கொலாலம்பூரில் நண்பர் நவீன் வல்லினம் அமைப்பின் சார்பில் நிகழ்த்தும் சிறுகதை, குறுநாவல் பட்டறைக்காக மலேசியா வந்திருக்கிறேன். அருண்மொழி வருவதாக இருந்தது. அவள் கண்களில் சிறிய அலர்ஜி ஏற்பட்டமையால் தவிர்த்துவிட்டாள். நானே தனியாகச் செல்வதன் அலைக்கழிப்புக்களுடன் 26 அன்று காலை திருச்சியில் இருந்து கிளம்பி வந்து சேர்ந்தேன்.
26 அன்று திருச்சி வரை பேருந்தில் வந்தேன். அருண்மொழி வந்தால் காரில் வரலாம் என்றிருந்தேன். அவள் வராதபோது எதற்குச் செலவு என அரசுப்பேருந்து. மையத்தமிழகத்தின் வெயில் எத்தனை கொடூரமானது என அறிந்தேன். முதல்முறையாக பஸ்ஸின் ஜன்னல்களை காற்றுக்கு அஞ்சி மூடிவைத்தேன். நேரடியாக அனல்வாய் முன் அமர்வதுபோலிருந்தது. திருச்சி ஓட்டலில் தங்கி மறுநாள் காலை 930க்கு கொலாலம்பூர் விமானம்.
திருச்சி விமானநிலையத்தைப்போல மோசமாகப் பராமரிக்கப்படும் விமானநிலையம் பிறிதொன்று உலகில் எங்கேனும் சாத்தியமா என்றே சந்தேகம்தான். கழிப்பறைகள் கழுவப்பட்டு பல நாட்களாகிவிட்டிருந்தன. பலவற்றில் நீர் இல்லை. தரையும் கோப்பைகளும் உடைந்து நாற்றம் கொப்பளித்தது. ஒரு சர்வதேசவிமானநிலையத்தின் கழிப்பறைகள் கழுவப்படுவதில்லை என்பதை சொன்னால்கூட உலகம் நம்பாது. ஏடிஎம்களில் பணம் இல்லை. எந்த ஒழுங்கும் இல்லாமல் மக்கள் கூச்சலிட்டு முண்டியடித்து ரகளைசெய்துகொண்டிருந்தார்கள்.
நான் மலையாளத்தில் ஆண்டுக்கு ஒரு கதை அல்லது கட்டுரைதான் எழுதுவது. அது பாஷாபோஷிணி மாத இதழின் ஆண்டுமலரில் மட்டும். நூறுநாற்காலிகளுக்குப்பின் மூன்று வருடங்களாக எழுதவில்லை. ஆகவே கேட்டுக்கொண்டே இருந்தார்கள். யானை டாக்டரை மலையாளத்தில் எழுதிவிடலாம் என நினைத்து ஆரம்பித்தேன். மலையாளம் டைப் செய்ய வராது. பத்து பக்கத்துக்குமேல் கையால் தொடர்ச்சியாக எழுதவும் முடியவில்லை. மொழியாக்கம் முடிய 5 நாட்கள் ஆகியது. நடுவே அருண்மொழியின் உடல்நலப்பிரச்சினை.
25 ஆம் தேதி வெண்முரசு வலையேற்றுவதாக அறிவித்திருந்தேன். 24 மாலைதான் யானைடாக்டர் முடிந்து தபாலில் அனுப்பினேன். அதன்பின் இரவில் அமர்ந்து முதல் அத்தியாயத்தை எழுதி வலையேற்றினேன். ஓர் ஐந்துநாள் அவகாசம் கோரலாமா என்று தோன்றாமலில்லை. ஆனால் நான் அவகாசம் கோருவது காலத்துடன். அணுகிவரும் இறப்புடன். அது கொஞ்சம் குரூரமான யஜமானன். வேண்டாம் ,பார்ப்போம் என முடிவுசெய்தேன். இதுவரை அறிவித்தவை தவறவில்லை, ஆகவே இனியும் தவற வாய்ப்பில்லை என ஒரு தெனாவெட்டுதான்.
26 காலை இரண்டாம் அத்தியாயத்தை எழுதிவிட்டு கிளம்பினேன்.திருச்சி ஓட்டலில் அடுத்த அத்தியாயத்தை எழுதி விமானநிலையத்தில் காத்திருக்கையில் முடித்தேன். விமானம் கிளம்பவிருக்கிறது என பணிப்பெண் சொல்லிக்கொண்டே இருக்கையில் எழுதிக்கொண்டிருந்தேன். கடைசி வரிகள். தருமனிடம் பாஞ்சாலி சொல்லும் வரிகள். “சார் பிளீஸ்” என்றாள் பணிப்பெண். முடிந்துவிட்டது என்றபின் ஓடி உள்ளே சென்றேன். “என்ன சார் எழுதினீங்க?” என்றாள். புன்னகைசெய்தேன்.
பொதுவாக அவசரத்தில் பதற்றத்தில் எழுதும்போதெல்லாம் வியப்பூட்டுமளவுக்குத் துல்லியமாக அமைந்துவிடுகின்றது. அதற்குக் காரணம் அவசரம் நம் உள்ளத்தைக் கூர்மையாக்குகிறது என்பதுதான். போர்க்களத்தில் கொள்ளும் குவியம் அது. சாவகாசமாக வீட்டிலிருக்கையில்தான் ஆயிரம் திசைதிருப்பல்கள். சமவெளியில் நதி விரிகிறது. மலைச்சரிவில் அது பெருகிப்பொழியும் கூர்மை.
விமானத்தில் அடுத்த அத்தியாயம். அன்றிரவே அதை முடித்தேன். பருவமழையைத் துரத்துவது கேரளத்தின் முக்கியமான சுற்றுலாப்பொழுதுபோக்கு. இதுவும் அப்படித்தான்.