பட்டியல் போடுதல், இலக்கிய விமர்சனம்.

ka.na.su
செவ்வியலும் இந்திய இலக்கியமும்
கால்கள், பாதைகள்

அன்புள்ள ஜெ.,

இந்த விவாத வரிசையில் மற்றுமொரு கேள்வி.

எழுத்தை நோக்கி வரும் அனைவருமே ஏதோவகையில் லட்சிய உணர்வுகளும் அறவுணர்வுகளும் உள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்று நம்ப விழைகிறேன். சமகாலத்தின் லட்சிய அறத்தை ஒற்றை வரியில் சொல்லவேண்டும் என்றால், எளியோரை மிதியாதே என்று சொல்லலாம். சமூகத்தின் விசைகளால் புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களை சுட்டிக்காட்டி, “இவர்களும் மனிதர்கள், இவர்களும் நாமும் ஒன்று” என்றுரைக்கும் லட்சியவாதம் அது. மார்க்சியமும் தலித்தியமும் பெண்ணியமும் எல்ஜிபிடி உரிமைக்கோரலும் கருத்தளவில் சமத்துவத்தை வலியுறுத்துகிறது. ஒரு லட்சியமாக, எல்லா விதங்களிலும் சமத்துவத்தை நோக்கிச்செல்லும் போக்கு தனிப்பட்ட முறையில் எனக்கு உவப்பளிகிறது. என்னுடைய அறவுணர்ச்சி, ஆம், இது சரி தான் என்று சமூக சமத்துவம் என்ற லட்சியத்தை ஏற்றுக்கொள்கிறது.

லட்சியவாதமாக, அரசியல் நிலைப்பாடாக, தனிமனித கோட்பாடாக இருப்பதைத்தாண்டி, இவை படைப்பெழுத்தை அளவிடும் கருவியாக மாறும் போக்கு இன்றுள்ளது. ஒரு குழுமத்துக்கு எதிராக நிகழ்த்தப்படும் சமூக அநீதியை முன்வைத்து பேசப்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக ஒரு கதையோ கவிதையோ இலக்கியம் என்று கொள்ளப்படுகிறது. அப்படி ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்று அதை சுற்றி உருவாகிவரும் அறிவுத்தளம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. இந்த சமூகத்தை சேர்த்த எழுத்தாளர்கள் அதிகம் வாசிக்கப்படுவதில்லை, ஆகவே அவர்களை வாசிப்பதே அறம் என்று போதிக்கிறது. ஒரு நல்ல வாசகன் என்றால் எல்லா ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரல்களாக எழுந்துவந்துள்ள படைப்பாளிகளை படித்திருக்கவேண்டும் என்று சொல்கிறது. அவ்வாறு எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் வாசிக்கும் செயலே அவர்களுடைய சமூகத்துக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான புரட்சி என்றும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு வாசகன் தரும் ஆதரவு என்றும் கொள்ளப்படுகிறது.

வாசிப்பைத் தாண்டி, ஒருவேளை ஒரு வாசகர் இவ்வகையில் பிரபலமாக ஆகிவிட்ட நூல் ஒன்றை வாசித்து விமர்சித்தால், அது அந்த கருத்தியலுக்கு எதிரான பதிவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. வாசகரின் தனிப்பட்ட அரசியல் கொள்கைகளும் செயல்களும் வாழ்க்கையும் எப்படியிருந்தாலும், அவருடைய அறநிலையை கேள்விக்குள்ளாக்குகிறது.

ஹரோல்ட் ப்ளூமின் தரப்பு; அதற்கு எதிர்வினை

ஹரோல்ட் ப்ளூம் இந்த போக்கை பற்றி அவருடைய புத்தகத்தில் மிகவும் விரிவாகவும் கடுமையாகவும் பேசுகிறார். அவருடைய குறை, இவ்வகை ‘பிரச்சார’, ‘கோட்பாட்டு’ எழுத்தாளர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தூக்கி நிறுத்தப்படுவதும், அவர்களுடைய புத்தகங்கள் ஷேக்ஸ்பியருக்கும் டான்டேக்கும் இணையாக பாடநூல்களாக பரிந்துரைக்கப்படுகிறது என்பதே (அவர் புத்தகம் எழுதப்பட்டது 1990-ல், இன்று இந்த போக்கு வலுவடைந்துள்ளது). வயதான வெள்ளைக்கிழவர்களை தானே நூற்றாண்டுகளாக படித்து வந்துள்ளோம், அதையே ஏன் படிக்க வேண்டும் என்று அமைப்புக்கள் கேள்விகேட்கின்றன. கறுப்பின, பெண், முஸ்லீம், புலம்பெயர்ந்தோர் போன்ற சட்டகங்களுக்குள் விழும் குரல்கள் வெளியே கேட்டாகவேண்டும் என்று பெருக்கப்படுகிறது; இந்த போக்கை ப்ளூம் ரசனை விமர்சனத்தின் அடிப்படையில் கடுமையாக எதிர்க்கிறார். இவர்களுக்கு ‘School of Resentment’ என்று (சற்று கடுமையாக) பெயர்சூட்டியிருக்கிறார். உதாரணத்திற்கு பெயர்பெற்ற கறுப்பின எழுத்தாளர்களான அலிஸ் வாக்கரையும் டோனி மாரீசனையும் அவர் சாடுகிறார் (ஆனால் கறுப்பெழுத்தாளர் ரால்ப் எலிசனின் ‘இன்விசிபில் மான்’ என்ற புத்தகத்தை நல்ல படைப்பிலக்கியம் என்று பரிந்துரைக்கிறார்).

அதே நேரத்தில் ப்ளூமின் குரல் காலத்தில் கரைந்துவிட்டது என்பது தான் உண்மை. அமெரிக்காவின் சராசரி ஆங்கில இலக்கிய மாணவர்களால் இன்று ப்ளூமின் கருத்துக்கள் ஒரு வயதான வெள்ளைக்கார ஜு கிழவனின் மேட்டிமைதனத்தின் பிதற்றல்களாகவே பார்க்கப்படுகிறது. உதாரணத்துக்கு இன்று கறுப்பின எழுத்தாளர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்களினுடைய எழுத்தை அனைவரும் படிக்க வேண்டும், அவர்களுடைய குரல்கள் வெள்ளைக்கிழவர்களின் குரலுக்குச் சமமாக ஒலிக்க வேண்டும், அது தான் அறம் என்ற நிலைப்பாடே நிலவுகிறது. “இல்லை, ‘த கலர் பர்பிள்’ நல்ல எழுத்து இல்லை” என்று சொன்னால் அது இனவெறித்தனமாகவும், கறுப்பினத்தவர்களின் அனுபவ நிராகரிப்பு என்றும், ‘சொகுசான வாசிப்பை விரும்பும் எளிய வாசகரின் எரிச்சலுணர்வு’ என்றும் கொள்ளப்படுகிறது.

இது பொதுக்கருத்தாகவே உள்ளது. வாசிப்பு என்பதை ரசனை சம்மந்தமான செயல் என்று கொள்வதே அறமீறலாக பார்க்கப்படுகிறது. ரசனை என்பது ஒரு சமூகப்பின்னணியில் உருவாகி வருவது; ரசனை விமர்சனத்தை முன்வைப்பவர்கள் சமூகத்தை வசதியாக மறக்கடிக்க விரும்புகிறார்கள், அது தப்பித்துக்கொள்ளும் செயல் மட்டுமே என்று வாதிடப்படுகிறது. இந்தப் போக்கை எதிர்த்து ஒரு கருத்தை சொன்னால், “உனக்கே தெரியாமல் உனக்குள் இருக்கும் ஆதிக்கபுத்தியும் மேட்டிமைத்தனமும் உன்னை இப்படி பேசவைக்கிறது,” என்று பதில் சொல்லப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டு உண்மையாகக்கூட இருக்கலாம் என்று என்னுடைய மனித மனம் சொல்கிறது. நமக்குள் இருந்து நாமயறியாமல் நம்மை ஆட்டிவைக்கும் விசைகளை அறியவும் தான் நாம் இலக்கியம் படிக்கிறோம் என்பதும் உண்மை. நாமே அறியாமல் நம்மில் உறைந்திருக்கும் சாய்வுகளை தனிப்பட்ட சமூக மனிதர்களாக நாம் வென்றாகவேண்டும், ஐயமில்லை.

ரசனை வாசிப்பு

அதே நேரத்தில் என் வாசக மனம் மனித மனத்தை விட ஆயிரமடங்கு லட்சியங்கள் உடையது என்பதை அனுபவபூர்வமாக உணர்கிறேன். அதற்கு எழுத்து மட்டுமே குறி. நாடு, மொழி, நம்பிக்கை, பால், இனம் என்றெல்லாம் பார்ப்பதில்லை அது. காலத்தையும் இடத்தையும் வயதையும் கரைத்துவிடுகிறது. வாசிப்பின்வழி உலகவரலாற்றின் உச்சத்திலிருக்கும் மனங்களுடன் என்னை சரிசமமாக அமர்ந்து பேச அதுமட்டுமே வழிவகுக்கிறது. இந்த சமூகப்பின்னணியிலிருந்து வந்தால் உனக்கு ரசனை சாத்தியப்படாது என்று சொல்வதே அநீதி. பொய். ரசனை மனம் கோருவது எழுச்சி, விரிவு, திடம், மெய்மை. அது எல்லோருக்கும் சாத்தியம்.

இலக்கிய வாசகருக்கு தெரியும், தன்னளவில், தன் ரசனை அளவில் எது இலக்கியம், எது இலக்கியம் இல்லை என்று. ஒரு நல்ல வாசகர் ஒரு புத்தகத்தினுள் நுழையும் போது எழுத்தாளருடன் உரையாடாத் துவங்குகிறார். அவர் எழுத்தாளரை நேசிக்கவே விரும்புகிறார். அவருடன் அவர் காட்டப்போகும் உலகங்கள் வழியே பயணிக்க பெரும் பரபரப்புடன் ஆயுத்தமாக இருக்கிறார். மாயாஜால நிகழ்ச்சி ஒன்றில் பார்வையாளராக அமர்ந்திருப்பவரை ஒத்தவர் வாசகர். குழந்தையாக மாற இசைந்து தான் வந்துள்ளார். எழுத்தாளருக்கு அநேக வாய்ப்புக்கள் கொடுத்தபடிதான் புத்தகத்தை கடக்கிறார் வாசகர்.

ஆனால் அவர் முட்டாள் அல்ல. இலக்கிய வாசகரின் கழிவிரக்கத்தை பயன்படுத்திக் கையாள நினைத்தால் அவர் விழித்துவிடுவார். பொதுவாக ஒரு புனைக்கதை, “இவர்கள் பாவம், இவர்களுக்கு கண்ணீர் சிந்து. இல்லையென்றால் நீ இரக்கமற்ற அறமற்ற ஜீவன்,” என்று மிரட்டுமேயானால் அது சோம்பேறித்தனம். புத்தகத்தை மூடிவைத்துவிட்டு சென்றுவிடுவார் வாசகர். இலக்கிய வாசிப்பு போதனைப்பாடம் அல்ல. அதே நேரத்தில், ஒரு கதை, அது எந்த சமூகத்தை பற்றியோ குழுவை பற்றியோ மனிதரை பற்றியோ இருக்கட்டும், அது நாம் அறியாமல் நம்மிலிருந்து ஒரு சொட்டு ஈரத்தை பெற்றுவிட்டதென்றால் அது பெரும்பாலும் நாம் மறவாத கதையாகவே இருக்கும். அது நம்மை அறம் நோக்கி, விரிவு நோக்கி, லட்சியத்தை நோக்கி அனிச்சையாக இட்டுச்செல்லும். அது என் பார்வையில் நல்ல எழுத்து.

கேளாக் குரல்கள்

ஓர் ஆக்கத்தின் தரத்தைத் தாண்டி, அந்த ஆக்கம் இன்னார், இந்தக்குழு எழுதியது என்ற காரணத்தினாலேயே படிக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு பின்னால் இருக்கும் எண்ணம், இதுவரை கேட்காமல் போன குரல்களை இனியும் கேட்காமல் போனால் அது அறமல்ல என்பது. இலக்கியம், எழுத்து என்பது ஒரு வித ‘குரல்’ என்ற புரிதலுடன் தொடங்குகிறது இந்த வாதம். எல்லா குரல்களும் ஒரே அளவுக்கு கேட்கப்படவேண்டும் என்ற சமத்துவ கோட்பாட்டை முன்வைக்கிறது. மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட வரலாறுகளை தெரிந்துகொள்ள இந்தக்குரல்களை படிக்க அழைக்கிறது. எந்தக் குரலும் கேளாக்குரல் அல்ல, சமூகம் கேட்க மறுக்கும் குரல்களே என்கிறது. இந்த கோரிக்கை, விமர்சனத்தை எதிர்பார்க்கவில்லை. “நான் உன் குரலை கேட்கிறேன், மதித்து வாசிக்கிறேன்,” என்ற ஒப்புகையை எதிர்பார்க்கிறது. சமூக பிரக்ஞை இருப்பதனாலேயே, சமத்துவம் கோருவதனாலேயே அறம்வளர்க்கும் நல்லெழுத்து என்று கொள்ளப்படுகிறது. அதன் அடிப்படையில் அந்த ஆக்கத்தை கவிதை என்றும், இலக்கியம் என்றும் முன்னிறுத்தி பேசவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது. சரிசமமாக அதனுடன் (அந்த அடைப்படைகளைக்கொண்டு) உரையாடக்கோருகிறது.

இதில் உள்ள விற்பனை உள்ளிட்ட அரசியல்களை, சர்ச்சைகளை நான் இப்போதைக்குப் பேசவில்லை. கேட்கப்படவேண்டிய ஒரு குரலை எந்நிலையிலும் கேட்காமல் இருந்துவிடக் கூடாது என்ற அறப்பிரக்ஞையை மட்டுமே ஒரு தரப்பாக முன்வைக்கிறேன்.

கேள்விகள்

ஒரு ஆக்கம், எதோ வகையில் ஒடுக்கப்பட்டவர்களின் தரப்பு என்பதனாலேயே அதற்கு இலக்கிய மதிப்பு இருக்கவேண்டுமா? இவ்வகை எழுத்துக்களை ‘குரல்கள்’ என்று கொள்ளவேண்டுமா? ஒரு தரப்பின் ‘குரல்’ என்பதற்காகவே ஒரு எழுத்துக்கு முக்கிய இடம் அளிக்க வேண்டுமா? இதன் இடம் என்ன?

ஒரு பிரச்சாரக்கட்டுரைக்கும் அதே பிரச்சாரத்தை கவிதை விடிவில் எழுதுவதற்கும் என்ன வித்தியாசம்? படைப்பெழுத்தையும் இவ்வகை எழுத்தையும் ஒரே தராசில் வைத்து விமர்சகர் ஒப்பிட முடியுமா? சமூக பொறுப்பை கருத்தில் கொண்டு விமர்சகர் தன் விமர்சன அளவுகோல்களை மாற்றவேண்டுமா?

படைப்பிலக்கியத்துக்கும் விமர்சனத்துக்கும் சமூக பொறுப்பு இருக்க வேண்டுமா? (திரை விமர்சனத்தில் இந்த போக்கு இன்று பிரபலம். ஒரு திரைப்படம் எப்படியெல்லாம் சமூக ஒடுக்குமுறைகளை பிரதிபலிக்கின்றன என்பதை பட்டியலிடுவதே இன்று ஒரு விமர்சன முறையாக கையாளப்படுகிறது).

கேளாக்குரல்களுக்கு இடம் தர வேண்டும் என்பதால், வாசகர், “இந்த வருடம் இவ்வளவு சிறுபான்மை எழுத்தாளர்களை வாசிப்பேன்”, “இந்த குழுவுக்கு ஆதரவு தர இந்த எழுத்தை வாசிப்பேன்”, என்று வாசிக்கும் அறப்பொறுப்பில் இருக்கிறாரா?

இந்தக்கேள்வியை எழுப்பக்காரணமே தனிப்பட்ட முறையில் என்னுடைய ரசனை மனத்துக்கும், சமூக மனிதரின் பொறுப்பான அறவுணர்வுக்கும் இடையே நான் உணரும் பிணக்கை புரிந்துகொள்ளத்தான். (நியாயமான அறவுணர்வைத் தாண்டி, அறவுணர்வு உள்ளவராக தன்னை சமூகத்திடம் காட்டிக்கொள்ளும் பொருட்டு சில எழுத்துகளை தூக்கிப்பிடிக்கும் போக்கு இன்றுள்ளது, அதை பற்றி நான் இங்கு பேசவில்லை). இது தொடர்பாக நீங்கள் இதற்கு முன்னால் நிறைய எழுதியிருந்தாலும், அறம் சார்ந்து இதை எப்படி புரிந்துகொள்வது என்ற கேள்விக்கு பதிலுரைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

சுசித்ரா

மலர் கனியும் வரை- சுசித்ரா
சில நேரங்களில் சில மனிதர்கள், மீள்பரிசீலனை-சுசித்ரா

முந்தைய கட்டுரைவெற்றி –கடிதம் 2
அடுத்த கட்டுரைகுமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருது சபரிநாதனுக்கு