எனது இன்றைய காந்தி –கடிதம்

mahatma-gandhi

அன்பின் ஜெ அவர்களுக்கு,

தங்களின் பதில் கடிதம் பேருவகை தந்தது..கூடவே நம்பிக்கையையும்..

தங்களை வாசிக்க ஆரம்பித்த ஓரிரு நாட்களில் என் அறிதலின் ஆகப் பெரிய தடையாக எனது முன் முடிவுகளும் (உங்கள் மொழியில் வெற்று நம்பிக்கைகள்)நானே அறியாமல் நான் கொண்டிருந்த போலியான முற்போக்கு பாவனைகளும் இருப்பதைக் கண்டு கொண்டேன். அதை உடைத்து மறுவார்ப்பு செய்தது தங்களின் எழுத்துக்களே, குறிப்பாக உங்கள் கட்டுரைகள்..

உங்களுடைய இன்றைய காந்தி நூலை வாசித்து வருகிறேன். பள்ளிக் கல்வி வாயிலாக நாங்கள் அறிந்திருந்த காந்தி முற்றிலும் வேறானவர். என்னதான் தாத்தா என்று அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவர் ஒரு மகாத்மா, அவரின் வாழ்க்கை சாமானியர்களுக்கானது அல்ல. தன் வாழ்வை நாட்டிற்கு அர்ப்பணித்து அடிமைத் தளையிலிருந்து நம்மை விடுவித்தவர்.. நாம் அவரை நினைவு கூர்ந்து நன்றி செலுத்த வேண்டியவர்கள். ஒரு வகையான கடவுள்படுத்துதல் அது . காந்தியின் தேவை சுதந்திரம் பெற்றுத் தந்ததோடு முடிந்து விட்டதாக நன்றியுணர்வோடு என்னச் செய்வது.

இப்படி ஒரு தட்டையான புரிதலுடன் காந்தியைப் பற்றிய விமரிசனங்களை, குறிப்பாக ஜாதி மற்றும் பாலியல் தொடர்பான வசைகளை பின்னாளில் எதிர் கொள்ளும்போது, அதுவும் பலவீனத்துக்கே உரிய மூர்க்கத்துடன் வைக்கப்படும் போது அதை தர்க்கப் பூர்வமாக எதிர் கொள்ள இயலாமல் என் போன்ற பெரும்பான்மை சராசரி மனம் தடுமாறுகிறது. இது தாங்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட, நாத்திகர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க இயலாத சடங்கியவாதிகளின் நிலை..

இத்தகைய சூழ்நிலையில்தான் “இன்றைய காந்தி” என் வாழ்வில் மறுபிரவேசம் செய்கிறார். ஆனால் இந்த முறை ஆலய மணியோசை மற்றும் பஜனைகளோடு தேரில் ஏறி வரும் உற்சவமூர்த்தியாக அல்ல, நான் எளிதில் அணுகி அறியக் கூடியவராக, ஓய்வாக சாய்வு நாற்காலியில் அமர்ந்து தன் கடந்த காலத்தை அசைபோடுவதன் வழியே தன்னை வெளிப்படுத்துபவராக..

என் வாழ்வே என் செய்தி என்று அவர் அறிவித்திருந்தாலும் அவருடைய அத்தகைய வாழ்வு இந்த சமூகத்தில் பல தளங்களில் ஏற்படுத்திய நுண்ணிய தாக்கங்கள் என்ன என்பதையும் அது எவ்வாறு இந்த தேசத்தை இன்னும் வழி நடத்தி உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்பதையும் விரித்து பொருள் கொள்ள இந்த புத்தகம் காந்தியை நோக்கி பல புதிய வாசல்களைத் திறந்து வைக்கிறது.

ஒரு வகையில் காந்தியை அறிவதென்பது, இந்தியாவை, அதன் ஆன்மாவை அறிவதற்கு ஒப்பானதாகத் தோன்றுகிறது. கூடவே அவரைக் கை விட்டு நாம் இன்று வந்து சேர்ந்திருக்கும் இடத்தையும்.

நீங்கள் காட்டும் காந்தி ஓர் அஹிம்சாவாதி மட்டுமல்ல, எதிர்தரப்பை மதித்து அவர்களுக்கு செவிமடுத்து, தேவைப்பட்டால் தன் தரப்பை மறுபரிசீலனை செய்து தன்னை மாற்றிக்கொண்டு முன்னகரும் ஆனால் எப்போதும் அறத்தின் (எல்லோருக்குமான) பக்கம் நிற்கும் இந்த ஒற்றைக் காரணத்தினாலேயே என்றென்றைக்கும் தேவையானவராக இருக்கிறார், வாழ்வின் எல்லாத் தளங்களிலும்..!

அன்புடன்,

ஞானசேகர் வே

முந்தைய கட்டுரைஅப்துல் ரகுமான்: அஞ்சலி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-10