டோரா

1

அண்ணன் வீட்டில் ஒரு அன்பின் ஜீவன் டோரா!!!

முரட்டுத்தனமான முகமும், மிரட்டலான உறுமலுமாகத்தான் முதலில் அறிமுகமாவாள்… அண்ணன் ஜெயமோகன் வீட்டு அன்பு ஜீவன் டோரா. அண்ணன் நமக்கு அவளை அறிமுகப்படுத்திவைத்து, அவளுக்கு நம்மை பிடித்துவிட்டது என்றால் பிறகு நாக்கினாலும், தனது கைகளெனும் கால்களாலும் நம்மை பிரியப்படுத்திவிடுவாள். குதிப்பும், அன்பிழையோடும் இளைப்பும், நுகர்வெனும் உரிமையென நம்மைத் தனி உடல்மொழியால் உற்சாகப்படுத்திவிடுவாள். மிருக ஸ்பரிசமெனும் அச்சநிலை கடக்கும் டோராவினுடனான தருணங்கள் மிகவும் இனிமையானவை.

3

அண்ணன் வீட்டின் முதல் கேட்டிற்கும் – பிரதான கதவிற்கும் இடைப்பட்ட நீளமான சிறிய முன்வெளியில்தான் நானும், எழுத்தாளர் அண்ணன் ஜோ டி குருஸ்ம் முதன் முதலில் டோராவைச் சந்திக்கிறோம். போர்ன்விட்டா நிற பார்டரில் ஒரு கரும்பட்டைப் போல் அவளது மேனி. கழுத்தைச் சுற்றி ஒரு சங்கிலிப்பட்டை. நாசியும் கூர்முகமும் வாயுடன் இணையும் இடத்தில் போர்ன்விட்டா குடித்து வழிந்ததுபோல்… கணுக்கால் கீழ் பாதங்களும் அதே நிற பார்டர்தான். பழகியவுடன் அண்ணன் ஜோ டி குருஸ்ன் மடியினில் விழுந்து புரண்டுவிட்டாள் டோரா… அது , ஆழி சூழ் உலகினையே டோரா தன் அன்பெனும் நாவினால் அணைத்த தருணம்.

2

நாங்கள் சென்றிருந்த சமயம் முற்பகல் வெயில் முதிர ஆரம்பிக்கும் நேரம்… டோராவின் மேனி வெயில்வாங்கி மற்றுமொரு நிறப்பிரிகையாய் மின்னியது. முன்வெளியில் பூத்திருந்த செம்பருத்தி செடி தொடங்கி, கொட்டிக் கிடக்கும் தேங்காய்களுக்கிடையாய் ஓடித் துள்ளித் திரிந்து, இடையிடையே எஜமானனைத் தொட்டுவிட்டு எங்களைத் தொடர்கிறாள் டோரா… அண்ணன் ஜோ டி குருஸ் இப்பொழுது முழுமையாய் அவளுடன், சாவகாசமாய் அமர்ந்து பேச ஆரம்பிக்கிறார்.

 

4

நீள முன்வெளியின் இடக்கைப் பக்கம் திரும்பி , அண்ணனின் கார் நிற்கும் பின் பகுதியில் இருக்கிறது டோராவின் ஓய்விடம். மதிய உணவிற்கு நாங்கள் எல்லோரும் வெளியே செல்ல இருப்பதால் , அண்ணன் இப்பொழுது  டோராவை அவள் அறைக்குக் கூட்டிச் செல்கிறார் . கொஞ்சம் சண்டித்தனமும், செல்லச் சேட்டையும் பண்ணிக் கொண்டேதான் டோரா செல்கிறாள். நானும் பின்னே செல்கின்றேன் , எகிறி வந்து நாக்கினால் என் புறங்கையில் ஒரு நேச முத்தமிடுகிறாள். அண்ணன் ஜோ டி குருஸ்ஸுகு , கத்தி…  ஒரு அன்பின் பை பை சொல்கிறாள்.

5

டோராவின் கழுத்தினைத் தடவிவிட்டபடியே அறைக்குள் அவளை அனுப்பிவைத்து சிறிய கதவினைச் சாத்துகிறார் அண்ணன் ஜெயமோகன் . ஞான உருட்டலுடன் , தனது கரும் பளிங்குக் கண்களால் எங்களைப் பார்க்கிறாள் டோரா… சென்ற ஆண்டு நவம்பரில் அவளைச் சந்தித்தது, கிட்டத்தட்ட அரைவருடங்களுக்கு மேலாகியும் , இன்று வரை – இப்படி எழுதும் வரை , எனது ஞாபகங்களுக்குள் அவள் கலையாமல் இருப்பது அவளின் அந்தப் பார்வை. உலகில் அசையும் எந்த ஜீவன் மீதும் டோராவைப் பார்த்தபின் மேலும் அன்பேறும்…

டோரா… ஹரிதம் மேவும் பைரவி.

அன்புடன்,

நெப்போலியன்

சிங்கப்பூர்.

***

 

 

முந்தைய கட்டுரைஉச்சவழு ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைபாபநாசம் ,கமல் பேட்டி