கிளம்புதலும் திரும்புதலும் -கடலூர் சீனு’
‘கிளம்புதல் -ஒரு கடிதம்
அம்மாக்களின் நினைவுகள் – எம்.ரிஷான் ஷெரீப்
வீட்டை விட்டு ஓடும் ஜீவிதம்- எம்.ரிஷான் ஷெரீப்
அன்பின் சீனுவிற்கு,
ஒவ்வொருவருக்கெனவும் எழுதப்பட்டிருக்கும் ஜீவிதம் இப்படித்தான் இல்லையா? இதைத் தாண்டி எதனை வாழ்ந்து விடப் போகிறோம்?
அப்பாவின் மரணத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த விடயத்தில் எமதிருவருக்குமிடையில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. நோய்வாய்ப்பட்டிருந்த எனது தந்தையின் மரணமும், தாயின் மடியில் தலை சாய்த்தபடியே நிகழ்ந்தது. அப்போது சிறு வயது எனக்கு. மரணத்தையும், இழப்பையும் புரிந்து கொள்ளக் கூடிய வயதாகவும் இருக்கவில்லை. அப்பா நலமாக இருந்த காலத்தில் என்னுடனான நினைவுகள் தெளிவற்ற கண்ணாடியின் பிம்பங்கள் போலவே நினைவிருக்கின்றன. அப்பாவின் முகமும் அவ்வாறுதான். இந் நிலையில் அப்பாவோ அம்மாவோ இருந்தும், இல்லாததைப் போல, அவர்களைக் கவனிக்காமல் வாழ்பவர்களைப் பார்த்து ஒரு வித ஆற்றாமையும், ஏக்கமும் எழுகிறது. இதை என்னால் எளிதில் கடந்து செல்ல முடியவில்லை. கடந்து செல்ல முடியுமானால்தான் எப்போதுமே குதூகலமாக, பொறுப்புக்களேதுமற்ற பயணியைப் போல, காற்றில் உதிர்ந்தலையும் அப்பூப்பன் தாடி பூப் போல வாழ்ந்து விட முடியுமே… அல்லவா?
எம்மிலிருந்தே உதிக்கிறது பிறரதும் ஜீவிதம். அடுத்தவர் வாழ்க்கையையும் நம்மிலிருந்தேதான் காண்கிறோம். அதுதான் பிரச்சினை. ‘ஒருவரது வாழ்க்கையைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அவரது பாதங்களில் நின்று அதனைப் பார்’ எனச் சொல்லும் ஒரு நாட்டுப் பழமொழி இருக்கிறது. இக் காலத்தில் அனைவரும் எளிதில் தவிர்த்து விடும் விடயமது. வசை பாடுவதற்காக வேண்டி மட்டுமே அடுத்தவர் வாழ்க்கையை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ரமணரும், விவேகானந்தரும், புத்தரும் கூட இந்தச் சூழ்நிலைகளை எளிதில் கடந்திருக்கச் சாத்தியமில்லை எனத் தோன்றுகிறது.
அனைவரையும் நேசிப்போம்.. அதுதானே இறுதியில் எஞ்சப் போகிறது. எப்பொழுதும் கூடவே இருப்பவர்களை அதிகளவில் நேசிப்போம். அவர்கள்தானே நம் இறுதிவரை வரப் போகிறார்கள். நேசத்தின் புள்ளியில்தான் உலகமே இயங்குகிறது. பரப்பப்பட வேண்டிய அதன் மகரந்தங்கள் நீங்களும், நானும் முடிவிலிகளாக.
(எனது அன்பு சீனுவுக்கு ஒரு சிறு குறிப்பு – ரியாஸ்…அழகான பெயர்தான். ஆனால் அது எனது பெயரல்ல.. எனது பெயர் எம்.ரிஷான் ஷெரீப்.. சிநேகத்துடன் ரிஷான் என்று கூப்பிட்டாலும் போதும் )
மனமார்ந்த நன்றியும் அன்பும் !
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
03.05.2017