அறத்தால் கண்காணிக்கப்படுதல்

one-world-one-future

அன்புடன் ஆசிரியருக்கு

“ஆனால் ஏனோ விலக்க முடியாத ஒரு நம்பிக்கை உணர்வை நான் அடைகிறேன். இது ஒரு வகையான கடைசித் துடிப்பு என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்படுகிறது. உருவாகி வந்து கொண்டிருக்கும் புத்தம்புது உலகம் ஒன்றை எதிர்கொள்ளும் போது அந்தக் கடைசித் தருணத்தில் உருவாகும் ஒரு திமிறல் மட்டும் தான் இது.”

எப்படி சொல்வதெனத் தெரியவில்லை. என்னுள் இருக்கும் ஒரு பைத்தியக்காரன் அல்லது optimist எப்போதும் எக்களித்துக் கூவும் இவ்வார்த்தைகளை உங்களிடமிருந்து கேட்பதில் ஏற்பட்டும் மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் பயணித்துக் கொண்டிருக்கும் இந்தப் பேருந்தில் இருந்து சட்டையை கழற்றி எறிந்து விட்டு ஓடவேண்டும் என எண்ண வைக்கிறது.

சாதியரீதியான ஒருங்கிணைவுகளை கடந்த ஐந்து வருடங்களாக நான் இப்படித்தான் காண்கிறேன். அவற்றை நான் ஆக்கப்பூர்வமானதாகவே கண்டேன். நிலங்களாக உள்ளூறிய பெருமிதங்களாக தங்களை மூடிக் கொண்டிருந்த சாதிகள் பொதுவெளியில் வெளிப்பட்டு தங்கள் தகுதியை எல்லையை போதாமையை உணர்வதற்கு சரியான களம் ஒருங்கி இருப்பதாகவே உணர்ந்தேன். ஆனால் அது சோர்வையும் நம்பிக்கை இன்மையையும் அளிப்பதை தவிர்க்க முடியவில்லை. ஆட்டு ரத்தத்தில் பெருக்கல் குறியிடப்பட்ட கதவுகளின் உள்ளடைந்து அமர்ந்திருக்கும் மோசேயின் யூதன் போல எனக்கு நானே சொல்லிக் கொண்டிருந்தேன் “இந்த ஒரு இரவு தான்.”

சோ.தர்மனின் சூல் வாசித்த போது ஒருவேளை விடியல் வந்துவிட்டதோ என்று கூட தோன்றிவிட்டது. அந்த நாவலின் மொழியில் இருக்கும் கம்பீரமும் கரிசனமும் சொல்கிறது நம்முடைய நேற்றிலிருந்து தக்கவைக்க வேண்டியவற்றையும் தள்ளிவைக்க வேண்டியவற்றையும்.

அந்த விடியல் ரெட்டிய கெடுத்த வெள்ளியாகக் கூட இருந்துவிட்டுப் போகட்டும். விடிந்து தானே ஆகவேண்டும்.

“பாதுகாப்பான” ஜீவிதத்தால் உண்மையான பிரச்சினைகளை காணும் திராணி இற்றுப் போய்விட்டதோ என்ற எண்ணம் கூட எனக்கிருந்தது. உங்களை வாசிக்கத் தொடங்கிய நாட்களிலேயே நான் நாளைக்கான மனிதன் என்பதை உணர்ந்து கொண்டேன். மிக முதிர்ந்த பெரிய அரச மரத்தின் வேரடியில் அமரும் போது ஏற்படும் விளக்க முடியாத நம்பிக்கையை மன எழுச்சியை உங்கள் எழுத்துக்கள் எனக்களித்தன. கூடவே உயரத்தில் அசையும் இலைகளின் சலசலப்பும் சூழலின் குளிர்ச்சியும். என் குற்றவுணர்வுகள் நீங்கின. அறவுணர்வு ஊசியால் தொட்டெடுக்ககூடியதாக மட்டுமே இருக்க முடியும் என உணர்ந்தேன்.

திரௌபதியின் கோபத்தையும் கண்ணகியின் சாபத்தையும் நம் மரபு அறமென்றே நினைவில் கொண்டிருக்கிறது. நம்முடைய நேற்றிலிருந்து நான் எடுத்துக் கொள்ள விழைவது இதையே. வியாசனிலிருந்து வள்ளுவனிலிருந்து காந்தி வரை நிகழ்ந்த நீண்ட அலைகழிப்புகளையே. அதன் வழியே அவர்கள் சென்றடைந்த முடிவுகளை. கண்டடைந்த மெய்மைகளை.

நீர்க்கோலத்தின் இன்றைய அத்தியாயத்தில் கூட தருமன் சொல்வதாக அவ்வரியே வருகிறது.

காடேகலென்பது தவம். நாம் அறத்தால் கண்காணிக்கப்படுகிறோம்

மதங்களால் அல்ல அரசாங்களால் அல்ல குடும்பத்தால் அல்ல அறத்தால் கண்காணிக்கப்படுகிறோம். அது நம்மை நாமே கண்காணித்துக் கொள்வதன்றி வேறென்ன?

அன்புடனும் ஒரு வித விளக்க முடியாத நம்பிக்கையுடனும்

சுரேஷ் பிரதீப்

***

முந்தைய கட்டுரைஇருகுரல்கள்
அடுத்த கட்டுரைகுரங்குத்தொடுகையும் மின்மினி ஒளியும்