கனவுகளை காலத்துடன் தொடர்புறுத்த முடிவதில்லை. காலங்கள் அறுந்தவுடன் வான் வெளியில் மிதக்கும் உருவெளிப் பார்வையில் வீச்சமடைவதைப் போலத்தான் கனவுகளை நினைக்கிறேன். நிச்சயமாகத் திட்டவட்டமான எந்த உருவமும் உருவும் அதில் எனக்கு இருப்பதில்லை. அவைகள் எதையோ சுட்டுகின்றன. எங்கோ வெட்டும் மின்னல் வெளிச்சத்தில் கண நேரத் தீற்றல்களில் தோன்றி மறைகின்றன.வெட்டி வெட்டி காட்சிகள் மேலும் கீழுமாய் நகர்ந்து மோதி பெரிதளவில் நினைவிலும் நிற்காமல் கரைந்து மறக்கின்றன. ஆனால் எல்லாக் கனவுகளிலும் இப்படித்தானா?
என் இறந்து போன மாமனின் உருவம் வேறு வேறுத் தோற்றங்களில் கனவில் வந்திருக்கின்றன. பயந்து அழுதுள்ளேன். நெகிழ்ந்து புல்லரித்து புரண்டுள்ளேன். திரும்ப அவர் வரும்பொழுது அவரைப்போல அல்லாது இருந்தும் அந்த இருப்பு மிக அருகில் நாளேல்லாம் புடதிக்கு பின் குத்திட்டது போல பலமுறை நிகழ்ந்துள்ளது. “உச்சவழு” அப்படி ஒரு கனவாகத்தான் எனக்கு தோன்றியது. உங்களின் கனவுலகில் சகபயணியாக மாட்டிக் கொள்வதைப்போல. காலம் சுத்தமாக நகராத ஒரு உலகில் வலுக்கட்டாயமாய் திணிந்து கொள்வதைப்போல. வீட்டின் நிழல் ஒரு கனவாய் வெளிக்கிறது அந்த நிலா முற்றத்தில். காடே ஒரு கனவுலகம் தான். நமது திட்டமிடல்கள், முன்னெச்சரிக்கைகள், பார்வை, புலன் தாண்டி காட்டினுள் நாம் காடாய் நிற்கும் அனுபவம். காட்டிற்குள் காடு மட்டுமே. மரம், செடி, கொடி, மலை, அருவி, மிருகங்கள் எல்லாம் தனித்தனி அலகுகளல்ல. காட்டின் ஒட்டு மொத்த உடலின் உறுப்புகளாய், தன்னைத் தானே உண்டு வளர்ந்து செழிக்கிறது. காட்டின் தன்மையே அங்கு வாழும் அனைத்துக்கும். அதன் அரசன் ஆனை. அதனாலேயே ஆனைமலை ஆரம்பித்தவுடன் வேளி மலையின் யானைக்கண்களை அடைந்தேன். கால் மடக்கி மத்தகம் தாழ்த்தி அமர்ந்திருக்கும் யானைக்கூட்டங்களின் உருவத்தைத்தான் எப்பொழுதும் பார்க்கிறேன்.
அந்த மலைக்கூட்டத்தில் அவன் அந்த பெரிய காடு காணும் கனவா? இல்லை அவனது கனவின் நெழிப்பில் அலைந்தாடும் பெரிய யானை அந்தக் காடா? மரணத்தைத் தேடித்தான் அங்கு அவன் வருகிறானா? எனக்கு அப்படித் தோன்றவில்லை. காட்டினுள் அமிழத் துடிக்கும் கனவு ஒன்றின் கொக்கியில் அகப்பட்டுக் கொள்கிறானா அவன்? அம்மையின் கடைசிச் சொற்களைத் தேடித்துழாவிக் கொண்டிருந்தானா? ஒரு உச்சத்தில் கனவிற்குள் தொலைந்து அந்த எண்ணங்களை மீட்டெடுக்கத் துணியும் சாகசம் தான் இந்த உச்சவழுவிற்கு இழுத்துச் சென்றதா? அம்மையை இழப்பது ஒட்டுமொத்தமான தொலைதல் தான். வாழ்க்கையின் எல்லா அர்த்தப்படுதல்களும் பாதைகளைத் தவறவிட்டு முட்டுச்சந்தில் ஸ்தம்பிப்பதைப் போல. அங்கு இனி பாதைகள் இல்லை. பள்ளத்தாக்குகள் தான். எதிரொலிகளின் நிசப்தத்தில் திரும்ப திரும்ப சிதறடித்து அவனை விழுங்க ஆரம்பிக்கின்றன.உடைந்து நொறுங்குதல் ஒன்றே சாத்தியமான புள்ளி. அதற்காகவே அவன் காட்டைத் தேர்ந்தெடுத்தானா?
கட்டிலின் செல் பூச்சிகளுக்கு மேல் படுப்பது, எண்ணங்களினால், நினைவுகளினால், சொற்களினால், ஏக்கத்தினால், காலத்தினால், மயக்கத்தினால் ஆன பெரு வெளிப்பூச்சிகளுக்கு மேல் அழுந்திப் படுப்பது. கேசன் கேசியை அமிழ்த்தி பிரபஞ்சம் உண்டாக்கும் கனவினில் ஆழ்ந்த ஆதி கேசவனைப் போல. காட்டிற்கு மாலையே இல்லை. பகல் அப்படியே இரவாகிக் குளிர்கிறது. மூங்கில்களின் காட்டில் அதை அவன் உணர்கிறான். பனிக்கொம்புகள் சூழ்ந்த மத்தக இருளை. ஆம். இருளைத் தேடியே வந்தான். இருளாய் மாறிவிட. அப்படியே காலத்தில் இல்லாமலாகி விடும் இரவு. காட்டின் மலைகளின் இருள்.இன்மையே இருப்பான இருள். அதனாலேயே திரும்ப திரும்ப அவன் கருப்பினை யானையை காண்கிறான் போல.
யானையை நேரடியாக காண்பது முற்றிலும் முடியாத காரியம். நம் பார்வையில் அகப்படாத ஒன்று அவைகளில் பொதிந்துள்ளது.திகைத்து ஸ்தம்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இருளைப் போலவே. அதன் கண்களை நான் பார்க்க முயற்சித்ததில்லை. அதன் கூர்மை, பரிச்சயம், என்னை தகர்ப்பதைப் போல உணர்கிறேன். அதன் அசைவு காயல் தோணி போல அலைகளுக்கேற்றவாறு அசைந்து கொடுக்கும். அந்த மத்தகத்தை தொடும் போது மலைகளையே உணர்கிறேன். அசைவே இல்லாத இருப்பு. கதிகலங்க வைக்கும் மௌனம் உறையும் முகடுகளின் உறைப்பு. அந்த மௌனம் கலையாத நிசப்தத்தையே உணர்கிறான் அவனும்.
முற்றிலும் கரைந்து ஒன்றுமில்லாமலாகி விடத் துணியும் தாபம். காட்டில் தவறுவது காலத்தை நழுவ விடுவதுதானே. பின் கனவுகளின் சஞ்சரிப்பில் விசித்திரங்களின் உருக்களில் பதற்றமடைந்து நகர்ந்து மறைவதுதான் சாத்தியம்.
அவனும் அதையே உணர்கிறானா? பௌர்ணமியின் மயக்கில் வளைந்த கொம்புகளுட்ன் மத்தகம் புடைக்க இருளின் தேவன் அணைகையில், பெரும் பாழில் அமிழ்ந்துக் கரைவதை உணர்கிறேன் கனவிலிருந்து எழத் தோன்றவில்லை.
நன்றி,
தங்கள் உண்மையுள்ள,
நந்தகுமார்
****
சகரியாவின் ‘இதுதான் என்பெயர்’- நந்த குமார்
ஓர் இலக்கு, ஒரு கனவு -பின் தொடரும் நிழலின் குரல் – நந்த குமார்