7. அலையன்னம்
ஒவ்வொரு நாளும் ஒரு முகமேனும் நளனின் கண்முன் வந்துகொண்டிருந்தது. அறியாது வந்து விழிமுட்டி பதைத்து விலகிக்கொள்பவை. மறைவிலிருந்து மெல்லிய அசைவென வெளிப்பட்டு நோக்குரசி இமை தாழ்த்தி முகம் சிவக்க அகல்பவை. உரக்க பேசி கண் திருப்பி உள்ளம் அளித்து மீள்பவை. ஒன்றுமறியாப் பேதையென முன் வந்து நின்று குதலைச் சொல்லெடுப்பவை. இதற்கெல்லாம் அப்பால் நான் என்று நடித்து ஏதேனும் உரைத்து ஒசிந்து செல்பவை. ஓவியத்தில் எழுதப்படுபவை. சூதர் சொற்களால் தீட்டப்படுபவை. ஒவ்வொரு முகத்தையும் இதுவா இதுவேதானா என்று அணுகி அன்று பிறிதொன்று என்று அகன்று கொண்டிருந்தான்.
அவன் தேடுவதை விழிகளே காட்டியமையால் அவன் முன் தோன்றுபவர்கள் பெருகிக்கொண்டிருந்தனர். முகங்களே முகங்களை மறைக்கும் அலையென்றாக எவர் முகமும் அவனுள் நிலையாமலாயிற்று. நிஷத அரசின் இளவரசனுக்கு துணைவியாவதென்பது அக்குடிப் பெண்கள் அனைவருக்கும் கனவாக இருந்தது. சூழ்ந்திருந்த சிறு ஷத்ரிய நாடுகளுக்கோ நிஷதர்களின் செல்வமும் படைவல்லமையும் அவர்களை பெரும் ஷத்ரிய அரசுகளின் படைக்கலங்களிலிருந்து காக்கும் கோட்டை. நாளுமொரு தூது வீரசேனனின் அவைக்கு வந்துகொண்டிருந்தது.
“உன் மணமகளை தெரிவு செய்து சொல்க!” என்று அரசி நளனிடம் சொன்னாள். “நான் அவளை இன்னமும் காணவில்லை. கண்டதும் அறிவேன் என்று எண்ணுகின்றேன்” என்றான். “அவள் எவ்வண்ணம் இருக்க வேண்டும் என்று சொல். அதை எண்ணி உரைத்து ஒற்றரையும் சூதரையும் அனுப்பி தேடச்சொல்கிறேன்” என்று அரசி கேட்டாள். “உண்மையிலேயே அவள் எவ்வண்ணம் இருப்பாளென்று எனக்கு தெரியவில்லை. நான் பார்த்த பல இளவரசிகள் பேரழகிகள். செல்வம் திகழும் நாடுகளுக்குரியவர்கள். நூல் கற்றவர்களும் பலர். நற்குடிப்பண்புகள் கொண்ட முகங்களே மிகுதி. இவற்றுக்கு அப்பால் நான் தேடுவதென்னவென்று நானறியேன்” என்று நளன் சொன்னான்.
சலிப்புடன் அன்னை “எதை தேடுகிறாய் என்று அறியாவிட்டால் உனக்குரிய பெண் உன் முன்னால் வந்தால்கூட உணராது கடந்து செல்லவே நேரும்” என்றாள். “முன்னரே கடந்துவிட்டிருக்கவும் கூடும்” என்று செவிலி பிரபை சொன்னாள். “அவ்வண்ணம் நானும் அஞ்சுகிறேன். எனினும் என்னுள் இருக்கும் உள்ளுணர்வொன்று சொல்கிறது, முதல் நோக்கிலேயே அவளை என்னால் கண்டடைய முடியும் என்று” என்றான் நளன். “இறுதியில் இரு காலில் எழுந்த குரங்கொன்று அமையும்” என்று சீற்றத்துடன் சொல்லிவிட்டு அன்னை எழுந்து சென்றாள். செவிலி அவள் செல்வதை நோக்கிவிட்டு இளநகையுடன் “அரம்பையர் அமைந்தாலும் அன்னைக்கு அவ்வண்ணமே தோன்றும்” என்றாள்.
ஆவணித் திருவிழாவின்போது கங்கநாட்டுச் சூதன் ஒருவன் தன் துணைவியுடன் நிஷத நாட்டுக்கு வந்தான். அரண்மனையில் பெருந்தோள் ராமன் நீள்விழி சீதையை வில் முறித்து மணந்த தொல்கதையை அவன் சொன்னான். கதை முடிந்து பரிசில் பெற்று அனைவரும் பிரிந்து செல்ல தன் விறலியுடன் அவனும் முழவும் யாழும் பூட்டி கட்டி இடைநாழியில் நடந்துகொண்டிருந்தான். அரண்மனைத் தோட்டத்தில் இருந்த அணிச்சுனையில் நீந்திக்கொண்டிருந்த அன்னங்களில் ஒன்று கழுத்தை வளைத்துத் திருப்பி அவர்களைப் பார்த்தது. வியந்து இரு கைகளையும் நீட்டி விறலி கூச்சலிட்டாள். பின்னர் பாய்ந்து தன் கொழுநனின் கையை பற்றிக்கொண்டு “அவ்வோவியத்தில் திகழும் அதே அன்னம்போல் அல்லவா?” என்றாள்.
அவளுக்குப்பின் வந்துகொண்டிருந்த பிரபை “எந்த ஓவியத்தில்?” என்று கேட்டாள். “மண்ணில் திகழ்ந்த பெண்டிரிலேயே பேரழகியின் ஓவியம். உடனிருப்பது வெண்ணிற அன்னம். அவள் உள்ளம் அது என்று உணர்த்துவது அக்காட்சித்திறம்” என்றாள் விறலி. “காட்டுக!” என்று ஆர்வத்துடன் அருகணைந்தாள் செவிலி. “அந்த ஓவியத்திரைச்சீலை விதர்ப்பத்தில் எனக்கு அளிக்கப்பட்டது, அன்னையே. ஷத்ரிய அரண்மனைகளில் மட்டும் அதை காட்டும்படி ஆணை” என்றான் சூதன். “இவள் நாவடக்கமில்லாதவள்” என அவளை கடிந்தான். “அச்சொல் கேட்டபின் நான் பார்க்காமலிருக்க இயலாது” என்றாள் செவிலி.
“பொறுத்தருள வேண்டும், அன்னையே. ஷத்ரிய அரசருக்கன்றி பிறருக்கு அதை காட்ட இயலாது” என்றான் சூதன். “எங்கள் இளவரசர் மணப்பெண் நாடுகிறார். அவருக்கு காட்டலாம்” என்று செவிலி சொன்னாள். “நிஷத குடியில் ஒருபோதும் ஷத்ரியப் பெண் வந்து குடியமையப்போவதில்லை. தங்களிடம் இச்சித்திரத்தை காட்டுவதற்கு எனக்கு ஒப்புதலும் இல்லை” என்றபின் தலைவணங்கி சூதன் திரும்பி நடந்தான். அவனுடன் சென்ற விறலி “நாம் ஆணைகளை மீறமுடியாது. அதை மென்மையாக சொல்ல வேண்டியதுதானே? ஏன் இத்தனை கடுமை?” என்றாள்.
அப்போது எதிர்த்திசையில் படியேறி வந்த நளன் செவிலியிடம் “அன்னையே, அரசி தன் அணியறைக்கு சென்றுவிட்டார்களா?” என்றான். விறலி அவனை நோக்கி வியந்து இரு கைகளாலும் நெஞ்சைப் பற்றியபடி நின்றாள். “அணியறையில் இருக்கிறார்கள். ஆனால் தாங்கள் சென்று பார்க்கலாம்” என்றாள் செவிலி. தலைவணங்கி நளன் மறுவாயிலினூடாக சென்று மறைய மூச்சொலியுடன் திரும்பிய விறலி “இவர் யார்?” என்றாள். செவிலி “நான் இவரைக் குறித்தே உரைத்தேன். எங்கள் இளவரசர் நளன்” என்றாள். “இந்திரனுக்கு நிகரான பேரழகுடன் இருக்கிறார். இவர் நிஷத குடியில் பிறந்தவரா?” என்றாள் விறலி. செவிலி சற்றே சினத்துடன் “அவர் அணிந்திருந்த முத்திரைக் கணையாழியை வாங்கி காட்டவா?” என்று கேட்டாள்.
விறலி சிற்றடி ஒலிக்க விரைந்து சென்று தன் கணவனின் தோளிலிருந்த மான்தோல் பொதியைப்பற்றி இழுத்து தரையிலிட்டு பதறும் கைகளால் அதன் முடிச்சுகளை அவிழ்த்து உள்ளே மடித்து சுருட்டப்பட்டிருந்த பட்டுத்துணி திரைச்சீலையை எடுத்து விரித்தாள். கிளர்ந்த குரலில் “இதுதான் விதர்ப்ப இளவரசியின் ஓவியம். இளவரசரிடம் காட்டுக!” என்றாள். “என்ன செய்கிறாய்? அறிவில்லையா உனக்கு?” என்று சினந்தபடி விறலியின் கைகளைப் பற்றினான் சூதன். “சீ! கையை எடு, அறிவிலியே! விதர்ப்பத்தின் இளவரசிக்கு ஊழ் தெரிவு செய்த மணமகன் இவரே. இதுகூடவா தெரியவில்லை உனக்கு? கற்ற காவியங்கள் கண்களில் ஒளியாக அமையவில்லையா?” என்றாள் விறலி.
குழப்பத்துடன் திரும்பி நளன் சென்ற வழியை பார்த்துவிட்டு “ஆம். ஒருகணம் எனக்கும் அவ்வாறே தோன்றியது. மூன்று தெய்வங்களும் நினைத்தாலும் பிறிதொன்று அமையாது” என்றான் சூதன். “அவ்வண்ணமெனில் என்ன ஐயம்?” என்றபின் திரும்பி செவிலியிடம் “சென்று அளியுங்கள் இந்தச் சித்திரத்தை. அவர் மணக்கவிருக்கும் பெண் இவர். பிறிதொருத்தியுமல்ல. இது சொல்லில் சுடர்கொண்ட விறலியின் கணிப்பு” என்றாள். உணர்வு மேலிட கண்கலங்கி கைகூப்பி “கலைமகளை வணங்குகிறேன். என்றும் உங்கள் சொல் திகழ்க!” என்றபின் செவிலி அந்த ஓவியத்தை வாங்கிக்கொண்டாள்.
பிரபை நடக்க முடியாமல் தளர்ந்து அவ்வப்போது நின்று மூச்சு வாங்கி அரசியின் அணியறைக்குள் சென்றாள். அங்கே அரசியின் குழல் சுருள்களை இரு சேடியர் அவிழ்த்து விரித்து நீட்டிக்கொண்டிருக்க எதிரே சுவர் சாய்ந்து நின்று நகைச்சொல் ஆடிக்கொண்டிருந்த நளனைக் கண்டு அருகணைந்து “அரசே, கங்கவிறலி அளித்த சித்திரம் இது. இதில் இருப்பவளே தங்கள் அரியணைத் துணைவி” என்று சொன்னாள். “என்ன? என்ன?” என்று நளன் பதற “இது சொல்நின்ற விறலியின் கூற்று. அவர்கள் உரைத்தவை பிழைப்பதில்லை” என்றாள் பிரபை.
நளன் “இந்த முகத்தை நீங்கள் பார்த்துவிட்டீர்களா, அன்னையே?” என்றான். “இல்லை. முதலில் நீங்களே பார்க்கவேண்டும் என்று எண்ணினேன்” என்றாள் செவிலி. அதை வாங்கி விரித்து நோக்கிய நளன் ஒருகணம் விழிநிலைக்க பின் முகம் பதறி, அலைவுறும் கைகளால் அதைச் சுருட்டி திருப்பி அளித்தான். “என்ன?” என்று அரசி கேட்டாள். “இல்லை” என்று அவன் சொன்னான். “சொல், என்ன எண்ணுகிறாய்?” என்றாள் அரசி. “தெரியவில்லை, ஒருகணம் என் நெஞ்சு நடுங்கியது” என்றான். “அவ்வண்ணமெனில் அவளேதான்” என்றாள்.
“இல்லை, அது ஒரு இனிய எண்ணமாக இல்லை அன்னையே. நிலைகுலைவாக அறியா துயராக, அச்சமாக அவ்வுணர்வு எழுகிறது” என்றான். “ஆம், அது எப்போதும் அவ்வாறுதான். நாம் அறிந்தவையே இனியவை. புதியவை அனைத்தும் அச்சத்தையும் நிலைகுலைவையும் உருவாக்குகின்றன” என்றபடி அரசி ஓவியத்தை விரித்து நோக்கினாள். அவள் முகம் மலர்ந்து புன்னகையில் பற்கள் ஒளிவிட்டன. செவிலியிடம் திரும்பி அந்த ஓவியத்தை திருப்பிக் காட்டி “இவள்தான்” என்றாள். செவிலி அருகே வந்து பீடத்தைப் பற்றியபடி குனிந்து நோக்கி “அழகின் முழுமை. பேரரசுகளை ஆளும் மணிமுடியை சூடியிருப்பவள் போலிருக்கிறாள். சிம்மாசனத்திலன்றி பிறிதெங்கும் அமர முடியாத நிமிர்வு” என்றாள்.
நளன் “ஆம், அன்னையே. நான் அஞ்சுவது அதையே. இப்போது தெளிவாகிறது. நான் எண்ணியிருந்த பெண் எளியவள், இனியவள். இவளோ விண்ணாளும் இந்திரனின் அருகமைந்தவள் போலிருக்கிறாள். சினமும் ஆணவமும் சொல்கூர்மையும் கொண்டவள். இவள் எனக்குரிய பெண்ணென்றல்ல, நான் இவளுக்குரிய ஆணல்ல என்று தோன்றுகிறது” என்றான். அரசி “அதற்காக நீ அஞ்சவேண்டியதில்லை. பெண் எப்போதும் ஆணுக்கு படிந்தவளாக இருக்கவேண்டுமென்பதில்லை. தொல்புகழ் தேவயானி யயாதியை தன் மைந்தனென ஒக்கலில் வைத்திருந்தாள் என்கின்றன நூல்கள். இவள் விழிகளும் தோளகலமும் குருநகரியை ஆண்ட தேவயானியைப் போலவே காட்டுகின்றன” என்று சொன்னாள்.
மீண்டும் ஓவியத்தைப் பார்த்தபின் “ஆம். ஆனால் ஓவியம் பிறிதொன்றையும் சொல்ல விழைகிறது. ஆகவேதான் மென்தூவி அன்னமொன்றையும் வரைந்தான். நோக்குக, அவள் கைகள் அதன் வெண்ணிற மென்மை மேல் தொட்டனவோ என வருடிச் செல்கின்றன. அதன் கழுத்து வளைவுக்கென அவள் உடல் வளைந்துள்ளது. மிடுக்கும் நிமிர்வும் கொண்டவளாயினும் உள்ளூர அன்னம்போல் நெகிழ்ந்து கனிந்தவள் என்கிறான் ஓவியன்” என்றாள் அரசி. நளன் “நானறியேன். என் உள்ளம் மீண்டும் தயங்குகிறது. என்னால் முடிவெடுக்க இயலவில்லை” என்றபின் அறைவிட்டு வெளியே சென்றான்.
அவனுக்குப் பின்னால் சென்ற செவிலி “இளவரசே, இந்த ஓவியத்தை எடுத்துச் செல்லுங்கள். உங்களுடன் இருக்கட்டும் இது” என்றாள். “வேண்டாம்” என்று சொல்லி நளன் வெளியேறினான்.
செல்லும் வழியிலேயே நளன் “இவளல்ல. ஆம், இவளல்ல” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். உறையுருவிய ஒளிர்வாள்போல் இருக்கிறாள். இவள் ஒளி அனல். நெளிவு நாகம். இவள் முகவடிவும் புன்னகையும் என்னை நோக்கி வந்த தூண்டில். இத்தருணத்தில் எண்ணி விலகாவிடில் பெருந்துன்பங்களை நோக்கியே செல்வேன். விலகாது பின்னின்று உந்துவது எது? காமமா? ஆம், அதைவிட ஆணவம். இவ்வழகுக்கு நான் தகுதியற்றவனா என்றெழும் என் ஆழம். தான் எவரென்று உணர்ந்திருப்பவன் துயர்களை தவிர்க்கக் கற்றவன். நெறிநூல்கள் அனைத்திலும் மீள மீள கற்ற வரி அது. என்னை நான் மிகையாக உருவாக்கிக் கொண்டாலொழிய இவளுக்கு கணவனாக அரியணையில் அருகிருக்க இயலாது.
ஆம், என் திறன் குடி அரசு அனைத்தும் இவள் காலடியில் ஒரு சிற்றரசென நிற்பதற்கு மட்டுமே உரியவை. இவள் அல்ல. நன்று, இத்தருணத்தில் இப்படி ஒரு முடிவை எடுக்க எனக்குத் தோன்றியது. தூண்டில் கண்டதுமே அஞ்சி விலகும் அறிவுடைய மீனென்றானேன். நன்று, இவளல்ல. அவ்வளவுதான். இனி சொல்லில்லை. இனி உளநிலையழிவில்லை.
தன் மஞ்சத்தறைக்குச் சென்று பீடத்தில் அமர்ந்து சுவடியொன்றை எடுத்துப் புரட்டி அதிலிருந்த எழுத்துகளை பொருளின்றி வாசித்துச் சென்றபோது இவளல்ல இவளல்ல என்ற சொல் எங்கோ ஒலித்துக்கொண்டிருப்பதைப்போல் இருந்தது. நீர் சொட்டுவதுபோல. பின் சுவடியை மூடி வைத்துவிட்டு எழுந்து சாளரத்தினூடாகத் தெரிந்த விண்மீன்களை பார்த்தான். அறைக்குள்ளிருந்த சுடர் அமைதியின்மையை அளிக்க அதை அணைக்கும்பொருட்டு அருகே வந்தான். இருட்டில் தனித்திருக்க முடியாதென்றெண்ணி மீண்டும் சாளரத்தருகே சென்றான். நடுங்கிக்கொண்டிருந்த விண்மீன்களை சிலகணங்களுக்கு மேல் நோக்க இயலவில்லை. திரும்பி நின்றபோது சுடரொளி அசைய நெளிந்துகொண்டிருந்த அறை மேலும் அலைக்கழிவை அளித்தது.
மேலாடையை வீசி சுடரை அணைத்தபின் மஞ்சத்தில் படுத்து மரவுரியை எடுத்து தலைக்குமேல் போர்த்திக்கொண்டான். கண்களை மூடிக்கொண்டு மிக அருகிலென அந்த ஓவியத்தை பார்த்தான். இவளல்ல, இவளல்ல. இவளல்லவெனில் ஏன் இவளை எண்ணிக் கொண்டிருக்கிறேன்? தேடாமலேயே எனை நோக்கி வந்திருப்பதனாலேயே இது பெரும் பொறி. மறுமுனையில் யார்? ஊழ்! விளையாடும் தெய்வங்கள்! ஆனால் அவள் விழிகள் ஒரு சொல்லை அரைக்கணத்தில் என்னிடம் சொல்லிவிட்டன. இத்தனை நாள் நான் எதிர்நோக்கி இருந்தது அச்சொல்லை. பிறிதொன்றை அவள் விழிகள் சொல்லியிருக்க முடியாது. ஏனெனில் அவள்தான்…
கையால் சேக்கையை ஓங்கி அறைந்தபடி எழுந்து அமர்ந்தான். என்ன எண்ணிக் கொண்டிருக்கிறேன்? எனக்குள் புகுந்து என் எண்ணங்களை ஆட்டுவிப்பது எந்த இருள்தெய்வம்? இப்படுக்கையில் படுத்திருக்கும் என்னை சூழ்ந்து நின்று குனிந்து நோக்கிக் கொண்டிருக்கின்றனவா மானுடத்தை ஆட்டுவிக்கும் பெருவிசைகள்? அகலத் துடிப்பதே அணுகும் அசைவென்றாகி எந்த ஊழ்முனை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்?
எழுந்து இருளில் விரைந்தோடி மீண்டும் அசனமுனிவரின் புற்குடிலுக்குள் சென்று அமர்ந்துவிட வேண்டுமென்று தோன்றியது. இல்லை, அதற்கு தேவையில்லை. நான் முடிவெடுத்துவிட்டிருக்கிறேன். அது அவளல்ல. அந்தச் சூதனையும் துணைவியையும் ஓவியத்துடன் உடனே நகர்விட்டு செல்ல ஆணையிடப்போகிறேன். நாளை காலையிலேயே வேட்டைத் துணைவருடன் காட்டுக்கு செல்வேன். களிறுகளுக்குப்பின் பாய்வேன். புலித்தோல் கொண்டு மீள்வேன். அப்போது இந்த நாள் தொலைநினைவாக மாறியிருக்கும்.
இந்த நாளென்ன, இவ்விரவுதான். இவ்விருள்தான். ஆயிரங்காலட்டைபோல் கணம் கணம் என்று மெல்ல நகரும் இக்கரிய இரவு. இதை கடந்துவிட்டால் போதும். இதை கடக்க முடியவில்லையெனினும் குகைப்பாதையின் மறுஒளிபோல் முதற்கதிரெழுவதை கண்டுவிட்டால் போதும். அனைத்தும் முடிந்துவிடும். ஓரிரவைக் கடப்பது இத்தனை அரிதா என்ன? ஓரிரவுக்குள் ஒருவன் நூறுமுறை பிறந்து எழ முடியுமா என்ன? உள்ளமென்பது பெருவதை. நாழியிலிருந்து நாழிக்கு சொட்டும் மணற்பருக்கள். ஒன்றையொன்று முட்டி மோதி ஓசையின்றி அவை பொழிந்துகொண்டிருக்கின்றன. நிறையா நாழி. குறையா பெருநாழி.
எழுந்து சென்று மது கொணரச் சொல்லி அருந்தினாலென்ன என்று எண்ணினான். அதுவரை அருந்தியதில்லை. மது அருந்துவது ஒரு தோல்வி. இச்சிறு தருணத்தை கடக்க இயலாத எளியோன் என்று என்னை சேடியர் முன் அறிவித்தல். இரவெல்லாம் இங்கு இவ்வெண்ணங்களுடன் இருந்தால் காலையில் எனக்குள் சொற்பெருக்கே இருக்கும். பெருக்கல்ல, குவியல். புயல் வந்து சென்ற நகரம்போல் பெருஞ்சிதறல். எழுந்து சால்வையை அணிந்தபடி வெளியே சென்றான். காவலர்கள் தலைவணங்கி படைக்கலம் தாழ்த்த படியிறங்கி வெளியே சென்று முற்றத்தில் நின்றிருந்த புரவியை எடுத்துக்கொண்டு சாலைக்கு சென்றான். பிறிதொரு புரவியில் தொடர முயன்ற மெய்க்காவலனை கையசைத்து தடுத்தான்.
நகரை விட்டு வெளியேறி குறுங்காட்டைக் கடந்து கோதையின் கரையிலமைந்த அசனரின் குடிலை அடைந்தான். புரவியை நிறுத்திவிட்டு நாணல் நடுவே சென்ற பாதையில் நடந்தான். நீரொளிர்வுடன் நெளிந்து கடந்து சென்றன நாகங்கள். தவளைகளின் இடைவிடாத ஓசை சூழ்ந்திருந்தது. குடில் முற்றத்தில் தருப்பைப்பாயில் கால்மடித்து விண்மீன்களை நோக்கி அமர்ந்திருந்த அசனரை தொலைவிலேயே கண்டான். இரவில் அவர் துயில்வதில்லை என்று முன்பே அறிந்திருந்தான். சென்று அவரை கலைக்கலாமா என்று எண்ணிக்கொண்டிருக்கையிலேயே அவர் திரும்பி அவனிடம் வரும்படி கைகாட்டினார்.
அருகே சென்று கால்தொட்டு சென்னி சூடி அப்பால் அமர்ந்தான். புன்னகையுடன் “பார்த்துவிட்டீரா?” என்றார். “ஆம்” என்றான். ஏன் அதை சொன்னோம் என்று உணர்ந்ததும் “ஆனால்…” என்றான். “அதை நான் முன்னரே புரிந்துகொண்டேன்” என்றார் அசனர். அவன் “ஆனால்… அவள் பேரரசி. முடிமன்னர்கள் தலை தாழ்த்தும் அடி கொண்டவள். எனக்குரியவளல்ல” என்றான். “உமக்குரியவள் அல்ல என்று முடிவெடுக்க வேண்டியவது நீரல்ல” என்று அவர் சொன்னார். “நான் அலைக்கழிவேன், பெருந்துயருருவேன்” என்றான் நளன். “ஏன்?” என்று அவர் கேட்டார்.
அவன் தயங்கி “அவளை நான் மணந்தால் இப்புவியிலுள்ள ஆண்கள் அனைவரும் பொறாமை கொள்வார்கள். பெருங்குடிமன்னர்கள், சக்ரவர்த்திகள், ஏன் விண்ணகத் தெய்வங்களுமே என் மேல் சினம் கொள்வார்கள்” என்றான். “ஆம்” என்றார் முனிவர். உள்ளிலெழுந்த ஐயத்துடன் “அப்படி ஒருத்தி என்னைத் தேடி வருவாளென்று முன்னர் அறிந்திருந்தீர்களா?” என்றான். அவர் புன்னகையுடன் “யாரென்று அறிந்திருக்கவில்லை, எப்படிப்பட்டவள் என்று அறிந்திருந்தேன்” என்றார். “நீங்கள் அதற்கென காத்திருக்க வேண்டுமென்று ஆணையிட்டது அதனால்தான்.”
“நான் எப்படி அப்பேராற்றலை எதிரியெனக் கொள்வேன்? எளிய நிஷாதன் நான்” என்றான். “ஒன்று மட்டும் உரைக்கிறேன். எது நிகழினும் நீங்கள் முற்றழிய மாட்டீர்கள். உம் மைந்தர் இப்புவி ஆள்வார்கள்” என்றார் அசனர். ஒருகணத்தில் தன் உள்ளம் அமைதி கொண்டதை எண்ணி வியந்தான். அஞ்சியது அதைத்தானா? அவரை நோக்கிக்கொண்டிருந்தான். “நீர் விழைந்தாலும் அஞ்சி விலகினாலும் அவளே உமக்குரியவள்” என்றார் அசனர். “யார் அவள்?” அவன் “விதர்ப்ப மன்னனின் மகள் தமயந்தி” என்றான்.
“அவள் எவள் என்று அறிக! அவள் உள்ளம் கவர்ந்து கைக்கொள்க! உம் அரியணையில் அவள் அமர்கையில் உம் குடியும் ஷத்ரியர்களுக்கு நிகரென அமையும். உம் மூதாதையர் உளம் மகிழ்வார்கள்” என்றார் அசனர். நளன் “அது என் கடமையெனில் அதன்பொருட்டு எதையும் இயற்றுகிறேன். ஆனால் நான் விழைந்தால் தொல்குடி ஷத்ரியர்களின் விதர்ப்ப நாட்டின் இளவரசியை எப்படி வென்றெடுக்க இயலும்? அது வீண் கனவென்றே முடியக்கூடும்” என்றான். அசனர் “நீங்கள் அவளை அடைவீர்கள். அவளை வெல்க! அவளுக்குரியவனாக உம்மை ஆக்கிக் கொள்க!” என்றார்.
சில கணங்களுக்குப்பின் அவன் நீள்மூச்சுடன் மெல்ல தோள் தளர்ந்து “ஆம்” என்றான். பின்னர் முனிவர் ஒன்றும் பேசவில்லை. விண்மீன்களை நோக்கியபடி ஊழ்கத்திலென அமர்ந்திருந்தார். பெருமூச்சுவிட்டு உடல் கலைந்து மீண்டும் அமர்ந்தபடி அன்றிரவை அவன் கழித்தான். இளம்புலரியில் அரண்மனைக்கு மீண்டு வந்து மகளிர் மாளிகைக்கு சென்றான். அங்கு சேடியுடன் அமர்ந்திருந்த அன்னையை அணுகி வணங்கி “அன்னையே, நான் அவளை மணக்கிறேன். அவளே நான் காத்திருந்த பெண்ணென்று உறுதி கொண்டேன்” என்றான்.
அன்னை நகைத்து “நன்று, நேற்றே இவள் இதை சொன்னாள். எனக்குத்தான் சற்று ஐயமிருந்தது” என்றாள். பிரபை அந்த ஓவியச்சுருளை எடுத்து அளித்து “இன்று காலை தாங்கள் வந்து கேட்கும்போது அளிப்பதற்காக வைத்திருந்தேன், இளவரசே. இது அவள் ஓவியம். நோக்கி நோக்கி உயிர் அளியுங்கள்” என்றாள். புன்னகையுடன் அதை வாங்கிக்கொண்டு தலைவணங்கி அவன் தன் அறைக்கு மீண்டான்.
தமயந்தியைப்பற்றி அனைத்துச் செய்திகளையும் நளன் ஒற்றர்களையும் சூதர்களையும் கொண்டு உசாவி அறிந்தான். விதர்ப்பத்தின் பேரரசர் பீமகரின் மகள். பீமகருக்கு மூன்று பட்டத்தரசியர். மூவருக்குமென ஒரு மகளே பிறந்தாள். எனவே அவளை மணம் கொள்பவன் விதர்ப்பத்திற்கும் அரசனாவான். மகதத்திற்கும் கலிங்கத்திற்கும் விதர்ப்பத்தின் பெருநிலங்களின்மேல் விருப்பிருந்தது. கலிங்க அரசன் சூர்யதேவனின் இரண்டாவது மைந்தன் அர்க்க தேவனை அவளுக்கு மணமகனாக்க அங்குளோர் திட்டமிட்டிருந்தனர். மகத மன்னன் தன் மைந்தன் ஜீவகுப்தனை தமயந்தியை மணம் கொள்ளும்படி அறிவுறுத்தியிருந்தான். மாளவ மன்னன் விஷ்ணுகுப்ஜனும் அயோத்தி மன்னன் லக்ஷ்மணனும் பலமுறை அவளுக்காக தூதனுப்பியிருந்தனர்.
பேரரசர்களின் தூதை ஏற்று மணமுடித்து அனுப்புவதா அவளுக்கென மணத்தன்னேற்பு ஒன்றை நிகழ்த்துவதா என்று பீமகர் குழம்பிக் கொண்டிருந்தார். பேரரசர் எவருடைய தூதை ஏற்றாலும் பிறர் அதை சிறுமைப்படுத்தலாக எண்ணக்கூடும். அவர்களின் படைமுனிவின் வல்லமையை விதர்ப்பம் தாங்கவேண்டும். மணத்தன்னேற்பு ஒன்றை அமைத்து பேரரசரை விருந்தினராக அழைத்து நடத்தி முடிப்பதற்கான உளவமைப்பும் அமைச்சுத் திறனும் தன் நகருக்குண்டா என்று அவர் அஞ்சிக்கொண்டிருந்தார். அக்குழப்பத்திலேயே நாள் கடக்க தமயந்தி மேலும் முதிர்ந்து அழகுகொண்டாள். அச்சொல்லாடலின் வழியாகவே பாரதவர்ஷத்தின் அரசர் அனைவரிடமும் அவள் கைபற்றும் விழைவு ஓங்கி எழுந்தது.
இரு கைகளிலும் வாளேந்தி புரவி மேல் பாய்ந்து சென்று போரிடுபவள். இரு கைகளிலும் எழுத்தாணி ஏந்தி இருவர் சொல்லும் நூல்களை இரு ஏடுகளில் எழுதும் திறன் கொண்டவள். யாழ் நரம்பை ஏழுமுறை சுண்டியதுமே சூதன் எண்ணிய பண் எது என்று சொல்லும் நுண்மை கொண்டவள். முடிசூடி அரியணை அமர்ந்து நாளும் நெறி சொல்பவள். தன் குரலுக்கு மாற்றெழாது நிறுத்தும் விழி கொண்டவள்.
அவள் பிறந்த அன்றே நிமித்திகர் நாள் கணித்து தருணம் சூழ்ந்து தேவயானி பிறந்த அதே நற்பொழுதில் அவளும் மண் நிகழ்ந்திருக்கிறாள் என்றனர். தேவயானி மீண்டும் மண்ணில் எழுவாள் என்று முன்னர் முனிவர் வருங்குறி உரைத்திருந்ததை நினைவுறுத்தி இவள் அவளே என்றனர். தென்னகத்தில் எழவிருக்கிறது பாரதத்தை ஆளும் மணிமுடி ஒன்று. அதைச் சூடுபவள் அவள். வலமிருந்து அம்மணிமுடியை வாளேந்திக் காக்கும் ஒருவன் இனி எழவேண்டும். அது வங்கனா கலிங்கனா மாளவனா என்பதே வினா.
மேலும் மேலும் ஓவியங்கள் நளனை வந்தடைந்துகொண்டிருந்தன. அனைத்து ஓவியங்களிலும் அவள் வெண்ணிற அன்னப்பறவையை அணைத்தபடியும், வருடியபடியும் இருந்தாள். அவள் அரண்மனையெங்கும் சிறு சுனைகளும் அவற்றில் அன்னப்பறவைகளும் நிறைந்துள்ளன என்றார் சூதர். அன்னத்துடன் ஆடுவதே அவள் விழையும் விளையாட்டு. நீரின் அலைகள் அதன் கழுத்தில் முதுகில் சிறகில் வாலில் நிகழ்கின்றன. “அன்னத்தின் இயல்பென்று அவளில் உள்ளதென்ன?” என்று நளன் கேட்டான். “எத்தகைய அலைகளிலும் உலையாது ஒழுகும் நேர்த்தி” என்றான் சென்று கண்டு வந்த சூதன். “ஆம், அவளே எனக்குரியவள். நான் அலையடங்கிய கணமே இல்லை” என்றான்.