிந்திருந்தாள். அது எங்கிருந்தோ வந்தது என்று தோன்றியது.

NEERKOLAM_EPI_10-1

அருகணைந்து முழந்தாளிட்டு குனிந்து அதை பார்த்தாள். நெடுந்தொலைவு பறந்து அது வந்திருப்பது தெரிந்தது. கழுத்தை வளைத்து அலகை சற்றுத் திறந்து மூச்சிரைத்துக் கொண்டிருந்தது. அது எங்கிருந்து வந்ததென்று அவள் உள்ளம் நன்கறிந்திருந்தது.

flowerதமயந்தியின் மணத்தன்னேற்பை நிகழ்த்தலாமென்று பீமகர் முடிவெடுக்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. பல ஆண்டுகளாக ஒரு முள்முனையிலிருந்து பிறிதொரு முள்முனைக்கு தத்தளித்து தாவிக்கொண்டிருந்தார். தமயந்தி திருமணத்திற்குரிய அகவையைக் கடந்து நெடுங்காலமாகிறதென்பதை அவள் அன்னை ஒவ்வொரு நாளும் அரசனுக்கு சொல்லிக்கொண்டிருந்தாள். ஒருமுறை கவலையுடன் “ஆம். உடனே முடித்துவிடவேண்டியதுதான்” என்பார். பிறிதொரு முறை எரிச்சலுடன் “நான் என்ன செய்வது? ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொன்றை சொல்கிறார்கள். எந்த முடிவெடுத்தாலும் எவருடைய வாளோ எனக்கெதிராக எழப்போகிறது” என்பார். சில தருணங்களில் சினந்தெழுந்து “அவள் தலையை வெட்டி வீசிவிட்டு அமைதியாக நாடாள்கிறேன். என் குடிக்கு பிறந்த தீச்சொல்லென இவள் இங்கு வாழ்கிறாள்” என்பார்.

அரசி சினத்துடன் “என்ன பேசுகிறீர்கள் என்று உணர்ந்திருக்கிறீர்களா? பேரரசர்களின் முடி பணியும் அடி என்று அவளை நிமித்திகர்கள் சொல்கிறார்கள். நம் குடியில் எழுந்த அருமணி அவள்” என்றாள். “ஆம். ஆனால் அருமணி விளைந்த நாகத்தை குழி தேடிப்பிடித்து வெளியே இழுத்து கொன்று மணியை கவர்ந்து செல்வார்கள்” என்றார் பீமகர். “எளிய பெண்ணொருத்தியைப் பெற்றிருந்தால் போதும். எவருமறியாமல் அவள் இங்கு இருந்திருந்தால் இத்தருணத்தில் அவள் மைந்தனே முடியேற்கும் அகவை அடைந்திருப்பான். படைபலமும் செல்வமும் குடிவல்லமையும் இல்லாத அரசனின் அரண்மனையில் அவள் பிறந்தது…” என்றபின் “கூரை மேலிட்ட நெருப்பு என அவள் என் குடியை அழித்துக்கொண்டிருக்கிறாள்” என்றார்.

“ஏன் இத்தனை அல்லாடல்? நம் முடிவை நாம் எடுப்போமே?” என்றாள் அரசி. “நூறுமுறை உன்னிடம் சொல்லிவிட்டேன். மகற்கொடை மறுப்பென்பது ஒரு எளிய செயல் அல்ல. பேரரசர்கள் அதை போருக்கான அறைகூவலாகவே எடுத்துக்கொள்ளவேண்டுமென்று தொல்மரபு உள்ளது. மகற்கொடை மறுக்கப்பட்டவன் வாளாவிருந்தால் அஞ்சினான் என்று இழிபெயரை சூடுவான். மகற்கொடை மறுப்பு என்று ஒரு காவிய வடிவை உருவாக்கி சிறிய அரசர்கள் அனைவரையும் கழுமுனைகளில் கொண்டு அமர வைத்திருக்கிறார்கள் இழிபிறவிகளாகிய புலவர்கள்” என்றார் பீமகர்.

அரசி முன்னரே பல கோணங்களில் அதை அறிந்திருந்தாலும்கூட ஒவ்வொரு முறை கேட்கும்போதும் பெருந்துயருற்று “ஆம். ஆனால் அவளை அவ்வாறு படைத்த விண்ணாற்றல்கள் அதற்கொரு வழி கண்டிருக்கும். அவள் சக்ரவர்த்தினியாவாள் என்றுரைத்த நிமித்திகர் அறிந்திருப்பார்கள் அதை” என்றாள். “நிமித்திகர்கள் என்ன சொல்ல முடியும்? அவளுக்கான கொழுநன் முன்னரே பிறந்துவிட்டான் என்கிறார்கள். எங்கிருக்கிறான் என்றால் ஊழ் அவனை கொண்டுவந்து நிறுத்தும் என்கிறார்கள். ஊழை எதிர்கொள்ள வேண்டும். ஊழுக்கு எதிர்நிற்றல் என்பது…” கசப்புடன் நகைத்து “அது காரிருளுக்குள் மதவேழத்தை எதிர்கொள்வதுபோல என்று ஒரு கூற்று உண்டு” என்றார் பீமகர்.

ஆனால் சில நாட்களுக்குள் அமைச்சர்கள் நால்வர் அவருடைய தனியறையில் வந்து சந்தித்தனர். இரவுணவுக்குப்பின் வெற்றிலை மென்றபடி இசைக்கலைஞர் யாழிசைப்பதை ஆர்வமில்லாமல் கேட்டபடி அமர்ந்திருந்தார் பீமகர். தலை மதுமயக்கில் அவ்வப்போது சரிந்துகொண்டிருந்தது. அரசி அருகே தரையில் விரித்திட்ட மரவுரித்தலையணைகளும் உருளைத் திண்டுகளும் துணையிருக்க அரைத்துயிலில் சரிந்துகொண்டிருந்தாள். சூதர்கள் வழக்கமாக வாசிப்பதை கைபோக்கில் வாசித்துக்கொண்டிருந்தார்கள். ஏவலன் வந்து அமைச்சர்களின் வரவை அறிவித்தான்.

அமைச்சர்களின் வருகை பீமகரை சற்று குழப்பியது. ஒருகணம் எண்ணியபின் கையசைத்து சூதர்களை வெளியே செல்லும்படி பணித்தார். அவர்கள் தங்கள் யாழ்களையும் முழவுகளையும் பொதிந்து எடுத்துக்கொண்டு தலைவணங்கி வெளியேறியபின் அமைச்சர்களை உள்ளே வரச்சொன்னார். அவர்கள் உள்ளே வந்து துயில் கலைந்து என்னவென்று அறியாமல் பார்த்த அரசியை வியப்புடன் நோக்கியபின் தலைவணங்கினர். பீமகர் “அமர்க!” என்றார். அவருக்கு முன் இடப்பட்டிருந்த மென்சேக்கை பீடத்தில் அவர்கள் அமர்ந்தனர்.

அமைச்சர் முகங்களில் கவலை தெரிவதைக் கண்டபின் பீமகர் திரும்பி அரசியிடம் “நீ சென்று துயில்க! நான் இவர்களிடம் பேசிவிட்டு வந்துவிடுகிறேன்” என்றார். வாயைத் துடைத்து “இளவரசியின் செய்தியென்றால் நான் கேட்கிறேனே” என்றாள் அரசி. “இல்லை அரசி, இது எல்லைப்போர் குறித்து” என்றார் அமைச்சர். “நன்று” என்றபின் அவள் சேடியின் தோள்பற்றி வெளியே சென்றாள்.

அரசி சென்றபின் அக்கதவை மெல்ல மூடிவிட்டு வந்தமர்ந்த அமைச்சர் பாஸ்கரர் “பொறுத்தருள்க, அரசே! இது இளவரசியை பற்றித்தான்” என்றார். “சொல்க!” என்றார் பீமகர். “கலிங்க மன்னர் படைகொண்டு வந்து நம் இளவரசியை கவர்ந்து செல்லக்கூடும். நம்புதற்குரிய ஒற்றுச்செய்தி இன்று மாலை வந்துள்ளது” என்றார். படபடப்பை மறைக்க விரல்களைக் கோத்து நெஞ்சில் வைத்தபடி வெறுமனே நோக்கினார் பீமகர். அதற்குள் ஓர் ஏப்பம் வந்து மதுநாற்றத்தை அறையில் பரப்பியது.

“மாளவனுக்கு நாம் இளவரசியை கொடுக்கவிருப்பதாக ஒரு செய்தி கலிங்கத்துக்கு சென்றிருக்கிறது. எத்தருணத்திலும் அது நிகழும் என்பதனால் முந்திக்கொள்ள வேண்டுமென்று எண்ணுகிறார் கலிங்கர்” என்றார் அமைச்சர் பாஸ்கரர். இன்னொரு அமைச்சர் மதுரர் “அவருக்கு வேறு வழியில்லை. இன்று கலிங்கத்தின் இரு துறைமுகங்களையும் வந்தணையும் பொருட்களின் பெரும்பகுதி விதர்ப்பப் பெருநிலத்திலிருந்து திரட்டப்படுவது. விதர்ப்பம் மாளவத்தின் ஆட்சிக்கு செல்லுமென்றால் இப்பொருட்களனைத்தும் மாளவத்தின் துறைமுகங்களுக்கே செல்லும்” என்றார்.

“ஆம். ஏற்கெனவே அவர்களுக்குள் அந்தப் போட்டி இருந்தது” என்றார் பீமகர். “நம்மை யார் கொன்று உண்பது என நம் கண்முன்னரே பூசலிட்டுக்கொண்டார்கள்.” அமைச்சர் மதுரர் “கலிங்கர் படைகொண்டு வருகிறார் என்றால் ஐந்து நாட்களுக்கு மேல் நமது படை எதிர்த்து நிற்கமுடியாது. கலிங்கரின் படைகள் பெருவல்லமை கொண்டவை. பீதர் நாட்டு படைக்கலங்களாலும் தென்னகத்து வில்லவர்களாலும் செறிவூட்டப்பட்டவை” என்றார். பீமகர் “நாம் என்ன செய்வது…?” என்றபின் கசப்புடன் நகைத்து “கலிங்கன் படைகொண்டு வரட்டும். நாம் பணிந்து கப்பம் கட்டுவோம். நம் மகளை அவன் சிறைபிடித்து செல்லட்டும். அதன் பின் போரிடுபவர் எவரானாலும் கலிங்கனுடன் அல்லவா அதை செய்யவேண்டும்?” என்றார்.

“இது வீண்பேச்சு, அரசே. விதர்ப்பம் இதுவரை எவருக்கும் கப்பம் கட்டாத தனியரசாகவே இருந்து வந்துள்ளது. தனியரசாக இருக்கும் வரைதான் உண்மையில் மதிப்பும் பாதுகாப்பும். ஒருமுறை ஒரு நாட்டுக்கு கப்பம் கட்டிய அரசு மீண்டும் பிறிதொரு நாட்டுக்கு கப்பம் கட்டுவதாகவே மாற முடியும். அது எவருக்கேனும் கப்பம் மறுத்து தனிக்கொடி நாட்டுவதை தங்களுக்கெதிரான அறைகூவலாகவே முடியுடை மன்னர் அனைவரும் எண்ணுவார்கள். இத்தருணத்தில் எளிய அச்சங்களால் நாம் தலை தாழ்வோமென்றால் நம் குலம் எழுவதற்கு பற்பல தலைமுறைகள் ஆகலாம். ஒருபோதும் எழமுடியாமலும் போகலாம்” என்றார் அமைச்சர் மதுரர்.

“கப்பம் கட்டுவது எளிய அரசியல் செயல் மட்டுமல்ல. நாம் கப்பம் கட்டும்போதே நமது படைகளின் குடிகளின் தன்மதிப்பை அழிக்கிறோம். தங்கள் நகர் மீதும் முடி மீதும் அவர்கள் கொண்டிருக்கும் பெருமிதம் இல்லாமலாகும். நம் பொருட்டு உயிர் துறக்க படைகளும் குடிகளும் சித்தமாக மாட்டார்கள். அவ்வுணர்வை வரலாற்றைக் கடந்து கால் வைத்துச் செல்லும் வீரன் ஒருவன் தூண்டினாலொழிய மாற்றவோ வெல்லவோ இயலாது” என்றார் அமைச்சர் சதகர்.

பீமகர் எரிச்சலுடன் “என்னதான் செய்யச் சொல்கிறீர்கள்? கலிங்கன் படைகொண்டு வந்தால் அடிபணிந்து நகர் காத்து ஒளிவதன்றி வேறென்ன செய்ய முடியும் என்னால்…” என்றார். “அதற்கு முன் நாம் இளவரசியின் மணத்தன்னேற்பை அறிவிப்போம்” என்றார் மதுரர். “என்ன சொல்கிறீர்கள்? குண்டினபுரியில் இன்று பேரரசர்கள் வந்து தங்குமளவுக்கு இடமுள்ளதா? அவர்களுக்கான பாதுகாப்பை நம்மால் செய்யமுடியுமா? அதை எண்ணித்தானே இத்தனை ஆண்டுகாலம் மணத்தன்னேற்பை ஒத்திப்போட்டோம்?” என்றார் பீமகர்.

“ஆம். ஆனால் இப்போது வேறு வழியில்லை. இன்னும் இருநாட்களுக்குள் கலிங்க  மன்னர் படையுடன் புறப்பட்டுவிடுவார். படை எழுச்சியை அவர் முரசறைந்துவிட்டால் ஒழிவது இழிவென்று எண்ணுவார். அதற்குள் மணத்தன்னேற்பு அழைப்போலை அவருக்கு சென்றுவிட்டதென்றால் அதை நாம் தவிர்க்க முடியும்” என்றார் பாஸ்கரர். “இங்கா…? மணத்தன்னேற்பா…?” என்றார் பீமகர். “ஆம். பிறிதொரு வழியில்லை. பேரரசர்கள் வரட்டும். போர் நிகழுமென்றால் அவர்களுக்குள் குருதி சிந்திக்கொள்ளட்டும். எதுவாக இருந்தாலும் இத்தருணத்தில் எவருக்கும் அடிபணியாமல் கடந்து போக பிறிதொரு வழியில்லை. இனி எண்ணுவதற்கொன்றுமில்லை, அரசே” என்றார் மதுரர்

பீமகர் “நன்று! அதையே செய்வோம்” என்றார். “இப்போதே தாங்கள் ஆணையிட்டால் நன்று” என்றார் இளைய அமைச்சர் கல்விதர். “இப்போதே ஆணை எழுதவேண்டுமா?” என்று எரிச்சலுடன் பீமகர் கேட்க “ஆணைகளை எழுதிக்கொண்டு வந்துவிட்டோம். தாங்கள் இலச்சினை இட்டுவிட்டால் இன்றிரவே தூதுப்பறவைகள் கிளம்பும். நாளை மறுநாள் கலிங்கத்திற்கும் மகதத்திற்கும் மாளவத்திற்கும் செய்தி சென்று சேரும்” என்றார் பாஸ்கரர்.

படபடப்புடன் “எப்போது மணத்தன்னேற்பு?” என்றார் பீமகர். “வரும் ஆவணி முழுநிலவு நாள். இன்னும் பதினாறு நாட்களே உள்ளன” என்றார் மதுரர். “பதினாறு நாட்களுக்குள் அவர்கள் தங்குவதற்கான பாடிவீட்டை அமைப்பதற்கே நேரமில்லையே…?” என்று பீமகர் கேட்டார். “வேண்டியதில்லை. இங்குள்ள பெருவணிகர் இல்லங்களை ஒழித்து அவர்களை சிறுவீடுகளுக்கு போகச் சொல்வோம். அரசர்கள் இல்லங்களில் தங்கட்டும்.” தயக்கத்துடன் “அது இழிவு” என்று சொன்னார் பீமகர். “ஆம். ஆனால் தோற்று கப்பம் கட்டுவதைவிட நன்று” என்றார் பாஸ்கரர்

பீமகர் சீற்றத்துடன் “என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள்? இச்சிறு நாட்டின் அரசனானது எனது தவறல்ல” என்றார். பின்னர் நீள்மூச்செறிந்து “இதை பெருநாடாக்கும் துணிவும் எனக்கில்லை” என்றபின் “இம்மகளைப் பெற்றதற்காக இத்தருணத்தில்…” என்று கையசைத்தார். எண்ணங்கள் ஒருநிலை கொள்ளாமல் உடல் தவித்த பின் “இலச்சினைகளை நீங்களே வைத்து அறிவிப்பை வெளியிடுங்கள். செய்வதென்ன என்று முடிவெடுத்துக் கொள்ளுங்கள். இனி எதையும் என்னை கலந்து பேசவேண்டியதில்லை” என்றார். எழுந்து சால்வையைத் திருத்தி மறுபக்கம் இருந்த சிறுவாயிலினூடாக வெளியே சென்றார்.

தலைவணங்கி அமைச்சர்கள் தங்களுக்குள் மெல்லிய குரலில் உரையாடியபடி வெளியேறினர். அரசியிடம் சென்று நிகழ்ந்ததை சொல்ல வேண்டுமென்றுதான் வெளியே வந்தார் பீமகர். ஆனால் அவள் நன்றாக துயின்று வழிந்துகொண்டிருப்பாள் என்று எண்ணியபோது சலிப்பாக இருந்தது. தன் தனிமஞ்சத்தறைக்குச் சென்று அமர்ந்தபின் ஏவலரை அழைத்து மது கொண்டுவரும்படி ஆணையிட்டார். ஏழு கோப்பை மதுவை அருந்தியபின் உடலில் வெம்மையும் தளர்வும் நிறைய மெதுவாக எழுந்து மஞ்சத்தில் படுத்தார்.

சேற்றுக்குள் புழு நெளிவதுபோல மணத்தன்னேற்பைக் குறித்த எண்ணங்கள் அவருள் நிகழ்ந்தன. என்ன நிகழ்கிறது? விதர்ப்பத் தலைநகரியில் போரா? என்ன வேண்டுமானாலும் நிகழட்டும் என்று எங்கிருந்தோ பிறிதொரு குரல் ஒலித்தது. “ஆம்” என்றபடி புரண்டுபடுத்து சேக்கையை உடலால் கவ்வியபடி அவர் துயின்றார்.

முந்தைய கட்டுரைஎனது இன்றைய காந்தி –கடிதம்
அடுத்த கட்டுரைவெற்றி –கடிதம் 2