மலம் ஒரு கடிதம்

mask
மலம்
மலம்- கடிதம்
மலம் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ.,

ஆசாரமும் சுத்தமும் இணைக்கப்படும்போது ஆசாரம் காக்காதோர் அசுத்தமானவர்கள் என்ற எண்ணம் சாதாரணமாக வந்துவிடுகிறது. இது மிக ஆபத்தான போக்கு, இதை சுட்டிக்காட்டியிருந்தீர்கள். இதன் உளவியலை ஆராய்வது முக்கியமென்று படுகிறது.

  1. சுத்த-சுகாதாரத்தையும் ஆசாரத்தையும் முடித்து போடுவது சிறுவயதிலேயே தொடங்கி விடுகிறது என்பது தான் உண்மை. தீவிர ஆசாரவாத குடும்பங்களில் சிறு பிள்ளைகளுக்கு அசைவ உணவு உண்ணத்தகாதது, உண்ணக்கூடாதது என்று புகுத்தப்படுகிறது. அசைவம் உண்பது அசுத்தம் என்று சொல்லித்தரப்படுகிறது. காலப்போக்கில், இயற்கையாகவே நமக்கு அசூயை உள்ள பொருட்கள் – பீ, மலம், புழுக்கள், அழுகல், பூஞ்சை – போன்றவை போல இதுவும் ஒவ்வாமை உணர்வை அளிக்கத் தொடங்குகிறது. அசைவ உணவகத்தை கடந்தாலோ, தொலைக்காட்சியில் கண்டாலோ, ‘உவாக்’ என்று வாந்தி ஒலிகள் செய்து முகம் சுளிக்கும் பெற்றோர்கள் இருக்கும் வரை இது தொடரும். இந்த புகுத்தலுக்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, அப்பெற்றோர்களுக்கு அந்த அருவருப்பு உள்ளது, அதையே பிள்ளைகளுக்குச் சொல்லித்தருகிறார்கள். இரண்டாவது, எங்கு பிள்ளைகள் அசைவ உணவை உண்ணத் தொடங்கிவிடுவார்களோ என்ற பயம்.

இந்த அடிப்படை உணர்வை என்னுள்ளேயே நான் கண்டுகொண்டிருக்கிறேன். வெளிநாட்டில் வசித்தாலும், சைவ உணவு அவ்வளவாக கிடைக்காத ஊர்களில் பயணம் செய்தாலும், நான் அசைவம் உண்பதில்லை. சூழியல் காரணங்களுக்காக அசைவம் தவிர்க்கும் நண்பர்கள் “நீ ஏன் அசைவம் உண்பதில்லை” என்று கேள்வி கேட்கும்போது, என்னால் இதுவரை கூற முடிந்த பதில், மரபடிப்படையில் நான் சைவம் உண்ணும் குடும்பத்தில் வளர்க்கப்பட்டேன், அசைவம் உண்ணத் தோன்றவில்லை என்பது மட்டுமே. ஆனால் அதுவும் முழு உண்மை அல்ல.

தினந்தோறும் அசைவம் உண்ணும் நபர்களுடன் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுகிறேன். அசைவம் சமைக்கும் வாசம் பழகிவிட்டது. ஆனால் ஒரு துண்டு ஊனை என்னால் வாயில் போட முடியாது என்று தான் நினைக்கிறேன். அந்த எண்ணமே குமட்டலாக இருக்கிறது. எவ்வளவு கற்பனைத்திறன் இருந்தாலும், எவ்வளவு நபர்களுடன் பழகினாலும், சின்ன அருவருப்பு இல்லாமல் அதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. அசைவம் உண்ணத்தகாத ஒன்று என்று என் மனதில் புகுந்துவிட்டது. அது உயிருடன் இருந்த ஒன்று என்பதால் மட்டும் அல்ல என்று நினைக்கிறேன். அது ஆசார சுத்தம் சார்ந்த எண்ணம். சுத்தத்துடன் பிணைக்கப்பட்டமையால் வலுவான, உடல் சார்ந்த எதிர்வினையாக மாறியிருக்கிறது. வாழ்க்கை முழுவதும் நான் அசைவம் உண்ணாமலேயே இருக்கலாம். ஆனால் அந்த உணர்வை ஒதுக்கலாகாது. அந்த உணர்வுடன் தான் என்னுடைய போராட்டம்.

இந்த உணர்வு தான் வெறுப்பின் அடிநாதம் என்று தோன்றுகிறது. இவ்வுணர்வு உள்ள சிறு பிள்ளைகள் கூட அசைவம் உண்ணும் தங்கள் நண்பர்களை அசுத்தமானவர்கள், கீழானவர்கள் என்று பேசி கேட்டிருக்கிறேன். ஊன் உண்பது மத, இன ஆச்சாரமாகவே இருக்கட்டும். ஆனால் சுத்தத்தோடு சமன்படுத்தி, உளவியல் ரீதியாக வெறுப்பு வளர்க்கும்போது அது வேறொரு பிசாசாக உருக்கொள்கிறது. மாட்டிறைச்சியோ பன்றி இறைச்சியோ உண்போரை கீழானவர்கள் என்று நம்பும் வெறுப்பின் அடிநாத உளவியலும் இது.

  1. ஆசாரவாத கருத்துக்கள் ஒரு வித மேட்டிமைத்தனமாகவே இங்கு புழங்குகின்றன. தங்களை மேட்டுக்குடிகளாக காட்டிக்கொள்ள அதீத ஆச்சாரத்தில் ஈடுபடும் நபர்கள் நம்மை சுற்றி புழங்குவதை அறிவோம். நீங்கள் சுட்டிக்காட்டிய பத்தியின் குரலை அந்தச் சாராரின் குரலாகவே பார்க்கிறேன்.

சென்னையில் ஒரு பிரபல பொறியியற் கல்லூரியில் படித்த என் தோழி சமீபத்தில் சொன்னது என்னை கலங்க வைத்தது – இது கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளின் நடைமுறை. அக்கல்லூரியில் படிக்கும் சென்னையைச் சேர்ந்த மாணவிகள் சிலர், தென் மாவட்டங்களில் இருந்து வரும் மாணவிகளை, ‘சூ-குட்டிக்கள்’ என்று தங்களுக்குள் அழைக்கும் வழக்கம் இருப்பதாக கூறுகிறாள். அப்படியென்றால் சூத்திர குட்டிகளாம். சிலர் அவர்கள் பயன்படுத்திய கழிப்பறைகளை உபயோகிக்கத் தயங்குவார்கள் என்கிறாள்.

இந்திய அரசியல் சாசனத்தாலேயே மண்டையில் போடவேண்டும் போல இருக்கிறது.

இவ்வாறு பெயர் சூட்டும் மாணவிகள் யாரென்றால், உயர்க்குடிகளை சேர்ந்த, வசதி படைத்த, கல்வி வாய்ப்புகள் கிடைத்த பெண்கள். எவ்வளவு உயர்குடி ஆங்கிலம் பேசினாலும் சாதிய வசைகள் மட்டும் தமிழில் உதிர்வது தான் விந்தை. எங்கிருந்து கற்றிருப்பார்கள்?

இவ்வகை மேட்டிமை மனநிலைகள் வெறுப்பையும் சோர்வையும் மட்டுமே உண்டாக்குகின்றன. இதை கண்ட பின் இவர்களின் படிப்போ திறமைகளோ கண்ணுக்குத் தெரிவதில்லை. அசிங்கமான மனிதர்களாகத் தெரிய ஆரம்பிக்கிறார்கள். வயதில் முதிர்ந்தவர்கள் என்றால் சரி தொலையுது கிழம் என்று விட்டுவிடலாம். என்வயதை ஒத்தவர்கள். கல்லூரி, பள்ளி மாணவர்கள். என்ன சொல்ல முடியும்? தஞ்சாவூர் ஜில்லாவில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த இவர்களின் முன்னோர்களுக்கும் இவர்களுக்கும் ஒரே வேறுபாடு, இவர்கள் தங்கள் காழ்ப்பை சாதுர்யமாக மறைத்து வாழ கற்றுக்கொண்டு விட்டார்கள், அவ்வளவுதான். சென்னையில் பிராமணர்கள் என்றால் அந்தந்த வட்டாரங்களில் அந்தந்த இடைநிலை சாதிகளுக்கும் இது பொருந்தும். பலர் தங்களது சமூக வழக்கங்களில் இல்லாத ஆசாரங்களை எல்லாம் பின்பற்ற தொடங்கியதையும் பார்க்கிறேன்.

இதெல்லாம் எல்லா இடங்களிலும் நடக்கவில்லையே, எல்லோரும் இப்படி நினைப்பதில்லையே, இப்போது எவ்வளவோ மாறிவிட்டது என்று சொல்லலாம். ஆனால் எண்ணத்தின் தளத்தில், உளவியல் ரீதியாக, இந்த வேறுபாடுகள் நமக்குள் இருப்பதாகவே எனக்குப்படுகிறது. இந்த போக்கை நம் மனதை கூறுபோட்டுத் தட்டிக்கேட்டே ஆக வேண்டும்.

உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் இந்த சுமையை கூட எடுத்துக்கொண்டு செல்கிறோம். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த எனக்குத் தெரிந்த பெண் ஒருத்தி, அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருக்கும் அவளது பெற்றோரால், மாதவிடாய் நாட்களில் வீட்டில் ஒதுக்கிவைக்கப்படுகிறாள். வெளிநாடுகளில் இந்தியர்கள் கூடும் கூட்டங்கள் பல ஏதோ வகையில் சாதி, இன மேட்டிமையை முன்னிறுத்திப்பேசி தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கூட்டங்களாகவே இருக்கின்றன. அய்யோ பாவம் பிராமணர்கள் என்பார்கள். கறுப்பர்களை அசுத்தமானவர்கள் என்று தீவிரமாக நம்புவார்கள். அதை ‘சுகாதாரம் பேணுதல்’ என்று கூறுவது தங்களையே ஏமாற்றிக்கொள்ளும் செயல்.

நாமம், திருநீர் போன்ற தனிநபர் நெறிகளை பற்றி சொல்லியிருந்தீர்கள். எனக்கு அதில் ஐயம் உள்ளது. அவை குழும அடையாளங்களாக மாறுகின்றன என்று நினைக்கிறேன். அதே குழுமத்தைச் சேர்ந்தவர்களை கண்டடைய, ஒன்று கூட அது வழிவகுக்கிறது. “நல்ல _____ “-இன் – கோட்டை எந்த இனத்தின் பெயரை கொண்டும் நிரப்பிக்கொள்ளலாம் – அடையாளமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பலதரப்பட்ட சமூகங்களின் மரபார்ந்த குடும்ப வழக்கங்களில், சடங்குகளில் நிறைய ஈடுபாடு உள்ளது எனக்கு. ஆனால் ஊரிலிருந்தே, பெயரிலிருந்தே, பேச்சிலிருந்தே, பெண்களின் தாலியில், நகையிலிருந்தே சாதியை கண்டடையும் சமூகம் நம் சமூகம். இங்கு இது தேவைதானா என்ற ஐயம் உள்ளது.

தன்னுடைய தவத்தின் நினைவாக ஒன்றை தொடர்ந்து அணிந்து அதை பின்தொடர்வதன் மகத்துவம் புரிகிறது. ஆனால் பலரும் தங்கள் விழைவையோ மனதிடத்தையோ நினைவூட்ட இவ்வடையாளங்களை பயன்படுத்துவதில்லை என்பதும் உண்மை. அந்த அடையாளத்துக்காக, தன்னை ‘இப்படிப்பட்டவர்’ என்று காட்டிக்கொள்ள அப்படி அணிந்துகொள்பவர்களும் உண்டு. அதில் ஒரு அந்தஸ்து குறிப்பு பொதிந்துள்ளது. ஆகவே இது பொதுவில் தேவையா என்ற கேள்வி எழுகிறது.

அதே நேரத்தில் பிரான்சு போல ‘மதசார்பற்ற நாடு’ என்ற பெயரில் அடையாளங்கள் அற்று பொதுவில் புழங்கவேண்டிய நிர்பந்தத்தோடு நாம் வாழ்வதும் சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை.

வெளியில் உண்ணாமல் இருப்பது போன்ற நெறிகள் தனி நபர் நெறிகளாக இருக்கலாம். ஆனால் பல நேரங்களில் அதற்குப் பின்னாலும் ‘வெளி உணவு அசுத்தமானது’ என்ற எண்ணம் தான் உள்ளது. ஒரு வித “கலப்பு பயம்” இது என்று கொள்ளலாம். ‘என் இனத்தவர் சமைத்த உணவை மட்டுமே உண்பேன், அதனால் வெளியில் உண்ண மாட்டேன்’ என்று விதியிடும் நபர்களை அறிவேன். அதை நான் ஒருநாளும் அவர்களுடைய தனிப்பட்ட நெறி என்று ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

சுசித்ரா

***

முந்தைய கட்டுரைதாமஸ் கிங் உரைகள்
அடுத்த கட்டுரைமழையைத்துரத்துதல்