குரங்குத்தொடுகையும் மின்மினி ஒளியும்

9

 

கொலாலம்பூரில் நல்ல மழை என நான் விமானத்திலிருந்தே ஊகித்தேன். நகரினூடாக ஓடும் க்ளாங் ஆறு செம்பெருக்காக கலங்கிச் சென்றுகொண்டிருந்தது. அதன் செம்மையில் கடலே கரையோரமாகக் கலங்கித்தெரிந்தது. நான் பலமுறை கொலாலம்பூரை வானிலிருந்து பார்த்திருக்கிறேன். இம்முறைதான் இத்தனை தெளிவாக கண்டேன். மழைபெய்து ஓய்ந்திருந்தமையால் வானில் தூசி இல்லை. முகில் இருந்தமையால் அளவான வெளிச்சம். மரங்களைக்கூட மிக அருகே என பார்க்கமுடிந்தது.

கொலாலம்பூர் ஒரு மாபெரும் எண்ணைப்பனைத்தோட்டத்தால் சூழப்பட்டுள்ளது என்று தோன்றியது. நகரைச்சூழ்ந்து சதுப்பு போல ஆறுகள், கிளையாறுகள், ஓடைகள், அலையாத்திக்காடுகள் பரவிய பசுமை. ஆண்டு முழுக்க மழைபெறும் பூமத்தியரேகை பகுதி என்பதனால் அடர்பசுமை.

10

விமானநிலையத்திற்கு நவீன், தயாஜி இருவரும் வந்திருந்தார்கள். நாஞ்சில் முன்னரே வந்து நூடில்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். வரும் வழியில் வழிநெரிசல் வந்துவிடும் என்று விரைவில் கிளம்பினாலும் சுற்றி சுற்றி வழிகளில் கிடந்து வந்துசேர இரண்டு மணிநேரம் ஆகிவிட்டது. மலேசிய நேரம் நாலரை. அதுவரை நான் சாப்பிடவில்லை. ஒரு தமிழ் ஓட்டலில் மீன்கறியுடன் சோறு சாப்பிட்டுவிட்டு கிரான் பஸிஃபிக் ஓட்டலுக்கு வந்தேன். வசதியாக அறைகள் கொண்ட நல்ல விடுதி. முன்பும் மூன்றுமுறை இங்கே தங்கியிருக்கிறேன்.

வெண்முரசு எழுதுவது கூடவே நடந்துகொண்டே இருந்தது. அன்னையிடம் பேசிக்கொண்டே பின்னால் ஓடும் குழந்தையைப்போல உணர்ந்தேன். விடுதிக்குள் சென்றதும் கொஞ்சம் எழுதுவேன். மதியம் இருபது நிமிடம் தூங்கியபின் அரைமணிநேரம். விடியற்காலையில் அலாரம் வைத்து எழுந்து மீண்டும். ஒவ்வொருநாளும் மறுநாளுக்குரிய எழுத்து. எங்கும் மின்னஞ்சலுக்கு வாய்ப்பிருப்பது நல்ல விஷயம்.

87

வல்லினம் நண்பர்கள் ஒருங்கிணைத்த குறுநாவல் பட்டறை 27, 28 நாட்களில் நடந்தது. சுமார் 60 பேர் கலந்துகொண்டர்கள். நான் சிறுகதை, குறுநாவல் ஆகியவற்றின் அமைப்பு குறித்துப் பேசினேன். பங்கேற்றவர்கள் கொண்டுவந்திருந்த கரு குறிப்புகளை கதைவடிவாக ஆக்குவதை விளக்கினேன். உற்சாகமான உரையாடலாக அமைந்தது. பல கதைக்கருக்குறிப்புகள் நல்ல கதைகளாக ஆகும் வாய்ப்பு கொண்டவை.

மாலை நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் நவீன் எடுத்த ஆவணப்படங்கள் வெளியிடப்பட்டன. ஆளுமைகள் என்னும் தலைப்பில் அவர் மலாய சிங்கப்பூர் எழுத்தாளர்களைப்பற்றிய ஆவணப்பதிவுகளைச் செய்து வருகிறார். சிங்கப்பூர் எழுத்தாளர்களான இளங்கண்ணன், கண்ணபிரான், கிருஷ்ணன் ஆகியோரைப்பற்றிய பதிவுகள் இரு தொகுப்புகளாக வெளியிடப்பட்டன. நானும் நாஞ்சில் நாடனும் பேசினோம். நாஞ்சில் சங்க இலக்கியம் பற்றி. நான் நவீன இலக்கியம் என்றால் என்ன என்னும் தலைப்பில்..

6

5

 டாக்டர் ஷண்முக சிவா வந்திருந்தார். நேற்று மாலை நிகழ்ச்சி முடிந்ததும் அவருடன் சென்று அவர் தொடர்புகொண்டுள்ள மை ஸ்கில் அமைப்பு நடத்திவரும்  உணவகம் சென்று சாப்பிட்டோம். [மை ஸ்கில் அமைப்பைப்பற்றி சென்றமுறையும் எழுதியிருந்தேன். மனம்திருந்திய குற்றவாளிகளுக்கான கல்விநிலையம். கபாலி படத்தில் வேறு பெயரில் இடம்பெறுவது] அந்த சிறுவர்கள் சமைத்த சான்விச்சும் காப்பியும் சிறப்பாக இருந்தன. அவர்கள் உற்சாகமான குரலில் சொன்ன வாழ்த்து மனம் மலரச்செய்தது.

இன்றுகாலை நவீனின் இல்லம் சென்று சாப்பிட்டேன். அங்கேயே வெண்முரசு எழுதினேன். அதன்பின் நாலரை மணிக்கு பத்து குகைகளுக்கு அருகே குவாலா செலாங்கூரில் உள்ள புகிட் மெலவாடி என்னும் குன்றிற்குமேல் சென்றோம். அது ஒருகாலத்தில் ஜப்பானிய ராணுவ முகாம். இன்று ஒரு பிக்னிக் மையம்.

4

அங்கிருந்து மிக அருகே கடல் உள்ளது.ஏராளமான குரங்குகள். அவற்றில் கருங்குரங்குகள் மிக அன்பானவை. அவற்றுக்கு கடலை, கீரை, காரட் வாங்கிப்போடலாம். வந்து கையிலிருந்தே வாங்கிக்கொள்ளும். நம் தோள்மேல் ஏறி அமர்ந்து சாப்பிடும். குரங்கின் கையை இப்போதுதன இத்தனைஅணுக்கமாக உணர்கிறேன். முன்பு அதன் நகம் கீறிய அனுபவம்தான். மனிதக்கையின் தொடுகை போலவே இருந்தது

3

அங்கே ஒரு பெரிய கல் உள்ளது. அது தொன்மையானது என்றும் அங்கே பலிகொடுக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு குறிப்பு உள்ளது. பார்த்ததுமே தெரிந்தது அது பெருங்கற்கால நடுகல் அல்லது அறைக்கல்லின் கூரை. இத்தகைய சிறுகுன்றுகளே அவை இருக்கும் இடங்கள், உலகமெங்கும். ஆனால் மலேசியா இஸ்லாமியநாடு. ஆகவே இஸ்லாம் வருவதற்கு முந்தைய மொத்த வரலாற்றையும் இருண்ட காலம் என அது புறக்கணித்துவிடுகிறது. ஓர் எளிய ஆய்வாளன் அதை எளிதில் அடையாளம் கண்டு நிறுவிவிடமுடியும்.

2

மாலை கடலோரமாக இருந்த ஓர் உணவகத்தில் அப்போது பிடித்த மீனை சமைத்து பெற்று சாப்பிட்டோம். புதுமீனின் சுவை அபாரமானது. புதுக்காய்கறியே அருஞ்சுவை கொண்டது. இது விரைவில் உருமாறும் புரதம். இதிலுள்ள மணத்தை அறிந்தபின் அத்தனை மீனுணவும் ஏமாற்றத்தையே அளிக்கும் என தோன்றியது. இறால், பெரிய வஞ்சிரம், கணவாய் என மீனே மாலை உணவு

அருகே உள்ள அலையாத்திக் காடுகளுக்கு படகில் அழைத்துச்சென்றார்கள். ஓர் இடத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு இயந்திரம் ஓய மெதுவாகச் சென்றோம். அலையாத்திக்காடுகள் இருளில் இருந்தன. அவைமுழுக்க மின்மினிகள் செறிந்திருந்தன. முகில்களுக்குள் விண்மீன்கள் போல. மின்னி மின்னி கண்களை அவை நிறைத்தன. இருளுக்குக் கண்பழகப்பழகத்தான் மின்மினிகளுக்கு எத்தனை ஒளி உண்டு என்பதை அறியமுடிந்தது.

1

இரவே விடுதிக்குத் திரும்பிவிட்டேன். சைனா டீ அருந்தியமையால் சரியாகத் தூக்கமில்லை. குரங்குக்கையின் மென்மையான அந்தரங்கமான தொடுகையே நினைவில் வந்துகொண்டிருந்தது.

முந்தைய கட்டுரைஅறத்தால் கண்காணிக்கப்படுதல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-8