‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-5

4. கலிமுகம்

flowerவிடைபெறுவதற்காக முதற்புலரியில் பாண்டவர்களும் திரௌபதியும் தமனரின் குடிலுக்குள் சென்றார்கள். அவர் அப்போதுதான் துயிலெழுந்து முகம் கழுவிக்கொண்டிருந்தார். அவர்களைக் கண்டதும் “இப்பொழுதிலேயா? நீராடி உணவருந்தி கிளம்பலாமே?” என்றார். “நாங்கள் நடந்து செல்லவிருக்கிறோம். பெருங்கோடை. சூரியன் சினப்பதற்குள் பாதி தொலைவைக் கடந்து சோலை ஒன்றை கண்டடைந்துவிடவேண்டும்” என்றார் தருமன். “ஆம், அதுவும் மெய்யே. நான் நடந்து நெடுநாட்களாகின்றது” என்றார் அவர்.

வணங்கி முறைமைச்சொற்கள் உரைத்து எழுகையில் நகுலன் “நிஷத நாட்டுக்கும் விதர்ப்பத்திற்கும் இடையே பிறிதொரு பூசல்முனை உள்ளது என்றீர்களே? அதைப்பற்றி பேசக் கூடவில்லை. நேற்று பின்னிரவில்தான் அதைப்பற்றி எண்ணினேன்” என்றான். “அது அனைவரும் அறிந்த கதைதான். ஸ்ரீசக்ரரின் நளோபாக்யானம் என்னும் காவியம் சூதர்களால் பாடப்படுகிறது, கேட்டிருப்பீர்கள்” என்றார் தமனர். “ஆம், அரிய சில ஒப்புமைகள் கொண்ட காவியம்” என்றார் தருமன். “நிஷத மன்னனாகிய நளன் விதர்ப்ப நாட்டு இளவரசியாகிய தமயந்தியை மணந்து இன்னல்கள் அடைந்து மீண்ட கதை அது. அதற்கு இரு நாடுகளிலும் வெவ்வேறு சொல்வடிவங்கள் உள்ளன” என்றார் தமனர்.

தருமன் “ஆம், நானே இரு வடிவங்களை கேட்டுள்ளேன்” என்றார். “அதை வைத்து நான் சொல்வதற்கும் ஒன்றுள்ளது. சொல்லப்படாத ஏதோ எஞ்சுகிறதென்று நானும் உணர்ந்துகொண்டிருந்தேன். அக்கதையை ஏதேனும் வடிவில் கேளாமல் நீங்கள் விதர்ப்பத்தை கடக்கவியலாது. அக்கதையுடன் நான் சொல்லும் சொற்களையும் இணைத்துக்கொள்ளுங்கள். உருவென்பது ஓர் ஆடையே. உருவமைந்து அறிவதன் எல்லையை மாற்றுருவெடுத்து கடக்கலாம். பிறிதொன்றென ஆகாமல் எவரும் பிறிதெதையும் அடையவியலாது” என்றார் தமனர்.

அவர்கள் அவரை தாள்தொட்டு சென்னிசூடி நற்சொல் பெற்று கிளம்பினர். குருநிலையிலிருந்து கிளம்பி நெடுந்தொலைவுவரை தருமன் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. முதல் இளைப்பாறலின்போது பீமன் அவர்களுக்கு குடிக்க நீர் அளித்தபின் அருகே ஊற்றிருப்பதை குரங்குகளிடம் கேட்டறிந்து நீர்ப்பையுடன் கிளம்பிச்சென்றான். நகுலன் “ஆடைதான் என்றால் எதை அணிந்தால் என்ன?” என்றான். அவன் எண்ணங்கள் சென்ற திசையிலேயே பிறரும் இருந்தமையால் அச்சொற்கள் அவர்களுக்கு புரிந்தன. “ஆடைகளை உடலும் நடிக்கிறது” என்று தருமன் சொன்னார்.

“நாம் நிஷாதர்களின் விராடபுரிக்கு செல்லத்தான் போகிறோமா?” என்றான் சகதேவன். “வேறு வழியில்லை. எண்ணிநோக்கி பிறிதொரு இடம் தேர இயலவில்லை” என்றார் தருமன். “நாம் இடர்மிக்க பயணத்தில் உள்ளோம். இதை மேலும் நீட்டிக்கவியலாது. விதர்ப்பத்திலோ மற்ற இடங்களிலோ நம்மை எவரேனும் கண்டுகொள்வதற்கான வாய்ப்புகள் ஏராளம். உண்மையில் காசியில் என்னை ஒற்றர் சிலர் கண்டுகொண்டனர் என்றே ஐயுறுகிறேன்.” சகதேவன் மேலே நோக்கி “அதற்குள் உச்சி என வெயிலெழுந்துவிட்டது. பறவைகள் நிழலணையத் தொடங்கிவிட்டன” என்றான். “மண்ணுக்குள் நீர் இருந்தால் கதிர்வெம்மை கடுமையாக இருக்காது. ஆழ்நீர் இறங்கிமறைகையிலேயே இந்த வெம்மை” என்றான் நகுலன்.

மணியோசை கேட்க அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். சூதர்குடி ஒன்று வண்ண ஆடைகளுடன் பொதிகளையும் இசைக்கலன்களையும் சுமந்தபடி நடந்து வந்தது. ஆண்கள் மூவர், இரு பெண்களும் இரு சிறுவரும். ஒருத்தி கையில் நடைதிகழா மைந்தன். அவர்களில் ஒருவனின் தோளில் ஒரு குட்டிக்குரங்கு இருந்தது. ஆண்களில் இருவர் மூங்கில்கூடைகளில் கலங்களையும் பிற குடிப்பொருட்களையும் அடுக்கி தலையில் ஏற்றியிருந்தனர். “சூதரா, குறவரா?” என்றான் சகதேவன். “சூதர்களே. குறவர்களுக்கு துணியில் தலைப்பாகை அணிய உரிமை இல்லை” என்றார் தருமன்.

அவர்கள் தொலைவிலேயே பாண்டவர்களை பார்த்துவிட்டிருந்தனர். அருகே வந்ததும் அவர்களின் தலைவன் முகமன் சொல்லி வணங்கினான். அவர்கள் தருமனை முனிவர் என்றும் பிறரை மாணவர்கள் என்றும் எண்ணினர். திரௌபதியை முனிவர்துணைவி என்று எண்ணி முதல் முகமன் அவளுக்குரைத்த சூதன் “நாங்கள் கலிங்கச்சூதர். விதர்ப்பத்திற்கு செல்கிறோம். தேன் நிறை மலர்களென நற்சொல் ஏந்திய முகங்களைக் காணும் பேறுபெற்றோம்” என்று முறைமைச்சொல் உரைத்தான். தருமன் அவர்களை “நலம் சூழ்க!” என வாழ்த்தினார்.

“என் பெயர் பிங்கலன். இது என் குடி. என் மைந்தர் இருவர். அளகன், அனகன். மைந்தர்துணைவியர் இருவர். சுரை, சௌபை. கதை பாடி சொல் விதைத்து அன்னம் விளைவிப்பவர்” என்றான். சகதேவன் “குரங்குகளை சூதர்கள் வைத்திருப்பதில்லை” என்றான். “ஆம், ஆனால் விதர்ப்பத்தைக் கடந்தால் நாங்கள் செல்லவேண்டியவை நிஷாதர்களின் ஊர்கள். மீன்பிடிக்கும் மச்சர்கள். வேட்டையாடும் காளகர்கள். அவர்களில் பலருக்கு எங்கள் மொழியே புரியாது. பாடிப்பிழைக்க வழியில்லாத இடங்களில் இக்குரங்கு எங்களுக்கு அன்னமீட்டித் தரும்” என்றான் முதுசூதன் பிங்கலன்.

“நாங்கள் விதர்ப்பத்தைக் கடந்து நிஷதத்திற்குள் செல்லவிருக்கிறோம்” என்றார் தருமன். “நீங்கள் ஷத்ரியர் அல்லவென்றால் அங்கு செல்வதில் இடரில்லை. ஷத்ரியரும் அவர் புகழ்பாடும் சூதரும் அவ்வெல்லைக்குள் நுழைந்தால் அப்போதே கொல்லப்படுவார்கள்” என்றான் அளகன். “நாங்கள் அந்தணர்” என்று தருமன் சொன்னார். “இவர் கைகளின் வடுக்கள் அவ்வாறு காட்டவில்லையே” என்றான் அனகன். “போர்த்தொழில் அந்தணர் நாங்கள். நியோகவேதியர் என எங்கள் குடிமரபை சொல்வதுண்டு” என்று சகதேவன் சொன்னான்.

அவர்களை ஒருமுறை நோக்கியபின் விழிவிலக்கி “மாற்றுருக்கொண்டு நுழையாமலிருப்பதே நன்று. ஏனென்றால் மாற்றுருக்கொண்டு நிஷதத்திற்குள் நுழையும் ஷத்ரிய ஒற்றரை அவர்கள் பன்னிரு தலைமுறைகளாக கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் படையினர் அனைவருக்குமே மாற்றுரு கண்டடையும் நுண்திறன் உண்டு” என்றான் பிங்கலன். “நிஷதத்தின் படைத்தலைவன் அரசியின் தம்பியாகிய கீசகன். தோள்வல்லமையில் பீமனுக்கு நிகரானவன் அவன் என்கிறார்கள். கடுந்தொழில் மறவன். தன்னைப்போலவே தன் படையினரையும் பயிற்றுவித்திருக்கிறான். அஞ்சுவதஞ்சுவர் அவனை ஒழிவது நன்று” என்றாள் சுரை. “ஆம், அறிந்துள்ளோம்” என்று தருமன் சொன்னார்.

“பசி கொண்டிருக்கிறீர்கள் என்றால் எங்களிடமுள்ள அன்னத்தில் சிறிது உண்ணலாம். அந்தணர் என்பதனால் எங்கள் கை அட்ட உணவை ஏற்பீர்களோ என ஐயுறுகிறோம்” என்றான் பிங்கலன். “போர்த்தொழில் அந்தணர் ஊனுணவும் உண்பதுண்டு” என்றார் தருமன். “நன்று, இதை நல்வாழ்த்தென்றே கொள்வேன்” என்றபின் பிங்கலன் விரியிலைகளை பறித்துவந்தான். சுரை மூங்கில் கூடையில் இருந்த மரக்குடைவுக்கலத்தில் இருந்து அன்ன உருளைகளை எடுத்து அவற்றில் வைத்து அவர்களுக்கு அளித்தாள். வறுத்த தினையை உலர்த்திய ஊனுடன் உப்புசேர்த்து இடித்து உருட்டிய உலரன்னம் சுவையாக இருந்தது. “நீர் அருந்தினால் வயிற்றில் வளர்வது இவ்வுணவு” என்றான் பிங்கலன். “அத்துடன் உண்டபின் கைகழுவ நீரை வீணடிக்கவேண்டியதில்லை என்னும் நல்வாய்ப்பும் உண்டு.”

சாப்பிட்டபின் தருமன் “கதை என எதையேனும் சொல்லக்கூடுமோ, சூதரே?” என்றார். “பாடவேண்டாம். செல்லும் வழியில் சொல்லிவந்தால் போதும்.” பிங்கலன் முகம் மலர்ந்து “கதை பாடாமல் தொண்டை சிக்கியிருக்கிறது. வழிநடைவிலங்குகளிடம் சொல்லத்தொடங்கலாமா என்று எண்ணிக்கொண்டிருந்தேன். எந்தக் கதை?” என்றான். “விதர்ப்பினியாகிய தமயந்தியின் கதை” என்றார் தருமன். “ஆம், விதர்ப்பத்திற்குள் நுழைகையில் சொல்லவேண்டியதுதான்… நன்று” என்றபின் திரும்பி தோளிலிட்டிருந்த குறுமுழவை எடுத்து அதன் தோல்வட்டத்தில் கையோட்டி மெல்ல தட்டிவிட்டு “சாரஸ்வத நாட்டின் பேரரசன் வேனனின் கதையை பாடுக, நாவே!” என்றான்.

flowerநால்வகை நிலமும் மூவகை அறங்களால் பேணப்பட்ட அந்நாட்டை அவன் தன் தந்தையிடமிருந்து பெற்றான். சரஸ்வதி நதிக்கரையில் நாணல்புதர் ஒன்றுக்குள் ஊணும் துயிலும் ஒழித்து அருந்தவம் செய்து பிரம்மனை தன் முன் அழைத்தான் வேனன். அவன் முன் தோன்றிய படைப்பிறைவன் “உன் தவம் முதிர்ந்தது. அரசனே, விழைவதென்ன சொல்” என்று வேண்டினான். “தொட்டவை பொன்னென்றாகும் பெற்றி, சுட்டியவற்றை ஈட்டும் ஆற்றல், எண்ணியவை எய்தும் வாழ்வு. இம்மூன்றும் வேண்டும், இறைவா” என்றான் வேனன்.

பிரம்மன் நகைத்து “அரசே, தெய்வங்களாயினும் அவ்வண்ணம் எதையும் அருளவியலாது. இப்பெருவெளியில் ஒவ்வொன்றும் பிறிதொன்றால் நிகர்செய்யப்பட்டுள்ளது என்று அறிக! உனக்களிப்பதை அவர்கள் பிறிதெங்கோ வைக்கவேண்டும்” என்றான். “அதை நான் அறியவேண்டியதில்லை. நான் விழைவது இந்நற்சொல். அதை அருள்க தெய்வங்கள்” என்றான் வேனன். “உன் முற்பிறவியில் ஈட்டியிருக்கவேண்டும். அல்லது வருபிறவியில் நிகர்வைக்கவேண்டும். வெட்டவெளியில் விளையும் கனியொன்றில்லை, உணர்க!” என்றான் பிரம்மன். “நான் பிறிதொன்றும் வேண்டவில்லை. என் தவம் வீண் என்று சொல்லி செல்க!” என்றான் வேனன். “செய்யப்பட்டுவிட்ட தவம் உருக்கொண்ட பொருளுக்கிணையானது. எதன்பொருட்டும் அது இல்லை என்றாவதில்லை” என்றான் பிரம்மன்.

“நான் விழைவன பிறிதெவையும் அல்ல” என்று சொல்லி வேனன் விழிமூடி அமர்ந்தான். “நீ விழைவன அனைத்தையும் அளிப்பவன் ஒரு தெய்வம் மட்டுமே. அவன் பெயர் கலி. காகக்கொடி கொண்டவன். கழுதை ஊர்பவன். கரியன். எண்ணியதை எல்லாம் அளிக்கும் திறன் கொண்டவன். அவனை எற்கிறாயா?” என்றான் பிரம்மன். “ஆம், ஏற்கிறேன்” என்றான் வேனன். “அவ்வண்ணம் ஒரு தெய்வமிருக்கிறது என்றால் இதுவரை முனிவரும் அரசரும் அவனை எண்ணி ஏன் தவமிருக்கவில்லை? அவன் அருளால் ஏன் மானுடர் மண்ணுலகை முழுதும் வெல்லவில்லை? அதை எண்ணி நோக்கமாட்டாயா?” என்றான் பிரம்மன்.

“அவர்கள் என்னைப்போல் கடுந்தவம் செய்திருக்கமாட்டார்கள். எனக்கிணையான பெருவிழைவு கொண்டிருக்கமாட்டார்கள். அத்தெய்வத்தின் அருளால் உலகாளப்போகும் முதல் மானுடன் நான் என்பதே ஊழ்” என்றான் வேனன். புன்னகைத்து “நன்று, அவ்வண்ணமே ஆகுக!” என்று சொல்லி பிரம்மன் உருமறைந்தான்.

பிரம்மனின் இடக்கால் கட்டைவிரல் பெருகி எழுந்து கரிய உருக்கொண்ட தெய்வமென வேனனின் முன் நின்றது. அக்கொடிய உரு கண்டு அஞ்சி அவன் கைகூப்பினான். “என்னை விழைந்தவர் எவருமிலர். உன் ஒப்புதலால் மகிழ்ந்தேன். உன் விருப்பங்கள் என்ன?” என்றான் கலி. பன்னிரு கைகளிலும் படைக்கலங்களுடன் எரியென சிவந்த விழிகளுடன் நிழலில்லா பேருருக்கொண்டு எழுந்து நின்றிருந்த கலியனின் முன் தலைவணங்கிய வேனன் தன் விழைவுகளை சொன்னான். “அளித்தேன்” என்றான் கலி.

“ஆனால் என் நெறி ஒன்றுண்டு. நீ கொள்வனவெல்லாம் உன்னுடையவை அல்ல என்று உன் உள்ளம் எண்ணவேண்டும். நீ கொடுப்பவை எல்லாம் என்னுடையவை என்ற எண்ணம் இருக்கவேண்டும். கொடுத்த கையை நீரூற்றி மும்முறை முழுதுறக் கழுவி கொடையிலிருந்து நீ விலகிக்கொள்ளவேண்டும். ஒருமுறை ஒருகணம் உன் எண்ணம் பிழைக்குமென்றால் உன்னை நான் பற்றிக்கொள்வேன். நான் அளித்தவற்றை எல்லாம் ஐந்துமடங்கென திரும்பப்பெறுவேன். அழியா இருள்கொண்ட ஆழுலகுக்கு உன்னை என்னுடன் அழைத்துச்செல்வேன். ஆயிரம் யுகங்கள் அங்கு நீ என் அடிமையென இருந்தாகவேண்டும்.” வேனன் “அவ்வாறே இறையே. இது என் ஆணை!” என்றான்.

அரண்மனை மீண்ட வேனன் அரியணை அமர்ந்து செங்கோல் தாழாது ஆண்டான். எதிரிகளனைவரையும் கொடுங்காற்று சருகுகளை என வென்று ஒதுக்கினான். மண்ணில் புதைந்துள்ள பொன்னெல்லாம் அவன் கருவூலத்திற்கு வந்தன. மானுடர் எண்ணும் நலன்கள் எல்லாம் அவன் கைநீட்ட அருகமைந்தன. நல்லாட்சியால் பெரும்புகழ் கொண்டான். புகழ் சொல்லில் பற்றி எரிந்தேறும் நெருப்பு. நாள்தோறும் அவன் புகழ் அவனை வந்தடைந்துகொண்டிருந்தது. அவன் கொடைத்திறனும் வில்திறனும் நகர்ப்பெருமையும் குடிப்பெருமையும் அவன் செவிகளில் அறுபடாது ஒலித்து அவையே அவன் எண்ணப்பெருக்கென்றாயின. பிறிதொன்றை எண்ணாது அதிலமர்ந்தான்.

அந்த ஆணவத்தால் அவன் அறிவிழந்தான். வெல்பவன் வெற்றிக்கு நிகராக தெய்வங்களின் மறுதட்டில் வைப்பது அடக்கத்தை. முனிவர்களே, வெற்றியின் நிழல் ஆணவம். வெற்றி நாள் என சுருங்கும், ஆணவம் கணமெனப் பெருகும். கொள்பவை எல்லாம் தன் திறனாலேயே என்று வேனன் எண்ணலாலான். கொடுப்பவை தன் கருணையால் என்று மயங்கினான்.

அவன் அரண்மனைக்கு வெளியே வாயிலின் இடப்பக்கம் கலியின் சிலை நிறுவப்பட்டிருந்தது. அக்கற்சிலையில் கண்கள் மூடியிருக்கும்படி செதுக்கப்பட்டிருந்தன. நாள்தோறும் அச்சிலைக்கு நீராட்டும் மலராட்டும் சுடராட்டும் காட்டி படையலிட்டு வணங்குவது அரசனின் வழக்கம். அன்றொருநாள் வறியவன் ஒருவனுக்கு பொற்கொடை அளித்தபின் கைகழுவுகையில் அவன் விரல்முனை நனையவில்லை. நாள்தொறும் அவ்வாறு கைநனைத்துக் கொண்டிருந்தமையால் அவன் அதை பொருட்படுத்தவில்லை.

கற்சிலையின் பூசகர் மலர்மாலையுடன் திரும்பி நோக்கியபோது சிலையின் விழிகள் திறந்திருப்பதைக் கண்டு அஞ்சி அலறினார். நீரூற்றிய ஏவலன் அப்பால் செல்ல திரும்பி நோக்கிய அமைச்சர் கருநிழலொன்று அரசனின் கைவிரல் நுனியைத் தொட்டு படர்ந்தேறுவதைக் கண்டார். “அரசே!” என அவர் அஞ்சி அழைத்தபோது “என்ன?” எனத் திரும்பிய அரசனின் விழிகள் மாறியிருந்தன. அவன் உடலசைவும் சிரிப்பும் பிறிதொருவர் என காட்டின. அப்போது நகருக்குள் பசுக்கள் அஞ்சி அலறல் குரலெழுப்பின. காகக்கூட்டங்கள் முகில்களைப்போல வந்து நகரை மூடி இருளாக்கின. நரித்திரள்கள் நகருக்கு வெளியே ஊளையிட்டன. வானில் ஓர் எரிவிண்மீன் கீறிச்சென்றதைக் கண்டனர் குடிகள்.

கொடிய தொற்றுநோய் என குடியிருப்பதை உண்பதே கலியின் வழி. வேனன் ஆணவமும் கொடும்போக்கும் கொண்டவன் ஆனான். அந்தணரை தண்டித்தான், குடிகளை கொள்ளையிட்டான். எதிரிகளை சிறுமை செய்தான். மூதாதையரை மறந்தான். தெய்வங்களை புறக்கணித்தான். நாள்தோறும் அவன் தீமை பெருகியது. நச்சுவிழுந்த காடென்று கருகியழிந்தது சாரஸ்வதம். அங்கு வாழ்ந்த மலைத்தெய்வங்களும் கானுறைத்தெய்வங்களும் அகன்றபோது நீரோடைகள் வறண்டன. தவளைகள் மறைந்தபோது மழைமுகில்கள் செவிடாகி கடந்து சென்றன. வான்நீர் பெய்யாத நிலத்தில் அனல் எழுந்து சூழ்ந்தது.

அந்தணரும் முனிவரும் சென்று அவனுக்கு அறிவுரை சொன்னார்கள். நற்சொல் உரைத்த முனிவரை கழுவிலேற்றி அரண்மனைக்கு முன் அமரச்செய்தான். அந்தணரை பூட்டிவைத்து உணவின்றி சாகவைத்தான். சினம்கொண்டு எழுந்த மக்கள் அந்தணரை அணுகி அறம் கோரினர். அவர்களை ஆற்றுப்படுத்தியபின் அந்தணர் ஆவதென்ன என்று தங்கள் குலத்து முதியவரான சாந்தரிடம் வினவினர். நூற்றிருபது அகவை எய்தி நெற்றுபோல உலர்ந்து இல்லத்தின் திண்ணையில் அமர்ந்திருந்த சாந்தர் சீவிடுபோல ஒலித்த சிறுகுரலில் “அரசன் கோல் இவ்வாழியின் அச்சு. சினம்கொண்டு அச்சை முறித்தால் சுழல்விசையாலேயே சிதறிப்போகும் அனைத்தும். தீய அரசன் அமைந்தது நம் தீவினையால் என்றே கொள்வோம். தெய்வம் முனிந்தால் பணிந்து மன்றாடுவதன்றி வேறேது வழி?” என்றார்.

குழம்பி ஒருவரை ஒருவர் நோக்கிய அந்தணரிடம் “கொடியோன் என்றாலும் அவன் நம் குடி அரசன். அவனை அழித்தால் பிற குடியரசனை நாம் தலைமேல் சூடுவோம். மான்கணம் சிம்மத்தை அரசனாக்குவதற்கு நிகர் அது” என்றார் சாந்தர். “ஆம் மூத்தவரே, ஆணை” என்றனர் இளையோர். அச்சொல்லை அவர்கள் குடிகளிடம் கொண்டுசென்றனர். ஒவ்வொரு நாளும் ஒரு குடிக்குழு சென்று வேனனிடம் முறையிடுவதென்று முடிவெடுத்தனர். அவன் காலை துயிலெழுகையில் அரசமுற்றத்தில் நின்று தங்கள் துயர்சொல்லி கூச்சலிட்டனர். அவர்களை குதிரைகளை அனுப்பி மிதிக்கவைத்தான். கொதிக்கும் எண்ணையை அவர்கள்மேல் ஊற்றினான். சிறையிலிட்டான். சாட்டையால் அடித்தான். கொன்று தொங்கவிட்டான்.

விழிநீர் சொட்டச்சொட்ட வேனனால் ஆளப்பட்ட புவி வெம்மைகொண்டது. அனைத்து மரங்களையும் அது உள்ளிழுத்துக்கொண்டது. திருப்பப்பட்ட மான்தோல் என நிறம் வெளுத்து வெறுமையாயிற்று. புவிமகள் பாதாளத்தில் சென்று ஒளிந்துவிட்டாள் என்றனர் நிமித்திகர். அறம் மீள்வதறிந்தே அவள் இனி எழுவாள் என்றார்கள். புவியன்னை ஒரு கரிய பசுவென்றாகி இருளில் உலவுவதை விழியொளியால் கண்டனர் கவிஞர்.

ஒருநாள் பட்டினியால் உடல்மெலிந்த அன்னை ஒருத்தி பாலின்றி இறந்த பைங்குழவி ஒன்றை எடுத்துக்கொண்டு அவன் அரண்மனை முற்றத்தில் வந்து நின்றாள். “கொடியவனே, கீழ்மகனே, வெளியே வா! குழவி மண்ணுக்கு வருவது அன்னையை நம்பி. அன்னை வாழ்வது குடியை நம்பி. குடி கோலை நம்பி. குழவிக்கு உணவுதேடி உண்ணும் கையையும் காலையும் அருளாத தெய்வங்கள் மானுடம் மீது இட்ட ஆணை என்ன என்று அறிவாயா? பசித்து ஒரு குழந்தை இறக்கும் என்றால் அக்குடியின் இறுதி அறமும் முன்னரே வெளியேறிவிட்டதென்று பொருள். அக்குடி மண்மீது வாழும் தகுதியை இழந்துவிட்டது. அக்குடியில் பிறந்த நானும் இனி உயிர்வாழலாகாது. எரிக அனல்…” என்று கூவி தன் கையிலிருந்த கத்தியால் ஒரு முலையை அறுத்து அரண்மனை முன் வீசினாள். குருதி பெருக்கியபடி அங்கே விழுந்து இறந்தாள்.

அது நிகழ்ந்த அக்கணம் திண்ணையில் சாந்தர் முனகுவதை கேட்டார்கள் அந்தணர். ஓடி அவர் அருகே சென்று என்ன என்று வினவினர். “எழுக குடி. ஆணும் பெண்ணும் படைக்கலம் கொள்க! குருதியாடாத எவரையும் இனி குடியெனக் கொள்ளாதொழிக! நகரை நிறையுங்கள். பெருகிச்சென்று அரண்மனை புகுந்து அரசனையும் அவனை ஏற்பவர்களையும் கொன்றுகுவியுங்கள். அவர்களின் குருதியால் நகர்க்காவல் தெய்வங்களை மும்முறை கழுவுங்கள். வேனனைக் கொன்று அவன் வலக்கால்தொடைத்தசையை எடுத்து அதை மட்டும் அரசனுக்குரிய முறையில் எரியூட்டுங்கள். எஞ்சிய உடலை துண்டுகளாக ஆக்கி காட்டுக்குள் கூவியலையும் காகங்களுக்கும் நரிகளுக்கும் உணவாக்குங்கள். அரசனின் முதல் மைந்தனை அரசனாக்குங்கள். அவன் தன் தந்தைக்கு எரியூட்டட்டும். அவனே சென்று பாதாளத்தில் அலையும் புவிமகளை மீட்டு வரட்டும்” என்றார். மூச்சிரைக்க மெல்ல தளர்ந்து கைதூக்கி வாழ்த்தி “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.

அச்சொல் அரைநாழிகைக்குள் நகருக்குள் பரவியது. கடலலை போன்று ஓசைகேட்டபோது வேனன் திகைத்து சாளரம் வழியாக வெளியே நோக்கினான். நகரம் எரிபுகையால் நிறைந்திருப்பதைக் கண்டு வெளியே ஓடி தன் மெய்க்காவலரிடம் எழுபவர்களை கொன்றழிக்க ஆணையிட்டான். அந்தப் போர் ஏழு நாழிகை நேரம் நிகழ்ந்தது. கணந்தோறும் பெருகிய குடிபடைகளுக்கு முன் அரசப்படைகள் அழிந்தன. அவர்களின் குருதியை அள்ளி அரண்மனையெங்கும் வீசி கழுவினர். வேனன் தன் வாளுடன் ஆட்சியறை விட்டு வெளியே ஓடிவர அவன் குடிகளில் இளையோர் எழுவர் அவனைச் சூழ்ந்து வெட்டி வீழ்த்தினர். அவன் தொடைத்தசையை வெட்டியபின் துண்டுகளாக்கி காட்டில் வீசினர். அவன் உடலை உண்ட நரிகள் ஊளையிட்டபடி காட்டின் ஆழத்திற்குள் ஓடி மறைந்தன. காகங்கள் வானில் சுழன்று கூச்சலிட்டபின் மறைந்தன.

NEERKOLAM_EPI_05

வேனனின் பெயர்மைந்தன் பிருதுவை அந்தணர் அரசனாக்கினார்கள். தாதையின் தொடையை எரியூட்டியபின் அவன் வாளுடன் சென்று புவியன்னையை மீட்டுவந்தான். அறம்திகழ தெய்வங்கள் மீள வேள்வி பெருகியது. வறுநிலத்தில் பசுமை எழுந்து செறிந்தது. ஒழியா அன்னக்கலம் என அன்னையின் அகிடு சுரந்தது. பிருதுவின் மகளென வந்து வேள்விச்சாலையில் புகுந்து அவன் வலத்தொடைமேல் அமர்ந்தாள் புவி. ஆகவே கவிஞரால் அவள் பிருத்வி என அழைக்கப்பட்டாள். அவள் வாழ்க!

பிங்கலன் சொன்னான் “முனிவரே, மாணவரே, இனிய விழிகள்கொண்ட தேவியே, கேளுங்கள். வேனனின் உடலில் இருந்து கலி அந்த நரிகளின் நெஞ்சிலும் காகங்களின் வயிற்றிலும் பரவியது. அவை அலறியபடி காடுகளுக்குள் சென்றன. காட்டுப்புதர்களுக்குள் பதுங்கியிருந்த நரிகள் புல்கொய்யவும் கிழங்கும் கனியும் தேரவும் வந்த கான்குடிப் பெண்களை விழிதொட்டு உளம் மயக்கி வென்று புணர்ந்தன. அவர்களின் கருக்களில் இருந்து நரிகளைப்போல் வெள்விழி கொண்ட, நரிகளின் பெரும்பசி கொண்ட மைந்தர்கள் பிறந்தனர். அவர்கள் மிலேச்சர்கள் என்றழைக்கப்பட்டனர்.”

“வேனனின் ஊன் உண்ட காகங்கள் பறந்து காடுகளுக்குள் புகுந்தன. அங்கே தொல்குடிகள் தங்கள் நுண்சொல் ஓதி தெய்வங்களைத் தொழுகையில் அருகே கிளைகளில் அமர்ந்திருந்து தங்கள் குரலை ஓயாமல் எழுப்பின. கனவுகளில் அந்நுண்சொற்களில் காகங்களின் ஒலியும் இணைந்தன. அவர்களின் தெய்வங்களுடன் காகங்களும் சென்றமைந்தன. காகங்களை வழிபடுபவர்கள் நிஷாதர் என்றழைக்கப்பட்டனர். நிஷாதர்களின் தெய்வநிரையில் முதல்தெய்வம் கலியே. ஆகவே அவர்கள் கலியர் என்றழைக்கப்பட்டனர். நிஷாதகுலத்தின் தென்னகக்கிளையே நிஷத நாடென்கின்றனர் நூலோர்.”

“இது விதர்ப்பத்தினர் விரும்பும் கதை அல்லவா?” என்று சகதேவன் கேட்டான். “ஆம், இதையே இங்கே பாடுகிறோம்” என்றான் பிங்கலன். தருமன் சிரித்து “மறுபக்க கதையை சொல்க! நிஷதரின் சொற்களால்” என்றார். “மறுபக்கத்தை கேட்கப் புகுந்தால் அனைத்துக் கதைகளும் அசைவிழந்துவிடும், முனிவரே” என்றான் பிங்கலன். உடலெங்கும் நீர்வழிய தோல்பையைச் சுமந்தபடி பீமன் அப்பால் வருவதைக் கண்டு “ஆ, அவர் மிலேச்சர்” என்றான். “அவன் என் மாணவன். பால்ஹிக நாட்டவன்” என்றார் தருமன். “அவர்கள் பெருந்தோளர்கள், அறிந்திருப்பீர்.” பிங்கலன் “இத்தகைய பேருடல் கீசகருக்கு மட்டுமே உரியதென்று எண்ணியிருந்தோம்” என்றான். அவன் மைந்தர்களும் பீமனையை கூர்ந்து நோக்கினர்.

“நெடுநேரமாயிற்று, செல்வோம்” என்றார் தருமன். “சூதர் நிஷதநாட்டின் கதையை சொல்லிக்கொண்டிருந்தார்.” பீமன் “நன்று” என்றான். “சொல்லிக்கொண்டே செல்லலாம். கதை இருக்கும்வரை வழித்துணைக்கு தெய்வங்கள் தேவையில்லை என்பார்கள்” என்றார் தருமன்.

முந்தைய கட்டுரைமழையைத்துரத்துதல்
அடுத்த கட்டுரைசங்கசித்திரங்கள் -கடிதம்