«

»


Print this Post

சாகித்ய அக்காதமியும் நானும்


 

220px-Sahitya_Academy_Award_to_Rambhadracharya

சென்ற பிப்ரவரி 23 அன்று டெல்லி சாகித்ய அக்காதமி நடத்திய யுவசாகிதி என்னும் நிகழ்ச்சியின் ஓர் அரங்கை தொடக்கிவைத்து உரையாற்றும்படி என்னை அழைத்திருந்தார்கள். பயண ஏற்பாடுகளை நானே செய்யும்படி சாகித்ய அக்காதமி சொன்னது. பயணச்செலவுகளை அவர்கள் அங்கே அளிப்பார்கள் என்று சொன்னார்கள். நான் வழக்கமாக இவ்விதச் செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை.அன்று ஒரு சிறிய பயணம் தேவைப்பட்டது. ஆகவே பயணச்சீட்டு முன்பதிவு செய்து டெல்லி சென்றேன்

 

இண்டியா இண்டர்நேஷனல் விடுதியில் தங்கினேன். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அறைக்கு வந்தேன். பயணச்செலவு முதலியவற்றை எப்போது அளிப்பார்கள் என்று கேட்டால் சம்பந்தப்பட்டவர்கள் எங்கோ சென்றுவிட்டார்கள் என்றார்கள். மலையாள மறுநாள் நான் மதியம் கிளம்பவேண்டும். அதற்குள் கொடுத்துவிடுவார்களா என்று கேட்டேன். அறைக்கு வருவார்கள் என்றார்கள்.

 

மலையாள மனோரமா நாளிதழ்- தொலைக்காட்சிக்காக ஒரு பேட்டி கொடுத்தேன். அப்போது அறைக்கு வந்த ஊழியர் பயணச்சீட்டு தகவல்களைக் கொடுங்கள், உங்களுக்கு செக் அனுப்பப்படும் என்றார். தகவல்களை கொடுத்து படிவங்களை நிரப்பி அளித்தேன். கிளம்பி திருவனந்தபுரம் வந்தேன். ஆனால் ஒருமாதம் ஆகியும் பணம் வரவில்லை. திடீரென்று நினைவு வந்து ஏன் பணம் வரவில்லை என்று கேட்டேன். உங்கள் பயணத்தகவல் வந்துசேரவில்லை என மின்னஞ்சல் வந்தது. மீண்டும் தகவல்களை அனுப்பி வைத்தேன்

 

மீண்டும் ஒருமாதம் கடந்து நினைவு வந்து விசாரித்தேன். நீங்கள் அனுப்பிய தகவல்கள் எங்களுக்கு போதுமானதாக இல்லை என்றார்கள். என்ன வேண்டும், பயணச்சீட்டு உட்பட அனைத்தும் அனுப்பிவிட்டேனே என்றேன். நீங்கள் வந்ததற்கெல்லாம் டிக்கெட் இருக்கிறது. திரும்பிச்சென்ற டிக்கெட்டுடன் மேலும் தகவல் வேண்டும் என்றார்கள். அதையும் அனுப்பி வைத்தேன். பதில் இல்லை. மீண்டும் ஒருமாதம் கடந்து மீண்டும் மின்னஞ்சலில் பணம் அனுப்பப்படவில்லை என்றேன். மின்னஞ்சலில் நகல் அனுப்பப்பட்டால் போதாது என்றார்கள். அசலை எப்படி அனுப்பமுடியும் என்று சொல்லி அத்தனை தகவலையும் அனுப்பினேன்

 

மீண்டும் நினைவு வந்தது மூன்றுநாட்களுக்குப்பின். சாகித்ய அக்காதமி செயலருக்கே ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். செயலரிடமிருந்து இன்று ஒரு கடிதம். நீங்கள் அளித்த தகவல்கள் போதவில்லை, திரும்பிச் சென்றதற்கு பயணச்சீட்டு அசல் வேண்டும். ஆகவே பணம் ஏதும் தர முடியாது. கிட்டத்தட்ட தாசில்தார் அலுவலகத்தில் போய் திகைத்து நிற்கும் நிலை. இது வேலையற்ற வேலை. மொத்த பணமே பதினைந்தாயிரம்தான். திருவனந்தபுரம் சென்ற கார்ச்செலவை எல்லாம் சேர்க்கவில்லை. விமானச்செலவு மட்டும்தான். அதை தரமாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் கேட்கும் தகவல்களை அளிக்கவில்லை. அவர்கள் நாளுக்கொன்றை கேட்கிறார்கள்

 

நாஞ்சில்நாடனிடம் சொன்னேன். “குடுப்பாங்க. கொஞ்சம் இழுத்தடிப்பாங்க. நாமதான் பொறுமையா முயற்சிபண்ணணும். நாச்சிமுத்துதான் சாகித்ய அக்காதமியிலே இருக்கார். அவர்ட்ட சொல்லிப்பாக்கலாம். இல்லேன்னா தெரிஞ்ச யாரிட்டயாவது சொல்லி சிபாரிசு பண்ணச் சொல்லலாம். நம்ம பணம் அவன்கிட்ட போயாச்சு. மொள்ளமா பதமா பேசி வாங்கிடணும்” நாஞ்சில் ஏகப்பட்ட பில் பணங்களை பதமாக இதமாகப்பேசி வாங்கிய அனுபவம் உள்ளவர். ஆனால் இந்த சிபாரிசு செய்யும் பேராசிரியர்களுக்கு ஏதேனும் கமிஷன் கிமிஷன் உண்டா தெரியவில்லை

 

பதினைந்தாயிரம் ரூபாய்க்காக ஆறுமாதம் காத்திருந்து சட்டப்போராட்டம் நடத்துவதன் அசட்டுத்தனம் தாங்கமுடியவில்லை. சரி எவ்வளவோ பணம் கையிலிருந்து போகிறது. இந்திய இலக்கியத்தை வளர்க்க மத்திய அரசுக்கு அளித்த நன்கொடையாகவே இருந்துவிட்டு போகிறது. சாகித்ய அக்காதமி செயலருக்கு பதில் போட்டேன். “அன்புள்ள ஐயா, பலமுறை பயணச்சீட்டு உட்பட அத்தனை தகவல்களையும் அனுப்பிவிட்டேன்.ஏதாவது லஞ்சம் எதிர்பார்க்கிறீர்களா என்றும் தெரியவில்லை.இந்தப்பணத்துக்காக இத்தனை கடும் உழைப்பைச் செலுத்தும் நிலையில் நான் இல்லை. எனக்கு வேறு எழுத்துப்பணிகள் உள்ளன. ஆகவே பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். நன்றி”

 

அப்பாடா என்ன ஒரு நிம்மதி. இந்த முடிவை பிப்ரவரியிலேயே எடுத்திருக்கலாம். எத்தனை மின்னஞ்சல்கள். இந்த வேலையெல்லாம் ஆட்டோ ரிக்‌ஷா செலவையெல்லாம் எழுதிப்பெறும் அரசுக்குமாஸ்தா மனநிலை இருந்தால் மட்டுமே சாத்தியம். பேராசிரியர்களுக்குத்தான் கட்டுப்படியாகும்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/98833